(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மலைக் குறுக்கில் இறங்கிவரும் கொழுந்துப் பெண் களாய் வளைந்து நீண்டு வரிசை குலுங்காமல் நின்றது ‘கியூ’. குனிந்த தலை நிமிர்வதில்லை ஒருவரும். மனத்திலே புடைத்து நிற்கும் பாவத்தின் சுமை கயிறுகட்டி இழுத்துக் கவிழ்க்கிறது தலையை.
வெள்ளையும் இளநீலமுமாய்க் கடையும்போது உப்பிக் கிளம்பும் பஞ்சுக் கூட்டமாய் அமைந்துவிட்ட ஆகாயப் பின்னணியில் அழகாய் அமைதியாய் நிற்கும் அந்தத் தேவ மாதாவின் சொரூபத்தை நிமிர்ந்து நோக்கும் துணிவு ஒருவருக் கும் இல்லை. தாய்ச் சொல் கேளாத பிள்ளை கெட்டலைந்து, கேடு சூழ்ந்தபின் நீதான் துணை என்று நிமிர்ந்து நோக்கக்கூடாத அவமானத்துடன் அடிபார்த்து நிற்கும் அதே அவலநிலை. ஒவ்வொருவராக பாவ சங்கீர்த்தனத் தொட்டிலை நோக்கி நகர்கின்றனர்.
கோவிலின் கூரையைத் தொட்டுக்கொண்டிருந்தது. ‘ஏம் மகானின் ஆடையை எட்டித் தொட்டாலும் என் பிணியிலும்’ என்ற நம்பிக்கை இதற்கும்.
மரக்கிளையின் இலைக்கற்றை கூரைத் தகரத்தை வருடும் போது எழும் மெல்லொலிகூட மணி அறைந்த ஓசையில் ஒடுங்கி விட்டது. தனக்கும் மிக அருகில் முழங்காலில் மண்டியிட்டிருந்த ஒரு பெண்மேல்பட்டு லயித்த கண்களைப் பலவிதமாக இழுத் தெடுத்துத் திருப்பிக்கொண்டார் அவர்.
இந்த வயசிலும் இப்படி ஒரு பார்வையா? இப்படி ஓர் அல்பநினைவா? நெற்றி முற்றி முக்கால்தலை வந்துவிட்டது. பிறையாக நின்ற பின் மயிரிலும் வெள்ளை பின்னலிட்டு கிடக்கிறது. உடல் மூப்புக்கு உதாரணம் மனம்…!
புருவங்களுக்கிடையில் மூக்குத் தண்டின்மேல் நின்ற கண்ணாடி இணைப்புத் தங்கமாய் மின்ன, கசங்காத சூட்டும் கழுத்துப் பட்டியுமாக அவர் தோற்றம், உடம்பின் ஊட்டம் வயசைக் குறைத்தே கணிக்கத் தூண்டுகிறது, என்றாலும் மூப்பு மூப்புத்தான்.
கோவில் என்ற நினைவு மனத்தைக் குத்த, பாவைமேல் விழுந்த பார்வையைப் பகித்தெடுத்துப் பீடத்தைப் பார்த்து பின்பு விழியை உயர்த்தினார். ‘இவர்கள்தான் எப்படி வருகிறார்கள் கோவிலுக்கு, புடவைக் கடையில் காட்சிதரும் கண்ணாடிப் பொம்மையாய்’ என்ற மன ஓட்டத்துடன்.
உயர்ந்த அவர் விழிகளுக்குள் ஊடுருவிப் பாய்ந்தன மாதாவின் விழிகள். ‘தெய்வம் ஒரேநேரத்தில் எல்லோரையும் பார்க்கிறது, என்பதை உறுதிப்படுத்துவதுபோல் மாதாவின் கண்களைப் பார்ப்பவர்களைப் பார்ப்பதுபோல் அமைந்துள்ள அந்தக் கண்களின் தீட்சண்யத்தைத் தாள இயலாதவராய்ப் பார்வையை ஒதுக்கி மேகப் பின்னணியைப் பார்த்தார். மேகக் கூட்டத்தின் மென்மை மனத்தைத் தடவியது. மோரில் மிதக்கும் வெண்ணெய் உருண்டையைத் தொடுவது போன்ற மென்மையுடனும் குளிர்ச்சியுடனும்.
அமர்ந்த பெண் எழுந்தாள். குதி உயர்ந்த சப்பாத்தின் வெள்ளிக்கூர் தரையைத் துளைக்க நடந்துவிட்டாள்.
அவள் சென்று மறைந்த திக்கில் பார்வையை ஒருவிநாடி இரைத்துவிட்டுப் பாவ சங்கீர்த்தனத் தொட்டிலில், குனிந்த தலைக்கு இணைவாக இடக்கையை நெற்றியில் ஊன்றிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சுவாமியாரைப் பார்வையால் துழாவுகிறார்.
ஒரு சத அகலத்துக்கு முன் துறந்த உச்சியே கண்ணில் பட்டாலும் சுவாமியாரின் முகம் மனதில் படுகின்றது.
‘ஹெய்ல் மேரி புல் ஆப் கிரேஸ்
தி லோட் இஸ் வித்தீ…’
அதரங்கள் ஆடுவது தெரிகின்றது. வலக்கையில் சுருண்டு கிடக்கும் ஜபமாலையின் ஒரு முத்து உள்ளங்கையில் வழிந்து இறங்குகிறது. அடுத்த முத்து, கட்டை விரலிடை உருளுகின்றது.
‘ஹெய்ல் மேரி…’
‘பிரிய தத்தத்தினாலே பூரண மரியாயே வாழ்க’ என்ற ஜபத்தைத்தான் அவர் ஆங்கிலத்தில் உதறித்தள்ளுகிறார். அந்த ஜபம் அவருக்குச் சிங்களத்திலும் தெரியும். சிங்களத்தில் ஜபம் செய்வது தம் அந்தஸ்துக்குச் சரியல்ல என்பதுடன் சிங்களத்தில் ஜபத்தைச் சொல்வதிலும் பார்க்க ஆங்கிலத்தில் சீக்கிரமாகச் சொல்லிவிடலாம் என்பதும் ஒரு காரணம். இதற்கென்றே பெரும் பான்மையோர் மந்திரங்களை ஆங்கிலத்திலேயே மனனம் செய்துகொள்வது உண்டு. கீழ்வகுப்புப் பிள்ளைகள் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிப்பதுபோல.
உலகத்தின் அசுர வேகத்துடன் இணைந்தோட இறை வணக்கத்திலும் ஒரு வேகம். வெறும் உதட்டாட்டம். ஜபத்தின் கருத்து மனத்தைத் தீண்டமுடியாத ஒரு வேகம்.
ஜபமாலையின் முத்துகள் ஒவ்வொன்றாய் ஊர்ந்து இறங்கு கின்றன. கட்டைவிரல் முத்துகளைச் சீராக உருட்டி இறக்கு கின்றன. உதடுகள் சீராக அசைகின்றன. மனம் சுவாமியாரைப் பற்றி எண்ணுகிறது. இருவரும் இறுகப் பழகுபவர்கள். ஐயாமேல் சுவாமிக்கு ஒரு மானசீகமான மதிப்பு.
மார்புவரை தொங்கும் தாடியை இடக்கையால் நெருடிய வண்ணம், போனவாரங்கூட சுவாமியார் கூறினார். ‘நல்லவர்கள் அங்கிகளுக்குள் மாத்திரம் நுழைந்து கொண்டவர்களாய் இருக்கக்கூடாது. உங்களைப்போல் வெளியேயும் இருக்க வேண்டும்’ என்று.
ஐயாவின் இல்லத்தில் சுவாமியார் எத்தனையோ தடவை இராத் தங்கல் போட்டிருக்கிறார்.
தேயிலைத் தோட்டங்களிலே ஐந்துக்குக் காலாய், கஞ்சியிற் பயிரெனக் கிடக்கும் கிறிஸ்துவத் தொழிலாளர்களுக்குக் கோவில் வசதியோ பூசைகாணும் வாய்ப்போ இல்லை. பெரும்பான்மையினர் இந்துக்கள். எனவே தோட்டத்துக்கு ஓர் இந்துக் கோவில் இருக்கும். கிறிஸ்தவர்கள் பூசைகாண வேண்டுமென்றால் கடல் கடந்து செல்லவேண்டும் நகரத்துக்கு, படம் பார்க்கப் படும் சிரமத்தை யார் பக்தி மேலீட்டால் படப்போகிறார்கள்?
இவர்களும் பாவ சங்கீர்த்தனம் செய்து பூசை கண்டு, திவ்விய நற்கருணை பெற வசதி செய்து கொடுக்கும் உயர் எண்ணத்தால், பட்டணத்தில் இருக்கும் பாதிரியாரே தோட்டங் களுக்குச் சென்று பூசை வைப்பதுண்டு. மாதத்திற்கு ஒரு முறை என்று .
ஐயா இருக்கும் தோட்டத்தில் பூசை என்றால் அது ஐயாவின் பங்களா ஹாலில் தான். அந்தத் தோட்டத்தில் உள்ள அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் ஐயா செய்தி அனுப்பிவிடுவார் ‘இன்று மாலை பூசை’ என்று.
தாம் அந்தத் தோட்டத்தின் தலைமைக் குமாஸ்தா என்பதைக்கூட மறந்து தொழிலாளர்களுக்குத் தம் பங்களாவி லேயே ஒரு சிறிய தேநீர் விருந்து கொடுத்தனுப்பும் பெரியவரின் பெருந்தன்மை கண்டு பூரித்துப் போவார் சாமியார். பூசைக்கு வந்தவர்கள் எல்லாரும் சென்றபின் இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். முன் ஹாலில் அமர்ந்து பேசு வார்கள். உள் அறையில் உட்கார்ந்து பேசுவார்கள். சாப்பாட்டு மேசையில் கூட உணவை மறந்து உரையாடுவார்கள்.
தட்டுகளைக்கூட நகர்த்த முடியாதபடி விதத்துக்கு ஒன்றாய் நிறைந்து கிடக்கும் பலவகை உண்டிகள் குளிர்ந்து கிடக்கும். பெரியவரும் சுவாமியாரும் பேசிக்கொண்டிருப்பார்கள். பூனைக் கண்ணாய் மின்னும் சாப்பாட்டறைச் சுவர்க் கடிகாரத்தின் பெண்டுலம் எழுப்பும் மெல்லொலியே பேரொலியாய் அதிரும் இரவின் அமைதியில் இருவரும் வெளியே வந்து, பலாமரத்தின் அடியில் கிடக்கும் சிமிந்திப் பலகையில் அமர்ந்துகொள்வார்கள். ஆர்வம் மிக்கவர்களின் உழைப்பால் அழகுபெற்ற அந்த மலைச் சரிவுகளின் சூதால் சுயநிறம் இழந்து கறுப்பாய்த் தோன்றினாலும், அதுவும் கண்ணுக்கு ரம்மியமாகத்தான் இருக்கிறது – பெண்ணின் நிழல் போல.
இரவின் அமைதியில் இருவர் தனிமையில் பேசிக் கொள்ளும் பேச்சுக்குத்தான் எத்தனை மாயசக்தி!
சவர்க்காரத்தின் மணற் குறுணி கன்னத்தில் கீறினாற்போல் தாம் எப்போதோ செய்த இரண்டொரு பாவத்தின் நினைவு மனத்தைக் கீற, தம்மிலே ஒரு தீனத்துடன் சுவாமியார் நினைத்துக் கொள்வார், ‘அங்கிக்குள் இருக்கும் என்னை விட ஆபீசில் இருக்கும் இவர் எத்தனை உயர்ந்தவர்’ என்று. அதே நேரத்தில் ஐயா கூறுவார், எண்ணிப் பார்த்தால் என்ன சுவாமி இருக்கிறது இவ்வுலக வாழ்வில் – ஒன்றுமே இல்லை!’ என்று.
அடிவானமும் மலைமுகடும் ஆரத் தழுவிக்கொள்ளும் அந்தத் தொலைதொட்டு அருகே தலைக்கு மேலாகப் பந்து பந்தாய்க் காய்த்துத் தொங்கும் மாதுளை மரம் வரை ஒரு கணம் மறைந்துவிடும், சுவாமியாரின் பார்வையில்.
கண்களை இறுக மூடிக்கொள்வார். ஐயாவின் பேச்சில் அத்தனை லயிப்பு.
இரண்டு மணிக்குமேல் படுத்தாலும், அதிகாலையிலேயே எழுந்து சுவாமியாரைக் கவனித்து அனுப்பி வைப்பார். ‘நல்லவர்கள் பாவ சங்கீர்த்தனத் தட்டில் …. நன்றாகத்தான் இருப் பார்கள்!” என்ற நல்லெண்ணத்துடன் சுவாமியார் விடை பெறுவார்.
அதே அவர்தாம் இதோ பீடத்தின் அருகே உட்கார்ந்து இருக்கிறார், பாவ சங்கீர்த்தனைத் தட்டில், மனம் எதை எதையோ உருட்ட, கை சீராக ஜபமாலையை உருட்டுகிறது.
பாம்பாய் நெளிந்த ‘கியூ’ பாதியாய் குறைந்துவிட்டது. ‘இவரிடம் நான் பாவ சங்கீர்த்தனம் செய்வதா?’ ஏதோ ஒன்று பற்றிக்கொண்டு வந்தது, புகையும் பொருமலுமாய். நெருப்பின் மேற் கிடக்கும் சருகின்நிலை.
காலணி எழுப்பும் ஓசையைக் கட்டுப்படுத்த நுனிக்காலை மெதுவாக ஊன்றி வெளியே வந்தார். அரை முழங்காலிட்டு வெளியே வந்தவர் காரில் ஏறிக்கொண்டார். தொட்டு ஒற்றிக் கொண்ட தூயநீர், விரல் நுனியிலும் நெற்றிப் பொட்டிலும் ஈரமாய் நின்றது.
சிவப்பாய்ப் பூத்துநின்ற பென்னம் பெரிய மரங்களிடையே கறுப்புப் பட்டையாய் நெளிந்த தார்ரோட்டில் வழுவிக்கொண்டு ஓடுகிறது கார். முன்கையில் சுருண்ட ஜபமாலையும் முகத்தில் அமைதியுமாய் பின் சீட்டில் அமர்ந்த ஐயாவின் பக்திகண்டு அவர்மேல் பக்தி கொண்டு, பாதையில் சென்ற பார்வையை ஒரு விநாடி கண்ணாடி வழியே ஐயாமேல் பாய்ச்சிப் பெருமிதம் கொண்டார் காரோட்டி.
வெளித் தோற்றம் கண்டு கணக்கிடும் இயல்பு. மெரினாவில் நிற்கும் காந்தி சிலையாய் யாரென்று கூறமுடியாதவாறு அமைந்துவிட்ட பண்டாரநாயக்காவின் சிலை, நகரசபைக் கட்டடம், அரசாங்க ஆசுபத்திரி ஆகியவற்றைப் பின்னே தூக்கிப் பாய்ந்தது கார். நகர எல்லை தாண்டியதற்கு அறிகுறியாக அடுக்குக் கட்டடங்கள், ஆரவாரம் ஆகியவை மறைந்து இரு மருங்கிலும் எழுந்து நிற்கும் தேயிலையின் இருண்ட அமைதியில் மறைந்தோடிய பாதையைத் தேடி விரைந்தோடியது கார்.
பதுளை மாதா கோவிலிலிருந்து வெளியே வந்த ஐயா, இங்கே கூட்டங்கூட, பண்டாரவாளை கோவிலுக்குப் போ என்றார்
அவன் போகின்றான். இடைத் தூரம் பதினைந்து கல். அவனுக்கு என்ன, ‘ஐயாதாம்’ என்றால் முதலாளி என்ன சொல்லிவிடப் போகின்றார்? ஐயாவும் முதலாளியும் அந்நி யோந்நியம், வெகு அந்நியோந்நியம்.
இந்தப் பதினைந்து கல்லைத் தாண்டி அவர் பாவ சங்கீர்த்தனம் செய்யப் போகிறார். அவருடைய பக்தியை, மதப் பற்றை, அவன் வியந்ததில் வியப்பில்லை.
தேயிலைத் தோட்டத் தலைமைக் கிளார்க்கின் மதிப்பு, பதவியின் பவிசு தெரிந்தவர்களுக்கே தெரியும். தோட்டத்துக்கு ராஜா போன்றவர் துரை. அந்தத் துரை ராஜாவுக்கு இவர் மந்திரி; நிர்வாகத்தின் நிதி அமைச்சர்.
இப்போது ஓடுகிறதே ஓடம் போன்ற இந்தக் கார் – புகர் நிறக் கேம்பிரிட்ஜ் – நகரத்திலுள்ள முதலாளி ஒருவருடையது. இவருடையதைப்போல் பாவித்துக்கொள்வார்.
அது காட்டுவது முதலாளியின் தாராளத்தை அல்ல; தந்திரத்தை. இவரையும் முதலாளியையும் இணைக்கும் உறவு நூல் இம்மி நெகிழ்ந்தாலும் தோல் சிராய்ப்பு முதலாளிக்கு; இவருக்கு அல்ல.
‘இவர்கள் அனுப்பும் பொருள்கள் சாம்பிள்களுடன் ஒத்துப் போவதில்லை’ என்ற ஒரு குற்றச்சாட்டுப் போதும். ‘வேறு இடத்தில் வரவழை’ என்பார் துரை. முதலாளியின் வியாபாரம் துண்டுப்படும். வியாபாரம் என்றால் சாமானியமான வியா பாரமா? மாதத்துக்கு லட்ச ரூபாய் வியாபாரம் ஆயிற்றே! இவர் கொடுக்கும் கமிஷனை அந்த மற்றவர் கொடுக்கமாட்டாரா என்ன? ஆகவேதான் பெரியவரின் மனம் நோவாமல் நடந்து கொள்கிறார் முதலாளி.
ஈரைந்து மைல் எட்ட உள்ள எஸ்டேட்டிலிருந்து இரண்டு ராத்தல் இறைச்சி வேண்டும் என்பார் ஐயா. முதலாளி தம்முடைய காரில் அனுப்புவார்.
என்ன செய்வது? தோட்டம் ஊற்றும் நீரைக் குழாயாய் நின்று கொணர்ந்து ஊற்றுவது அவராயிற்றே. திசைமாறி விட்டால்…..?
முதலாளி கடையில் இருந்துகொண்டே ஐயாவைப் பங்களாவுக்கு அனுப்புவார் சாப்பிட. அத்தனை இறுக்கம்.
வற்புறுத்தலின் பேரில் முதலில் போனவர் அப்புறம் அப்புறம் தாமாகவே போகத் தொடங்கினார். நிழலிலே நின்று நிழலிலேயே வளர்ந்த முதலாளியின் இளம் மனைவி கீரைத் தண்டு போல் இல்லாமல் எப்படி இருப்பாள்? சுண்டினால் ரத்தம் கன்றி நிற்கும்; அப்படி ஒரு நிறம்.
உட்கார்ந்தால் நாற்காலி வழியும். அம்மா இருக்கிறார்கள் வீட்டில். இவருக்கு எருமைக் குணம். சேற்றில் புரள வேண்டும். கன்னப் பட்டை கட்டி வெளியே அனுப்ப இவர் என்ன வண்டிக் குதிரையா?
பெரியவர்தாமே என்று சற்றுத் தாராளமாகவே பழகிய பெண்ணுக்கு, இவர் உத்தியோகத்தில் மட்டுந்தான் பெரியவர் என்ற உண்மை, ஐயா அடுத்தமுறை சாப்பிட வந்தபோதே தெரிந்துவிட்டது.
மார்புக்குள் மறைந்து கிடந்த தாலிக்கொடியை உருவி மார்புச் சேலைக்கு மேல் வழியவிட்டிருந்தாள், நெருப்புக் கொடியாய். இவர் சிங்களவர். பண்பின் சமிக்ஞையை உணரும் சக்தி இல்லாமல் இருந்திருக்கலாம்.
‘மோகம் அகமியாகமனம் பண்ணாதிருப்பாயாக’ பரதாரத்தை அபேட்சியாதிருப்பாயாக’ என்ற தேவ கட்டளை கூடவா மறந்துவிட்டது? அதைத்தான் மனனம் செய்து வைத்துக் கொண்டு மந்திரம் படிக்கிறாரே!
கோவிலில் மண்டியிட்டுக் கூறமட்டும்தான் ஜபம் என்றால் அந்த ஜபத்தை படிக்க வேண்டிய அவசியம்…?
இவருக்குக் கீழ் வேலை செய்யும் இரண்டாவது குமாஸ்தா வின் மனைவியைப் போல முதலாளியின் மனைவியும் இருப்பாள் என்று பெரியவர் தப்புக்கணக்கு போட்டுக்கொண்டதன் விளைவு…?
பெரியவர் முதலாளியின் வீட்டுப்பக்கம் போவது அறு பட்டது; நாள் கிழமை என்றால் கூடக் கெட்டவர்கள் கெட்டவர் களை வைத்தே மற்றவர்களைக் கணித்துக்கொள்கிறார்கள்.
யாரை நோவது? தோட்டத்தில் போடும் ஆட்டத்தை வெளியே போடமுடியாத புகைச்சல் பெரியவருக்கு. இரண்டாவது மனைவி – அவள் என்ன செய்வாள், பாவம்! ஊர்விட்டு ஊர் வந்திருக்கின்றார்கள் பிழைக்க. யாழ்ப்பாணத் தில் வீடுகட்ட எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. முழுச் சம்பளத்தையே மீதம் செய்யும் அளவு கிம்பளம் தேடும் திறமை அவர்களுக்கே கைவந்தது. இல்லை என்றால் சாதாரண நூற்றைம்பது ரூபாய்க்குத் தோட்டத்துள் நுழைபவர்களுக்குப் பத்து வருடத்தில் அங்கே பங்களா ஒன்று முளைக்குமா? எப்படியோ வாழலாம் என்றால் பிறகு என்ன?
எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ, அந்த வாரத்திலேயே சின்னவர் மாட்டிக்கொண்டார். ஆடிட்டர்மார்களின் திடீர் வரவு இவர் கிம்பளம் தேடும் இடத்தில் போய் நின்றது.
பெரியவருக்கு வேண்டுமென்றால் அதையெல்லாம் சரிக்கட்டத் தெரியும், அவரா…?
விஷயத்தைப் பெரிதுபடுத்தித் துரைவரையில் ஓட்டிவிட்டு ஆதாயத்தைப் பார்த்துக்கொண்டார். ‘நான் சிங்களவன், நீ யாழ்ப்பாணத்தான்’ என்ற துவேஷம்.
வேலை பறிபோகும் நிலைகூட வந்துவிட்டது. ஆரம்பித்த வீட்டு வேலை என்ன ஆவது? ஐயா திகைத்தார். அம்மா திணறி னாள். ஊரில் உள்ளவர்கள் மென்று துப்புவார்களே என்ற கௌரவ பங்கம், தன் ஊர் ஆட்களைப்பற்றி அம்மாவுக்குத் தெரியும். யாழ்ப்பாணத்து மணல் காலை மட்டுமே சுடும். மக்களோ மனத்தையே பொசுக்கிவிடுவார்கள்.
பெரிய ஐயாவிடம் சென்று, தெரியாமல் நடந்துவிட்டது பிழை, மானேஜரிடம் கேட்டு மன்னிப்புப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்பதற்காக, அந்தி இறங்கியபின் சின்ன ஐயா நடந்தார் அம்மாவுடன், பெரியவரின் பங்களாவுக்கு.
வீடுதேடி வருபவர்களுக்குப் பெரியவர் கட்டாயம் உதவி செய்வார், ‘இருக்குமிடம் தேடி வந்தானே’ என்று.
பெண்ணின் கண்ணீருக்குச் சக்தி என்பதால்தான் சின்னவர் மனைவியையும் கூட்டிச் சென்றார். கண்ணீரைவிட அந்தக் கண் களுக்கே சக்தி அதிகம் இருப்பதைக் கண்டார் பெரியவர்.
இருதய ஆண்டவர் படமும், அணையாத சிவப்பு விளக்கு மாய், அமைதியாய்க் காட்சியளித்த முன்னறை, கோவிலைப் பிரதிபலித்தது. முன்னறையை விட்டு உள்ளறையில் அமர்ந்தே பேசினர் நால்வரும்.
ஆண்டவனிடமிருந்து மறைந்து நிற்கவே ஆசைப்படுபவர் பெரியவர். தாம் ஆணி அடித்து மாட்டிவிட்ட இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான் என்னும் அந்தக நினைவு.
கணவனின் வேலைத் தகராறு வெகு சிறிதாகப் பட்டது சின்னவரின் மனைவிக்கு, பெரியவரின் கண்களைப் பார்த்ததும், கண்வரியில் கொக்கியிடும் போதையைப் பார்த்ததும்.
பெரியம்மாவுடன் சின்னம்மாவைச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க விட்டுச் சின்னவர் தனியே வரவேண்டியதாயிற்று.
வெளியே சுருக்கத்தான் வந்தாள். இடைவெளி சுருங்கிய துடன் இணையவும் வேண்டி வந்து விட்டது.
அதன்பின் நடக்கும் அத்தனை பாவங்களுக்கும் அந்த முதல் நடையே காலாய் நின்று பந்தல் போட்டது.
இரண்டு மணி நேரம் ‘லீவு’ சிபார்சு செய்யவே எருமை யாய்க் கொம்பாட்டும் பெரியவர், இரண்டு மூன்று நாள் என்று லீவு வாங்கிக்கொடுத்து இவரை யாழ்ப்பாணம் அனுப்புகின்றார் என்றால், சின்னம்மாவின் தனிமையை அவர் எத்தனை தூரம் எதிர்பார்க்கின்றார் என்பது வெளிச்சமாகின்றதல்லவா?
யாழ்ப்பாணம் எங்கே, மலைநாடு எங்கே? இரண்டுக்கும் எட்டாத தொலை. இருவருமாகப் போவது என்றால், அதுவும் அடிக்கடி – கோச்சிக்காரனே கடன்காரனாக்கி விடுவானே!
சின்னவரின் அம்மாவை வெள்ளிக்கிழமை நாட்களில் பெரியவரேகூடப் பார்க்கமுடியாது. மூன்று மணிக்குச் சுவாமி அறையுள் நுழைந்தால் வெளியேவர ஏழாகும். அப்படி ஓர் அசுர பக்தி.
கட்டிக்கொள்ளும் பாவங்கள் கனமானவை. ஆகவே காட்டிக்கொள்ளும் பக்தியும் கனமாக இருக்கிறது
ஐயாவின் காட்டுத்தனம் தோட்டம் அறிந்த ஒன்று. சின்னவருக்கும் தெரியும். சின்ன விஷயம்’ என்று இருந்து விட்டார். பெரியம்மாவுக்கும் தெரியும். பெரிதுபடுத்திக் கொள்ள வில்லை .
ஆரம்பத்தில் காதைக் கடித்துக்கொண்ட மற்றவர்கள் பிறகு உதட்டைக் கடித்துக்கொண்டார்கள். ஊர் பார்க்கிறது என்றதும் இவர்கள் கண்களை மூடிக்கொண்டனர். அதுவும் தைரியந்தான்.
கிழமைக்கு ஒரு நாள் பாவ கீர்த்தனம் தவறுவதில்லை . பூசை தவறுவதில்லை. திவ்விய நற்கருணை பெறுவது தவறுவதில்லை.
பாவ சங்கீர்த்தனம் பண்ணுவது, பழக்கம் இல்லாத சுவாமி யாரைத் தேடி, திருச்சபையையே ஏமாற்றிவிட்ட பெருமையுடன்.
ஒருவாரம் செய்த பாவங்களைச் சுவாமியார் ஒருவரிடம் சொல்லிவிட வேண்டியது. அடுத்த வாரத்துக்கான பாவங்கள் அடுத்த வாரத்தில் ஒரு நாள்.
குப்பைத் தொட்டி நிறைவதும் காலிபண்ணுவதும் பிறகு நிறைவதும் போல. அதுவா பாவ சங்கீர்த்தனம்? அவருக்குமா பாவ மன்னிப்புக் கேட்கிறது?
அதோ ஆள்காட்டி விரல் தொட்ட ஆகமநீரை நெற்றியில் இட்டவண்ணம் காரில் ஏறும் பெரியவரின் முகம் காட்டும் திருப்தி; அவருக்குப் பாவமன்னிப்புக் கிடைத்துவிட்டதில் ஏற்பட்ட திருப்தியா? தான் பாவ சங்கீர்த்தனம் செய்துவிட்டார் என்பதில் ஏற்பட்ட திருப்தியா?
– கலைமகள் – டிசம்பர், 1964
– மீன்கள் (சிறுகதைத் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: ஜெயமோகன், முதற் பதிப்பு: டிசம்பர் 2013, நற்றிணை பதிப்பகம், சென்னை.