புத்திசாலி பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 1,578 
 
 

வங்கியில் பெரிய அதிகாரியாய் இருக்கும் ராமநாதனுக்கு அவர் மனைவியின் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.. வீட்டில் அவர்கள் இருவர் மட்டும்தான் என்றாலும் கிட்ட்த்தட்ட ஐம்பதை தொட்டுவிட்ட அவரது மனைவியால் வீட்டு வேலைகள் எதுவும் செய்ய முடிவதில்லை. வயதின் தளர்ச்சிதான் காரணம் என்று ராமநாதனுக்கு தெரிந்தாலும் அவரும் கூடமாட வேலைகள் செய்து மனைவியின் பாரத்தை குறைத்துத்தான் பார்த்தார்.

பழக்கமில்லாத்தால் இவர் செய்த வேலைகள் அரைகுறையாய் இருந்தது. இதனால் இவர் செய்த வேலைகளை அவர் மனைவி மீண்டும் செய்யவேண்டியிருந்த்து.. வீட்டோடு ஒரு பெண்னை வேலைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்த ராமநாதன் அவர் பணிபுரிந்து கொண்டிருந்த வங்கி கார் டிரைவரிடம் சொல்லி வைத்தார்..

இரண்டு நாட்கள் கழித்து ராமநாதனிடம் வந்த கார் டிரைவர், “சார் எனக்கு தெரிஞ்ச இடத்துல ஒரு பொண்ணு இருக்கு, ‘பிள்ஸ்டூ’ முடிச்சுட்டு மேல படிக்க வழியில்லாமல் இருக்கு. அவங்க அப்பா இரண்டு வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. ஒரு தம்பி படிச்சுட்டு இருக்கான். அவங்க அம்மாதான் கிடைக்கற வேலைக்கு போயிட்டு இந்த பொண்ணை இதுவரைக்கும் படிக்க வச்சாங்க, ஆனா இப்ப அவங்களாலயும் முடியாம வீட்டோட இருந்துட்டாங்க.

பாவம் சார் அந்த பொண்ணு, மேல படிக்க ஆசை இருந்தும் வீட்டோட நிலைமையால இப்ப எங்கயாவது ஒரு வேலை கிடைக்குமான்னு என் சம்சாரத்து கிட்டே கேட்டுச்சு, ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஆள் வேனும்னு நான் அவ கிட்டே சொல்லியிருந்தேன். உங்களுக்கு விருப்பமுன்னா அந்த பொண்ணை உங்களை வந்து பாக்க சொல்றேன்”.

ராமநாதன் யோசித்தார்.. “ஏம்ப்பா அந்த பொண்ணு ‘பிளஸ்டூ’ வரைக்கும் படிச்சிருக்குன்னு சொல்றே. எப்படி வீட்டு வேலை எல்லாம் செய்வாங்க? அதுவும் வீட்டோட வேற இருக்கணும்”. ராமநாதன் கார் டிரைவரிடம் சொன்னார்.

கார் டிரைவர், “சார்..கண்டிப்பா அந்த பொண்ணு எல்லா வேலையு,ம் செய்யும் சார்”

ராமநாதன் மறுப்பாய் தலையசைத்தார். “வேண்டாம்ப்பா படிச்ச பொண்ணா வேற இருக்கு, கூட்டி, பாத்திரம் தேய்க்கற வேலையெல்லாம் கொடுத்தா ரொம்ப கஷ்டம்ப்பா..”

“சார்..சார் அந்த பொண்ணோட குடும்பம் ரொம்ப கஷடத்துல இருக்கு சார், அவசரத்துக்கு இப்ப இந்த வேலை கிடைச்சா அந்த பொண்ணு எல்லா வேலையும் தயங்காம செய்யும் சார், நானே பார்த்திருக்கேன் அவங்கம்மாவுக்கு அவ்வளவு அனுசரணையா இருக்கறது”.

ராமநாதன் யோசித்து சரி “ஞாயித்து கிழமை அன்னைக்கு வீட்டுக்கு வர சொல்லு, வீட்டுல பார்த்து சரின்னு சொன்னா எனக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லை”.

ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணை அழைத்து வந்திருந்தார் கார் டிரைவர். பார்க்க சிறு பெண்ணாய் துறு துறுவென இருந்தாள்..தன் பெயர் “ரமா” என்றாள். மனைவியிடம் பேச சொன்னார். அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. அவர் மனைவி ஒரு மணி நேரத்தில் அவரிடம் வந்து இந்த பொண்ணே போதும் என்றாள்.

“நல்லா யோசிச்சுக்கோ, அது படிச்ச பொண்ணு, அப்புறம் என் மேலே குறை சொல்லக்கூடாது”.

“அதெல்லாம் பேசிட்டேன். காலையில ஏழு மணிக்கு வந்திடுவா, இராத்திரி எட்டு மணிக்கு போயிடுவேன்னு சொன்னா. வீட்டுல அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்கறதுனால போய்த்தான் ஆகணும். நான் இல்லாத நேரத்துல தம்பி பார்த்துக்குவான். பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல எட்டாவது ப்டிச்சுகிட்டு இருக்கானாம்..”

மறு நாள் ஏழு மணி !

டானென்று அந்த பெண் வந்து நின்றாள். வீட்டு வேலைகள் அனைத்தையும் மள மளவென செய்ய ஆரம்பித்து விட்டாள். அதுவரை இவர்கள் இருவருக்கும் காப்பி போடுவதே பெரிய வேலையாய் இருக்கும், அதற்கு பின் சமையல் என்ன செய்வது என்ற குழப்பம், எப்படியோ ஒப்பேத்தி ராமநாதனை வேலைக்கு அனுப்பி வைப்பாள் அவர் மனைவி.

இன்று ஆச்சர்யம், ஒன்பது மணிக்கு டேபிளில் “சுடச்சுட டிபன்” வைக்கப்பட்டிருந்தது. கணவன், மனைவி இருவரையும் உட்கார சொன்னவள் இருவருக்கும் பரிமாறினாள். அன்று ராமநாதனின் மனைவி முகம் பிரகாசமாக இருந்ததை பார்த்தார்.

ராமநாதனிடம் எப்பொழுதும் ஒரு நல்ல பழக்கம் உண்டு. மாலை வீடு வந்தவுடன் அவரது வீட்டை ஒட்டினாற்போல் ஒரு அலுவலகம் வைத்திருப்பார். அங்கு வங்கியில் கல்விக்கடன், வீட்டு கடன் வாங்க வருபவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவி செய்வார். எப்படி விண்ணப்பம் அனுப்ப வேண்டும், அதனுடன் என்ன என்னவெல்லாம் இணைக்கவேண்டும் என்றும் விவரமாக சொல்வார். இதனால் மாலை நிறைய பேர் வந்து இவரிடம் விளக்கம் கேட்டு போவார்கள். .

மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் தன்னிடம் விவரம் கேட்டு வருபவர்களுக்கு ஒரு காப்பி கூட கொடுக்க முடியாமல் அனுப்பி இருக்கிறார்.. ஆனால் இந்த பெண் ரமா வந்த பின்னால், இரவு எட்டு மணி வரைக்கும் கூட அக்கம் பக்கத்து ஆட்கள் வங்கி பற்றிய சந்தேகங்களை கேட்டு போகிறார்கள். ராமநாதனும் இரவு உணவு செய்ய மனைவிக்கு உதவவேண்டுமே என்ற பதை பதைப்பு இல்லாமல் நிம்மதியாய் அவர் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். மேலும் வந்தவர்களுக்கு சுடச்சுட காப்பி கொடுத்து மரியாதை செலுத்துவதில் ரமா கெட்டிக்காரியாய் இருந்தாள். நல்ல சூட்டிகையான் வேலைக்காரி உங்களுக்கு கிடைத்திருக்கிறாள் என்று பாராட்டியும் செல்வார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடியிருந்தது. ராமநாதனுக்கு திடீரென பதவி உயர்வுடன் வேறொரு ஊருக்கு மாற்றல் ஆகிவிட்ட்து. அவர் ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் இந்த பதவி உயர்வை விட மனமில்லை. இது இவரது சொந்த வீடுதான் என்றாலும் மாற்றல் கிடைத்த ஊருக்கு சென்று பணி செய்து விட்டு வந்தால் “ஓய்வு ஊதியம்” கொஞ்சம் அதிகமாக கிடைக்கும். மனதுக்குள் கணக்கு போட்ட அவர் சட்டென ரமாவை நினைத்து அட்டா இந்த பெண்ணுக்கு ஒரு வழி செய்யாமல் போகிறோமே, கவலையில் ஆழ்ந்து விட்டார்..

மாலை ரமாவை அழைத்து மெதுவாக மாற்றல் கிடைத்த விஷயத்தை சொன்னார். ரமா சற்று யோசித்து, “பரவாயில்லை, சார்..எனக்கு நீங்கள் ஒரு உதவி மட்டும் செய்து கொடுத்தால் போதும்” என்றாள்.. “சொல்லும்மா..” என்றார் ராமநாதன்.

“சார் உங்க வீடு நீங்க போன பின்னால வாடகைக்குத்தானே விடுவீங்க, பக்கத்துல இருக்கற உங்க ஆபிஸ் ரூமை எனக்கு கொடுக்கமுடியுமா சார், நான் பத்திரமா பார்த்துக்குவேன், அதுமட்டுமில்லாம உங்க வீட்டையும் பாத்துக்குவேன்”.

ராமநாதனுக்கு ஆச்சர்யம், “இந்த ரூம் மட்டும் எதுக்கும்மா கேட்குறே? உங்கம்மாவையும், தம்பியையும் கூட்டி வந்து வச்சுக்கறயா?”

“இல்லே சார்..அவசரமாய் மறுத்தவள் சார்.. நான் இங்க ‘பாங்க் விஷயமா’ சந்தேகம் கேட்டு வந்தாங்கன்னாலும், கடன் விஷயமா வந்தாங்கன்னாலும் அவங்களுக்கு ஆலோசனை சொல்றதுக்கும், அவங்களுக்கு மேற்கொண்டு யாரை பாக்கணும்னு யோசனை சொல்றதுக்கும் உதவியா இருக்கும்..” சொன்னவளை வியப்புடன் பார்த்து “உனக்கு இதெல்லாம் தெரியுமா?”

“சார் ஒரு வருசமா நீங்க வர்றவங்களுக்கு சொல்ற யோசனைகளை கேட்டு பழகிட்டேன் சார், அது போக ‘வீட்டு கடன்’, ‘கல்வி கடன்’, ‘வாகனம் வாங்க’ என்ன என்ன தேவை, அதை எப்படி வாங்கறது அப்படீங்கறதையும், நீங்க மத்தவங்க கிட்டே சொல்றதை கேட்டு கத்துகிட்டேன் சார்.

அது மாதிரி இரண்டு பேருக்கு கல்விக்கடன், வீடு கட்ட கடனும் ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கேன் சார், அவங்க இப்ப என்னோட ‘கஸ்டமர்’ ஆயிட்டாங்க, அவங்களுக்கு தெரிஞ்சவங்களையும் என்னைய பாக்கறதுக்கு கூட்டிகிட்டு வர்றாங்க. இதெல்லாம் எங்க குடிசையில வச்சு செய்ய முடியறதில்லை சார்..” சொல்லிக்கொண்டே போன பெண்ணை பார்த்து வியப்பாய் பார்த்து நின்றார் ராமநாதன்..

ஒரே வாரத்தில் அந்த அறையின் முன்னால் “ரமா கன்சல்டன்சி” என்று ஒரு அலுவலகத்தையும் அவர் கையால் திறந்து வைத்து, “உனக்கு என்ன உதவி வேனும்னாலும் கேளு” என்று தன் கைபேசி எண்ணையும் கொடுத்துவிட்டு கிளம்பினார்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *