வெள்ளவத்தையுலுள்ள மிகவும் பிரபலமான ஒரு துணிக்கடை அது. வெறும் பருத்தியென்பதெல்லாம் கனவு போலாகிவிட, இப்போது கண்ணில் வெளிச்சம் கொண்டிருக்கிற பட்டுக்கே கிராக்கி அதிகம். அது மட்டுமல்ல பவுண் கடலில் குளித்தே தேர் விட்டுப் போகலாம்.. ஆனால் இந்தத் தேர் ஓட முடிந்தது எதனால் என்று, அறிவு புரியாத மயக்கமாக இருந்தது.
சாரதா மகளுக்குப் பஞ்சாபி வாங்க, அன்று அந்தக் கடைக்கு வந்து படியேறிக் கொண்டிருந்த போது தான், இதெல்லாம் நினைவு கொள்ள நேர்ந்தது. நினைவு என்பது வாய் திறந்து வெளிப்படையாய் பேச முடியாமல் போன, வெறும் பிரமை தான். வாழ்க்கை எங்கே போய்க் கொண்டிருக்கிறதென்று ஒரே குழப்பமாக இருந்தது!
பஞ்சாபிக்கென்று மூன்றாவது மாடியில் பிரமாண்டமான காட்சியறை. அதைக் காட்சிக்கு விடவென்றே வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் விற்பனைப் பையன்கள், பொட்டு வைத்த முகத்துடன் முகம் சிரித்து அவளை வரவேற்றார்கள்.
அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாழ்வின் பாரம், கனதியாக நெஞ்சை அடைத்தது. தினம் தினம் சாவுகள்! அது ஒன்றுதான் நிச்சயமென்றாலும், கையில் கொலை வாளோடு, மிரட்டி உயிர் தின்னுகிற, இந்த மண்னை நினைத்தால்,அழுகை தவிர வேறொன்றும் மிஞ்சாது. வாழ்கை இப்படியெல்லாம் களிப்பதற்காகப் பட்டிலும் பொன்னிலும் தேர் விட்டுப் போகவா? போகிறதே உலகம்!
“என்னம்மா யோசிக்கிறியள்? என்ன வேணும்?”
கறுப்பாக ஒல்லியாக இருந்தாலும், இருபது வயது கூட நிரம்பாத அந்த இளம் பையனின் முகத்தில், சிரிப்பு நிறைவுடன் கூடிய வசீகரக் களைமின்னலெனப் பார்வையைக் கீறிக் கொண்டு போனது.
அவள் வரண்ட புன்னகையுடன், இன்னும் நிழலாகவே நின்றிருந்தாள். பேச வாய் வராமல் பெரும் துக்கம் கனப்பது போல் உணர்ந்தாள். இது ஏன் என்று புரியாமல், ஒரே கனவு மயக்கமாக இருந்தது. இதனுடனேயே விழிப்பு வந்தது போல், மிருதுவாகச் சொன்னாள்:
“பஞ்சாபி வேணும், இருபது வயது மகளுக்கு. .எடுத்துப் போடுறியளே, பார்ப்பம்”
“எவ்வளவு விலைக்கு வேணும்?பெரிய விலையிலும் இருக்கு!”
“அதென்ன பெரிய விலை?’
“இருபதினாயிரம் முப்பதினாயிரம் ஏன் எழுபதினாயிரம் விலையிலை கூட இருக்கு”
அவள் இதை எதிர்பாக்கவில்லை. இதெல்லாம் இந்தியாவிலிந்து வருகிற பட்டுகள்தான்.
“இவ்வளவு விலைகொடுத்துக் கூடப் பஞ்சாபி வாங்குவார்களா?”
அவள் இதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, அவனே சொன்னான்.
“நீங்கள் கேட்க நினைக்கிறது ,எனக்குப் புரியுதம்மா. இதையெல்லாம் இப்ப சாதாரணமாய் வந்து வாங்கிக் கொண்டு போகினம். உங்கடை பெடியன்கள் குளிரிலை விறைச்சுக் கஷ்டப்பட்டு வேலை செய்து அனுப்புகிற காசு இப்படிப் பட்டிலை கரையுது எனக்கு மன வருத்தமாக இருக்கு”
“ஓம் நானும் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறன்.. எல்லாம் எல்லை மீறிப் போனால் கடவுளுக்கே கோபம் வரும் இப்ப அதுதான் நடக்குதோவென்று எனக்குக் கவலையாக இருக்கு. தம்பி! உமக்குப் புரிந்த, இந்த உண்மை எங்கடை மனதைத் தொட்டால், பெரிய சந்தோஷம் தான். தொட வேணுமே”
“ஆகா! இந்தக் கடைக்குள் நுழைந்தால், உலகமே எங்கள் காலடியில் என்றாகி
விடுகிறது. இதில் பணம் முளைத்த கதை பற்றி எப்படி யோசனை வரும்? ஒரு போதும் நடக்காது. சந்தி சிரிக்க, எல்லாமே, வீதிக்கு வந்த பின், இந்தப் பகட்டு வாழ்க்கை எடுபடுமென்று எப்படி நம்புவது? அதுவும் யார் முன் நடிக்கிறோம், வேடம் கட்டியாடுகிறோமென்று, விவஸ்தை கூட இல்லாமல், என்ன ஆட்டம் போட்டு வாழ்கிறோம்!!”
இழப்பு வாழ்க்கையைக் கூட மறந்து போய் எப்படி நடிக்க முடிகிறது? மண்ணை இழந்தது பெருஞ் சோகம் .இனி வருங்காலத் தலைமுறை வாழ்வே, திரிசங்கு சொர்க்கத்தில், இரண்டும் கெட்டான் நிலையில், தமிழ் வாழவல்லையென்று தானே அழ வேண்டியிருக்கிறது.
தமிழ் வாழ்வில்லையென்று ஆர் சொன்னது? இதை கேட்கிற திராணி ஆருக்குண்டு? கேட்டால், உண்மை உறைக்கவில்லையென்றுதானே படும்.
அவளிடம் அப்படி உண்மையை நம்புகிற சக்தி, அபாரமாக இருந்தது. அவளால் அதை பற்றி யோசிக்காமல், இருக்க முடியவில்லை. முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியவர்கள் நாங்களே என்று பட்டது. இந்தப் படுதலின் தீக் காய்ச்சலில், உடலே கருகி வீழ்வது போல், உணர்வு மயங்கிய நிலையில் எதுவுமே பேச வராமல், வாய் அடைத்துப் போய், அவள் நீண்ட நேரமாய் நிற்பதை பார்த்து விட்டு மீண்டும் அவனே கேட்டான்.
‘ “என்னம்மா, பேசாமல் நிற்கிறியள்? எவ்வளவு விலைக்கு வேணுமென்று
சொன்னால் தானே எடுத்துப் போடலாம்”
“எனக்கு அதி கூடின விலைக்கு வேண்டாம். ஆகக் குறைந்த விலையிலை
இரண்டாயிரம் ரூபாய்க்குள்ளே தான் பார்க்க வேணும். இருக்கே?”
அவள் அப்படிக் கேட்டதும், அவனுக்கு என்னவோ போலிருந்திருக்க வேண்டும் . யதார்த்தமாகத் தான் சந்தித்து வரும் மனிதர்கள் போலன்றி, மிகவும் வித்தியாசமான அவளின் இந்த எதிர் மறைக் குணங்கள், நம்ப முடியாத ஒரு புதிய செய்தியாகவே, மனதைக் குளிர வைத்தது. இந்த ஆச்சரிய கணத்தின் உள்ளேறிய சிலிர்ப்புடன், அவன் அவளைப் பார்த்து முகம் மலரச் சிரித்தவாறே, தன் பாட்டில் பேசிக் கொண்டே, அவள் கேட்டபடி, அலுமாரியிலிருந்து, பஞ்சாபிகளைத் தரம் பிரித்து, எடுத்து மேசை மீது பரப்பிப் போட்டான்.
அவள் பிரமிப்போடு அவைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். எதை எடுப்பதென்று புரியாமல் ,ஒரே குழப்பமாக இருந்தது. இவை கூட எவ்வளவு அழகாகச் சரிகை இழைக்கப்பட்டுக் கண்ணைக் கவரும்படிதானே இருக்கின்றன.. இதற்கு மேலே, அதிக பட்ச விலை கொடுத்துப் பஞ்சாபி வாங்கிப் போட வேண்டிய அவசியம் எதனால் வந்தது? இது பாதகமான ஒரு பாவச் செயல் போல் படவில்லையா? என்னதான் பணம் வந்து குவிந்தாலும், கேவலம் வெள்ளைக்காரனுக்கு அடிமை வேலை செய்து கடும் குளிர் தின்ன, எங்கள் பிள்ளைகள் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும்பணத்தின் மகிமையே இவ்வளவுதானா? இதை மகிமை என்று சொல்வதற்கு நாக்கூசுகிறது. ஒரு சாதாரண, படிப்பறிவு குறைந்த இந்தப் பையனுக்கு வந்த தார்மீக அறிவு கூட, இல்லாமல் நமது மனம் இப்படித் தடம் புரண்டு போனது ஏன்? மாசு படிந்த இதன் நிழல் கூட அவளுக்குக் கரித்தது. மீண்டும் ஒரு முறை எல்லாவற்றூகாகவும் அழ வேண்டும் போல் தோன்றியது..
அவனோ இன்னும் சிரித்தபடியே,அவள் முன்னால் ஒளி கொண்டு நின்றிருந்தான்.. அவன் பேசிய வார்த்தை எவரும் அறியாத ஒரு புதிய வேத வாக்குப் போலத், திரும்பத் திரும்ப அவள் மனதில் சத்திய முழக்கமிட்டு ஒலித்தபடியே இருந்தது. அப்படிப் பேசுகிற அவனை பூரண இதய சுத்தியோடு, நிமிர்ந்து பார்க்க முடியாதவளாய், அவள் மனம் கூசினாள். அவனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய இந்த வாழ்க்கை பாடம், அவளுக்கு நன்றாகவே உறைத்தது. அவனைச் சந்திக்க நேர்ந்த அந்த அரிய தருணத்தை, அவள் பெரும் பேறாகவே உணர்ந்தாள்.
நல்ல வேளை. மிகவும் அறிவுrபூர்வமகச் சிந்திக்கும் திறன்பெற்ற தன்னிடம் மட்டுமே அவன் மனம் திறந்து, அதனைக் கூறிவிட்டதால் இது விடயமாக எந்தவொரு விபரீத முடிவும் ஏற்படாமல், அவன் தன்னால் காப்பாற்றப்பட்டிருப்பது குறித்துச் சாரதா உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு, அதை நினைவு கூர்ந்தாள் எனினும் தன் போலல்லாமல், வெறும் பகட்டு வாழ்க்கையிலேயே ஊறிப் போய்க் கொடி விட்டுப் பறக்கும், ஒரு சாதாரண பெண் இதைக் கேட்க நேர்ந்திருந்தால், என்ன நடந்திருக்கும்?
இதைச் சொல்லி விட்டதற்காக, அவன் மீது பெரும் கோபம் கொண்டவளாய் நேராக முதலாளியிடமே சென்று, அவனைப்பற்றிக் கோள் மூட்டி அவள் பழி சொல்ல நேர்ந்தால், பாவம் இந்தப் பையனின் நிலைமை மோசமான நிலைக்கே தள்ளப்பட்டிருக்கும், பண வரவு ஒன்றில் மட்டுமே குறியாக இருந்து, கடை விரித்து, வியாபாரம் செய்யும் அவர் பிழைப்பில் மண் அள்ளிப் போடும் விதமாக, அவன் பேசியிருக்கிறானே! வரிந்து கட்டிக் கொண்டு அவனை வேலையிலிருந்து தூக்கி எறிந்து விட மாட்டாரா?
இதையெல்லாம் யோசித்து,அவன் மீது பரிதாபப்படுகிற, கருணை உணர்வோடு குரல் உருகி அன்பாக, அவனை நோக்கி, அவள் பேச வாய் திறந்த போது, அவன் தூரத்தில் எதையோ ஊடுருவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கவனத்தைத் திருப்பி, உரத்து அவள் சொன்னாள்.
“தம்பி! இந்தப் பேச்சு என்னோடு போகட்டும்.”
“ஏன் இப்படிச் சொல்லுறியள்?”
“எல்லாம் நல்லதுக்குத்தான். ஆரும் என்னைப் போல இருக்கமாட்டினம்.
எல்லாவற்றையும் அன்பு மயமாக, யோசித்துப் பார்க்கிற தகுதி, எவ்வளவு பேரிடம் இருக்கென்று எனக்குப் புரியேலை.
உங்கடை இந்தக் கருத்தை, உணர்வு பூர்வமாய் ஏற்றுக் கொள்கிறது, இப்ப உள்ள நிலையில் மிகவும் கஷ்டமென்று எனக்குப் படுகுது.. வரட்டுக் கெளரவ வாழ்க்கையே பெரிதென்று நம்புகிறவர்களுக்கு, இது புரியப் போவதுமில்லை. அதனால்தான் சொல்லுறன். நீங்கள் கவனமாகப் பேச வேணும். இல்லாவிட்டால் உங்களுக்கு வேலையே போய் விடும்.”
“சரியம்மா! நான் இனிக் கவனமாய் பேசுறன்”
பிறகு நிழல் கூட ஆடவில்லை. ஒளி விட்டுப் பிரகாசிக்கும் உன்னத உயிர் சோதியின் ஏக தரிசனமான, ஒற்றைப் பிழம்பின் கவனம் கூட மறந்து போன நிலையில், மாறுதலாய் மயங்கிச் சரியும் நிழல் கூட்டத்தினிடையே, தானுமொருவளாய் ஆகித் தான் வந்த வேலையில், அவள் அப்படியே மூழ்கிப் போனாள். உயிர் விட்டு அல்லது மறந்து போன,அந்த நிழல் சரிவோடு ஒன்று பட்டு, ஒற்றை வடம் பிடித்து, இப்போது அவனும் நிலை மறந்து போய்க் கொண்டிருப்பது போல் பட்டது.
– மல்லிகை (பெப்ரவரி,2008)