கனத்துப் போன இதயங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 13, 2022
பார்வையிட்டோர்: 15,911 
 

அன்று இஃப்தார்விருந்திற்கான இந்தியன் அசோசியேசன்சிலிருந்து வந்திருந்த அழைப்பை, கொஞ்சம் சோம்பலாக இருந்த பிறகும் வெள்ளிக்கிழமையின் விடுமுறை உல்லாசமும் விட்டு விட்டுப் போக வேண்டுமா? என்று யோசிக்க வைத்தது.

இருந்தாலும் இஸ்லாமிய நண்பர் பாட்ஷா அழைப்பை மறுக்க விரும்பாமல் எமிரேட்ஸ் இங்கிலிஷ் ஸ்பீக்கிங் ஸ்கூலுக்கு நண்பர்கள் ராம், அல்போன்ஸ் ஆகியோருடன் சென்றிருந்தேன்.

நல்ல வேளை எந்த வித டிராப்பிக்கும் இல்லாததால் 6.20க்கு போய்ச் சேர்ந்து விட்டோம். அன்று 6.22க்கு நோன்பு திறப்பதற்கு எல்லா நண்பர்களும் பெண்களும் காத்திருந்தார்கள். எல்லோரும் தொழுகை முடிந்ததும் தங்கள் முன்னால் வைத்திருந்த பழ வகைகளையும், இரச வகைகளையும் குடிக்க ஆரம்பித்தனர்.

முதலில் பாட்ஷாவைக் காணாமல் நான் நண்பர்களோடு திரும்பி விடலாம் என்று நினைத்த போதுதான் விரைவில் ஓடி வந்து “வாருங்கள் நண்பரே, உங்கள் அமைப்பிலிருந்து யாரும் வரவில்லையா நான் நரசிம்மனிடம் சொல்லி யிருந்தேனே. நீங்கள் மூவர் மட்டும்தான் வந்தீர்களா?” என்று என்னை கட்டித் தழுவிக் கொண்டார்.

“பாட்ஷா நான் உங்கள அழைப்பை இ.மெயிலில் தான் பார்த்தேன். மற்ற அங்கத்தினர் எல்லோருக்கும் அமைப்பிலிருந்து அழைப்புப் போயிருக்கும். ஒரு வேளை பிந்தி வருவார்களோ.. என்னவோ… “ கொஞ்சம் மழுப்பினேன்.

“என்ன சார் சொல்கிறீர்கள் நோன்பு திறப்பதற்கு கரெக்டாக வரவில்லை யென்றால் அதன் பிறகு வரமாட்டார்கள். பரவாயில்லை. துபாயின் எல்லா அமைப்புகளிலிருந்தும் பல நண்பர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சரி என்ன செய்வது நீங்கள் அமருங்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது.

நீங்களும் அமர்ந்து பழங்களை சாப்பிடுங்கள். பின் ஜூஸ் மோர் எல்லாம் இருக்கிறது. அருந்துங்கள், சாப்பிட்ட பிறகு பேசலாம். அமருங்கள். நோன்புத் திறந்த கொஞ்ச நேரத்தில் எல்லோரும் பள்ளிக்குச் சென்று வருவோம். நீங்கள் அமர்ந்திருங்கள். நாங்கள் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவோம். போய்விட வேண்டம். நாங்கள் வந்தவுடன்இரவு உணவு பஃபே சிஸ்டம் ஆரம்பித்து விடும். நண்பர்களோடு சாப்பிட்டு விட்டுச் செல்லலாம்” என்றவர் பள்ளிக்கு போய் தொழுகை எல்லாம் முடித்து விட்டு வந்தார்.

எல்லோரும் உணவு உண்ண ஆரம்பிக்க “அப்புறம் பாட்ஷா சொல்லுங்கள் இப்போது கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த வில்லையா?” என்று ஆரம்பித்தேன் உணவுத்த்ட்டைக் கையில் எடுத்துக் கொண்டு.

“ஏன் சார்? கலை நிகழ்ச்சிகளா இப்போது துபாயில் முக்கியம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் கையிலிருந்த உணவை சுவைத்துக் கொண்டே…

“ஆறு நாட்கள் எந்திரமாய் அலைகிறோம். ஒரு ரிலாக்ஸிற்காக நிகழ்ச்சி ஏதாவது..” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் “துபாயில் முக முக்கியமான விஷயங்கள் நிறை செய்ய வேண்டியிருக்கிறது தெரியுமா…?” சிரித்துக் கொண்டே கேட்டார்.

“சொல்லுங்கள்” என்றேன்.

“மூன்று இந்தியர்களின் உடலை அவர்கள் வீட்டிற்கு முதலில் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எந்த அமைப்பாவது செய்ய முன் வருகிறதா…” என்றார்.

“ஆனால் பாட்ஷா இந்தியர்கள் இறந்தால் அவர்கள் கம்பெனியே அவர்கள் உடலை …” என்று நான் முடிக்குமுன்னே….

“இவர்கள் ஒழுங்கான விசா இல்லாமல் ஒளிந்து வேலை செய்தவர்கள். விபத்தில் இறந்தவர்கள், இவர்களில் ஒருவர் உடலை இந்தியாவிற்கு அனுப்ப நம்முடைய பணத்திற்கு பத்து லட்சத்திற்கு மேலே செலவழியும் அதை எந்த அமைப்பாவது செய்ய முனைகிறதா.. ஏதோ கலைநிகழ்ச்சிகள் என்று சொல்லி கூடி சாப்பிட்டு விட்டு சார், நாமெல்லாம் ஒரு வகையிலே கையாலாகாதவர்கள். ஏதோ பாட்டுப் போட்டி, பட்டி மன்றம் இல்லையெனில் சினிமா நடிகர், தமிழ் நாட்டின் பிரபலங்களை அழைத்து மகிழ்ந்து போய் விட்டுப் போகிறமே ஒழிய இந்த மாதிரி ஏதாவது நல்லது செய்ய முயற்சிக்கிறோமா?”

நான் கொஞ்சம் கோபத்துடன் “ஏன் நீங்கள் கூட உங்கள் அமைப்பின் மூலம் இந்த நல்லவைகளைச் செய்யலாமே” என்றேன்.

“உங்கள் கோபம் முகத்தை சிவப்பாக்கி விட்டது” என்று சிரித்தவர், “நான் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். இறந்தர்கள் மூவரும் இந்துக்கள். நான் இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்தவன். நான் எதற்காக இந்த உதவியைச் செய்ய வேண்டும்..

ஏனென்றால் அவர்கள் என் இந்திய நண்பர்கள். முடிந்தால் கலை நிகழ்ச்சியை நிகழ்த்துவதை விட இப்படி நல்ல காரியங்கள் ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். முடிந்தால் உங்கள் அமைப்பின் மூலம் இந்த மாதிரி நல்ல காரியங்கள் செய்ய முயற்சியுங்கள்.

கலை நிகழ்ச்சிகள் தேவைதான். வேண்டாமென்று சொல்ல வில்லை. ஆனால் இங்குள்ள சட்ட திட்டங்கள் நம்மை பல விஷயங்களில் எதுவும் செய்ய முடியாமல் தடுத்து விட்டாலும் நமது இந்திய நண்பர்களுக்கு ஏதாவது நல்லது செய்தோமானால் அட்லீஸ்ட் நம்முடைய அமைப்பிற்கு நல்ல பெயரும் நமக்கு ஆத்ம திருப்தியும் கிடைக்கும்” என்றார்.

நான் நண்பர்களோடு உணவை முடித்து விட்டுத் திரும்பும் போது வயிறு மட்டுமல்ல இதயமும் கனத்துப் போயிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *