பாசாங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 1,680 
 

பாசாங்கு – இருப்பதை மறைத்து இல்லாத்தை இருப்பதைப் போல் எண்ணுவது மட்டுமில்லாமல் வெளிஉலகத்திற்கும் இருப்பதாகவே படம் போட்டுக் காட்டும் உன்னதமான ஒரு கலை!

இந்தக்கலை கல்லாமலேபாகம்படும் என்பதை நாம் அறிந்தாலும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டோம். இதுவும் பாசாங்குதான்.
பாசாங்கு அன்றாடம் உண்டு – சொந்த வாழ்வில், வீட்டளவில், நாட்டளவில், உலகளவில் என எல்லாமட்டங்களிலும் உண்டு என்பதை நாம் உணர்கிறோமா என்பதே கேள்வி.

சொந்த வாழ்வில் பாசாங்கு – எடுத்துக்காட்டு

சொந்த தொழிலிலோ அல்லது ஏதாவது ஒரு வேலயிலோ ஈடுபட்டவராயினும் நூறு சதவீதம் திருப்தியாக இருக்கிறார்களா – இது மன உளைச்சலைக் கொடுக்கும் ஒரு கேள்வி.

“ஏன் சார், உங்க பாஸ் தங்கமானவராமே?”

“பின்ன சும்மாவா? அசல் 24 காரட்டுதான் அவர்…”

“நீங்க ரொம்ப குடுத்து வைச்சவர், சார்”

“ஆமாம்… ரொம்பதான்…”. தான் கொடுத்ததை நினைவு படுத்திக் கொண்டான்… பத்து வருஷத்துக்கு முன்னால், வேலைக்கு சேரும்போது, பாசுக்கு ரெண்டு லட்சம் ரொக்கமாகக் கொடுத்ததை எப்படி மறக்கமுடியும்? ‘ரொம்ப குடுத்து வைச்சவன்தான்.’

உயர் அதிகாரிகள்மேல் உள்ளத்தில் இருப்பதை மற்றவரிடம் மூடி மறைப்பதென்பது தொன்று தொட்டுபாராட்டப் படும் வழக்கமாயிற்றே! இதை பாசாங்கு என சொன்னால் தவறா?

குடும்ப வாழ்வில் பாசாங்கு – எடுத்துக்காட்டு

யாருமே தம் குடும்பத்தைப்பற்றி மற்றவர் தாழ்மையாகவோ தரக்குறைவாகவோ பேசுவதைவிரும்பமாட்டார்கள். ஏற்கவும் மாட்டார்கள். இந்த யதார்த்தமான எதிர்பார்ப்புப் பற்றி விவாதத்துக்கு இடமில்லைஎனலாம். இருப்பினும்… ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயமாக ஏதாவது ஒன்று உளைச்சல் தந்துகொண்டேயிருக்கும் என்பதும் ஒரு நிதர்சனமான உண்மை.

நெருங்கியவரிடம் பகிர்ந்து கொள்ள மனம்துடிக்கும், ஆனால் சொல்ல முடியாமல் குடும்ப கௌரவம் தடுக்கும். மன உளைச்சல் அதிகமாகும்.

“உங்க வீட்டுக்காரர் சௌக்யமா?”

“அவருக்கு என்ன? ராசா மாதிரி ஜம்முன்னு இருக்கார்”

“ஏன்? வீட்ல ஏதாச்சும் பிரச்னையா?”

“ராசாவுக்கு என்ன பிரச்னை இருக்கமுடியும்?”

“அப்டின்னா, வீட்ல மத்தவங்களுக்கு ஏதோ பிரச்னை இருக்குன்னு சொல்றீங்களா?”

‘உங்க வேலையை பாத்துகிட்டு போவீங்களா…’ என்று உதறித்தள்ளவும் முடியாது,

இருக்கிறது என்றுவெளிப்படையாக சொல்லவும் முடியாது…’பிரச்னை எதுவும் இல்லை’ என்று சொல்லி ஒப்பேத்துவதுதானேயதார்த்தம். இதுதான் குடும்ப அளவில் பாசாங்கு.

கணவன் சமீபகாலத்தில் மூணு லட்சத்தை சூதாட்டத்தில் தொலைத்ததை எதற்காக

சோஷியல் மீடியாவில்பதிவு செய்யவேண்டும்?

‘ஏன்? வீட்ல ஏதாச்சும் பிரச்னையா?’ என்ற கேள்வியைக் கேட்டவரிடம் இந்த மூணு லட்சம் பற்றி சொல்லிவிட்டால், செய்தி சோஷியல் மீடியாவைவிட அதி வேகமாக பரவிவிடும் – இந்த ‘வாய்வழி’ மீடியாவுக்கு இன்டர்நெட், ஒய்ஃபை, பாஸ்வேரட், மின்சாரம் எதுவுமே வேண்டாமே!

நாட்டு நடப்பில் பாசாங்கு – எடுத்துக்காட்டு

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் மலேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் (MH370)சில மணிநேரத்தற்குள் சுவடே இல்லாமல் மறைந்ததே – அதில் இருந்த 239 மனிதர்கள் என்ன ஆனார்கள் என்பதுஇன்றுவரை யாருக்குமே தெரியாத ஒரு பெரும்புதிர். விமான தலைமை ஓட்டுனர் திட்டமிட்டு விமானத்தை இந்திய மகா சமுத்திரத்தில் மூழ்கடித்தார் என்பது ஒரு கோணம். தீவிரவாதிகள் விமானத்தை சின்னா பின்ன மாக்கினர் என்பது இரண்டாம் கோணம். விமானத்தில் ஏற்றப்பட்ட சில ‘ஸென்சிடிவ்’ பொருள்கள் சீனாவை சென்றடையக் கூடாது என விமானத்தையம் அதில் பயணித்த உயிர்களையும் பலியிட்டது அமெரிக்கா என்பது மூன்றாம் கோணம். ரஷ்ய நாடு யுக்ரெயினுக்கு சொந்தமாயிருந்த கிரைமியா பகுதியை அபகரித்த அட்டூழியத்தை உலகம் கவனிக்காமல் இருக்க மலேசிய விமானத்தை திசை திருப்பிப் பிறகு வீழ்த்தியதாக இன்னுமொரு கோணம். கோணங்கள் பலவானாலும், திருப்திகரமான, இறுதியான தடயங்களோ அல்லதுவிடையோ இன்னும் இல்லை.

சுமார் மூன்று ஆண்டுகள் பன்னாட்டு முயற்சிக்குப்பின் மலேசிய நாடு அந்த விமானம் எப்படி மறைந்தது, அந்த 239 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை, நாம் இதுபற்றி மிக வருந்துகிறோம் எனவிசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த விவரங்களை ‘நெட்பிளிக்ஸ்’ ஆவணப்படமாக பார்த்தபோது, இது ஒரு நாட்டின் பாசாங்காகவே தெரிகிறது.

உலக அளவில் பாசாங்கு – எடுத்துக்காட்டு

பிப்ரவரி 2022ல் தொடங்கிய ரஷ்யாவின் இடைவிடாத தாக்குதலை ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்துஅனுபவிக்கும் யுக்ரெயின் நாட்டு மக்களின் வாழ்வு சாதாரணமாக இருப்பதாக மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டிருப்பது பாசாங்குதானே? ஒரு நாட்டை பயங்கரமாக ஆக்ரமித்து அந்த நாட்டின் குடிமக்களைக்கொன்று குவித்து, நிலைகுலைய வைப்பதற்கு வேறெந்த நாட்டுக்கும் உரிமையில்லை என்பதை மறந்துவல்லரசுத் தன்மையை நிலைநாட்ட முயல்வதை உலக நாடுகள் அனுமதிப்பது ஏன்? இதற்காகவா உலகநாட்டமைப்புகள் இருக்கின்ற? இவை உண்மையிலேயே இயங்குகின்றனவா என்று கேட்குமளவு கேவலமானநிலையை நாம் ஏற்று நிற்பது பாசாங்குதனே?

எங்கும், எதிலும், எப்பவும் பாசாங்கு. எப்படியோ இயங்குகிறது நம் பாசாங்கு வாழ்க்கை.

பாசாங்குகளைமுறியடிக்க முடியாத நம் இயலாமையை ஒப்புக் கொள்ளாமலே பாசாங்கு செய்வதாகவே படுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *