கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,414 
 

“என்னங்க மத்தியானத்திலேர்ந்து இதுவரை ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு மேல பிடிச்சிருப்பீங்க…இப்படியே போனா உடம்பு என்னத்துக்கு ஆகும்?”

பாஸ்கரின் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே எறிந்தாள் மாலதி. ஏதோவொரு புத்தகத்தில் லயித்திருந்த பாஸ்கருக்கு, மாலதியின் இந்தச் செய்கையினால் முனுக்கென்று கோபம் வந்தது.

“இத பாரு மாலு, ஏற்கனவே நான் உன்னிடம் பல தடவை சொல்லியாச்சு, தெரிந்தோ தெரியாமலோ சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாயிட்டேன்… அத என்னால விட முடியாது, உனக்கு முன்னாலேயே நான் சிகரெட்டை கல்யாணம் பண்ணிகிட்டாச்சு, என்னோட தனிப்பட்ட சுதந்திரத்துல நீ தலையிடாதே.”

இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்து, புத்தகத்தை தொடர்ந்து படிக்கலானான்.

மாலதி முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டு பெட்ரூமினுள் சென்று படுக்கையில் விழுந்தாள். இரவு மணி பத்தடித்ததும், புத்தகத்தை மூடிவிட்டு பெட்ரூமிற்கு வந்தான் பாஸ்கர். விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

மாலதி கட்டிலின் டன்லப் மெத்தையில், தலையணையில் முகம் பதித்து குப்புறப் படுத்துக் கொண்டிருந்தாள். புடவை கணுக்காலுக்கு மேல் விலகியிருந்தது. சிவப்பு நிற உள் பாவாடையின் பின்னணியில் தெரிந்த தந்தம் போன்ற செழுமையான கால்களின் அழகும், வசீகரமான பிருஷ்டங்களின் அமைப்பும்… பாஸ்கர் உஷ்ணமானான்.

அவள் அருகில் சென்று அன்புடன், “மாலு, மாலு” என்று செல்லமாக அவள் முதுகைத் தட்டினான். அவள் அசையவில்லை.

“தூங்கறவளை எழுப்பலாம், தூங்குவது மாதிரி நடிப்பவளை எழுப்ப முடியாது” என்று அவளுக்கு கேட்கும் விதத்தில், சிரித்தபடி சொல்லிவிட்டு, விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொண்டான்.

பாஸ்கர் ஒரு பிரபல நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ். மாலதி ஒரு பெண்கள் கல்லூரியில் சைக்காலஜி லெக்சரர். பார்ப்பவர்கள் மறுபடியும் பார்க்கத் தூண்டும் அழகான ஜோடி. திருமணமாகி கடந்த ஆறு மாதங்களில் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு அனுசரித்து அன்புடன் இருந்தாலும், தன் கணவன் சிகரெட் புகைப்பதை மட்டும் மாலதியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

எத்தனையோ தடவைகள் அவனிடம் சொல்லிப் பார்த்தாள், கெஞ்சிப் பார்த்தாள், சிகரெட் பாக்கெட்டை ஒளித்து வைத்தாள், லைட்டரை மறைத்து வைத்தாள், அவ்வப்போது இரவில் ஒத்துழையாமையும் செய்து பார்த்தாயிற்று…. ஒன்றுக்கும் அவன் மசியவில்லை. இதனால்
அவர்களிடையே ஊடல்தான் ஏற்பட்டதே தவிர, பாஸ்கர் திருந்துவதாக இல்லை.

மறு நாள் காலை.

தன் காரில் மாலதியை அவள் கல்லூரி வாசலில் இறக்கிவிடும்வரை, அவள் பாஸ்கரிடம் ஒன்றுமே பேசவில்லை. அன்று இரவும் அவளின் கோபம் தொடரவே, பாஸ்கர் சற்று இறங்கி வந்தான்.

மாணவிகளின் விடைத்தாள்களை திருத்திக் கொண்டிருந்தவளிடம், “இத பாரு மாலு, என்னைப் புரிஞ்சுக்கோ, நீ கலகலப்பா இல்லாம இந்த வீடே நல்லா இல்ல, சிகரெட்டை விட்டுவிட நான் ட்ரை பண்றேன், ஆனா நீ என் சுதந்திரத்துல தலையிடக் கூடாது… நீ உன் தோழிகளுடன் அடிக்கடி சினிமாவுக்கு போறயே, அதை நான் அனுமதிக்கலையா, உன்னுடைய சுதந்திரத்துல நான் தலையிடுகிறேனா?” குழைந்தான்.

“இத பாருங்க என் கணவர் உடல் ஆரோக்கியமா இருக்கணும்னு அக்கறை கலந்த அன்பினால்தான் நான் உங்களை சிகரெட்டிலிருந்து தடை செய்கிறேன். நீங்கள் எதற்கெடுத்தாலும் சுதந்திரம், சுதந்திரம்னு பேசி உங்கள் உடம்பை பாழ் பண்ணிக் கொள்கிறீர்கள்… சரி நான் இனிமே சினிமாவுக்கே போகலை, நீங்கள் சிகரெட்டை விட்டு விடுவீர்களா?” மடக்கினாள்.

பாஸ்கரால் பதில் பேச முடியவில்லை. ஊடல் மறைந்து சகஜ நிலைக்கு திரும்பியதால், பாஸ்கருக்கு அன்று இரவு படுக்கையறையில் மாலதியின் அனுக்கிரகம் கிடைத்தது.

மறு நள் காலை. கல்லூரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த மாலதி, வாஷ்பேசினில் இரண்டு முறை வாந்தி எடுத்தாள். தலையைச் சுற்றுவதாகச் சொன்னாள். பதறிப்போன பாஸ்கர் உடனே அவளை காரில் ஏற்றிக் கொண்டு டாக்டரிடம் அழைத்துச் சென்றான்.

“மிஸ்டர் பாஸ்கர், மாலதிக்கு இது இரண்டாவது மாதம்” டாக்டர் சொன்னபோது, மகிழ்ச்சியில் கண்கள் கலங்க, மாலதியை அணைத்துக் கொண்டான்.

நாட்கள் செல்லச் செல்ல அவர்களிடையே பரஸ்பர அன்பும், அன்னியோன்யமும் அதிகரித்தது. பாஸ்கர் உற்சாகத்தில் மிதந்தான். ஆனால், சிகரெட் என்னும் கொடிய பழக்கத்தை அவன் விடவில்லை, குறைத்துக் கொள்ளவுமில்லை.

அன்று, கல்லூரி நூலகத்தில் ஒரு சைக்காலஜி புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த மாலதிக்கு, திடீரென்று அந்த எண்ணம் பளிச்சிட்டது. சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள்.

மாலையில் பாஸ்கர் அலுவலகத்திலிருந்து திரும்பியபோது, மாலதி அவனை தன் கையில் புகையும் சிகரெட்டுடன் வரவேற்றாள். அவனெதிரில் இரண்டு முறை சிகரெட் புகையை உள்ளிழுத்து வெளியிட்டாள்.

அதிர்ந்துபோன பாஸ்கர், “மாலு உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? என்ன இதெல்லாம் புதுப் பழக்கம்?” இரைந்தான்.

“ஐயாம் சாரி பாஸ்கர், புதுப் பழக்கம் இல்ல… நான் திருச்சியில் காலேஜ் படித்துக் கொண்டிருந்தபோது, ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்ப என் தோழிகளுடன் சேர்ந்து தினமும் சிகரெட் பிடிப்பேன். இப்ப உண்டாகியிருக்கேனா, சாம்பல் திங்கற மசக்கை வந்திருக்கு…சாம்பலுக்கு நான் எங்க போறது, அதனால சிகரெட் புகைத்து சாம்பல தட்டறேன்….பழைய ஞாபகங்களின் கிளர்ச்சியில் மறுபடியும் இந்த கெட்ட பழக்கத்தை ஆரம்பித்து விட்டேன். சாரி டியர், இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் என்கிற அளவில் நீங்க இதுல தலையிட மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.” தொடர்ந்து புகைத்தாள்.

பாஸ்கர் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றான். அன்று இரவு படுக்கையறையில் மாலதி சகஜமாக இருக்க முயன்றும், பாஸ்கர் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தான். மாலதி, தன்னுடைய ஷாக் ட்ரீட்மெண்ட் உடனே வேலை செய்ய ஆரம்பித்து விட்டதை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலையில், “தலையை வலிப்பதால் தான் இன்று கல்லூரிக்குச் செல்லவில்லை” என்று சொன்னாள். பாஸ்கர் பதிலேதும் சொல்லாமல் தன் அலுவலகம் கிளம்பிச் சென்றான். கையில் புகையும் சிகரெட்டுடன் அவனை வழியனுப்பி வைத்தாள்.

மாலை வீடு திரும்பிய பாஸ்கர் அதிர்ச்சியடைந்தான். மேஜையின் மீது வீற்றிருந்த புதிய ஆஷ் ட்ரேயில் புகைத்து அணக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் பல சாம்பலுடன் காணப்பட்டன. அதனருகே பிரிக்கப்படாத இரண்டு புதிய சிகரெட் பாக்கெட்டுகளும் இருந்தன. மாலதி, சிகரெட் பிடித்தபடி டி.வியில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

இனிமேலும் தான் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்த பாஸ்கர், “மாலு இது என்ன அநியாயம். மத்தியானம் முழுவதும் நிறைய சிகரெட்டை ஊதித் தள்ளியிருக்கியே, இது உனக்கே நல்லாயிருக்கா? அத்து மீறிய சுதந்திரம் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

வயிற்றில் வளரும் குழந்தையுடன் இவ்வளவு சிகரெட் பிடித்தால் உடம்பு என்னத்துக்காகும்? இந்தக் கெட்ட பழக்கத்தை தயவு செய்து விட்டுடேன்..” அழும் குரலில் கெஞ்சினான்.

“அடிமையாயிட்ட கெட்ட பழக்கத்துக்கு சுதந்திரம், அத்து மீறிய சுதந்திரம்னு ஏதாவது அளவு கோல் உண்டா என்ன? என்னால இத விடமுடியுமான்னு சந்தேகமா இருக்கு பாஸ்கர்.”

“மாலு, வில் பவர்ன்னு ஒன்று நமக்கு இருந்தால் எந்தக் கொடிய பழக்கத்தையும் நாம் விட்டு விடலாம், புரிஞ்சுக்க ப்ளீஸ்.”

“டியர் வீ ஆர் செயிலிங் இன் த சேம் போட்… நாம ஒருவருக்கொருவர் சிகரெட்டை விட்டு விடச் சொல்வதில் அர்த்தமேயில்லை.”

பாஸ்கர் ஏறக்குறைய அழும் நிலைக்கு வந்து விட்டான். குரலில் ஒரு உத்வேகத்துடன், “மாலு, நான் இந்த நிமிடத்திலிருந்து சிகரெட் பிடிப்பதை சத்தியமாக விட்டு விடுகிறேன்… உன் வயிற்றில் வளரும் நம் குழந்தைக்காக நீயும் இனிமேல் சிகரெட்டைத் தொட மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு” மாலதியின் வலது கையை தன் வலது கையினால் சத்தியமடிக்க பற்றினான்.

பற்றிய அவனது கையை அமைதியாகத் தன் அடிவயிற்றில் கொண்டு வந்து வைத்து, “என் வயிற்றில் வளரும் நம் குழந்தை மீது சத்தியமா நீங்க இனிமேல் சிகரெட்டைத் தொட மாட்டீங்கன்னா, நானும் இப்பவே சிகரெட்டை விட்டு விடுகிறேன்.” கண்களில் நீர் மல்கச் சொன்னாள் மாலதி.

பாஸ்கர் அவ்வாறே சத்தியம் செய்தான்.

பிறகு, மாலதி உணர்ச்சி வசப்பட்டு குரல் உடைய, “என்னை மன்னிச்சிடுங்க பாஸ்கர், உங்களை திருத்துவதற்காக நான் அதிர்ச்சி வைத்திய நாடகமாடினேன். நான் இதற்கு முன்பு சிகரெட்டைத் தொட்டதுகூட இல்லை. உங்களைப் பயமுறுத்துவதற்காக இரண்டு பாக்கெட் வாங்கி அவைகளின் பில்டருக்கு அருகே பிளேடினால் வெட்டி, நெருப்பில் சுட்டு அவ்வளவையும் ஆஷ் ட்ரேயில் போட்டேன். நான் கடந்த இரண்டு நாட்களில் மிகவும் சகித்துக் கொண்டு பிடித்தவை உங்கள் கண் முன்னால் புகைத்த சிகரெட்டுகளில், சில இழுப்புகள் மட்டுமே…யப்பா எப்படித்தான் அந்த குமட்டல் நாத்தத்தை இத்தனை வருஷமா பொறுத்துக்கிட்டீங்களோ.” முகம் சுளித்தாள்.

பாஸ்கர் அவளின் முகச் சுளிப்பை ரசித்து ஆர்வத்துடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

நிக்கோடின் இனி படியக்கூடாத இரண்டு உதடுகள் அங்கு சப்தத்துடன் சங்கமித்துக் கொண்டன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *