புண்ணியமூர்த்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 7,768 
 
 

டானியல் ஜன்னல் வழியால் எட்டிப் பார்த்தான்.கீழே கதவு தட்டியவன் டானியலின் நண்பர்களில் ஒருத்தனான புண்ணியமூர்த்தியாக்தானிருக்கும் என்று டானியலுக்குத் தெரியும். ஆனாலும் கதவு தட்டுப் பட்டால் வெளியே எட்டிப் பார்க்காமல் அவனால் இருக்க முடியாது.

வெளியில் சரியான மழை பெய்துகொண்டிருந்தது.வீட்டுக்கு முன்னால்,ஜன்னலை ஒட்டியிருக்கும் மரத்தின் இலைகளிலிருந்து நீர்த்துளிகள் ஜன்னலிற் கொட்டின.

இந்த மழைத்துளிகளின் மெல்லிய,தாளம்,இரவில்,மிகவும் இதமாகவிருக்கும். இரவில்,மூன்று மணிக்குப் பின் இந்தத் தெருவில் கார்கள் போவது மிகவும் அருமை.அந்த மாதிரியான அமைதியான நேரத்தில்,ஜன்னலைத்தட்டும் நீர்த்துளிகளின் ராகம்,மனதுக்கு மிகவும் ரம்மியமாகவிருக்கும்.

டானியல் கதவைத் திறந்தான். புண்ணியமூர்த்தி,கதவினடியிற் போட்டிருந்த கார்ப்பெட் துண்டில் தனது,காலணிகளிலுள்ள நீரைத் துடைத்துக்கொண்டிருந்தான்.

‘என்ன இன்னும் சம்பந்தன் வரவில்லையா?’புண்ணியமூர்த்தி,டானியலைக் கேட்டபடி முன் ஹோலில் நுழைந்தான். அவன் கையில் ஒரு பிளாஸ்டிக் கைப்பை இருந்தது.அதனுள் இருந்து இரண்டு’கசட்டுகளை’ எடுத்து ஹோலின் நடுவிலுள்ள சின்ன மேசையில் வைத்தான்.

டானியல் அவற்றை எடுத்து ‘என்ன படம்?’ என்று பார்த்தான்.

‘குஸ்புவின் படம் கிடைக்கவில்லை’

புண்ணியமூர்த்தியின் குரலில் உற்சாகமில்லை.

வெளியில் ஒருகார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நண்பர்கள் இருவரும்,ஜன்னற் திரையை நீக்கிவிட்டு வெளியே பார்த்தார்கள். அவர்களின் நண்பன் சம்பந்தன் தனத காரைப் பார்க் பண்ணிக் கொண்டிருந்தான்.

‘நீயும் சம்பந்தனுடன் சேர்ந்துகொண்டு வந்திருக்கலாமே?’ என்று புண்ணியமூர்த்தியைக் கேட்க நினைத்தவன் கேட்கவில்லை.

டானியலும்,சம்பந்தனும் இலங்கையில் ஒன்றாய்ப் படித்தவர்கள்.லண்டனுக்கு வரும்போது ஒன்றாக வந்தவர்கள். கொழும்பில், லண்டனுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிக்காரனைத் தேடுவதிலிருந்து,கள்ள பாஸ்போர்ட் எடுப்பதிலிருந்து.லண்டனுக்கு வருவதற்காக எத்தனையோ நாடுகளின் தலைநகர்களில்; ஏறியிறங்கியவர்கள்.

டானியல் ஒரு றெஸ்ட்டோரன்டிலும், சம்பந்தன் ஒரு மளிகைக்கடையிலும் வேலை செய்கிறார்கள்.சம்பந்தன் வேலை செய்யும் கடைக்காரன்;,புண்ணியமூர்த்தியின் சொந்தக்காரன்.

புண்ணியமூர்த்தி தனது சொந்தக்காரனின் கடையில் வேலை செய்யாமல் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்கிறான்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டு,ஊர் வம்புகளைப்;பேசி,பார்த்த படங்கள்,பார்க்காத படங்கள்,இன்னும் வெளிவர விருக்கும் தமிழ்ப்படங்கள் பற்றி விமர்சனம் செய்து,தங்களுக்குத் தெரிந்த தெரியாத இளம் பெண்களைப் பற்றிப்பேசி விமர்சித்துப் பொழுது போக்குவார்கள்.

டானியல் கிறிஸ்தவன்ஆனாலும் சேர்ச்சுக்குப்போகாதவன்.சமயங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்பவன்.

‘உலகத்தில் இத்தனை சமயமிருந்தும்,அவை நீதி, நேர்மை, புண்ணிய பாவங்கள் பற்றிப் போதித்தாலும்,அந்தச் சமயங்களைப்; பின்பற்றும்; மனிதர்கள் ஏன் ஒருத்தொருக்கொருத்தர் மிருகமாக நடந்து கொள்கிறார்கள்’ என்று கேட்பவன்.

புண்ணியமூர்த்தி லண்டனில்,நிதியுழைப்பை முன்னெடுத்து முளைத்துக் கொண்டிருக்கும் பல இந்துக் தரப்பட்ட கோயில்களுக்கு அடிக்கடி போகிறவன். அங்கு அவன் போவது,கோயிலுக்க வரும் இளம் பெண்களைப்பார்ப்பதற்கு என்று எல்லோருக்கும் தெரியும.; ஒரு தங்கு தடையுpன்றி மூன்றாம் தரத்தில் மற்றவர்களைப் பற்றிப்;பேசுபவன். சந்தர்ப்பம் வந்தால் அவற்றைச் செய்யவும் தயங்காதவன்,கோயிலுக்கு அடிக்கடி போவான். சைவசமயக் கூட்டங்களுக்கும் அடிக்கடி தலைகாட்டுவான்.இலங்கையிலிருந்தபோது ஏதோ ஒரு இயக்கத்திலிருந்தவன்.

சம்பந்தன் ஒரு ஏழை. லண்டனில் விழுந்து விழுந்து உழைத்து, இலங்கையிலுள்ள இருதங்கைகளின் திருமணத்துக்குச் சீதனம் தேடுபவன்.

டானியல் அடுப்பில் கோழிக்குழம்பு செய்து கொண்டிருந்தான். அதன் சுவையான நெடி மற்றவர்களின் மூக்கைத் துளைத்தது.புண்ணியமூர்த்தி வழக்கமாகச் சில பியர்க்கானுகளுடன் வருவான் மழைகாரணமோ என்னவோ இன்று வெறும் கையுடன் வந்திருக்கிறான்.

கதவைத் தட்டிய சம்பந்தனுக்குக் கதவைத் திறந்தபின், கொதித்துக் கொண்டிருக்கும் கோழிக் குழம்பைப்பார்க்க அடுப்படிக்குச் சென்றான் டானியல்.

‘என்ன மழை?’ சம்பந்தன் தன்தலையைக் கோதிக்கொண்டான்.

‘எப்படி மச்சான் வேலை தேடுற விசயம் போகுது?’ புண்ணியமூர்த்தி, சம்பந்தனைப்பார்த்துக் கேட்டான். சம்பந்தன் ஒரு புதுவேலை தேடிக்கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும்.

‘வேலை என்ன வீதியில் கொட்டிக்கிடக்கா பொறுக்கி எடுக்க?’ புண்ணியமூர்த்தியின் முகத்தைப் பார்க்காமல் மறுமொழி சொன்னான் சம்பந்தன்.

புண்ணயமூர்த்தி அங்கு கிடந்த படக் கசட்டுகளைப் பார்த்தான். ‘குஸ்புவின் படம் கிடைக்கல்ல’ என்று சோகத்துடன் சொன்னவன் வாயிலிருந்து@ ‘மாங்காய்,மாங்காய்,இரண்டு மாங்காய்,மார்க்கட்டுக்குப்போகாத மாங்காய்’ என்ற தரம் கெட்ட சினிமாப்பாட்டு அல்லோல கலலோலப் பட்டது.

சம்பந்தன் ஒன்றும் சொல்லாமல்,டெலிவிஷனைப்போட்டான். பொஸ்னியாவிற் தொடரும் சண்டைபற்றி ஒரு வெள்ளைக்கார றிப்போர்ட்டர் முழங்கிக் கொண்டிருந்தார்.

‘வேசை மக்கள்.பொஸ்னியாவில அனியாயமாக முஸ்லிம்களைச் சாக்காட்டுறான்கள’ புண்ணிய மூர்த்தி முணுமுணுத்தான்.

‘நாங்களும்தான்,ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்திலவிருந்து கலைச்சுப்போட்டம்’ சம்பந்தன் புண்ணிமூர்த்தியின் முகத்தை நேரே பார்த்துச் சொன்னான்.

அவனுக்கு இலங்கையில் உண்டாக்கப்பட்ட எந்தத் தமிழ் இயக்கத்தையும் பிடிக்காது.

புண்ணியமூர்த்தி பதில் பேசவில்லை. இலங்கையில் அவன் சார்ந்திருந்த இயக்கம்தான் அதைச் செய்தது என்று அவனுக்குத் தெரியும்

டானியல் தான் கடையில் வாங்கி வைத்திருந்த வடைகளைக் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்தான்அதை அங்கு வைக்கும்போது,அதை வாங்கியபோது,அந்தக் கடையில் வேலைக்கு நின்றிருந்த பெண்ணின் முகம் ஞாபகம் வந்தது.

இப்போதுதான்,இலங்கையை விட்டு வெளியேறி லண்டனுக்கு வந்த பெண்ணாகவிருக்கவேண்டும். பர பரவென்று அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அவள் பார்வை,எல்லோரையும் சந்தேகமாகப் பார்ப்பதுபோலிருந்தது.

டானியல்,நேற்றுத்தான் முதற்தரம் அவளைக்கண்டான். வுடை வாங்கப் போகப்போகும்போது நிற்கும் நடுத்தர வயது மாது அங்கிருக்கவில்லை.ஏனோ தெரியாமல்,டானியலுக்கு அந்த இளம் பெண்ணில் பரிதாபம் வந்தது. என்ன கஷ்டங்கள்பட்டு லண்டன் வந்து சேர்ந்தாளோ என்று யோசித்தான்.

கடையிற் கண்ட அந்த இளம் தமிழ்ப் பெண்ணைப் பற்றிச் சம்பந்தனிடம் சொல்ல நினைத்தான்.ஆனால் புண்ணியமூர்த்திக்கு முன்னால் அவளைப் பற்றிச் சம்பந்தனிடம் சொல்லத் தயங்கினான்.

புண்ணியமூர்த்திக்கு பெண்களைப்பற்றி உயர்திணையிற்பேசிப் பழக்கமில்லை.

பெண்;களைப் பற்றிப்பேசும்போது ‘சாமான்,சரக்கு என்று பேசுவான் அதற்கு மேலால் என்றால்,அது,இது என்று அடைமொழி கொடுத்துத்தான்; பேசுவான்.

புண்ணியமூர்த்தியின் பெண்களைப் பற்றிய இரசனையில் தமிழிச்சினிமா நடிகை குஸ்பு விதி விலக்கு.குஸ்புக்குத் தமிழ்நாட்டில்; கோயில் கட்டும் பக்தர்களுக்குப் பண உதவி செய்பவர்களில்; அவனும் ஒருத்தனாக இருந்தாலும் ஆச்சரியமில்லை.

டெலிவிஷனில், பொஸ்னியா செய்தி முடிய தென்ஆபிரிக்கச் செய்திகள் வருகின்றன.

வெள்ளையரின் கொடுமையால்,நீண்டநாள்ச்சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா,1991ல் வெளிவந்து விட்டபின்,இப்போது தேர்தல் நடக்கப்போகிறது.கறுப்பு இன மக்கள், அவர்களின் வாழ்க்கையில் முதற்தரமாக வாக்களிக்கப்போகிறார்கள்.

‘இந்தக் கறுப்பு நாய்கள் பெரிய பதவியை எடுத்து என்ன செய்யப் போறான்கள்?’ புண்ணியமூர்த்தி வடையைக் கடித்தபடி சொன்னான்.

‘சிங்கள மோடையாக்கள்,(சிங்கள மடையர்கள்) என்று சிங்களவர்களைத் தாழ்த்திச் சொல்வதில் சந்தோஷம் கொள்பவன் புண்ணிய மூர்த்தி.

அவன் தென்னாபிரிக்கக் கறுப்பு மக்களைப்பேசியது பற்றி மற்ற இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. புண்ணியமூர்த்தி,; இலங்கைத் தமிழர்களையும்,ஆங்கிலேயர்களையும் விட இந்த உலகில் யாரும் மதிக்கப்படத் தேவையற்றவர்கள் என்று நினைப்பவன்.

புண்ணியமூர்த்தி டானியலின் மேசையிற் கிடந்த ஒரு தமிழ்ப் பத்திரிகையை எடுத்தான்.

வழக்கம்போல்,முன்பக்கத்தில்,இலங்கையில் நடந்த,(இரண்ட கிழமைக்கு முன்) அதிரடித்தாக்குதல் பற்றிய நிகழ்ச்சி போடப்பட்டிருந்தது. அடுத்த பக்கங்களைப் புரட்டிக் கொண்டுபோனால்,திருமண விளம்பரங்கள்,அகால மரணங்கள்,அதையடுத்த பக்கங்களில் நல்ல மீன்கள், ஆட்டுக்கால் கோழிக்கால்களின் மலிவு விற்பனைகள்,

நடுப்பக்கத்தில், கவர்ச்சி காட்டும் தமிழ் சினிமா நடிகைகள்,என்பன வழக்கம்போல் பரந்து கிடந்தன்.

‘இந்த இளவுப்பேப்பரில் என்ன இருக்கு?’ புண்ணியமூர்த்தி வடையோடு சேர்த்து வார்த்தைகளையும் மென்னினான்.

‘என்ன இருக்கவேணுமென்டு நினைக்கிறாய்?’ புண்ணியமூர்தியிடம் எரிச்சலுடன் கேட்டான் டானியல்.

புண்ணியமூர்த்திக்குத் தமிழ் இலக்கியம் பற்றியோ அல்லது வேறு ஏதும் உருப்படியாக புத்திஜீவித்துமான விடயங்களில் அக்கறையிருப்பதாக டானியல் நினைக்கவில்லை.

அவனை ஏன் தன் வீட்டுக்கு வரவிடுகிறேன் என்று டானியல் தன்னைத்தானே கேட்பதுண்டு. துனது சினேகிதன் சம்பந்தன்,புண்ணியமூர்த்தி வேலைசெய்யும் கடைக்காரனின் சொந்தக்காரன் என்பது ஒரு காரணமா? அல்லது லண்டனில் வாழும் தனிமையான வாழ்வில் யாரோ ஒருத்தருடன் ஒட்டிக்கொள்ளவேண்டும் என்ற பயமான உணர்வா என்று அவனுக்குத் தெரியாது.

புண்ணியமூர்த்தி இன்னும் கொஞ்ச நேரத்தில் யாரோ ஒருத்தரைப்பற்றிக் கண்டபாட்டுக்குப்பேசத் தொடங்குவான் என்று மற்ற இருவருக்கும் தெரியும். பெரும்பாலும் வெள்ளைக்காரப் பெண்மணிகளைப்பற்றிக் கண்டபாட்டுக்கப்; பேசுவான்.

அவனைப் பொறுத்தவரையில், நடிகை,குஸ்புவின் புன்னகைக்கு அப்பால்; எந்தப் பெண்ணினதும் மென்மையை,பெண்மையைப் புரிந்து கொள்ளத் தெரியாதவன்.

டானியலின் மனத்தில் அன்று பினனேரம் அவன் வடை வாங்கிய கடையிற் கண்ட இளப்பெண் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றிச் சம்பந்தனிடம் சொல்ல வேண்டும் போலிருக்கிறது;.

சம்பந்தனின் முகத்தில் தெரியும் சோகம், இலங்கையிலிருந்து கடிதம் அவனுக்கு வந்திருக்கிறது; என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.அவனின் அம்மாவின் கடிதங்களைக் கண்டால் சம்பந்தன் கலங்கி விடுவான்.

சம்பந்தனின் தந்தையார் குடித்தழிந்து இறந்து போனவர். சம்பந்தனின் உழைப்பில்,அவன் லண்டனிலிருந்து அனுப்பும் பணத்தில்,இலங்கையிலுள்ள அவனின் குடும்பம் நகர்கிறது.

சம்பந்தனின் தமயன் ஒருத்தன்,பத்து வருடங்களுக்கு முன் இலங்கை இராணுவத்தால் பலியெடுக்கப்பட்டு விட்டான். அந்தச் சோகத்தில்,தகப்பன் குடிக்கத் தொடங்கினார் என்று இவன் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாலும், அம்மாவுக்கும் அப்பாவுக்குமுள்ள உறவு பல காலமாகச சுமுகமாயில்லை என்பதும் அவர் சம்பந்தனின் சகோதரனின் அகால மரணத்துக்கு முன்னே குடிக்கத் தொடங்விட்டதும் புரிந்து கொள்ள வெகு காலம் எடுத்தது.

சம்பந்தனின் தகப்பன் ஒரு ஆசிரியர். வன்னிப் பகுதியில் படிப்பித்துக்கொண்டிருந்தார்.குழந்தைகளின் படிப்புகாரணமாக அம்மா ஊரோடு தங்கிவிட்டாள்.அம்மாவின் துயரம் தெரியாத வயது.அப்பாவுடன்,சிலவேளை வன்னி சென்று,அங்கேயுள்ள அழகிய குளக்கட்டுகளில் ஓடிவிளையாடிய இன்ப நினைவுகளுக்கப்பால், அம்மாவின் துயர் விழிகள் அவனின் நினைவுகளிற் தட்டிச் செல்லும். வயது வரத் தொடங்கியதும், ஊராருக்குப் புரியாத ஏதோவொன்று அவனுக்குப் புரிந்தது.அதன் பிரதி பலிப்போ என்னவோ, தமயன் சட்டென்று இறந்தது,அப்பா சுகமில்லாமல் ஊருக்கு வந்தது, அதன்பின் அவர் அதிகம் குடித்து இறந்தது எல்லாம் அவனைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

அப்பா,குடும்பப் பொறுப்பில்லாமல் குடித்தபோதும், அவர் இறந்தபோது அம்மா அழததும், அவரின் இறப்பு அம்மாவுக்கு ஒரு விடுதலையா என்று அவன் யோசித்திருக்கிறான்.

சம்பந்தன் டானியலின் சமயலறைக்குள் வந்தான். டானியல் கோழிக்கறியை அடுப்பிலிருந்து இறக்கி விட்டான்.

‘எப்படி வடை?’ டானியல் நண்பனைக்கேட்டான். சம்பந்தன்,டானியலிடம்,’வடையை எந்தக் கடையில் வாங்கினாய்?’ என்று கேட்டால், அந்தச் சாட்டில் என்றாலும்,வடைக் கடைப் பெண்ணைப் பற்றி சம்பந்தனிடம்; சொல்ல டானியல் துடித்தான்.

டானியலுக்குக் குடும்ப சுமை ஒன்றும் கிடையாது.குடும்பத்தில் கடைசிப் பிள்ளை.கால நேரமும். காதலிக்கக் கூடிய ஒரு பெண்ணும் கிடைத்தால் காதலிக்க வசதியுள்ளவன்.இவனது வீட்டார் டானியலது சந்தோசத்தைப் பெரிதும் முக்கியமானதாக நினைப்பவர்கள்.

‘எப்படி வடை?’ என்ற டானியலின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,’வீட்டில தங்கச்சிக்குப் பேசின கல்யாணம் சரிவரவில்iயாம்’ சம்பந்தனின் குரலில் உலகத்துச் சோகமெல்லாம் ஒன்றாக வெளிப் பட்டது.அவனிருக்கும் நிலையில்,ஊரிலிருக்கும் அவனின் குடும்பத்தைத் தவிர எதையும் யோசிக்க மாட்டான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

சம்பந்தன் அவனது நண்பனின் முகத்தை நேரே பார்த்தான்;. அவனின் குரலும் முகபாவமும் டானியலை வருத்தியது. சம்பந்தனின் தங்கச்சிக்கு இருபத்தி எட்டு வயது. வெளியில், லண்டன் போன்ற இடத்தில் புலம் பெயர்ந்த தமிழ் மாப்பிள்ளைகள் சீதனம் என்ற பெயரில் யானை விலை குதிரை விலை கேட்கிறார்கள்.சம்பந்தன் ஓடாக உழைத்து அனுப்பிக் கொண்டிருக்கிறான்.

ஆனால், அவனது தங்கை அவளது இளம் வயதில் ஒருத்தனை விரும்பியிருந்ததாகவும், அவன் இயக்கமொன்றில்ச் சோர்ந்து இறந்து விட்டதாகவும், அந்தப் பழையகதை, இப்போது உயிர் பெற்று, ஊரில் வலம் வந்து அவளது கல்யாணம் குழம்பிடக் காரணமாகிட்டதாம்.அம்மா சோகத்துடன் எழுதியிருந்தாள்.

‘சாரி மச்சான்,’ டானியல் சோகமான நண்பனின் தோளில் கைவைத்துத் தேற்றினான்.

இந்த நிலையில் வடைக்கடையில் சந்தித்து அவனது உணர்வையும் உள்ளத்தையும் தகிக்க வைக்கும் பெண்ணைப் பற்றி டானியல் சம்பந்தனிடம் சொல்ல விரும்பவில்லை. அந்தச் சந்தர்பம் வருமட்டும் அவள் நினைவு அவனைத் தாலாட்டட்டும்.

‘என்னாப்பா இரண்டுபேரும் ரகசியம் பேசுறியள்’

புண்ணியமூர்தி இப்படிக் கேட்டுக்கொண்டு சமயலறைக்குள் வந்தான்.

புண்ணியமூர்த்தி மற்ற இருவரையும் விட மிகக் குள்ளமானவன் அனாவசியமற்ற ஒரு புன்சிரிப்பு அவன் முகத்தில் எப்போதும் ஒட்டியிருக்கும்.

ஓரு பெரிய ஜக்கட்போட்டிருந்தான் அது அவனை இன்னும் குள்ளமாகககாட்டியது.

அவனுக்கு இரண்டு தமக்கைகள் லண்டனிலிருக்கிறார்கள். கல்யாணமாகிப் பிள்ளைகளைப் பெற்றவர்கள். இப்போது, அவர்கள் புண்ணியமூர்திக்குப் பெண் வேட்டையாடுகிறார்கள்.புண்ணியமூர்த்தி அவனது கனவுக்கன்னியான குஸ்பு மாதிரி ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யும் கற்பனையிலிருக்கிறான். அவனின் சகோதரிகளோ, கைநிறையச் சீதனம் கொடுக்கும் ‘யாரையும்;’ அவனின் தலையில் கட்டிவிடப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

புண்ணியமூர்த்தி தனக்குக்கலயாணம் பேசிவந்த பெண்களைப் பற்றித் தன்சினேகிதர்களுக்குச் சொல்லும்போது ஏதோ கத்தரிக்காய், வெண்டைக்காயைப் பற்றிப் பேசுவதுபோல் விலை பற்றிப் பேசுவான்.

டானியலுக்கு அப்படி அவன் பேசுவது பிடிக்காமல் முணுமுணுப்பான். அவனைப் பொறுத்தவரையில் திருமணங்கள் இருவரின் ஒன்றுபட்ட உணர்வில்,காதலில் நடக்கவேண்டும் என்று கற்பனை செய்பவன். ஆனாலும்,புண்ணியமூர்த்தியின் சொந்தக்காரனின் கடையில் சம்பந்தன் வேலை செய்வதால், அவனுடன்; தர்க்கப் பட்டுத் அவனின்; வேலை போக வைக்கத்; தயாராகவில்லை.

சாப்பாட்டுத் தட்டுகளில் சாப்பாடு பரிமாறப்பட்டது.

புண்ணிமூர்த்தி மேசையிலிருந்த இன்னொரு வடையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

‘மச்சான் வடை நல்லா இருக்க எங்க வாங்கினாய்?’

புண்ணியமூர்த்தி டானியலைக் கேட்டான்.அவன் காரணமில்லாமல் ஒரு நாளும் எந்தக் கேள்வியையும் கேட்க மாட்டான் சூசகமாக ஏதோ மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறான் என்று டானியலுக்கப் புரிந்தது.வடைக் கடைப் பெண் இவன் கண்ணிலும் பட்டிருப்பாளா?

‘மெயின் றோட்டில இருக்கிற கடையில வாங்கினன்’ டானியல் புண்ணியமூர்த்தியின் முகத்தை எடைபோட்டவாறு சொன்னான்.’ அந்தச் சீலைக்கடைக்குப் பக்கத்தில இருக்கிற தமிழ்க்கடையிலயா வாங்கினாய்?’

புண்ணியமூர்த்தியின் கேள்விக்கள் தொக்கிக் கிடந்த விஷமம் டானியலுக்குப் புரிந்தது. வடை விற்கும் கடையில் புதிதாக வந்திருக்கும் அந்த இளம் பெண்ணைப் பற்றிப் பேசப்போகிறான் என்று டானியலின் மனம் சொல்லியது.

புண்ணியமூர்த்தியின் சினேகிதம் கிடைத்த நாளிலிருந்து டானியலும் பல பாவங்களைப் பேசியிருக்கிறான்.இவ்வளவு நாளும் என்னவென்ற புண்ணியமூர்த்தியைச் சகித்தேன் என்ற கேள்வி டானியலின் மனத்தில் உதித்தது.

‘டெலிவிஷனில் நேற்ற ஒரு செய்தியைக் கேட்டாயா?’

வாயில் வடை குதம்ப அத்துடன் வசனங்களும் குதம்ப புண்ணியமூர்த்தி டானியலைக்கேட்டான்.

‘என்ன செய்தி?’ சம்பந்தன் புண்ணியமூர்த்தியைக் கேட்டான்.

‘இந்தியாவில் பெண்குழந்தைகள் பிறந்தால் அந்தக் குழந்தைகள் தங்களுக்கு வேண்டாமெனறு கொல்கிறார்ளாம் பி.பி.சி. செய்தி சொல்லிற்று’

புண்ணியமூர்த்தி சிரிக்கிறான்.

அப்பாவி இளம் குழந்தைகளைக் கொல்வது இவனுக்குச் சிரிப்பான விடயமா?

‘பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடும் தமிழ் நாட்டிலா இந்தப் பயங்கரக் கொடுமைகள்?’ சம்பந்தன் முணுமுணுதுதான்.

லண்டனில் புண்ணியமூர்த்தி,கல்யாணம் என்ற பெயரில் ஆயிரக்கணக்காகச் சீதனம் வாங்கக் காத்திருப்பதுபோல்,பல வழிகளிலும் பொருளாதாரப் பிரச்சினை கொண்ட தமிழ்நாட்டில், புண்ணியமூர்த்தி போன்ற ஆண்களுக்கு விலை கொடுக்க முடியாத பெற்றோர் தங்கள் பெண்குழந்தைகளுக்கு எதிர்காலமில்லை என நினைத்து இப்படிச் செய்வது என்ன கொடுமை? டானியல தனக்குள் நினைத்தான் வெளியில் சொல்லவில்லை.

‘இந்தச் செய்தி பி.பி.சியில் போடும்போது பக்கத்தில இருந்த வெள்ளைக்காரன், நான் ஒரு இந்தியன் என்டு என்னைப் பார்த்துச் சிரிச்சான் மச்சான்’ புண்ணிமூர்த்தி முகத்தில் கோபம் வெள்ளைக்காரன் அவனை ஒரு இந்தியாக்காரன் என்று நினைத்தது அவனுக்குக் கோபம்

.

புண்ணியமூர்த்திக்குச் சிசுக் கொலை பற்றிக் கோபம் வராமல்,அவனை ஒரு வெள்ளைக்காரன்,சிசுக் கொலை செய்யும் இந்தியாவிலிருந்து வந்தவன் என்று கோபப்படும் புண்ணியமூர்த்தியில்,டானியலுக்கு அளவற்ற கோபம் வந்தது.

அதைக் காட்டிக் கொள்ளாமல்,டானியல் கறியை ருசி பார்த்தான். அளவுக்கு மீறிய உறைப்பு!

‘ஜெயலலிதாவுக்குக் கருணாநிதி கோஷ்டி மேடையில் துரியோதன்மாதிரித் துகிலுரியக்க,அதைப்பார்த்து,மனிதத் தனமில்லாம நீ சிரிச்சது ஞாபகமில்லையா?’சம்பந்தன் ஆத்திரத்துடன் புண்ணியமூர்த்தியைக்கேட்டான்.

‘என்னடா மச்சான் சொல்கிறாய்? ஜெயலலிதாவுக்கச் சீலை உரியறதுக்கும், சிசுக் கொலைக்கும் என்ன சம்பந்தம்?’

‘சீதனக்கொடுமைக்கும்,அதனால பெட்ரொல் ஊற்றிப் பெண்களை எரிக்கிறதுக்குமுள்ள சம்பந்தம். பெண்களுக்கு ஆண்களால்.எந்த வித்தில், எப்போது வந்தாலும் அது கொடுமையானது என்பதன் சம்பந்தம்’

டானியல் தன் ஆத்திரத்தை அடக்கமுடியாமல்க் கோபக் குரலில் சொன்னான்.

டானியலுக்குக் கடையிற் கண்டபெண்ணின் கலங்கிய,பரபரத்த இரு கயல் விழிகள் ஞாபகம் வந்தன.

அந்தப் பயத்தை எந்த ஆண் கொடுத்திருப்பான்?

பர பரவென்று,ஏதோ பயத்தால் தவிக்கும் அந்த மீன் விழிகளில் அமைதி தவழ்ந்தால் எவ்வளவு

அழகாகவிருக்கும்?

ஏன் அந்த விழிகளில் அவ்வளவு பரபரப்பு?

லண்டனிற் தனியாக வந்து தவிக்கும் பயமா? அல்லது, புதிய இந்த ஊரில் எப்படிக் காலூன்றப்பொகிறேன் என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்பா?,

எப்படி வந்து சேர்ந்தாளோ?

வரும் வழியில் எத்தனை காட்டு மிருகங்களின் வேட்டையிலிருந்து தப்பினாளோ? வீட்டில்-இலங்கையில் ஒரு பெரிய குடும்பம் அவளுக்கிருக்கலாமா?;.இவள் உழைப்பில் குடும்பம் தழைக்க இவளை எதிர்பார்க்கும் குடும்பமாக அது இருக்கலாமா?

அல்லது, இவ்வளவு காலமும் தனக்குக் கல்யாணம் நடக்கவில்லை என்ற ஏக்கமா?’ அவளைப்பற்றி ஆயிரக்கணக்கான கேள்விகள் இவன் மனத்தில் ஊசலாடின.

அதே நேரம், சட்டென்று,’வடை விற்கிற கடையில புதிசாக வந்திருக்கிற சரக்கு எப்படி?’ புண்ணியமூர்த்தி சத்தம்போட்டுச் சிரித்தபடி டானியலைப் பார்த்துக் கேட்டான்.

சம்பந்தன் முகத்தில் கோபம். டானியலின் முகத்திலும்; மனத்திலும் அக்கினி.

இத்தனை காலமும், இவர்கள் மூவரும்,லண்டனில் பனி பெய்யும் அல்லது மழைபெய்யும் பின்னேரங்களில் சேர்ந்திருந்த பியர் குடித்த.ஆட்டுக்கறி சாப்பிட்டு,தரம் கெட்ட தமிழ்ப் படங்களைப்பார்த்து,நடிகைகளின், குலுக்கல்களில்,சிங்காரச் சிணுக்கங்களில் வாலிபத்தின் உணர்ச்சியடைந்தவர்கள்.

முன்பின் தெரியாத பெண்களின் முந்தானைகளில்,தங்கள் கற்பனையில் படுத்தெழும்பியவர்கள்.தங்களுக்குத் தெரியாத பெண்களைப்பற்றி தரக்குறைவாகச் சொல்லிச் சிரித்தவர்கள்.

இன்று புண்ணியமூர்த்தியின் பேச்சு அளவு கடந்த அருவருப்பையுண்டாக்கியது.

‘என்னடா மச்சான் பேயடிச்ச மாதிரி நிற்கிறாய்?’

புண்ணியமூர்த்தி தனது தட்டில் ஒரு பெரிய சோற்றுப்படையலை நிறைத்தபடி கேட்டான்.

டெலிவிசனிற் காட்டும் சோமாலியாவில் பட்டினி கிடக்கும்; பத்துப்பேருக்குத் தேவையான உணவை ஒரு கைபார்க்கும் தோரணையில் அவன் சாப்பிடத் தொடங்கினான்.

அவன் சாப்பிடுவது வாழ்வதற்கா அல்லது அவன் வாழ்வதே சாப்பிடுவதற்hக என்ற கேள்விக்குப் புண்ணியமூர்த்தியைப் பொறுத்த வரைக்கும் யாரும் பதில் சொல்ல முடியாது.

தான் கேட்ட கேள்விக்கு டானியல் பதில் சொல்லவில்லை என்பதை நினைவு படுத்த,’ என்னடா மச்சான், வடைக்கடைச்சரக்கு எப்பிடி என்டு கேட்டன் பதில் சொல்லாமலிருக்கிறாய்’ டானியலை இன்னொரு தரம் சீண்டினான் புண்ணியமூர்த்தி.

இவன் என்ன விற்பனைக்கப்பால் மனித உறவுகளைப் புரிந்து கொள்ளத் தெரியாத வெற்றுப் பிண்டமா?

அவன் ஒரு அன்னியனாக மற்ற இருவர்கண்களுக்கம் தெரிந்தான்.

‘நீ அந்தக் கடையில நிற்கிற பெண்ணைப் பற்றிக் கேட்ட விதம் எனக்குப் பிடிக்கல்ல’; தனது கோபத்தை அடக்கிக் கொண்டு மறுமொழி சொன்னான் டானியல்.

‘ஏன்னடா டானியல் கதைக்கிறாய்?கடையில் விற்கிற சாமானோட சாமானாக நிற்கிறாள் வேற எப்படிச் சொல்லறது?’

புண்ணியமூர்த்தி போன்றவர்கள், முருங்கை மரத்துக்குச் சீலையைப் போர்த்து வைத்தால் அதில் முலைகள் இருக்கிறதா என்று தடவிப் பார்க்கத் தயங்காத ஆண்கள்.

‘அவள் விற்பனைக்கு வைக்கப்பட்ட ஒரு சாமானல்ல. உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனிதப் பிறவி.’ டானியலின் குரல் கடுமையாக ஒலித்தது.

புண்ணியமூர்த்திக் கோழிக்காலைக் கடித்தபடி சிரித்தான்.

‘நீ படுகிற பரிதாபத்தைப் பார்த்தால், தமிழ் நாட்டில,ஈரச்சேலையை முகத்தில போட்டுக் கொலை செய்யப்படுற பெண்சிசுக்களைக் காப்பாற்றும் அவதாரம் எடுப்பாய் போல இருக்கு’ புண்ணியமூர்த்தி சத்தம் போட்டுச் சிரித்தான்.

‘புண்ணியமூர்த்தி, அந்தப் பெண்குழந்தைகள் உன்னைப்போல ஆண்களோட வாழ்வதை விட,அந்தப் பெண்கள் இறந்து விடுவது நல்லது என்ற அந்தத் தாய்கள் இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாத முட்டாள் நீ;’ டானியல் தன் முகத்தைத் திருப்புpக் கொண்டு உறுமினான்.

புண்ணியமூர்த்தி போன்றோருக்கு வெட்கம் வராது என்பது அவனின் அடுத்த கேள்வியில் அப்பட்மாகத் தெரிந்தது.

‘சரி அதை விடு,உன்ர விசயத்துக்கு வருவம்,உனக்கு அந்தக் கடைக் காரப்பெட்டையில் ஒரு கண்போல கிடக்கு’புண்ணியமூர்த்தி தனது கிண்டல்ப் பேசசுக்குச் சம்பந்தனும் சேர்ந்து சிரிக்வேண்டுமென்பதுபோல் அவனைப் பார்த்தான்.

சம்பந்தன் ஆத்திரத்தைக் காட்டாமல் பொருமிக் கொண்டிருந்தான்.

புண்ணியமூர்த்தி தன் பார்வையை டானியலின் பக்கம் திருப்பினான.

‘ஆமாம், அவள் சரியென்டு சொன்னா நாளைக்கே அவளைக் கல்யாணம் செய்ய நான் தயார்.நீ இப்ப அவளப்பற்றிக் கதைக்கிற விட்டிட்டு வாயைப் பொத்து’

டானியலின் குரல் வெடித்துச் சிதறியது.

சம்பந்தன் தன் நண்பனுக்கத் தன் சம்மதத்தைத்தன் புன்சிரிப்பால் வெளிப் படுத்தினான்.

புண்ணியமூர்த்தி அடங்கிவிட்டான். மற்ற இருவரம் தன்னில் பெரும் கோபத்திலிருப்பதை அவன் முட்டாள் மூளை கிரகித்துக் கொண்டிருந்தது.

வெளியில் மழை விட்டிருந்தது.

(‘தாகம்’-பத்திரிகை பிரசுரம்-சித்திரை 1994)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *