சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள்.
வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள்.
‘எவ்வளவு?’ ஆங்கிலத்திலேயே கேட்டாள்.
வித்தியாவும் சொன்னாள்.’120 பவுண்ட்’
விலை அதிகம் என்றாள்.
‘இல்லை..நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்…’
வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள்.
‘இது 10 ரூபாயும் பெறாது’
வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது.காட்டிக்கொள்ளாமல்’ செய் கூலி இல்லாமல், பொருளுக்கு மட்டுமே சொன்னனான்’.
‘பகிடி விடாதையும்…யாவாரிகள் உப்பிடித்தான் கதைப்பினம்..கொள்ளை லாபம் வைக்காமல் இருக்கமாட்டினம்’
கோபத்தை அடக்கிக்கொண்டு’ என்ன சொல்ல வாறியள்?’ கேட்டாள் வித்தியா.
‘எப்படியோ வாங்கின சாமான்கள் முழுக்க பாவிச்சிருக்கமாட்டியள். மிச்சத்தை இன்னொன்று செய்தும் வித்துப்போடுவியள்.. பிறகேன் அறா விலை சொல்லுறியள்’. வந்தவள்தான் கேட்டாள்.
அவளின் காரை பார்த்தாள். விலையுயர்ந்த கார். அங்கும் பேரம் பேசியிருப்பாளோ?
வித்தியா பல்கலைக் கழகக் கல்வியை முடித்தபின்பு ஓய்வான பொழுதில் கேக் செய்து விற்றுவந்தாள். அதில் லாபமும் வந்தது. ஆனாலும் லாபம் கருதிச் செய்யக்கூடாது என்பதில் முடிவாய் இருந்தாள். அதனால் சமயங்கள் இலவசமாகவும் கொடுத்துவந்தாள். இப்போது பணக்காரரின் ஓடர் கிடைத்திருக்கிறது. லாபம் இன்றிச் செய்து கொடுத்தால் நிறைய ஓடர் கிடைக்கும் என்றும் கணக்குப் போட்டாள். அது தப்பாய்ப் போயிற்றே என்றும் வருந்தினாள்.
சிலர் இப்படி பேரம் பேசுவார்கள் தான். இப்படி படாடோபமாய் வந்து பந்தா காட்டமாட்டார்கள். ஓடர் செய்வதற்கு முன்பே எவ்வளவு ஆகும் என்பாள். முடிந்த பிறகும் வட்ஸப்பின் ஊடாகவும் படத்தை எடுத்தும் அனுப்புவாள். பேரம் பேசுவார்கள். அல்லது ஓடர் வேண்டாம் என்பார்கள். ஏமாற்றமாய் இருக்கும்.. கடைகளில் என்றால் விலை நிர்ணயம் செய்திருப்பதால் பேரம் பேசுவது கௌரவப்பிரச்சினை என்று விருப்பமில்லை என மற்றக்கடை நோக்கி நகர்ந்துவிடுவார்கள். ஆனால் வித்தியா..?
தனித்தே சமாளிக்கவேண்டும்.
கேட்டாள்.
‘கடைசியாய் என்ன விலை சொல்லுறியள்?.
’40 தரலாம்..கொஞ்சம் டிசைனையும் மாத்தவேண்டும்… இரண்டு முந்திரி போட்டிருக்கிறியள். ஒற்றைச் சிப்பியும் மேல வச்சிருக்கிறியள். அதுக்கும் காசு போட்டனீங்களே’
வித்தியாவின் கோபம் அதிகரித்தது..
‘கடையில என்டா உப்பிடிக்கேப்பியளே.. நான் உங்கட மகளின்ர வயசும் இருப்பனோ தெரியாது… படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கும் மட்டும் இதை செய்யுறன்.. வாற போற எல்லாரும் இரக்கமேயில்லாம பேரம் பேசினா நாங்கள் வாழ என்ன செய்யுறது? நீங்க என்ன விட அதிகம்படிச்சிருக்கலாம்.. பணக்காரராயும் இருந்துட்டுப்போங்கோ.. கவலையில்லை.. மற்றவேன்ர உழைப்புக்கு மரியாதை தாங்கோ….’
‘இதை யாரும் வாங்க்காட்டி குப்பையிலதானே போடப்போறியள்.. அதை நான் கேட்ட விலைக்கே தரலாம்தானே’
கோபத்தில் கொதித்தாள் வித்தியா..
‘போடிப்..’ கேக்கைத் தட்டிவிட்டாள். கேக் சிதறி நிலத்தில் விழுந்தது.ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. வந்தவள் வெளியேபோய் காரை இயக்கினாள்.
வித்தியா நிலத்திலேயே தொப்பென்று குந்தினாள்.
‘மனிதர்கள் வாழ விடமாட்டார்கள்.’
கண்ணீரில் கரைந்தாள் வித்தியா.