மேகம் மூடிய மலைகளில்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 3,042 
 

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூலையில் கிடந்த சாக்கை நான்காக மடித்து கமக்கட்டில் இடுக்கிக் கொண்டவன், ஓசைப்படாமல் கதவைத் திறந்து, ஓட்டுக்குள் இருந்து தலையை நீட்டும் ஆமையாய் எட்டிப் பார்க்கின்றான்.

பத்துக் “காம்பரா” திண்ணை நெடுகிலும் இராமாயணம் படித்தவர்களும் இன்னும் “டோலக் ” சகிதம் “பைலா’ போட்டவர்களும் தடம் புரண்ட புகையிரதத்திலிருந்து, சிதறுண்டவர்களைப் போல் ஒரு ஒழுங்கில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பத்துக் “காம்பரா” வாசிகளின் புண்ணியத்தில் உயிர் வாழும் சொறிநாய் கூட, குளிரின் “கொடுகிற்காக” குப்பை மேட்டைத் தேடி போய் விட்டிருந்தது.

கதவை இழுத்து சாத்தி விட்டு அடிமேல் அடிவைத்து முற்றத்திற்கு வந்தான் இராசையா.

நாற்புறமும் சுவர் வைத்தாற்போன்று எழுந்து நிற்கும் கருநீல மலைகளின் சுவடே தெரியாமல் வெண்பனிக் கூட்டம் அப்பிக் கிடக்கின்றது என்றாலும் ஒரு பருந்து இறக்கையை விரித்தாற் போன்ற தோற்றத்தையுடைய குன்றின் மீதிருக்கும் தேயிலை “ஸ்டோரின் ‘ வெள்ளித் தகரம் பளிச்சென்று தெரிகின்றது.

இருளின் அந்த காரத்தில் முழு உலகமே மூழ்கி விட்டது போன்ற பிரமை அவனுக்கு….. மனசு என்னவோ நினைத்து நிலை புரண்டது!

லயத்திற்கும் ஸ்டோருக்கும் ஒரு கூப்பிடு தூரம் தான் இருக்கும். குறுக்குப் பாதையில் நடந்தால் நாலே எட்டில் போய் விடலாம். மண் ரோட்டில் சென்றால் சற்று தூரம். காலையும் மாலையும் கொழுந்து லொறி மட்டும். இரண்டு தடவை அந்த செம்மண் தரையில் தடம் புதைத்துக் கொண்டு ஓடும். மற்றபடி எல்லாம் குறுக்குப் பாதையில் தான் நடைபெறும். ஐயா கூட “மஸ்டர்” எடுத்துவிட்டு அம்மா தயாராக வைத்திருக்கும் தேநீரை ஒரு வாய் கொட்டிக் கொண்டு “விசுக்” கென்று குறுக்குப் பாதையில் தான் ஏறிவிடுவார்.

குறுக்குப் பாதையில் சென்றால், அரிசி காம்பராவிற்கு முன்னால் கோழித் தூக்கம் போட்டுக்கொண்டிருக்கும் காவற்காரனுக்கு எவ்விதத்திலும் ஆள் வருவது தெரிந்து விடும். எனவே தான் மண்ரோடு வழியாக செல்வது புத்திசாலித்தனமானது, பாதுகாப்பானது என்பதை உணர்ந்தவன் லயத்துக் கோடியைச் சுற்றிக் கொண்டு மண் ரோட்டில் இறங்கினான்.

இருளில் கால்கள் பின்னின… ” டோர்ச் லைட்டை எடுத்து வந்திருக்கலாம் என்று நினைத்தவன் வானத்தை அண்ணார்ந்துப் பார்த்தான்.

விரிவானம் அம்மலாகக் கிடக்கிறது. நெஞ்சில் ஏற்பட்ட ஆக்ரோசத்தினால் “நினைத்ததை எப்படியும் நிறைவேற்றியே தீர வேண்டும் ” என்ற வேட்கையோடு அவன் புறப்பட்டிருந்த போதிலும் குளிரில் நடுங்கும் தசையை விட, மனமும் நடுங்கிக்கொண்டு தான் இருந்தது.

“திருப்பிப்போய் படுத்துக் கொள்ளலாமா?….. என்று கூட ஒரு கணம் நினைத்தான். “சே….. சே….” என்ன கோழைத்தனம் நானும் “ஆம்பளத் தானே ” என்று தனக்குத் தானே உணர்வேற்றிக் கொண்டான். கூடவே முனியாண்டியின் தோற்றமும் மனத்திரையில் படம் விரித்து நின்றது.

“கறுப்புப் போத்தல் கொடுத்தாடா காய்கறி சேனைப்போட நெனச்சிங்க” அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுடா!” என்று சுப்பையாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு தன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தவாறு “சாடை” பேசினானே. அந்த முகம் ஏளனமாக சிரிக்கின்றது.

தேயிலைச் சாயமாய் காவி ஏறி நிற்கும் அந்தப் பற்களில் நெளிந்த இளிப்பு நெஞ்சில் பாய்ந்து ரம்பமாய் அறுக்கின்றது.

“முனியாண்டி நாளைக்கு பாருடா….ம்” அவன் முணு முணுத்தபடியே மெதுவாக நடக்கின்றான்.

“ஆரம்பத்திலிருந்தே முனியாண்டி போட்டியாகத்தான் நின்றான். இராசையாவிற்கு அன்னாசித் துண்டு சேனைபோட கிடைத்து விட்டது” என்று அறிந்தபோது, இரண்டு “வெள்ளைப் போத்தல் களோடு ஐயாவை சந்திக்கவும் செய்தான்.

இரண்டு போத்தல்களைக் கண்ட ஐயா வாயூறிப் போனார். இருந்தாலும் இப்பொழுது இவனுக்கு மாற்றிக் கொடுத்தால் “விஷயம் அம்பலாகி விடும் என்பதை நன்கறிந்தவர் ” அட பாவி மகனே முன்னுக்கே வரக்கூடாதாடா? இப்ப..எப்படி அழிச்சு பேசுறது அடுத்த தடவை பார்ப்போம் என்று அனுப்பி வைத்தார்.

“எல்லாத்திலேயும் பய முந்திக் கொள்கிறானே… !” எதில் மடக்கலாமென்று கறுவிக் கொண்டு “வாரேங்க ஐயா ….” என்று படியிறங்கி நடந்தான் முனியாண்டி. சற்று நேரத்திற்கு முன்னார் கனத்துக் கொண்டிருந்த “அந்தப் பை” இப்போது வெறுமையாய் அவன் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது.

தேயிலை தொழிற்சாலைக்குப் பின்புறமாக இருக்கும் சாம்பல் மேட்டிற்கு கிழக்கில் அன்னாசிச் செடி செய்கை பண்ணப் பட்டிருக்கும் இடத்தில் பாதி சோளப்புல் தோப்பாய் மண்டிக் கிடந்தது.

தளிரையெல்லாம் சருகாக்கும் ஆடிமாத வெயில். வாரத்திற்கு ஆறு நாட்கள் என்றிருந்த வேலை நாட்களில் இரண்டு நாள் ஒரு நாள் கிடைப்பதே அரிதாகிக் கொண்டு வந்தது.

சுழன்றடிக்கும் காற்று வேறு தளிரையெல்லாம் கொழுந்து கிள்ளும் பெண்களின் விரல்களிலுள்ள வெடிப்புகளைப் போல கிழித்தெறிந்து கொண்டிருந்தது.

காலத்தை வீணே ஓட்டக் கூடாதென்று நினைத்தவர்கள் எல்லாம் காய்கறித் தோட்டம் போடுவதில் இறங்கி விட்டார்கள்.

மானா புல் மலைகூட காய்கறி சேனையாகி விட்டது. கான் வங்கிகள், காட்டோர பவுன்டரிகளெல்லாம் கொடி போஞ்சுகளும், செடி போஞ்சுகளும் தலை தூக்கிக் கொண்டு நின்றன.

“சோளப்புல் காட்டையழிச்சா சோக்கான சேன போடலாம்” என்று ஒவ்வொருவரும் வாயூறிக் கொண்டார்களே தவிர ஒருவரும் முன்வரவில்லை “ஸ்டோருக்கு அருகில் இருப்பதால் நாளைக்கு ஏதொன்றும் நடந்து விட்டால் நாமும் கை கட்டிக் கொண்டு நிற்க வேண்டி வரும் என்ற பயமும் இருந்தது.

“என்னா…? தலையா…..? போயிறும் ஒருக்கா கேட்டுத்தான் பார்ப்போமே” என்று நினைத்த இராசையா நாலு சவுக்குக் கட்டைகளைக் கொத்திய கையோடு மெதுவாக ஐயாவின் காதைக் கடித்தான்.

தலையைச் சொறிந்து கொண்டு நின்றவனிடம் “ஏதும் மரம் செடி நட்டு தரா…கொடி வகையாக போடு’ என்று பெரிய ஐயா பெரிய மனசுடன் சொன்னாலும், பின்னால் கறிபாட்டிற்கும் உதவாமலா போகும்? என்ற நப்பாசையும் இருக்கத்தான் செய்தது.

தான் நினைத்தை விட காரியம் இலேசில் முடிந்ததையிட்டு பூரித்துப் போனான் இராசையா.

பள்ளத்தில் சிலிர்த்தோடும் அருவியாய் குதித்தோடியவன் அடுத்த நிமிஷமே மண்வெட்டியுடன் சோளப்புல் காட்டில் இறங்கி விட்டான்.

அது ஒன்றும் பெரிய சேனை போடக்கூடிய இடமல்ல…. நாளைந்து பாத்திகள் போடலம் அவ்வளவுதான்.

காலையில் மஸ்டர் களத்துக்குச் செல்வான். வேலை இல்லையென்று தெரிந்தவுடன் அப்படியே சேனைக்கு நடையைக் கட்டுவான் பகல் சாப்பாடு கூட சேனையில் தான் நடக்கும். மாலையில் நன்றாக இருட்டிய பின்னரே வீடு திரும்புவான்.

நான்கு நாளில் சாம்பல் தரையில் சுரை, வட்டக்காய், புடோல் என வகைக்கு, வகையாக நட்டு விட்டான்.

சேனைக்காரர்களில் இராசையாவிற்கே எல்லா தேவைக்கும் மிக வாய்ப்பாக போய்விட்டது. மற்றவர்களெல்லாம் தண்ணீர் கொண்டுவர குறைந்தது அரைமைல் தூரமாவது செல்ல வேண்டியிருந்தது. தேயிலை ஸ்டோரை சுற்றிக் கொண்டு செல்லும் அந்த சிற்றருவியிலிருந்து திருப்பப்பட்ட ஒரு கான் இவனுடைய சேனையை அரவணைத்துக் கொண்டு சென்றது.

சேனையிலிருந்து திரும்பியதும் ஒவ்வொரு நாளும் தவறாமல் அவனுடைய மனைவி சேனையைப்பற்றி அக்கறையோடு விசாரித்துக் கொள்வாள்.

அன்று அவன் சற்று நேரத்துடனேயே வீடு திரும்பவேண்டி இருந்தது. மாலையில் கட்சியின் கூட்டம் இருப்பதாக தலைவர் சொல்லி அனுப்பியிருந்தார். மாரியம்மன் கோயிலக்கு முன்பாக இருக்கும் மைதானத்தில் தான் கூட்டம் நடைபெறும். இராசையா அங்கு சென்ற போது ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமாக அநேகர் குழுமியிருந்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு அறிகுறியாக கோயில் மணி இரண்டு முறை கணீர் கணீர் என்று ஒலித்து அடங்கியது.

தலைவர் முழுதாக கூட்டத்தை ஒரு முறை நோட்டம் விட்ட பின்னர் “இப்ப நம்ம தோட்டத்தில் இருக்க நெலமய நான் உங்களுக்கு சொல்ல தேவயில்ல நல்லாத் தெரியும்” என்று பீடிகையோடு தொடங்கினார்.

“இல்ல நீங்களே சொல்லுங்க”…கூட்டத்தின் மூலையில் இருந்து ஒரு குரல் கேட்டது. தொடர்ந்து இரண்டு மூன்று வாலிபர்கள் கச முச வென்று ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டார்கள்.

“நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்க…? எல்லாம் எனக்கு நல்லா தெரியுது நானும் கூடிய மட்டும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கேன். நம்ம சங்கத்திலேயும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்காங்க இதுக்கு மேல நம்ம வேல கேக்கிற துன்னா துரையை கேட்கிற மாதிரித்தான் கேட்கணும்” என்று நிறுத்தி விட்டு ஒரு முறை தொண்டையை சரிப்படுத்திக் கொண்டார்.

“அப்படித்தான் வேல கெடைக்கனுமினா அதுக்கும் தயார்” கூட்டத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது. அனைவரும் ஏக காலத்தில் ஆச்சரியத்தோடு குரல் வந்த திசையை நோக்கினர். அங்கு இராசையா நின்று கொண்டிருந்தான்.

“மத்த டிவிசன்களிலெல்லாம் நாலு நாள் வேல கொடுக்கமுடியுமுன்னா இங்க மட்டும் ஏன் முடியாது? எங்களுக்கு மட்டும் வாயி வயிறு இல்லியா? அவன் குரல் ஆத்திரமாக ஒலித்தது. அவன் நின்ற தோற்றமே ஒரு வினாக் குறியைப் போலிருந்தது.

இந்தச் செய்தி காற்றோடு கலந்து மறைந்துவிட வில்லை. தக்கபடி கால் தலையெல்லாம் முளைத்து “இராசையாவும் புதிதாக ஆரம்பித்த சிவப்பு சங்க கட்சிக்காரர்களும் துரையைத் தாக்க கூட்டம் போட்டு திட்டம் தீட்டுகின்றனர்”. என்ற ரூபத்தில் துரையின் காதுக்கும் எட்டி விட்டது.

இராசையாவினதும் இன்னும் நான்கைந்து இளைஞர்களதும் முயற்சியினால் தோட்டத்திலுள்ள தொழிலாளிகள் சிலர்; புதிதாக ஆரம்பித்த இடது சாரி தொழிற் சங்கத்தில் சேர்ந்திருந்தனர். இது துரைக்கு கட்டோடு பிடிக்கவில்லை. புதிதாக ஆரம்பித்த சங்கம் தொழிலாளருக்கு சேவை புரிகிறது என்பதை எல்லா தொழிலாளர்களுமே உணர்ந்து கொள்ளாத போதும் துரை நன்கு புரிந்து கொண்டார். அதை சிதைத்து விட பல தந்திரோபாயங்களையும் மேற்கொண்டார்.

கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சியைக் கூட முனியாண்டிதான் துரையிடம் “கோள்” சொல்லியிருந்தான். அவன் சேர்ந்திருந்த கட்சியும் தோட்டத்து நிர்வாகத்துக்கு சார்பாகவே நடந்து கொண்டது அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போன்று அமைந்தது போயா அன்று நடந்த சம்பவம்.

துரை பத்துமைல்களுக்கு அப்பால் இருக்கும் நகரிலுள்ள பிரபல கிளப்பிற்குச் சென்று தோட்டம் திரும்பிக் கொண்டிருந்த போது; பீலி வளைவில் தேயிலைப் புதரில் இருந்து பாய்ந்து வந்த கல் காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு துரைச்சாணியின் செவ்விளநீர் முகத்தைப் பதம் பார்த்துவிட்டது.

இச்சம்பவத்தினை அடுத்து சந்தேகத்தின் பேரில் இராசையா கைது செய்யப்பட்டு, அடி உதையோடு வீடு திரும்பினான்.

வீடு திரும்பியவனை “காய்கறி சேனையில் யாரும் கை வைக்கக் கூடாதாம் எல்லாம் தோட்டத்துக்கு சொந்தமாம் ” என்ற துரையின் புதிய சட்டத்தை கூறி வரவேற்றாள் அவன் மனைவி. அவனுக்கு வயிறு பற்றிக் கொண்டு வந்தது. சேனையை நம்பித்தான் மனைவியின் முக்குத்தியை அடகு வைத்து விதை உரம், சாராயம் எல்லாம் கூட வாங்கியிருந்தான்.

அடகு கடையில் வைத்த மூக்குத்தி மின்னவா இனி போகின்றது? கவலையோடு தலைவரை சந்திப்போம் என்று அடுத்த லயத்தை நோக்கி நடையை விட்டான். லயத்து கோடியில் முனியாண்டியும், சுப்பையாவும் நின்று கொண்டிருந்தார்கள். “கறுப்பு போத்தலை கொடுத்தாடா சேனை போட நெனச்சீங்க……. அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுடா” என்றான் முனியாண்டி,சுப்பையாவும் ஏதோ சொன்னான். இருவரும் நகைத்தபடி ஏதோ பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் தன்னைத்தான் “குத்திக்காட்டி” சாடை பேசுகிறார்கள் என்பதை அறிய இராசையாவிற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. திரும்பி வந்த வழியே வீட்டிற்கு நடந்து விட்டான். தன்னுடைய முயற்சிகளை எல்லாம் முறியடித்தவர்களுக்கு தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என நினைத்து ஒரு முடிவுக்கும் வந்தான்.

“பழிக்குப் பழி தீர்க்கின்றேன்” என்று கறுவிக் கொண்டவன் இடையை தடவிப் பார்க்கின்றான். அரையடி நீளமுடைய கத்தி தட்டுப்பட்டது. முன்னால் இருக்கும் தண்ணீர் தொட்டியைக் கடந்து ஐம்பது அடி தூரம் சென்றால்; காய்கறித் தோட்டத்தில் கால் வைத்து விடலாம். அதை நினைக்கும் போது அவன் நெஞ்சு பூரிப்படைகின்றது. யார் கண்ணிலும் தட்டுப்படாமல் சேனைக்குள் புகுந்து காய்கறிகளை எல்லாம் வெட்டிக் கொண்டு சென்றுவிட வேண்டும். காலையில் பிரட்டுக் களத்தில் ”விஷயம் அம்பலமாகி விடும். கூடவே இராசையா தான் வட்டக்காய்களையும், சுரக்காய்களையும் இரவோடிரவாக வெட்டிக்கொண்டு போய் விட்டான் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதை நிரூபித்து குற்றத்தை சுமத்திவிட முடியாது. “அடேய் முனியாண்டி என் சேனையாடா ஏட்டுச் சுரக்காயா போச்சி, நாளைக்கு காலையில் பாருடா உன் முகத்தில் கரி பூசுறேன்” தனது திட்டத்தையும், நெஞ்சுக்கு சுகமான நினைவுகளையும் அசை போட்டுக்கொண்டவன் அடி மேல் அடி வைத்து ஊர்ந்தான்.

“இனி மேல் தான் தனது திட்டத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும்.” இதயம் உரமேற்றிக் கொண்டது.

பழகிப்போன அந்த செம்மன் பாதையில் கால்கள் லாவகமாக ஓசைப்படாமல் நகர்ந்தன. சில நிமிடங்கள்.. சேனையில் கால் பதித்தான்.

அவனது சேனை, அவன் பாடுபட்டு உண்டாக்கிய சேனை காய்த்து நிறைந்திருக்கும் காய் கறிகளை நொடிப் பொழுதில் வெட்டி எடுத்து, இரண்டு சாக்குகளில் நிறைத்து ஆசுவாசத்துடன் தூக்கிக் கொண்டு விரைந்தான். யாரும் காணவில்லை. தலைச்சுமையை மனச்சுமை குறைத்தது.

காவற்காரனுக்கு என்ன தூக்கம், கடமைதானே முக்கியம் கோழித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த காவற் காரனின் காலில் எங்கோ இருந்து வந்த ஒரு கட்டெறும்பு கடித்திருக்க வேண்டும். “சுண்டி விட்ட நாணயமாக குதித்து எழுந்து நின்றான். அந்த சிறு பிராணி தனக்கு உதவி புரிந்ததாகவே நினைத்தான். கூடவே இரவு இரண்டு மணிக்கு பின்னர்; மணிக்கொரு தடவை அடிக்க வேண்டிய மணியையும் அடிக்கவில்லை என உணர்ந்த போது, மாலையில் துரையோடு “ஸ்டோரை சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த வேளை அடுப்புக்கு வெளியே தாழ் வாரத்தில் கொட்டியிருக்கும் மட்ட ரக “டஸ்ட் தேயிலை குறைந்து போயிருப்பதைக் கண்ட துரை, “என்னா மேன் தேயிலை இவ்வளவு குறைந்து போயிருக்கு, ஏதும் பிளக் மார்க்கட் பிஸ்னஸ் செய்றீங்களா? லாஸ்ட் வோனிங்” எதுக்கும் சாமான் மூட்டை எல்லாம் கட்டி வை” என்ற வார்த்தை செவிப்பறையைக் குடைகின்றது.

துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஒரு ரவுன் சுற்றி வருவோமே என்று கிளம்பினான் காவற்காரன். அடுப்பை சுற்றிக் கொண்டு வந்து தண்ணீர் தொட்டியில் ஏறி டோச்’லைட்டை வீசியடித்தபோது, தரை வரை படர்ந்திருந்த மேகத்தையும், புலரிக் காலத்து மென் இருட்டையும் கிழித்துக் கொண்டு பாயும் ஒளி வெள்ளத்தில் ஒரு உருவம் தலையில் நிறைசாக்குடன் செல்வது நிழலுருவில் தெரிகிறது. “பதட்டம்….” “காண்பது உண்மையா?”

தாழ்வாரத்தில் கொட்டியிருக்கும் மட்ட ரக “டஸ்ற்” தேயிலை குறைந்து போய் இருப்பதின் காரணம் பூடகமாக அவன் நெஞ்சில் மின்னலடிக்கின்றது. துப்பாக்கியை பிடித்த அவனது இடக்கை அவனையும் அறியாமலே முன்னால்…நீளுகின்றது…

“டூமில் “…என்ற ஓசை அவர்களுக்கு எட்டாத வாழ்க்கையாக உயர்ந்து; சீனப்பெருஞ் சுவராய் நீண்டு கிடக்கும் அந்த மலைகளிலும்

எதிரொலித்துக் தேய்கின்றது. வேட்டினைத் தொடர்ந்து..

“ஐயோ…..” என்ற அலறல். முக்கலும் முனகளும் ஈனஸ்வரத்தில் கேட்கின்றன.

வேட்டு வைத்தவன் வேகமாகப் பாய்ந்தான்.

வேகமாகப் பாய்ந்தவன்கண்டகாட்சி! ஒரு கணம் திகைத்து நின்றான் குண்டடிபட்டவன் ஒரு புறம் அகோரமாய்க் கிடக்க, மறுபுறத்தில் அவன் சுமந்து வந்த சாக்கு மூட்டை பிதுங்கியபடி கிடந்தது. அதிலிருந்து வட்டக்காய்களும், சுரக்காய்களும் வெளியில் என்ன நடக்கின்றது என்பதை முழி பிதிங்கி ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தன. தேயிலை தூள் எங்கே….. எங்கே….?

காவற்காரன் திகைத்து நின்றான். “கொடுகும் குளிரிலும் அவன் உடல் வியர்வையால் தெப்பமாக நனைந்து விட்டது. மனம் கொழுந்துச் சாக்காய் கனத்தது. கால்கள் தள்ளாடின.

திகைத்து நின்றாவன் ஒரு கணத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்டு செயலில் இறங்கினான்.

சுற்றும் முற்றும் பார்த்தான். சாக்கிலிருந்த வட்டக் காய்களும், சுரக்காய்களும் “தொப் தொப்” பென்று நீர் வீழ்ச்சியில் குதித்து விட்டன. பூசனிக்காய் கங்கா ஸ்னானம் செய்து திருஷ்டி கழித்தது இராசையாவிற்காகவா…?

நடந்து முடிந்த பாதகச் செயலுக்கு காரணமாகவும் பிரத்தியட்ச உண்மைக்கு நிலைக்களனாகவும் இருந்த அவைகளை எவருக்குமே காட்டிக் கொடுப்பதில்லை என்று முடிவு கட்டியது போல் சுளித்து; சுளித்து ஓடும் சிற்றாறு; தன் அலைகளால் அணைத்து; வெகுதூரம் அடித்துச் சென்று விட்டது. வேறு சாட்சி எது? இல்லையே.

வெற்றுச் சாக்கை தாழ்வாரத்தில் கொட்டிக் கிடந்த “டஸ்ட்” தேயிலை இடம் பிடித்துக் கொண்டது.

எல்லாமே ஒரு நொடிப் பொழுதில்..காவற்காரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்…

“அப்பாடா…”

மறுகணம், அவசர அவசரமாக துரையின் பங்களாவை நோக்கி ஓடுகினறான். தண்ணீ தண்ணீ…இராசையாவின் உயிர், தண்ணீர்ப் பிச்சைக் கேட்டு முனங்க…

இருளும் கரைந்து பயந்து ஓட; கிழக்கு சிவந்து கொண்டிருக்கிறது.

– வீரகேசரி 1972, அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *