பெயர் தெரியாத மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 4,408 
 
 

ஐந்துமணிவரையில் யாழ்நகரை வெதுப்பிக்கொண்டிருந்த வெயிலோன் ஐந்தரையாகவும் இன்றைக்கு ஊழியம்போதுமென்று நினைத்தவன்போல் மரங்கள் கட்டிடங்களின் பின்னால் கடலைநோக்கிச் சரிந்திறங்க ஆரம்பித்திருந்தான், தேய்ந்த ஓவியங்கள்போல வானத்தில் சில ஓவியங்கள் தோன்றத்தொடங்கியவேளை. எனக்குத்தெரிந்த அந்த மனிதர் மின்சாரநிலையவீதியில் வடக்குமுகமாகச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டேன்.

நீங்கள் மலையாளப்படங்களுக்கு பரிச்சயமான நடுவயதுக்காரரயிருந்தால் ஜி.அரவிந்தனின் ‘சிதம்பரம்’ படத்தில் ஸ்மீதா பட்டீலின் கிராமத்துக் கணவனாகவும் மாட்டுப்பண்ணை பராமரிப்பவராகவும், வரும் ஸ்ரீனிவாஸனைத் தெரிந்திருப்பீர்கள். அசப்பில் இவருக்கும் ஸ்ரீனிவாஸனைப்போலவே ஆறடி உயரத்திலான கரிய திருமேனி. சற்றே நீண்டமுகவாகு, அப்போது விஞ்சிப்போனால் முப்பத்தைந்து வயதிருக்கும்.. நாலைந்துநாட்கள் தாடியுடனான முகத்தில் சோகத்தையோ மகிழ்ச்சியையோ வெளிப்படுத்தாத நிர்மலமான கண்கள். நீலநிறத்தில் வெள்ளைக் கட்டங்கள்போட்ட லங்காச்சாரத்தை கணுக்கால்கள் தெரியும்படி லேசாக உயர்த்திக்கட்டியிருந்தார். மேலே சற்றே நீர்க்காவியேறிய ஒரு கொலரில்லாத வெள்ளைபனியன் அணிந்து ஒரு மலிவான துவாயை மப்ளர்போல நீள்வாக்கில் மடித்துக் கழுத்தைச்சுற்றிப்போட்டுக்கொண்டு ராணி தியேட்டருக்கு அணுக்கமாயிருந்த கடைகளை வேடிக்கை பார்த்தபடி இரப்பர்ச்செருப்புகளை இலேசாக இழுத்துத்தேய்த்தபடி வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்தார். பத்து வருடங்கள் கழித்து அவரைத் திடீரெனப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த எளியமனிதர் என் 15 வயதில் ஒரு இக்கட்டிலிருந்து என்னை மானம்போகாமல் தடுத்தாட்கொண்ட சகபந்து.

“அண்ணே அண்ணே “என்று கூப்பிட்டபடி அவர் பின்னால் ஓடினேன். அவரோ தன்னை யார் ‘அண்ணேயென்று கூப்பிடப்போகிறர்கள்’ என்று நினைத்திருப்பார்போல, ‘கூப்பிடுவது தன்னையல்ல’ என்கிற பாவனையில் திரும்பியே பாராமல் தன்பாட்டுக்கு மெல்லச் சென்றுகொண்டிருந்தார். ஓடிப்போய் அவரை நான் முன்மறிக்கவும்

“என்னையா கூப்பிட்டீர்” என்றவர் என்னை யாரோ இயக்கப்பெடியன் ‘பங்கர் வெட்ட வாய்யா’ என்று இழுத்துப்போகப்போகிறானோவென்று பயந்தாரோ மிரட்சியும் கலவரமும் கலந்து என்னை விநோதமாகப் பார்த்தார்.

“ஆமா……. உங்களைத்தான்.” என்று அவரைநோக்கிப் புன்னகைத்தேன். அதில் அவரது கலவரம் கலைய தெம்பாக

“நீர் யார் தம்பி…….. உம்மைத்தெரியலையே என்ன விஷயம்” என்றவர் கடைவாயில் ஒரு சிறு குச்சியிருந்தது.

முன்பொருமுறை வன்னியில் இப்படி வாயில் குச்சிவைத்துக்கொண்டு வேலைசெய்துகொண்டிருந்த ஒரு மலையகத்தொழிலாளியிடம் ‘எதுக்கு கபாலி வாயில்’ குச்சி வைத்திருக்கே’ என்று கேட்டபோது ‘வாயில பீடியோ, ஒரு பொயிலக்காம்போ வைச்சிருந்தாக்க வாய் ஊறிக்கிட்டே இருக்குமா…….. பசிக்காதுங்க……….” என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“அண்ணே உங்களுக்கு என்னைத்தெரியாததில் அதிசயமில்லை……. ஆனால் எனக்கு உங்களைத்தெரியும், உங்களை மறக்கவும் முடியாது.”

“எப்படி….. உம்மை நினைவில்லையே……..” என்று நெற்றியைத்தேய்த்தார்.

“உங்க கையால நான் பலமுறை சாப்பிட்டிருக்கேன்ணை.”

“எங்கே எப்பிடி…… “

“நீங்கள் முந்தி அனுராதபுரம் பராசக்திவிலாஸில வேலை செய்தனீங்களல்லோ.”

அவர் ஆமென்றோ இல்லையென்றோ சொல்லவில்லை, கண்களிலிருந்த அதிர்ச்சி மறைய என் முகத்தை உற்றுப்பார்த்தார்.

“அதிப்ப பத்து வரியமாச்சு…….. அப்போ நீர் சின்னப்பெடியனாய் இருந்திருப்பீர் ஞாபகத்தில் இல்லை அப்பன்.”

“சரி வாங்கண்ணே மலாயா கஃபேயிலபோய் ஒரு டீ குடிப்பம்”

“என்னட்டைப் பெரிசாய்ச் சக்கரமில்லை………..” சங்கோஜப்பட்டார்.

“அண்ணே….. நாந்தானே உங்களைக்கூப்பிடுறன், காசில்லை எண்டுறியள் சும்மா வாங்கோ.”

அரை மனதுடன் திரும்பி வந்தார். மலாயா கஃபேக்குள் நுழைந்ததும் பார்த்தேன், அப்போது அவர்வாயிலிருந்த குச்சியைக்காணவில்லை. கஃபேயில் அவ்வளவு கூட்டமில்லை, தொங்கு மின்விசிறி மட்டும் ‘கிறீச்’ ‘கிறீச்’சென்று தாளலயத்தோடு சுற்றிக்கொண்டிருந்தது. ஒரு பக்கமாக இருந்த மேசையில் நாம் எதிர் எதிராக அமர்ந்தானதும், கீரைவடைக்கும் போண்டாவுக்கும் டீயுக்கும் ’ஆக்ஞை’ கொடுத்தேன்.

“அண்ணை தாராளமாய் வேண்டியதைச் சாப்பிடுங்கோ, வேறேதாவது சாப்பிடிறதென்றாலும் சொல்லுங்கோ.”

“அவர் எடுத்துக்கடித்த வடையை ஆட்டி இதுவே போதும்” என்றார்.

“உங்க சொந்த ஊர் எங்கே அண்ணே……. டவுணுக்கு ஏன் வந்தனீங்கள்…….” என்று இரட்டைக்கேள்வியாய்ப் போட்டேன்.

“பொன்னம்மா மில்லில வேலை ஏதோ இருக்கென்று அறிஞ்சு வந்தன், அந்தவேலைக்குப் பொறுப்பான ஆள் எங்கேயோ மோட்டார்ச்சைக்கிளில் போயிருக்கிறாராம், ஆறுமணிபோலதான் வருவாராம், அம்மட்டும் அங்கே என்ன பண்ற…… அதுதான் சும்மா இப்படி இந்தப்பக்கம் வந்தன். ம்ம்ம்ம்ம் சொந்தவூர் எழுவைதீவு, எட்டுமணிக்கு கடைசிபோட், விட்டிட்டால் பிறகு போகேலா.”

“எப்ப அண்ணை பராசக்திவிலாஸ் வேலையை விட்ட நீங்கள்…”

“எழுவத்தேழு கலவரத்தோடை பராசக்திக்கும் நெருப்பு வைச்சிட்டாங்கள், அது சிங்களவருக்குச் சொந்தமான கட்டிடம் என்றபடியால் மேலுக்கும் தீ பரவமுதலே அணைச்சுப்போட்டாங்களாம். ஆனால் நான் கலவரங்களுக்கு முதலே அங்கிருந்து கழன்றிட்டன். அதால அடி கிடி யொன்றும் விழேல்ல தப்பிட்டன்.” முதன்முதலாக இலேசாகப் புன்னகைத்தார்.

“ஏன் என்னாச்சு…. ஏன் கழட்டின்னீங்கள்”

“வேறயென்னவாயிருக்கும்……….. முதலாளிமாரோட சம்பளப்பிரச்சனைதான்.”

“எனக்குக்குடும்பமோ பிள்ளையோ என்றிட்டு மாசா மாசம் சம்பளத்தை நான் வாங்காமல் விட்டதில ஒரு வரியத்தான் சம்பளம் முதலாளியிட்ட தொங்கப்பார்த்துது. ஆறுமாதம் நடையாய் நடந்து அலையாய் அலைஞ்சு ஒருமாதிரி ஆறுமாதத்துக்குரியதை வாங்கியிட்டன், இன்னொரு ஆறு மாதத்தான் சம்பளம் ஆயிரத்தைநூறுரூபாய்மட்டில தொங்கிபோச்சு, ரயிலில போய்வரவே 25 ரூபாவேணும் தெரியுந்தானே, டெலிபோன் எடுத்தாலும் மூனா என்னோட கதைக்கப்பஞ்சிப்பட்டார்………. பிறகு எங்கே தொலையட்டும் என்று விட்டிட்டன்.” .

அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் ஸ்ரீனிவாஸன் ஒருநாள் ஆபத்துபாந்தவனாய் எனக்குச் செய்த உதவியின் நினைப்பு எனக்குக் கழுத்துவரை வந்துவந்துபோனது. அதை அவருக்குசொன்னாலே நெஞ்சைவந்தடைத்த அம்முட்டு விலகும்போலிருக்கவும் சொல்லலானேன்;

“அண்ணை நான் ஒருநாள் இரவு உங்க பராசக்தியில 10 இடியப்பமும் மீன்குழம்பும் சாப்பிட்டுவிட்டு ஒரு 01.50 ஐக் கொப்பியில் எழுதியிட்டுவெளிக்கிட……. நீங்கள் கொப்பியை எடுத்துப்பார்த்திட்டு ‘தம்பி கிழங்குக்குழம்புதான் 50 சதம், மீன் குழம்பு ஒரு ரூபா, அதனால கணக்கு 2.00 ரூபா’யென்று சொல்லித்திருத்தின்னீங்கள், முதலாளியிட்டைக் காட்டிக்கொடுக்கேல்லை. அதை என்னால் மறக்க முடியாதண்ணை.”

“அந்த முதலாளியும் அப்பிடியொன்றும் சுத்தபத்தமான ஆட்கிடையாது, அவர் தரவழிக்கு நாம நேர்மையாய் இருந்திருக்கவேண்டியதில்லை” என்றார்.

“அவர் திருடனாகவே இருந்திட்டுப்போகட்டும், அது நமக்குப்பொருட்டல்ல ஆனால் நாமல்லோ நேர்மையாய் இருக்கோணும், நாம வழுக்கிற இடமல்லோ எம்மைத்தொந்தரவு செய்யும்.” வார்த்தைகளை மேவிவிட்டேன்..

நான் சொன்னதை அவர் வீறமைவாக (சீரியஸ்) எடுத்ததாகத்தெரியவில்லை. சற்று இடைவெளிவிட்டுக்கேட்டார்

“தம்பி இப்போ என்ன செய்யிறீர்.”

“நான் இன்னும் இரண்டுகிழமையில ஜெர்மனிக்குப்போக இருக்கிறன், அதுக்கான தயாரிப்புகள் பண்ணிக்கொண்டிருக்கிறன்.”

“அதிகமான ஆட்கள் இப்போ வெளியிலதான் பறக்கினம்.”

“இவ்வளவு காசைக்கொட்டி அங்கேபோக எனக்குமென்ன ஆசையே…… வேற வழியுந்தெரியேல்ல அண்ணை.”

சிற்றுண்டியானதும் அவரிடமிருந்து விடைபெறமுன்னர்

“அண்ணை உங்களைச்சந்தித்த இந்தநாளின் நினைவாக ஒரு சின்ன ஞாபகப்பரிசுதந்தால் வாங்குவியளோ” என்றேன்.

“அதுதானே இத்தனை காலங்கழிச்சும் என்னை நினைவுவைச்சு டீயும் வடையும் வாங்கித்தந்திருக்கிறீர் பிறகென்ன…” என்றார்.

நான் இரண்டு 100 ரூபாத்தாள்களை எடுத்து மடித்து அவரிடம் நீட்டினேன்

“சும்மா கைச்செலவுக்கு வைச்சுக்கொள்ளுங்க”

“வேண்டாம் தம்பி, இப்பத்தான் உமக்கு நிறையச் சிலவு சித்தாயங்களிருக்கும். பிறகு நான் உம்மை எப்ப கண்டு இதைத்திருப்பித்தாறது” என்றவர் அதைவாங்காமல்த் தன் இருக்கைகளையும் இறுக்கமாகப் பொத்தியபடி இருக்கையைவிட்டு எழும்பினார்.

“இல்லையில்லை… நீங்கள் இதை எனக்குத்திருப்பித்தரவே வேண்டியதில்லை, இது உங்களுக்கான என் அன்பளிப்பபாக்கும்.”

“நீர் வெளிநாட்டுக்குப்போய் சம்பாதிக்கத்தொடங்கிய பிறகென்றாலாவது பரவாயில்லை, இப்ப இதை வாங்கிவைச்சுக்கொள்றது எனக்குச் சரியாகப்படேல்லை.” என்றபடி தன்கைகளை இன்னும் இறுக்கமாகப்பொத்திப் பிடித்தார். கடைசிவரையும் அவற்றை என்னால் விரிக்கவைக்க முடியவேயில்லை.

அன்றைய சந்திப்பில் அவரது பெயரை நான் கேட்காமலிருந்திருக்க மாட்டேன், என் வயசோடு அது ஆவியாகிவிட்டது. அவரை ஞாபகப்படுத்த ஸ்ரீனிவாஸன்தான் இருக்கிறார் என்றில்லை. இன்றைக்கும் என் தீராதகனவுகளில் நான் சரியாக விடையிறுத்திராத ஆங்கில, வேதியியல், கணித வினாத்தாள்கள், வந்துநின்றாடித் துயில்கலைப்பதுண்டு. அதை நிகர்த்த அளவுக்கு நான் பெயர் மறந்துவிட்ட அந்த மனிதரும் வந்துபோய்க்கொண்டேயிருக்கிறார். காரணம் தெரியாமலே!

– ஞானம் சஞ்சிகை நொவெம்பர் 2020.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *