நன்கொடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 1,945 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உடல் ஊனமுற்றோர் சங்கத்துக்கு நிதி திரட்டு விழா. அறநிதிப் பொறுப்பாளர்கள், கொடையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நோக்கம் நிதி திரட்டுவதுதான். சென்னையிலிருந்து ருக்மணி சகோதரிகளின் பரத நாட்டியம், மற்றும் பக்திப் பாடல் புகழ் நேசமணியின் கச்சேரி அடுத்தடுத்து ஒரே மேடையில்.

சிராங்கூன் சாலையில் ஒரு புகழ்பெற்ற அரங்கம் ஏற்பாடாகி யிருந்தது. ஏற்பாட்டாளர் குழுவில் பல முக்கியப் பிரமுகர்கள் இருந்தனர்.

நிகழ்ச்சி சரியாக 6 மணிக்கு ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தனர். நுழைவுச்சீட்டு கிடையாது. ‘நிகழ்ச்சியை யார் மீதும் நாங்கள் திணிக்க விரும்பவில்லை.’ என்று ஏற்பாட்டாளர்கள் குழு விளக்கம் சொன்னது. நன்கொடையில் எல்லாரையும் ஈடுபடுத்துவது, ஏற்கனவே நன்கொடை தந்தவர்களை சிறப்பிப்பது முக்கிய அங்கமாக இருந்தது. நிகழ்ச்சிக்கு முன் கொடுக்கவிரும்பும் கொடையாளர்கள் தனியாக விரும்பிய தொகையைத் தரலாம் என்ற அறிவிப்பு தொடர்ந்து அதிர்ந்து கொண்டே இருந்தது.

சரியாக ஆறு மணி. இதோ ஏற்பாட்டாளர் குழு தலைவர் திரு ரெங்கசாமி. முன் இரண்டு வரிசைகளில் ஊனமுற்றோர்கள் சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

‘இன்னும் ஒரு சில நிமிடங்களில் ருக்மணி சகோதரிகளின் பரத நாட்டியம் ஆரம்பமாகும். அனைவரும் அமைதியாக கடைசிவரை இருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று திரு ரெங்கசாமி அறிவித்த அடுத்த நிமிடம் ஏ.பி. நாகராஜனின் திரைப்படம்போல் அரங்கு கலை கட்டியது. தவில் முழக்கத்தோடு அமைதியான ஓடம்போல் புறப்பட்ட இசையோடு ருக்மணி சகோதரிகளின் நடனம் பல பிரமிப்புகளை ஏற்படுத்திய வண்ணம் தொடர்ந்து சரியாக 7 மணிக்கு முடிந்தது.அடுத்து பக்திப் பாடல் புகழ் நேசமணி அழைக்கப்படுவதற்கு முன் தலைவர் ரெங்கசாமி சில முக்கிய அறிவிப்புக்களுடன் மீண்டும் மேடைக்கு வந்தார்.

‘எங்களின் நோக்கம் நன்கொடையாளர்களை சிறப்பிப்பதும் எல்லாரையும் நன்கொடை வழங்க ஊக்குவிப்பதுமே யாகும். கொடுத்தே பழக்கப்பட்ட எங்களின் கொடையாளர்கள் இப்போது வசூல் பையை ஏந்தியபடி உங்களிடம் வருவார்கள். பத்துக் காசாக இருந்தாலும் கொடுங்கள். ராமருக்கு அணிலும் மண் சுமந்ததை மறந்துவிடாதீர்கள். உங்களிடமிருந்து வரும் காசுதான் நம் அமைப்பிற்கான அடி உரம். இதோ புறப்படுகிறார்கள் எங்களின் கொடையாளர்கள்.’

கொடையாளர்கள் எல்லா திசைகளிலும் முன்னேறினார்கள். சிலர் பொத்திய கரங்களை உள்ளே நீட்டி இழுத்துக் கொண்டார்கள். அவர்கள் கொடுத்தார்களா? எடுத்தார்களா? அல்லது இரண்டுமே இல்லையா? அது இறைவனுக்கும் அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். இரண்டு வெள்ளி, ஐந்து வெள்ளி, பத்து வெள்ளி நோட்டுக்கள் பல விழுந்து கொண்டே இருந்தன. பத்து வெள்ளி போட்டவர்கள் எல்லார் பார்வையும் தன் மேல் விழுவதை உறுதிப்படுத்திக் கொண்டு பிறகு உள்ளே போட்டனர்.

எட்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார் ராமசாமி. விருட்டென்று தன் பேண்ட் பையில் கையை விட்டார். தன் காசுப்பையைத் திறந்தார். ஒரு ஐம்பது வெள்ளித் தாளை உருவினார். அதை வாயில் கவ்விக் கொண்டு காசுப் பையை பேண்ட் பையில் திணித்தார். லாவகமாக அந்த ஐம்பது வெள்ளியை கையில் மாற்றிக் கொண்டார். அதன் மூலைப் பகுதியால் கன்னத்தைச் சொரிந்து கொண்டார். சுற்று முற்றும் தன் கடைக் கண்ணை சுழற்றினார். எல்லாரும் தன்னை கவனிப்பதை உறுதிப் படுத்திக்கொண்டார். இதோ கொடையாளர்கள் வசூல் பையுடன் ராமசாமியை நெருங்கிவிட்டார்கள். மீண்டும் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்துவிட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அந்த ஐம்பது வெள்ளியை உள்ளே தள்ளினார். எவரெஸ்டில் ஏறிவிட்ட பெருமையில் தன் சட்டைக் காலரை பின்னால் இழுத்துக் கொண்டார். வசூல் பை அடுத்த வரிசைக்கு முன்னேறியது. ராமசாமிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியண்ணன் எதுவுமே போடவில்லை. அவரை அருவருப்பாகப் பார்த்தார் ராமசாமி. ராமசாமிதான் பேச்சைத் துவங்கினார்.

‘தாங்கள் ஏன் எதுவுமே போடவில்லை?’

ஒரு புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

‘என்னைப்போல் ஐம்பது வெள்ளி தரவேண்டியதில்லை. பத்துக் காசுகூட தரலாம் என்றார்களே. நன்மையை அள்ளிக் கொள்ளும் பெரிய வாய்ப்பை இழந்துவிட்டீர்கள்.’

மீண்டும் புன்னகைதான் பதிலாக வந்தது.

‘ஒரு பத்துக் காசு தாருங்கள். உங்கள் சார்பாக நான் போய் போட்டு வருகிறேன்’

மீண்டும் புன்னகை.

‘எதைக் கேட்டாலும் புன்னகைதானா? செவிடாக இருப்பாரோ? நமக்கு ஏன் வம்பு?’

தனக்குள் முனகிக் கொண்டார் ராமசாமி.

காற்றுப் போன பலூனாய் புறப்பட்ட வசூல் பைகள் காற்று திமிரும் டயர்களாக மேடைக்குத் திரும்பின.

தலைவர் ரெங்கசாமி மீண்டும் மேடைக்கு வருகிறார்.

‘அள்ளித் தந்த கரங்களுக்கும் கிள்ளித் தந்த நகங்களுக்கும் எங்களின் நன்றி. நிகழ்ச்சியின் முடிவில் மொத்தத் தொகையை அறிவிப்போம். பக்திப் பாடல் புகழ் நேசமணி அவர்களின் நிகழ்ச்சி தொடங்குமுன் ஆயிரம் வெள்ளி நன்கொடை அளித்தவர்களை பாராட்ட விரும்புகிறோம். முதலாவதாக திரு பெரியண்ணன்.’

பெரியண்ணன் அடக்கமாக எழுந்து மேடை நோக்கி நடந்தார். ராமசாமி கண்களைக் கசக்கிக் கொண்டார். ‘உங்களின் கருணைக்கு எங்களின் நன்றி என்று பொறிக்கப்பட்ட விருது ஒன்றை மூன்று சக்கர நாற்காலியில் இருந்தபடி ஊனமுற்றோர் சங்கத் தலைவர் வழங்க ரெங்கசாமி பொன்னாடை போர்த்தி கும்பிட்டார். பதிலுக்கு பெரியண்ணனும் இருவரையும் வணங்கி கைகுலுக்கிவிட்டு தன் இருப்பிடம் விரைந்தார். ராமசாமி உட்கார்ந்திருந்த நாற்காலி காலியாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றினார் பெரியண்ணன். அகப்படவேயில்லை ராமசாமி.

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *