கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 1,693 
 
 

அம்மா துணி துவைக்கும் போதெல்லாம் ” ஒரு நல்ல சாக்ஸ் வாங்கி போடுறா … எவ்வளவு நாளைக்கி தான் இப்படி இத்து போனதையே போட்டுக்கிட்டு இருப்பே ” என்று சங்கரை சத்தம் போடுவாங்க .

அவனோட சாக்ஸ் இரண்டும் , அதன் நீண்ட நாள் உபயோகத்தில் ஆங்காங்கே .. ஓட்டையும் கிழிசலுமாக இருந்ததால், அதில் அவ்வப்போது பெரு விரல் எட்டி பார்க்க முயற்சி செய்ய … அதை அலுவலகத்தில் யாரும் கவனிக்காமல் மறைத்து காப்பாற்ற வேண்டி மிகவும் சிரமப்படுவான் .

அவன் வேலையில் ரொம்ப பிசி …ஆபீஸ் வீடு என்று இருப்பான் .வெளியில் சுற்றுவதில் அவனுக்கு அதிக விருப்பமில்லை. அவனது எல்லா தேவைகளையும் பெற்றோர் பார்த்துக்கொள்கிறார்கள். அதிலும் இப்போதெல்லாம் எல்லா பொருள்களையும் ஆன் லைன் மூலம் வாங்கி விடுகிறான். ஆனால் இந்த செருப்பு, ஷூ போன்ற காலணிகள், காலுறை (சாக்ஸ் ) மட்டும் செட் ஆவதில்லை . அதில் அவனுக்கு நிறைய முன் அனுபவம் உண்டு . குறிப்பாக கால் அளவு  சரியாக பொருந்துவதில்லை. இப்ப இருக்கிற சாக்ஸ், போன தீபாவளிக்கு கடை வீதியில் வாங்கியது.

இன்று எதேச்சையாக அவன் கடைத்தெருவிற்கு வர நேர்ந்தது . ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், அமிர்தா ஸ்டோரில் மிக்ஸி பிளேடு மாற்றி தர சொல்லி அம்மா கொடுத்தது ரெடியாக இருப்பதாகவும் , அப்பா வெளியூர் விசேஷத்திற்கு போய் விட்டதால் … அதை அவனை வாங்கி கொண்டு வரச்சொல்லி விட்டார்கள் . இல்லாவிட்டால் இரவு தோசைக்கு சட்னி ஏதும் பண்ண முடியாது என்று உபரி தகவல் வேறு தந்து விட்டதால் .. கடை தெருவில் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு, அமிர்தா ஸ்டோரை தேடி போனான் .

அங்கே அம்மா கொடுத்த பில்லை காண்பித்து , மிக்ஸி ஜாரை வாங்கிக்கொண்டான் . அதற்கான சர்வீஸ் தொகையை ‘போன் பே’ செய்து விட்டு வெளியே வந்தான் .

‘இப்ப சாக்ஸ் எங்கே வாங்கலாம்’ என்று யோசித்தான் .

வெறும் சாக்ஸ்க்காக பெரிய கடைகளுக்கு போக அவனுக்கு விருப்பமில்லை. கடைவீதியில் நிறைய சாலையோர கடைகள் இருந்தன… சாக்ஸ் மற்றும் கைக்குட்டை போன்ற சிறு பொருள்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கடைகளிலும் ஆங்காங்கே மக்கள் தங்களுக்கு தேவையானதை பேரம் பேசி வாங்கி கொண்டிருந்தார்கள்.

‘மக்கள் சாலையோர கடைகளில் பேரம் பேசுவதை போல ,பெரிய கடைகளில் பேச முடியாது .அங்கே எல்லாம் ‘பிக்சட் ரேட்’-ஒரே விலை.10-20 சதவிகிதம் தள்ளுபடி,அல்லது ஒரு பரிசு பொருள் என்ற பெயரில் அவர்கள் சொல்லும் விளம்பரங்களை நம்பி போய்விட்டு …சொன்ன விலைக்கே பில் தொகையோடு இதர வரிகளையும் கட்டி விட்டு வாங்கி வருகிறார்கள். சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் மக்களின் ஆடம்பர சிந்தனையில் தான் அதிகம் வெளிப்படுகிறது .அதுவும் இங்கே கடைவீதியில் அதை கண்கூடாக பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டான்

அவன் ஒரு கடைக்கு போக நினைக்கும் போது …ஒரு பெரியவர், மூன்று சக்கர வண்டியில் மணி ஓசையுடன் மெதுவாக வந்து அவன் அருகில், சாலையோரத்தில் நிறுத்தினார் .அவரை பார்த்ததும் அவர் ஒரு மாற்று திறனாளி என்பதை சங்கர் புரிந்து கொண்டான். அவருக்கு ஒரு கை மடங்கிய நிலையில் செயல் படாமல் இருந்தது. ஒருகால் செயற்கையாக பொறுத்தப்பட்டிருந்தது.அவருடைய வண்டியை சுற்றி கைக்குட்டை,சாக்ஸ், உள்ளாடை வகைகள் என சிறு சிறு துணி வகைகள் , தோரணமாக கட்டி இருந்தது .

அவன் அவரை நெருங்கி சென்றான். அவனை பார்த்ததும்                        

 “வாங்க சார் .. என்ன வேணும் ” என்றார் .

“காட்டன் சாக்ஸ் இருக்கா “என்று சங்கர் கேட்க …

“ஓ … இருக்கே ..இதோ ” என்று சொல்லிக்கொண்டே ஒரு கையால் ஒரு நீண்ட கம்பியை எடுத்து , தோரண வரிசையில் இருந்து ஒரு கவரை, வெகு லாவகமாக எடுத்து அவனிடம் கொடுத்தார் .

“இதுல மூணு சோடி இருக்கும் . மூணும் வேறு வேறு கலர். உங்களுக்கு ஒரே கலர் வேண்டுமானாலும் தருகிறேன் . விலை 180 ருபாய் தான்” என்றார் .

“ஓ .. காட்டன் தானே இது . நல்லா இருக்குமா ?!” என்று அவன் இயல்பாக கேட்டான் .

“காட்டன் சாக்ஸ்தான். வாங்கிக்குங்க. நல்லா இருக்கும் ” என்று அவர் சொல்ல .. சங்கர் , அந்த கவரில் இருந்த விவரங்களை படிக்க திருப்பி, திருப்பி பார்த்தான் . அவன் யோசிப்பதை கவனித்து விட்டு …

“சார் , தரமான பொருளை தான் விக்கணும் என்பது என் விருப்பம் . இந்த சாக்ஸ் வித்தா ஒரு சோடிக்கு ஐந்து ருபாய் கிடைக்கும் ..அதுக்காக தரமில்லாத பொருளை விக்க மாட்டேன் சார்” என்றார் .

‘அவன் எந்த பொருளை வாங்கி கொண்டு வந்தாலும், அவன் அம்மா, ஏதாவது ஒரு அறிவுரையை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த சாக்ஸ வாங்கிட்டு போனாலும் , ” ஏன்டா இதுக்கு நீ அதிகம் பணம் கொடுத்து வாங்கிட்டே! விலையை கொறச்சு கேட்டு இருக்கணும் ” என்பார்கள்’ 

ஆனால், அவனுக்கு இந்த சாக்ஸ் தரமாக இருப்பதாக தோன்றியது. பெரிய கடைகளில் போனால் இருநூறு ரூபாய்க்கு குறையாமல் தரவேண்டும் ‘. என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் போது …திடீரென, அவருடைய வண்டி பின் பக்கமாக நகர ஆரம்பித்தது . உடனே அவர் , அவசரமாக தன் கையில் இருந்த கம்பியை பக்கவாட்டில் வைத்து விட்டு, அதே கையில் பிரேக் மாதிரி இருந்த லிவர் ஒன்றை இழுத்து பிடிக்க முயன்றார் . அவரின் ஒரு கை செயல் பட முடியாமல் இருந்ததால் ஒரு கையிலேயே அவர் வண்டியை நிறுத்த முயற்சி செய்தார். 

சங்கரும் சட்ரென்று .. தன் கைகளால் வண்டியை நகராமல் இழுத்து பிடித்துக்கொண்டான். அதற்குள்ளாக, அவரும் சுதாரித்துக் கொண்டு வண்டியை லாக் போட்டு நிறுத்தி விட்டார் .

“ரோடு கொஞ்சம் சாய்மானமா இருக்கு,அதான் … ” என்று சொல்லி விட்டு தன் காவி கரை படிந்த பற்களை காட்டி சிரித்தார். சங்கரும் அவரை பார்த்து புன்னகைத்தான்

‘அவர், தன் இயலாமையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை . யாரிடமும் யாசகம் கேட்டு பிழைக்க விரும்பவில்லை. உழைத்து சம்பாதிக்க நினைக்கின்றார் . இவரை போல உழைத்து பிழைக்க நினைக்கிற மனிதர்களிடத்தில், நியாயமான விலையாக இருந்தால், பேரம் பேசாமல் பொருளை வாங்கிக் கொண்டால் தானே… அவர்களுக்கும் உழைத்து பிழைப்பதில் நம்பிக்கை வரும்.                                       

உழைப்பினால் தங்கள் வாழ்க்கையிலும் முன்னேற்றம் வரும் என்கிற தன்னம்பிக்கை அவர்களுக்கு அதிகரிக்கும் . என்று நினைத்தான்.

அதனால் அவரிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல், அவர் கேட்ட தொகையை கொடுத்து சாக்ஸை வாங்கிக்கொண்டு… சங்கர் பார்க்கிங் ஏரியா நோக்கி நடக்கத் தொடங்கினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *