மனம் ஒரு குரங்கோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 9,456 
 
 

மதியமே வேலை முடிந்துவிட்டது.. அலுவலகத்தில் இருக்கும் சொச்ச நண்பர்களையும் பார்த்து அவர்களின் பிராஜக்ட் நலத்தை விசாரித்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருக்கும் ஏதோ ஒரு பெண்ணின் உடையலங்காரத்தை மிகவும் மட்டமாக விமரிசித்து, வாய் கிழிய சிரித்தாயிற்று.. அடுத்தது கிளம்ப வேண்டியது தான் பாக்கி.. 5 மணிக்கு மேனேஜரிடம் போய் “ஷல் ஐ லீவ், ஃபினிஷ்ட் டுடேஸ் வொர்க்…. “, என்றால் அவன் அவர் பெண்ணை மணமுடிக்க கேட்ட முக பாவனையுடன் “வாட் நௌ இட்செல்ஃப் …” என்று இழுப்பார்… ஒரு வாறு அவரை சமாளித்து, வீட்டிற்கு புறப்படலாம் என்று இருக்கும் போது, தெரிந்த அதே சொச்ச நண்பர்களில் பைக் வைத்திருக்கும் நண்பர்கள் யாராவது வீட்டிற்கு கிளம்புவார்களா என்று காத்து கிடப்பான்.. அவன் வீட்டிற்கு போகும் வழியில், பைக்கில் போகும் அனைவரிடமும் அவ்வளவு எளிதாக அவனால் லிஃப்ட் கேட்க முடியாது… முதல் காரணம் கூச்சம், “அல்பம் 20 ரூபா கொடுத்து பஸ்ல போக தெரியல, ஓசி லயே வாழ வேண்டியது..” போன்ற எண்ணங்கள் நெருங்கிய நண்பர்களின் மண்டைக்குள்ளே கேட்கும்.. மற்றொரு காரணம், பைக்கில் போகும் போது சம்பிரதாயமாக நாலைந்து வார்த்தைகள் பேச வேண்டும்.. இப்படியான சம்பிரதாய பேச்சுகள் இந்த இடத்திற்கு வேலைக்கு வந்த உடன் நிறையவே பயன்பட்டது.. இறங்கும் போது நன்றி நிமித்தமாக, “தங்ஸ் அ லாட்” என்று கூற வேண்டும்.. வெறும் தாங்கஸ் என்றால் அவனுக்கும் சரி, அவனை ஏற்றி கொண்டவருக்கும் சரி, ஒரு வித மன நிறைவின்மையை உருவாக்கி விடும்..

சர்வ சுதந்திரமாக “எப்போ கிளம்புவீங்க… வீட்டுக்கு போகலாமா…” என்று கேட்க இரண்டு நண்பர்கள் தான் இருந்தார்கள்.. இருவரும் 9 மணிக்குகுறைந்து இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள்.. “சரி… ஏதோ ஒரு நாள் தான் பஸ்ல போறோம்… எப்பவும் தான் இருக்கே ஆஃபிஸ் கேப்…” என்று மனதை சமாதான படுத்தி கொண்டு கிளம்பினான்.. போகும் போது வாயில் எதையாவது கொறித்து கொண்டே போவது என்று வாடிக்கை ஆகிவிட்டது.. வெண்டிங்க் மெஷினில் போட்ட பத்து ரூபாயை ஏமாற்றி விடாமல் அவன் கேட்ட பொருளை அது தர வேண்டும் என்று எண்ணி கொண்டு ஏதோ ஒரு நொறுக்கு தீனியை எடுத்து, போகும் வழியெல்லாம் வாயில் மென்று கொண்டே போவான்… ஆரம்பமாகும் அவன் மன அலைச்சல்……….. எப்போதும் இந்த 1 கிலோமீட்டர் தனிமையான நடையில் பல எண்ணங்கள் எந்த வித சங்கிலி தொடர்ச்சியும் இல்லாமல் தானாக இயல்பாக நிகழ்ந்து கொண்டிருக்கும்…. வாங்கிய நொறுக்கு தீனியின் கவரை அமுக்கி பார்த்து “தூ, பத்து ரூபாய்க்கு ஒன்னுமே இல்ல… வெரும் காத்த அடச்சு தரானுங்க களவானி பசங்க…” என்று ஆரம்பித்து அதை தயாரிக்கும் கம்பெனியின் பெயரை பார்த்தவுடன், சில வாரங்களுக்கு முன் நடந்த நீயா நானாவில் எஃப்.டி.ஐ பற்றிய எண்ணங்களோடு தொடர்ந்தன அன்றைய நடையில்… “ஏன் எஃப்.டி.ஐ வர கூடாதுன்னு அவ்வளவு பேரு அடிச்சு பேசுனானுங்க… ஏன் சில பேரு இன்னொரு பக்கத்துல ஃப்டிஐ தப்பே இல்ல, அது ஒரு வரப்ப்பிரசாதம்னு பேசுனாங்க” என்று அவன் மனது கோபினாத்துடைய வேலையை பார்த்து கொண்டிருந்தன.. ஏதோ ஒரு பக்கத்துக்கு அவன் வளுவாக சிந்திக்கும் போது அந்த கணமே அதற்கு ஒரு எதிர்வினை உருவாகி, “நீ நினச்சது முட்டாள்தனம்” என்று தோன்றும்.. இது போன்ற இரு வேறு சிந்தனைகள் ஏன் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன?? இரு வேறு சிந்தனைகள், லா.ச.ரா ஏதோ ஒரு நாவலில் இதே போன்று கூறியிருப்பார்.. “ச்ச என்னமா எழுதுனாரு…. அத படிச்ச கணத்துல கூட ரொம்ப அற்புதமா ஃபீல் பண்ணினேனே…” என்று தோன்றியது…. ஆனால் அவன் லா.ச.ரா வை அவ்வளவாக படிக்க வில்லை என்று தோன்றும் அவனுக்கு.. அவன் அப்பா தான் விழுந்து விழுந்து லா.ச.ரா வை படிச்சார்… “ஹூம் அப்பா மாதிரி நிரைய ரசிக்க கத்துக்கனும்… ” என்று ஒரு சுயபட்சாதாபம் அவனுக்குள் தோன்றியது… உடனே தலையை ஒரு ஆங்கிளில் திருப்பி வானத்தை பார்த்தான்… நீல வண்ண சுவரில் யாரோ மஞ்சள் கலந்த சிவப்பை அள்ளி தெளித்தாற் போல் இருந்தது… ஏதேதோ மிருகங்களின் முகங்களும், ஆஜானுபாகானுவான ஒரு மனிதனின் உடலும் வந்து போனது… சிந்தனைகள் அவன் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டது… எவ்வளவு அழகான மொட்டை மாடி… எப்பொழுதும் மொட்டை மாடியில் உட்கார்ந்து ஏதோ ஒன்றை யோசிப்பதில் அவனுக்கு எப்போதுமே அலுப்பு இருந்ததில்லை… அப்படி யோசிக்கையில் அவனுக்குள் வேறு யாரோ உட்புகுந்து விடுவது போல் தோன்றும் அவனுக்கு… அவன் வீட்டு மொட்டை மாடி காட்சி அவன் மனத்தில் விரிவடைந்தவுடன் இன்னிக்கு ஏன் கத ஏதாவது எழுத கூடாது என்று தோன்றிற்று… “வீட்டுக்கு வேற சீக்கிரம் போறோம், போய் ஒரு சில சில்மிஷங்கல செஞ்சுட்டு ஏதாவது எழுத உட்கார்ந்தா என்ன?…” கதை என்ற கோட்டிலேயே யோசித்து கொண்டிருந்தான்…

அதே மன நிலையுடன் நடந்து கொண்டிருக்கையில் பஸ் ஸ்டாண்ட் வந்தது… பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு முன், கதை என்ற தளத்தை விட்டு எங்கோ போய் அருந்ததி ராய், கம்யூனிசிம், சே குவேரா என்றும் அவர்களை பற்றி படித்தது என்று நகர்ந்து கொண்டிருந்தது… திடீரென்று ஒரு ஜனத்திரளின் நடுவில் ஐக்கியமானான்.. சிந்தனைகள் சற்றே அடங்கியது…… கண்ணுக்கு தெரியும் அனைத்து பெண்களையும் பார்த்தான்… எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அழகாக இருந்தார்கள்… பெங்களுரு வந்து ஆயிரம் பேரை பார்த்தாயிற்று… ஆண்களுக்கு அலுப்பே வராத ஒரே விஷயம் பெண்களை பார்ப்பது அவர்களை பத்தி பேசுவது… பஸ்ஸுசுக்காக காத்திருக்கையில், பக்கத்திலிருந்த மால், அங்கிருக்கும் ஃபுட் கோர்ட் என ஒவ்வொன்றாக நிழலாட தொடங்கின… மதியம் சாப்பிட்ட உணவு, அதற்கு கொடுக்க பட்ட 70 ரூபாய், கூட வந்திருந்த நண்பனிடம்,”என்னடா இது, பேருக்கு சாம்பாரும், ரசமும் கொடுத்துட்டு ஒரு கரண்டீல பாதி அளவு காய வெச்சுட்டு, எப்டிடா இவனுங்களுக்கு 70 ரூபா வாங்க தோணுது” என்று கேட்டது, 6 கிலோமீட்டருக்கு கொடுக்கபடும் 20 ரூபாய் என எல்லாம் அக்கிரம விலையில் இருக்கும் இந்த பெங்களுர் சமூதாயம் பற்றி நீண்டு சென்றது… “திருச்சியா இருந்தா, 4.50 ரூபாயில் முடிந்து விடும், இங்கு 20 ரூபா… என்ன கருமமோ”

பெரும்பாலும் மன அலைச்சல்கள் ஏதோ ஓர் சமூக நிகழ்வுகளையே எண்ணி கொண்டிருந்தது… மத்த நேரங்களில் எல்லாம் மனம் சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஓர் நிகழ்ச்சியையும், அல்லது பழைய பாடல்களையோ, தொடர்ச்சியாக 5 நொடிகளுக்கு மேல் தங்காத நினைவுகளுமாக கொஞ்சமும் தொடர்பில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும்.. இன்று நினைவில் வருபவன ஏறககுறைய அப்படி இருந்தாலும் ஏதோ ஓர் மைய நோக்குடன் சென்று கொண்டிருக்கிறது என்று பட்டது அவனுக்கு… பஸ்ஸில் ஏறியதும், அவனை ஓர் ஒதுக்கு புறமாக அவனே தள்ளிகொண்டு, இறங்கும் போது எளிதாக இறங்க வேண்டும் என்ற காரணத்திற்காக நின்று கொண்டிருந்தான்.. கண்டக்டர் பெண்கள் இருக்கும் இடத்திலிருந்து எல்லோர் மீதும் வேறு வழியில்லாமல் இடித்து கொண்டு ஆண்கள் இருக்கும் பகுதிக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார்.. “ச்ச கொடுத்து வச்சவனுங்க பஸ் கண்டக்டர்ஸ் எல்லாரும்…” 15 ரூபாய்க்கு டிக்கட் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் 20 ரூபாய் கொடுக்க வேண்டும்… 5 ரூபாய் கண்டக்டரின் பைக்குள் காந்தி கணக்காக போய் விழும்… நல்ல வேளை அவனுக்கு முழுதாக 20 ரூபாய்.. மீதி சில்லரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை… ஆனால் 50 ஐயும் 100 ஐயும் நீட்டும் போது இன்னொரு பிரச்சனை வரும், டிக்கட்டின் பின்னாடி எழுதி கொடுத்து விட்டு போய் விடுவார்கள், தரையில் கால் வைக்க முடியாத கூட்டத்தில் கண்டக்டரிடம் இருந்து மீதி பாக்கியை வாங்கி விட்டால், அது உங்கள் அதிர்ஷ்டம்… 30 ரூபாயோ அல்லது 100 ரூபாயோ பாக்கி என்றால், எப்படியாவது வாங்கி விட வேண்டும், மறந்து விட கூடாது என்று கண்டக்டர் வரும் பொழுதெல்லாம் அவரையே முறைத்து பார்த்து கொண்டும் நம் பக்கம் புதிதாக யாராவது ஏற மாட்டார்களா என்றும் ஏங்கி கொண்டிருக்க வேண்டியிருக்கும்… இதை விட எல்லாம் கொடுமை, 5 ரூபாய் சில்லரை, 1,2,3 ரூபாய் சில்லரை என்றால், நமக்கே கேட்க கூச்சம் வந்து விடுகிறது… நாம் போய் கேட்க, “நான் என்ன வழிச்சுகிட்டா வந்திருக்கேன், உங்க எல்லாருக்கும் சில்லரை கொடுக்க…” என்று தமிழ் நாட்டில் திட்டு வரும், பஸ்ஸில் அனைவரின் முன்பும் மானம் போகும், நாம் மௌனமாக வந்து விடுவோம்… இங்கு கன்னடத்தில் திட்டு வரும்… அவனுக்கும் புரியாது… சுற்றி இருப்பவர்களுக்கும் புரியாது… கன்னட மக்கள் அவன் போகும் வழியில் குறைவே… இந்த நினைவெல்லாம் ஏனோ அவன் பர்ஸில் சரியாக 20 ரூபாய் இருந்தும், திருவொற்றியூரில், கண்டக்டரிடம்”தாயோலி உனக்கு சில்லர வேற கேக்குதாகும் சில்லர, ஒரு மயிரும் கிடையாது, கொடுப்பான் 50 ரூபா, நான் இவனுக்கு நக்கி நக்கி கொடுக்கனும்” பஸ் கண்டக்டர் வேலை என்பது ஒரு விதமான கஷ்டமான வேலை தான், ஆனால் ஏன் 50 ஐயும், 100 ஐயும் கொடுக்கும் போது, பயணிகள் மேல் இப்படி எரிந்து விழுகிறார்கள் என்று புரியவில்லை… இது வரை நன்றாக அலைந்து கொண்டிருந்த மனம் இந்த நிகழ்ச்ச்யை நினைவு கூர்ந்ததிலிருந்து, சற்று அவன் முகம் சின்னதானது அவனுக்கே தெரிந்தது…

மாற்ற வேண்டும், நினைவலைகளை மாற்ற வேண்டும்… திடீரென்று அனைவரது முகங்களையும் பார்த்தான், யாரும் யாரையும் பார்த்து கொள்வதே கிடையாது… ஜன்னல் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் ஜன்னலுக்கு வெளியே எதையோ பார்த்து கொண்டு தத்தம் நினைவலைகளில் நீந்தி கொண்டிருந்தனர்… பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள், மொபைல் ஃபோனையோ அல்லது காதில் ஹெட் செட் மாட்டி கொண்டோ இருக்கின்றனர்… ஒரு சிலர் தங்களையும் மறந்து சற்று வாய் திறந்திருக்க தூங்கி கொண்டிருந்தனர்… கூட்ட நெரிசலில் நின்று கொண்டிருந்த பலர், பக்கத்தில் இருப்பவர்களின் முகத்தை பார்த்து விட்டால் தீட்டு என்பது போல், உர்ர் ரென்று முறைத்து கொண்டு கீழே அல்லது அக்கம் பக்கத்தில் பார்த்து கொண்டிருந்தனர்…. மற்றவர்களின் முகங்களை பார்த்து நாம் என்ன பண்ணப் போகிறோம் என்ற நினைப்பு… அவனுக்கும் அந்த கேள்வி சரி என்றே பட்டது… இடையில் ஒரு ஆணும் பெண்ணும் சர்வ சாதாரணமாக அடித்து கொண்டும், தடவி கொண்டும் பேசி கொண்டிருந்தார்கள்… அவன் அவர்களையே பார்த்து கொண்டிருந்தான்…. எந்த மன ஓட்டமும் மனதில் இல்லை… அவன் உதடுகள் லேசாக விரிந்திருப்பதை அவன் கவனிக்கவில்லை, அவன் அவர்களை கவனிக்கும் போது…. அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கினார்கள்… பொதுவாக இது போன்ற அன்யோன்யமான ஆணையும் பெண்ணையும் பார்க்கும் போது, ஒரு ட்ராமா தனமான கற்பனை உலகம் அவன் மனதில் விரிவடைந்து விடும்… 2 நிமிடம் கழித்து அவனே அந்த நினைவை துண்டித்து கொண்டு, கதை எழுத வேண்டும், அதை பற்றி யோசிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அவன் மனதை உருவாக்கி கொண்டான்… எதை பத்தி எழுதலாம் என்றெண்ணும் போது, ஆஃபிஸ் ஞாபகம் தோன்றியது… அங்கிருந்து ஏதாவது கதையை எடுக்க முடியுமா என்று யோசித்து கொண்டே இருந்தான்… ஒன்றும் வரவில்லை… காலையிலிருந்து மாலை வரை சென்ற அலுவலக ஞாபகங்கள் ஒரு கணம் வந்து போனதும், எந்த ஒரு மன சம்பந்தமும் இல்லாமல், மூளை ஏதோ செய்கிறது, லாப் டாப்பில் எதையோ அடித்து ஏதோ ஓர் அமெரிக்காக்காரனுக்கு உழைத்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது… கேளி, கூத்து என்று சென்ற நாட்கள் தான் அதிகம்… ஆனால் இயல்பாக, எளிமையாக மனதை கவரும் ஒன்று என்று இது வரை அலுவலகத்தில் நடந்ததே இல்லையே, அது ஏன் என்று யோசிக்க தொடங்கினான்… கதையை தேடி சென்ற அவன் வேறு எங்கோ சென்று விட்டான்…. வேலை இல்லாத வார இறுதிகளில் ஒரு என்.ஜி.ஓ வில் சேர்ந்து பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் இடத்திற்கு போய் விட்டான்… ஏன் இந்த சிந்தனையிலிருந்து அந்த சிந்தனைக்கு தாவினான் என்று தாவும் போது தெரியாது, நாம் எப்படி இங்கு வந்தோம் என்று யோசிக்கும் போது, ரீவைண்ட் ட்ராக் போன்று சற்று முன்பு நினைத்ததை புகைப்படங்காளாக மாற்றி மனதின் முன் தோன்ற வைத்து வெவ்வேறு சிந்தனைக்கும் உள்ள தொடர்பு புள்ளியை வெளிப்படுத்த வைப்பது அவன் பழக்கம்.. என்.ஜி.ஓ வில் அங்கிருக்கும் குழந்தைகள், அவர்கள் இவன் மேல் உருண்டு பிரண்டு துவைத்து எடுப்பது என வேகமாக அங்கு கடந்த வாரங்களில் நடைபெற்ற காட்சிகள் ஒவ்வொன்றாக விரிவடைந்தன…

என்.ஜி.ஓ விலிருந்து வரும் போது ஒரு பல் பொருள் அங்காடியில் வேலை பார்த்து கொண்டிருக்கும், கொஞ்ச நாள் முன்பு நண்பர்களாகிய கபில் என்பவரை பார்க்க செல்லும் காட்சி வந்து போனது… அவர் வேலை செய்யும் பல் பொருள் அங்காடியில், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் உயர் தட்டு மக்கள்.. பெண்கள் சர்வ சாதாரணமாக டிரௌசர் போட்டு கொண்டு வரும் கடை அது… கபில் நினைவலைகள் வந்த வுடன் திடீரென்று “பர்சேசிங் பவர்” என்ற வார்த்தை மட்டும் அவன் மனதுக்குள் வந்து விட்டது…. “எல்லாம் ஒரு செட் ஆஃப் பீப்புள்னால வந்த வின, எவன் எவ்வளோ ரூபாய்க்கு வித்தாலும் வாங்கி கொட்டிக்க வேண்டியது… ” என்று அலுத்து கொண்டு, அவன் தங்கும் எலி அளவு வீட்டுக்கு 16 ஆயிரம் ரூபாய் வாங்கும் அவன் வீட்டு ஓனரை மனதுக்குள் திட்டி தீர்த்து கொண்டான்… மறுபடியும் சிந்தனை வேறு எங்கோ போய் விட்டது, அதை கட்டி இழுத்து கபிலிடம் சேர்க்க கொஞ்சம் சிரமமிருந்தது… அவர் திருநெல்வேலிக்காரர்… அவர் பேசுகையில்,”அவங்க அப்படி சொல்லுதாங்க…” “பாதிலயே நிக்கி…” என்று வட்டார பாஷையில் பேசி, அவனை வண்ணதாசன் சிறுகதை உலகத்திற்கு கொண்டு சென்று விட்டார்… “ச்ச… வாழ்க்கைய அனுபவிக்க தெரிஞ்சவரு… ஏதோ சின்ன விஷயத்துல பெருசா எதயாவது பாத்து, நம்மளையும் ஏதாவது யோசிக்க வெச்சு, எங்கயோ கொண்டு போய்டுறார் ஆளு… யாரு சொல்லி கொடுத்துருப்பா அந்த ஆளுக்கு இந்த மாதிரியெல்லாம் உண்ணிப்பா பார்க்க சொல்லி….” என்று அவரின் சிறுகதைகளின் கதாபாத்திரங்கள் படிக்கும் பொழுது அவனுள் நுழைந்த முகச்சாயல்களுடன் இப்போது அவன் கண் முன் விரிந்து கிடந்தது…. குழந்தையை தூக்கி செல்லும் ஒரு சாதாரணன், மழை பெய்த ரோட்டில் எலுமிச்சம் பழம் விழுதல், வீட்டுக்கு யாராவது வர நேர்கையில் சட்டையை உடனே அணிந்துகொள்ளும் குடும்ப தலைவன், கழுவி வைத்த அம்மி கல்லை பூஜைக்கு முன் ஏற்பாடாகும் சிவலிங்கத்தை உருவகிக்க தெரிந்த ஒரு அப்பா, ஏணிபடியையும் சுவற்றில் சாய்த்து வைக்க பட்ட ப்ரவுன் கலர் செருப்பையும் பார்க்கும் ஓர் இளைஞனும், வீட்டின் பெய்ன்ட் அடிக்கபட்ட கதவில் கட்டி போன்று நீட்டி கொண்டிருக்கும் மிச்சம், பாட்டிலிலிருந்து தண்ணீரை குடிக்கும் போது அதன் வலைவை ஒரு வலைந்த வாலுடன் கற்பனை பண்ணத் தெரிந்த அம்மாவும், மழையை குற்றாலமாக நினைத்து கொண்டாடும் சிறுவனும் என சற்று நேரம் பல கதைகளின் பல கதாபாத்திரங்களின் ஊடாக அவர்களின் உலகத்தை சென்றடைந்து விட்டு, அவன் இயல்பு நிலைக்கு திரும்பிய பொழுது, கபிலை மறந்து “அய்யோ கத ஒண்ணும் தோனவே மாட்டேங்குதே என்று இருந்தது…”

சுற்றி பஸ்ஸில் இருந்த அனைவரையும் பார்க்கும் இன்னொரு விநாடியில் பின்னாடி திரும்பி பார்க்கையில், இவ்வளவு நேரம் கவனிக்காமல் விட்ட ஒரு பொக்கிஷம் போல் ஒரு குழந்தை, அதன் அம்மாவின் மடியில் உறங்கி விழித்திருந்தது… வண்ணதாசனை பற்றி வேறு நினைத்து விட்டான், சொல்ல வேண்டுமா லேசான மனதுடைய ஒரு மனிதனாக மாறி, சத்தம் போடாதேயில் ப்ரித்திவி ராஜ் கதாபாத்திரமாக மாறியது போல் ஓர் உணர்வு அவனுக்கு…. குழந்தைகளை மட்டும் தான் யாரும் அனுமதி இல்லாமல் அதை பார்த்து கொண்டிருக்கவும், அதனிடம் கொஞ்சவும், சிரிக்கவும், விளையாட்டும் காட்ட முடியும், அதுவும் பதிலுக்கு நம்மை பார்த்து மனதில் என்ன நினைக்குமோ தெரியாது சிரித்தால் சிரிக்கும், இல்லையென்றால் தலையை திருப்பி விடும்… அவனுக்கு எப்போதுமே குழந்தையை பார்த்தவுடன் ஒரு பழக்கம் உண்டு… முதலில் லேசான புன்னகையில் ஆரம்பித்து, முகத்தை கோணல் மாணலாக வளைத்து, கண்களை சுருக்கி, மூக்கை தூக்கி, உதட்டை சேர்த்து என்னென்னமோ பண்ணி பார்ப்பான்… குழந்தை அவனுடைய ஏதோ ஒரு முக அசைவிற்கு சிரித்து விட்டது… அவனுக்கு சற்று உற்சாகம் வந்து விட்டது… அதனிடம் அதே முக பாவனையை திருப்பி திருப்பி காட்டி அதை சிரிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அவன் முகத்தை அஷ்டகோணலாக ஆக்கி கொண்டான்… குழந்தையும் அவனிடம் இடைவிடாது அவனிடம் பதித்த கண்களை நகர்த்தவில்லை… பொதுவாக இது போன்ற தருணங்களில் அந்த குழந்தையின் அப்பாவோ, அம்மாவோ அந்த குழந்தையை பார்த்து சிரித்து கொண்டே”அண்ணா என்ன சொல்றான்…. அண்ணாக்கு ஷேக் ஹாண்டஸ் கொடு…” என்று குழந்தையை போட்டு பாடாய் படுத்துவார்கள்… சுற்றி இருப்பவர்களும் ஒரு லேசான புன்னகையுடன் அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருந்தார்கள்… குழந்தையின் பெற்றோர்கள் தமிழில் பேசுவதை பார்த்தவுடன், பெங்களுர்ல எங்க ஒரு கூட்டம் இருந்தாலும், அதில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மூன்றும் இருக்கிறது என்று நினைத்து கொண்டான்…

குழந்தையுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கையில், அவனுக்கு மன அலைச்சல் அறவே காணாமல் போயிருந்தது… ஏதோ ஒரு செயலில் இறங்கும் போது தான் இது போன்ற மன அலைச்சல்கள் அறுபட்டு போகின்றன… ட்ராஃபிக்கிள் சிறிது நேரம் நின்ற பிறகு, அவன் இறங்கும் இடமும் வந்து சேர்ந்தது…. இரண்டே அடி வைத்தால் இறங்கி விடலாம்…. அனால் குறைந்தது நாலு பேரின் உடலை முழுதாக உரசாமல், அவர்களின் வாயிலிருந்து, “ம்ச்…..” சத்தம் வெளிவராமல் இறங்க முடியாது…. இறங்கும் பொழுது, அவன் குழந்தையை பார்த்து கொண்டே லேசான சிரிப்புடன், சுற்றி இருப்பவர்களை உரசி கொண்டே இறங்கினான்… வெளியே வந்ததும், குழந்தையை பார்த்தான்… குழந்தையும் அவனையே பார்த்து கொண்டிருந்தது…. இவன் இறங்கிய பின்பும் அதை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்…. பஸ் நகர்ந்தது… குழந்தையும் முகமும் மறைய தொடங்கியது… மன அலைச்சல் ஒரு புது உத்வேகத்துடன் மீண்டும் அலையத் தொடங்கியது… அலுவலகத்திலிருந்து நடந்து வந்ததிலிருந்து, பஸ்ஸில் ஏற்பட்ட சிந்தனைகள், குழந்தையிடம் விளையாடியது என அவன் நிறைவாக உணரத் தொடங்கினான்… நினைவலைகளில் வந்து போன அத்தனை சிந்தனைகளையும் ஒரே ஓட்டத்தில் மனதில் மறுபடியும் புகைப்படம் போன்ற வடிவில் அடுத்தடுத்து வந்து போனது…. நொறுக்கு தீணியை திட்டியதிலுருந்து குழந்தையின் முகம் மறைந்தது வரை…. 20 நிமிட பயணம் நிறைவாக அமைந்தது போல் தோன்றியது அவன் அகத்துக்கு…

வீட்டிற்கு வந்தான்…. பேப்பரை எடுத்தான்,”மதியமே வேலை முடிந்துவிட்டது…………” என்று எழுத தொடங்கினான்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *