பைத்தியக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 1,223 
 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் இந்த உலகத்துக்கே ஒரு புதிர்! விளங்காத காவியம்! அவனைப் பற்றி யாருமே சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்து கொள்ளாமலே பலப்பல அவனைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள் இந்த மனிதர்கள்.

மர்மத்தில் மயங்கிப் போகும் மனிதர்கள் கூட்டம் அவனையும் ஒரு மர்மமாக்கிப் பொழுது போக்கியதில் ஆச்சரியமில்லை. ஆனால்! அவனை அதிசயமாக்க அவர் கள் ஆச்சரியமாகிக் கொண்டிருந்தது தான் புதுமை.

அவர்களுடைய கோணல் பார்வை பல கோணத்தில் இருந்தும் அவனைத் தாக்கிற்று. வாழத் தெரியாதவன், சோம்பேறி, ஊமை, செவிடு என்றெல்லாம் சொல்லித் தங்கள் பேச்சுச் சுதந்திரத்தை உறுதிப் படுத்திக் கொண்டனர். வேறு சிலர் உலகத்தையும் வாழ்க்கையையும் அதிகமாகத் தெரிந்துகொண்ட மனப்பான்மையில் அவனைப் ‘பைத்தியக்காரன்’ என்றனர். பித்தம் தலைக் கேறியவன் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட வேண்டிய வன் என்றெல்லாம் சொன்னார்கள். முடிவில் அவன் பித்தன் என்றே கருதப்பட்டான்.

நாளுக்கு நாள் அவனைப் பித்தன் என்று சொல்லும் மனிதக் கும்பல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஓடு கிறவனைப் பார்த்து நாய் குலைப்பது போல! ஆனால்! அவள் ஓடவுமில்லை ஒதுங்கவுமில்லை. அவன் போக்கே ஒரு தனிப்பாதை.

உல்கம் யாரைப் பித்தன் என்று கூறியதோ? அந்த அவர் கள் அணியில் ஒருவனாக ஆக்கும் தகுதியைத் தெரிந்தோ தெரியாமலோ அவனையும் அந்த வரிசையில் வைத்துப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் இந்த மனிதர்கள்.

மானிட சாதியின் சுதந்திரத்துக்குப் பாடுபட்டவர்களை எழுத்தாலும் பேச்சாலும் மனித உள்ளங்களைத் தட்டி எழுப்பியவர்களை, இலக்கியத்திலே கருத்திலே புதுமையைப் புகுத்தியவர்களைப் பித்தர்கள் என்பதில் அர்த்த மிருக்கிறது.

நடமாடித் திரிந்தவன் முடமாகிப் போனது புரிந்து கொள்ளப்படாத மர்மம்! சுடுகாடு, நடு இரவு. மனித எலும்புக் கூடுகளின் மத்தியில், ஆனந்தக் கூத்தாடினானே அவளையும் “பித்தன்” என்று தான் அழைக்கிறார்கள்.

ஆனால்! அவன்?

அவன் அவனே தான். அவனைப்பற்றித் தெரிந்து கொண்டவனும் அவனாகத்தான் இருக்க முடியும்.

அதோ அவன் வருகிறான். நொண்டி நொண்டி நடந்து வருகிறான். நகரத்தின் முக்கிய பாதை அது. வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த அந்தப் பாதையில் அவன் சாவதானமாக நடந்து வருகிறான். நாகரீகத்தின் உச்ச நிலை, அவசரமும் அகங்காரமும் தான்! என்று முடிவுக்கு வந்து விட்ட மனிதப் பிரகிருதிகளின் மத்தியில் நிதானமாக நடந்து வருகிறான். அவசரவசரமாகப் போய் வந்து கொண்டிருக்கும் மனித நடமாட்டத்திலே, கடி வாளம் இடப்பட்ட குதிரையைப் போல தார் ரோட்டில் நின்று கையை நீட்டுகிறான். ஓடிக் கொண்டிருக்கும் ரெயில் வண்டியில் இருந்து விடுபட்ட ரெயில் பெட்டியைப் போல், அத்தனை பேரில் ஒருவன் ஒரே ஒரு மனிதன் அவன் அருகில் நின்று ஏதோ அவன் கைக்குள் வைத்து விட்டுப் போகிறான். அவன் திரும்பவும் தன் நடையை ஆரம்பிக் கிறான். இது தான் அவனுடைய முடிவில்லாத பிரயாணம்.

சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நடுப்பகல்; அணலைக் கக்கும் தார் ரோட்டு. இந்த இரண்டுக்கும் மத்தி யிலே நிதானமாக அடியெடுத்து வைத்து நடப்பான். நடந்து கொண்டே இருப்பான். திடீரென்று ஒருநாள் பயங்கரமான காற்றும் மழையும் அடிக்கும். அப்பொழுதும் அவன் ஓடமாட்டான் ஒதுங்க மாட்டான்; அதே நிதானம்; அதே நடை! பசி இல்லை பணமும் இருந்ததில்லை அவனிடம், நோயுமில்லை, மருந்தும் தேவைப்படவில்லை, அவனுக்கு. வாழவேண்டுமென்று நினைத்தவனுமில்லை; சாவைப் பற்றிச் சிந்தித்தவனுமில்லை, பயமுமில்லை; கடவுளுமில்லை அவனுக்கு! விறுப்பு வெறுப்பற்று வாழ்க்கை யின் எல்லைக் கோட்டுக்கப்பால் நின்று உலகத்தை ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விருப்பு வெறுப்பற்றவன் ஒரு துறவிதான். என்றாலும் துறவிகள் தங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள எப்பொ ழுதும் மறந்ததில்லை . ஆனால்! அவன்? பைத்தியக்காரன் இவைகள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவன். ஆம் அவன் மனிதன்! அவனுடைய கதை?…?

மாயா லோக தத்துவத்தைத் தாண்டி மனித வாழ்க் கையை மரணப் பாதையில் இருந்து தடுக்க ஏற்பட்டது தான் வைத்தியம், அதன் வெற்றி முற்றுப் பெறாத சம்பவம்! அத்தகைய வைத்திய மாணவனாகப் பயிற்சி பெற்று கொண்டிருந்தவன் தான் சுந்தரம். ஆனால் அவன் உடல் தத்துவத்தை மறந்து போனது ஆச்சரியமில்லை. உள்ளத்தை ஆராய வேண்டிய சமயத்தில் எண்ணத்தை இழந்து போனது தான் அதிசயம்.

அன்று வழக்கம்போல் சுந்தரம் வகுப்பறையில் நுழைந் தான். அங்கே அப்பொழுது இருதய நோயைப் பற்றிய விரிவுரை நடந்து கொண்டிருந்தது. அவன் தன் ஆசனத் தில் உட்கார்ந்து கொண்டே இடது புறம் திரும்பிப் பார்த் தான். அவன் உள்ளம் அடித்துக் கொண்டது…! ஆசையும் அவசரமும் முட்டி மோதியது. எப்பொழுது வகுப்பு முடியும் என்பது தான் அவனுக்குக் கவலை. இந்த இரண்டு நாளாக யாரைக் காணாமல் துடிதுடித்தாலோ அவள் வகுப்புக்கு வந்திருந்தாள். ஆம் அவனுடைய உயிர் கமலா வகுப்புக்கு வந்திருந்தாள்.

வகுப்பிலே இருதய நோய் பற்றிய பேச்சு விரிவுரை யாகிக் கொண்டிருந்தது. அதே சமயம் உள்ளம் வேறு இடத்தில் வியாக்கியானம் தேடிக் கொண்டிருந்தது.

கமலா! ஏன் இரண்டு நாளாக வகுப்புக்கு வரவில்லை ? வகுப்புக்கு வராமல் எங்கே சென்றிருந்தாள்? ஏன் எதற்காக? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கவில்லை அவனுக்கு. அவளைப் பற்றிய இந்த இரண்டு நாள் இரக சியம் விளங்காத புதிர்! முடிவுகாண முடியாத வெட்ட வெளி?

இருதய நோயைப் பற்றிய விரிவுரை முடிந்து விட்டது. வைத்திய மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியே போய்க் கொண்டிருந்தனர். சுந்தரமும் அவசரவசரமாக வெளியே வந்தான். கமலாவைச் சந்திக்க விரைந்தான். ஆனால் கமலா போய் விட்டாள்! பெண்கள் விடுதியை நோக்கி வெகுவேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். சுந்தரம் பின் தொடர்ந்தான்; அவள் கிட்டவில்லை. அவனை விட்டு வெகு தூரம் போய் விட்டாள். பெண்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் அவள் தன் படுக்கை யறையில் நுழைவதை அவன் பார்த்தான். அவள் இவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை பூமியை விட்டு வெகு தூரம் உயர்ந்திருந்த அந்த மாடி வீட்டைப் பார்த் தான், அவள் படுக்கை அறையையும் அவளையும் ஒரு பிச்சைக்காரனைப் போல் பார்த்துக் கொண்டு நின்றான்.

ஆயிரம் கேள்விகள் அவன் உள்ளத்தில் தோன்றின. அவனுடைய பார்வையில் இருந்து ஒவ்வொரு பொருளும் மறைந்து கொண்டே இருந்தது. முடிவில் பூதாகரமான ஒரு பெரும் கேள்வியடையாளந்தான் அவன் கண்களுக்குத் தென்பட்டது.

அந்தக் கேள்வியடையாளத்துக்குள் அவள் காதலி கமலா நின்று கொண்டு மௌனம் சாதித்தாள். அவள் பதில் அளிக்கவில்லை. சுற்றிச் சுழன்று கொண்டிருந்த இருதயத்தை சுய உணர்வால் தாங்கிப் பிடித்தபடி தன் விடுதியை நோக்கி நடந்தான்.

காதல் கதை கண்ணீர் கவிதான். ஆரம்பம் கரைபுரண் டோடும் காட்டு வெள்ளம்! முடிவு தண்ணீர் போன தடம், காய்ந்து வறண்டு வெடித்துப்போன நிலம்தான் மிஞ்சும், காதல் என்றால் வாழ்க்கைத் தோல்வி என்று பொருள் கொடுக்கவில்லை , அகராதி.அனுபவம் தான் அப்படிச் சொல்கிறது.

சுந்தரமும் கமலாவும் ஒரே கிராமத்தில் ஒரே குடும் பத்தில் பிறந்தவர்கள். பெரியவர்களுக்குள் ஏற்பட்ட விரோதம், அந்தச் சிறு உள்ளங்களைச் சுக்கு நூறாக்கி விட்டது. பெரியவர்களால் அவர்கள் பாதையிலே வெட்டி விடப்பட்ட பள்ளத்தில் கமலா மிகவும் சுலபமாக விழுந்து விட்டாள். அத்தோடு சுந்தரமும் இழுத்துச் செல்லப் பட்டான்.

கமலாவின் தந்தை ஒரு கரடு முரடான மனிதர். தனது எண்ணத்தைச் சாதிக்க சுந்தரத்தின் தாய்வழி பைத்தியக் கார சந்ததி என்ற கதையைக் கட்டி விட்டார். ஒரு நாள் சுந்தரத்தையும் அந்த நோய் பாதிக்கும் என்று நம்பச் செய்து விட்டார். அந்த மனிதர். கமலா சற்று யோசித்தாள். என்ன செய்வது? என்ற கேள்விக்கு விடை கிட்டா மல் திண்டாடினாள். இந்தத் திண்டாட்டத்தைப் பயன் படுத்திக் கொண்டு வேறு ஒரு வாலிபனுடன் முடிச்சுப்போட முனைந்தார் அவள் தந்தை, படிப்பு முடிந்தவுடன் விவாகம் என்ற ஒப்புதலுடன் ஒரு படித்த வாலிபனைத் தேடினார், அவனும் கிட்டி விட்டான்.

இதையறிந்த கமலா கற்சிலையானாள், அவளால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விடுதலை பெற முடியவில்லை! முயலவில்லை. இந்த வாழ்க்கை ஒப்பந்தத்தின் காரணமாகத் தான் அவள் கல்லூரிக்கு வரவில்லை. இந்த விவகாரங்கள் ஒன்றும் சுந்தரத்துக்குத் தெரியாது. தெரிந்தாலும் என்ன! இதைவிட அதிகமாக நிலை குலைந்து போக அவனிடம் என்ன இருக்கிறது?

நிலை தவறியவள் நெறி தவறவில்லை . நேராகத் தன் விடுதியை நோக்கி நடந்தாள். விடுதியிலே ஆறுதல் அளிக்கக் கூடிய இடம் வாசகசாலை ஒன்று தான், எனவே வாசக சாலைக்குள் புகுந்து ஒரு மூலையில் கிடந்த நாற் காலியில் உட்கார்ந்து சிந்திக்கத் தொடங்கினாள்.

“கமலாவின் இந்தச் செயலுக்குக் காரணம் என்ன? நெருப்பிலே பொன்னைப் புடம் போடுவது போல் உள் ளத்தை வேதனையில் தள்ளுவது தானா? காதக!. இந்தக் காதலைப் பற்றித்தான் கவிஞர்கள் காவியம் இயற்றினார்கள்? வீம்புக்கு வேட்டையாடி இருக்கிறார்கள் வெறும் புகழுக்காக!

காளிதாசன் காதல் காவியத்தை வானளாவப் புகழ் கிறார்களே எல்லாம் தெரிந்தது போல, அப்படியானால் அவன் இலக்கியங்கள் சமுதாயத்துக்குச் செய்த கொண்டு என்ன? கருத்துக்குப் பொருத்தமற்ற செயல், பண்புக்குப் பொருத்த மற்ற நிலை….சீ..! வாழத் தெரியாத உலகம் –

அவனுடைய சிந்தனையைத் தடை செய்தாள் ஜெயம்!

“என்ன சுந்தரம் உலகத்தை விட்டு ஒதுங்கி விட்டவன் போல் ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டாய்! நீ இன்றயப் பத்திரிகையைப் படிக்கவில்லையா? என்று கேட்டாள்.

சுந்தரம் ஒன்றுமே பேசவில்லை மெதுவாக நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அப்பாழுது ஜெயம் ஒரு ஆங்கிலச் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தாள். அதில் :

“வைத்தியக் கல்லூரி மாணவி சுமலா தேவிக்கும், தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் நடராஜனுக்கும் அரசாங்கச் சட்டப்படி வாழ்க்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது…”

இந்தச் செய்திக்கு மேல் சுந்தரத்தின் காதில் எதுவும் விழவில்லை! அவன் கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் பூமியில் விழுந்தது!

செய்தித்தாளைப் படித்துவிட்டு சுந்தரத்தைப் பார்த்த ஜெயம், அவன் இருந்த நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். சுந்தரமும் கமலாவும் உறவினர்கள் மட்டு மல்ல; உள்ளத்தால் ஒன்றுபட்ட காதலர்கள் என்பதையும் உணர்ந்தாள்; வேதனைப்பட்டாள்.

“சுந்தரம்! இந்தச் செய்தி உன் உள்ளத்தை பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது என்ன?” என்று கேட்டாள்.

சுந்தரம் சிரித்தான்! அந்தச் சிரிப்பில் சாய்ந்து போன சருகு இலையின் சலசலப்புக் கூட இல்லை . அவள் எழுந்து நின்றான். அவன் அடிவயிற்றில் இருந்து ஒரு பெருமூச்சு. வெளிவந்தது. அதன் பிறகு அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வெளி வந்தன.

“வேதனை உள்ளத்துக்கல்ல ஜெயம்? உலகத்தின் கருத்துக்கு. காதலைக் காவியமாக்கிய கயமைத் தனத்துக்கு! உலகம்! காதல்! தூ!!!”

அவன் அறிவு கொதித்தது அந்தக்; கொதிப்பின் எதிரொலி போல் அவள் சிரித்தாள்!

அந்த எக்காளச் சிரிப்பின் எதிரொலி காதலின் கருத்துக்கு எட்டியதோ என்னவோ? ஆனால் மனிதர்களின் காதுக்கு எட்டியது அதனால் தான் அவன் பைத்தியக்காரன்.

– 1952, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *