நீயின்றி நானில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 3,811 
 
 

ஒரு ஒரு மாலைப் பொழுதில் அடையாறு மேம்பாலத்தில் நின்று கீழே சலசலத்து ஓடும் நதியின் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சரளா. அவளைப் போல பலர் பார்த்துக் கொண்டிருந்தாலும் சற்று நேரத்தில் கிளம்பி விட்டார்கள். சரளா அசைவின்றி வெகு நேரமாக நின்று கொண்டு இருந்தாள்.

சமீபத்தில் பெய்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தினால் மழை வஞ்சனையின்றிப் பெய்திருந்தது. நுங்கும் நுரையுமாக வெள்ளம் கரை புரண்டு கடல் நோக்கி ஓடிக்கொண்டு இருந்தது.

இதில் குதித்து விடவேண்டும். கொஞ்சம் இருட்டட்டும். ஆள் நடமாட்டமும் குறையட்டும் என்று நினைத்து ஓடும் நதியின் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரியான நேரம் வந்து குதித்து விடலாம் என நினைத்த மாத்திரத்தில் “அம்மா” என்று அவள் கையை ப்பிடித்தபடி அவன் “எனக்கு ரொம்ப பசிக்கிறது. நான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகின்றன. தயவுசெய்து எனக்கு சாப்பாடு வாங்கித் தருகிறீர்களா அம்மா” என்றான்.

அவனுக்கு பதினைந்து வயது இருக்கும். ஆனால் பெண் போன்று பாவாடை சட்டைப் போட்டு கொண்டு இருந்தான். சரளாவுக்கு இவன் ஆணா இல்லைப் பெண்ணா? யார் இவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது நினைவு தப்பியது.

கண்விழித்த போது சாலையோர ஹோட்டலில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அவன் மிகுந்த கவலையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹோட்டலின் முதலாளி இவர்கள் இருவருக்கும் டிபன் சாப்பாடு அளித்தார். அவன் மிகவும் பசியுடன் இருந்ததால் ஆர்வத்துடன் சாப்பிட்டான். அவன் சாப்பிடுவதைப் பார்த்தபோதுதான் அவளும் சில நாட்களாக கவலையுடன் இருந்தால் சரியாக சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வந்தது.

சரளாவிற்கும் ரொம்ப பசியாக இருந்தது. ஆனால் சாப்பிட முடியவில்லை. சூடாகப் பால் குடித்தாள். அதுவே தெம்பாக இருந்தது. மயக்கம் போட்டு விழுந்தது வெட்கமாக இருந்தது.

ஹோட்டல் காரருக்கு நன்றி கூறி வெளியே வந்தனர். அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு வந்து அங்கு உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தனர்.

இப்போது அவனைப் பார்த்தாள். அவன் ஒரு மூன்றாம் பாலினம் என்று தெளிவாகப் புரிந்தது. நீ யாரப்பா என்று கேட்டாள்.

“அம்மா, நான் நல்ல குடியில் பிறந்தவன். என் தகப்பனார் பெயர் வள்ளியப்பன். தாயின் பெயர் சுபத்திரா. நான் எட்டாவது வகுப்பு படிக்கும் போது என்னைப் பெண்ணாக உணரத் துவங்கினேன். அதனால் வெறுப்படைந்த என் தந்தை என்னை வீட்டை விட்டு வெளியேறும் படிக் கூறினார்

என் தாய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் என் தந்தை வீட்டை விட்டு வெளியேறி விட்டார். நாங்கள் வாழ வழி தெரியாமல் இருந்த போது அம்மாவுக்கும் உடல் நலம் இல்லை. கேன்சர் முற்றிய நிலை. அப்பாவும் பிரிந்து சென்றதால் வாழ்வாதாரப் பிரச்சினை. மேலும் என்னைப்பற்றிய கவலை மிகுதியால் இறந்து போனார்கள். அதனால் மூன்று நாட்களாக என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்தேன்.

பசி வேறு வாட்டியது. உதவி செய்பவர்களும் யாரும் இல்லை.அதனால் அந்த பாலத்தில் இருந்து குதித்து உயிர் விடலாம் என்று நினைத்தேன். மனித நடமாட்டம் குறையட்டும் என காத்திருந்தேன்.நீங்களும் வெகு நேரம் இங்கு காத்து இருந்தீர்கள் இதே எண்ணத்துடன் இருப்பது போல உணர்ந்தேன். அதனால் தான் அம்மாவாக உங்களை நினைத்து உங்களைத் தடுக்க கையைப் பிடித்தேன்.” என்றான்.

உன் பெயர் என்ன என்று கேட்டதும் சட்டென்று விநாயகம் என்றான். அப்பெயரைக் கேட்டதும் அவள் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.

“என்னுடன் வருகிறாயா?” எனக் கேட்க “வருகிறேன் அம்மா. என் உயிர் உள்ள வரை இனிமேல் என்னைப் பெற்ற தாய் நீங்கள் தான்” என்றான் விநாயகம்.

ஒர ஆட்டோ பிடித்து மாம்பலம் ஹபிபுல்லா தெருவில் உள்ள ஒரு பெரிய பங்களா வாசலில் இறங்கி னர். வாசலிலேயே செந்திலும் சௌம்யாவும் நின்று கொண்டு இருந்தனர். சரளாவை ப் பார்த்ததும் நிம்மதியாயினர்.

உங்களைக் காணவில்லை என்று மிகவும் கவலைப் பட்டோம் என்றனர்.

“தலைக்கு மேல் வெள்ளம் வந்தாச்சு. இனிமேல் கவலைப்பட ஒன்றும் இல்லை டீச்சர்” என்ற சரளா நடந்தவற்றைக் கூறினாள். அது கேட்டு சௌம்யா பேசவாயின்றி திகில் அடைந்தாள்.

செந்தில் “எல்லாம் சிவன் செயல்.” என்றார்.

“தேவரும் அறியாச் சிவனே காண்க!
பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!
கண்ணால் யானும் கண்டேன் காண்க!
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க!
கருணையின் பெருமை கண்டேன் காண்க!”

இனி எல்லாம் நல்லதே நடக்கும். இவள் உங்களுக்கு ஒரு துணை. இறைவன் தந்த வாழ்க்கை. நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்க வேண்டும். என்றார் செந்தில்.

“சரியாகக் கூறினீர்கள் தமிழ் ஐயா இப்போது எனக்கு நல்ல தெளிவு கிடைத்து விட்டது. எனக்கு ஒரு வீடு குறைந்த வாடகையில் பார்த்துக் கொடுங்கள்” என்றாள் சரளா.

சௌம்யா உடனே “நமது பள்ளி யில் உள்ள பாக்கியம் டீச்சர் வீடு ஒன்று காலியாக உள்ளது என்று கூறி னார்கள். நாளைக்கு காலை நாங்கள் பள்ளி க்கூடம் போகும் போது நீங்களும் உடன் வந்தால் நாம் போய் பார்க்கலாம்” என்றாள்.

மறுநாள் காலை சீக்கிரமாக கிளம்பி நெசப்பாக்கம் சென்றார்கள். பாக்கியம் டீச்சர் வீட்டிற்கு. வீடு ஒரு பெரிய அறை மட்டுமே. அதில் கால் பாகம் சமையலறை. அதையொட்டி குளியலறை கழிவறை. மிகவும் சிறிய வீடு என்றாலும் அதுவே “ எங்களுக்கு ப் போதுமானது” என்றாள் சரளா. வாடகை மூவாயிரம். அட்வான்ஸ் பத்தாயிரம்.

நெசப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி க் கூடத்தில் பாக்கியம், சௌம்யா, செந்தில் ஆசிரியர் களாக இருந்தனர்.

சரளாவிற்கும் விநாயகத்திற்கும் வீடு மிகவும் பிடித்திருந்தது.இது போலவே நான்கு வீடுகள் வரிசையாக தெருவைப் பார்த்தபடி இருந்தது. மேலே மாடியில் ஒரே வீடாகப் பெரிய தாக இருந்தது. அதில் பாக்கியம் டீச்சர் கணவர் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அடுத்து விநாயகத்தை அரசு பள்ளியில் சேர்க்க முயற்சி செய்தனர்.

சரளாவும் விநாயகத்தை அழைத்துக் கொண்டு போருர் சரவணா ஸ்டோர்ஸ் சென்றாள். சமைக்க அத்யாவசிய ப் பொருட்கள் வாங்கினர். விநாயகத்திற்கு சல்வார் கமிஸ் மற்றும் உடுத்த தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தனர். அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார் கள்.

செந்தில் ஆசிரியரின் பெருமுயற்சி யால் விநாயகம் எட்டாவது வகுப்பில் சேர்க்கப் பட்டாள். சரளாவும் தினம் மாலை நேரங்களில் விநாயகத்திற்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தாள். விநாயகமும் அக்கறையுடன் படித்து வந்தாள். பாக்கியம் டீச்சர், சௌம்யா டீச்சர், செந்தில் சார் அனைவரும் இவர்களின் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தனர்.

விநாயகம் சரளாவின் மீது அன்பும் பாசமும் அக்கறையும் கொண்டவளாக இருந்தாள். சமுகத்தில் அவளுக்கு அவமரியாதை ஏற்பட்டாலும் அதனை பொருள் படுத்தவில்லை. பள்ளியிலும் சக மாணவர்கள் மாணவியர்களின் உதாசீனத்தையும் பொறுத்து க் கொண்டு படிப்பதில் கவனமாக இருந்தாள். செந்தில் சார், சௌம்யா டீச்சர், பாக்கியம் டீச்சர் கண்காணிப்பினால் மாணவர்களின் கடுமை குறைந்தது. மேலும் விநாயகத்தைப் புரிந்து கொண்டு நட்புடன் பழக ஆரம்பித்தனர். உடன்பயிலும் வசுமதி, கோகிலா வும் விநாயகத்திற்கு நல்ல தோழியாயினர்.

சரளாவிற்கும் இப்போதுதான் முதல் முறையாக வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு வந்தது. சிறிய வீடாக இருந்தாலும் அதிக பொருட்கள் அடைக்காமல் தேவையான பொருட்கள் மட்டும் வைத்துக்கொண்டாள். சுத்தம் பேணினாள். விநாயகத்தை மிகவும் அருமையாக கவனித்துக் கொண்டாள்.

விநாயகம் என்ற பெயரே அவளுக்கு உயிராக இருந்தது. அது சரளாவின் அம்மாவின் பெயர். பலவருஷங்களுக்கு முன்பு அம்மா அப்பா அண்ணனுடன் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். அம்மா விடம்,” என்னம்மா உங்கள் பெயர் ஆணின் பெயர் போல இருக்கிறது “ என்று கேலி செய்வாள்.

அவள் அம்மாவும் “சில பெயர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக பொதுவாக இருக்கும். அது போன்ற பெயர்தான் விநாயகம். பிள்ளையாரப்பனின் பெயர்” என்பாள்.

“அப்போது நான் இனிமேல் பிள்ளையாரம்மா என்று பெயர் சொல்லி தான் உங்களைக் கூப்பிடுவேன்” என்றாள்.

அதுமுதல் அம்மாவை பிள்ளையாரம்மா என்று பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் வந்தது. பார்ப்பவர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது. “என்ன அம்மாவைப் பெயர் சொல்லி அழைக்கிறாள்” என்பார்கள்.

அதற்கு அவள் அப்பா கீர்த்திவாசனும் பதிலுக்கு சிரித்துக்கொண்டு “பேர் சொல்லி அழைக்கத் தான் பிள்ளை” என்பார்.

அண்ணன் சபரி வேலைக்கு வந்து விட்டான். மகனுக்கு திருமணம் செய்து விடலாம் என்று பெண் பார்க்கலானார் கீர்த்தி வாசன். வஸந்தாவைப் பெண் பார்த்து திருமணத்திற்கு உறுதி செய்தனர். மூன்று மாதங்கள் கழித்து திருமணம் செய்வதாக முடிவு செய்தனர்.

பெண் பார்த்து முடிவு செய்த மூன்றாம் நாள் கீர்த்தி வாசன் இறந்து போனார். சாப்பிடும்போது கத்தரிக்காய் தோல் மூச்சு க் குழலை அடைத்து விட்டது சாப்பிடும் நிலையிலேயே இலைக்கு முன் உட்கார்ந்து இருந்த படியே விழுந்து விட்டார்.

ஊர்மக்கள் பெண் வஸந்தா ராசியில்லாத வள் என்று தூற்றினர். நிச்சயம் செய்த பின் அந்த பெண்ணை யார் மணந்து கொள்வார்கள். அதனால் நிச்சயித்தப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று பெண் வீட்டினர் வற்புறுத்தி திருமணம் நடைபெற்றது.

அண்ணன் திருமணத்திற்கு பிறகு வஸந்தாவின் வசப்பட்டு போனான். அம்மா விநாயகத்தின் சந்தோஷம் கீர்த்தி வாசனோடு போயிற்று. என்றாலும் சரளாவிற்காக நடைபிணமாக வாழ்ந்தாள்.

விஸ்வநாதன் வஸந்தாவின் தூரத்து உறவுக்காரர். எட்டு வயது பெண் குழந்தை யுடன் வஸந்தாவின் திருமணத்திற்கு வந்திருந்தவர். நன்கு படித்து உயரவான உத்தியோகத்தில் இருப்பவர். மனைவி இறந்து போனாள். அவருக்கு சரளாவை திருமணம் செய்து கொடுக்க கூறினாள் வஸந்தா. சபரியும் மனைவி பேச்சை ஆதரித்தான்.

விஸ்வநாதனே நகைகள் போட்டு சரளாவை திருமணம் செய்து கொள்வார். மிகவும் நல்ல இடம் என விநாயகத்தை வற்புறுத்தி சரளாவின் திருமணத்தை செய்து வைத்தனர்.

சரளா திருமணம் முடிந்து ஹபிபுல்லா தெருவில் மாம்பலத்தில் உள்ள பங்களாவிற்கு அடியெடுத்து வைத்தாள்.

விஸ்வநாதன் மிகவும் குணக்கேடாக இருந்தார். குழந்தை சாலாவையும் சித்தி உன்னை நன்றாக கவனிக்கிறாளா எனக் கேட்டு அவள் மனதிலும் வேற்றுமை உண்டாக்கினார். புருஷனிடமும் அரவணைப்பு இல்லை. எட்டு வயது சாலாவும் இவளை எதிரியாக நினைத்தாள். தனது மன வருத்தத்தை அடுத்த வீட்டில் வசிக்கும் சௌம்யா டீச்சரிடம் மட்டுமே எப்போதாவது கூறுவாள் சரளா

அம்மா விநாயகம் போன் பேசும் போது தனது கஷ்டங்களை ஒரு போதும் கூறமாட்டாள். அம்மாவும் சரளா சௌக்கியமா க இருப்பதாக நினைத்தாள். வஸந்தாவின் கவனிப்பு சரிவர இல்லாமல் ஒரு நாள் இறந்து போனாள். சரளாவின் ஒரே ஆதரவும் இல்லாமல் போனது.

தனக்கென்று ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் கரு தரிக்கவேயில்லை. டாக்டரிடம் சென்று செக்கப் செய்தால் எல்லாம் நார்மலாகவே இருந்தது. அதனால் கோயில் கோயிலாக சென்றாள்.

விஸ்வநாதனுக்கு சிரிப்பு தான் வந்தது.தான் திருமணம் செய்யும் பெண் தனக்கு மனைவியாக மட்டுமே இருந்தால் போதும். சாலாவை நன்றாக கவனித்து க் கொள்ளவேண்டும் என்று குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பின்னர் தான் சரளாவை மணம் செய்து கொண்டார்.

இதுவிவரமே பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் சரளாவிற்கு தெரிந்தது.தான் ஏமாற்ற ப்பட்டது தெரிந்து மிகவும் வருத்தப்பட்டு சௌம்யா டீச்சரிடம் கூறினாள். ஆனால் பதிலுக்கு சௌம்யா டீச்சர் கூறியது கேட்டு தலையில் இடி விழுந்தது போல் ஆனாள்.

விஸ்வநாதனின் முதல் மனைவி அம்மு குழந்தை சாலாவிற்கு மூன்று வயது ஆகிய போது இறந்து போனாள்.அப்போது இரண்டாம் குழந்தை ஐந்து மாத கருவைச் சுமந்து கொண்டு இருந்தாள். விஸ்வநாதன் கொடுமை தாளாமல் ஹீட்டர் மீது அமர்ந்து தற்கொலை செய்து கொண்டாள். என்பதனைக் கேட்டு ஆடிப்போனாள். எத்தனை மனம் வருத்தம் இருந்தால் ஒரு கர்ப்பிணி பெண் இப்படி கொடுமையான முடிவை விரும்பி எடுத்து இருப்பாள்.

விஸ்வநாதனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அதனால் மாஸிவ் ஹார்ட் அட்டாக் வந்து இறந்த போது இவனுக்கு கூட இருதயம் இருக்கிறதா என்ன? என்று புருஷனின் இறப்பு குறித்து கவலைப் பட வில்லை.

வேலையில் இருக்கும் போது இறந்ததால் சாலாவுக்கு வாரிசு உத்யோகம் கிடைத்தது. சரளாவிற்கும் குடும்ப ஓய்வூதியம் மாதம் முப்பது ஆயிரம் ரூபாய் கிடைத்தது. விஸ்வநாதனால் பெற்ற உதவி இதுமட்டும் தான் என நினைத்தாள்.

சாலாவும் ஒருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். இந்த பங்களா என்னுடையது. வீட்டை விட்டு வெளியே போ என சரளாவை துரத்தி விட்டாள்.நாற்பது வயதில் நிராதரவாக நின்ற சரளாவுக்கு சௌம்யா, செந்தில் ஆசிரிய தம்பதியர் அடைக்கலம் தந்தனர்.

தன் மீது உண்டாகிய கழிவிரக்கம் காரணமாக தற்கொலைக்கு முடிவு செய்தாள். ஆனால் விநாயகம் மூலம் தடுக்கப்பட்டாள். அவள் அம்மாவை விநாயகத்திடம் கண்டாள் சரளா.

இப்போது அவளுக்கு என்று ஒரு உயிர் உள்ளது. பணக்கவலையும் இல்லை. அரசு பள்ளி ஆதலால் செலவும் இல்லை. எளிமையான வாழ்க்கை முறையால் பணத்தையும் சேகரித்தாள். பின் நாளில் விநாயகத்தை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.

விநாயகம் படிக்க தினம் மாலை அவனுடன் உட்கார்ந்து பாடம் சொல்லிக் கொடுத்தாள். அதுகண்டு பாக்கியம் டீச்சர் சரளாவை ட்யூஷன் எடுக்க கூறினாள். “அரசு ஆசிரியர் கள் ட்யூஷன் எடுக்க கூடாது. ஆனால் நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்க கூறுகின்றனர். அதனால் சரளா ட்யூஷன் எடுத்தால் பிள்ளைகளுக்கும் நல்லது சரளாவுக்கும் நல்லது. பணம் கிடைக்கும் “என்றாள்

சரளா ட்யூஷன் எடுத்ததால் நல்ல பணமும் புகழும் மரியாதையும் கிடைத்தது. குழந்தை களுக்கு பாடம் நடத்துவதால் அறிவு விருத்தியும் உண்டாகியது. பத்திரித்கைகளுக்கும் எழுத ஆரம்பித்தாள். எழுத்தாளர் ஆனாள். நிறைய நட்பு வட்டங்கள் அமைந்தது. இலக்கிய உலா, இலக்கிய தொகுப்பு, இலக்கிய சோலை, இலக்கிய வட்டம், இலக்கிய வகுப்பு, இலக்கிய தினம், இலக்கிய கூட்டம் போன்ற நிறைய இமேகஸின்களில் அவளது எழுத்துகள் வெளிவந்தன.

நல்ல நட்புகள் மூலமாக நிறைய நல்ல விஷயங்களை அறிந்து கொண்டாள். பரஸ்பர பங்கு சந்தை களில் முதலீடு செய்தாள். பணத்தின் அருமையை த் தெரிந்து கொண்டாள்.

விநாயகம் பெண் உடை தரித்து, கிராப் தலைமுடியை நீளமாக வளர்த்து அழகிய பெண் ஆகிவிட்டாள். நன்றாகப் படித்தாள் வருடங்கள் ஓடின. ப்ளஸ் டூ முடித்து நல்ல மார்க் எடுத்தாள். நீட பரிட்சை எழுதி பாஸ் செய்து அகமதாபாத் நகரில் உள்ள மெடிக்கல் காலேஜில் இடம் கிடைத்தது. அம்மாவின் ஆசை படி டாக்டர் ஆக அவள் பெருமுயற்சி செய்தாள்.

சௌம்யா டீச்சர், செந்தில் சார், பாக்கியம் டீச்சர் எல்லோரும் விநாயகத்தின் வளர்ச்சி யைப் பார்த்து பூரித்தனர்.

விநாயகத்தின்தோழி வசுமதிக்கும் அகமதாபாத்தில் படிக்க இடம் கிடைத்தது. கோகிலா வுக்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்காததினால் பிஸியோதெரபி படிப்பை தேர்ந்தெடுத்து க் கொண்டாள்.

வசுமதி யின் அப்பா வேல்சாமி ஒரு சிவில் இஞ்சினியர். அம்மா ரத்னா, தம்பிகள் ஆகாஷ், தினேஷ். ஏற்கனவே சரளாவுடன், விநாயகத்துடன் நல்ல நட்புடன் பழகுவார்கள். வேல்சாமி அகமதாபாத்தில் உள்ள நண்பர்களின் உதவியுடன் ஒரு வாடகை வீடு பார்த்தார்.

வீட்டிற்கு அட்வான்ஸ் பத்தாயிரம் ரூபாய். வாடகை பத்தாயிரம் ரூபாய். சரளாவும் அட்வான்ஸ் பணம் பாதி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாள். வாடகையும் ஆளுக்கு ப் பாதி பாதி.

ஒரு நல்ல நாள் பார்த்து வசுமதி யின் குடும்பத்தினருடன் விநாயகம், சரளாவும் அகமதாபாத் வந்து சேர்ந்தார்கள். வீடு காலேஜிற்கு அருகில் இருந்த து. இரண்டு படுக்கை அறைகள் பெரிய ஹால், சமையல் அறை மற்றும் தனித்தனியாக குளியலறை கழிவறை என்று நல்ல வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது.குழாயைத் திறந்தால் நர்மதா நதியின் நீர் நிறைவாகக் கொட்டியது.

விநாயகத்தையும் வசுமதியையும் காலேஜில் சேர்த்தனர். அதன் பின்னர் ஒரு வாரம் வசுமதியின் குடும்பத்தினர் அங்கு இருந்தனர். ஒரு நாள் படேலின் ஒற்றுமை சிலையைப் போய் பார்த்தனர். வீட்டிற்கு தேவையான அனைத்து ப் பொருட்களும் வாங்கி நிறப்பினார்கள். பின் சென்னை திரும்பினார்கள்.

சரளாவிற்கு பணம் தாராளமாக இருந்தது. சென்னை யில் ட்யூஷன் பணமே அவர்கள் எளிமையாக வாழ போதுமானதாக இருந்தது. பென்ஷன் பணத்தை சேமித்து வைத்து இருந்தாள். அதுவும் போக இந்த ஐந்து வருடங்களில் பரஸ்பர நிதியிலும் நல்ல லாபம் கிடைத்தது. பணம் வசதி யாகவே இருந்ததால் சென்னை வீட்டையும் காலி செய்யவில்லை. நினைத்த நேரத்தில் சென்னைக்கு வரலாம். தங்க வசதியாக இருக்கும். மாதாமாதம் வாடகைப் பணம் அனுப்பி விடலாம் என்று நினைத்தாள். பிள்ளைகளுக்கு காலேஜ் சென்று வர ஒரு ஸ்கூட்டர் வாங்கி க் கொடுத்தாள்.

ஒரு மாதத்தில் ஊர் பழகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குஜராத்தி ஹிந்தி மொழிகளைப் பேச கற்றுக் கொண்டார் கள். மக்கள் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தனர்.

விநாயகத்திற்கும் வசுமதிக்கு ம் புதிய நண்பர்கள் நிதி படேல், தனுஜா தாகூர், பார்கவ், ஜோகனி போன்றவர்கள் கிடைத்தனர்.

மூன்றாம் பாலினத்தவருக்கு இங்கு நல்ல மரியாதை கிடைத்தது. விநாயகத்தை தத்தெடுத்துப் படிக்க வைக்கும் சரளாமீது மிகுந்த அன்பு காட்டினர்.

விடுமுறை சமயம் சென்னை க்கு வருவார்கள். வரும் போது குஜராத்தின் சிறப்பு பெற்ற பாந்தனி, பட்டோலா புடவைகள் வாங்கி வந்து பாக்கியம் டீச்சர், சௌம்யா டீச்சர், கோகிலா மற்றும் தெரிந்த தோழிகளுக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். மொத்தத்தில் குஜராத் மாநிலத்தில் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. துவாரகா மற்றும் நிறைய கோயில்களுக்கு நேரம் கிடைக்கும் போது செல்வார்கள்.

ஒரு வார விடுமுறையில் பாக்கியம் டீச்சர் குடும்பத்தினர் அகமதாபாத் வந்து சென்றனர். மற்றொரு முறை சௌம்யா டீச்சர் செந்தில் சார் வந்து சென்றனர். அவ்வப்போது வசுமதியின் குடும்பத்தினர் வருவார்கள். வசுமதியும் விநாயகமும் நன்றாகப் படிப்பது கண்டு சந்தோஷப் பட்டனர். சரளாவை வெகுவாகப் பாராட்டினார் கள்.

வசுமதியும் விநாயகமும் நன்றாகப் படித்து டாக்டர் பட்டம் பெற்றனர். சரளாவிற்கும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. விநாயகத்தைப் படிக்க வைத்தது ஒரு தவம் போல தோன்றியது.

விநாயகத்தைப் பார்த்து,” பிள்ளையாரம்மா! நீ உன் போன்ற மூன்றாம் பாலினத்திற்கு மிகவும் உதவியாக இருக்க வேண்டும் “ என்றாள்.

“நிச்சயமாக. உங்களால் தான் அம்மா கல்விச் செல்வம் எனக்கு நிறைவாக கிடைத்தது “ நீங்கள் இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை” என்றாள் விநாயகம் கண்ணீருடன்.

அதற்கு சரளா,” இல்லை பிள்ளையாரம்மா! நீயின்றி நானில்லை. நீ எனக்கு தாய் போன்றவள் “என்றாள் மனம் நெகிழ்ந்து.

“நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேன்ஆய் இன் அமுதமும்ஆய் தித்திக்கும் சிவ பெருமான்
தானே வந்து எனது உள்ளம் புகுந்து
அடியேற்கு அருள் செய்தான்
ஊன்ஆரும் உயிர்வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே”

திருச்சிற்றம்பலம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *