இருவிதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 7,558 
 

இன்று என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள தேவையில்லாத அளவிற்கு நான் மிகப்பெரும் பதவியில் இருக்கிறேன். என் அதிகாரத்திற்குட்பட்ட இந்த மாவட்டத்தில் நான் நினைத்ததை சாதிக்க முடியும், எதையும் தடுக்க முடியும், எதையும் நிறுவ முடியும், எதையும் பொய்ப்பிக்க முடியும், எதையும் உயர்த்த முடியும். என்னைக்காண நாள்தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் வந்து தான் போகிறார்கள், முடிந்தவரை அவர்கள் கோரிக்கைகளை, புகார்களை ஏற்கிறேன், அதில் அநேகமானவை வெறும் காகிதமாகவே கிடப்பில் போய் விடுகிறது என்பது தான் உண்மை. அதில் பெரும்பான்மையானவை கீழ்த்தட்டுமக்களின் கோரிக்கைகளாக இருக்கலாம், பெரும் பலம் பொருந்திய, பணம் பொருந்திய அதிகார வர்க்க மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதிலேயே முழு நேரமும் போய் விடுகிறது. மற்றவர்களைப் போல் நானும் அந்த வட்டத்தில் சிக்கிவிட்டேன். இன்றும் என் அலுவலகத்திற்கு வெளியே ஐம்பது, அறுபது மக்களின் கூட்டம் என்னைக்கான தவம் கிடக்கின்றனர். அதற்கான காரணம் என்ன என்பதையும் நான் அறிவேன். அவர்களை சந்திப்பதற்குள் என் மனக்குழப்பத்திற்கான ஒரு விடையை நான் தேடவேண்டும். தன்னிச்சையாக தைரியமாக ஒரு முடிவை நான் எடுக்க வேண்டும். அது என் மனசாட்சிக்கு எதிராக இருக்குமா இல்லை சாதகமாக இருக்குமா என்பதை இனியே நான் அறியப் போகிறேன். நான் கார்த்திகேயன். கார்த்திகேயன் ஐ ஏ எஸ். கன்னியாக்குமரி மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர்.

என் சுய அறிமுகத்திற்குள்ளே நான் செல்வதற்குள் இரண்டு வாரங்களுக்கு முன்னே நடந்த ஒரு நிகழ்வை பகிர மனம் துடிக்கிறது அதுவே என் மனதை புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. அன்று தோவாளை தாலூக்காவிற்கு உட்பட்ட பூதப்பாண்டி கிராமத்தில் ஒரு புதிய கட்டிடம் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விவசாய மேம்பாட்டுத் துறைக்கு உட்பட்ட அந்த கட்டிடதத்தில் விவசாயம் செய்யும் விருப்பமுள்ள மக்களுக்காக ஆலோசனைகள் வழங்குவது, ஆடு மாடு கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு தொடர்பான ஆலோசனைகள், உதவிகள் என மிகவும் பயனுள்ள ஒரு திட்டம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவனென்ற அடிப்படையில் அது என்னை மிகவும் கவர்ந்தது. அதற்க்கு முழுமுதற் காரணமான விவசாயத்துறை அமைச்சர் வரதராஜனே அன்றைய சிறப்பு அழைப்பாளர் அவரே அந்த புதியக் கட்டிடத்தை திறந்து வைக்க வந்திருந்தார். நிகழ்ச்சியும் மிக அழகாக முடிந்தது, ஏழை மக்கள், விவசாயிகள் ஏராளமாக கலந்திருந்தனர் அவர்கள் முகத்தில் பூத்த புன்னகையின் வாசனையிலேயே அவர்கள் மகிழ்ச்சியை நான் நன்கு அறிந்து கொண்டேன். அதற்கு காரணமான அமைச்சர் வரதராஜனையும் நான் மனமுவந்து வாழ்த்தி நன்றி சொன்னேன். மக்கள் என்னிடமளித்த அந்த கோரிக்கையை ஏற்று ஐந்தே மாதத்தில் அதை நடைமுறைப்படுத்தி தந்தார்.

நிகழ்ச்சி முடிந்தது, என்னுடைய வாகனத்தில் நான் செல்ல தயாரானேன், என் தனி உதவியாளர் மாரிமுத்து வண்டியின் கதவை திறந்து நான் உள்ளே ஏறும் கணம் பின்னாலிருந்து ஒரு அழைப்பு,

” சொல்லுங்க சார்…” என்று அவர் முன் கால்கள் வேகமாக நடந்து. அவர் பதவி மீதுள்ள மரியாதையினால் கூட இருக்கலாம்.

” கலெக்டர் சார் ஃபிரியா இருக்கீங்களா? உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், நம்ம வண்டில சேந்து பேசிட்டே போலாமே….” என்றார் அமைச்சர் வரதராஜன்.

நான் மறுப்பேதும் சொல்லவில்லை…. “சரி போலாம் சார் என்ன விஷயம்? ” என்றேன் .

” வாங்க உள்ள போய் பேசலாம்…” என்றார்.

என் வாகன ஓட்டுனரிடம் வண்டியை கலெக்டர் அலுவலகம் கொண்டு வர சொல்லிவிட்டு நான் அவர் வாகனத்தில் பின் புறம் ஏறிக்கொண்டேன். அவரும் என்னோடு பின் புறம் ஏறி அமர்ந்தார்.

” உங்க மூலமா எனக்கொரு காரியம் ஆகணும் கலெக்டர் சார். இத என்னாலேயே டைரெக்ட்டா செய்ய முடியும் என்ன இருந்தாலும் நீங்க இந்த மாவட்டத்தோட கலெக்டர் உங்ககிட்ட அனுமதி வாங்கி லீகலா பண்ணனும்னு நெனைக்கிறேன் அதுக்கான பலனும் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும்…. ”

” புரியலையே சார்…” குழம்பினேன்.

” வாங்க சார் உங்கள ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் அப்புறம் எல்லாம் தானா புரியும்… ” மறைமுகமாக பேசுகிறார் என்பது புரிந்தது. வண்டியில் அமைதியாக இருந்து கொண்டேன் மனம் மட்டும் அமைதியாகாமல் சிந்தனையிலிருந்து. எதோ ஒரு தவறான காரியத்திற்கு துணை போகப் போகிறோம் என்பது மட்டும் புரிந்தது. வாகனம் நான் ஏறிய இடத்திலுருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கீரிப்பாறை என்ற இடத்திற்கு அருகில் சாலையோரம் நின்றது.

” இறங்குங்க சார்… ” என்றார் அமைச்சர்.

அது எனக்கு பழக்கப்பட்ட இடம் தான் முன்பு சில முறை வந்திருக்கிறேன், சுற்றிலும் வனம் சூழ்ந்த ஒரு அற்புதமான ரம்யமான பகுதி. ஆங்காங்கே பறவைகளின் ரீங்காரம் காதினை செல்லமாக குடைந்தது. எனக்கு அங்கே பிடித்தமான ஒன்று மாவட்டத்தில் எங்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருந்தாலும் இந்த இடத்தில் மட்டும் ஒரு தென்றல் நம்மை தீண்டியவாறே இருக்கும், நிச்சயமாக சுற்றியிருக்கும் மலைகளும், வனங்களும், மரங்களும் தான் அந்தப் புகழுக்குரியதாய் இருக்கும்.

” எப்படி சார் இருக்கு ஏரியா…. ” என்னை நோக்கி கேட்டார் அமைச்சர்.

” எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் சார் இது. இந்த ஏரியா முழுதும் கீரிப்பாறை வரை இதே மாதிரி கிளைமட் அழகா இருக்கும்…. ” என்றேன்.

அவர் முகத்தில் ஏதோ ஒரு வஞ்சனை சிரிப்புடன் காணப்பட்டார்.

” கலெக்டர் சார் இந்த ஏரியா எல்லாம் சேத்து மொத்தம் எத்தனை ஏக்கர் இருக்கும்… ” தன் கையினை நீட்டி அளவாகக் காட்டினார் அமைச்சர்.

” கரெக்ட்டா தெரியல சார் சுமார் 30, 40 ஏக்கர் இருக்கலாம்” என்றேன்.

விவசாயத்துறை அமைச்சர் என்பதால் இங்கே ஏதாவது திட்டம் கொண்டு வர முற்படுகிறாரோ என்றும் மனம் யோசித்தது. கேட்டுவிடலாமென வாயெடுத்தேன்.

அமைச்சர் தொடர்ந்தார் ” இந்த இடத்துல ஒரு பெரிய சிமெண்ட் ஃபேக்டரி வந்தா எப்படி இருக்கும்…. ”

ஒரு நொடி என் இதயத்தில் இயந்திரம் இடிப்பது போல் இருந்தது. அந்நேரம் வரை மகிழ்ச்சியாய் ரீங்காரமிட்ட பறவைகளின் குரல் அப்போது மரண ஓலமாய் மாறியிருந்தது. நகர்ந்து கொண்டிருந்த மேகம் திடீரென நிற்பது போல் ஒருகணம் என்னை அறியாமல் என் மனமும் நின்றது.

” கலெக்டர் சார் நான் விசயத்துக்கு வரேன். எம்கே சிமெண்ட் கம்பனி காரங்க இந்த மாவட்டத்துல ஒரு ஃபேக்டரி தொடங்க எடம் பாத்துட்டு இருக்காங்க. திருநெல்வேலில நான் தான் எல்லாம் முடிச்சு கொடுத்தேன் இப்போ அங்க ஃபேக்டரியும் ஸ்டார்ட் பண்ணியாச்சு. கழிஞ்ச முறை அவங்க இங்க வந்து பாத்துருக்காங்க இந்த இடம் ரொம்ப புடிச்சு போச்சாம். பக்கத்துல ஏரி எல்லாம் இருக்கனால தண்ணி வசதிக்கும் பஞ்சமில்ல. அதான் இதையே முடிச்சிடலாம்னு நெனைக்கிறேன். அதுல உங்க உதவியும் பெருசா தேவைப்படும் அதுக்கான பலன் நீங்க இதுவரைக்கும் சம்பாதிச்சத விட பல மடங்கு பணமா வாங்க போறீங்க. ரொம்ப லக்கி தம்பி நீங்க… ”

பதில் கூற வார்த்தையை தேடிக்கொண்டிருந்தேன். கிடைக்க சிரமமாய் இருந்தது.

” சார் இந்த இடம் முக்கால் வாசி விவசாயிகளோட விளைநிலம், அவங்க நெல்லு, ரப்பர்னு சாகுபடி பண்ணிருக்காங்க இத போயி எப்படி…. ”

“கலெக்டர் சார் நீங்க அத பத்திலாம் கவலைப் படாதீங்க அதுக்கான அமௌன்ட் அவங்களுக்கு கொடுத்திடலாம். இந்த ஊர்ல வேற இடமா இல்லா வேற எங்கயாச்சும் இடம் வாங்கி பயிர் செய்யட்டும்… ” என்றார்.

” அதுமட்டுமில்ல சார் சிமெண்ட் ஃபேக்டரினு சொல்றிங்க அதுனாலே சுத்தி இருக்குற சுற்றுசூழல் பாதிக்கப்படும், மக்கள் லாம் ரொம்ப கஷ்ட பாடுவாங்க சார். ரொம்ப இயற்கையான இடம் சார் இது அதை கெடுக்க வேண்டாமே. வேற எங்கயாது வெளியில இடம் பாக்கலாமே சார் நானே அப்ரூவல் தரேன்.” என் மனம் சம்மதிக்க இடம் கொடுக்கவில்லை.

“கலெக்டர் சார் இந்த ப்ராஜக்ட்டோட காஸ்ட் இருநூறு கோடி அதுல இருவது பெர்சன்ட் கமிஷன் பேசியிருக்கேன். அதுல அம்பது பெர்சன்ட் பத்து கோடி உங்களுக்கு வந்திடும். காச வாங்கிட்டு கையெழுத்து போட்டு கொடுங்க சார் அத விட்டுட்டு சுற்று சூழல் அது இதுனு வந்த வாய்ப்பை கெடுத்துகாதீங்க. நீங்க அப்ரூவல் தரலைனா கூட என்னால சிஎம் வர போயி அப்ரூவல் தர வைக்க முடியும் ஆனா என்ன ஒன்னு அப்போ நீங்க ஒரு பைசா காசு வாங்காம கையெழுத்து போட வேண்டி இருக்கும். யோசிச்சுக்கோங்க. ”

பத்துக்கோடி, நான் இதுவரை சம்பாதித்த பணம் மொத்தமாக கூட்டினாலும் பத்து பன்னிரென்டு லட்சம் வரலாம், இன்னும் ஆயுள் முழுவதும் வாங்கும் வருவாயை கூட்டினாலும் பத்து கோடி வருமா என்பது சந்தேகமே. ஆசை உள்ளே துளிர் விட ஆரம்பித்தது. பணம் என் முன்னிருந்த இயற்கையை, மலைகளை, வயல்களை, மரங்களை மறைத்தது ஆயினும் என்னால் உறுதியாய் கூற முடியவில்லை ஏனென்றால் நான் வளர்ந்த சூழல். நான் யோசித்து சொல்கிறேனென முடித்துவிட்டேன்.

” யோசிங்க சார் ஆனா சரியான முடிவா சொல்லுங்க ” என்றார் அமைச்சர்.

பிறகு அவரே என்னை ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு சென்று இறக்கி விட்டார். அன்றிரவு எனக்கென்று அரசு கொடுப்பட்டுள்ள என் வீட்டினில் ஒரு மோசமான இரவைக் கழித்தேன். என் மனைவி குழந்தைகளிடம் கூட சரியாக பேச தோணவில்லை. பணமா நேர்மையா என என் மன அரங்கிற்குள் ஒரு நீயா நானா விவாதம் நடைபெற்றது. கடைசியில் பணமே வென்றதாக அறிந்து கொண்டேன். அன்றிரவு கனவும் என்னை பயமுறுத்த செய்தது, கொஞ்சம் நியாபகமிருந்தது. ஒரு அழகு சோலையில் என்னை எதுவோ துரத்த நான் ஓடிக் கொண்டிருக்கிறேன், இரு புறமும் வயலும், ஆறும் ஓடிக்கொண்டிருக்க, நான் பின் திரும்பி பார்க்கையில் மாசு பொருந்திய புழுதிக் காற்றோன்று சூறாவளியாய் என்னை தாக்க வந்து கொண்டிருந்தது, என் கால்கள் இருந்த இடத்திலேயே நிற்பது போல் நகராமல் ஓடிக்கொண்டிருந்தேன். இறுதியில் என்ன ஆனது என்பதை மறந்து போய்விட்டேன் ஆனால் நிச்சயம் அது நான் எடுத்திருக்கும் முடிவிற்கான இயற்க்கையின் பழி வாங்குதலாக இருக்கலாம்.

அமைச்சர் சொன்னது போல் நிச்சயமாக என் ஒப்புதல் இல்லாமலே அவர்களால் அதை சாதிக்க கூடிய அரசியல் பலம் அவரிடம் இருக்கிறது என்பதை அறிந்தேன். அதனால் பணத்தை இழக்க என் மனம் துணை போகவில்லை. அடுத்த நாள் அமைச்சருக்கு நானே அலைப்பேசியில் அழைத்தேன்.

” சார் நீங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்றேன். மேற்கொண்டு என்ன பண்ணனும்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க…” என்றேன்.

” குட்… இப்போதான் நீங்க பொழைக்க தெரிஞ்சவன் சார்.. ” என்றார். இதனால் பல விவசாயிகளின் பிழைப்பே போய் விடுமே என்ற உணர்வு ஓரமாய் இருந்தது.

” நாளைக்கே உங்களுக்கு 1 கோடி வரும் அட்வான்சா வச்சிக்கோங்க மீதி பணம் டாக்குமெண்ட் ஓர்க்ஸ்லாம் முடிஞ்ச பிறகு வாங்கிக்கோங்க ” என்றார்.

” வேண்டாம் சார். எல்லாம் நல்லபடியா முடியட்டும் அதுக்கு பிறகு மொத்தமா வாங்கிக்குறேன்…” என்றேன், இன்னும் என்னுள் ஒரு தயக்கம் படர்ந்திருந்தது.

அவர்கள் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கும் வேலையை தொடங்கியிருக்கிறார்கள் என்பதை இரு நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். சில ப்ரோக்கர்களை விட்டு நில உரிமையாளர்களிடம் அடித்தட்டு விலைக்கு பேச தொடங்கினார்கள். சிமெண்ட் ஆலை வருகிறது என்ற செய்தி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை மாறாக சாலை விரிவாக்கம், அணை கட்டுதல் என அரசை காரணம் காட்டி விலை பேசினார்கள். கொடுக்கவில்லையென்றால் மொத்த இடத்தையும் அரசே கையகப்படுத்திக்கொள்ளும் என்றும் பிறகு ஒரு காசும் கிடைக்காதென்றும் என்னிடம் கூறியவாறே அவர்களையும் மதிமயக்கினர். கல்வியறிவில்லாமல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டுள்ள விவசாயிகள் செய்தறியாது விழி பிதுங்கி நின்றனர். அவர்கள் கனவை, வாழ்வை சிமெண்ட் போட்டு மூடப்போகிறார்கள் என்பது எனக்கு தெரிந்திருந்ததால் குற்ற உணர்ச்சியில் மூழ்கினேன் அதையும் பணம் வென்றுவிட்டது.

அதிக மன சோர்வால் இரண்டு நாட்கள் சொந்த ஊருக்கு சென்று ஓய்வெடுத்துக்கொண்டு வரலாமென தோன்றியது. கோவையை நோக்கிய ஒரு ரயில் பயணம், குளிர்சாதன அறை வேண்டாமென ஸ்லீப்பர் வகுப்பையே தேர்ந்தெடுத்தேன். நான் ஜன்னலருகில் அமர்ந்திருந்தேன், அருகில் மனைவி குழந்தை இருந்தனர். ரயிலின் வேகத்தில் மரங்கள் என் மீது ஸ்பரிசம் காட்டியது போல் காற்றினால் என்னை வருடியது. அது எனக்கு துரோகம் செய்யாதே என்று உரைப்பது போலிருந்தது. பச்சை பசேலென இயற்கை என் கண்ணை திருடியது. ஆயினும் என் கண்களில் இருள் போன்ற ஒரு உணர்வே இருந்தது. ரயில் முன்னோக்கி செல்ல என் நினைவுகள் பின்னோக்கி பால்யத்திற்கு சென்றது.

நான் பிறந்து வளர்ந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம் கிராமம். என் தந்தையின் பூர்வீக தொழில் விவசாயம். எங்களுக்கென்று சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் என் தந்தை கரும்பு, சோளம், வாழை என சாகுபடி செய்து வந்தார். என் பால்யம் முழுவதும் கரும்புத் தோட்டத்திலும் வாழை தோட்டத்திலும் சுற்றி திரிந்தது இன்றும் என் நாவில் நீர் ஊறுகிறது. அக்கனிகள் போலவே எங்கள் வாழ்வும் இனிமையாக சென்று கொண்டிருந்தது. என் தந்தையின் பேராவல் என்னை எப்படியாவது அரசு உத்யோகத்தில் உயர்ந்த பணியில் அமர்த்த வேண்டுமென்பது. சிறு வயது முதலே அவர் ஆசையை யும் என்னில் ஊட்டி வளர்த்தார். ஒருவேளை அவர் அவரைப்போலவே என்னையும் விவசாயத்திலேயே ஈடு பட செய்திருந்தால் தற்போது இந்த மாப்பாதக செயலை செய்ய நேராமல் ஆயிருக்கும். அவருடனிருந்த அந்த ஒரு நாள் இன்றும் என் கண்ணுக்குள் நிற்கிறது. எங்கள் இடத்தில் மீதமிருந்த அரை சென்ட் நிலத்தில் தேக்கு மரம் நடுவதற்காக சிறு சிறு செடிகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தார். மரம் நடுவதற்கான குழிகளையும் அவரே வெட்டினார். அப்போது எனக்கு ஏழு வயது.

” என்ன மரம் பா இது? இதுலேருந்து என்ன கிடைக்கும்? ” என்று வினவினேன்.

என்னை அருகில் அழைத்தார். “இது தான் கண்ணு தேக்கு மரம். இது வளந்து பெரிய மரம் ஆயிடுச்சுனா அதுலேருந்து கதவு, ஜன்னல், கட்டில், மேசை எல்லாம் செய்யலாம் ” என்றார்.

” இதுலேந்து எப்படிப்பா அதுலாம் செய்ய முடியும். பெலமா இருக்குமா? ” என்றேன்.

” கண்ணு நீ இப்போ சின்ன புள்ள…. உன்னால அந்த பெரிய கல்ல தூக்க முடியுமா? ” என்றார்.

” முடியாதுப்பா” என்றேன்

” ஆனா அப்பா தூக்குவேன்ல ” என்று தூக்கி காட்டினார்.

” நீ பெரிய ஆளா வளந்தா இந்தக் கல்ல தூக்கலாம். அது மாதிரி தான் கண்ணு இது இப்போ சின்ன செடி. இது நல்ல பெருசா வளந்து மரம் ஆனதும் அத வெட்டி எல்லாம் செய்யலாம் ” என்று அழகாக விளக்கினார்.

அவர் சொன்ன சில வரிகள் இன்னும் என்னுள் புதைந்து கிடக்கின்றன…

” ஒவ்வொன்னுக்கும் நாம விதை போடணும் கண்ணு. நாம போடுற விதை தான் நாளைக்கு பெரிய மரமா வளந்து நிக்கும். ”

” அப்போ என்னையும் நீங்க விதை போட்டு தான் நான் வளறுறேனா? ” என்றேன்.

சிரித்தார். ” ஆமாக்கண்ணு நீயும் நான் போட்ட விதை தான்” என்றார்.

என் கரங்களாலையே அன்று ஒவ்வொரு செடியாக என் தந்தையின் உதவியுடன் நட்டேன், நீர் பாய்ச்சினேன். இன்றும் நியாபகமிருக்கிறது மொத்தம் நாற்பது மரக்கன்றுகள். அன்று முதல் அக்கன்றுகள் வளர வளர நானும் வளர்ந்து கொண்டே வந்தேன். வெவ்வேறு விதைகள். விதைத்தவர் என் தந்தை.

காலத்தின் சுழற்சி, விவசாயத்தின் அழிவு அன்றே தொடங்கியிருந்தது. என் கல்வி செலவு, என் அக்காவின் திருமண செலவென வறுமை வாட்டத் தொடங்கியது. எங்களிடமிருந்த ஒரே செல்வம் எங்கள் நிலம், எங்கள் வருவாயும் அந்நிலம் மட்டுமே. கடைசியில் அந்நிலமும் வரதட்சணை நகைகளாக என் அக்காவின் உடலில் குடிகொண்டது. மீதமிருந்த அரை ஏக்கர் நிலத்தில் இருந்தது நாங்கள் நட்ட தேக்கு மரங்கள் மட்டுமே. நிலம்போனபின் நான் எதெற்கென சிறிது காலத்தில் என் தந்தையும் நிலத்தினுள் மறைந்து விட்டார் அத்தேக்கு மரங்களுக்கு நடுவில் சமாதியாய். அவர் மறைந்த சில மாதங்களில் நான் முன்பு எழுதிய ஐ ஏ எஸ் தேர்வு முடிவுகள் வந்தது. என் முயற்சி என் தந்தை யின் கனவு எதுவும் வீண் போகவில்லை. வெற்றி பெற்று விட்டேன். அம்மகிழ்ச்சியை பகிர தந்தை இல்லை. அவர் சமாதி முன்பு சென்று அழுதேன். நிலத்தில் விழுந்து வணங்கினேன். அன்று சுற்றியிருந்த தேக்கு மரங்கள் தான் என்னை ஆறுதல் படுத்தியது. இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் மனக்குழப்பத்திற்கும் என் தோட்டத்திற்கு சென்று வந்தால் ஒரு நிம்மதி கிடைக்குமென நம்புகிறேன் அதற்காகவே இப்பயணம்.

பலமாதங்களுக்கு பிறகு எனக்கு ஒரு புத்துணர்வு பிறந்ததாய் ஒரு உணர்வு. பல அடி உயர தேக்கு மரங்கள் என்னை வரவேற்றது. குறைந்தது பதினைந்து அடிகளாவது இருக்கலாம், ஒவ்வொன்றும் காட்டு தேக்கு மரங்கள் அளவிற்க்கு தடிமனாக வளர்ந்திருந்தது. இருபத்தைந்து வருட மரங்கள் ஒவ்வொன்றும் பல இலட்சம் போகலாம். நாற்பது மரங்களில் மூன்றை தவிர முப்பத்தேழு மரங்கள் நன்றாக வளர்ந்திருந்தது. என் தந்தை எனக்காக விட்டுசென்றிருக்கும் ஒரே சொத்து, அவர் போட்ட விதை. என் ஆறுதல். அதனால் வெட்ட மனம் வரவில்லை நான் இருக்கும்வரை அதுவும் இருந்துவிட்டு போகட்டுமென விட்டுவிட்டேன். எப்பொழுது நான் சென்றாலும் அழகான கூச்சலுடன் இலைகளசைத்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் அன்று ஏனோ புரியவில்லை முழு நிசப்தமாய் காட்சியளித்தது. ஒருவேளை நான் செய்யப் போகும் செயலுக்காக என் மீது கோபித்துக் கொள்கிறதோ என்று தோன்றியது. தந்தையின் சமாதி அருகில் சென்றேன் காய்ந்த இலைகளால் மூடப் பட்டிருந்தது. அவரை கவனிப்பதற்கு அங்கு ஆளில்லை. பிறகு இலைகளை சுத்தப் படுத்திவிட்டு மனதிற்குள் அவரிடம் பேசினேன் நான் செய்வது சரியா என்ற ஐயத்தை அவரிடம் விளக்கினேன். பதில் கிடைத்ததாய் தோன்றவில்லை. ஆனால் அவருக்கு விருப்பமிருக்காதென்பதை நான் நன்கு அறிவேன். விவசாயத்தையே முழு மூச்சாக நினைத்து வாழ்ந்தவர். சில மணிநேரங்கள் அங்கே கழித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன், என் வாகனத்தில் ஏறி அது அங்கிருந்து புறப்பட்டு மெதுவாக சென்றது, நான் ஜன்னல் கண்ணாடியின் அருகிலிருந்து தோட்டத்தை கண்டேன், மரங்கள் பழைய படி சப்தமிட ஆரம்பித்ததை என் காதுகள் உணர்ந்தது. இலைகள் ஊஞ்சலாடுவதை கண்கள் கண்டது. அவைகளுக்கு என் மீது கோபம் தான் என்பதை மனம் உறுதி செய்தது. இரு தினங்களில் மீண்டும் பணிக்கு திரும்பினேன்.

தற்போது முடிவெடுக்க வேண்டிய தருணம். நேரமில்லை. வெளியில் அப்பகுதி மக்கள் அவர்கள் நிலத்தை காக்கக்கோரி என்னிடம் மனு கொடுக்க காத்திருக்கிறார்கள். இன்னும் சில மணிநேரங்களில் அமைச்சர் வந்து என்னை சந்திப்பதாய் கூறியிருக்கிறார், ஆலைக்காக நான் கையொப்பமிட வேண்டும். விஷயம் தெரிந்துபோய் சில சமூக ஆர்வலர்களும் எதிர்த்து கொடி பிடிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் வாயையும் சில நாட்களில் அடைத்து விடுவார்கள் என்பதும் தெரியும். கிடைக்கபோகின்ற பணத்தில் என்னால் வேண்டியதையெல்லாம் வாங்கிக்கொண்டு என் குடும்பத்தை மகிழ்ச்சிப் படுத்த முடியும் ஆனால் என்னால் நிம்மதியாய் குற்ற உணர்வில்லாமல் வாழமுடியுமென்று எனக்கு விளங்கவில்லை. அப்படியொரு செல்வம் வேண்டாமென்றே தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை அங்கு சிமெண்ட் ஆலை வராமல் தடுக்கப் போகிறேன் முடியவில்லையென்றால் அதற்கு நான் துணை போகாமல் இருக்கப்போகிறேன். நான் தற்போது செய்யப்போகின்ற செயலால் என் பணிக்கு எந்த ஒரு இடையூறும் வரலாம், மிரட்டலும் வரலாம், நான் அதற்கு இனியும் அஞ்சப்போவதில்லை. எதைப்பத்தியும் யோசிக்காமல் தொலைகாட்சி, பத்திரிக்கை நிருபர்களுக்கும் இப்போது சொல்லிவிட்டேன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்திற்குள்ளே பதித்திரிக்கை, தொலைகாட்சி நிருபர்கள் செய்தி சேகரிப்புக்காக வந்துவிட்டனர். எதை அறிவிக்க ஆட்சியர் அழைத்திருக்கிறார் என்பதை அவர்கள் எவருவும் அறிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் வெளியே வந்தான் கார்த்திகேயன். அவனை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.

” எல்லாருக்கும் வணக்கம், இந்த பிரஸ் மீட் எதுக்குன்னு உங்களால யூகிக்க முடியுமான்னு தெரியல. ஆனா இத இங்க இப்போ தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துல நான் இருக்கேன். கீரிப்பாறை பக்கத்தில உள்ள விவசாய நிலங்களை ஆக்கிரமிச்சு சிமெண்ட் ஃபேக்டரி கட்டப் போறதாகவும் அத தடுக்க கோரியும் பல விவசாயிகளிடமிருந்தும், சமூக ஆர்வலர்களுக்கிட்ட இருந்தும் கோரிக்கை வந்திச்சு. ஒரு கலெக்டரா மட்டுமில்லாம ஒரு நாட்டோட நலன விரும்புற ஒரு குடிமகனா இந்த ஆலை வராம தடுக்க நான் முடிஞ்ச வரை போராடுவேன். இது சம்மந்தமா நான் சிஎம் கிட்ட மனு கொடுக்கவும் தயார். எந்த சூழ்நிலைலயும் இயற்கையை, விவசாயத்தை கெடுக்கும் எந்த ஆலையும் நான் இருக்கும் மாவட்டத்துல வர விடமாட்டேன். இந்த சிமெண்ட் ஆலைகளிலிருந்து வெளியாகிற கிரீன்ஹவுஸ் வாயு, நச்சுப்புகை, தீங்கு விளைவிக்கும் கழிவுகள் நால காற்று மாசு படும், நீர் மாசுபடும், சுற்றியிருக்குற சுற்று சூழல், இயற்கை வளம் எல்லாம் பாதிக்கப் படும், சிமெண்ட் தயாரிக்கிற கான்கிரீட், கெமிக்கல்கள் நால மண் வளம் பாதிக்கப் படும், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு சுத்தி இருக்குற இடங்கள்ல விவசாயம் அடியோடு அழிஞ்சுடும், மக்கோளோட உடல் நிலை பாதிக்கும், உயிரினங்கள் பாதிக்கும். எல்லாத்துக்கும் மேல விவசாயிகளோட பிழைப்பு பாதிக்கும். இதுக்குலாம் நான் எந்த வகைலயும் காரணமா இருக்க மாட்டேன். இந்த ஆலை இங்கு வர காரணமா இருக்குற அரசியல் பலம் பொருந்திய யார் நால எனக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அத எதிர் கொள்ள தயார். குமாரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் இடங்கள், விளை நிலங்கள் எங்கேயும் எந்த ஆலையும் வராது வரவும் விடமாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்… நன்றி… ”

நான் பேசி முடித்ததும் சுற்றி கூடியிருந்த விவசாயிகளின் முகத்தில் நான் கண்ட மகிழ்ச்சியில் என் அனைத்து மனக்குமுறலும் மறைந்து போனதை உணர்ந்தேன்.

மூன்று மாதங்கள் கழிந்துவிட்டது, இன்றும் அதே போன்றதொரு அறை, வெளியில் என்னைக் காண, புகார் கொடுக்க, மனு கொடுக்க யாருமில்லை, என் அதிகாரமும் அவ்வளவு உயர்ந்ததில்லை, ஆனால் மன நிம்மதி மிகவும் அதிகமாய் இருக்கிறது. இன்றும் நான் காத்திகேயன் ஐ ஏ எஸ். ஆனால் மாவட்ட ஆட்சியர் இல்லை, பட்டு நெசவுத்துறையின் தலைமை அதிகாரி. அமைச்சர் வரதராஜனின் அரசியல் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததென்பதை இரு மாதங்களிலேயே காட்டிவிட்டார் என்பதில் எனக்கேதும் வருத்தமில்லை. அங்கு சிமெண்ட் ஆலை கட்டும் பணி தொடங்கப்போவதாக பத்திரிக்கைகளில் படித்து தெரிந்து கொண்டேன். அதற்க்கு துணை போகாமல் இருந்தவரை மகிழ்ச்சியே. பட்டு நெசவுத்துறை எனக்கேத்த பணி தான். இத்துறையை மேம்படுத்த நான் போராடுவேன்,யாருக்கும் அஞ்சத்தேவையில்லை. சில நாட்கள் முன்பு விடுமுறையில் என் தேக்கு தோட்டத்திற்கு சென்றிருந்தேன் வழக்கத்திற்கு மாறாக என் மரங்கள் அதிக சப்தமெழுப்பியது , இலைகளும், கிளைகளும் ராகம் பாடியது. அவைகளுக்கு என் மீதுள்ள கோபம் போய்விட்டதை காட்டுவதற்காக இருக்கலாம். என் தந்தையின் சமாதியும் எப்போதும்போலில்லாமல் சுத்தமாகவே இருந்தது. அவர் இட்ட இருவிதைகள் நானும், மரங்களும் அவர் முன்பு பெருமையாய் நிற்பது போல் தோன்றியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *