பாம்பு மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 4, 2021
பார்வையிட்டோர்: 3,408 
 
 

(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உயரக்கிளை பரப்பியிருந்த மரத்தை வெறித்துப் பார்த்தார் முஸ்தபா வாத்தியார். சாய்வு நாற்காலியில் நீட்டி நிமிர்ந்து சரிந்து கிடப்பது அவருக்கு சௌகரியமாக இருந்தது. மனதிற்குள் ஏதோ ஒரு அழுத்தம் இனம் புரியாத நெருடல் விரக்தியாய், வெறுமையாய் மூளைக்குள் கவிந்தன. ஜனமும், மரணமும் மனித வாழ்வின் எல்லைக் கோடுகளா? இடைப்பட்ட ஜீவித இருப்பில் மனிதன் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்துச் சாதனை நிகழ்த்த வேண்டாமா? என்பது குறித்து அவருக்கு ஒரு வெறித்தனமான உடன்பாடு இருந்தது.

நரம்புகள் தளர்ந்து இளமை வற்றிய அறுபது வயதிலா பெரிய சாதனை? உள்மனதிலிருந்து நியாயமான வினாவொன்று இடறிக்கொண்டு வந்தது. உலகின் பெரும் சாதனையாளர் உச்சத்தை எட்டிப் பிடிக்கையில் அரை நூற்றாண்டைத் தாண்டியிருந்தார்கள் என்பது வரலாற்றுத் தகவல். மனிதன் மூப்பில் தள்ளப்படும் போது மனம் ஏன் விடாக்கொண்டனாய் இளமையை நினைத்து ஏங்குகின்றது. முஸ்தபா வாத்தியார் ஓய்வு பெற்ற ஆசிரியர். குடும்பச் சுமைகளில் இருந்து அந்நியப்பட்டவர்.

நிறையப் புத்தகங்கள் படிக்கும் படிப்பாளி. இன்னும் படைப்பாளி ஆகிவிடவில்லை . ஓய்வூதியப் பணம் என்று மட்டுமல்லாது, மனிதன் வசதியோடு தான் வாழ்கிறார். வயல், கடை, விவசாயமென அன்றாட வாழ்வு ஆரோக்கியமாகவே சுழல்கிறது. இந்தக் கிராமத்தின் இனிய சூழல் மீது அவருக்குத் தனி ஈடுபாடு.

ஒரு ஆறு மாதங்களிருக்கும். இந்தப் பத்தேக்கர் காணியையும், அதனோடிருந்த பழங்கால வீடொன்றையும், மலிவு விலைக்கு வாங்கிப் போட்டார். இவருக்கு நான்கு வாரிசுகள். ஓர் ஆணும், மூன்று பெண் பிள்ளைகளும். மணமாகி ஆளுக்கொரு திக்கில், வசதிகளோடு தான் வாழ்க்கை . அவர்கள் ஓய்வு கிட்டும் பொழுதுகளில் இங்கு வந்து தந்தையைத் தரிசித்துவிட்டு, நேசம் சொரிந்து பின் போய்விடுவார்கள்.

முஸ்தபா வாத்தியாருக்கு இந்தக் காரை பெயர்த்த வீடும், காட்டுத் தோப்பும் நிம்மதியை அளித்தன. என்றாலும் ஒரு குறை இருக்கத்தான் செய்தது. மனைவி தன் கூடவே இருக்காமல் மகள் வீடே கதியெனப் பிரிந்து வாழ்வது தான். எப்போதாவது அவள் அபூர்வமாக இங்கு வந்து தங்கி, பின்னர் போய்விடுவாள். அவளுக்கு மகள், பேரக்குழந்தையென நகர வாழ்வு நன்றாய் பிடித்துப் போய்விட்டது.

-அறுபதுக்கு மேல் தாம்பத்திய உறவுகள் நீர்த்து வீரியமிழந்து போவது நடைமுறை வாழ்வின் யதார்த்தம். எனவே, அது பற்றிய அலட்டல்கள் இருவருக்குமே இல்லை என்பதால், பிரிந்திருப்பது ஒன்றும் பிரச்சனையாய் இல்லை . தனது இளமைக்கால வாழ்வை பல பொழுதுகளில் பின் நோக்கிப் பார்த்து, தனக்குள் பெருமிதம் கொள்வார். மூத்த மகன் பைரூஸ் இராணுவத்தில் உயர் அதிகாரி. ஒரு மகள் மகளிர் கல்லூரி அதிபர். மற்ற இரு மகள்களின் கணவன்மார்கள் கொழும்பில் கொழுத்த வர்த்தகர்கள்.

பரீத் என்னும் பணியாள் இவரிடம் நீண்ட காலங்களாகப் பணிபுரிந்து வருகிறான். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவிகள் புரியும் அவன் ஒரு தீவிர எஜமான விசுவாசி. காற்றில் குலுங்கிச் சிலிர்த்து தலையசைக்கும் தோட்டத்து மரங்களைக் கூர்ந்து பார்த்தார் முஸ்தபா வாத்தியார். கிளைகளில் படர்ந்த அணில்களும், பட்சிகளும் ஒன்றையொன்று துரத்திப் பிடித்து கண்ணாம்பூச்சி விளையாடின.

இக்காட்சி அவரது இளமைக் கால குறு குறுத்த அனுபவங்களை பெயர்த்து வந்த ஞாபக இழைகளில் இனிமை சேர்த்தன. யெளவனம் மனித வாழ்வின் சக்திவாய்ந்த ஒரு மையம். அது மீண்டும் வந்து கிடைக்கவா போகிறது? தீவிர சிந்தனைச் சிதறலில் புலன்கள் தடுமாறின. எதைச் சாதிக்கலாம்? என்ற உள்ளணர்வில் மனம் கிடந்து துடித்தது.

இலக்கியம், தொழில் முயற்சி, கல்வித்துறை, இவற்றில் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு, உயர் சாதனை புரியலாமா? இல்லை ! பிறரை வியப்பிலாழ்த்தும், புதிய தடமொன்றைக் கண்டு பிடித்தாக வேண்டும். இறுதியாக எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இருந்தது. தீர்க்கமாக ஒன்றை நிர்ணயித்து களமிறங்க ண்ேடும் என்ற வேட்கை உந்தி எழுந்தது. காற்றின் சுக விகசிப்பில் அவர் சிறிது கண்ணயர்ந்தார்.

“மாஸ்டர், ஓடி வாங்க, பாம்பு! பாம்பு!!” பரீதின் கூக்குரல் கேட்டு திடுக்குற்றார். விரைந்தோடி வந்தவருக்கு கண்ணெதிரில் ஆச்சரியம் காத்திருந்தது.

பற்றைக்கருகில் சரசரத்துச் சீறியெழுந்து படமெடுத்தாடியது சர்ப்பம். தேகாந்திரமெங்கும் உதறலெடுக்க பீதியால் உறைந்து நின்றார் அவர். அதன் தீவிர அசைவுகளை அச்சத்துடன் விலகி நின்று அவதானித்தார். கோடை வெய்யிலின் உக்கிர வெப்பம் சூழலைச் சுட்டெரித்தது. மரநிழல்கள் சலனமின்றி மரணித்துக் கிடந்தன. பாம்பை அடித்துக் கொல்லும் மனம் எளிதில் வரவில்லை .

இறைவன் படைத்த உயிர்ப்பிராணி. இம்சித்தல் ஆகாது என்னும் தத்துவ விசாரணை மேலோங்கியது. சர்ப்பம் அந்தப் பகல் பொழுதைப் பயங்கரமாக்கிக் கொண்டிருந்தது. அதன் தீவிர சுழற்சியினை ஒரு பயங்கலந்த பரவச உணர்வோடு உற்று நோக்கினார். சிரசில் ஓவியம் வரைந்ததைப் போன்று சரிந்து வளைந்து தெரிந்த படம்.

இரப்பர் துண்டாய் நீண்டு வெளியே கிடந்து அலைபாயும் சாம்பல் நிற நாவு, சடைத்துத் திரண்ட மேனியில் துண்டு துண்டாய் மின்னிப் பளபளக்கும் வழுவழுப்பான செதில்கள். சீதளக் குளிர்ச்சி கூர்த்தவிழிப்பார்வை காற்றொலியோடு போட்டி போட்டுக் கொண்டு பிரவகிக்கும் மூச்சின் சீறலோசை!

கண்களில் குடிகொண்டிருக்கும் தீட்சண்யத்தில் இமைக்காது தலையசைத்துச் சூழலும் கம்பீத் தோற்றம். எது வந்தாலும் ஒரு எச்சரிக்கை! பீதியூட்டும் பாவனை. எக்காளமும் திண்மையும் திரண்டுகிறங்கிய வியாபகமும். முஸ்தபா வாத்தியார் அசந்து போனார்.

சர்ப்பம் எத்தனை கலைத்துவமான அழகியல் வடிவம்? அற்புதம் நிகழ்த்திக் காட்டும். ஒரு அழகிய தேவதையின் திடீர் பிரவேசத்தில் சித்தம் தடுமாறிப் போன உபாசகனாய் அவர் நெகிழ்ந்து போனார். ஒரு பெரிய தடியோடு பாம்பை அடித்துக் கொல்லும். ஆவேசத்தோடு விரைந்து வந்தான் பரீத். அவர் கையுயர்த்திக் காட்டி, அடிக்க வேண்டாமென தடுத்து நிறுத்தினார். ஒரு தீவிர அகிம்சாவாதியைப் போல- –

அவரின் இந்த நடவடிக்கை பரீதுக்கு பெரும் வியப்பை அளித்தது. சூழ்நிலையின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட சர்ப்பம். அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரானது. போர்க்களத்தில் எதிர்விளைவுகள் காட்டமாயில்லை என ஊர்ஜிதம் செய்து நிர்ணயித்த பின் ஒருவித சமரசப் பாவனையில் அது தலை தாழ்த்தி தரையைத் தழுவியது.

கணங்கள் விரைந்திடும் முன் சலசலத்துப் புற்களிடையே மெல்ல ஊர்ந்து மறைந்தது. இரவு அவருக்கு சிறிதும் உறக்கம் வரவில்லை . பாம்பு பற்றிய கற்பிதங்கள் பயங்கர நினைவுகளாய் நெஞ்சில் நர்த்தனமாடின. சர்ப்பங்களோடு மனிதன் ஆபத்தின்றி உறவு கொள்ள இயலாதா? தனக்குள் நீண்டதொரு மனச்சமர் புரிந்து பார்த்தார். மதங்கள் ஆயிரம் நன்னெறிகளைப் பகரலாம்

அடிப்படையில் மனிதனும் ஒரு பயங்கர விலங்கு தான். அதனதன் இயல்பில் எதுதான் குரூரமாயில்லை ?

எறும்பு கூட மனிதனைக் கடிக்கும் என்பது யதார்த்தமாய் இருக்கும் போது எருமை முட்டித் தள்ளிவிடாது என்பது என்ன நிச்சயம்? எப்படியும் பாம்பை வசப்படுத்தியாக வேண்டும். அதன் மூலம் ஒரு புதிய சாதனையை உலகிற்கு நிகழ்த்திக் காட்ட வேண்டும்.

இது ஒரு பயங்கரச் சவால் இல்லையா? மரணம் பற்றிய பீதியிருந்தால் எப்படிச் சிகரங்களை எட்ட முடியும்? உயிர்ச்சரடினை கிழித்தெறியும் கோர விஷம் சர்ப்பத்தின் கொடுக்குப் பல்லில் குவிந்து கிடக்கிறது என்ற அபாயத்தை முஸ்தபா வாத்தியார் அறியாதவரல்லர். அதைச் சூட்சுமாக எதிர் கொள்ளும் லாவகத்தப்ை பற்றி இரவு பகலாகச் சிந்திக்கலானார். ஆழ்மனதில் அர்த்தமற்ற எண்ணங்கள் ஆர்ப்பரித்தன. படித்த புனைகதைகளில் வந்த சர்ப்பங்கள் மீண்டும் வந்து ஞாபக இழைகளாய் நெளிந்தன.

ஜெயமோகனின் நாகம் கதை படிப்பவரைப் பிரமிப்பில் ஆழ்த்தும் ஒரு அதிரடிப் படைப்பு. கற்பனாவாதத்தினாலும் ஒரு சிறந்த புனைகதையை உருவாக்கலாம் என்பதற்கு ஜெயமோகனின் நாகம், உடல் தழுவி புணர்ச்சி கொள்வதை வியாப்பிலாழ்த்தும்வண்ணம் கதையாக்கியுள்ளார். இது ஒரு உண்மைச் சம்பவமோவென மருளும்வண்ணம் அற்புதப்புனைவுத் திறன் கொண்ட கதையிது. மயக்குமொழி வார்த்தை ஜாலப் படைப்பாளர் என இலக்கிய உலகில் பேசப்படும் லா.சா.ராவிடம் நேர்காணலில் ஒரு கேள்வி வந்தது.

“உங்கள் பெரும்பான்மையான கதைகளில் பாம்பு ஒரு படிமமாக வந்து போகிறதே! அது ஏன்?” என்று. “சர்ப்பம் அச்சத்தை தருவிக்கும் உச்சக்கட்ட பிம்பம். மனிதனின் பீதியின் குறியீடு! மரணத்தை பல்லிடுக்குகளில் சுமந்து திரியும் கொடுமையான பிராணி. இன்றைய மனிதனின் வாழ்வியல் நீரோட்டம் ஏதோவொரு அச்சத்தின் அழுத்தத்தில் சுழல்கிறது. அதன் வெளிப்பட்டு உருவம் தான் சர்ப்பம்” என்று விடை வந்தது.

கேரளத்து மலையாள நாழிதழான மனோரமாவுக்கு வைக்கம் முஹம்மது பஷீர் அளித்த வாக்குமூலம் இது –

“என் வது காலில் கருநாகம்
ஊர்ந்து சென்றது கதையல்ல!
வீட்டு விருந்தாளிகளாய்
தோட்டத்துப் பாம்புகளின்
வருகை தொடர்ந்திருக்கிறது
ஆனால் அவை ஒரு போதும்
என்னைத் தீண்டியதில்லை!”

இவையனைத்தையும் அவசியம் கருதி, மீள்வாசிப்பு செய்தார். பாம்பு மீண்டும் வந்து தரிசனம் தராதா? அதன் குணவியல்புகளை நுட்பமாக கூர்ந்தறியும் சந்தர்ப்பம் கிட்டாதா? என்ற எதிர்பார்ப்பில் அவர் ஆழ்மனம் தவித்தது. அவை பற்றிய தேடல் உள்ளுணர்வில் உறையலாயிற்று. கோழி முட்டை களையும், பசும்பாலையும் காட்டுப் பற்றைக்கருகில் பரத்தி வைத்துவிட்டுச் சர்ப்பங்களின் வருகைக்காக கரிசனையோடு காத்திருந்தார்.

விஷக்கடி மூலிகைகள் பற்றிய நூல்களை ஆர்வத்தோடு, படித்திருந்தார். விஷக்கடி வைத்தியர்களுடன் தொடர்பு கொண்டதில் மூலிகை பற்றிய தகவல்கள் கிடைத்தன. இனி சர்ப்பங்களை நெருங்கலாம், ஆய்வுகளைத் தொடரலாம், என்ற நம்பிக்கை வலுத்தது. வைக்கம் பஷீர் கூறிய பாணியில், விருந்தாளிகளாய் பாம்புகள் தொடர்ந்து வந்தன. முட்டைகளை ஆர்வத்துடன் கொத்திக் குடித்து, பாலையும் அருந்திவிட்டு, அவை தன்பாட்டில் சென்றன.

அவர் உற்சாகமடைந்து, கூலியாட்களை, அழைத்து காட்டுக்குள் செல்வதற்கான, ஒற்றையடிப் பாதைகளை உருவாக்கினார். காலில் பூட்சும், தோளில் டெதஸ்கோப்புமாக, அடர்ந்த காட்டுக்குள் அச்சமின்றி சுற்றித் திரிந்ததில், சர்ப்பங்களை எதிர்கொள்ளும் அசாத்திய துணிவு வந்தது. தூர நோக்கியின் துணையில், அன்றாடம் நிறைய சர்ப்ப தரிசனங்கள் கிடைத்தன.

உரித்துப் போட்டிருந்த பாம்புச் சட்டைகளும், அதன் செதில்களும் பெரிய அளவில் வழியெங்கும் கிடந்தன. உணவு, தண்ணீருடன் வனத்திற்குள் சென்று, ஆராய்ச்சி செய்துவிட்டுத், தினமும் பொழுது சாய்வதற்கு முன் வீடு திரும்புவார். அவை பற்றைக்குள மறைந்திருந்து வன்மம் தீர்க்கலாம் என்ற முன்னெச்சரிக்கையில், கைத்துப்பாக்கி ஒன்றினைத் தன்வசம் வைத்திருந்ததில், அச்சம் சிறிதும் பிறக்கவில்லை . அந்த அடர்ந்த காட்டுக்குள் தன்னந்தனியாய் சுற்றித்திரியும் முஸ்தபா வாத்தியாரை நினைக்கையில், கிராம மக்களுக்கு வியப்பு மேலிட்டது. இது உயிராபத்தை விலைக்கு வாங்கும் வேலை, எனப் பலரும் அவரை எச்சரித்தனர்.

இவை எதனையும் பொருட்படுத்தாது, தனது இலக்கை நோக்கி காட்டுக்குள் துணிவுடன் வலம் வந்தார். புதர் மண்டிக் கிடக்கும் காட்டுப்பாதை, நெஞ்சில் உறுத்தவே இல்லை. சாதிக்க வேண்டுமென்ற வெறியில் உயிரணுக்கள் துடித்தன. மரணத்தின் பிடியில் நின்று, மாணிக்கம் தோண்டும் அபார முயற்சி! இப்பயணத்தில் சாவே நேர்ந்தாலும், சாதனை ஒன்றே குறிக்கோள் எனக் கருதினார்.

சூரியன் தன் வீரியத்தை இழந்து அடிவானில் சோர்ந்து உறங்கும் வேளை, சற்றுத் தொலைவில் நிகழ்ந்த அந்தப் பயங்கரக் காட்சியினைத் தொலைநோக்கி மூலம் கண்டு அதிர்வடைந்தார். உருவத்தில் பெருத்த நல்ல பாம்பொன்றும், உருவம் சிறுத்த கீரியொன்றும், உடல் சிலிர்த்து, கட்டிப்பிடித்துக் கவ்வி இரண்டும் பெரும் சமரில் ஈடுபட்டன. பாம்பின் தீண்டலினால் கீரியின் கழுத்திலும், உடலிலும் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

சர்ப்பம் கீரியினை சினந்து கொத்த, கீரி அதீத தினவுடன் அதன் கழுத்தைக் கவ்வி, குதறி நிலத்தில் தூக்கித் தூக்கிப் போட்டது. தன் வாழ்நாளிலேயே காணாத ஒரு அரிய காட்சியிலான முஸ்தபா வாத்தியார் கண்டு பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்.

போரின் உக்கிரம் இடைவெளியின்றி நீண்டு கொண்டிருந்தது! சில கணங்கள் ஓடிக் கரைந்தது. தற்போது சமரின் உச்ச கட்டம். வெற்றி யாருக்கு? கீரியின் கூர்பற்களுக்குள் வசமாக சிக்கிய பாம்பின் தலைப்பாகம் துண்டாடப்பட்டு, உடல் வேறு தலை வேறாகச் சிதறிக் கிடந்தன.

கீரி பற்றைக்குள் புரண்டெழுந்து துடித்து விஷத்தின் வெம்மையில் பதைபதைத்தது. சற்று நேரத்தில் சோர்வுடன் நிலத்தில் ஊர்ந்தது. அது எங்கு செல்கிறது? என அறியும் ஆவலில், அதனைப் பின் தொடர்ந்தார். காட்டின் நடுப்பகுதியில் குப்பைமேனி போன்ற ஒரு வகைச் செடி செழித்து வளர்ந்திருந்தது. அதன் இலைகளையும் – வேரினையும் கீரி தாவிப் பிடுங்கி மென்று தின்றது.

செடியினை உடலோடு இறுக அணைத்து, நிலத்தில் புரண்டு, குதூகலித்தது – கொடும் விஷத்தினைப் போக்கும் கீரி வணங்கி மூலிகை பற்றி அவர், வைத்திய ஏடுகளில் படித்தறிந்ததுண்டு. அம்மூலிகையினை இன்று நேரடியாகக் காணும் சந்தர்ப்பம் கிட்டியதில், பெரும் உவகையுற்றார். காட்டின் நடுப்பகுதிகளில் செழித்து வளரும் செடியென்றும், அதன் இலைகள், வேர்கள், இவ்வாறு இருக்குமெனவும், கீரிவணங்கிச் செடியினைப் பற்றி நூல்களில் படித்தறிந்ததைப் பற்றியும் தீர்க்கமாக அனுமானித்தார்.

இது சந்தேகமற கீரிவணங்கிச் செடிதான் என்பதினை தெளிவாக உணர்ந்து கொண்டார். விஷத்தின் நமைச்சலும், உபாதையும், தீர்ந்த உற்சாகத்தில் கீரி, துள்ளிக் குதித்து, விரைந்து சென்று மறைந்தது. இமயமலையை எட்டிப்பிடித்த குதூகலம் முஸ்தபா வாத்தியாரின் வதனத்தில் இழையோடியது. அந்தச் செடியின் இலைகளையும், வேரினையும் பிடிங்கியெடுத்து, பையில் போட்டு நிரப்பிக் கொண்டு வெற்றிப் பெருமிதத்தோடு வீட்டையடைந்தார். மூலிகையை இடித்து, சாறுபிழிந்து அருந்தும் பழக்கம் தொடர்ந்தது. இனி காரியசித்தி எவ்வாறு அமையப் போகிறது? என்பதினை அறியும் ஆவல் உந்தி எழுந்தது. சாவா? சாதனையா? என்பதை தீர்க்கமாகப் பரீட்சித்துப் பார்க்கும் தருணம் விரைந்து வந்தது. ஒரு நாள், தோட்டத்து பற்றைக்குள் சாவதானமாகப் பால் அருந்திக் கொண்டிருந்தது, பாம்பு. இனி அதனைப் பிடிக்கும் பிரயத்தனத்தில், உறுதி கலந்த துடிப்பு. ஒரு முறை அதனருகில் நெருங்கி, பின் பிரக்ஞையின்றி திகைத்து நின்றதும், சங்கடம் உள்மன அதிர்வுகளைத் தொட்டு உலுப்பியது.

அச்சம் மனிதனின் பரம சத்துரு! பீதியினால் உறைந்தவனுக்கு பிரபஞ்சமெல்லாம் இருட்டு, துணிந்தவனுக்குத் தான் வெற்றி!, கோழைக்குத் தோல்வி. கண்களை இறுக மூடியவாறு, ஒரு பூனைக்குட்டியை லாவகமாகப் பிடிப்பதைப் போன்று, தனது வலது கரத்தை அதன் கழுத்தில் போட்டார்.

திடீர் மின்னல் தாக்குதல்! அதிர்ச்சி! சர்ப்பம் கைக்கு அகப்படாமலம் நழுவி, மணிக்கட்டை ஒரு நொடியில் பதம் பார்த்துவிட்டு, சீற்றத்துடன் ஓடி மறைந்தது. தீண்டிய இடத்தில் சுள்ளென்று வலித்தது. ரத்தம் பிசுபிசுத்து உடல் அதிர்ந்து தலை சுற்றியது. வலியும், கடுப்பும், சேர்ந்து விஷம் குருதியணுக்களில் பரவுவதை உணர்ந்தார். மூலிகையைச் சாறாக எடுத்துப் பருகிவிட்டு, உறங்காமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

சிறிது நேரம் செல்ல, விஷத்தின் வேகம் உடலில் உறைக்கவில்லை. பாம்பு தீண்டிய உணர்வேயின்றி உற்சாகமாக அவரால் இருக்க முடிந்தது என்பதில் பெரிய அகமகிழ்ச்சி. நீண்ட தேடலின் வெற்றி கைக்குள் வந்துவிட்ட பேரானந்தம். இனி எந்தப் பாம்மையும் அவரால் வசப்படுத்த இயலும் என்பதே ஒரு இமாலயச் சாதனைதான்!

அவரது ஆன்மா எல்லையற்ற பெருமிதத்தில் மிதக்கலாயிற்று. இப்போது தோட்டத்தில் – ஒரு பெரிய பாம்புப் பண்ணையே உருவாகிவிட்டது. சிறு சிறு கட்டம் போட்ட கம்பிக் கூட்டினுள், விதவிதமான வர்ணங்களில் நிறையப் பாம்புகள் அங்கு குடியிருக்கத் துவங்கின. கூண்டினுள் முழு நேரமும், முஸ்தபா வாத்தியார் அடைபட்டுக் கிடந்தார். மேனியெங்கும் சர்ப்பங்கள் ஊர்ந்து ஸ்பரிசிக்க சந்தோஷமாக, அமர்ந்து, அவரால் புத்தகம் படிக்க முடிந்தது. சர்ப்பங்கள் சதாவும் அவரைத் தழுவிக் கொண்டே இருக்கும், இருப்பு, இயல்பாகி விட்டது.

இந்த அற்புதத்தைக் கண்டு களிக்க மக்கள் ஆர்வத்தோடு திரண்டு வந்தனர். முஸ்தபா வாத்தியார், என்ற இவரது நாமம் மங்கி, பாம்பு மனிதன், என்றே எல்லோரும் அழைத்தனர். பார்வையாளர் குழுமி வந்து, காசு கொடுத்து கியூவில் நின்று, பரவசமாகி, தினமும் வந்து கண்டு களித்தனர்.

எந்த விஷப்பாம்மையும் கையால் பிடிக்கும் அற்புத மனிதன் என்று பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வந்தது. அவரைப் பேட்டிகாண, வெளிநாட்டு ஊடகவியலாளர் வந்து நிறைந்தனர். பாம்பு மனிதனின் கீர்த்தி, திக்குத் திசையெங்கும் பரவ ஆரம்பித்தது.

உள்ளூர் சர்ப்பங்களோடு, சர்வதேசப் பயங்கரப் பாம்புகளையும், விலை கொடுத்து வாங்கிப் பண்ணையில் உலவவிட்டார். அவற்றுள் சில அவரைக் கொத்தவும் செய்தன. அதனால் எந்த பாதிப்பிற்கும் அவர் உள்ளாகவில்லை . பணமும், பாராட்டும், வந்து குவிந்தன. கின்னஸ், உலக சாதனையாளர் வரிசையில் பாம்பு மனிதன் இடம்பெறப் போவதாகப் பரவலாகப் பேசப்பட்டது. விஷத்தை முறிக்கும் கீரிவணங்கிச் செடிதான், அவரது உயிரைக் காக்கும் அரண் என்பதை இன்னும் வெளியுலகு அறியாமலே இருந்தது. பிள்ளைகளும், மனைவியும், வந்து இவ்வரிய சாதனை கண்டு, பெருமிதம் அடைந்தனர். பாம்பு மனிதனின் அற்புதச் செயல்கள் எங்கும் விதந்து பேசப்பட்டன. ஒரு நாள் அந்த அதிர்ச்சிதரும் செய்தி, காட்டுத்தீயாய் ஊருக்குள் பரவியது. பாம்பு மனிதனை ஒரு கொடூரச் சர்ப்பம் தீண்டி, மரணித்துவிட்டதாக அச்செய்தி இருந்தது. பாகன், வளர்த்த யானையினால் மிதிபட்டுச் சாவதைப் போல, பாம்பு மனிதனும் இறுதியில் சர்ப்பம் தீண்டி மாண்டு போனான் என்ற விமர்சனங்கள் எங்கும் எழுந்தன.

அவரது சடலத்தை கூண்டிலிருந்து வெளியே எடுப்பதற்கு அதீத பிரயத்தனங்கள் செய்ய வேண்டியதாயிற்று. உயிரற்ற சடலத்தில் பாம்புகள் ஊர்ந்து திரிந்தன. வேலையாள் பரீத் தைரியமாக கூண்டினுள் நுழைந்து, பாம்புகளைப் பக்குவமாக விலக்கி, ஜனாஸாவை வெளியே கொண்டு வந்தான். அவரது நெற்றிப் பொட்டில் பாம்பு தீண்டிய காயம் இருந்தது. மரணச் செய்தி கேள்வியுற்று, பெருந்திரளான கூட்டம், குழுமிவிட்டது. ஜனத்திரள் கட்டுக்கடங்காமல், திணறியது.

மனைவியும் பிள்ளைகளும் சோகம் தாளாமல் கதறியழுதனர். மகன் பைரூஸ் இராணுவத்தினரோடு வந்துநின்று துயரம் சொரிந்தான். பாம்புகளை, கடும் சீற்றத்தோடும், வெறுப்போடும் பார்த்தான். பிறகு உணர்ச்சி வசப்பட்டு, இராணுவத்தின் துணையோடு, பாம்புப் பண்ணைக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினான். தீ கொழுந்து விட்டு எரிய, சர்ப்பங்கள் பதைபதைத்து, கருகிச் சுருண்டு மடிந்தன. சில தப்பிச் செல்ல எத்தனித்த போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

சில கணங்களில் பாம்புப்பண்ணை சுடுகாடாய்க் காட்சி அளித்தது. மரணவிசாரணை அதிகாரியும், வைத்தியர்களும், மரணம் தொடர்பான விசாரணையையும், வைத்தியப் பரிசோதனையும் நடத்தினர். ஜனாஸா நல்லடக்கத்தின் பின்

அங்கொரு பிரளயம் வெடித்தோய்ந்த அமைதி நிலவியது. வைத்திய பெறுபேறும், மரணச் சான்றிதழும் வந்திருந்தன.

முஸ்தபா வாத்தியார், பாம்பு தீண்டி மரணமடைந்தார் என்பதற்கு உடலில் எவ்வித ஆதாரங்களும் இல்லை ! திடீர் மாரடைப்பினால் மரணம் சம்பவித்துள்ளது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

சாம்பல் மேடாகி வெறிச்சோடிப் போன, பாம்புப் பண்ணை, வெற்று நிலத்தை, பைரூஸ் ஏக்கத்தோடு வெறித்துப் பார்த்தான். நெஞ்சுக்குள் குற்ற உணர்வு அனலாய் கனன்றது.

– ஆகஸ்ட் 2004 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *