போதி மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2012
பார்வையிட்டோர்: 8,520 
 

கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம். சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த அமாவாசை இரவில் இருட்டைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. கண்கள் பீதியில் மருண்டன. கறுப்பு மையை யாரோ வானிலிருந்து கொட்டிவிட்டதுபோல மேலும் இருள். விழிகளை மூடி மூடித் திறந்தான். கால்கள் சீவனற்றுப் போய் உதறலெடுக்க பற்களும் நடுங்கத் தொடங்கின.

அது முச்சந்தி. பகலெல்லாம் இருக்கும் சனநடமாட்டத்தின் சத்தங்களையும், வாகனங்களின் இரைச்சல்களையும் அந்தியாகிவிட்டால் எந்தத் துளைக்குள்ளோ ஒளித்துக் கொண்டு நிச்சலனத்தை எங்கும் வழியவிட்டு அமைதியாக அடங்கிவிடும் கிராமமது. அச் சந்தியில் ஆட்களின் நிழலுக்காக நடப்பட்ட அல்லது முன்னெப்போதோ தானாக முளைவிட்டு இப்பொழுது செழித்து வளர்ந்து பரந்திருக்கும் ஆலமரம், மாமரம் மற்றும் அரச மரங்களின் நிழல்தான் பகற்பொழுதில் அக்கிராமத்துக்கான சந்தைத் தளம், ஊருக்கு வந்து போகும் ஒரே பஸ்ஸுக்கான பஸ் தரிப்பு நிலையம். மற்றும் முக்கியமாக ஒரு நாள் நள்ளிரவில் கனகனின் முதல் மனைவி தூக்குப்போட்டுக் கொண்டு செத்த இடம்.

இவன் கொடுத்த அடிகாயங்களோடு கால்கள் காற்றில் அலைய, நாக்குப் பிதுங்க அவள் செத்துத் தொங்கிய அதே மாமரத்திலிருந்துதான் கொலுசுச் சத்தம் கேட்கிறது. ஒருவேளை அவளது ஆவியாக இருக்குமோ ? இன்று அந்த மாமரத்தைத் தாண்டி, கள்ளு குடிக்கப் போகப் பயமாக இருந்தது அவனுக்கு. பயம். பேய்ப்பயம். பேய்கள், பிசாசுகள், மோகினிகள், ஆவிகள் குறித்தான எல்லாச் சிறு வயதுக் கதைகளும் இன்னும் போதை ஏறாத அவனது தலைக்குள் ஊசலாடத் தொடங்கின. ஒரு தடவை இது போல அமாவாசை இரவொன்றில் வெள்ளைச் சேலை காற்றிலாட கையில் குழந்தையும் நீண்ட பற்களுமாக இதே சந்தியில் சாமிப்பிள்ளையின் சைக்கிளை வழி மறித்ததாக ஊருக்குள் சொல்லப்பட்ட மோகினிப் பெண்ணின் கதை நினைவுக்கு வந்து தொலைத்தது. குளக்கரையிலிருந்து வந்த ஈரக்காற்று காதருகில் ஊளையிடுவதாக எண்ணி மேனி சிலிர்த்தான். ஜல் ஜல் சத்தம் அவனுக்கு மிகவும் அருகில் கேட்டுக் கொண்டே இருந்தது.

முழங்கால் வரை ஏற்றிக் கட்டியிருந்த சாரத்தின் ஒரு முனையைப் பற்றியபடி குடிசைக்கு ஓடிவிடலாமென நினைத்தான். நெஞ்சு திக் திக்கென அடித்துக்கொண்டது. வழமையாக போதையில் தள்ளாடும், குடிசையில் புலியைக் கண்டு மிரண்டு போய் நிற்கும் மான்குட்டியாய் அச்சத்தில் உறைந்திருக்கும் பரஞ்சோதியை எட்டி உதைத்து விளையாடும் கால்கள் இன்று அங்கிருந்து பார்த்தால் தெரியும் தூரத்திலிருந்த அவனது குடிசைக்கு அவசரமாகப் போய்விடக்கூட முடியாமல் தள்ளாடின.

அவனுக்கு பழகிய ஒற்றையடிப் பாதையிது. ஒரு காலத்தில் இவனது அடிகளும் வசவுகளும் தாங்கமுடியாப் பொழுதுகளில், தப்பித்து ஓடும் முதல் மனைவியை விரட்டிப்பிடித்து எல்லோரும் பார்த்திருக்க காட்டுத்தனமான அடி, உதைகளோடு இழுத்துவரும் ஒற்றையடிப் பாதையிது. அவள் பாதைதோறும் அவலக்குரல் எழுப்புவாள். ஓலமிடுவாள்.அவன் மேலும் மேலும் அடிப்பான். அவனைச் சபிப்பாள். விஷப்பாம்பு கொத்தட்டும், இடி வந்து அவன் மேல் விழட்டுமெனச் சொல்லிச் சொல்லி அழுவாள். இப்போது கட்டியிருக்கும் பரஞ்சோதி அப்படியில்லை. எவ்வளவு அடித்தாலும் குடிசைக்குள்ளேயே அழுது வழியும் ஊமைப் பெண். விசும்பலைத் தவிர ஒற்றைச் சொல் எழாது.

காற்று சுழன்று சுழன்று அடித்தது. பேயின் கொலுசுச் சத்தமிப்பொழுது அதிகமான சலனத்துடன் கேட்கத் தொடங்கியது. பாதையோடு இழுத்துவைத்து ஆணியறைந்தது போல பாதங்கள் நகர மறுத்தன. வெடவெடத்தன. எட்டி எட்டி நடக்க நடக்க குடிசை விலகி விலகிப்போவதைப் போலவே தெரிந்தது அவனுக்கு. பார்க்கும் திசைகளிலிருந்தெல்லாம் அவனது முதல் மனைவி வெள்ளைச் சேலையோடு கால்களற்று அந்தரத்தில் ஆடியபடி ‘இனிமே அடிப்பியாடா நீ?’ எனக் கண்களில் கோபம் மின்ன, நாக்கைத் துருத்திக் கொண்டு கேட்பதாக அவனுக்குத் தோன்றியது.

பரஞ்சோதிக்கு ஆச்சரியமாகப் போயிற்று. கனகன் இன்று நேர காலத்தோடு வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் குடிக்காமல் வந்திருக்கிறான். தான் ஏதும் கனாக் காண்கிறோமா என்ற சந்தேகம் கூட அவளுக்குள் எழும்பி அடங்கிற்று. பெண்களின் உடுத்தாடை போல நெஞ்சு வரை ஏற்றிக் கட்டிய சாரம் எப்பொழுது அவிழ்ந்து விடுமோ என்ற சுரணை சிறிதுமற்று, ஊரே கேட்கும் வண்ணம் புலம்பலும் ஓலமுமாக இரவில் விழுந்து விழுந்து வீடு வந்து, இருக்கிற மிச்சப்பலத்தைக் கொண்டு அவளைத் தாக்காமல் நித்திரை கொள்ளாதவன் இன்று அமைதியானவனாக வீடு வந்து சேர்ந்திருக்கிறானெனில் உலகின் மூலையில் ஏதோவொரு அதிசயம் நேர்ந்திருக்கத்தானே வேண்டும்? இரும்புப் பட்டறையொன்றில் வாரக்கூலிக்கு வேலை செய்யும் அவனது ஊதியம் முழுதும் கள்ளுக்கடைக்கும், பெட்டிக்கடை பீடிச் சுருள்களுக்குமே இரைக்கப்பட்டுக்கொண்டிருக்க, அப்பம், சின்னச் சின்னப் பலகாரங்கள் செய்து சந்தையில் விற்றுவரும் காசில்தான் பரஞ்சோதி குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.

‘அடி கெழட்டு மூதேவி’, ‘முண்டச் சிறுக்கி’ போன்ற வசவு வார்த்தைகளோடே வீட்டு வாசலுக்கு வருபவன் இன்று அமைதியாக வந்திருப்பதைப் பார்த்ததில் அவளுக்கு ஆச்சரியம் இன்னும் அதிகரித்தது. ஒருவேளை தன்னைப் போல இவனும் ஊமையாகி விட்டானோ? இருட்டை விரட்டப் பார்க்கும் குருட்டு வெளிச்சத்தை ஏந்தியிருந்த சிறு விளக்கினடியில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த கனகனின் முகம் பேயறைந்ததைப் போலிருந்தது. வியர்வை வழிந்து சட்டை தெப்பமாக நனைந்திருந்தது. தண்ணீர் கொண்டு வந்துகொடுத்தாள். மடக்கு மடக்கென்று குடித்தவன் கட்டிலில் சாய்ந்துகொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

யார் அவன் புத்தியைத் தெளியவிட்டது ? அடிவாங்கிக் கண்ணீரோடு புலம்பும் அவளது ஓலங்களிற்கும் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்து விட்டதைப் போல மகிழ்ந்தாள். ஒருவேளை குடிக்க இன்று காசிருந்திருக்காதோ? இல்லையே..இன்று வாரக் கூலி கிடைக்கும் நாளாயிற்றே. ஒருவேளை குடிக்கச் சரக்கிருந்திருக்காதோ? அதற்கும் சாத்தியமில்லை. தோட்டத்திலிருந்து கள்முட்டி இறக்கிப் போவதை இன்றும் கண்டாளே . எப்படியோ, இந்த மகிழ்ச்சி தினமும் நீடிக்கவேண்டுமென மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டாள். மிகவும் சந்தோஷப்படவும் பயந்தாள். நாளைக்குத் திரும்பவும் வேதாளம் மரத்தில் ஏறிவிடின், தொடரும் நாட்களில் அடி, உதை, துன்பம்தான்.

நடமாடும் கண்ணாடிப் புகைப்படச் சட்டத்தைப் போல ஒல்லியானவள் பரஞ்சோதி. வாய் பேச வராத ஊமை ஜீவன். எத்தனை அடி, உதைகளைத்தான் தாங்குவாள்? எதிர்த்துக் கேட்க அப்பா, அம்மா இல்லை. சகோதரர்கள் இல்லை. அவளது அப்பாவின் சாவு வீட்டில்தான் அவளது திருமணமே நிச்சயமாயிற்று. கனகனின் மூத்தமனைவி அதிர்ஷ்டக்காரி. அவனது அடி, உதைகளைத் தாங்கமுடியா நள்ளிரவொன்றில் முச்சந்தியிலிருந்த மாமரத்தில் தூக்கில் தொங்கினாள். சில மாதங்கள் கழித்து அயல்கிராமத்திலிருந்த அவளது அப்பாவின் சாவு வீட்டுக்குப் போனவனுக்கு ஊர்ப்பெரியவர்கள் சேர்ந்து நிராதரவாக நின்ற அவளது தங்கை பரஞ்சோதியை நிச்சயித்துக் கட்டிக் கொடுத்துவிட்டார்கள். வேறுவழியின்றி கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்க, பலியாடு போல அவன் பின்னால் வந்தாள்.

தாலி கட்டி, இந்தக் குடிசைக்குக் கூட்டி வந்து கொஞ்சநாள் வரை நன்றாகத்தானிருந்தான் அவன். பின்னர் பட்டறையில் இரும்படித்த அலுப்பெனச் சொல்லி ஓரிருநாட்கள் குடித்துவிட்டு வந்துபார்த்தான். அவளேதும் சொல்லவில்லை. மிரட்சி நிரம்பிய விழிகளோடும் ஏதும் சொல்லவியலாப் பதற்றத்தோடும் அவள் நின்றிருந்ததை அவளது சம்மதமெனக் கொண்டான் அவன்.

எல்லாம் கொஞ்சநாளைக்குத்தான். தொடர்ந்த நாட்களில் பழகிய தோஷமோ, பிடித்த விஷயமோ மாட்டுக்கு அடிப்பதைப் போல அவளையும் போட்டு அடித்துவந்தான். நல்லவேளை இவனது அடிஉதைகள் குடிசைக்குள்ளே மட்டுமாக நின்றுவிட்டது. அக்காவுக்குப் போல் வீதி வழியே எல்லோரும் பார்க்கக் கூந்தல் பிடித்திழுத்து அடிப்பதில்லை. இவளும் அடிக்கும்போது வெளியே ஓடுவதுமில்லை. இன்று அவளுக்குப் பெருமகிழ்வாக இருந்தது. கணவன் பசியில் வந்திருப்பானென எண்ணி அவசரம் அவசரமாகக் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

கனகனின் கண்களில் மூத்தவள் நடமாடத் தொடங்கினாள். எப்பொழுதோ அவளுக்கு சீதனமாகக் கொடுத்த வெள்ளிக்கொலுசைத் தான் விற்றுக்குடித்ததுவும், இவனது சித்திரவதை தாங்காமல் ‘ உன்னைச் சும்மா விடமாட்டேண்டா’ எனக் கத்திக்கொண்டு வெளியே ஓடியவளை மறுநாள் சடலமாகத்தான் குடிசைக்குக் கொண்டுவந்ததுவும் நினைவுக்கு வந்துதொலைத்தது. ஒருவேளை அவளை வதைத்ததைப் போலவே, தான் இப்பொழுது அவளது தங்கையை வதைப்பதற்காகப் பேயாக உலாவித் தன்னைப் பழிவாங்கக் காத்திருக்கிறாளோ?

கஞ்சி கொண்டு வந்து அருகில் வைத்துவிட்டு நகர்ந்த பரஞ்சோதியை அழைத்தான். கட்டிலில் அமரச் சொன்னான். அணிந்திருந்த சட்டையின் முழங்கை மடிப்பில் செருகிவைத்திருந்த காசுத்தாள்களை அவளிடம் கொடுத்தான்.
” பார்த்துச் செலவழி புள்ள..வயித்துல வேற உண்டாகியிருக்கே..இனிமே எதாச்சும் நமக்குன்னு சேமிக்கணும் ” என்றான்.

எவனோ ஒரு வண்டிக்காரன் வீசியெறிந்த, உடைந்து போன தன் வண்டி மாட்டின் ஒற்றைக் கழுத்துச் சலங்கையைச் சுமந்திருந்த அவ்வூர் முச்சந்தி மாமரத்தின் கிளை இப்படியாக ஒரு குடும்பத்தின் நல்வாழ்வுக்குத் தான் காரணமானதை அறியாமல் தொடர்ந்தும் காற்றில் ஆடியாடி ஓசையை எழுப்பிக்கொண்டேயிருந்தது.

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

பிரசுரமான இதழ்கள்
# அகநாழிகை
# விகடன்
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *