நுாறு ருபாய் நோட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 7,216 
 

டேய் சிவா என்ற குரல் அத்தனை வாகன இரைச்சல்களையும் கடந்து என்னைத் தாக்கியது.

திரும்பிப் பார்த்தேன்.

எதிர் திசையில் கோபால். பால்யத்தில் என் பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள்.

நில்லு. நானே அங்க வர்றேன்.

சாலையைக் கடந்து அருகில் வந்து என்ன சிவா எப்படியிருக்க என்ற கோபாலின் கன்னங்கள் ஒட்டியிருந்தன. இடுங்கின கண்கள். வியர்வையில் ஊறிய முகம்.

நல்லாயிருக்கேன்.நீங்க எப்படியிருக்கீங்க என்றேன்.

ஏதோ இருக்கேன். பாச்சலுர்லதான் இருக்கேன். பழனிக்கு வந்தா உன்னை விசாரிப்பேன். வீட்ல அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா?

ம்.

நீ கவர்மென்ட்ல ஆபீஸரா இருக்கேன்னு மணி சொன்னான். சந்தோசம்டா ரொம்ப சந்தோசம். நாங்கள்லாம் படிக்கல. நீ நல்லா படிச்ச. ரெண்டு குழந்தைங்க. வீட்ல அடிக்கடி உடம்பு முடியாம போகுது. எனக்கும் வயசாச்சு.சிரமந்தான். ஏதோ வண்டி ஓடுது.

கோபால் பேசப் பேச, சரசரவென எனக்குள் ஊர்ந்து படமெடுத்தது ஒரு எண்ணம். பணம் கேட்கப் போகிறாரோ?

சட்டென்று அத்தனை புலன்களும் விழித்துக் கொள்ள, உடல் இறுகியது. கொடுக்காமலும் இருக்க முடியாது. சரி. அப்படியே கொடுத்தாலும், நுாறு ருபாய்க்கு மேல் தரக் கூடாது.

எல்லாம் ஒரே குடும்பமா இருந்தோம். இப்ப அது மாதிரி யாரிருக்கா. பத்து வருஷமானாலும் பக்கத்து வீட்டுக்காரன் சிரிக்க மாட்டேங்கிறான்.

சிவா, செலவுக்கு காசில்ல கொஞ்சம் பணம் கொடு என்று கோபால் கேட்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

சட்டைப்பாக்கெட்டினுள் கை விட்டு பணத்தை எடுத்து என் கையில் வைத்து, வீட்டுக்கு வர முடியல. குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு என்றதும் உறைந்து போனேன்.

இதெல்லாம் எதுக்கு? பலவீனமாய் ஒலித்தது என் குரல்.

அட வைப்பா. என்ன லட்சக் கணக்கிலயா கொடுத்திட்டேன். ஏதோ என்னால ஆனது. வரட்டுமா, வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லு என்றபடி கோபால் போனதும் கையைப் பார்த்தேன்.

நடுங்கிக் கொண்டிருந்த கையினுள் தணலென மின்னியது நுாறு ருபாய் நோட்டு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *