திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 7,526 
 
 

அந்த காலத்திலே இப்ப இருக்கற மாதிரி ரேடியோ, டி.வி, இன்டெர்னெட், இதுக எல்லாம் எதுவுமில்லாத ஒரு வசந்த காலம் இருந்துச்சு (கொஞ்சம் பேர் ஒத்துக்க மாட்டீங்க) அப்பவெல்லாம் முகம் பாத்துத்தான் பேசணும், பழகணும், இப்ப கணக்கா ஆளு தெரியாம,

அவன் ஆணா பொண்ணான்னு தெரியாம, அவன் சொல்றதை நம்பி, பழக வேண்டியது இருக்கு (உடனே கேள்வி வரும் நட்புல எதுக்கு ஆணு பொண்ணு அப்படீன்னு) காரணம் இருக்கு,

மனுசனா பொறந்தவன் அவன் கவலைகளை எங்காவது இறக்கி வச்சாத்தான் அவனுக்கு நிம்மதி. இப்ப ஆணா பொண்ணா தெரியாம நம்ம கவலைகளை சொன்னா சிலருக்கு சங்கடமா இருக்கும், சிலருக்கு நம்மளை வெறுக்கவும் தோணிடுமில்ல? அப்பவெல்லாம் இந்த கவலை

கிடையாது, அததுக, அவங்க கூட்டமா சேர்ந்து அவங்கவங்க கவலைகளை பேசி தீர்த்துக்குவாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க. தொலைதூரத்துல இருக்கற சொந்தக்காரங்க கூட இவங்க வீட்டுக்கு வந்து ஒரு பாட்டம் சொந்த கதை சோகக்கதை எல்லாம் பேசி அந்த வீட்டுலயே சாப்பிட்டு தூங்கி காலையிலே வெள்ளென எந்திரிச்சு அவங்க ஊருக்கு கிளம்பி போன காலம் எல்லாம் உண்டு.

அப்படிப்பட்ட காலத்துல ஒரு சாதாரண குடியானவன் ஒருத்தன் இருந்தான், அவனுக்கு உறவு முறைக நிறைய இருந்துச்சு. இதனால அவங்க எப்ப பாத்தாலும் இவன் வீட்டுக்கு வந்து சொந்த கதை எல்லாம் பேசிட்டு போவாங்க. அப்படி பேசிகிட்டு இருக்கும்போது ஒரு உறவுக்காரன் இந்த கதையை ஆரம்பிச்சாரு.

ஒருக்கா எங்க ஊருக்குள்ள இருக்கற ஒருத்தர் வீட்டுக்கு நடு ராத்திரியில ஒரு களவாணி வந்தான். அங்க எல்லாரும் அசந்து தூங்கிட்டு இருந்தாங்க.. இந்த களவாணி மெல்ல வீட்டு கூரை ஏறி ஓட்டை பீரிச்சு எட்டி பார்த்தான்.

எல்லாம் அசந்து தூங்கிட்டு இருக்காக ! மேல இருந்து கீழே பாக்க ரொம்ப உசர்மா இருந்துச்சு. என்ன பண்றதுன்னு யோசனை பண்ணான், மெல்ல கீழே இறங்கி ஏதாவது கயிறு கிடக்கா அப்படீன்னு பார்த்தான். கொஞ்சம் தள்ளி இருந்த மாட்டு கொட்டகைக்கு போய் பார்த்தான். அங்கன நிறைய மாடு கட்டியிருந்துச்சு..இவன் ஒரு மாட்டு பக்கம் போயி மெல்ல மாட்டுக்கயிறை அவுத்தான். மாடு அசந்து தூங்கிட்டு இருந்தது. கம்புல கட்டியிருக்கற கயிறை அவுத்தவனுக்கு மாட்டு கழுத்துல இருக்கற கயிறை அவுக்க முடியல. கையில வேற கத்தியோ எதுமில்லாம என்ன பண்றதுண்ணு முழிச்சுகிட்டு இருந்தான்.

இங்க அசந்து தூங்கிட்டு இருந்ததுல ஒருத்தருக்கு தெடீருன்னு முழிப்பு வந்திடுச்சு. அவர் கண்னை முழிச்சு பாத்தா மேலே வானம் தெரியுது. அந்த திருடன் பிரிச்சு வச்சிருந்த ஓட்டை வழியா பாத்ததுனால அவருக்கு அப்படி தெரிஞ்சிருக்கு. நல்ல நிலவு வெளிச்சத்தை பாத்தவரு சரி..விடியலாயிடுச்சுன்னு நினைச்சுட்டு மெல்ல எழுந்து வெளியே வந்தாரு. நேரத்துல மாட்டுக்கு தண்ணிய காட்டுவோம்னு தூக்க கலக்கத்துலயே மாட்டு கொட்டகைக்கு போயி புண்ணாக்கை தண்ணியில ஊற வைக்க ஆரம்பிக்கறாரு. இந்த சத்தம் வரவும், இந்த களவாணி சட்டுன்னு மாட்டுக்கு பின்னால போயி உட்காந்துக்கறான்.

இவர் தூக்க மயக்கத்துல தண்ணிய கரைச்சு எடுத்து வந்து, வரிசையா மாட்டுக்கு முன்னால வச்சு, இந்தா எந்திரிங்கன்னு, எல்லாத்தையும் எழுப்பவும் அப்பவும் சுகமா தூக்க கலக்கத்துல இருந்த மாடுக எல்லாம், இந்தாளுக்கு என்ன பைத்தியமா? நடு ராத்திரி வந்து எழுப்பறான்னு எந்திரிச்சு நின்னுச்சுங்க. இவன் தண்ணிய அது முன்னாடி கொண்டு போய் வச்சு குடின்னு சொன்னவுடனே, மாடுகளும் சரி குடிப்போம்ன்னு குடிக்க ஆரம்பிச்சது. எந்திரிச்ச உடனே சாணி போட்டு பழகின மாடுக, வழக்கம்போல சாணி போட ஆரம்பிச்சது.

பின்னாடி பதுங்கி இருந்த களவாணி தலையில சூடா சாணியும், அதுக்கப்புறம் பன்னீர் அபிசேகமும் வரிசையா நடந்துச்சு. களவாணிக்கு என்ன பண்ணறதுண்ணே புரியல. வாய் விட்டு கத்தவும் முடியல. இந்த சாணி, கோமியம் நாத்தம் தாங்கவும் முடியல.அவன் போட்டுட்டு வந்திருந்த துணி மணி எல்லாம் நனஞ்சு தெப்பலா போயிடுச்சு.

இதுக்குள்ள தூக்க கலக்கத்துல இருந்த ஆளு எப்பவும் மாட்டுக்கூட அன்பா பேசிகிட்டிருப்பாரு. இன்னைக்கும் அது மாதிரி ஒவ்வொண்ணா தடவி கொடுத்து, இதா..இதா..என்று கொஞ்சிக்கொண்டே அதுக தண்ணி குடிக்கறதை வேடிக்கை பாத்துட்டு நிக்கறாரு. அப்பவும் மாட்டுக்கு பின்னாடி ஒரு ஆள் நனஞ்சுகிட்டு தலையில சாணியோட ஒளிஞ்சு கிட்டிருக்கறதை கவனிக்கவே இல்லை.

இவர் மாட்டுக்கூட பேசிகிட்டு இருந்த்தனால, உள்ளே படுத்து இருந்த அவரு சம்சாரத்துக்கு முழிப்பு வர, திரும்பி பார்த்தா இந்தாளை காணோம். இந் நேரத்துக்கு எங்க போய் தொலஞ்சாம் இந்த ஆளு அப்படீன்னு, யோவ்…எங்கயா போயிருக்க?அங்கிருந்து ஒரு சத்தாம் குடுக்க, மாட்டுடன் பேசிக்கொண்டிருந்தவன் மாட்டுக்கு தண்ணி காமிச்சுகிட்டிருக்கேன் புள்ளே..என்று கூவினான்.

அட கூறு கெட்ட மனுசா அர்த்த ராத்திரிக்கு என்ன தண்ணிய காண்பிச்சுகிட்டு இருக்கறீரு. வந்து படுத்து தொலை, என்று சொல்லவும், இந்த ஆளு என்ன இந்த புள்ளை இப்படி சொல்றா, விடியல் ஆயிடுச்சே அப்படீன்னு பட்டியில இருந்து வெளியே வந்து பாக்க நிலவு காஞ்சு கிட்டு இருக்கறதை பாத்தபிறகுதான், அடடா நேரமிருக்குது, நானு ஒரு கூமுட்டை,! தனக்குள் சொல்லிக்கிட்டே மறுபடி உள்ளே போனான். .

போய் படுக்கையில படுத்த பிறகுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. நாம் முழிச்சப்போ ஆகாசம் தெரிஞ்சுச்சே அப்படீன்னு, மேலே பார்த்தா ஓடு பிரிஞ்சு “ஆன்னு” தெரியுது.

எந்திரி புள்ளை, என்று அவன் போட்ட சத்தத்தில் அவள் மட்டும் எந்திரிக்கல்ல, அந்த வீட்டுல இருக்கற எல்லாம் எந்திரிச்சுட்டாங்க.

அப்புறம் என்ன? மாட்டுக்கொட்டகை தவிர எல்லா இடமும் தேடிட்டாங்க, திருடன் அகப்படவே இல்லை. சரி சத்தம் கேட்டு ஓடி போயிருப்பான்னு முடிவு பண்ணி மிச்ச நேரத்துல சித்த படுப்பம்னு போய் படுத்துட்டாங்க.

நடு ராத்திரி ஒருத்தன் குளத்துக்குள்ள முழுங்கி முழுங்கி குளிச்சுகிட்டுருக்கறதை பார்த்த அந்த ஊரு காவலாளி யார்லே அது? இந் நேரத்துல குளத்துல குளிச்சுகிட்டிருக்கறே?.

அங்கிருந்தே களவாணி சத்தம் கொடுத்தான் “வெள்ளென திருப்பதிக்கு நடந்து போலாமுன்னு கிளம்பிட்டு இருக்கேன்.

சரி குளிச்சுகிட்டு வாலே ! நானும் உங்க்கூட ஊர் எல்லை வரை வாறேன், எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கட்டும். சொல்லிட்டு அந்த குளக்கரையிலேயே சித்த உட்கார்ந்து கொண்டான் அந்த ஊர் காவலாளி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *