மஞ்சள் காத்தாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 11,642 
 
 

விசாலி இன்னும் எழுந்திருக்கவில்லை. ஐந்து மணி ஆனதும், அலாரம் அடித்தது போல, ரப்பர் பந்து மாதிரி துள்ளிக் குதித்து எழுந்துவிடும் விசாலி, படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள்.

விசா.. குட்மார்னிங்!”

அவளை நெருங்கி அணைத்துக் கொண்ட வாசுவுக்கு ‘திக்’ என்று இருந்தது.

விசாலியின் உடல் நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது.

“என்னடா… என்ன உடம்புக்கு?” பதறினான் வாசு.

“உம்… ராத்திரியெல்லாம் ஒரே தலைவலிங்க. இப்ப என்னடான்னா ஜுரம் அடிக்குது. வாந்தி வர்ற மாதிரி இருக்கு!”

“என்னை எழுப்பியிருக்கலாமில்ல? என்ன பொண்ணு நீ?” என்றவன் தொடர்ந்து, “சரி, எழுந்திரு. ஒரு பாரசிடமால் தர்றேன். போட்டுக்க!” என்றான் நெற்றியில் பிரியத்துடன் முத்தமிட்டு.

“வேணாங்க. அப்படியே சமாளிக்கப் பார்க்கிறேன்!” மேடிட்ட வயிற்றுடன் மெள்ள எழுந்து உட்கார்ந்தாள் விசாலி.

“சூடா சுக்குமல்லி காப்பி போட்டுத் தர்றேன் குடிச்சுட்டுப் படு. ஆபீஸுக்கு லீவு சொல்லிடறேன்!”

“லீவா… அவ்ளோதான்! என்னை ஹிட்லரம்மா அப்படியே கிழிச்சு பீஸ் பீஸ் ஆக்கிருவா!”

“மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்துடலாம்!”

“ஐயோ! இம்பாஸிபிள்! இன்னிக்கு ஆபீசுல டீலர்ஸ் மீட்டிங் இருக்கு. நான் பக்கத்துலயே நிக்கணும்.” என்றபடியே மெள்ள எழுந்து பாத்ரூமுக்குள் போன போது, வாசுவின் மனது சங்கடப்பட்டது.

சரியாக எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டாள் விசாலி. தலைவலி குறையவே இல்லை. வாயெல்லாம் கசந்து குமட்டிக் கொண்டே இருந்தது.

“என்ன சொல்றான் பையன்?” என்றபடி, அவளது இடுப்பைத் தொட்டுத் தடவினாள் அக்கவுன்டென்ட் ஹேமா.

அவளும் டீலர் மீட்டிங்குக்காக சீக்கிரமே வந்து விட்டிருந்தாள்.
தபால், கூரியரில் வந்த கடிதங்களைப் பிரித்து ஒழுங்குபடுத்தி, க்ளிப் போட்டாள். சில முக்கியமான கடிதங்களை டைப் செய்து இ-மெயில் அனுப்பினாள்.

புதிய ஸ்டாக்குகளின் பட்டியலைச் சரி பார்த்து வரவு வைத்தாள். சப்ளை ஆனவற்றுக்குப் பணம் வந்துவிட்டதா என செக்குகளை சரி பார்த்தாள்.

ஒன்றரை மணி நேரம் மடமடவென்று எல்லா வேலைகளும் முடிந்த போது, ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது.

“விசாலிம்மா. டீ சாப்பிடுங்க!” என்று பியூன் பாபு சொல்லச் சொல்ல பரபரப்பாக மாடிப்படி ஏறினாள் விசாலி.

“ஏம்மா, புள்ளதாய்ச்சிப் பொண்ணை தினம் இருபது தடவையாவதுபடி ஏற வைக்கிறா பாரு. பொம்பளையா அவ? ராட்சசி!” பியூன் பாபு நறநற என்று பல்லைக் கடித்தான்.

“என்னா பாபு பண்றது? நாங்கள்லாம் உன்னை மாதிரியா? குடும்பம் குட்டின்னு ஆகிப் போச்சு! நாலு காசு சேர்க்கணும்னா நாறப்பிழைப்பு பொழைச்சாகணுமே!” ஹேமா அலுத்துக் கொண்டாள்.

விசாலி உள்ளே நுழைவதை முட்டைக் கண்கள் விரிய ஏறிட்டுப் பார்த்தாள் கிருஷ்ணவேணி அலையஸ் ஹிட்லர்!

ஐம்பது வயது கடந்திருந்த கிருஷ்ணவேணி, மெகா சைஸ் குஷன்சீட் கொள்ளாமல் நிரம்பி வழிந்திருந்தாள். சிவப்பு நிற லிப்ஸ்ட்டிக்கும், பாப் செய்த தலைமுடியும், அவள் வயதைக் கூட்டிதான் காட்டின.

ஷார்ட்-ஹாண்ட்நோட், பென்சில் சகிதம் உள்ளே நுழைந்த விசாலியைப் பார்த்ததுமே மேனேஜர் கிருஷ்ணவேணிக்கு எரிச்சல் புகைந்தது.

‘போன வருஷம் கல்யாணம்; உடனே வயித்தைச் சாய்ச்சாச்சு!’ – இது ஒரு கடுப்பு.

‘அந்த நீளக்கழுத்து, தாழம்பூ நிறம், மெல்லிய உடல்!’ – அதில் ஒரு பொறாமை!

‘ஐம்பதாயிரம் சம்பளம், ஏ.ஸி. கார் என இருக்கும் என் கை, முகம் எல்லாம் சொரசொரப்பாக இருக்க, பத்தாயிரம் சம்பளம் வாங்கும் இவளுக்கு எப்படி வந்தது இப்படி ஒரு தேகமினுக்கல்?’ – வெறுப்பு பிறாண்டியது.

“நீ என்ன ஃபூலா? எத்தனை முறை சொல்லியிருக்கேன்? முக்கியமான ஃபைலைவீ ட்டுக்கு அனுப்புன்னு? ஏன் அனுப்பலை?”

மேஜையைக் குத்தி உரத்தக் குரலில் கத்தினாள் கிருஷ்ணவேணி.

“மேடம்… ஃபைலை டிரைவர்கிட்ட கொடுத்து அனுப்பினேனே!”

“கொடுத்துட்டு… எனக்கு ஏன் கால் பண்ணலை? அவன் கொண்டு போய் எங்க ஒழிஞ்சானோ? ப்ளடி நான்சென்ஸ்!”
முகத்தின் சதையெல்லாம் ஆட, அவள் கத்தியதைப் பார்த்ததும் விசாலியின் மண்டையிடி அதிகமானது.

மதியவேளை. டீலர்ஸ் மீட்டிங் முடிந்து ஏஜெண்ட்டுகளும், டீலர்களும் வெளியே வந்த போது, விசாலிக்கு இடுப்பு கனத்து வலித்தது. பசி வேறு கிள்ளி எடுத்தது.

டிபன்பாக்ஸைத் திறந்து நாலு வாய் சாப்பிடுவதற்குள், கிருஷ்ணவேணியிடமிருந்து அழைப்பு.

“மோகன்தாஸ் அன் கோ கொடுத்த கொட்டேஷன் கொண்டா. க்விக்!”

“என்ன இம்சைடி! சாப்பிடக் கூட விட மாட்டேங்கிறா!” ஹேமா தலையில் அடித்துக் கொண்டாள்.

இடுப்புவலி, பசி, சுய பச்சாதாபம் எல்லாம் சேர்ந்ததில் விசாலியின் கண்களில் நீர்ப்படலம் மினுக்கியது.

“சே! இதுக்கு ஏண்டி அழற? ஹிட்லருக்கு காம்ப்ளெக்ஸ். கல்யாணம் இல்ல; குழந்தை குட்டி இல்ல. அதனால அவளுக்கு நம்பளைப் பார்த்தாலே காரணமே இல்லாம எரிச்சல் வருது. போன வாரமெல்லாம் என் மேலே எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா… இப்ப நீமாட்டிக்கிட்ட!”

தோட்டத்துப் பக்கம் போய், டிபன் பாக்ஸைக் கழுவிவிட்டு வந்தாள். வேலியோரம் ஓர் ஓணான். பழுப்பு நிறத்தில் மஞ்சள் முகத்துடன் உட்கார்ந்திருந்தது.

விசாலிக்கு ஓணான் என்றாலே பாவம்தான்.

சிறுவயதில் அவளது தெருப்பசங்க எல்லாம், “டேய்… ஒடக்காத்திடா!” என்று தேடித் தேடிக் கல்லால் அடிப்பார்கள்.

“டேய்.. ப்ளீஸ்டா… பாவம்டா… விட்டுடுங்கடா!” என்று விசாலி கெஞ்சுவாள். குற்றுயிராகக் கிடக்கும் அதன் வாலில் நூலைக்கட்டி, ‘கரகர’ என்று சுழற்றுவார்கள்.

அதுவே ‘புர்…புர்…’ என்று மூச்சுவிட்டபடி, கொம்பை சாய்த்து முட்டவரும் சிவன் கோயில் காளையைப் பார்த்தால் ஓடுவார்கள்.

மிலிட்டரிக்காரர் வளர்த்த அல்சேஷன் நாயைக் கண்டால், பயத்துடன் ஒதுங்குவார்கள்.

ஓணான்பாவம்! வாயில்லாதபூச்சி! பெரிய கொம்போ, கூர்மையான பல்லோ இல்லாத ஜந்து. எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் கேட்பது?

ஒரு வித சம்பந்தமுமில்லாமல் திடீரென்று தானே ஓர் ஓணான் ஆக மாறிவிட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. பயமும், அருவருப்புமாக குமட்டிக் கொண்டு வந்ததில், சாப்பிட்ட அத்தனையையும் வாந்தி எடுத்தாள் விசாலி.

மதியம்மூன்றுமணி. தலை கிறுகிறுக்க அப்படியே மேஜை மீது தலை சாய்த்தாள் விசாலி. இரவு தூங்காமல் கண் விழித்த அசதியோ என்னவோ, சரியாக ஆறு நிமிடங்கள் தூங்கியே போனாள்.

“வெரிகுட்! சூப்பர்… ஹ…ஹ…ஹா!” கைதட்டியபடி எதிரே நின்றாள் கிருஷ்ணவேணி. பதற்றத்துடன் விசாலி எழவும், பக்கத்திலிருந்த அலமாரியிலிருந்து கனத்த ஃபைல் ஒன்று கிருஷ்ணவேணியின் காலின் மீது விழவும் சரியாக இருந்தது.

வந்த கோபத்தில் என்ன செய்வதென்றே தெரியாத கிருஷ்ணவேணி, ஒரு ஃபைலை எடுத்து, விசாலி மீதுஎறிய… அதை அப்படியே கேட்ச் பிடித்தாள். பின் பேசத் தொடங்கினாள்.

“லுக்மேடம்! நான் உங்க அடிமையில்லை. இது ஒண்ணும் கடைசி ஆபீஸும் கிடையாது. நான் இந்த ஊருக்கு வந்த போது, ‘சென்னை, சென்ட்ரல்’னு கேட்டுத்தான் டிக்கெட் வாங்கினேன். ‘எஸ்.எஸ். ஏஜென்ஸி’ன்னு கேட்டு வரலை. உங்க நல்ல நேரம் நான் இப்போ ரொம்பப் பொறுமையா இருக்கேன். மொதல்ல மனுஷியா நடந்துக்குங்க. அப்புறம் மேனேஜரா பிகேவ் பண்ணலாம். உங்க இயலாமைக்கு மத்தவங்கள வடிகாலா யூஸ் பண்றது கோழைத்தனம். இதப் புரிஞ்சுக்கங்க. குட்பை மிஸ் ஹிட்லர்!”

விசாலியின் வார்த்தைகளில் இருந்த நிதானம் தன் முகத்தில் காறித்துப்புவதைப் போல உணர்ந்து குறுகிப் போய் நின்றாள் கிருஷ்ணவேணி.

சத்தம் கேட்டு வந்த ஹேமாவும், பியூன் பாபுவும் மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு மௌனமாக நின்றார்கள்.

விசாலி, தன் ஹாண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு படிகளில் ‘தடதட’ என்று இறங்கிப் போனாள்.

வெளிப்புற கேட்டைத் திறக்க யத்தனித்தபோது, குரோட்டன்ஸ் செடிமீது இருந்த ஓணான், தலையைத் தூக்கிப் பார்த்து, விருட்டென்று புதருக்குள் ஓடி மறைந்தது.

பதற்றத்துடன் ஓடிய ஓணான் முகத்தில் பாப்கட் வைத்து, சிவப்பு நிறலிப்-ஸ்டிக் பூசியது யார்?

ஒருவேளை, மிரண்ட கண்களுடன் நிற்கும்கிருஷ்ணவேணிதான் இந்த ஓணானா? சிரிப்பு வந்தது விசாலிக்கு!

சாலையில் இறங்கி, பஸ்ஸ்டாண்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். தூரத்தில் மஞ்சள் நிறக் காத்தாடி ஒன்று, தனது நீண்ட வாலை ஆட்டி ஆட்டி வேகமாகப் பறந்து கொண்டிருந்தது.

ஏ… பட்டமே! உனக்கொரு சேதி! இன்றிலிருந்து நானும் சுதந்திரமாய்ப் பறந்து கொண்டிருப்பேன். ஆமாம், உன்னைப் போலவே உல்லாசமாய்!”

விசாலி, கர்வத்துடன் நடை போட்டாள். மனசு, மழை பெய்த சாலை போல ‘பளிச்’ என்றிருந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *