தவிர்க்க முடியாத விபத்துகளும் அடையாளம் இல்லாத ரணங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 7,470 
 

முதலில் க்ரிம்ஸன், கிளிப் பச்சை, அவையே நீலமாகி இருண்டு கறுத்தது. வர்ணங்கள் எப்போதுமே இவனைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. இந்த மாதிரிக் கண் மூடிக் கொள்ளும் போதெல்லாம் அவை திரண்டு ஒன்றன் பின் ஒன்றாய் பாய்ந்து வரும். இதற்காகவே, ஒரு விளையாட்டு மாதிரி, கண்களைத் திறந்து மூடி வர்ணங்களில் அமிழ்ந்து போவான்.

இப்போது கண்ணை மூடிக் கொண்டிருப்பதே அவஸ்தையாய் இருந்தது. திறந்தான். அறைக்குள் புகுந்திருந்த தெரு விளக்கின் மங்கிய ஒளியில் பொருட்கள் எல்லாம், ஸில்ஹெட்டில் புலப்பட்டன. வழக்கம்போல் வென்டிலேட்டரின் நிழல்களைத் தேடினான். உருவங்களாய்த் தோற்றம் கொள்கிற நிழல்கள் அவை. அடையாளங்கள் முகங்கள் தாமா, உருவமா ? இவற்றுக்குச் சில தலைகள் இருந்திருக்கின்றன. பூந்தொட்டித் தலை ; புத்தக அலமாரித் தலை ; நரித் தலை. தலையே இல்லாமல் சில. முன்பெல்லாம் இவற்றை அடையாளம் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. ஆனால் அவை வலியில்லாத இரவுகள். இன்று எதிலும் முனைப்புடன் அறிவைச் செலுத்த முடியாமல் காயங்கள் எரித்துக் கொண்டிருந்தன.

காயங்களே அவளால்தான். அவளால்தான் அவளுக்கும். அவள்தான் ஒட்டிக்கொண்டு வந்தாள். வேகமாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. நடுவில் ஒரு கணப் பிளவுத் தடுமாற்றம். தப்பித்தோம் என்று தேறியபோது நேர்ந்தேவிட்டது. தவிர்க்க முடியாமல் விபத்து.

காயத்தை மெல்ல வருடினான். காய்ந்த விட்டது என்று இவன் நினைத்துக் கொண்டிருந்தது இன்னமும் ஈரமாய்ப் பிசுபிசுத்தது. இந்த உடலில் உள் மௌனமாய்க் கனன்று கொண்டிருந்த வலி சுரீரென்று ஒரு தீயாய் எரிந்து ஓய்ந்தது.

காயமுற்றதில் வலி உள்ளுக்குள் தெறித்துக் கொண்டிருந்தது. நெஞ்சில் பட்ட அடியாலோ என்னவோ, தலையும் கெட்டித்துப் போய்க்கிடந்தது. அசைவுகள் அற்றுக் கிடந்தான். அப்படி இருக்கத்தான் முடிந்தது. அதுவும் அமைதியற்று, வேறெந்த நிலையும் சாத்தியமாய் இல்லை. இவனுக்கு ஊர்கிற மாதிரி, கைகளை மார்புக்கடியில் மடித்துக் கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வதே சௌகரியமாய் இருக்கும். அப்போதுதான் தூக்கம் வரும். அப்படியில்லாமல், இது போன்று மல்லாந்தே கிடப்பது, தலைகீழ் புரட்டிப்போட்ட அவஸ்தை தன்னின் இயல்பான நிலைகளை உரித்துக் கிடத்திவிட்ட வலிகள்…

இன்று நிச்சயம் தூங்கப் போவதில்லை. தூக்கம் வராவிட்டால் மருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தாலும், வேண்டாம் இன்று செடேட்டிவ்கள். விழித்திருப்போம், வலிகளின் ஊடே விழித்திருந்த இரவுகளில்தான் காலம் நிராகரித்திருந்த பல இவனுக்குக் காணக் கிடைத்திருக்கின்றன. தனியாய், அவசரங்கள் தூங்கி விட்ட இரவுகளில், செல்லும் மாட்டு வண்டிகள். ஒரு ஒற்றைக் கண் மாதிரி அவற்றின் கீழ் அசைந்தசைந்து போகும் ஹரிக்கேன்கள், எந்தச் சுருதியிலும் சேராது காற்றில் நனைந்து வரும் வண்டியோட்டியின் பழைய சினிமாச் சங்கீதம்… இவையேதுமில்லா விட்டால் ஈரக் காற்றில் காய்ந்து கொண்டு தேடுகிற தனக்குப் பிரியமான நட்சத்திரங்கள்…

இரவு முழுவதும் படித்துக்கொண்டே கழித்து விடலாமா ? இந்த வலிகளைப் புறக்கணிக்கப் புத்தகங்கள் எப்போதுமே நல்ல தோழமை. ஆனால் அதற்கும் வெளிச்சம் தேவை. எழுந்திருக்க முயன்று அசைந்தபோது ஒரு வலி அலை உடல் முழுவதும் பாயந்தது. இவன் ‘ அம்மா ’ என்று முனகிக் கொண்டே பின் சாய்ந்தான். தொடர்ந்து முனகல் மெல்லிய சுவாசமாய் இழைத்தது. எழுந்திருக்கிற முயற்சியைத் தவிர்த்து விடலாமா என்று நினைத்தான். எழுந்தாலும் சாய்ந்தாலும் இந்த வலிகளிலிருந்து தப்ப முடியப் போவதில்லை. ஆனால் படுக்கையாய் இல்லாது சாய்ந்திருக்கும் இந்த நிலையிலிருந்து எழுவதுதான் சுலபம். சரிந்து இறங்கினான். மெல்ல இருளைத் தடவி விளக்கைப் போட்டதும் கண்கள் சிமிட்டின.

விளக்கை அணைக்காமலேயே வெளியே வந்தான். இவ்வளவு அமைதியில் பார்க்கும்போது காரிடார் நீளமாய்த் தெரிந்தது. அமைதி எதன் பரிமாணத்தையும் மிகுதிப் படுத்திவிடுகிறது. மெல்ல பாத்ரூமை நோக்கி நகர்ந்தான். “ Easeful Death ” ஆக இருக்கும்.

பிரச்சினை மரணமல்ல, வலிகள்.

மரணம் எவ்வளவு சுலபமாய் நேர்ந்துவிடுகிறது. இவன் போனபோதெல்லாம் இவனுக்கு டீ போட்டுக் கொடுக்கிற இவனது தோழியின் பாட்டி, யாத்திரை போன இடத்தில் பரிச்சயமற்ற முகங்களுக்கு நடுவே டில்லிக் குளிரில் இறந்து போனாள்.

கல்லூரியில் பின் பெஞ்சுத் துணையாய்த், தன்னைச் சுற்றி சந்தோஷங்களை இறைத்துக் கொண்டிருந்த அவன் மூச்சிறைப்பில் மேஜை மீது கவிழ்ந்து போய்ச் சேர்ந்தான். இவனின் பதிமூன்றாவது வயதில், முகத்தில் ஒரு முறுவலுடனேயே இருக்கும் பக்கத்து வீட்டுக் கைக்குழந்தையை மல்லிகைப் பந்தாய் சுருட்டி மார்போடு அணைத்துப் புலம்பிப் போனார்கள்.

மரணத்தின் அழகுகள் இவர்களின் பார்வையை எட்டாமலேயே போயிற்று. மரணத்தை அலங்கோலப்படுத்துவதே மனிதர்கள்தான். இந்த ரணங்களில் இவன் முடிந்து போனாலும் இதுதான். சூழ்ந்து அழுது புலம்பித் தூக்கிப் போவார்கள். இந்த அழுகையும் புலம்பலும் தேறி மீளுதலும் மரணத்திற்கில்லை. சாவுகளில் ஊசியாய் நெஞ்சில் இறங்கும் வலிகளுக்கு. தன்னுடையதையன்றி பிறரின் எல்லா மரணங்களும் ஒவ்வொருவர்க்கும் வலிதான்.

பிரச்சினை – மரணமல்ல, வலிகள்.

நெற்றியின் மேல் நரம்புகள் வலியில் அதிர்ந்தன. எங்கேயோ உடைப்பெடுத்துக் கொண்டு விட்டது போல் ரத்தம் குமிழியிட்டு புது ரத்தம் உள்ளூறச் சூடாகப் பரவியது போலிருந்தது. பிடரியிலும் அக்குள்களிலும் வியர்வை கசிந்து பனியன் ஈரப்பட்டது. தொண்டைக் குழியில் தாகம் நெருப்பாய்க் கனன்றது. உதடுகளை நீவிக் கொண்டு கண்களை மூடினான். வர்ணங்கள் வந்து கொண்டிருந்தன.

தலைமுடியை உழுது ஈரத்தை விசிறியடித்தது சீப்பு. கண்ணருகே அழுக்குப்போல் படர்ந்திருந்தது செம்பு நிறம். வேறெதுவுமில்லை. வலிகளைத் தொடர்ந்த போஷாக்கில் பார்வையில்கூட ஆரோக்கியம் மிலுங்கியது. வலிகளை நிஜமாக்கிவிட்டு அடையாளம் இல்லாது போன ரணங்கள்.

பஸ் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு தாவலில் படியில் கால்.

“ இன்னாப்பா அப்படி அவசரம். விளுந்து உசிரை விட்டீனா எவன் போய் ஸ்டேஷனில் நிற்கிறது … ”

“ பிரச்சினை – மரணமில்லை, வலிகள் ” என்று முனகிக் கொண்டு ஸீட்டில் போய் உட்கார்ந்தான். ஜன்னல் சதுரத்தில் உருவங்கள் தலையற்று விலகின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *