தெறித்து விழுந்த கனவுகளின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,136 
 
 

மது பிணமாகக் கிடந்தான் என்று ஆரம்பித்தால் எவனோ ஒரு மதுதானே என்று நீங்கள் அடுத்த பக்கத்துக்குச் சென்றுவிடலாம். அதுவே உங்கள் மகன் அல்லது உங்கள் கணவன் அல்லது உங்களின் காதலன் பிணமாகக் கிடந்தான் என்று தொடங்கினாலும் சோகத்தை ஏற்று அடுத்த வரிக்குச் செல்ல மனமில்லாமல் நகர்ந்துவிடலாம் என்பதால் சுபமான வார்த்தைகளில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது.

மதுவுக்கு இன்னும் இரண்டு மணி நேரத்தில் துவங்கப் போகும் அடுத்த நாளில் இருபத்து ஐந்து வயது முடிந்து இருபத்தாறு தொடங்குகிறது. சில வாழ்த்துக்கள் தொலைபேசி அழைப்புகளில் வரத் துவங்கின. யாரோ ஒருவர் ஆட்களின் மூலமாக பூங்கொத்தை அனுப்பி வைத்திருந்தார், சரியாக பன்னிரெண்டு மணிக்கு வர வேண்டியவன் இப்பொழுதே வந்துவிட்டான். எதுவும் மதுவுக்கு உறைப்பதாகத் தெரியவில்லை. பிறந்தநாளை போதையில் தொடங்க வேண்டும் என்பது அவனது விருப்பம். செவ்வனே நிறைவேற்றினான். ஃபெர்ப்யூம் அடித்து, எடுப்பான டீசர்ட் ஜீன்ஸ், ரீபோக் ஷூ அணிந்து வீட்டிற்கு அருகிலிருந்த “பாட்டில்ஸ் அண்ட் சிம்னிஸ்” டிஸ்கோதேவுக்குச் சென்றான். இது ஹைதராபாத் நகரத்தின் முக்கியமான டிஸ்கோத்தே. கை நிறைய காசு கொழிக்கும் யுவன்களும், யுவதிகளும் கெட்ட ஆட்டம் போடும் இடம். மது சென்ற போது ஆஜானுபாகுவான செக்யூரிட்டிகள் வாயிலில் மறித்து “ஸ்டாக்”கிற்கு அனுமதியில்லை என்றார்கள்.

ஆங்கிலத்தில் ஸ்டாக் என்றால் மான். கொம்பு முளைத்த ஆண் மான். இதுவே டிஸ்கோத்தெ மொழியில் என்றால் பெண் துணையில்லாமல் “பப்”க்கு வரும் ஆண். இந்த இழவெடுத்த சில டிஸ்கோதேக்களில் இதுதான் பிரச்சினை. ஆண்கள் கண்டிப்பாக ஷூ போட்டுக் கொள்ள வேண்டும், பெண்களுடன் வந்தால்தான் கண்டிப்பாக ஆண்களுக்கு அனுமதி, இத்யாதி கண்டிஷன்கள்.

இத்தனை தூரம் வந்துவிட்டு ஆடாமல் திரும்ப மதுவுக்கு விருப்பமில்லை அதுவும் பிறந்தநாள் அன்றைக்கு ஏமாறுவது நல்லதில்லை என்பதால் வெளியே நின்றுகொண்டிருந்த இளம் குமரி ஒருத்தியை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். இப்படி பெரிய ‘பப்’களில் சிங்காரிகள் நின்று கொண்டிருப்பார்கள். மணிக்கு இரண்டாயிரம் ரூபாயிலிருந்து வாடகை துவங்கும். வாடகை போக அவள் குடிப்பதற்கும் தின்பதற்கும் இவன் தண்டம் அழ வேண்டியிருக்கும். ஒரு பிறந்தநாளுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கும் மேலாக செலவு என்பது கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிந்தது.

த‌னியாக டிஸ்கோத்தேவுக்கு வ‌ந்திருப்ப‌து ம‌துவுக்கு புதிதில்லை. தெலுங்கு, தமிழ், பலான படம் என்ற வகை தொகையில்லாமல் சினிமாவுக்கும் தனியாக போவான். தனியாகச் சென்று ரெஸ்டார‌ண்டில் மூக்கில் இரண்டு பருக்கை எட்டிப்பார்க்கும் அளவுக்கு பிரியாணியை ஒரு பிடி பிடிப்பான். பல‌‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பூங்காவில் த‌னியாக‌ அம‌ர்ந்து வேடிக்கை பார்ப்பான். சில‌ ச‌ம‌ய‌ம் க‌விதையோ, க‌ட்டுரையோ எழுதுவ‌தாக‌ க‌ன்ன‌த்தில் கை வைத்து செமத்தியான‌ போஸ் ஒன்று கொடுத்து அருகில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு கிலி உண்டாக்குவான்.

ச‌ந்தியாவால் ரெஸ்டாரண்டுக்கும், பூங்காவிற்கும் இவ‌ன் த‌னியாக‌ப் போவ‌தை ஏற்றுக் கொள்ள‌ முடியும். ஆனால் சினிமாவுக்கும் தனியாகப் போவ‌து குறித்து “சைக்கோ” என்று சிரித்துக் கொண்டே சொல்வாள். அவ‌ள் சொல்வ‌து குழ‌ந்தை சொல்வ‌து போல‌ இருக்கும் என்ப‌தால் ம‌து சிரித்துக் கொண்டே ர‌சிப்பான். அத‌ற்கு அவ‌ள் ஃப்ரீக் என்பாள். சந்தியா மதுவின் காதல் தேவதை. இன்னும் மூன்று மாதத்தில் நிச்சயதார்த்தம் முடித்து திருமண தேதியை நிச்சயிப்பதாக ஏற்பாடு செய்திருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளின் காத‌ல் ட்ராக் த‌ற்ச‌ம‌ய‌ம் போன் பில்லிலும், சாட்டிங்கிலும் போய்க் கொண்டிருக்கிற‌து.

வாடகை சிங்காரி தலையை தடவிக் கொண்டிருக்க, மது தனது குடுவைகளை காலி செய்து கொண்டிருந்தான். போதை கொஞ்ச‌ம் த‌லைக்கு ஏறும் ச‌மயமாக பார்த்து, இன்னும் எட்டு மணி நேரத்தில் தான் மரணிக்கப் போகிறேன் என்பது மதுவுக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் தெரிந்துவிட்டது. அவனுக்கு அவ்வப்போது மின்னல் வெட்டுவது போல ஏதாவது மனதில் தோன்றும். கீழ் வீட்டில் கேஸ் அடுப்பு வெடித்ததிலிருந்து, லலிதா எவனுடனோ சல்லாபிக்கும் போது பார்த்துவிட்டு அவளது கணவன் சுப்பிரமணியன் சுளுக்கெடுத்தது, கருப்பண வாத்தியார் மகள் மஞ்சுவுக்கு கோபம் தலைக்கேறி தன் அம்மாவை அரிவாள் நுனியைக் கொண்டு மண்டையை பிளந்தது வரை நிறைய நிகழ்வுகள் திடீரென மதுவுக்கு மனதில் தோன்றி மறைந்து பிறகு பிசிறில்லாமல் பலித்திருக்கிறது.

இன்றும் அப்படித்தான்.மூன்றாவது பெக்கில் முதல் மிடறு வாயில் இருக்கும் போது, ஏற்படவிருக்கும் பூமியதிர்வில் அவனும் இன்னுமொரு ஆயிரம் பேரும் புதையப்போகிறார்கள் என்று தோன்றியது. நிச்சயம் நடந்துவிடும். அவனிடம் இருக்கும் காரில் மணிக்கு ஐம்பது கிலோமீட்டரில் சென்றாலும் கூட நானூறு கிலோமீட்டர் கடந்துவிட முடியும். ஆனால் எந்த ஊரில் தன் மரணம் நிகழப்போகிறது என்பதனை அவனால் என்ன முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எப்படியும் இறக்கப் போகிறான் என்பதால் தப்பித்து ஓடுவதில் பயன் இல்லை என்ற முடிவில், மீதம் இருக்கும் எட்டு மணி நேரத்தை கொண்டாடிவிட முடிவு செய்தான்.

மது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவில் ரமனோவ் வோட்கா அருந்திவிட்டு உறங்கிவிடுவான். அடுத்தநாள் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தால் மட்டும் ‘கோட்டா’வை சனிக்கிழமை இரவுக்கு மாற்றிவிடுவான். கடைசி நாளான இன்றும் எட்டு மணி நேரம் வெறும் போதையில் இருப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற விரக்தி வந்தது.

அம்மாவிடம் போன் செய்து பேசி விடலாம் என்று நினைத்தவன் யாரிடம் பேசினாலும் அதுதான் கடைசியாக இருக்கும் என்பதாலும் அவர்கள் இவனை நினைக்கும் போதெல்லாம் இந்தக் கடைசி பேச்சு குறித்து வருந்துவார்கள் என்ற முடிவில் கைவிட்டான்.

எட்டு மணி நேரத்தில் வாழ்வில் எதையும் செய்துவிட முடியாது என்று நினைத்தவன் அதை பெருந்துக்கமாக கருதத் துவங்கினான். துக்க‌ப்ப‌ட்டு ம‌ட்டும் என்ன‌ ந‌ட‌ந்துவிட‌ப் போகிற‌து என்று நினைத்தாலும் அவ‌ன் அதிர்ச்சி த‌ணிவ‌தாக‌ இல்லை.

இற‌ப்ப‌து ப‌ற்றி எந்த‌க் க‌வ‌லையும் ப‌ட்டிருக்க‌ மாட்டான். ஆனால் தெரிந்து இற‌ப்ப‌து என்ப‌தை ஏற்றுக் கொள்ள‌முடிய‌வில்லை. கொஞ்ச‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பாக சந்தியா கேட்டாள் “இன்று இற‌ப்ப‌தாக‌ இருந்தால் என‌க்கு துக்க‌ப்பட‌ எதுவுமில்லை என்றுதான் இதுவ‌ரையிலும் சொல்லி வந்திருக்கிறேன். உன்னிடம் கேட்டால் என்ன சொல்வாய்?” என்று.என‌க்கும் துக்க‌ப்ப‌ட‌ எதுவுமில்லை என்று ப‌தில் சொன்ன‌து ஞாப‌க‌ம் வ‌ந்து தொலைத்த‌து.

ம‌ழை பெய்து முடித்த‌ சாலையில் கொஞ்ச‌மாக‌ நீர் தேங்கி, சோடிய‌ம் விள‌க்கில் ஜொலித்துக் கொண்டிருந்தது. அந்த நீர்க்குட்டைகளைத் சாவாதனமாகத் தாண்டிச் செல்லும் நாய்களுக்கு எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நாய்கள் நகருக்குள் சுற்றித் திரிந்தவை. முதலில் கார்பொரேஷன்காரர்கள் பிடித்துக் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவார்கள். புளூகிராஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த இந்த பரந்த குழியில் விட்டுவிடுவார்கள். குழி என்று சொல்ல முடியாது. கொஞ்சம் சிறிய வனம். சமதளத்தை விட சற்று தாழ்ந்த வனம். நாய்கள் மேலே ஏறி மீண்டும் நகரத்துக்குள் வர முடியாது.இந்த‌ நாய் புராண‌ம் இப்பொழுது முக்கிய‌மா என்று ம‌துவுக்கு எரிச்ச‌ல் வ‌ந்த‌து. கூட‌வே சேர்ந்து சிறுநீரும். காரை ஓரமாக நிறுத்தி கொஞ்ச‌ம் அமைதியாக‌லாம்.
====
எனக்கு பயங்கரமான பசி. ஹைதரபாத் பிரியாணி ஹவுஸில் சிக்கன் பிரியாணி சாப்பிட வேண்டும் போல இருந்தது. பேசும் போது அப்பத்தா இறந்துவிட்டதாக தொலைபேசி வருவதாகவும், அதே சமயம் நிலம் அதிர்வதாகவும் முன்பொருநாள் கனவு கண்டிருக்கிறேன். எனக்கு கனவு பெரும்பாலும் பலிப்பதில்லை. ஆனால் மின்னல் வெட்டுவது போல வரும் நினைவுகள் பலித்துவிடும்.
====
கோட்டுப்புள்ளாம்பாளையத்து பொன்னாயான்னா தெரியாதவங்க சுத்துபத்துல யாரும் இருக்க முடியாது தெரிஞ்சுக்குங்க‌. கொஞ்சம் பேரு பூக்கார ஆயான்னும் சொல்லுவாங்க. ஆயா காதுல இருக்கிற கம்மலு ஓட்டைல பின் லேடன் அனுப்பின ஏரோப்ளேன் கூட உள்ள போயிட்டு வந்துடும். ‘என்ற‌ அப்பன் நான் ஆறரை வயசு புள்ளையா இருந்தப்பவே ரெண்றர‌ ரெண்றர பவுனுக்கு தோடு வாங்கி போட்டுச்சுன்னு’ ஊரு பூரா சொல்லிட்டு இருக்குது.

அவிய அப்பன் கதை பெரிய கதைங்க‌. மூணு குடி கட்டி மூணுக்கும் புள்ள‌ இல்ல. நாலாவதா சின்னப்புள்ள ஒருத்திக்கு இருபத்தோரு பவுன இந்தாளு போட்டு தாலி கட்டுன சமயமா மூத்த குடிக்கு பொன்னாயா பொறந்துருச்சு. இந்த ஆயா பொறக்கும் போதே பெத்தவ போயிச் சேர்ந்துட்டா.

அது செத்த கொடுமைய ஏங்கேட்குறீங்க, அவிய அப்பன் ஆத்தா தனக்கு பொங்கச் சீரு ஒழுங்கா பண்ணலீன்னு சண்ட வந்து போக்குவரத்து இல்லாம நிக்குது. ஆத்தா மாசமா இருக்கறப்ப பொறந்த வூட்டுல இருந்து பலகாரம் வரலீன்னா கூட போச்சாது, ஏன்னு கேட்கறதுக்கும் நாதியில்லாம அத்துவானமா உட்டுட்டாங்க. மசக்க வந்து வாந்தி எடுத்துட்டு கிடந்த அப்ப கூட இந்த ஆயா “அடி சவாரி”ன்னு கண்டுக்கல.

ஆயாளுக்கு நாளு வந்த சமயமாத்தான் பாரியூரு தேரும் வந்துருச்சு. அந்தக்காலத்துல ஊரு பூரா சேந்து கும்புடுற நோம்பின்னா ஒன்னா மாரியாத்தா கோயலு கம்பம்,இல்லீன்னா பாரியூரு தேரு. பொன்னாயாவோட அப்பன், புது பொண்டாட்டியா வந்த நாலாவது குடி கூட சேந்துட்டு பாரியூர் தேருக்கு வண்டி பூட்டிட்டு போயிடுச்சு. ஊருசனம் பூரா தேருல கூடிட்டாங்க. இந்த ஆத்தா நெற மாசமா ஊட்டுல இருக்குது. காக்கா குருவி கூட சித்திரை வெயிலுக்கு பயந்து மொல்லக் கத்துதாமா.

மொட்டை வெயிலுக்கு கம்பச்சோத்து புழுதண்ணி இருந்தா ஆகுமாட்டா இருக்குதுன்னு ஆயா கம்பு பானய தேடி இருக்குது. பத்து நாளா வூட்டுல சோறு ஆக்கிட்டு இருந்த நாலாவது குடி, பானய‌ தூக்கி அட்டாரில வெச்சுட்டா. இந்த ஆயா திங்குமுன்னு வெச்சாளோ, கை மறதியா வெச்சாளோ தெரியல. கலத முண்ட அங்க கொண்டுபோயி கம்பு பானய வெச்சுருக்கா பாருன்னு நாலு பேச்சு பேசிட்டே ரெண்டு முக்காலியை மேல போட்டு ஏறுன ஆத்தா அப்படியே கவுந்துருச்சு. வுழுந்த அடில பொன்னாயா பொறக்க, ஆத்தா அப்படியே போயிடுச்சு.

ந‌ட‌ந்த‌த‌ ஒருத்த‌ருமே பாக்க‌லீன்னாலும், இது முச்சூடுமே அனுமான‌ந்தேன்.
இந்த‌க்க‌தைய‌ இதுவ‌ரைக்கும் அஞ்சாயிர‌ த‌ட‌வையாச்சும் பிசிறு த‌ட்டாம‌ பேச‌த் தெரிஞ்ச‌ நாள்ல‌ இருந்து பொன்னாயா பாக்கறவிய கிட்டலாம் சொல்லியிருக்கும். நாலாவ‌து குடிக்கு ஆயா பொற‌க்கில‌ ப‌த‌னோரு வ‌ய‌சாமா. ஆனா அவ ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்ல. பொன்னாயாவ கூப்புட்டு கால அமத்த சொல்லுறதும், தரஞ்ச சீவகட்டைல நாலு போடு போடறதுமுன்னு, பொன்னாயாளுக்கு தும்பமின்னா தும்பமில்ல.

பொன்னாயா படற பாடு பொறுக்காம‌, ஏழு வய‌சாகும் போது ந‌ஞ்ச‌ப்ப‌ க‌வுண்ட‌ருக்கு புடிச்சு க‌ட்டி வெச்சுட்டாங்க‌. ந‌ஞ்ச‌ப்ப‌ க‌வுண்ட‌ரு அப்ப‌ எள‌வ‌ட்ட‌முன்னு ஆயா சொல்லும். முப்ப‌த்த‌ஞ்ச‌ கூட‌ தாண்டி இருக்காது. முப்பத்தஞ்சு எள‌வ‌ட்டமான்னு ஒருத்த‌ரும் குறுக்க‌ கேட்க‌ முடியாது. ஆம்ப‌ள‌ ஒட‌ம்புல‌ தெம்பு இருக்க‌ற‌வ‌ரைக்கும் எள‌வ‌ட்டந்தான்னு ரெண்டு மூணு வெட்டுருப்பு ப‌ழ‌ம சேத்தி ஆயா சொல்லும். ஆயால கண்ணாலங்க‌ட்டி அனுப்புனா சட்டிபான கழுவி, சோறு ஆக்குற‌து ஆருன்னு நாலாவ‌து குடி ஓரியாட்ட‌ம்ன்னா ஓரியாட்ட‌மாமா. எப்படியோ பேசிக் கீசி ஒரு வழியா சமாளிச்சு கட்டிவெச்சு, சீரு சீதனமெல்லாம் வண்டில கட்டி கரட்டுபாளையத்துக்கு அனுப்பி வெச்சுருக்காங்க‌.நஞ்சப்ப கவுண்டரு வூட்டுல சொத்துபத்துன்னு நல்ல வசதி. வாக்கப்பட்டு மூணு பசங்க ஒரு பொட்டபுள்ளன்னு பொன்னாயாளுக்கு நெறஞ்ச பொழப்பு.
==============
இன்று அனன்யாவுடன் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது போது சாலையில் காலாற ஒரு நடை போய் வர வேண்டும் போல இருந்தது. இந்த நகரத்தின் உள்வாங்கிய சாலைகள் விசாலமானவை. பகல் நேரத்தில் நல்ல நிழலாக இருக்கும். இரவில் சிலு சிலுவென வீசும் காற்றை வாங்குவதற்காவே நிறையபேர் மெதுவாக நடந்து கொண்டிருப்பார்கள். அனன்யா விடாமல் பேசிக் கொண்டிருந்தாள். இந்த அனன்யா ஒரு சரியான அறுவை பார்ட்டி. ஆன்லைனில் இருக்கும் போதெல்லாம், அவளுக்கு கவிதைகளைப் பற்றிதான் பேச வேண்டும். நா.பிச்சமூர்த்தியில் ஆரம்பித்து ஜீவன் பென்னி வரைக்கும் பேசுவாள். எனக்கு கழுத்தில் ரம்பம் வைத்து அறுக்காத குறைதான். என்ன‌ இழவோ என் ஜிடாக்கில் மட்டும் ‘இன்விஸிபிள் மோட்’ வேலை செயவதில்லை. இன்று போன் செய்து ஜ்யோவ்ராம் சுந்தர் என்றவரின் விகடன் கவிதையை பற்றி பேசி…சாரி, கொன்று கொண்டிருக்கிறாள்.

அனன்யா பேசிக் கொண்டிருக்கும் போது, நான் நினைவுலகில் இல்லாத ஒரு கணத்தில், நாளை மாலை மூன்று மணிக்கு அப்பத்தா இறந்துவிடுவதாக மின்னலடித்தது.

அப்பத்தா என்றால் அப்பாவின் தாயார்.அப்பத்தாவுக்கு என் மீது பாசம் அதிகம். அதாவது தம்பியை விட என் மீது பிரியம் அதிகம் என்றாலும், சித்தப்பாவின் பிள்ளைகள்தான் அப்பத்தாவுக்கு உயிர். என்னையும் தம்பியையும் வேலைக்கார பையன்களை போல நடத்துவதாக அம்மா பொறுமுவார்.

அப்பத்தாவை எனக்கு சின்ன வயதில் அவ்வளவாக பிடிக்காது.வாய் நிறைய வெற்றிலையை குதப்பி எனக்கு கன்னத்தில் சிவப்புச் சாயம் படிய முத்தம் கொடுத்துவிடும். நான் ஓடி விடுவேன். ஒரு சமயம் அப்பாவுக்கு ஆஸ்துமா அதிகமாகி கோவை கே.ஜி ஆஸ்பத்திரியில் ஐ.சி.யூவில் சேர்த்திருந்தார்கள். அம்மா மட்டும்தான் அங்கே துணைக்கு இருந்திருக்கிறார். நானும் முட்டைக்கண்ணனும் (என் தம்பி) பள்ளிக்கு சென்றுவிட்டதால், நாங்கள் வரும் போது வீட்டில் யாரும் இல்லை. வழக்கம் போல கதவுக்கு மேலே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் சாவியை எடுத்து வீட்டுக்குள்ளே எதையோ செய்து கொண்டிருந்தோம். இருவருக்குமே பசியாக இருக்கும் சமயம், எங்களுக்குள் பயங்கரமான சண்டை வருவது வழக்கம். நான் எதற்கோ அவனை முரட்டுத் தனமாக அடிக்க, முட்டைக்கண்ணன் பயங்கரமாக கத்திவிட்டான். எனக்கு அவனை எப்படி அடக்குவது என்று தெரியாமல் மேஜிக் செய்வதாகச் சொல்லி, இரும்பு நாற்காலி மீது நின்று கொண்டு பின்னூசியை எடுத்து “ப்ளக் பாயிண்டில்” நுழைத்தேன்.எசகு பிசகாக என்னை தூக்கி எறிந்தது. விழித்து பார்க்கு போது அம்மா அருகில் நின்றிருந்தார். மண்டை பிள‌ந்த‌தில், என்னை தூக்கிக் கொண்டு வந்து எதிர்வீட்டு முருகைய மாமா அதே கே.ஜி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார். ஆஸ்ப‌த்திரி வாச‌ம் வெளிச்சத்தைவிட‌வும் அட‌ர்த்தியாக‌ பர‌வியிருந்த‌து.

அம்மா க‌ண்க‌ளில் க‌ண்ணீர் பொத்துக் கொண்டு வ‌ருவ‌தை அப்பொழுதுதான் முதன்முத‌லாக‌ பார்த்தேன். இத்த‌னை ந‌ட‌ந்த போதும் அப்பத்தா என்ன ஏதுவென்றே கேட்க‌வில்லை. அம்மாவுக்கு அந்த‌ வ‌ருத்த‌மும் கூடி இருந்த‌து. அம்மா தேம்பிக் கொண்டிருந்தார். என‌க்கும் அழ‌ வேண்டும் போல‌ இருந்த‌து. ஆனால் தூங்கிவிட்டேன்.

சித்தப்பாவுக்கு க‌ல்யாணம் ஆன போது, அப்பாவும்,சித்தப்பாவும் ராசி ஆகிவிட்டார்க‌ள். அப்பத்தா சித்தப்பா வீட்டில் இருந்ததால் அவரும் எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தார். அத‌ற்க‌ப்புற‌ம் இவர்களுக்குள் ச‌ண்டை எதுவும் வ‌ர‌வில்லை. எல்லோரும் கொஞ்ச‌ம் ப‌க்குவ‌மடைந்துவிட்டார்க‌ள் என்று தோன்றுகிறது.

அத‌ற்கு அப்புற‌ம் அப்பத்தாவை எனக்கு கொஞ்ச‌மாக‌ பிடிக்க‌ ஆர‌ம்பித்த‌து. நான் கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வ‌ரும் போதெல்லாம் என்னை பார்க்க எங்கள் வீட்டுக்கு வ‌ருவார். மற்ற நாட்களில் சித்தி தன்னை திட்டுவதாக அம்மாவிடம் குறை சொல்லியிருக்கிறார். நான் முதன்முதலாக‌ வேலைக்கு போன‌ போது என் பேர‌னுக்கு ப‌தினைந்தாயிர‌ம் ச‌ம்ப‌ள‌ம் என்று ஊருக்குள் த‌ம்ப‌ட்ட‌ம் அடித்திருக்கிறார்.

என‌க்கு க‌ல்யாண‌ம் ஆவ‌தை பார்க்க‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் உடம்புக்கு முடிவதில்லை. கொஞ்ச‌ நாட்க‌ளாக‌ ப‌டுக்கையை விட்டு எழுவ‌தில்லை. ஒரு மாத‌த்திற்கு முன்னால் நான் பார்க்க‌ போயிருந்த்தேன். அவரைப் பார்ப்பதற்கு ஒரு புறாவின் இற‌கை நீரில் ஊற‌வைத்து எடுத்துபாயில் ப‌டுக்க‌ வைத்திருப்ப‌து போல‌ இருந்தது. ஒரு நிமிடம் அருகில் நின்றிருந்தேன். அடையாளம் கண்டு கொண்டார். கண்களில் நீர் தாரையாக வந்தது. என்னால் அதற்கு மேல் நிற்க முடியவில்லை. அவ‌ர் வ‌ள‌ர்த்தியிருந்த வேப்ப‌ ம‌ர‌த்தில் சுலுக்கைக‌ள் ஊறிக் கொண்டிருந்த‌ன‌. கொக்கு கூட்டில் இருந்து கீழே விழுந்திருந்த‌ வேலிக் குச்சிக‌ளை பொறுக்கிக் கொண்டிருந்த‌ சித்தியிட‌ம் கூட‌ சொல்லாம‌ல் வ‌ந்துவிட்டேன். கொஞ்ச நேரம் நின்று ஏதாவது பேச்சு கொடுத்திருக்கலாம் என்று ஊருக்கு பஸ் ஏறிய பின்னர் தோன்றி நெஞ்சை அடைத்தது.

============
இந்த‌ இர‌ண்டு மின்னல்களில் எது ப‌லிக்கும் என்று தெரிய‌வில்லை. நான்தான் மதுவா என்றும், பொன்னாயாதான் அப்பத்தாவா, பொன்னாயாவும் மதுவும் உறவா என்றெல்லாம் கூட‌ நீங்கள் யோசிக்கலாம். உங்கள் விருப்பம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முடிவு என் கையில் இல்லை. நான் வெறும் க‌தை சொல்லி. தெளிவாக இருக்கிறேன். இப்பொழுது ஒரு பிரியாணி சாப்பிட்டுவிட்டு த‌ம் அடிப்பேன். பின்ன‌ர் அடுத்த‌ க‌தையை யோசிக்க‌ ஆர‌ம்பித்துவிடுவேன்.
==============

– ஜூன் 11, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *