இன்னும் ஆறுமாதங்கள் தான் வீட்டில் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் எதுவும் நடக்காமல் போனால், அவன் மீண்டும் ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும். வருங்காலம் அப்போது தான் பிரகாசமாக இருக்கும் என்றுஅப்பா சொல்கிறார். அவர் சொல்வதும் உண்மைதான் என்று எண்ணினான். அவன் வேலையைவிட்டு வந்து ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டது. இன்னும் சினிமாவில் எதையும் சாதித்ததாக ஞாபகமில்லை. ஒரு படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் உதவி இயக்குனராக வேலை செய்துவிட்டு திரும்பிவிட்டான். அதுவும் பீல்ட் க்ளியர் என்று கத்துவது மட்டுமே அவன் வேலை. இரண்டாவது நாள் படப்பிடிப்பு ரத்தாகி இருந்தது. ஏதோ பணப் பிரச்சனை. அந்த படத்தின் நாயகன் தான் தயாரிப்பாளர். வீட்டை அடகு வைத்து தயாரித்தார். அதன் பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது போக தோன்றவில்லை. படம் இன்னும் முடிந்த பாடில்லை. நல்லவேளை போகவில்லை என்றே எண்ணினான். சுயநலம் என்று சொல்லலாம். சினிமாவில் எல்லோரும் அப்படிதான் இருக்கிறார்கள். எனக்கு இருக்கிற பிரச்சனையில் என் வருங்காலத்தை மட்டுமே யோசிக்க முடிகிறது. அந்த படம் என்னை எங்கேயும் கொண்டு செல்லாது எந்த வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி தராது என்பதால் அந்த படத்தில் பணிபுரியவில்லை என்று நண்பர்களிடம் சொல்லுவான்.
“அசிஸ்டன்டா வேலை பாத்தாதான் சினிமா கத்துக்க முடியும், அத விட்டுட்டு எழுதுறேனு வீட்டுக்குள்ளயே உக்காந்துகிட்டு இருந்தா…” அப்பா இப்படி பல முறை அலட்டிக் கொள்கிறார்.
ஒன்றரை வருடத்திற்கு முன்பு வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது உண்மையில் உதவி இயக்குனராகலாம் என்ற எண்ணத்தில் தான் வந்தான். தன்னுடைய ஆஸ்தான இயக்குனரை வலசரவாகத்திற்கு சென்று சந்தித்தான்.
“சினிமாவ சங்கரநாரயணன்ட்டகூட கத்துக்கலாம், அவர்தான் அவ்ளோ படம் எடுக்குறார். என்கிட்ட ஏன் வர?”
“புடிக்கும் சார்”
“ஹான்?”
“உங்கள புடிக்கும் சார்”
அவனுடைய சிறுகதைகளை புரட்டிப்பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் சொன்னார், “திஸ் பீபிள் வில் exploit you. better you be a writer.
“இலக்கியம்தான் முக்கியம்.போ இன்னும் நிறைய எழுது”
எதுவும் பேசாமல் தலையசைத்துவிட்டு வந்து விட்டான். அதன் பின் சில காலம் குழப்பத்தில் காலத்தை கடத்திவிட்டு, ஒரு நாள் உதவி இயக்குனர் தந்த அனுபவத்தினால் யாரிடமும் உதவி இயக்குனராக கூடாது என்று முடிவெடுத்து, ஒரிரு குறும்படங்கள் எடுத்துவிட்டு கொஞ்ச காலம் எழுத்தாளராகவே இருந்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து எப்படியோ ஒன்றரை வருடங்களை கடத்தி விட்டான் ஏதேதோ கிறுக்கல்கள். ஒரு புண்ணியவான் விருது கொடுத்தார். “அத வச்சு நாக்க வலிப்பியா?” இதுவும் அப்பா தான்.
எழுதிய படங்கள் எதுவும் தொடங்கப்படவேயில்லை. தயாரிப்பாளருக்கு கதை பிடித்திருந்தால், ஹீரோ கதையில் மாற்றம் சொல்கிறார். ப்ரயத்தனபப்ட்டு எழுதிய கதை ஒன்று, ஹீரோவிற்கு பிடித்துப் போக, தயாரிப்பாளரும் ஒகே சொல்ல, தயாரிப்பாளரின் சகோதரி கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
“ஹீரோயின இன்னும் கவர்ச்சியா காட்டா வேணாமா?” அலட்டிக் கொள்ளாமல் கேட்டார் அந்த பெண்மனி.
“இது அப்டி பட்ட கேரக்டர் இல்ல மேடம். மோர் ஸ்ரைட்பார்வேட் கேரக்டர். பாலசந்தர் சார் படங்க….”
“Show me the cleaves man. அத விட்டுட்டு. நான் டி.வில ப்ரோமோட் பண்ணனும்னா ஏதாவது இருக்கனுமே”, அவர்களின் முகபாவம் எப்படியோ போனது.
“ஹீரோயின் இண்ட்ரோ சாங் வைங்க…”
சிறிது மொளனம். அந்த வியாழக் கிழமை இரவு ஏமாற்றத்தோடு முடிந்தது. ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு கதையை மாற்றிவிட்டு வர சொன்னார்கள். ஒரு நாளில் செய்ய முடிந்த மாற்றங்களை மட்டும் செய்துக் கொண்டு மீண்டும் சனிக்கிழமை எதிர்ப்பார்ப்புடன் சென்றான். அவர்கள் அவன் செய்த மாற்றங்களை கேட்கவேயில்லை.
“நேத்து ரிலீஸ் ஆன ‘கொள்ளையடிப்போம்’ பாத்தீங்களா?”
அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டான். அதுமாதிரி ஒரு காமெடி மூவி இருந்தா சொல்லுங்க.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று அவனுக்குள் இருந்த அவர் வெளியே எட்டி பார்க்க பார்த்தார். அவரை உள்ளே தள்ளிவிட்டு,
“ஸ்யூர் மேடம், இப்ப அதுதானே ட்ரெண்டு” என்று சொல்லிவிட்டு வந்தான்.
அம்மா சந்தோசமாக வரவேற்றாள். இவன் எரிந்து விழுந்தான் அவளுக்கு புரிந்துவிட்டதால், காபி எடுத்துவருவதாக சொல்ல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். “முன்னாடியே தெரியுமே…” என்று அப்பா சொல்வார் என்று எதிர்பார்த்தான். அவர், “இது இல்லனா இன்னொரு படம்…” என்று சொல்லிவிட்டு வெளியே நகர்ந்தார். அப்பாவை புரிந்து கொள்ள முடிவில்லை. உண்மையில் அவனையே அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. எதற்காக தான் அவ்வளவு வேகமாக வேலையை விட வேண்டும். வேலைக்கு சேர்ந்த அன்றே இரண்டு வருடங்களில் அந்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று முடிவுசெய்து மொபைலில் கவுண்ட் டவுன் வைத்துக் கொண்டு திரிந்ததை எண்ணினால் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் கண்ணீரும் வருகிறது. எதற்காக இவ்வளவு இழக்க வேண்டும். எதற்காக நிரஞ்சனி தன்னை காதலிப்பதாக சொல்லிய போது மறுக்க வேண்டும்!
ஆம். இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியில்தான் நிரஞ்சனி அவனை காதலிப்பதாக சொன்னாள். அவன் தான் இருந்த சூழலில் காதல் எல்லாம் ஆடம்பரம் என்று கருதினான். ஆனாலும் மனம் தடுமாறியது. சும்மா இருந்தால் அப்படிதான் என்று நினைத்து ஒரு நாவல் எழுத முடிவு செய்தான்.
இலக்கியம் என்று சொன்னால் துரத்தி அடிப்பார்கள் என்பதால் ஒரு க்ரைம் நாவல் எழுதினான். வழக்கம் போல் அவன் மெயில் அனுப்பிய எந்த பதிப்பாளரும் மெயிலைக் கண்டுக் கொள்ளவில்லை.
‘எனக்கு எந்த பதிப்பாளரயும் தெரியாது. நான் ஒரு தனியன். யாரவது பதிப்பாளருக்கோ அல்லது பெரிய எழுத்தாளருக்கோ சொம்படிச்சாதான் புக் போட முடியும்னா அது தேவையேயில்ல” இப்படியும் சில வீர வசனங்கள் பேசி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வான்.
நாவலும் வாழ்க்கையை எங்கும் நகர்த்தவில்லை. வெற்றிகரமாக வருமானமில்லமால் இரண்டு வருடங்கள் முடிந்தது.
“ஏதாவது வேலைக்கு போயிட்டே எழுது” அதுவரை அதிகம் பேசாத அம்மா சொன்னாள். அப்பா அம்மா மூலமாக பேசத் தொடங்கிவிட்டார் என்று புரிந்துக் கொண்டான்.
“உன்ன வச்சு தான் உன் ஆயும் அப்பனும் அடிச்சுகிதுங்க” தாத்தா சொன்னார். “ஏதாவது கவர்மெண்ட் வேலைக்கு போய்டே எழுதுடா. யாரையும் கையேந்தி நிக்குற நிலம வர கூடாதுடா தம்பி”
***
மாம்பலத்தில் ஒரு இன்ஸ்டிட்யுட்டில் சேர்ந்தான். வங்கி வேலைக்காக பயிற்சி கொடுக்குமிடம் அது. காலை ஒன்பது மணி முதல் ஆறரை மணி வரை படிக்க வேண்டியிருந்தது.காலை எட்டறை மணிக்கு ஒரு ஆனியன் ஊத்தாப்பம். பின் படிப்பு. மதியம் இருபது ரூபாய் கீரை சோறு, அல்லது பதினெட்டு ரூபாய்க்கு மூன்று சப்பாத்தி. மீண்டும் குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யுட், ரீசனிங். தாளித்த மோர், க்ளோஸ் டெஸ்ட், பேங்கிங் அவார்னெஸ், தலை வலி. இஞ்சி டீ. புதுமைப்பித்தன் நிகும்பலை.
“எந்த இயர் பாஸ்ட் அவுட் ப்ரோ” ஒருவன் கேட்டான். இவன் பதில் அவனுக்கு தேவையில்லை என்பதுபோல் அவனே தொடர்ந்து பேசினான்,
“ஆக்சுவலி நான் nano technology field bro. இந்தியால அதுக்கு சரியான ஸ்கோப் இல்லல. அதான். பேங்கிங் ட்ரை பண்றேன். நீங்க ப்ரோ?” கேட்டுவிட்டு நகர்ந்தான். ஏனெனில் இவனுடைய பதில் அவனுக்கு தேவையில்லை. இன்னொரு பெண்ணிடம் போய் பேசினான், “ஆக்சுவலி நான் nano technology…”
“நான் சிவில் செர்விஸ் ப்ரிப்பர் பண்றேன், பேங்கிங் இஸ் பார் பேக் அப்” இப்படி அந்த பெண் பதிலளித்தாள்.
இவன் எல்லோரையும் பார்த்துக் கொண்டே இருந்தான். அங்கே எல்லோரிடமும் மற்றவர்களைப் பற்றிய முன்முடிவு இருந்தது. ஒரு வகையான சுயநலம் இருந்தது. இன்னொருவர் தன்னை எந்தவகையிலும் முந்திவிட கூடாது என்ற எண்ணம் இருந்தது. எல்லாவற்றிலும் போட்டி போடும் சமுகத்தில் போட்டி தேர்வுகள் எழுதாதவர்கள் பாக்கியவான்கள் என்று நினைத்துக் கொண்டான்.
“இதான் பர்ஸ்ட் ஜாப், காலேஜ் முடிச்சு மூனுவருசம் ஆச்சு” ஒருவன் தயங்கி தயங்கி சொன்னான். அதை சொல்ல அவன் ஏன் அப்படி தயங்க வேண்டும் என்று எண்ணினான்.
‘இங்கே ஒரு மனிதனால் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. ஒருவன் இன்னதுதான் படிக்கவேண்டும் இந்த வேலைக்குதான் போக வேண்டும் என்பதை சமுதாயமே முடிவு செய்கிறது. சமுதாயத்தின் பார்வையையும் மதிப்பீடையும் மனதில்கொண்டே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சமுதாயத்தின் அளவுகோளிலிருந்து மாறுபட்ட எந்த வேலையையும் ஒருவனால் செய்யமுடிவதில்லை. சமுதாயத்தின் அங்கிகாரத்தை பொறுட்படுத்தாமல் ஒருவன் இயங்க முயன்றால் அவனுக்கு பைத்தியக்காரன் முத்திரையை குத்த சமுதாயம் தயங்குவதில்லை. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் போனலும், தனக்கான வாய்ப்பை ஒருவனால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்த கல்விமுறை அளிப்பதில்லை. எல்லோரும் ஏன் வேகமாக ஒடவேண்டும். ஒருவன் தவழ்ந்து செல்வது ஏன் குற்றமாக பார்க்கப் படுகிறது. டார்வினின் கோட்பாடு ’Survival of fittest’ தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. சமுதாயம், மிகப் பெரிய சர்வாதிகாரி. ஹிட்லரின் வதை முகாம்களில், ஒவ்வொரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கைதிகள் ஒடிக்கொண்டே இருக்கவேண்டும். ஒட பலமில்லாதவர்கள் பனியில் உறைந்து செத்துவிடுவார்கள். சமுதாயம்தான் உண்மையான வதை முகாம்.’ இவ்வளவு எண்ணங்களும் வஞ்சனையில்லாமல் அவன் நேரத்தை திருடிக்கொண்டாலும், அவன் படிப்பில் கவனமாவே இருந்தான்.
கிட்டதட்ட ஒரு மாதம் அங்கே படித்தான். அங்கே படித்த மேதாவிகள் அளவிற்கு மதிப்பெண் வாங்காவிட்டாலும் அவனும் எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்று நேர்முகதேர்விற்கு சென்றான். பேனலில் ஐந்து நபர்கள் அமர்ந்திருந்தார்கள். நாங்கு பேர் கேள்வி கேட்க, ஒரு பெண்மனி அமர்ந்து இவன் பதில் சொல்லும் தோரனையை மட்டும் கவணித்துக் கொண்டிருந்தார்.
“இன்ஜினீயர், ரைட்டர், பேங்கர். தி டாட்ஸ் ஆர் நாட் கனெக்டிங். ரைட்டிங்க விட்டுவிட்டு ஏன் வறீங்க?” இதுதான் அவன் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டபின் அவர்கள் கேட்ட முதல் கேள்வி.
“ரைட்டிங்ல வருமானம் வர்ல சார்”
“இன்ஜினீயர் வேலையே விடும் போதே தெரியாதா, ரைட்டிங்ல வருமானம் வராதுனு?”
“தெரியும். ஆன ஒரு முறையாவது ட்ரை பண்ணனும்னு ஆச பட்டேன். இல்லனா ரைட்டிங் ட்ரை பண்ணியிருக்கலாமேனு ஐம்பது வயசுல ரெக்ரட் பண்ணிருப்பேன்” தைரியாமாக பேசினான்.
“பேங்கிங் இஸ் நாட் ஈசி. இந்த வேலையிலேயெ உனக்கு பாதி நேரம் போய்டும். உனக்கு எழுதலாம் டைம் இருக்காது, ரைட்டிங்க விட்றுவியா?”
“மாட்டேன். ஹாலிடேஸ்ல எழுதுவேன் சார்”
அவர் இவனையே உற்றுப் பார்த்தார். ஆல் தி பெஸ்ட் சொன்னார்.
“இனிமே எல்லாம் ஜெயம், உனக்கு வேலை கிடைக்கும்” தாத்தா சொன்னார்.
ஒருமாதத்திற்க்கு பின் தேர்வு முடிவு வெளியானது. ஒரு பதட்டத்துடன் முடிவு வெளியாகும் தளத்தில் தன் தேர்வு எண்ணை தட்டினான். “Congratulations, You have been Provisionally Selected” என்று வந்தது.
வீட்டில் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். “வெக்காளி அம்மனுக்கு மணிவாங்கி கட்டனும்” அம்மா சொன்னாள். “அலையன்ஸ் பாக்க வேண்டியதுதான்” அப்பா சொன்னார்.
அப்பாவும் அம்மாவும் சந்தோசமக இருப்பதை பார்க்கும்போது அவனுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனாலும், அதிகபட்சம் மூன்று வருடங்களில் வேலையை விட்டுவிட்டு மீண்டும் முழு நேர எழுத்தாளராகிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
– மே 2017