அந்தக் காலத்தில் வயசானவங்கதான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வெற்றிலையை மென்று கொண்டே அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம்!
இந்தக் காலத்துப் பசங்க சில சினிமாக்களைப் பார்த்து விட்டு மதில் மேல் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டாங்க!
அன்று மாலை நாலு பேர் சேர்ந்ததும் மதில் மேல் உட்கார்ந்து கொண்டு அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்கள்.
செல்வம் தான் முதலில் ஆரம்பிச்சான். அவனுக்கு சினிமா நடிகர்கள் என்றாலே பிடிக்காது..
“வர வர நம்ம நாட்டிலே இந்த சினிமா ஹீரோக்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் தரறாங்க!…..இது கொஞ்சம் கூட நல்லா இல்லே? “
கதிரேசன் ஒரு தீவிர சினிமா ரசிகன்.
“டேய்!..செல்வம்.. அவங்களை குறை சொல்றதே உனக்கு வேலையாப் போச்சு!… உனக்கு சினிமா ஹீரோக்கள் மேல் அப்படி என்னடா வெறுப்பு?…” என்று கோபமாகக் கேட்டான் கதிரேசன்.
“எப்ப பார்த்தாலும் நீ ஹீரோக்களுக்கு சும்மா வக்காலத்து வாங்காதே!…அவங்க சாதிச்சதா ஒரு சின்ன விஷயத்தையாவது உன்னால் சொல்ல முடியுமா?….”
“சொன்னா நீ வருத்தப் படக் கூடாது!..”
“ சொல்லடா பார்க்கலாம்?..”
“சொல்லட்டுமா?…..நீயும் தான் வருஷக் கணக்கா முயற்சி பண்ணிப் பாக்கறே!…உன்னால் முடிஞ்சுதா?…இல்லே…நம்ம காவல் துறை அதிகாரிகளையே கூட எடுத்துக்க..அவங்களும் படாத பாடு பட்டு வருஷக் கணக்கா முயற்சி பண்ணறாங்க.. அவங்களாலாவது முடியுதா?…ஆனா நம்ம ஹீரோக்கள் நெனைச்சா இரண்டே மாசத்தில் முடிச்சுக் காட்டறாங்க!….அதெல்லாம் கூட சாதனை தாண்டா!…”
“நீ எதையடா சொல்லறே?…..புரியற மாதிரி சொல்லு!…”
“உனக்கு நான் சொல்லறது சாதாரணமான விஷயமாத்தானிருக்கும்! ஆனா நீங்க எல்லாம் வருஷக்கணக்கா முயற்சி செய்தும் உங்களாலே முடியலே!…ஆனா .அவங்க நினைச்சா படத்திற்கு படம் அவங்க உடம்பை ஒல்லியாகவும், குண்டாகவும் மாற்றிக் காட்டி விடறாங்க!…நம்ம விக்ரமை எடுத்துக்க!…ஒரு சர்க்கஸ்காரனால் கூட அப்படி உடம்பை டைரக்டர் சொன்னபடி நினைச்ச மாதிரி மாத்த முடியாது! நம்மாலே முடியாததை எல்லாம் சினிமாக்காரங்க செய்து காட்டறாங்க! அது கூட ஒரு பெரிய சாதனைதான்!……செல்வம்! நீ உன் தொப்பையைக் குறைக்க என்ன என்ன செய்தே? நினைச்சுப் பாரு! உன்னால் முடிந்ததா?..” என்று கதிரேசன் கேட்டான்.
நண்பர்கள் எல்லாம் செல்வத்தின் தொப்பையைப் பார்த்து விட்டுச் சிரித்தார்கள்.
– பாக்யா ஜூலை 1-7