பொன் மனமுள்ள பூவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 1,745 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றுதான் ஸுஜாதை தனது கோரிக்கையை நிறை வேற்றிக் கொடுத்த – அவளது குறையைத் தீர்த்துவைத்த- குலதெய்வத்திற்குப் பால் நிவேதனம் செய்ய விருந்த பொன்னாள். 

அன்றைய பாலுக்காகவும், ருசிக்காகவும், தூய்மைக் காகவுமென்று ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அருகம்புற் களும், அருவித் தண்ணீரும், சுத்தமான அன்னமும் உண வாகக் கொடுத்துப் பேணி வந்தாள் ஆறு பசுக்களை. 

அவள் வைத்திருந்த நியமப்படி அன்றுடன் முப்பது நாட்கள் முடிந்துவிட்டன. ஸுஜாதையின் மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் அளவில்லை! நித்திய தரித்திரன் புதையலைக் கண்டெடுத்தது போன்ற பேரானந்தப் பெருக்கோடு, பக்தி யும் சிரத்தையுமாக அன்று பிரார்த்தனை செலுத்துவதற்காக, அதிகாலையில் எழுந்து மங்கல நீராடி, மடியுடுத்திப் பசுக்களை யும் நீராட்டி, பூஜித்து, அதன்பிறகு கன்றுகளை அவிழ்த்து விட்டாள்! 

தாயிடம் பாலருந்தும் ஆவலுடன் கன்றுகள் துள்ளி யோடும் காட்சியைக் கண்டு மகிழ்ந்து நின்றாள். அவள் மனம் சந்தோஷத்தால் துள்ளியது ! சின்னஞ் சிறு கன்றுகள்! பாலூட்ட அவை படும் அவசரமும், முட்டிமுட்டி அருந்தும் ஆவலும் பார்த்துப் பரவசமுற்றவளாக, ‘என் அருமைக் குழந்தையைப் போல இவைகளும் குழந்தைதானே ! கோமாதாக்களே ஏனிப்படி என்னை முறைத்துப் பார்க் கிறீர்கள்? உங்கள் கன்றுகளுக்கு வயிறு நிறைய அமுதூட்டும் வரையில் நான் காத்திருப்பேன் ! எங்கே அவற்றை இழுத்துக் கட்டி விட்டு நான் பாலைக் கரந்து விடுவேனோ என்று அஞ்சா தீர்கள்’ என்று வாய்விட்டே கூறினாள் ஸுஜாதை! 

பசுக்களை அருமையோடு தடவிக்கொடுத்தாள். கன்று களின் வயிறுநிரம்பி அவைகள் தாமாக விலகிய பிறகு செம்பை எடுத்துக் கொண்டு வந்து பாலைக் கரந்து பக்குவ மாகக் காய்ச்சி, வாசனைக் கலவைகளைக் கூட்டி பரிமள முண்டாக்கி, பொற்கிண்ணத்தில் வார்த்து வைத்தாள். பிறகு தனது குழந்தைக்கு நீராட்டி அலங்காரம் செய்து குழந்தை யையும், பாற்கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு குலதெய் வத்தின் கோயிலுக்குப் புறப்படும் உத்தேசத்துடன் அடி யெடுத்து வைக்கும் போது அவளுடைய இடது கண்ணும், குழந்தையை அணைத்திருந்த இடது தோளும் துடித்தன ! 

ஸுஜாதைக்கு மெய் சிலிர்த்தது. “பகவானே, என்ன கட்டளை யிடுகிறீர்? இன்னும் பல சௌகரியங்களை இந்த எளியவளுக்குக் கொடுத்தருளும்! யாவும் உமது கருணை!” என்று சற்று நின்று பார்த்து விட்டுப் புறப்பாட்டாள் ! பாதி தூரமும் வந்துவிட்டாள். அப்போது கோயிலைத் தூய்மைப் படுத்தி கோலமிட்டு வர அனுப்பியிருந்த அவளது பணிப் பெண்ணான ராதை என்பவள் எதிரில் வந்து கொண்டிருந்தவள் ஸுஜாதையைக் கண்டதும் ஓட்டமும் நடையுமாக அருகில்வந்து, “தாயே இங்கே வந்து பாருங்கள்-ஒரு அதிசயம்!” என்றாள் கண்கள் ஆச்சரியத்தால் மலர. 

தாதியின் படபடப்பையும், பரவசத்தையும் கண்டு ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டு, “என்னடி இது? கோயிலுக்குப் போகிறபோது, குறுக்கேவந்து, ‘இங்கே வா, அங்கே வா, என்கிறாயே’ புத்தியைப் பார்! போ, நட…” என்று கோயிலுக்குப் புறப்பட்ட ஸுஜாதையிடம் “வந்து பாருங்களேன், கோவிலிலுள்ள மூர்த்தியை விட சக்தி படைத்த தெய்வாம்சமாக ஒரு தேவன் இதோ இந்த மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்! என்ன அருளொளி வீசும் முகம், என்ன தேஜோமய வடிவம் தெரியுமா?” என்று கூறி பக்தி மேலீட்டால் அந்தத் திக்கை நோக்கிக் கைகூப்பி வணங்கும் ராதையைப் பார்த்தாள் ஸுஜாதை. 

அவள் மனத்தில் சிரத்தை பிறந்தது; ராதை காட்டிய திசையை நோக்கி நடந்தாள். பத்தடி வந்ததுமே, சற்று தூரத்திலிருந்த அரசமரத்தடியில் பதுமாசனமிட்டு அமர்ந்திருந்த திவ்விய தவ வடிவைக் கண்டு பிரமித்து நின்றாள். பிறகு மெல்ல நடந்து அருகில் சென்றாள். ஞான ஒளி வீசும் போதி நாதனைக் கண்டு மெய்மறந்தவளாக, வணங்கி எழுந்தாள். “பகவானே இதென்ன விந்தை, மானிட உருவிலே எனக்குக் குலதெய்வம் எதிர்படுகிறதா!…” 

இன்னும் சற்று அருகில் வந்து கவனித்துப் பார்த்தாள். அவளுக்கு உண்மை புலனாயிற்று! ஆம்; மானிடப் பிறவியிலே மகான் ஆகியிருக்கும் தவப்பெரியார்! தவத்தீயாலும் ஆகாரமில்லாததாலும் தேகம் சுட்கித்துப் போயிருக்கிறது! “பகவானே, இதோ இருக்கிறது அமிர்தம்” என்ற சொற்களைப் பணிவுடனும் பக்தியுடனும் வேண்டியது அவள் வாய்! 

நினைவழிந்து, உடல் நடுங்க, கண்கள் நீரைச் சிந்த பிரம்மமாக நின்றாள் ஸுஜாதை. எவ்வளவு நேரம் அப்படி நின்றாளோ அவளுக்கே தெரியாது! தியானத்தினிறுதியில் சாவகாசமாக மலர்ந்தன புத்த தேவனுடைய அருள் விழிகள். 

கண் விழித்த விழிப்பின் முன்பு, முதன் முதலாக அவருடைய ஞானதிருஷ்டியின் பார்வையில் அன்பே உரு வான தாய் போல எதிரில் நின்றாள் ஸுஜாதை. 

இடுப்பில் குழந்தை, கையில் அமுத கலசம், முகத்தில் பக்திப் பரவசம், ஆகிய மூவகைக் குளிர்மைகளுடன் தன் எதிரில் நிற்கும் அந்த ஸ்ரீதேவியைப் பிரசன்ன முகத்துடன் பார்த்தார் தேவன். 

ஸுஜாதை நினைவு பெற்றவளாக, பால் நிரம்பிய பொற் கிண்ணத்தை அவர் முன்பு வைத்து, பச்சிளங் குழவியையும் அவர் முன்பு கீழே கடத்தினாள். அவரை வலம் வந்து வணங்கினாள். கூப்பிய கைகளுடன் “தேவா, அடியவளால் தேவதா ஆராதனைக்கென்று சித்தப் படுத்தப்பட்ட இந்த அமிர்தத்தைத் தாங்கள் கிரகித்துக் கொண்டு என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என்று பணிவுடன் வேண்டினாள். 

போதிசத்துவனுக்கு அப்போது தான் தேகப்பிரக்ஞை வந்திருந்தது. உள்ளே முற்றிலும் பசையற்று விட்டதால் அவருடைய பிராணசக்தி, ஜீவாதாரத்திற்கு வழிதேடியது. ஓர் அபூர்வ திருப்தியுடன் வாய் திறவாமல், கிண்ணத்தைக் கையிலெடுத்து ஏந்தி மெல்ல அருந்தலானார். 

வயிறு நனைந்தது! நெஞ்சில் அருள் நிறைந்தது! பக வானுக்குப் பரிபூர்ணமான ஆன்மீக மலர்வு உண்டாயிற்று. புத்தம் புதிய தொரு தெய்வீக ப்ரக்ஞை உதித்து தன்முன் காண்பவை யாவும் கருணை நிரம்பிய ரூபங்களாகத் தென்படு வதை உணர்ந்தார் தேவன். 

பார்க்கப் பார்க்கத் தெவிட்டா திருந்த அந்த ஞான மூர்த்தியை நின்று பார்த்துக் கொண்டேயிருந்தாள் ஸுஜாதை. “அம்மா, அமுதளித்து என் உடலுக்கு உயிர் தந்தாய். ஊக்கமும் தந்தாய். நான் போதமடைந்தேன். தயாரூபிணியான நீ வேண்டுவது யாது?” என்று அன்றுகிக் கேட்டார் தேவன். 

ஸுஜாதை பேச ஆரம்பித்தாள். பணிவு நிரம்பிய குரலில், கூப்பிய கரங்களுடன், “தேவா, ஏழையின் மனது மிகச் சிறிது! வசந்தகாலத் தென்றலாக எனதில்லம் இன்று பரிமளித்துக் கொண்டிருக்கிறது! அதிகாலையிலெழுந்து கணவனைத் தொழுது, நீராடி, துளசிபூஜை செய்துவிட்டு, பிறகு அமுது தயாரித்து கணவனுக்கும், விருந்தினருக்கும் உணவு இட்டு உபசரித்து, கணவருக்குப் பணி புரிவதே போதிய பலன் தரும் என்று நம்புகிறேன். இதே பதிபக்தியும், தரும சிந்தனையும், இல்வாழ்வும் நீடித்து, என் பதியும், இதோவிருக்கும் குழந்தையும் நீடூழிவாழ அருள் புரியுங்கள்; அதுவே எனக்குப்போதும் ” என்றாள். 

போதி சத்துவனுடைய முகம் மலர்ந்தது. யோசனை யுடன்,”உத்தமியே உனது வாழ்க்கைக்கு சாந்தி தர இவை மட்டும் போதுமா உனக்கு? உன் விருப்பப்படியே உனது குழந்தை, இல்வாழ்வு சுகமாக இருக்கட்டும். சர்வசக்தி படைத்த தேவனல்லன் நான். நீ அமுதளித்து உயிர்ப் பித்த மானிடன்தான்! 

“நன்மனதுடையவளே ! கேள் ! ஒரு காலத்தில் நீ வர்ணிக்கும் இந்த சுக வாழ்வில் ஒன்றியிருந்தவன் நான். இப்போதோ இவை யாவும் ஸ்திரமற்றது, மாயும் தன்மை படைத்தது என்று உணர்ந்து சாசுவதமானது எது என்று ஆராய்ந்தறியவே இல்லம் துறந்து வந்தேன். மானிட குலத்தின் அஞ்ஞான விருத்திகளை அழித்து, அவர்களுடைய சோகங்களுக்கு நிவாரணம் காணவே பாடுபட முன் வந்து விட்டேன். எப்படியும் அதைக்கண்டு பிடித்தே தீருவது என்று வந்த என் உடல் இடைநடுவில் ஒதுங்கி உட்கார்ந்தது. இதோ நீ அன்பையும் அமுதையும் அளித்து எழுப்பிவிட்டாய்! இனி சோர்வடைய மாட்டேன்-” என்றார். 

“ஆண்டவனே, ஏதேதோ துதிசெய்கிறீர்கள். அடியாள் அவ்வளவுக்குத் தகுதி உடையவளல்லள். ஏதோ பெரியோர் கள் ஏற்படுத்தியிருக்கும் ஆசாரவழியில் கண் மூடித்தனமாக – அது நன்மையைத்தான் தரும் என்ற நம்பிக்கையில்- பின் பற்றி வருகிறேன் ! இப்படியே என் வாழ்நாள் நீடித்து, என் பதிக்கு முன்பாக, இப்பாலகன் பெரியவனானதும் இவன் கைத்தீயால் மேலுலகம் அடைய வேண்டிய பிரார்த்தனை ஒன்றுக்குத் தான் ஆசைப்படுகிறேன்! மற்றதொன்று மறி யேன் பகவானே !” என்று அடக்கமாகவும், உண்மை யுணர்ச்சியுடனும் மெல்ல மொழிந்தாள் ஸுஜாதை. 

போதிநாதன் உள்ளம் குளிர அவளை ஆசீர்வதித்து கபடமறியாதவளே, உனது ‘சிறிய அறிவு ‘ என்று நீ கூறும் இந்த மனப்பண்பில் பெரியோர்களும் அறியத் தக்க நீதி இருக்கிறது! அதாவது உள்ளதைக் கொண்டு நிறைவு பெறும் பொன் போன்ற மனம்! கடமையையும், நன்மை யையும் அளவாகத் தெரிந்து கொண்டு சிரத்தையுடன் அவற்றைக் கடைபிடித்து வரும் நீ அவற்றிற்குரிய நற்பயனை அடைவாய். போய்வா அம்மா ” என்று கூறிக் கையெடுத்து அவளையும், அவளது பாலகனையும் ஆசீர்வதித்தார். 

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *