திசைகள் ஆயிரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,283 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

குளிரூட்டப் பெற்ற அறையில் மெல்ல – மிதக்கும் இன்னிசை. கம்ப்யூட்டர் திரை யில், ஓடுவதும் திரும்பி வருவது மாகப் பிஞ்சுக் குழந்தை ஒன்று. தன்னந்தனியாக அந்த அறையில் இருந்தான் மனோகரன். உடல் எரிகிறாற் போலவே உணர்ந்தான். மனநிலை உடலையும் பாதித்திருக்க வேண்டும்.

குணவர்த்தனா சொன்ன ஒவ்வொரு சொல்லும் திரும்பத் திரும்பக் காதினுள்ளே அறைந் தது. அவர்கள் இருவரிடையே யும் பத்தாண்டு கால நட்பு, பல தடவைகள் அவர்களிடையே விவாதங்கள் நடைபெற்றிருக் கின்றன. வார்த்தைகளில் சூடு தகித்துப் பறக்கும். கொதிக் கும். ஆனால் சில மணி நேரங் களிலேயே எல்லாம் தணிந்து இயல்பான புன்னகையோடு ஒருவரை ஒருவர் எதிர்கொள் வார்கள்.

கடைசியாக, இன்று நடந்த தற்கு முன்னர் அவர்களி டையே நடந்த விவாதம் அவன் கண்களிலே வந்தது. லேசாக கண்களை மூடியவனின் முன்னே மானசீகமானதாக விரிந்தது அந்தச் சம்பவம்…..

எதிரேயுள்ள மேசையில் உட்கார்த்திருந்தவன் சட்டென்று மனோகரனைப் பார்த்தான்.

“மனோ ?’

கெயிற்சின் ஓவியத்தைக் கண்கள் தொட்டிட வாட்டசாட்டமாக உட்கார்ந்திருந்த குணவர்த்தனாவிடம் கேட்டான் மனோகரன்.

“என்ன?”

“நீ சிங்களம் படித்தால் என்ன?” கெயிற்சின் பெண் ஓவியத்திலே நின்ற மனோகரனின் கண்கள் இப்போது குணவர்த்தனாவை முழுமையாக நோக்கின. மனத்தில் அறுகம் புல்லாய் வேர் பரப்பிற்று இனந்தெரியாத வெறுப்பு:

“ஏன்?”

“நாங்கள் இரண்டு பேரும் நெருக்கமாகப் பழகலாம் “.

“அது சரி நீ தமிழ் படித்தால் என்ன?’ வினோதமாக மனோகரனைப் பார்த்தான் குணவர்த்தனா. அவனது கண்களில் வெறுப்புத் தொனித்தது. பின்னர் வார்த்தைகள் தடித்தன. தொடர்ந்து இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை இல்லை.

தேநீர் கொண்டு வந்த காரியாலய ஊழியன் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தான். கலகலப்பே அவர்களினுடைய மொழியாக இருந்ததை அவன் அறிந்திருந்தான்.

இரண்டு நாட்களாகப் பேச்சேதும் இல்லை. இறுகிய மௌனம் எரிச்சலையும், பிறர் கண்களிலே வினாக்களையும் ஒலித்ததால் எதுவுமே நடவாதது போல் இருவரும் வழமைக்கு மாறினர். எனினும் முடிச்சு விழுந்த கயிற்றினைப் போல மனோகரனுக்கு மனதினுள் நெருடல். காலம் நெருடலைக் கரைத்து நினைவிலிருந்து உதிர்த்துப் பறக்க வைத்தது.

மீண்டும் இன்று காலையில் தேவையேதும் இன்றி வார்த்தைகளை உதறினான் குணவர்த்தனா.

அவன் வந்த வீதி மார்க்கத்தில், அதிகாலையிலே குண்டு ஒன்று வெடித்து சேதாரம் உண்டாக்கியதே இறுதிச் சூடான வார்த்தைகள் கொதித்துச் சிதறக் காரணம்.

“மனோ ”

பைலைப் புரட்டிக்கொண்டே “ம்ம்” என்றான்.

“நீ நினைத்தால் சர்வசுதந்திரமாக இலங்கை முழுவதும் சுற்றி வரலாம். எனக்கு எவ்வளவு கஷ்டங்கள். வடக்கு- கிழக்கு, மத்திய மாகாணங்களுக்கு என்னால் அச்சமின்றிப் போய்வர முடியுமா? நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது. எத்தகைய பாவப்பட்ட அடிமைகளாக நான் எனது தாய் மண்ணிலே இருக்கின்றேன்… ஓ. எத்தகைய பரிதாபம் இது!” —

– நாடக வசனத்தை ஒத்தவை போல அவனது ஆங்கில வார்த்தைகள் கேட்டன. ஆனாலும் நடுங்கவைக்கின்ற குளிரிலும் உடம்பின் கோபச் சூட்டினை உணர்ந்தான். அவனது

வார்த்தைகள் தொடர்வதை விரும்பாமல்,

“குணா அசட்டுத்தனமாகப் பேசாதே.”

கெயிற்சின் பெண்ணைப் பார்த்தபடி சொன்னான் மனோகரன் அழுத்தமான வார்த்தைகளில்.

”நான் இதையெல்லாம் வாசித்து அறிந்த பின்பே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.”

குரலில் எரிச்சல் போர்த்திருந்தது. ‘பேப்பர் வெயிட்’டைக் கையினுள் அழுத்திக் கொண்டே மனோகரனை ஏறிட்டான் அவன்.

மனோகரன் நெற்றியை விரலால் வருடினான்.

“நீ எதை வாசிக்கிறாய்? நீ வாசிக்கும் ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருநாளும் சொல்வதில்லை. அவை துவேஷத்தைத் தூண்டிவிடும் பரபரப்பான செய்திகளையே வெளியிடுகின்றன. இப்போதுள்ள நிலைமைகளை ஒளிவுமறைவின்றி மக்களுக்குச் சொன்னால் அவர்களிடையே நிலவும் வேறுபாடுகள் நொருங்கிக் கலைந்து போகும்.?”

“மனோ நீ சொல்வது சரியல்ல. நான் ஒருநாளும் நீ சொல்வதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை.”

மனோகரன் விவாதத்தைத் தொடர விரும்பவில்லை. சட்டென எழுந்து வெளியே போனான்.

குளிர்பானம் அருந்திவிட்டு உள்ளே வந்த போது மனதைக் கிள்ளுகின்ற வெறுமை. கெயிற்சின் பெண் இப்போது மந்தகாசமான புன்முறுவலோடு அவனைப் பார்த்தாள்.

தொலைபேசி மணி நளினமாய்ச் சிணுங்கிற்று. எடுத்தான்.

“மனோ .”

மறுமுனையில் களைத்த குரலில் குணவர்த்தனா.

“என்ன?”

இனந்தெரியாத பரபரப்பு மனதினுள்.

“நெஞ்சுவலி தாங்கமுடியவில்லை. மேலே ‘போர்ட்றூமில் இருக்கிறேன். தாமதிக்காமல் வா.. ப்ளீஸ்.”

வேதனையோடு நெகிழ்ந்த குரல் நெஞ்சைப் பற்றி, கைகளை இழுத்தது. திரும்பத் திரும்ப எதிரொலித்தது.

கணங்களில் ‘போர்ட்றூமில் நின்றான். — –

நெஞ்சை அழுத்தியபடி அவதிப்பட்டவனின் கண்களில் மனதைப் பிழிகிற வேதனையும் கெஞ்சுதலும், நிமிஷங்களில் பாய்ந்து அவசரமாகப் புறப்பட்டனர்.

முனகலுடன் ‘பிக் அப் பில் பின்னே சாய்ந்து வெகுவாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த குணவர்த்தனாவைப் பார்க்கவே நெஞ்செங்கும் ஆணிகள் ஏறின மனோகரனுக்கு, கொழும்பின் எல்லையை கண்ணை மூடிப் பாய்ந்து சென்ற ‘பிக் அப்பை சோதனைச் சாவடி நிறுத்திற்று.

முன்னே இருந்தான் மனோகரன்.

“ஐடென்றிக் கார்ட்” இயந்திரக்குரல்.

மனோகரன் சட்டைப்பைக்குள் கையை விட்டான். மனம் எகிறிவிழுந்து நொருங்கிற்று. நெற்றியில் பொட்டிட்ட வியர்வை வழிந்து உடைந்தது. அலுவலக மேசையில் தற்செயலாக எடுத்துவைத்த அடையாள அட்டையை மீண்டும் எடுக்க வில்லை .

“இறங்கு”

முறிந்த ஆங்கிலம் மனோகரனின் பிடரியில் அறைந்து கீழே இறக்கிற்று.

நெஞ்சைப் பிடித்தபடி குணவர்த்தனா சிங்களத்தில் தாம் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரையும் மனோகரனின் பதவிநிலையையும் கூறினான்.

“ஐ.சி., பொலிஸ் பதிவு இல்லாமல் இவர்கள் வெளியே வருவது பெருங்குற்றம். தண்டனைக்குரிய குற்றம்”

“ஹி இஸ் ஏ ஜென்டில் மென். ஸ்கொலர்…” குணவர்த்தனாவின் குரல் இரந்து கெஞ்சிற்று.

இயந்திரக்குரல் கட்டளையிட்டது. “டிரைவர் நீ உடனே புறப்படு. நோயாளியை டொக்டரிடம் கொண்டு போ”

‘பிக் அப் கட்டளைக்கு அடி பணிந்து குதிரையாய் ஓடிற்று.

வாக்குமூலம் பதியப்பட்டு, உணவற்ற மதியப்பொழுதும் நகர்ந்து மணி நாலரையைத் தொட்டபோதுதான் அலுவலகத்திலிருந்து தலைமை அதிகாரி மனோகரனது அடையாள அட்டை, பொலிஸ் பதிவோடு அங்குவந்தார்.

“இப்போது விடுகிறோம். சட்ட நடவடிக்கை தொடரும். இதுபோன்ற பாரதூரமான தவறுகளை இனிச் செய்யக்கூடாது”

புன்னகையோடு வெறுமையான தன் சட்டைப்பையைத் தடவினார் தலைமை அதிகாரி, தலையை ஆட்டியவாறு மனோகரனைப் பார்த்தார்.

தன் கால்களில் ஏதோ சங்கிலி கவ்விக்கொண்டிருப்பதாக உணர்ந்த மனோகரனின் நினைவில் இப்போது குணவர்த்தனா வந்தான்.

– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *