மலரும் முட்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 5,287 
 

“மலரு…. ஏட்டி, மலரு……. காலங்காத்தால பொட்டப் புள்ள இப்டி தூங்கனா வூடு வெளங்கிடும். எழுந்து வேலையப் பாரு” என்று தாயின் குரல் கேட்டதும் “ஆம்ம்மா” என்றபடி வாரிச் சுருட்டி எழுந்த நம் கதா நாயகி தங்க மலருக்கு மிஞ்சிப் போனால் 18 வயதிருக்கும்.

பேர் தான் தங்க மலர் ஆனா இந்த மலர் இருப்பது என்னவோ லாரிகள் அடிக்கடி திருட்டுத்தனமாக வந்து கழிவு நீரை கொட்டிச் செல்லும் மங்காத்தா ஏரிக்கரையில் தான். அது புதுமை பித்தனின் பொன்னகரத்திற்கு எள் முனை அளவு கூடக் குறைந்து இல்லை.

மேயும் பன்றிகள், முள்ளுச் செடிகள், சதா துர் நாற்றம் என்றும் பல சிறிய பெரிய சமூக விரோதிகளின் புகலிடமாக விளங்கும் பெரும் சிறப்புக்களைக் கொண்ட புற நகர் பகுதி மல்லிகை நகர் விரிவு.

மலரின் வீடு என்பது 3 ஆஸ்பெட்டாஸ் சீட், மண்சுவர் 7 அடி உயரமும், 12 அடிக்கு 10 அடி நீள அகலம் கொண்டது. நடுவில் ஒரு புடவை கிழிசல் அதை இரண்டு பகுதியாகப் பிரித்தது. அதற்கு வாடகை உள்ளூர் தாதா கண்ணுப்பிள்ளை மாதம் பொறந்தால் 500 ரூபாய் குடக்கூலியாக வாங்கிக் கொள்வான்.

மல்லிகை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதை ஒட்டி உள்ளுர் அரசியல் பிரமுகர் ஒருவர் தர்ம சிந்தனையுடனும், நகர் மக்களுக்கு குற்றேவல் புரியத் தேவையான ஆட்களின் தேவைக்காகவும் ஏரிக்கரை புறம் போக்கு நிலத்தை மலரின் மாளிகை போன்ற சுமார் 150 மாளிகைகளை கட்டி குறைந்து வாடகைக்கு விட்டு சேவை செய்து கொண்டிருந்தார். கண்ணுப்பிள்ளை அவரது எடுப்புகளில் ஒருவன். இயற்கையான மற்ற சமாச்சாரங்களுக்கெல்லாம் ஏரியின் முள்ளுக் காட்டுப் பகுதி தான். நம்ம கதாநாயகி மலர் பக்கத்து அரசு பள்ளியில் மேல் நிலை இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.

இந்த காலத்தில் நகர் புறத்தில் இது போன்ற கடவுளும்,மனிதர்களும் ஒரு சேரக் கைவிட்ட நிலையில் உள்ள குழந்தைகள்தான் அரசுப் பள்ளியில் படிக்கின்றன. அங்கேயும் பாதி நேரம் வாத்தியார் வரமாட்டார். தலைமை ஆசிரியருக்கு சாதி வாரி கணக்கெடுத்த நேரம் போக மீதி நேரம் மீட்டிங். பாவம் அவரும்தான் என்ன செய்வார், பாதி ஆசிரியர்கள் போஸ்ட் காலி. ஆள் போட்டாலும் அந்த பள்ளிக்கு யாரும் வந்து சேர்வதில்லை.

மல்லிகை நகர் பள்ளி போஸ்டிங்க் வந்ததுமே, ஒன்னு அல்லது இரண்டு லகரங்களை செலவு செய்து வேறு பள்ளிக்கு மாற்றல் வாங்கி விடுவர். இது பற்றி கவலைப்பட அதிகாரிகளுக்கும் நேரமில்லை. அப்படியே இருந்தாலும் அதிகம் கவலைப் பட அது என்ன பிரபலமானவர்கள் அல்லது அதிகாரிகள் குழந்தைகள் படிக்கும் பள்ளியா இல்லையே.

தலைமை ஆசிரியர் முதல் இப்பொழுது பணியில் இருக்கும் எல்லாருமே எதாவது புகாரின் பேரில் தண்டனையாக மாற்றல் பெற்ற பெருமை படைத்தது அந்த அரசுப்பள்ளி. என்னவோ தெரியாதனமாக பெரம்பலூர் பக்கத்திலிருந்து அந்த பள்ளிக்கு வந்த கருப்பையா சார் மட்டும் பள்ளியின் மேல் ஒரு பிடிப்புடன் இருந்தார். அந்த பள்ளியை விட்டு மாறுதலுக்கு முயலாத ஒரே வாத்தியார் அவர்தான். மாணவர்களுடன் அதிகம் பொழுதை கழிப்பார். மாணவர்களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். பள்ளியின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் அதன் அவலங்களை பத்திரிக்கைகளில் எழுதியும் கார்ப்ரேஷன் கழிவறையை விட மோசமான நிலையில் கவனிப்பாற்ற நிலையில் பள்ளி இருந்தது.

ஏழை மக்களுக்கு அந்த பள்ளியில் ஆங்கில மீடியம் இடம் கிடைப்பதே பெரிய விஷயம். அதற்கே சிபாரிசு கடிதம் வாங்கித் தர குறைந்து 2000 ரூபாயாவது தெண்டம் அழணும். அப்புறம் தலைமை ஆசிரியருக்கு 500 ரூபாய் அப்படி இப்படி என்று 4000 ஆகிவிடும். ஆனா கல்வி என்னவோ இலவசந்தான்னு சொல்லறாங்க. நம்ம மலருக்கு ஆங்கில மீடியம் அரசாங்க பள்ளியில் கூட படிக்க குடுப்பினை இல்லை.

மலர் எழுந்து முள்ளுகாட்டுக்கும், ஏரிக்கரைக்கும் போய்விட்டு வந்த சமயம் வானம் கிழக்கே லேசாக வெளுக்க ஆரம்பித்திருந்தது. அம்மா சீதம்மா பேருக்கேற்றால் போல் நல்ல அழகி. அப்பா முத்தழகு நல்லவன்தான். ஆனா குடிச்சிட்டா அப்புறம் நாறவாய் ஆகிவிடுவான்.

மலருக்கு அடுப்பு பத்த வைத்து சோறாக்கி, குழம்பு வைக்க வேண்டும். அப்பாவும் அம்மாவும் அவள் சமைத்ததை டப்பாவில் எடுத்துக் கொண்டு ஷேர் ஆட்டோ பிடித்து முகப்பேர் வந்து மேஸ்த்திரிகளுக்காக கூட்டத்தோடு கூட்டமா காத்துக்கிடந்தால் , யாராவது மேஸ்த்திரி கூப்பிடுவார். இருவரும் சேர்ந்து பெரியாள், சித்தாளாக போய் வேலை செய்வார்கள்.

மலர் மீதமுள்ள சாதம் குழம்பை ஊற்றி சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்பிவிடுவாள். பள்ளியில் அமைதியாகவே இருப்பாள். யாராவது பேசினால்தான் பதில் பேசுவாள். பள்ளி வர வழில இந்த கண்ணுப்பிள்ளையின் மகன் தொந்தரவு வேறு. சைக்கிளில் பின்னால் வந்து சினிமா பாட்டு பாடி ஒரே ராவடி. எப்படியோ ஓடி வந்து பள்ளியில் நுழைந்து விட்டாள். அப்பாடா இனி மாலை ஐந்து மணி வரை பிரச்சினை இல்லை. நான்கு மணிக்கே எழுந்த அசதி கண்ணயர்ந்தவளை பி.டி மாஸ்டர் செல்லப்பன் விசில் எழுப்பியது. அவசரமாக ஓடி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தவளை பி.டி மாஸ்டர் கூப்பிட்டார்.”என்னம்மா பொழுது இப்பத்தான் விடிஞ்சதா” என்று கேட்டது மனதை அறுத்தாலும் பதில் பேசவில்லை. வாத்தியார் எத்தனை மணிக்கு எழுந்தார் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.

முதல் பிரிவேளை இயற்பியல்.

கதிர்ச்செல்வன் சார் மிகவும் கண்டிப்பானவர். வருகை பதிவு முடிந்ததும் செய்முறை பதிவேடு (PHYSICS RECORD) கொடுக்காதவர் பெயரை படிக்கும் படி சொன்னவுடன் லீடர் சங்கர், “தங்கமலர் மட்டும் தான் தரலை சார்” என்றான்.

“தங்கமலர் எழுந்திரு. ஏன் ரெக்கார்ட் இன்னும் தரவில்லை? இதுவரை மூன்றாவது தடவையாக கேட்டு தரவில்லை”

…………………….

“என்ன நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ பதிலே சொல்லாம மரம் மாதிரி நிற்கிரே”

………………………………

“ஒண்ணும் சொல்லாம இங்க நிக்காதே. வெளிய போய் நில்லு”, என்று அவளை வகுப்புக்கு வெளியே நிறுத்தி விட்டார்.

வெளியே நிற்பது பற்றி அவளுக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் மங்கையர்க்கரசி டீச்சர் அவளை தலைமை ஆசிரியரிடம் உடனே அனுப்பிவிட்டாள்.

காலையிலேயே பயங்கர கடுப்பிலிருந்த தலைமைஆசிரியர் வேறு காடுத்தனமாக அவர் பங்குக்கு திட்டினார். ஆனால் மலர் எதுவும் பேசவில்லை. கண்ணீர் கூட வரவில்லை. அந்த நேரம் எதோ வேலையாக வந்த கருப்பையா வாத்தியார் அவளை பார்த்துவிட்டு, “ மலர் நல்ல பிள்ளையாச்சே, சரி நான் விசாரிக்கிறேன்” என்று தன் அறைக்கு கூட்டி வந்து மலரை விசாரிக்க அழ ஆரம்பித்து விட்டாள் மலர்.

“மலர். என்னம்மா நடந்தது? சொல்லும்மா.”

“ரெக்கார்ட் நோட் கொடுக்கலைசார், அதான் “

“ஏம்மா நேரத்தோட கொடுத்துட வேண்டியதுதானே. சரி ஏன் பதில் சொல்லாம இருந்தே? அதுதான் எல்லாருக்கும் கோபத்தை கிளப்பி விட்டது. எதாவது
சொல்லலாமில்ல”?

‘சார், எங்கப்பா, அம்மா இரண்டு பேருமே கொத்தனார், சித்தாள் வேலை செய்யறவங்க. காலையில் ஆறரை மணிக்கு வேலைக்கு போனத்தான் வேலை கிடைக்கும்.அதால நா தான் அவங்களுக்கும் சமையல் செய்து அனுப்பணும். அதனால் தினமும் 5 மணிக்கே எழுந்து என் வேலைகளை முடிச்சிக்கணும். விடிஞ்ச பிற்கு முள்ளுகாட்டிற்கு போக முடியாது. அதுவும் அந்த நாளுங்களில் வயிற்று வலி வேற , படபடப்பு, எல்லாம் அவஸ்தை சார். பள்ளிக்கூடத்தில் பாத்ரூம் மறைவா இருக்கும். அதனால் பல நாள் பள்ளிக்கு சீக்கிரமே வந்து விடுவேன். மதியம் சத்துணவு கிடையாது. ஆனா ஒரு தம்பி எனக்காக இரண்டு தரம் வாங்கியாந்து தரும் சார். சில நாள் அந்த ஆயா பார்த்திட்டு பரிதாபப்பட்டு சோறு தரும். இல்லையினா பட்டினிதான் சார். அம்மாவும் , அப்பாவும் வேலை முடிந்து திரும்ப வர எட்டு மணி ஆகும். வரும் போதே இரண்டு பேரும் நல்லா குடிச்சிட்டு சண்டை போட்டுக் கொண்டேதான் வருவாங்க. அம்மா மேல் அப்பாவிற்கு சந்தேகம். மேஸ்த்திரியுடன் தொடர்பு படுத்தி அம்மாவை அசிங்கமா திட்டுவார். பதிலுக்கு அம்மாவும் கத்தும். இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு ஓய்ந்ததும் பசி எடுத்து சாப்பிட வருவார்கள். அதற்குள் நான் சமையல் முடித்திருக்கவில்லை என்றால் என்னை இருவருமாக போதையில் அடிப்பார்கள். எல்லாக் களேபரமும் முடிந்து தினசரி படுக்க பத்து மணியாயிடும். நான் படிக்க புத்தகம் எடுத்தால் மகாராணி படிச்சி கிழிக்கப் போறா. லைட்ட அணை டீ, என்று கத்துவார்.அம்மா, அப்பா படுக்கிற இடத்துக்கும் நான் படுக்கிற இடத்துக்கும் இடையே மறைப்பு ஒரு கிழிந்த புடவை தான் சார். இதுக்கு முன்ன கதிர் சார் சொன்ன போது ராத்திரி 11 மணிக்கு எழுத ஆரம்பிச்சேன். அன்னிக்கு அவங்க நோட்டை கிழிச்சி போட்டுட்டாங்க. காசு எதுவும் கிடையாது. தினமும் காலையில் அம்மா அம்பது ரூபாய் தரும். அதில் தான் அரிசி எல்லாம் வாங்கணும். சமையல் செய்ய காசில்லை என்றால் அதுக்கு வேற அடி விழும். இதை எல்லாம் அத்தினி பசங்க பொண்ணுங்க இருக்கிற கிளாஸில்எப்படி சார் சொல்ல முடியும். அதான் சார் பதில் பேசவில்லை.”

உறைந்து விட்டார் கருப்பையா சார்.

ஒரு நாள் காலை நடைபயிற்சியின் போது இதை கூறிய அவர், “வி யெஸ் சார்,நமக்கு நம்ம வீடு, குடும்பம், பிஃப் லோன், உடல் நிலை பற்றி கவலைப்படவே நேரம் சரியா இருக்கு. நம்ம கிட்ட படிக்கிற அந்த பச்ச மண்னை, அதன் கஷ்டங்களை பற்றி யாராவது காது கொடுத்து கேட்டிருக்கோமா? என்னவோ லாப்டாப், புத்தகங்கள், சைக்கிள் தந்துவிட்டால் 100% தேர்ச்சி வந்துவிடுமா? வாழ்க்கைத்தரம் மாறாமல் எப்படி சாத்தியமாகும்?’ என்றதும் உண்மை கன்னத்தில் அடித்து என்னை இம்சித்தது.

அதற்குப்பின் வகுப்பில் பதில் சொல்லாத மாணவர்களை தனியே விசாரித்து அவர்களின் பிரச்சனையை புரிந்து கொண்டேன். அவர்கள் வாழிடச் சூழலை அறிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை படிப்பதற்கு வழி வகை செய்ய உறுதி பூண்டேன். இதனைப் படிக்கும் ஆசிரிய நண்பர்களும் அந்த பாவப்பட்ட குழந்தைகளை அறிந்து கொள்ளுங்கள்.முதலில் நீங்கள் மனிதனாகுங்கள். பின்னர் மனிதனை உருவாக்குங்கள். அறிவாளிகளை உருவாக்குவதை அப்புறம் பார்க்கலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *