பெண்ணரசி அனுலாதேவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 6,167 
 

தனக்குத் தனிமை தேவைப்பட்ட போதெல்லாம் மகாராணி அனுலாதேவி ராஜ மாளிகையின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த மத்ஸ தடாகத்தைத் தேடித்தான் வருவாள். அங்கு மட்டும்தான் தனக்கு அமைதி கிடைக்கும் என்று அவள் நம்பினாள். தனது மனக்குமுறல்களையெல்லாம் அங்கிருந்த மீன்களிடம் தான் கொட்டித் தீர்ப்பாள். அந்த மீன்களும் அவள் கூறுவதை ஆடல் அசைவு இன்றி கேட்டுக் கொள்ளும்.

அந்த விசாலமான மாட மாளிகையில் நூற்றுக்கணக்கானோர் இருந்தபோதும் அவளது சோகத்தைச் சொல்ல, அதனைக் கேட்டு ஆறுதலளிக்கக்கூடிய தன் மனதுக்கிதமானவர்கள் யாருமே இல்லை. அவர்கள் ஒவ்வொருவராக ஓடி ஒழிந்து போனார்கள். இல்லை ஒழித்துக் கட்டப்பட்டார்கள். சிலர் உடனிருந்தே துரோகம் செய்தார்கள். கடந்த முப்பத்திரண்டு வருடங்களாக தன்னுடனிருந்து “எனது உயிருக்கு உயிரான தேவியே” என உருகி உருகி உபசரித்து எந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என சத்தியம் செயது கொடுத்திருநத் அரசனின் மற்றொரு மனைவியான மித்தா தேவியும் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டாள் என்பதே அவள் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்தது.

அவள் வீற்றிருக்கும் சிம்மாசனத்தைப் பறித்து அவளை ஒரு ஆதரவும் அற்ற மூளியாக்கி, அவள் மானத்தை வாங்கி அவமானப்படுத்தி அவள் ஒரு காமாந்தகாரி என்ற பட்டத்தைக் கட்டி அவளை சின்னா பின்னப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மிக அசிங்கமான, கொடிய, குரூர உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டு அவளை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் அவள் மச்சினன் முறையான மகலன் திஸ்ஸ ராஜகுமாரன் என்று தன்னை அழைத்துக் கொண்ட அரசனின் தம்பி.

கி.மு. 62 ஆம் ஆண்டில் அநுராதபுரத்தை தலை நகரமாகக் கொண்டு இலங்கையை அரசாண்ட மன்னர்களுள் குடாதிஸ்ஸ மன்னனின் ஆட்சி அவன் செய்த கொடுங்கோன்மை காரணமாகவே பிரசித்தி பெற்றது. மது போதைக்கு அடிமையாகியிருந்த அவன் விடியற் சாமம் வரை மது அருந்திவிட்டு அந்தப்புறத்தில இருந்த ஒவ்வொரு தாசியாக வரவழைத்து அவர்களைக் கொடூரமாக வன்புணர்ந்து அவர்கள் உடலை ரணகளமாக்கினான். அவன் அனுலாதேவியை அவளது பதின்மூன்றாவது வயதில் மணந்து பட்டத்து ராணியாக்கி முதலாவது இரவன்றே அவளை வன்புணர்ந்து இரத்தம் வடிய வடிய அவளது கற்பை சூறையாடினான். அதன் பின்னர் அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் அவளுக்கு மகா பயங்கரமான நரக வேதனையைத் தந்தது.

அந்த முதல் நாளன்று அவள் வேதனையால் துடித்தவாறே இரத்தம் சொட்டச் சொட்ட நகர்ந்து நகர்ந்து வந்து தன் மஞ்சத்தில் விழுந்தாள். அப்போது அவள் உயிர்த்தோழியாக இருந்த மித்தா மாத்திரமே அவளுக்கு ஆறுதல் அளிப்பவளாக இருந்தாள். அவளுக்கு தைரியமூட்டி ஆசுவாசப்படுத்தி காயங்களை கழுவி சுத்தப்படுத்தி வயிற்றிலும் தொடையிலும் காணப்பட்ட ஆழமான நகக் கீறல்களுக்கும் வீங்கிப் போயிருந்த இடங்களுக்கும் மருந்துத் தைலம் தடவினாள். அது ஒன்றுதான் அனுலாவுக்கு அப்போதைக்கு ஆறுதளிப்பதாக இருக்கும்.

இந்த வேதனைகள் அனைத்தையும் அனுலா வந்து சேர்ந்ததற்கு முன்னர் மித்தாவும் அனுபவித்தவைகள்தான். அதனால் அனுலா படும் வேதனையை அவளால் பூரணமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த கசப்பான அனுபவங்கள் பதினைந்து வருட காலங்கலாகத் தொடர்ந்தன. அப்படி இருந்தபோது தான் அந்த சம்பவம் அனுலாவின் வாழ்வை முற்றாக திசை திருப்பிவிட்டது.

அன்று ஒரு அமாவாசை தின இரவில் காரிருள் கப்பி கண்ணங்கரேல் என்றிருந்தது. நட்சத்திரங்கள் மினுக் மினுக்கென்று ஆங்காங்கே சிணுங்கிக் கொண்டிருந்தன. அரண்மனை விளக்குகளும் கூட அந்த காரிருளை விரட்ட முடியாமல் ஆடியும் ஆடாமலும் மந்தமாக சுடர்விட்டுக் கொண்டிருந்தன. அனுலாதேவி தன் வாழ்க்கையை எண்ணி மனம் நொந்து கடுமையான யோசனையில் ஆழ்ந்திருந்தாள். மன்னர் அழைப்பதாகக் கூறி அந்தப்புறத்தில் இருந்த தாசியர் சிலர் மித்தாவை அழைத்துப் போயிருந்தனர். மித்தா போய் நெடு நேரம் ஆனதால் அவளுக்கு என்ன கொடுமை ஏற்பட்டிருக்குமோ என அவள் மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் வாசற் படிக்கப்பால் அந்த முனகல் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து “தேவி….. தேவி…. அனுலா” என வலியால் ஒரு பெண் அனத்தும் சத்தமும் கேட்டது. அனுலா ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். அங்கே மித்தா இடுப்பில் இருந்து நழுவிய சேலையை சுருட்டிப் பிடித்துக் கொண்டு தொடை வழியே இரத்தம் சொட்டச் சொட்ட கண்கள் மேல் நோக்கி செருகியவாறு மிக அலங்கோலமாகக் காணப்பட்டாள். அதிர்ச்சியடைந்த அனுலா பாய்ந்து சென்று அவளை அனைத்து கைத்தாங்கலாக அழைத்து வந்து மஞ்சத்தில் கிடத்தினாள். மித்தாவின் நிலைமையைப் பார்த்த உடனேயே அவளுக்கு என்ன நடந்திருக்குமென்று உடனேயே புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

மித்தா அவளை படுக்கவைத்த சில கணங்களிலேயே தன்னினைவை இழந்து போய்விட்டாள். அனுலா அவளுக்கு அந்நிலையிலேயே வைத்து மருத்துவம் செய்தாள். உடனேயே தாசியரை அழைத்து வெண்ணீர் கொண்டு வரச் சொல்லி இரத்தக் கறைகளை துடைத்து மருத்து நீரால் ஒத்தடம் கொடுத்தாள். அப்போதுதான் மித்தாவுக்கு ஏற்பட்ட இந்த கொடுமைக்கு எதிராக நீதி கேட்க வேண்டுமென்று அவளுக்கும் தோன்றியது. அவளது நிலைமையைப் பார்க்கப் பார்க்க அனுலாவின் இரத்தம் கொதித்து அவள் தலையை நோக்கி ஜில்வென்று ஏறியது. எனினும் அவள் பொறுமையுடன் மித்தாவுக்கான சகல பணிவிடைகளையும் செய்து முடித்தாள்.

அவள் இதுவரை காலத்தில் ஒரு போதும் மன்னனை எதிர்த்து பேசியதோ ஏரெடுத்துப் பார்த்ததோ கிடையாது. மன்னன் முன் அவள் தலை எப்போதும் குனிந்தே இருக்கும். இப்போது மட்டும் எப்படி அவள் மன்னனை நிமிர்ந்து பார்ப்பாள்? எதிர்த்துப் பேசுவாள்? அப்போது நள்ளிரவு தாண்டி இரண்டு ஜாமம் பூர்த்தியாகி இருந்தது. அவள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மன்னன் சயனிக்கும் பிரதான சயன மண்டபம் நோக்கி புறப்பட்டாள்.

அந்த சயன மண்டபத்தில் விசாலமான மூன்று சயன அறைகள் இருந்தன. அவற்றில் எந்த சயன அறையில் மன்னன் உறங்குவான் என்பது அங்கே வெளியில் காவலுக்கிருந்த வாயிற் காவலர்களுக்குக் கூடத் தெரியாது. மன்னன் சயனிக்கச் சென்ற பின் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாதென இட்ட கடுமையான கட்டளையை இதுவரை யாரும் மீறியதில்லை.

இன்று ஒரு நாளும் இல்லாதவாறு முகத்தில் கோபம் பொங்க அனுலா அங்கே வருவது கண்டு காவலர் அவளைத் தடுத்தனர். அவர்களைப் பார்த்து முறைத்த அனுலா “நான் யாரெனத் தெரிந்துமா என்னைத் தடுக்கிறீர்கள்” என்று உரத்துக் கத்தியவாறே தனது வலது கரத்தால் அவர்களை விலக்கிக் தள்ளியவாறே வயிலை நோக்கி விரைந்தாள். அவர்கள் செய்வதறியாது விலகி நின்றனர்.

படாரென கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அனுலா. உள்ளே மேலும் மங்கலமான வெளிச்சமே காணப்பட்டது. அனுலாவின் இந்த பதினைந்து வருட கால அரண்மனை வாழ்க்கையில் ஒரு போதும் அவள் மன்னனின் சயன அறைக்குச் சென்றதில்லை. இப்போது அவளுள் ஏற்பட்டிருந்த ரௌத்திரம் அவளை அவ்வாறு செய்யத் தூண்டியது. அவள் உள்ளே நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே மற்றுமொரு நுழைவாயில் தென்பட்டது. அதன் அருகில் ஒரு சாய்வு நாட்காலியில் ஒரு மனித உருவம் அமர்ந்திருந்தது. அதிலிருந்த மனிதன் இவளைக் கண்டதும் எழுந்திருந்தான்.

அவன் வேறு யாருமல்ல அனுலாவை நன்கு அறிந்து வைத்திருந்த துக்கன்னாரால என்று அழைக்கப்பட்ட குறைகேள் அதிகாரி சிவன்தான். அவன்தான் அரசனின் தனிப்பட்ட அந்தரங்கக் காரியங்களைக் கவனித்து வந்தான். அவன் ஒரு நாளும் அனுலாவின் முகத்தில் அத்தனை கோபத்தைப் பார்த்ததில்லை. அனுலா மதுரையை எரிக்க வந்த கண்ணகியின் கோலத்தில் இருந்தாள்.

அனுலா அவனைப் பார்த்து “நான் மன்னரை அவசர மாகப் பார்க்க வேண்டும்” என்றாள். அவள் குரல் ஆண் குரலைப் போல் கரகரப்பாக இருந்தது. அதற்கு பதிலளித்த சிவன் “யாரையும் பார்க்க அனுமதிக்கக் கூடாதென மன்னர் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றான்.

“சிவன், நான் யாரென உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கணவனை மனைவி சந்திக்க எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை” அவள் உறுமினாள். அதற்கப்பால் சிவன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அனுலா பேராபத்தைத் தேடிச் செல்கிறாள் என்பதை மட்டும் அவன் உணர்ந்தான்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த இரண்டு வாயில் காப்போர்களும் விலகிக்கொள்ள அனுலா கதவை உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

குடாதிஸ்ஸ மன்னன் பாதி உறக்கத்திலும் பாதி விழிப்பிலும் இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தான். வாசற் கதவுகள் இரண்டாகப் பிரிந்து இரண்டு புறமும் மோதி சத்தம் எழுப்பியதால் அவன் விழிப்பு நிலைக்கு வந்தான். தன் கட்டளையை மீறி அங்கே திடுதிப்பென புயலெனப் புறப்பட்டு வருவது யாரெனப் பார்த்தான். வருவது அனுலா என்பது தெரிந்தததும் முதலில் ஆச்சரியமாகவும் பின் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவளது கோபவேசத்தைப் பார்க்க அவனுக்கும் சினம் படிப்படியாகத் தலைக்கேறியது.

“நீ எதற்கடி இந்த நேரத்தில் இங்கு வந்தாய்” மன்னன் சீறிக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தான்.

“மன்னனின் கட்டிலறைக்கு மகாராணி வராமல் யார் வருவார்கள்” அனுலாவும் அதே வேகத்தில் பதிலளித்தாள்.

“வந்த காரணத்தைச் சொல்”

“நீர் சற்று முன் மித்தா என்ற தாசியை வன்புணர்ந்து அவள் உடலை உன் கூரான நகங்களால் நார் நாராக பிய்த்து குத்திக் குதறி வீசியெறிந்தீரே! அவள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறாள்”.

“நீ யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்து கொண்டுதான் பேசுகிறாயா? அற்பதரே! உனக்கு அத்தனை திமிறா? நான் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் இந்த நாட்டின் மகராஜா. என்னை யாராலும் கேள்வி கேட்க முடியாது” இவ்வாறு கர்ஜித்தவாறே பாய்ந்து வந்த மன்னன் இரண்டு கைகளாலும் முட்டியை மடக்கி அனுலாவின் வலது இடது கன்னங்களிலும் மார்பிலும் மாறி மாறி குத்துவிட்டான். பின் வலது பாதத்தைத் தூக்கி அவள் இடுப்பில் உதைத்தான். பின் எகிறி கீழே விழுந்த அவளைத் தூக்கி பத்தடி தூரத்துக்கப்பால் இருந்த சுவரில் அவள் தலைப்படும்படி வீசினான். தலையில் அடிபட்டு இரத்தம் ஒழுக ஒழுக கிடந்த அவளது தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து மண்டபத்தின் நடுவில் போட்டான்.

அங்கே ஒரு அசுர யுத்தமே நிகழ்ந்தது. அதிர்வு தாங்க முடியாமல் அரண்மனைச் சுவர்கள் வெடித்து காரை பெயர்ந்து வீழ்ந்தன. அவன் கட்டிலிலிருந்து இருந்து பாய்ந்து போது அவனது உக்கிரவிசையைத் தாங்க முடியாமல் கட்டில் பிளந்து இரண்டு மூன்று துண்டுகளாகியது. அவன் போட்ட கர்ண கொடூரமான சத்தம் காரணமாக வாயிலில காவலுக்கிருந்த இரண்டு துவார பாலகர்களின் காதுச் செவிப் பறைகளும் வெடித்துப் போயின.

அவனது அடுத்த கட்ட நடவடிக்கையாக மன்னன் தனது வலது காலைத் தூக்கி கூடிய மட்டும் பலத்துடன் மல்லாந்து கிடந்த அனுலாவின் வயிற்றில் மிதிக்கப் போனான். அப்போதுதான் துக்கன்னாரால என்ற குறைகேள் அதிகாரி சிவன் அலறிக் கொண்டு அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான். மிதிப்பதற்காக தூக்கிய காலை பின்னிழுத்துக்கொண்ட மன்னன் ஏன் வந்தாய் என்ற தோரணையில் முறைத்துப் பார்த்தான்.

“மன்னித்து விடுங்கள் சுவாமி…. ஏதோ பகைவர்களுடன் யுத்தம் நடக்கிறதோ” என்று நினைத்துவிட்டேன் இவ்வாறு கூறிய சிவன் விழுந்து கிடக்கும் அனுலாவைப் பார்த்தான். அவளது தலை, மூக்கு, காது, வாய், உதடுகள் என்பவற்றில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. மேலும் அவளது இரத்தம் ஆங்காங்கே விசிறிக் கிடந்தது. அவள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தபோதும் அவள் தன்னைச் சுற்றி ஒன்றுமே நடக்காதது போல் அசட்டை தோரணையுடன் இருந்தாள். அவள் பார்வை “நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்பது போல் இருந்தது.

சிவனின் பிரசன்னத்துடன் மன்னனின் ஆவேசம் சற்றே தணிந்தது. அவன் இன்னமும் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். அவன் உடம்பெங்கும் வியர்ந்து வடிந்து கொண்டிருந்தது. அவன் சில கணங்கள் யோசித்தான். பின் சிவனை நோக்கி “இந்த நாயை இங்கிருந்து அகற்று… இவ்விடத்தை சுத்தம் செய்யச் சொல்.. அப்படியே. நன்கு காரமான மதுபானம் கொண்டு வரச் சொல்” என்று கூறிவிட்டு மன்னன் தன் இரண்டாவது சயன மண்டபத்துக்குச் சென்று விட்டான்.

முன்னர் மித்தாவை தூக்கி வந்த அதே பணிப்பெண்கள இப்போது அனுலாவையும் தூக்கிப் போக வந்தனர். அவர்களைப் பார்த்து அருகில் வர வேண்டாமென கையசைத்த அனுலா “தன்னால் நடந்து வரும் அளவுக்கு தனக்கு சக்தியிருக்கிறது” என்று கூறி தட்டுத் தடுமாறி எழுந்து நடந்தாள்.

அவர்கள் அவளை அழைத்துச் சென்று கழுவிச் சுத்தப்படுத்தி வெண்ணீர் ஒத்தடம் கொடுத்து மருத்து நீர் கொண்டு வீங்கிய இடங்களுக்குப் பத்துப் போட்டனர். “உடலில் புதிய இரத்தம் ஊற வேண்டுமானால் பழைய இரத்தம் வெளியேற வேண்டுமென்றும் யுத்த வீரர்கள் அஸகாய சூரர்களாக பரிமாணமடைய வேண்டுமானால் அது அவர்கள் உடம்பில் இருந்து எவ்வளவு உதிரம் வெளியேறுகிறது என்பதில் தான் தங்கியிருக்கிறது” என்றும் கூறினாள்.

அன்றைய இரவு விடை பெற்றுக் கொண்டிருந்தது. சில நொடிகளாவது நித்திரை செய்துவிடலாம் என் அனுலா முயற்சித்தபோதும் தலைவலி விண் விண்ணென வெடித்து விடும்போல் இருந்ததால் உறக்கம் வரவில்லை. அவள் இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் மித்தாவின் உடல் நிலையை சோதித்துப் பார்த்தாள். மித்தா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். இத் தருணத்தில் தான் விடியப் போவதை அறிவித்து சேவல்கள் கூக்குரலிட்டன. அப்போது அனுலாவின் அரைக் கதவை யாரோ தட்டும் சத்தம் ‘டொக் டொக் என ஓங்கி ஒலித்தது. அனுலா அச்சத்ததைக் கூர்ந்து கவனித்தாள். மீண்டும் ஒருமுறை அச்சத்தம் கேட்டது.

அனுலாவின் நெஞ்சம் திக்கென அடித்துக் கொண்டது. மன்னன் தான் திரும்பவும் ஆளனுப்பியிருப்பானோ? இம்முறை தன்னை கொல்வதற்கா? இல்லை ஆறுதல் சொல்வதற்கா? என்னவா இருந்தாலும் எதிர்கொள்ளலாம் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்ட அனுலா மெல்ல எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அங்கே அரசனின் அந்தரங்க வேலைக்காரனும் குறை கேள் அதிகாரியுமான சிவன் தான் நின்றிருந்தான். அவன் பரபரப்புடன் உள்ளே நுழைந்து அனுலாவுக்கு வணக்கம் செலுத்தினான்.

அவன் வருகை அனுலாவுக்கு எரிச்சலைத் தந்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு “என்ன” என்று கடுமையான குரலில் கேட்டாள்.

“மகாராணியிடம் ஒரு முக்கிய விடயமாகப் பேச வந்திருக்கிறேன்…. இரவு உங்கள் மீது மன்னரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையை என்னால் தாங்க முடியவில்லை. இந்த கொடூரம் இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நடந்து வருகின்றது”

“அதனால் என்ன?” அனுலா மீண்டும் கடுமையாகவே கேட்டாள். அவளால் சிவன் எதற்காக அங்கு வந்தான், என்ன சொல்ல முயற்சிக்கிறான் என்பதை புரிந்து கொள் முடியவில்லை.

“அதனால், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று தீர்மானித்துவிட்டேன். நேற்றிரவு மன்னனர் கொண்ட வரச் சொன்ன மதுபானக் கோப்பையில் விசம் கலந்து கொடுத்து விட்டேன்….. விடிந்ததும் நீங்கள் மகாராணியாக மகுடம் சூட்டிக் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்வான வேண்டுகோள்.

இவ்விதம் மகுடம் சூட்டிக் கொண்ட பெண்ணரசி மகாராணி அனுலாதேவி சுமார் பத்தாண்டு காலமே ஆட்சி செய்தாள். அவளே இலங்கையின் முதலாவது பெண் மகாராஜினி. எனினும் அவள் மகா காமாந்தகாரி என்றும் அவளே விசம் வைத்து குடாதிஸ்ஸ மன்னனைக் கொன்று அரசைக் கைப்பற்றினாள் என்றும் குற்றம் சுமத்தி சூழ்ச்சியால் அவளைக் கொன்று அரசைக் கைப்பற்றினான் மகலன் திஸ்ஸ இளவரசன் வரலாறும் அப்படியே இதனை பதிவு செய்துள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *