கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 13,688 
 
 

அந்தி மயங்கும் நேரம். சத்தம் கேட்டு வெளியே வந்தான் வாசு.

ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர், அவன் வீட்டு வாசலில். சில பெண்கள் புர்கா அணிந்திருந்தார்கள். குல்லாவும் தாடியுமாக வயது முதிர்ந்த முஸ்லீம் பெரியவர்கள் கூட்டத்தின் பின்னால் நிற்க, முன்னால் நின்ற இளைஞர்கள் கையில் கத்தையாக பிட் நோட்டீஸ்கள்…

“இது நம்ம பீவி. பேரு தில்ஷாத். எட்டாவது வார்டு கவுன்சிலர் எலக்ஷனுக்கு நிக்குது. ஏணிச் சின்னம். மறந்துடாம வோட்டுப் போடுங்கோ!” என்று கும்பிட்டுச் சொன்னார் சம்சுதீன் பாய். “கட்டாயம் போடுங்கோ!” என்று அந்தப் பெண் இவனைப் பார்த்துக் கை கூப்பியது. ஒருவன் இவனிடம் நோட்டீஸைக் கொடுத்தான்.

“நிச்சயம் போடுவேன். சம்சுதீன் பாய்க்காக என்ன வேணாச் செய்யலாமே!” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் இவன். வந்திருந்தவர்கள் அனைவரும் கையெடுத்துக் கும்பிட்டு, “மறந்துடாதீங்க… ஏணிச் சின்னம்!” என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டை நோக்கிப் படையெடுத்தார்கள்.

இவன் நோட்டீஸைப் படித்தான். “பாறையூர் பேரூராட்சியின் எட்டாவது வார்டு உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்தால், நம் பேரூராட்சி மக்களுக்குத் தடையில்லாக் குழ்ீர், பாதாள சாக்கடை, தெருவெங்கும் சோடியம் விளக்கு, சிமெண்ட் சாலைகள், தொகுப்பு வீடுகள் ஆகிய அனைத்து வசதிகளும் செய்து தருவேன்!”

சிரித்துக் கொண்டே வீட்டினுள் போனான் வாசு.

இரவு எட்டு மணி இருக்கும். காலிங் பெல் சத்தம். வெளியே வந்தான். சுமார் பத்துப் பேர் நின்றிருந்தார்கள். “அட தங்கராஜ் வாத்தியார், கராத்தே மாஸ்டர், பால்காரர்… என்ன, எல்லோரும் என்னைத் தேடி..? என்ன விஷயம், சொல்லுங்க!” என்றான் வாசு.

“வாசு ஸார், மொதல்லே உங்களைப் பார்க்கணும்னுதான் இங்கே வந்திருக்கோம். விஷயம் தெரியுமில்லே? சம்சுதீன் பாய் சம்சாரம் தில்ஷாத் எலக்ஷன்ல நிக்குதாம். ஏணிச் சின்னம்! வோட்டுக் கேட்டு வந்திருப்பாங்களே..?” என்று தங்கராஜ் வாத்தியார் ஆரம்பித்தார்.

“ஆமா, வந்தாங்க!” என்றான் இவன்.

“நம்ம மளிகைக் கடை சண்முகம் ஆளுங் கட்சி வேட்பாளரா நிக்கிறாரு. போன எலக்ஷன்ல வார்டு மெம்பரா ஜெயிச்ச மகளிரணி முனியம்மா இந்தத் தபாவும் நிக்கிது. இன்னும் யார் யாரோ சுயேச்சையில நிக்கிறாங்க. நீங்க படிச்சவரு. நம்ம ஆளுங்க யாருக்கு வேணா வோட்டுப் போடுங்க. ஆனா சம்சுதீன் சம்சாரத்துக்கு மட்டும் போட்டுடாதீங்க. அவங்களை நாம் வளர்த்து விடக் கூடாது!” என்றார் கராத்தே மாஸ்டர்.

“ஆமா ஸார், இந்த வார்டுல மொத்தம் தொள்ளாயிரத்துச் சொச்சம் வோட்டு. இதுல அவுங்க ஆளுங்க ஒரு நூறு நூத்தம்பது பேர் இருக்காங்க. எலக்ஷன்ல ஜெயிச்ச பெறவு அவங்களை நாம அவ்வளவு சுலபமாப் பாத்துட முடியுமா? அவங்க ஆளுங்களுக்குத் தான் நல்லது பண்ணுவாங்களே தவிர, நம்ம ஆளுங்க கதி அம்பேல்தான்! எப்படியும் அவங்களை நாம தோக்கடிக்கணும்!” இது பால்காரர்.

இவனுக்கு அவர்கள் நோக்கம் புரிந்து விட்டது. கையமர்த்தினான். “ஒரு விஷயம் நான் சொல்லலாமா?”

கூட்டம் அமைதிப் பட்டது. இவன் தொடர்ந்தான். “நீங்க சொல்றது ரொம்பச் சரி. ஆனா ஒரு விஷயத்தை நாம் மறந்துடக்கூடாது. கடந்த நாலைஞ்சு மாசமா நம்ம ஜவஹர்லால் நகர்ல இருக்கிற கிணறு எல்லாம் வத்திப் போய் குடி தண்ணீருக்கு அலை அலைன்னு அலைஞ்சப்ப, சம்சுதீன் பாய் செஞ்ச உதவியை நாம் நினைச்சுப் பார்க்கணும். அவங்க வீட்டு போர்வெல் கிணறு மட்டும் வற்றாம இருந்துச்சு. வீட்டு மேலே இருக்கிற தொட்டிக்குத் தண்ணியை ஏத்தி, வாசப்பக்கம் இருக்கும் குழாயிலேர்ந்து ஒரு டியூபைப் போட்டு வெளியே விட்டாரு சம்சுதீன். கூட்டங் கூட்டமா நம்ம நகர் ஆட்களும் பக்கத்து நகர்கள்லேர்ந்து வந்தவங்களும் குடம் குடமாத் தண்ணீர் புடிச்சுகிட்டோம். ஞாபகமிருக்கா.? போர்வெல் தண்ணியை மோட்டார் போட்டு மேலே தொட்டியில் ஏத்தின வகையிலே கரண்ட் பில் பல ஆயிரம் ரூபாய் வந்திருக்கும். அதைப் பத்தி அவரு கவலைப்படலை. ஜாதி, மதம்னு அவரு பேதம் பார்த்திருந்தா நம்ம ஜனங்க தண்ணி பிடிச்சிருக்க முடியுமா? யோசிச்சுப் பாருங்க!”

“ஆங்… பாய் சும்மாத் தண்ணி விட்டாருன்னு நினைச்சீங்களா..? எல்லாம் வர்ற எலக்ஷன்ல நின்னு ஜெயிக்கறதுக்கு அவரு செஞ்ச ஸ்டண்டுன்னு இப்பல்ல தெரியுது; இந்தத் தேர்தல்ல அவரு பெண்டாட்டி நின்னு ஜெயிச்சப்புறம் சம்பாதிச்சிக்கலாம்னு ஒரு கணக்குத்தான்!”

“இல்லீங்க தங்கராஜ் ஸார்.. சம்சுதீன் பாய் ரொம்ப நல்லவர். அந்த மாதிரி நினைச்சு அவர் ஊராருக்குத் தண்ணீர் வழங்கலை. அவருக்கு நன்றி காட்ட ஒரு சந்தர்ப்பம் இப்ப நமக்கு வாய்ச்சிருக்குன்னு நினைக்கிறேன், அப்புறம் உங்க இஷ்டம்..” என்று இவன் சொன்னான்.

“நாங்க இந்த எட்டாவது வார்டு பூரா வீடு வீடாப் போய் ஜனங்களை ஏணிக்கு வோட்டுப் போடக் கூடாதுன்னு பிரச்சாரம் பண்ணப் போறோம். மைனாரிட்டியா இங்கே இருக்கிற சில பேருக்காக நீங்க சப்போர்ட் செய்யறதை மாத்திக்கணும்!” முறைப்பாகவே சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள் அவர்கள்.

இவன் சிலையாக நின்றான். அவர்கள் ஒவ்வொரு வீடாகப் போய்ப் பேசித் தங்கள் கருத்தைத் திணித்துவிட்டு, அடுத்த வீட்டை நோக்கிப் போவதைத் தன் வீட்டு வாசலில் நின்று கவலையோடு கவனித்தான்.

மறுநாள் காலை.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் தன் மனைவியை ஒரு நாள் லீவு போடச் சொன்னான் வாசு. இருவரும் ஜவஹர்லால் நகர் வீடுகள் ஒன்று விடாமல் நுழைந்தார்கள். “சம்சுதீன் பாய் நல்லவர். தண்ணீர்ப் பஞ்ச நேரத்தில் தன் வீட்டில் அதிசயமாய் நிறைந்திருந்த உப்பு உவர்ப்பு இல்லாத சுவை மிகுந்த கிணற்று நீரை ஊர் மக்களுக்கெல்லாம் இலவசமாகத் தந்த புண்ணியவான்.அவருடைய மனைவி தேர்தலில் வெற்றி பெற்றால், நிச்சயம் மக்கள் தொண்டு நடைபெறும். ஆகவே நீங்கள் அவசியம் தில்ஷாத்தின் ஏணிச் சின்னத்துக்கு வோட்டுப் போடுங்க! நம் பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் வந்து சொல்வதற்கு மதிப்பு கொடுக்காதீங்க!” என்று தெளிவாக, கணவன் மனைவி இருவரும் பிரச்சாரம் செய்தார்கள்.

ஏணிச் சின்னத்துக்கு வோட்டுப் போடக்கூடாது என்று சொன்ன கோஷ்டி, வாசுவை எதிரியாகப் பாவித்து அவன் வீதியில் எதிர்ப்படும் சமயங்களில் முறைத்தது; ஜாடை மாடையாகத் திட்டியது. “கை காலை எடுத்துடுவேன், மூஞ்சி முகரையைப் பேர்த்துடுவேன். யாருகிட்டே..?” என்று யாரையோ சொல்லுவதைப் போல இவன் காதில் விழும்படி ஜாடை பேசினார்,
கராத்தே மாஸ்டர்.

மூன்று நாட்கள் ஓடின.

அலுவலக வேலையில் வாசு ஆழ்ந்திருந்தபோது அவனைத் தேடி யாரோ வந்திருப்பதாக பியூன் வந்து சொன்னார்.

எழுந்து வரவேற்பறைக்குப் போனான் வாசு. கரம் கூப்பி அவனுக்கு வணக்கம் சொன்னார்கள் சம்சுதீன் பாயும் அவர் மனைவி தில்ஷாத்தும். இவன் முகம் வியப்பில் விரிந்தது. “அட, நீங்களா? ஏது இவ்வளவு தூரம்..?” என்று விசாரித்தான்.

அருகில் வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டார் சம்சுதீன் பாய். விரல்கள் நடுங்கின. கண்களில் நீர் துளிர்த்தது.

“எல்லாம் கேள்விப் பட்டேன் வாசு ஸார். ஊர்ல எங்களை எதிர்த்துச் சிலபேர் பிரச்சாரம் செய்தப்ப, அதுக்கு எதிரா நீங்க, எனக்குக் கூடச் சொல்லாமலே ஒரு யுத்தம் நடத்தியிருக்கீங்க. விளைவை எதிர்பாராம உங்க நண்பர்களையே எதுத்திருக்கீங்க. இதுக்கு நான் என்ன கைமமாறு செய்யப் போறேன்..?”

“நான் ஒண்ணும் செய்யலை சம்சு பாய். நீங்க ஊருக்கெல்லாம் உதவுனீங்க. உங்க நல்ல மனசை அவங்க புரிஞ்சிக்கலை. அதான் நானும் என் மனைவியும் போட்டிப் பிரச்சாரம் பண்ணினோம். கிட்டத்தட்ட எல்லோரும் எங்க பேச்சை ஏத்துக்கிட்டாங்க. உங்க சம்சாரம் போட்டியிடற ஏணிச் சின்னத்துக்கு நிச்சயம் வோட்டுப் போடறதாகப் பலர் எங்ககிட்டே உறுதி கொடுத்திருக்காங்க. உங்க சம்சாரத்துக்கு வெற்றி நிச்சயம். நீங்க கவலைப் படாதீங்க!” இவன் அவரைத் தேற்றினான்.

“வாசு ஸார்! ஊரே குடி தண்ணிக்குத் தவிச்சப்ப, நம்கிட்டே வற்றாத குடி தண்ணீர்க் கிணற்றை அல்லாஹ் கொடுத்தது மத்தவங்களுக்கு உதவி செய்றதுக்குத்தான்னு நினைச்சு செஞ்சேன். ஆனா, பின்னால் வரும் எலக்ஷன்ல நின்னு ஜெயிக்கறதுக்காக் நான் அப்பிடித் தண்ணியை ஊருக்குக் கொடுத்தேன்னு அவங்க பேசினதாக் கேள்விப்பட்டேன்.அவங்க நினைக்கறதிலேயும் ஒரு நியாயம் இருக்கு. பலனை எதிர்பார்த்து எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாதுன்னு பகவத் கீதையில் சொல்லியிருக்காமே…நான் பலனை எதிர்பார்க்காம தண்ணி கொடுத்திருந்தாலும், இப்ப தேர்தல் மூலமாகப் பலன் அடையப் பார்க்கறது எந்த வகையில் நியாயம்னு ஞானம் வந்துடுச்சு. இன்னிக்குத்தான் வேட்பு மனுவை வாபஸ் வாங்கக் கடைசி நாள்…” என்றார் சம்சுதீன் பாய்.

“சம்சு பாய்..! பதறினான் வாசு. அவசரப்பட்டு வேட்பு மனுவை வாபஸ் வாங்கிடாதீங்க!”

“வாசு ஸார்! நீங்க ஒருத்தராவது என் மனசைப் புரிஞ்சு வெச்சிருக்கீங்களேன்னு மனசு நெகிழ்ந்து போச்சு. அதுக்காக நேரில் பார்த்து நன்றி சொல்லிட்டுப் போகத்தான் நானும் தில்ஷாத்தும் இங்கே வந்தோம். ஆனா, அதுக்கு முன்னால டவுன் பஞ்சாயத்து ஆபீசுக்குப் போய், தேர்தல் அலுவலர்கிட்ட எங்க வேட்பு மனுவை வாபஸ் வாங்கிட்டோம்! உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி, அப்ப நாங்க வர்றோம், வாசு ஸார்!”

கைகூப்பி வணங்கி விட்டுத் திரும்பி நடந்து செல்லும் அவர்களைப் பார்த்துச் சிலையாக நின்றான் வாசு.

ஜே.வி.நாதன்,பொறுப்பாசிரியர்,‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ்,சென்னை. ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலூரில் வாசம். ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தில் ஆசிரியர் இலாகா செயல் அலுவலராகவும், அப்போதைய விகடன் எம்.டி.யான திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். விகடனுக்குப் பிறகு, ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தார். சக்தி விகடன் மாதமிருமுறை இதழில் பிற மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களை நேரில் தரிசித்து, அவை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *