அன்று நான் அமர்க்களமாய், சென்னை திருவல்லிக்கேணி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு வயது நாற்பது.
ஜீன்ஸ் பேன்ட், ஹை லாண்டர் பிரிண்டட் ஷர்ட், கண்ணில் ரிம் லெஸ் ப்ளூ கண்ணாடி, வுட்லேண்ட் ஷூ, மழ மழ வென்ற முகம், லாவண்டர் நறுமண பெர்பும் சகிதம், இந்த பக்கம் அந்த பக்கம் தலையை திருப்பி கொண்டு, எனது பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். .
மாலை ஐந்து மணி .ஞாயிற்றுக்கிழமை, கடற்கரை பக்கம் பொழுது போக்க வந்தேன்.
எனது பஸ் வந்து விட்டது. எல்லோரும் என்னை பார்த்து வழி விட்டனர். ஏறும் போது படி கொஞ்சம் தடுக்கி விட்டது.
பெண்கள் “பார்த்து பார்த்து“ என்றனர். எனக்கு அப்படி ஒரு ரெஸ்பெக்ட். ஆண்கள் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து என்னை உட்கார சொன்னார். “நன்றி” சொல்லி விட்டு உட்கார்ந்தேன். ஜன்னலோர சீட்.
இருக்காதா பின்னே, எனக்கென்று ஒரு தனி மருவாதி உண்டே!
யாரோ ஒரு இளைஞன் என் பக்கத்தில் வந்து அமர்ந்தான், ஸ்டைலாய் யாருடனோ பேசிக்கொண்டே. நான் கண்டு கொள்ளவேயில்லை. கேனையா நான் அவனை கண்டு கொள்ள?.
மூன்று ஸ்டாப் கடந்தது. இளைஞன் எழுந்து கொண்டான். அந்த இடத்தில் ஒரு பெண்மணி வந்து அமர்ந்து கொண்டாள். அவள் புடவை என் மேல் பட்டது. எனக்கு புல்லரித்தது. அவள் போட்டிருந்த மல்லிகை பூ வாசனையும், ரோஜா நறுமண செண்டும் என்னை அவளுடன் பேசத் தூண்டியது.
தயக்கம். ‘என்ன நினைத்துக் கொள்வாளோ’ என.
தைரியத்தை வரவழைத்து கொண்டு தொண்டையை கனைத்துக் கொண்டேன். “மேடம், உங்களுக்கு என்ன வயசிருக்கும்?”
அவள் சொன்னாள்: “எனக்கா ! 3௦ வயது. ஏன் கேட்கிறீர்கள்?”
நான்: “உங்க உயரம் என்ன,நீங்க செவப்பா, மாநிறமா?”
அவள்: “அட, என்ன ஒரு அதிசயம். நானும் அதே கேள்வியைதான் உங்களை கேட்கலாம்னு இருந்தேன்! உங்களுக்கு என்ன வயதிருக்கும்? உங்க உயரம் என்ன, நீங்க செவப்பா, மாநிறமா?”
அப்போது திகைத்து போய் உட்கார்ந்தவன் தான்! அம்பத்தூர் பஸ் நிலையம் வந்து, கண்டக்டர் , “சார் பாவம், கண்ணில்லாதவங்க, எழுந்திருக்க சார், எங்க போகணும்? இப்படி அநியாயமா இறங்கற இடத்தை விட்டுட்டீங்களே, ஆட்டோ பிடிச்சி போயிடுங்க” என்று சொல்லும் வரை நான் எழுந்திருக்கவேயில்லை.
***
Courtesy: Jeffery Archer
ஆ.கு: பகவத் கீதை சொல்கிறது .
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:।
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி॥ (3.16)
பொருள் : வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள யாக சக்ரத்தை இம்மனித வாழ்வில் கடைப் பிடிக்காதவன், முற்றிலும் பாவகரமான வாழ்க்கை வாழ்கிறான். புலன்களின் திருப்திக்காக மட்டும் வாழ்பவனின் வாழ்வு பலனற்றதாகும்.
இன்னொரு கீதை சுலோகம்
போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||
பொருள்: புலனிபத்திலும், பௌதிக செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு , அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதல் கடவுளின் பக்தித் தொண்டிரற்கான திடமான உறுதி உண்டாவதில்லை .