கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,300 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேரி, இத்துப்போன பாயில் சுருண்டு படுத்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அருகே நான்கு பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் ஒட்டிக் கொண்டு சுருண்டு படுத்திருந்தார்கள். அவளது கணவன் அந்தோனி மல்லாந்து படுத்துக் கிடக்கின்றான். உலகை மறந்த உறக்கம்! அதிலாவது ஒரு நிம்மதி கிடைக்கும் என்ற முயற்சியின் சித்திப்பு ‘பாவம் வெறு வயத்தோட…..’ அவள் நெடுமூச்சு விடுகிறாள்.

குப்பி விளக்கு ஒரு மூலையில் நூர்ந்து போய் கிடக்கின்றது. பற்றவைத்துச் சிறிது நேரத்திலேயே மண்ணெண்ணையின்றி நூர்ந்து விட்டது. அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் அடுத்தடுத்து அமைந்திருந்த அநேகமான குடிசைகளில் குப்பி விளக்குகள் அணைந்து போய்த் தான் கிடந்தன.

கடற்காற்றின் குளிர்மையைத் தாங்க முடியாமல் போர்வையை இழுத்து மூட முயன்றாள் மேரி. கால்களை மூட இழுத்தால் தலை தெரிகிறது. தலையை மூட நினைத்தால் கால் தெரிகிறது. பலதடவைகள் போர்வைச் சீலைக்கும் அவளுக்குமிடையே போராட்டம்.

‘ம் ங்….அம்மா’ பக்கத்தில் அணைந்து கிடந்த குழந்தை முனகுகிறது. தாய்ப் பறவையின் இறகுக்குள் குளிர்காய விளையும் குஞ்சுப் பறவையின் பரிதவிப்பில் இன்னும் அவளை நெருக்கி அணைக்கிறது.

குழந்தையை இழுத்து அணைத்துப் போர்வையின் பெரும் பகுதியை போர்த்தப் பயன் படுத்தினாள் மேரி. இனித் தூங்கினால் போல் தான். இந்தக் குளிர் போதாது என்று ஈரம் சுவடு தட்டுகிறது. அந்த நதிமூலம் அருட்சியுற்ற குழந்தை மறுபடியும் சிணுங்கி அழ ஆரம்பித்தது. இவள் துணியை மாற்றி குழந்தையைத் தேற்றி மறுபடியும் உறங்க வைக்க முயற்சிக்கிறாள். குழந்தை உறங்குவதாக இல்லை. அருகே எடுத்து தன்மார்போடு அணைத்தபடி பால் கொடுக்க ஆரம்பித்தாள். பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை, பால் சுரக்காமல் போனதால் தாயின் மார்பைக் கோபத்தால் கடிக்க, மேரி வேதனை தாங்க முடியாமல் அவளைப் பிடித்துத் தள்ளினாள். குழந்தை இப்போது மேலும் வீறிட்டழவே அந்தோனி அருட்சியுற்று, ‘பாலைக் குடன் மேரி’ என்றான். இவள் பதில் சொல்ல முடியாமல் மறுபடியும் குழந்தையை அணைத்துத் தேற்றினாள்.

குழந்தை உறங்கியதும் படுத்து விட்டு எழுந்து தூணோடு சாய்ந்தபடி முழங்காலில் முகம் புதைக்கிறாள் மேரி. வெளியே குடாக் கடல் சோளகக் காற்றில் அலையெறிந்து கொண்டிருந்தது. அவளது வெறு வயிறு புகைச்சல் எடுக்கிறது. காலையில் சாப்பிட்ட பழங் கஞ்சிக்குப் பிறகு எதுவும் உண்ணவில்லை. வயிறு எவ்வளவு நேரம் தான் சொல்லுக் கேட்கும்?

தலையைக் கவிழ்த்தபடி சிறிது நேரம் இருப்பதும், பின்பு தலையை நிமிர்த்தி குடிசைக்குள் குறண்டிக் கிடக்கும் குழந்தைகளைப் பார்ப்பதுமாக நெடுமூச்செறிந்தாள் மேரி. பிள்ளைகளைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் நிலவு வெளிச்சம் லேசாகத் தடவிய இருளில் அவர்களது வயிறுகள் அவள் கண்களை உறுத்தின. இரவுவெறும் தேங்காய்ச் சொட்டும், புழுக்கொடியலும் கொறித்துவிட்டு, அரைச் சீனியுடன் பருகிய தேநீர் தான் அவர்களுக்கு ஆகாரம். அந்தோனியும், மேரியும் வெறும் சாயத் தண்ணியும் புழுக்கொடியலும் தான். அதுவும் கால்வயிறு கூட நிரம்பாத அளவுக்கு!

மீண்டும் கொட்டாவி விட்டு விட்டு முழங்காலில் முகம் புதைக்கிறாள் மேரி. அவள் பசி மயக்கத்தில் பாதிவிழி உறக்கத்தில் சாய்ந்திருந்த வேளையில் மீண்டும் ‘அம்மா’ என்ற அழைப்போடு சுரண்டும் பிஞ்சுக் கரங்கள் இப்போது மூத்தவன் எழுந்து அவளருகே வந்து கையால் இறுக்கி அழுத்தியபடி வயிற்றைக் காட்டி ‘பசிக்குதம்மா’ என்று சிணுங்குகிறான்.

மேரியின் பெற்ற மனது துடித்து அழுகிறது. அவளுக்கே பசி வயிற்றைக் கிள்ளும் போது, பாவம் அந்தப் பச்சைப் பாலகனால் பட்டினியைத் தாங்கிக் கொள்ள முடியுமா என்ன? ஆனால் இப்போது அவள் என்ன செய்வது?

‘போடா, போய்ப் படு….. சொம்பிலை தண்ணி கிடக்கு. குடிச்சிட்டுப் போய்ப் படு’ ஆற்றாமை சினமாக வெடிக்கிறது.

அவன் அசைவதாக இல்லை. வயிற்றைப் பிசைந்தபடி நிற்கும் அவனைச் சீற்றத்தோடு பார்த்தாள். அவனோ அசையவில்லை. ‘போய்ப் படன்ரா…..’

அவன் அவளது சேலைத் தலைப்பைப் பற்றியபடி மீண்டும் பசிக்குதம்மா என்று சிணுங்கினான்.

‘சனியன், பசி பசி எண்டு உயிரை வாங்கிறாய்? அப்படியென்ன உயிர் போனாத்தான் போகட்டுமே. ஊரெல்லாம் ஷெல்லும், குண்டும் விழுகிறது. இந்தக் குடிசையிலை ஒருநாளும் வந்து விழாதாம் இப்படிப் பசியில சாகிறதை விட ஓரேயடியாச் செத்துத் துலைக்கலாம்’ என்று விரக்தியோடு எண்ணியபடி அவனைப் பிடிச்சு அப்பால் தள்ளினாள். இப்போது அவன் வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

வெறி கொண்டவள்வேனது காதைப் பிடித்துத் திருகி முதுகிலே நாலைந்து அறைவைத்தாள் மேரி. ‘சனியன் உனக்குத்தான் கண்டறியாத பசி. மற்றதுகள் பேசாமல் கிடக்குதுகள்’

இந்தச் சந்தடியில் அருண்ட அந்தோனி, ஏன்ரி பிள்ளையளைத் திட்டுறாய். பசிகிடக்கக் கூடிய வயசே அதுகளுக்கு?’ என்று ஏசினான்.

உழைச்சுத் தாற திறத்தில்’ அவளையும் மீறி அந்த வார்த்தைகள் வெடித்து விட்டன. அவன் ஒரு கணம் உசும்பிப் போனான். அவளா பேசியது?’

அடுத்த கணமே தனது வார்த்தைகளின் உஷ்ணத்தை உணர்ந்து கொண்டாள் மேரி. அப்புறம் அவளும் அவனும் எதுவுமே கொள்ளவில்லை.

இப்போது கடைசிக் குழந்தை மறுபடியும் கத்த ஆரம்பித்தது. ‘சனியன் இதுக்கு எப்பவும் அடங்காது’ என்று கூறியபடி அவளை வெடுக்கென்று தூக்கினாள் மேரி. ‘சனியன். எப்ப பார்த்தாலும் வாயை அதிலே வைச்சுக்கிட்டே இருக்கணும். நான் என்ன பாலும் மீனுமா திங்கிறன். பால் சுரக்கிறத்துக்கு.’ என்றபடி பாலூட்டினாள். குழந்தைக்குப் பால் இருக்கவில்லை. குழந்தை பசியினாலும், பால் கிடைக்காத ஏமாற்றத்தினாலும் ‘ஓ’ என்று அழ ஆரம்பித்தது.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்தோனிக்கு நெஞ்சை அடைத்தது. வறுமை இவ்வளவு கொடூரமானதா! இப்படி ஒரு வறுமையை அவன் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லையே!

அவனுக்கு மட்டுமா இந்த வறுமை? ஊரோடு ஒத்தபடி எல்லா மீனவக் குடும்பங்களுமே நாதியற்று…..

பாதுகாப்பு வலயச் சட்டம் வருமுன்னர் அவர்களுக்கு என்றுமே உணவுக்குப் பஞ்சம் வந்ததில்லையே. கடல் தாயின் மடியில் கிடைக்கும் மீன்கள் என்றுமே பொலிவாகி அவர்கள் வாழ்க்கைச் சக்கரத்தைத் தடையின்றி உருள வழிவகுத்து, ஓ….. அப்போதிருந்த குதூகலமும், மகிழ்ச்சியும், இன்பப் பெருக்கும்!

ஓ எல்லாமே கானல் நீராய், வெறும் பகற் கனவாய் போய், வள்ளங்கள் எல்லாம் கரையில் கவிழ்க்கப் பட்டு, கடற் கரையில் வசிப்பதே பயங்கரம் என்ற நிலை உருவாகி…

அந்தோனி மறுபடியும் உறங்கிப் போகிறான். மேரிக்கு நேரம் போகப் போக பசி வயிற்றைக் கிள்ளுகிறதே தவிர தூக்கம் வருவதாயில்லை. அவள் கணவனைப் பார்க்கிறாள். அவன் ஏதோ அடிபட்ட மரம்போல் படுத்திருக்கிறான். இவளது மனதிலே இரவுத் தாய் ஏற்படுத்தும் மென்மையான உணர்வலைகள். சீ…. நான் அவரை அப்படிப் பேசி இருக்கக் கூடாது. செய்த குற்றம் மனதை உறுத்துகிறது.

மயிர் சிலிர்க்கும் குளிர் நெஞ்சத்தில் சூடு. எண்ண அலைகளின் வெளிப்பாடாய் பெருமூச்சுகள். உள்ளூர தணல் தட்டப் பட்ட ஆசை. கணவனருகே சென்ற மேரி, ‘உங்களைத்தான், நித்திரையே?’ என்றபடி அருகே படுக்கிறாள். வயிற்றுப் பசி தெரியாமல் அதிலாவது ஒரு நிம்மதியை நாடி, அதிலே திருப்தியும் கண்டு, அந்த அயர்விலே தூக்கமும் கண்களைத் தழுவி…….

குளிர் இன்னும் தணியவில்லை. கடற் பகுதியிலிருந்து வெடிக்கும் பீரங்கி முழக்கம் அதிகாலைத் தூக்கத்தை விரட்டி விட்டது. இரவு நெருங்கிப் படுத்துக் கிடந்த அந்தோனி இப்போது மட்டும் சற்றுத் தள்ளிச் சுருண்டு போய்ப் படுத்துக் கிடக்கிறான்.

இன்னும் கொஞ்சம் தூங்கினால்?… மேரி அந்தோனியோடு நெருங்கிப் படுத்துக் கொண்டாள். அவளது கைகள் அவனது மார்புக்குப் பாரமாகியது.

இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, உலகின் கஷ்டங்களை எல்லாம் மறந்து கருத்தொருமித்துச் சுகம் காணும் அந்தப் பொழுதுகள் போல் எப்பொழுதுமே இருந்துவிட்டால்?

மேரி அந்த இன்ப உலகத்திலிருந்து விடுபட மனமில்லாமல் வேண்டுமென்றே கண்களை மூடிக் கொண்டு சுகம் கண்டாள். புலர்கின்ற பொழுதின் ஒளித் தடங்கள் பாதி மூடிய அவள் கண்களுக்கூடாகத் தெரிகிறது. கட லுக்குப் தரித்திர வாழ்வின் போராட்டங்கள் அச்சுறுத்த, கணவன் போகவேண்டுமே என்ற எண்ணம் முளைவிட எழுந்து அந்தோனியையும் எழுப்பினாள். அதிகாலைப் பறவைகள் கீதம் இசைத்துக் கொண்டிருந்தன.

இப்போதெல்லாம் அந்த ஊர் மக்கள் வீச்சு வலைக்குத் தான் போவார்கள். இடுப்புக்குக் குறைவான தண்ணீரில் நின்று ஒரு வீச்சு. இப்படி நாலைந்து இடங்களில் நின்று வீசுவார்கள். அதற்கிடையில் நேவிக்காரன் வந்துவிடுவானோ என்ற பயம். ஒரு நாளைக்கு நாலு மீனும் கிடைக்கும். நாலஞ்சு றாத்தலும் கிடைக்கும். அது அதிஷ்டத்தைப் பொறுத்தது. அந்தத் தலையெழுத்தைப் பொறுத்துத் தான் அடுப்படியில் எத்தனை முறை அடுப்புப் புகையும் என்று சொல்ல முடியும்.

அந்தோனி வீச்சு வலையோடு இடுப்பளவு நீருக்குள் வந்து காரலும், திரளியும், சூடையும் அகப்படுமா என்று நீண்ட நேரம் நின்று கொக்குத் தவம் செய்து வீசினான். அவனது பறியில் பல வீச்சுக்களின் பின்னர் கூட மீன் அதிகம் தேறவில்லை. எல்லோருமே கரையில் நின்றால் வீச்சு வலைக்கு மீன் அகப்படுமா என்ன?

கடந்து போன காலங்களின் நினைப்பில் அவனது மனது ஏக்கப் பெருமூச்சு விட்டது. கரவலை இழுத்து கும்பல் கும்பலாக மீன் அள்ளியது, ஆழ்கடல் சென்று அறக்குளாவும், சுறாவும், பாரையும், வாளையுமாக அந்தர் கணக்கில் பிடித்து விற்றது, ஓ…. அது எவ்வளவு அமைதியான காலம்.

அயராத உழைப்பு. உழைப்புக்கேற்ற வரும்படி, வீட்டிலே எல்லோருக்கும் வயிறார உணவு, அசதி போக்கக் கள்ளு… பொழுது போக்கப் படம், பட்டணம்…

நாலு குழந்தைகளைப் பெற்று, குறைவின்றி வளர்த்து, மனைவியின் கழுத்திலும், காதிலும், கையிலும் மின்னவைத்து.

பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் மீனவர்களின் தொழிலுக்கே உலை வைத்து, போதிய நிவாரணமும் இல்லாமல், கையிலிருப்பது படிப்படியாகக் கரைந்துபோய், அன்றாட உணவுக்கே தாளமிட வேண்டிய நிலை. எல்லாமே ஒரு வருட இடை வெளிக்குள் நிஜ தரிசனமாகிவிட்ட பின்னர்…..

அந்தோனி நெடுமூச்செறிந்தான்.

இடுப்பிலே கட்டியிருந்த பறியினுள் பாரம் அதிகமில்லை. ‘இதிலே கொஞ்சம் கறிக்கும் வைத்துவிட்டு மீதியை விற்று அரிசி வாங்க வேண்டும். என்று எண்ணியபடி கரைக்கு வந்தான். அந்தோனி கரையிலே அன்ரனின் புன்னகையான வரவேற்பு.

‘அந்தோனி, ஒரு மகிழ்ச்சியான செய்தி. இனிமேல் மூன்று மைலுக்குள்ளே போய் மீன் பிடிக்கலாமாம். றேடியோவில் சொன்னவை’ அன்ரனின் வார்த்தைகள் இவனுக்குத் தேனாக இனித்தன.

‘அப்ப இனி படகில வீச்சு வலைக்கும் போகலாம். கரவலையும் போடலாம். மாதா கண் திறந்திருக்கிறா. இனியெண்டாலும் பிள்ளையளுக்கு வயிறு நிறையச் சோறு போடலாம்’

வீட்டில் செய்தியறிந்த மேரியும் மிகவும் பூரித்தப் போனாள். ‘கர்த்தர் கண் திறந்திட்டார்.’

அன்று மாலையே மீன்பிடி மறுபடியும் சுறுசுறுப்படைந்தது. அந்தக் கிராமமே மகிழ்வலையில் மிதந்து கொண்டிருந்தது. கரை தட்டி நின்ற கட்டுமரங்களும், வள்ளங்களும் கடல் தாய் மடிமீது பவனி வந்தன. அறுந்து போய்க் கிடந்த வலைகளெல்லாம் செப்பனிடப் பட்டன. வான்களும், மோட்டார் சயிக்கில்களும், சயிக்கிள்களும் கடற்கரையில் அதிகாலை வேளைகளில் பிரசன்னமாகின.

ஏலம் கூறல், கருவாடு போடல், கரவலை இழுத்தல் இப்படித் தொழிலுக்குக் குறைவில்லை. எல்லாக் குடிசைகளிலும் மூன்று நேரமும் அடுப்புப் புகைந்தது.

மேரி பழையபடி கறி விற்கப் போனாள். குழந்தைகள் குதூகலமாக ஓடி ஆடி விளையாடின. சின்னவளுக்கும் மார்பு நிறைந்த பால் கிடைத்தது. மீன் கறியும், கணவாய்க் கறியுமாக குடிசைகள் கமகமத்தன.

எங்குமே குதூகலம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் அந்தோனியார் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தினமும் அதிகாலையிலேயே கரையேறும் வள்ளங்களை எதிர்கொள்ளக் குடிசை வாழ் பெண்களும். சிறார்களும் கூடினர். மீன் தின்னிப் பறவைகளும் வானத்தை வட்டமிட ஆரம்பித்தன.

வழக்கம் போல இரவு அந்தோனியும் கரவலைக்குப் போ விட்ட பின்னர் குடிசையில் மேரி குழந்தைகளோடு படுத்திருந்தாள். ஏனோ அப்பொழுது அந்தோனியின் அண்மை அவளுக்குத் தேவைப் படுவதாக உணர்ந்தாள்.

‘அம்மா, என்னை டிறில் விளையாட்டிலை சேர்த்திருக்கினம். நீலக் காற்சட்டையும், வெள்ளைச் சேட்டு ஒண்டும் தைக்க வேணும்’ மூத்தவன் அம்மா விடம் கேட்டான்.

‘காலமை அப்பா வந்த பிறகு வாங்கித்தாறன் ராசா’

கடல் அலைகள் சோளகக் காற்றில் பேரிரைச்சலிட்டன. ராணுவ முகாமொன்றிலிருந்து ஷெல் அடிக்கும் சத்தம் விட்டு விட்டுக் கேட்டது.

மேரி உறங்கிப் போனாள்.

அதிகாலைப் பறவைகள் எழுப்பிய நாதம் விடிவை அறிவிக்கக் கண்விழித்த மேரி, கடற்கரைக்கு விரைந்தாள்.

நன்றாக விடிந்து விட்டது.

கட்டு மரங்கள் சில கரையேறிக் கொண்டிருந்தன.

அந்தோனி சென்ற வள்ளம் இன்னும் வரவில்லை. அவள் ஏக்கத்தோடு கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். நீர்க் காக்கைகளும், நாரைகளும், கொக்குகளும் ஒலி எழுப்பியபடி பறந்து கொண்டிருந்தன. அவை எழுப்பிய ஒலி. கடலலையின் பேரிரைச்சலையும் மீறிக் கொண்டு கேட்டது.

பரந்து கிடக்கும் நீலக் கடலில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இன்னும் சில வள்ளங்கள் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றில் தான் மேரியின் கணவன் அந்தோனியும் இருப்பான். ஒவ்வொரு வள்ளமும் கரையை நெருங்க நெருங்க அதில் தான் அவன் இருப்பதாக எண்ணிக் கொள்வாள் மேரி. அந்த நம்பிக்கையில் சுள் என்று எறிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வள்ளங்கள் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று சலசலப்பு.

வள்ளத்தில் வந்த சிலர் கதறியழுதபடி வந்து கொண்டிருந்தார்கள். ‘அறுவான்கள் மண்டை தீவுக்குக் கிட்ட சுட்டுப் பொசுக்கிப் போட்டாங்கள். கறுப்புச் சட்டையோட வந்தவங்களாம். நிராயுதபாணியான எங்கட மீனவர் முப்பது முப்பத்தைஞ்சு பேரைச் சரிக்கட்டிப் போட்டுப் போட்டாங்கள்’

‘ஐயோ ஐயோ மாதாவே யேசுவே…’ எங்குமே மரண ஓலமாய்…

இளைஞர்கள் பிரேதங்களைக் கரை சேர்த்தார்கள். புன்னகை மாறாத முகத்துடன் அந்தோனியின் குத்திக் குதறப் பட்ட உடலைக் கண்டதும் மேரி, இந்த உலகமே அதிரும்படி அலறினாள்.

‘ஐயோ, என்ர ராசாவே, என்னையும் பிள்ளையளையும் தவிக்கவிட்டுட்டுப் போட்டியளே’

மேரியைப் போல வில்லி, மார்க்கிரட், அற்புதம், பூரணம். அன்னமேரி, இதயராணி, இப்படிப் பலர் கணவனை இழந்து, பிள்ளையை இழந்து, சகோதரனை இழந்து, தந்தையை இழந்து…

‘உவங்களுக்குச் சரியான பாடம் படிப்பிக்காமல் விடமாட்டம்’ ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞன் கறுவிக் கொண்டிருந்தான்.

– இதழ் 201 – ஆகஸ்ட் 1986, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *