நேர்மைத்திறமுமின்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 7,014 
 
 

கிராமத்திலிருந்து அப்பா அடுத்தவாரம் சிலவேலைகளை முடிக்க சென்னைக்கு வரவேண்டியிருப்பதாகவும், அப்போது எங்களுடன் வந்து இரண்டு நாட்களாவது தங்கிச்செல்வதாகவும் தொலைபேசியில் தெரிவித்தார். அவரின் சென்ற வருகை ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் பொங்கலின்போது. அப்போதுதான் ஏதோ ஒரு திருப்புமுனை:அவரிடம் ஏகப்பட்ட மாற்றங்கள், என்று அம்மா அடிக்கடி சொல்வாள். அவர் வந்தபோது நடந்த நிகழ்வுகள் நெஞ்சில் நிழலாடத்தொடங்கின.

அலுவலகத்தில் முக்கியவேலை இருந்தாலும், என் வீட்டுக்காரர் பொங்கல் விழாவுக்கு கிராமத்திற்கு அழைத்துச்செல்லத்தவற மாட்டார். என் பிறந்தவீடும் அருகிலுள்ளதால், அங்கு சென்று கொண்டாடும் வழக்கம் தொடர்ந்தது. அந்த வருடம் முடியாது என்றுவிட்டார். அவருக்கும் அலுத்து விட்டது போலும். முன்னர்போல் கிராமம் விழாக்கோலம் பூண்டு விமரிசையாக எல்லாம் நடக்கிறதா என்ன? அறுவடை சிறப்பாக இருந்தால்தானே அது சாத்தியம்.

ஒருவாறு தயாராகி அடுக்குமாடிக்குடியிருப்பிலேயே பொங்கல் வைத்துக்கொண்டாடினோம், எவர்சில்வர் பானை, குக்கர், காஸ் அடுப்பு சகிதம். காணும்பொங்கலுக்கு எல்லோரும் கடற்கரைக்கு சென்றோம். கூட்டமான கூட்டம். நான்கே வயதான சுவேதாவை பத்திரமாக அழைத்துக் கொண்டு வருவதே பெரும்பாடாகி விட்டது. கூட்டம் இருந்தது :கொண்டாட்டம் இல்லை.

கிராமத்தில் காணும்பொங்கல்தான் சிறுமிகளின், கன்னிகளின் விழா. அன்று பெண்கள் சாதிமத, வயதுவித்தியாசமில்லாமல் கூடி கும்மியடிப்பர். ஆண்களுக்குத்தான் சாதிமத பேதம்: ஆதிக்கசாதி, அடிமைச்சாதி என்று. பெண்களுக்கு ஏது? எல்லாப் பெண்களும் பிள்ளைபெறுகிறசாதி மட்டும்தானே! எல்லோரும் வீட்டிலிருந்து கொண்டுவரும் நொறுக்குத்தீனி , உணவுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வர். வயதுப்பெண்கள் கூடுமிடத்திற்கு விடலைப் பையன்கள் வராமலிருப் பார்களா? தங்கள் திறமையைப்பறைசாற்ற வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவர்.

காவிரிக்கிளையாற்றின் அருகே எங்கள் வீடு. அக்காலத்தில் இளம் பிராயத்தினரின் கேளிக்கைக்கும் பொழுது போக்குக்கும் ஒரே ஆடுகளம் ஆறுதான். நீச்சல் இங்குபோல் பாதுகாப்பான சூழ்நிலையில் கற்றுக் கொண்டோமா என்ன? ஆண்பெண் அனைவருக்கும் நீச்சல் அத்துப்படி. சிறுவயதில், ஆற்றின் போக்கிலேயே காலால் தம்பட்டம் அடித்து செல்வது: பின்னர் கரையேறி நடந்து புறப்பட்ட படித்துறைக்கே வந்து, மீண்டும் குதித்து அலுக்காமல் ஆற்றின் போக்கிலேயே செல்வது: இப்படித்தான் அங்கு நீச்சல் கற்றுக் கொண்டோம். சமீப காலத்தில் காவிரியின் வறண்ட நாளங்கள் அடிவயிற்றைப்பிசைவது போல் வலியை ஏற்படுத்துகின்றன.

‘வான்பொய்த்தாலும் தான் பொய்யாக்காவேரி ‘ என்ற எண்ணத்தில் மமதையுடன் இருந்தனர் எங்கள் பகுதி மக்கள். நிலமகளும் வஞ்சனையின்றி வாரிவழங்கி மகிழ்வாள். மனிதர்கள்தான் தவறு செய்வார்கள்: இப்போதெல்லாம் இயற்கையும் சேர்ந்தல்லவா சதிசெய்கிறது

அப்பா சொன்னதுபோல் பொங்கல் முடிந்து இரண்டுநாட்களில் வந்தார். விடியற்காலை வந்தவர் சற்று ஓய்வு எடுத்தபின்னர், குளித்து முடித்து சாமி கும்பிட்டுவிட்டு, மேசையின்முன் அமர்ந்தார். “பொன்னி! உங்கம்மா காவேரி கொடுத்தனுப்பிய காய்கறிகள், பழங்கள், தின்பண் டங்களெல்லாம் அந்த சாக்கு மூட்டையில் இருக்கிறது: வீணாக்காமல் பத்திரமாக எடுத்துவை”. என்றார். “ஆகட்டும் அப்பா!’ என்றேன். சிற்றுண்டி பரிமாற ஆரம்பித்தேன். “ஏம்மா பொன்னி! மாப்பிள்ளை சாப்பிடவில்லையா? சுவேதா எழுந்திரிக்க வில்லையா? இன்று பள்ளி உண்டுதானே?” என்று கேட்டார். “உங்கள் மாப்பிள்ளை இரவு பன்னிரண்டுமணிக்குத்தான் வேலைமுடிந்து வந்தார். ‘இப்படி பெருநிறுவனங்களில் குப்பைகொட்டு வதற்கு பதில், நம் பரம்பரை விவசாயமே மேல் ‘என்று முன்னர் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது சொல்வதில்லை. காரணம் உங்களுக்கே தெரியும். சுவேதா எழுந்தவுடன் பரபரவென்று பறப்பாள். நீங்கள் சாப்பிடுங்கள். ரயிலில் கண்விழித்து வந்திருப்பீர்கள்” என்றேன். “தூங்கிக்கொண்டுதான் வந்தேன். வந்தவிஷயத்தைக் கேட்கவில்லையே! நம் கூட்டாளி களெல்லாம் நாளை பஸ் ஏற்பாடு செய்துகொண்டு வருகிறார்கள். உங்களை எல்லாம் பார்த்து பலநாட்களாயிற்றேயென்று, நான்மட்டும் முன்னதாகக்கிளம்பி வந்தேன்”

“அப்படி பஸ் ஏற்பாடுசெய்துவந்து இங்கு என்ன செய்யப்போகிறீர்கள்?”

“என்னம்மா நீ? பேப்பரில் பார்க்கவில்லையா? எங்கள் அமைப்பு காவிரிப்பிரச்சினைக்காக நடத்தும் பன்னிரண்டாவது போராட்டம் இது.”

இன்னும் இரண்டு இட்டிலிகளை வைத்துக்கொண்டே, “ஏனப்பா? இந்தப்போராட்டங்களினால் தண்ணீர் திறந்துவிடுவார்களா, என்ன?” என்று கேட்டேன்.

“அவர்கள்தான் மசியமாட்டேனென்கிறார்களே! உற்பத்தியாகுமிடம் அவர்கள் மாநிலத்திலிருக்கிறது. அவர்கள் மனசுவைத்தால்தான் உண்டு என்று நடந்துகொள்கிறார்கள்”.

நான் சிரித்துக்கொண்டே, “அப்பா! நானொன்று கேட்டால் கோபித்துக் கொள்ளமாட்டீர்களே! நீங்களும், சிறிய அளவில், இதையேதானே செய்தீர்கள். நம் வயலுக்கு கிழக்கேயும் தெற்கேயும் இருந்த நிலங்களுக்கு தண்ணீர்விடாமல், என்னென்ன செய்வீர்கள் என்று எனக்குத்தெரியாதா என்ன? இரவோடிரவாக வரப்பை வெட்டிவிடுவதும், அடைப்பதும், மடையை மாற்றிவிடுவதுமாக உங்கள் பண்ணையாட்கள் தான் தயாராக இருப்பார்களே! நம்மூர் சிறியவிவசாயிகளுக்கும் தண்ணீரைப் பகிர்ந்தளிப்போம் என்ற பெருந்தன்மை உங்களிடம் இருந்ததா? தான் முழுவதும் பயன்படுத்திக்கொள்வோம், மீதமிருந்தால் அவர்களுக்கும் கொடுப்போம் என்ற சுயநலம்தானே அதற்குக்காரணம். தண்ணீர் தகராறில், உங்கள் ஒன்றுவிட்ட தம்பியின் கையையே வெட்டியவ ராயிற்றே நீங்கள்! இன்னும் அவரது வலதுகை வளைந்து எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்த முடியாமல்தானே இருக்கிறது”.

“நீ என்னம்மா! குடும்பச்சண்டையோடு போராட்டத்தை ஒப்பிட்டு பேசுகிறாய்! அதுவேறு:இதுவேறு”

“இல்லையப்பா! அதேமனப்போக்கின் சிறிய அளவிலான வெளிப்பாடு தான் உங்களுடையது”.

“என்னம்மா? அப்பாவைவிட அதிகம் படித்துவிட்டோம் என்று பேசுகிறாயா?!”

“அதிகம் எங்கேயப்பா என்னை படிக்கவைத்தீர்கள்? நான் படித்த பன்னிரண்டாவது வகுப்பு இங்கு மிகக்குறைந்த படிப்பு. தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லோருடனும் சண்டைபோட்டு, எவனாவது என்னை வைத்து உங்களைப்பழிவாங்கிவிடுவானோ என்று நினைத்து, என்னை பக்கத்து நகரத்திலிருந்த கல்லூரிக்கு அனுப்பவில்லை”.

“உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை கடைபிடிக்காதவர்களை ஆதரிக்கிறாயா?”

“நான் ஒன்றும் அவர்கள் செயலை நியாயப்படுத்தவில்லை. அவர்கள் செய்வது அடாவடித்தனம்தான். அப்பா! நீங்கள் ஒருமுறை என்னை ‘காந்தி’ திரைப்படத்திற்கு அழைத்துச்சென்றது ஞாபகமிருக்கிறதா? அதில் ஒரு காட்சி. காந்தி சட்டப்படி தப்பு செய்திருப்பதாகவும், கோர்ட்டார்முன் ஆஜர்படுத்துவதற்காகவும், கூண்டிற்கு அழைத்து வருவார்கள். தள்ளாமையின் பிடியில் காந்தி மெதுவாக நடந்து வருவார். நீதிபதி தன் இருக்கையை விட்டு எழுந்து அவரை வணங்கிவிட்டு அமர்வார். அந்த காட்சியைப் பார்த்தபோது, எனக்கு அழுகையே வந்துவிட்டது. உண்மைக்கும், நேர்மைக்கும் நீதியே தலைவணங்கும் என்பதற்கு சாட்சிதானே அது. அது என்ன கற்பனையா? உண்மைச் சம்பவம்தானே!. காந்திக்கு இருந்த பண்புகளில் நூற்றில் ஒரு பங்காவது இப்போதுள்ள தலைவர்களுக்கு இருக்கிறதா?”

“பொன்னி! நீ ஏன் பழம்பஞ்சாங்கம்போல், அந்தகாலக்கதையைப்பேசிக் கொண்டிருக்கிறாய்? நிகழ்கால அரசியல் உனக்குப்புரியாது”

” கோடிகோடியாய் கொள்ளையடிப்பதற்கு ஆட்சியைப் பிடிக்கணும். அதற்கு கட்சியை உருவாக்கணும்:பராமரிக்கணும். மக்களை உணர்ச்சி பூர்வமாய் ஈடுபடவைக்க வெற்றுகோஷங்கள் போடணும். ஓட்டுபோட வைக்க அவர்களுக்கு பணம் கொடுக்கணும். வெற்றிபெற்ற பின் திரும்ப வும் கொள்ளையடிக்கணும். இதுதானே இன்றைய அரசியல்”. அடி மனதிலிருந்த கோபம் படபடவென்று பொரிந்துதள்ள வைத்தது.

சமயத்திற்கேற்றாற்போல தொலைக்காட்சியில், ஒருவர் பாரதியார் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.

“நெஞ்சில் உரமுமின்றி,

நேர்மைத்திறமுமின்றி,

வஞ்சனை சொல்வாரடி,

கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி”

எப்போதாவது இதுபோன்ற பாடல்களையும் ஒளிபரப்புவார்கள். அப்பா பாட்டு முடியும்வரை கேட்டுக்கொண்டிருந்தார்: அவர் கண்களில் நீர் துளிர்த்ததைக்கவனித்தேன். பின்னர் அவரே தொடர்ந்தார்.

. .

“ஜனநாயக அரசியல் பரிணாம வளர்ச்சியில், இதெல்லாம் தவிர்க்க முடியாதம்மா!”

“தப்பு செய்பவர்களைத்தட்டிக்கேட்கக்கூடிய தைரியம் இப்போது எல்லோருக்கும் இருக்கிறதா? அறம் கூற்றாகும் என்று தெரிந்தும், தப்புமேல் தப்பாய் செய்துகொண்டிருக்கிறார்கள். தட்டிக்கேட்கக்கூடிய தார்மீக உரிமை ஒருவருக்கும் இல்லை”.

“தார்மீகநெறி எனக்கும் இல்லையென்கிறாய்! திருக்குறளையும், பாரதிபாடல்களையும் படித்து படித்து நன்கு பேசவும், சிந்திக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறாய், மகளே! நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்”.

“சுவேதா எழுந்துவிட்டாள். நீங்கள் பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருங்கள். நான் அவருக்குக்காபி கொடுத்து விட்டு வருகிறேன்” என்று சமையலறைக்குள் சென்றேன். காபி குடித்துவிட்டு அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார் அவர். பின்னர் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிச்சென்றார். நான் எல்லா வேலை களையும் முடித்துவிட்டு அறையில் சென்று பார்த்தபோது, . அப்பா கண்களை மூடிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தார். தூங்குகிறாரா என்று தெரியவில்லை. ஒரே பெண் என்பதால், என்மீது பாசத்தைக் கொட்டி மிகவும் செல்லமாகத்தான் வளர்த்தார். என் மீது உயிரையே வைத்திருக்கிறார். அப்பா எனக்கு நல்லவர்தான். இருந்தாலும் பரம்பரையாக ரத்தத்தில் ஊறிப்போன ஆதிக்கசாதி என்ற திமிர், ஊரிலேயே பெரிய பணக்காரகுடும்பம் என்ற கர்வம்: தன்னை நம்பி பலகுடும்பங்கள் பிழைக்கின்றன என்ற தற்பெருமை, தேர்தலில் நின்றால் பெரும்பான்மை தன்பக்கம் என்ற ஆணவம், தன்னை எதிர்த்துப் பேச ஊரில் யாருமில்லை என்ற அகம்பாவம்: இவற்றின் மொத்த உருவமாகத்தான் இன்னும் இருக்கிறார். மூன்றுமணியளவில் எழுந்தார். காலையிலேயே நிறைய சாப்பிட்டுவிட்டதால் ஒன்றும் வேண்டாம் என்றார். காபி மட்டும் போட்டுக் கொடுத்தேன். நான் ஒன்றும் பேசா த போது, அவரே ஆரம்பித்தார்.

“பொன்னி! எப்பொழுதோ படித்தகதை நினைவுக்கு வருகிறது . ‘என் பையன் நிறைய இனிப்பு சாப்பிடுகிறான்: நீங்கள்தான் அவனுக்கு அறிவுரைகூறவேண்டும்’ என்று ஒரு அம்மா, முனிவரிடம் வேண்டிக் கொண்டாள். ஒருவாரம் கழித்து வரப்பணித்தார் முனிவர். அப்படியே அவர்கள் வந்தபோது, முனிவர் பையனுக்கு எளிய அறிவுரை வழங்கினார். அம்மாவுக்கு ஒரு சந்தேகம். இதை சென்றவாரமே சொல்லியிருக்கலாமே என்று. கேட்டாள்.. முனிவர் சொன்னார், ‘சென்ற வாரம்வரை நானே நிறைய இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறிவுரைவழங்க எனக்குத்தகுதியில்லா மலிருந்தது. இப்போது நான் இனிப்பு சாப்பிடுவதைக்குறைத்துக்கொண்டி ருக்கிறேன். இனிப்பு அதிகம் சாப்பிடக்கூடாது என்று அறிவுரைவழங்க இப்போது எனக்கு முழுத்தகுதி இருக்கிறது: அதனால் அப்படிச் சொன்னேன்’’ என்றாராம். காலையில் நீ சொல்லியதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையம்மா!

நான் நேர்மையாக இல்லாமல் மற்றவர்களை நேர்மையாக இருக்க வற்புறுத்த எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்னிடம் ஆயிரம் குற்றங்களை வைத்துக்கொண்டு பிறர் குற்றங்களைப் பற்றிப்பேச எனக்கு அருகதை இல்லவேயில்லை.. எல்லோரும்தான் தப்பு செய்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டேயிருந்தால், அந்த தீயவட்டத்தி லிருந்து வெளிவருவது எப்படி? அகங்காரத்தால் செய்த தப்புகளுக்கு பிராயச்சித்தம் தேடி, பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்து விட்டு, தார்மிக தகுதியை வளர்த்துக்கொண்டு, பொதுவாழ்க்கை யில் கம்பீரமாக இறங்கவேண்டும் நான் இன்று மாலை ரயிலுக்கே ஊருக்குக் கிளம்புகிறேன். வாழ்க்கை முழுவதும் பணம்காசு, பதவி, அதிகாரம், செல்வாக்கு என்று ஓடிக்கொண்டே இருக்கிறோமே! ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதனைப்பெறுவதற்கான வழி அறத்தின்பாற்பட்டதா என்று யோசிக்கிறோமா? உன்னைப்போல் சிந்திக்கும் அடுத்த தலைமுறையினரைப்பார்க்கும்போது எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறதம்மா! சரி. நான் கிளம்புகிறேன்” என்று தீர்க்கமுடன் புறப்பட்டார் அப்பா. .அவரை மனநிறைவுடன் வழியனுப்பிவைத்தேன்.

சரி, நிகழ்காலத்திற்கு வருவோம். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பும் வந்துவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு படி முன்னேற்றத்திலும், நம் பக்கத்தில் வெற்றிவிழாவும், அவர்கள் பக்கத்தில் கண்டனமும் வாடிக்கையாகிவிட்டது. ஒருசொட்டு நீரைக்கூட திறக்கமாட்டோமென்பதும்,நீர்ப்பிடிப்புப்பகுதியில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டதும், நம் கோரிக்கையை ஏற்று நீரைத்திறந்து விடுகிறோமென்பதும், கொஞ்ச மாவது அறிவுபூர்வமாக இருக்கிறதா? மிகைநீரை வெளியேற்றியே தீரவேண்டுமெனும்போது, அணைகளில் ஆடம்பரமாக பூஜை போட்டு விளம்பரப்படுத்தி திறந்துவைப்பதும், அதே நடவடிக்கைகளை இங்கும் பின்பற்றுவதும், அவர்களின் சாதனைப்பட்டியலை முன்னிலைப் படுத்தும் அரசியல் கணக்கு. பல்வேறு மட்டத்தில் அரசியல் கணக்கு களில் பாழாய்ப்போவது விவசாயிகளின் வாழ்வு. போகிறபோக்கைப் பார்த்தால், தென்மேற்குப் பருவக்காற்று அவர்கள் தடுத்துவைக்காத தால்தான் நம் பக்கம் வீசுகிறது என்பார்கள்: நாமும் அமைதியாகக் கேட்டு ரசித்துக்கொண்டிருப்போம்.

சுவேதா தாத்தா எப்போது வருகிறார் என்று கேட்டுக்கொண்டி ருந்தாள். இடையில் இருமுறை உறவினர்கள் வீட்டு திருமண வைபவத்தில் கலந்துகொள்ள கிராமத்திற்குச்சென்றோம். வேலை நாட்களாக இருந்ததால் அங்கு தங்கமுடியவில்லை. அப்பாவிடமும் பேச நேரமில்லை. நான் இதுவரை பார்த்திராத அப்பா என்று அம்மா சொன்னது, என் ஆவலை அதிகரித்தது. எல்லோரிடமும் மிகவும் தாராளமாகவும் கனிவுடனும் நடந்து கொள்கிறாராம். நிறைய பொதுக் காரியங்களை தன் சொந்தச்செலவிலேயே நிறைவேற்றுகிறாராம். ஊர்மக்கள் கொண்டாடும் அளவிற்கு மதிப்பில் உயர்ந்து விட்டார் எனும்போது பெருமையாக இருந்தது. பாதிக்கப்பட்டஎன் சித்தப்பா வுக்கு உதவிகள், அவர் குழந்தைகள் படிப்புச் செலவு, எல்லாவற்றையும், இவரே ஏற்றுக் கொண்டுள்ளாராம். நேரில் வரும்போது முழுவதையும் கேட்டுக்கொள்ளலாம். உண்மை, நேர்மை, நியாயம், அறம் பற்றிய நம்பிக்கை தூண்டப்பட அப்பா சென்றமுறை இங்கு வந்தபோது ஏதோ ஒன்று தீப்பொறியாக பற்றிக்கொண்டது. உடனே தன்னை நெறிப் படுத்திக்கொண் டுவிட்டார்.

அப்பா திருந்திவிட்டார்!

அரசியல்வாதிகள்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *