பரத நாட்டியமும் சில பெண்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 7,731 
 
 

“அம்மா! டான்ஸ் கிளாஸ் போகணும்!” காலில் செருப்பணிந்து, வெளியே கிளம்பத் தயாராக நின்ற லதா கையாலாகாதவளாய் முனகினாள். வன்செயல்களின் கூடாரமாக இருந்த அந்தப் புறம்போக்குப் பகுதியில் ஒரு பதின்மூன்று வயதுப்பெண் தனியாக நடக்க முடியாது.

மகளின் ஆர்வத்தைத் தடை செய்வதா, அல்லது கணவனின் இச்சைக்கு உடன்படுவதா என்று தேவகி குழம்பினாள்.

உள்ளே உட்கார்ந்திருந்தவனின் குரல் இரைச்சல்போல் கேட்டது: “எங்க இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டே, அதுவும் ஞாயித்துக்கிழமை காலையில?” நேரம், காலமின்றி, எப்போது வேண்டுமானாலும் மனைவியுடன் சல்லாபிக்கலாம் என்ற பேராவலுடன் வாராந்திர விடுமுறையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தவனது கேள்வியில் ஏமாற்றம், அதனால் எழுந்த கோபம் தொக்கியிருந்தது.

முதல் நாளிரவு ஏதோ படத்தைப் பார்த்துவிட்டு, இருவரும் ஆட்டம் போட்டதை தேவகியும் நினைத்துப்பார்த்தாள். அந்த நெகிழ்ச்சியில் மயிர்க்கால்கள் குத்திட, உடலெங்கும் சிலிர்த்தது. அதன் எதிரொலியாக, இன்று பகலிலும் அந்த நிகழ்வு தொடரும் என்பதை அவள் அனுபவத்தில் அறிந்ததுதான்.

“வந்து.., லதா.. டான்ஸ்..,” என்று தயங்கினாள்.

“டான்ஸ் கத்துக்கறாளாம், டான்ஸ்! பெரிய சிம்ரன், பாரு, இவ! ஒம்பொண்ணு மேடையேறினா, பாக்கறவங்க சிரிப்பாங்க. மேடையே இடிஞ்சு விழுந்துடாதா!” என்றெல்லாம் இளக்காரமாகச் சொல்லிப் போனவன், “ எனக்குக் காலெல்லாம் குடையுது. ஒங்களுக்காகத்தானே ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி நேரம் டாக்சி ஓட்டறேன்! சொந்தமா காடி வாங்கவும் விடமாட்டறாங்க. கிடைக்கிறதெல்லாம் ஓனருக்குக் குடுக்க வேண்டியதிலேயே சரியாப்போயிடுது!” என்று தன் விதியை மீண்டும் நினைவுபடுத்தினான்.

லதா உள்ளே வந்தாள். “சரிம்மா. நான் போகலே. அப்பா பாவம்! நீங்க அப்பா கால்லே எண்ணை தேய்ச்சுவிடுங்க!”

இந்த அறியாப்பெண்ணுக்கு எவ்வளவு தூரம் உண்மை புரிந்திருக்கிறது என்ற குழப்பம் எழுந்தது தேவகிக்கு. குற்ற உணர்ச்சியும், அவமானமும் ஒருங்கே எழுந்தன. “டீச்சர் ஏசமாட்டாங்க?”

லதா அதற்குப் பதில் சொல்லவில்லை. பள்ளியிலும் அவர்கள் இனத்திற்குத் திட்டு. நாட்டில் சிறுபான்மையினர். அதனால், எங்கும் மரியாதை கிடைப்பதில்லை. மலாய், சீனர், இந்தியர் என்று, வித்தியாசமில்லாது எல்லா ஆசிரியைகளும் திட்டுகிறார்கள். ஏன், இந்த டான்ஸ் டீச்சர்கூட, `வாயில விரல் போடாதேன்னு எவ்வளவு தடவை சொல்றது!’ என்று திட்ட, எல்லா மாணவிகளும் சிரிக்கவில்லை? ஏனோ, அவளைப் பார்த்தால் எல்லாருக்கும் திட்டத் தோன்றுகிறது!
சில மாதங்களுக்குமுன், `இன்னிக்கு டி.வியில நல்ல படம் ஓடுது!’ என்ற அவளது மறுப்பைமீறி, தாய் அவளை அந்த பரதநாட்டிய வகுப்பில் சேர்த்திருந்தாள் — அருகிலிருந்த கோயிலில் இலவசமாகக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது ஒரு காரணம். அத்துடன், அந்த ஆறு மாடிப்பகுதியிலிருந்த எல்லா பெண்களும் நாட்டியம் பயிலப் போனார்கள்.

தொலைகாட்சி அருகிலேயே அமர்ந்து, வாய் நாட்டியம் நல்ல உடல்பயிற்சி என்று பக்கத்துவீட்டு அம்மாள் கூற, தேவகிக்கு ஆசை பிறந்தது. பெரிய எதிர்பார்ப்புடன் மகளை அவ்வகுப்பில் கொண்டு விட்டிருந்தாள், `என் மக கொஞ்சம் குண்டு, டீச்சர். கத்துக்குடுப்பீங்களா, டீச்சர்?’ என்ற கெஞ்சலுடன். (ஓயாது முறுக்கு, மிக்ஸ்சர், கச்சான் (நிலக்கடலை) என்று கொரித்தபடி இருந்ததால் லதா பெயருக்கு ஏற்றபடி கொடியாக இல்லை).

சில மாதங்களிலேயே, மகளின் வாய்க்குள்ளேயே இருந்த வலது கை கட்டைவிரல் மற்ற விரல்களுடன் இணைந்து முத்திரைகள் பழகுவதைக் கண்டு தேவகிக்குக் கொள்ளை மகிழ்ச்சி.

இப்போது நாலைந்து வாரங்களாக, அவளை அழைத்துப்போக முடியவில்லை. வீட்டில் யாருக்காவது உடம்புக்கு ஏதாவது வந்துவிடும். இல்லை, உறவினர் யாராவது இறந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணம்!

இந்தக் கஷ்டங்கள் டான்ஸ் பழகிக்கொடுக்கும் டீச்சருக்குப் புரிகிறதா! `போன வாரம் ஏன் வரவில்லை?’ என்று திட்டுவாள்.

“எல்லாரும் வந்திருக்கீங்களா?”

பல மாணவிகள் ஒரு குரலில் பதிலளித்தார்கள்: “லதா வரல்லே, டீச்சர்!”

தலையே ஒரு முறை பக்கவாட்டில் ஆட்டிக்கொண்ட நடன ஆசிரியை, “நீங்க ஒழுங்கா வந்தாத்தான் பொங்கலுக்கு நம்ப கோயில்ல ஆடமுடியும்!” என்றபடி, கருமமே கண்ணாக, தலைக்கோலை இரண்டு தட்டு தட்டினாள். பூமியை வணங்கிவிட்டு, ஆடத்தொடங்கினார்கள் அப்பெண்கள்.

“தேவகி! ஒங்க மகளும் பொங்கலுக்கு ஆடப்போகுதா?” அவசரமாக தேத்தூள் வாங்க கீழே இருந்த கடைக்குப் போனபோது, அங்கு யாரோ கேட்டார்கள்.

நான்கு பேருக்கு முன்னால் ஆடும் அளவுக்கு மற்ற பெண்கள் தேர்ந்துவிட்டார்களா?

தேவகி மாடிப்படிகளில் தாவி ஏறினாள். “லதா! புறப்படு சீக்கிரம்! இன்னிக்கு டான்ஸ் கிளாஸ் இருக்கில்ல?”

லதா காதில் விழாதமாதிரி இருந்தாள். இன்று பள்ளிக்கூடமும் இல்லை. டீச்சர்களிடம் ஒரு நாளாவது திட்டு வாங்காமல் இருக்கலாம் என்று பார்த்தால், இந்த அம்மா ஒன்று!

இந்தப் பெண் ஏனிப்படி எதிலும் பிடிப்பின்றி இருக்கிறாள் என்ற ஆயாசத்துடன், “குளிச்சுட்டு, புறப்படு சீக்கிரம்!” என்று துரிதப்படுத்தினாள் தாய்.

அப்படியும் லதா எழுந்திருக்கவில்லை.

“நல்ல பொண்ணில்ல! வாம்மா! கமலா, ரேவதி எல்லாரும் ஆடப்போறாங்களாம். யார்கிட்டயாவது கேட்டு, ஒனக்கும் ஜிமிக்கி, கழுத்துக்கு முத்து மாலை எல்லாம் வாங்கித் தரேன். டீச்சர் பளபளான்னு பட்டு மாதிரி இருக்கிற டிரெஸ் வாங்கிக் குடுப்பாங்க!”

“படம் முடிஞ்சுடும்,” என்று முணுமுணுத்தபடியே எழுந்தாள் லதா.

அவர்கள் போனபோது வகுப்பு ஆரம்பித்திருந்தது. தரையையும், ஆசிரியையும் தட்டிக் கும்பிட்டுவிட்டு, பிற பெண்களுடன் சேரப்போனாள் லதா.

“இங்க இருக்கு வீடு! இவ்வளவு லேட்டா வந்திட்டு, எங்க பாதி டான்ஸில..? கொஞ்சம் இரு!” டீச்சரின் எரிச்சலான குரலைவிட பிற பெண்களின் பரிதாபப் பார்வைதான் அவளால் பொறுக்க முடியாததாக இருந்தது. அவளைச் சமாதானப்படுத்த கட்டை விரல் வாயை நாடியது.

`வாயிலே விரல் போடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? அதுவும் கோயில்லே!’ என்று எப்போதும் கண்டிக்கும் ஆசிரியை அன்று அவளை அலட்சியப்படுத்தினாள்.

`எவ்வளவு முயன்றாலும் சிலபேரைத் திருத்த முடியாது. அவர்களுக்காகச் செலவிடும் நேரத்தில் உபயோகமாக வேறு ஏதாவது செய்யலாம்!’ என்று முடிவெடுத்தவள்போல், பிற மாணவிகளிடம் தன் கவனத்தைச் செலுத்தினாள்.

“சிரிச்ச முகமா இருக்கணும். மொறைச்சுக்கிட்டு ஆடினா, யாருக்கு ஒங்களைப் பாக்கப் பிடிக்கும்? அதுக்காக, புலித்தோலுன்னு காட்டற இடத்தில சிரிச்சு வைக்காதீங்க. எத்தனை பேர் புலி சிரிச்சு பாத்திருக்கீங்க?”

சிரிப்பை அடக்க முடியாது தோழிகள் ஆடியபோது, லதாவுக்கு மட்டும் அழுகை வந்தது. மூக்கை உறிஞ்சினாள்.

மகளைப் பார்த்த தேவகியின் குற்ற உணர்ச்சி இன்னும் அதிகரிக்க, “டீச்சர்!” என்று மெள்ள அழைத்தாள்.

“ஷ்..! கொஞ்சம் இருங்க. ஒத்திகை நடக்குது!”

“விழாவில லதாவும் ஒரு மூலையில நின்னு ஆடட்டுமே, டீச்சர்!”

முகத்தை நன்றாகத் திருப்பி, தேவகியைப் பார்த்தாள் ஆசிரியை. முகத்தில் கடுமை. “நான் வீட்டில கைப்பிள்ளையை விட்டுட்டு, இருபதும் இருபதும் நாப்பது மைல் கார் ஓட்டிட்டு, இருக்கிற ஒரு லீவு நாளிலேயும் இங்க வரேன். எதுக்கு? ஒங்க குழந்தைங்க முன்னுக்கு வரணும்னு. ஆனா, இங்க, பக்கத்திலே, இருக்கிற இவளுக்கு ஒழுங்கா வர முடியல!” லதாவைச் சுட்டிக் காட்டியபடி பொரிந்தாள்.

“அவங்கப்பாவுக்கு..,” மேலே எதை, எப்படிச் சொல்வது என்று விழித்தாள் தேவகி.

`நிறுத்துங்கள்!’ என்பதுபோல் டீச்சரின் கை பாவனை காட்டியது. “அடுத்தடுத்து என்ன வருதுன்னு தெரியாம, லதா மத்தவங்களைப் பாத்துப் பாத்து ஆடறா. அப்படி அரைகுறையா ஆடினா, பாக்கறவங்க என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க?” படபடப்பில் குரல் ஓங்கியது. `ஓசிக்கிளாசுன்னா, மட்டமாத்தான் இருக்கணுமா?”

பிறகு, அவர்கள் அங்கிருப்பதையே மறந்தவளாக, “கோகிலா! `ஆதிமூலமே’ங்கிற இடத்திலே இடது காலை இன்னும் கொஞ்சம் நீட்டும்மா!” பேசுவது அவளேதானா என்று சந்தேகம் எழுமளவுக்கு குரல் குழைந்திருந்தது.

தொடர்ந்து அவள், “கோகிலாவைப் பாத்து மத்தவங்க கத்துக்கணும்!” என்றது யாருக்காகச் சொல்லப்பட்டது என்று எல்லாரும் நன்றாகவே புரிந்தது.
சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு, சற்று விந்தி நடந்த பெண் கோகிலா. `தினமும் காலையில முளைவிட்ட சுதேசிக் கச்சானை பச்சையாகவே சாப்பிடு,’ என்ற டீச்சரின் அறிவுரையைப் பின்பற்றியதில், தசைகள் வலுவடைந்திருந்தன. வாரந்தவறாது, நாட்டிய வகுப்புக்கு வந்தாள். இப்போது தன்னம்பிக்கையும் வந்திருந்தது. தன் உடல் குறையையும், அதன் பாதிப்பான உணர்ச்சிப்பெருக்கையும் மறந்தாள். நிமிர்ந்து நிற்க முடிந்தது.
அவளது துணிவை, ஊக்கத்தை, பாராட்டும் விதமாக, முன்வரிசையில் நின்று ஆடும் வாய்ப்பை அவளுக்கு வழங்கியிருந்தாள் டீச்சர்.

கோகிலாவையே பொறாமையுடன் வெறித்தாள் லதா.

உதடுகள் பிதுங்க, வீட்டுக்கு நடந்தாள். “கோகிலாவுக்கு சரியாவே நடக்க முடியாதும்மா. அவகூட ஆடறா. என்னை மட்டும்..டீச்சர்..!” மீதியை அவளுடைய விம்மல் சொல்லிற்று.

வீட்டை அடைந்ததும், “என்னை அம்போன்னு விட்டுட்டு, மகாராணி எங்கே போயிட்டீங்க?” என்று வேடிக்கையாகக் கேட்ட கணவனிடம், “ஒங்களுக்கு வேற வேலை என்ன? எப்பவும் படுக்கையும், தூக்கமும்தான்!” என்று எரிந்து விழுந்தாள் தேவகி.

அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், “அதான் நாம்ப இப்படியே சீரழிஞ்சுக்கிட்டு இருக்கோம்!” என்று சொல்லியபடி தானும் அழ ஆரம்பித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *