பொங்கப் பானை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 2,539 
 

பொங்கல் நெருங்கிவிட்டது.

சுட்டப் பானைகளை தட்டிப் பார்த்து தரம் பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தார் பொன்னையன்.

தெருத் தட்டி திறக்கும் சத்தம் கேட்டு ‘வெள்ளையும் சொள்ளையுமா யாரு வாராஹ! ‘ கைச்சாம்பலை தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டியில் அரைகுறையாகத் துடைத்துக்கொண்டு கண்ணுக்கு மேல் கை கவிழ்த்து பார்வையைக் கூராக்கிப் பார்த்தார்.

‘அட நம்ம கவுன்சிலர் கொளந்த..’

“வாங்க கொளந்த..!” என்று கனிவுடன் வரவேற்றார். சொன்னா நானே வூட்டுக்கு வந்திருப்பேனே நீங்க போய் எங்க வீட்டுக்கு…”

“பானைங்க வேணும்..” இன்று தொடங்கிய கவுன்சிலரை மேலே பேச விடவில்லை பொன்னையன்.

“உங்களுக்கு இல்லாத பானைங்களா..! எவ்ளோனு எண்ணிக்கை சொல்லுங்க. வீட்டுக்கு கொண்டாரேன்.”

“மொத்தம் எவ்வளவு பானைங்க இருக்கும்?”

“ஒரு 400 கிட்ட… இருக்கு..” இந்த பொங்கலுக்கு 200 சொச்சம் விற்கும்னு எதிர்பாக்கேன்…”

அங்கே அடிக்கியிருக்கே அது..” அதெல்லாமும் கூட நல்ல பானைங்கதான் விளிம்பு கிளிம்பு பொக்கைபட்டிருக்கும் ஏழெப்பாழெங்களுக்கு; கொடுத்த பணத்தை வாங்கிக்கிட்டுத் தருவேன்..!”

“பொன்னையாண்ணே..! இங்கே இருக்கற மொத்த பானைக்கும் பத்தாயிரம் தந்தா கட்டுப்படி ஆவுமாண்ணே..?”

“சிவ சிவா…! ரொம்ப அதிகமா சொல்றீய. அஞ்சு… ஆறாயிரம் பொறும்..”

“இந்தா..! பத்தாயிரம் வாங்கிக்க.. அடுக்கின பானைங்க அப்பிடி அப்படியே இருக்கட்டும்.”

“தொழில் தர்மம்னு இருக்குல்ல..!” என்று சொல்லிக்கொண்டே கொடுத்ததில் நாலாயிரத்தை திருப்பித் தந்துவிட்டார் பொன்னையன்.

“சீக்கிரம் எடுத்துக்கிட்டு போயிடுங்க தம்பி..! கேக்கறவங்களுக்கு தாட்சணியமாயிரும்..”

“நாளைக்கு இந்நேரம் இங்கே இந்தப் பானைங்க பானைகளா இருக்காது. இந்த சார் டிவி சீரியல் இயக்குநர். நாளைக்கு எடுக்கப்போற சூட்டிங் ல நாலு வில்லன்களோட ஹீரோ போடற சண்டைல எல்லாப் பானைகளும் தெரிச்சிப் போயிடும்..” என்றார் கவுன்சிலர் கதூகலமாக.

“தம்பி.. ! இந்தாங்க!!” என்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டே “பானைங்க கொடுக்கறதுக்கில்ல..தம்பி..” என்றார் பொன்னையன்.

– கதிர்ஸ் – ஜனவரி 16 – 31, 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *