சத்திய தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 1,849 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“புதிய சிந்தனையும் பரந்த மனப்பான்மையும் உள்ள வர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். உன்னுடைய நண்பன் குமாரதாசனிடம் இவை இருப்பதாகத் தெரியவில்லை …. இன்றைக்கு இங்கு வருவாரா என்பது சந்தேகந்தான்”

படமாளிகையின் வாசலில் வைத்து என்னிடம் சொன்னான் நடேசன்.

எதுவுமே பேசாது அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.

படம் தொடங்குவதற்கு இன்னமும் ஐந்து நிமிடங்கள் மட் டுமே இருந்தன.

நீண்டு கிடந்த வீதியைப் பார்த்தேன். குமாரதாசனின் உருவம் தென்படவேயில்லை.

“உழைக்கும் கரங்களும் ஒட்டிய வயிறும்” என்ற வண்ணப் படம் “குமரன்” படமாளிகையிற் திரையிடப்பட்டிருந்தது. சர்வதேசப் பரிசுகள் பலவற்றைப் பெற்றிருந்த அந்தப் படத்தைக் குமாரதாசன், நடேசன், நான் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து பார்ப்பது என முடிவு செய்திருந்தோம்.

படமாளிகை வாசலில் ஒருவரை ஒருவர் சந்திப்பதாக ஏற்பாடு. நடேசனும் நானும் சற்று முன்பின்னாக வந்துவிட்டோம். குமாரதாசனை இன்னமும் காணவில்லை.

முதலாவது மணி அடித்தது.

“இனி உங்களுடைய ஆசனங்களிலை போய் இருங்கோ. படம் துடங்கினாப் பிறகு, ஆசனங்கள் வெறுமையாக இருந்தால், புதிதாக யாரையாவது கொண்டு வந்து இருத்திவிடுவோம்’ என ஒரு வகையான எச்சரிக்கை விடுத்தான் கடமையில் நின்ற ஊழியன் ஒருவன்.

நான் நடேசனைப் பார்த்தேன்.

“இனிக் காத்திருப்பதிற் பயனில்லை. வா, நாங்கள் ரெண்டு பேருமாவது படத்தைப் பார்ப்போம்” என்றான் அவன். குமாரதாசனைப் பற்றிய சில விபரங்களைச் சொல்லி, அவன் வந்தால், உள்ளே அழைத்து வரும்படி அந்த ஊழியனிடம் கூறிவிட்டு, நடேசனைப் பின்தொடர்ந்து ஆசனத்தில் அமர்ந்தேன்.

“அவர் வருவார் என்று இன்னமும் நீ நம்புகிறாயா?” நடேசன் கேட்டான்.

“ஓம்” என்று சொல்ல எனக்குத் துணிவு வரவில்லை.

“இல்லை” என்று சொல்ல உள்ளம் இடம் கொடுக்கவில்லை.

குமாரதாசன் ஓர் எழுத்தாளன், சிறுகதைகள் எழுதி வருபவன்.

அவனுடைய கதைகள் எனக்குப் பிடிக்கும்; மிக நன்றாகவே பிடிக்கும்.

என்னைப் போல், இன்னும் பல இரசிகர்கள் அவனுக்கு உண்டு.

அவனுடைய சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினாற் போதும்; அவற்றை வாசித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் வரவர அதிகரித்துக் கொண்டே போகும்!.

பிரச்சினைகளை நோக்கும் புதிய கோணம்; உண்மையா, கற்பனையா எனப் பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் தொகுக் கப்படும் சம்பவக் கோவை; எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எழுத்துக்களுடன் இசைக்கும் சத்திய இழை எல்லாம் அளவான முறையிற் கலந்து நின்று, அவனுடைய கதைகளுக்கு ஒருவித எழிலை, கவர்ச்சியை, கம்பீர்யத்தை அளித்து வருகின்றன என்று சொல்லலாம்.

வாசிக்கும் போது உன்னதமான உணர்ச்சிகள் கிளர்ந்தெழு வதும், வாசித்து முடித்த பின்னர், ஒருவித நிறைவு, ‘ஒரு படி உயர்ந்துவிட்டோம்’ என்ற உள்ளப் பூரிப்பு ஏற்படுவதும் பலர் சந்திக்கும் சத்தியமான அனுபவங்கள்!…

ஆனால் நடேசன் விதிவிலக்காக இருந்தான்.

“குடும்பம், கோவில், தர்மம் – இவைகளை விட்டால் எழுதுவதற்கு அவருக்கு வேறு ஒன்றுமே இல்லை. அவருடைய ஒரு கதையை வாசித்தால், மற்றக் கதைகளை வாசிக்கத் தேவை யில்லை. ஒரே மாதிரியான கருத்துக்களை வெவ்வேறு சூழ்நிலை களில் வைத்துச் சொல்லுகிறார். அவ்வளவுதான்” – குமாரதாசனைப் பற்றிய நடேசனின் கணிப்பீடு இது.

இலக்கிய விமர்சனத்தில் அவனுக்கு நாட்டம் அதிகம். மேல் நாடுகளில் உள்ளதைப்போல், தமிழில் இலக்கிய விமர்சனம் வளரவில்லையே என்ற கவலையும், அந்தக் குறையைத் தன்னால் நீக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவனிடம் நிறைய உண்டு. ஆங்கிலத்தில் உள்ள விமர்சன நூல்களை ஆழ்ந்து கற்று, அந்த அளவு கோலை வைத்துத் தமிழ் இலக்கிய ஆக்கங்களை விமர்சிப் பவன்.

“விஞ்ஞானம் வளர்ச்சியுடன் புதிய கருத்துங்கள். புதிய உத்திகள், புதிய பார்வைகள் என மேலை நாடுகளில் இலக்கியம் வீறுநடை போடுகின்றது. ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை எங்களுடைய எழுத்தாளர்களால், தாம் செல்லும் தடத்தை மாற்ற முடியவில்லை” என அலுத்துக்கொள்ளும் நடேசனுக்குக் குமார தாசனின் கதைகள், கதைகளாகவே தெரிவதில்லை.

“ஒரு நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிப்பதும் – அதை மேலும் செழுமைப்படுத்துவதும் அந்நாட்டின் இலக்கியம். வெளி நாட்டு அளவுகோலைக்கொண்டு எங்கள் இலக்கியத்தை விமர்சனம் செய்வது அவ்வளவு பொருத்தமில்லை” என்பான் குமார தாசன்.

இருவரும் என் நண்பர்கள். இருவரின் திறமைகளையும் நான் நன்குணர்ந்தவன்.

இருவரையும் சந்திக்க வைத்து. மனம்விட்டுப் பேசச் செய்து நெருக்கமான உறவினை ஏற்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வது அவர் களுக்கு மட்டுமல்லாமல் இலக்கியத்திற்கும் பெரும் பயன் விளை விப்பதாகவும் அமையக் கூடும்.

ஆனால், அவர்களைச் சந்திக்க வைப்பது இலகுவானதாகத் தெரியவில்லை.

நடேசனைக் சந்திப்பதற்கு குமாரதாசனுக்கு நாட்டமே இல்லை. “புதிய தத்துவங்கள், சிந்தனைகள் என்று எதையெ தையோ சொல்லிக் கொண்டிருப்பது சிலருடைய பொழுது போக்கு. ஏழை எளியவர்களுக்காக இரக்கப்படுவதாகச் சொல்லிக் கொள்வதில் ஒரு திருப்தி”

“நடேசன் அப்படியானவர்தான் என நீ நினைக்கிறாயோ?”

“வேறு மாதிரி நினைக்க என்னால் முடியவில்லை. தன்னு டைய ஆடம்பரத்தையும் சொகுசு வாழ்க்கையையும் அவர் இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. தான் சொல்லும் கருத்துக் கள் தன் வாழ்க்கைக்குப் பொருத்தமில்லை என்று நினைக்கிறார் போலை கிடக்கு. முதலில் மற்றவர்கள் திருந்தட்டும் என்று எதிர் பார்க்கிறாரோ?”

“நேரிலே சந்தித்து இதைப் பற்றியெல்லாம் பேசினா லென்ன? ஒருவரையொருவர் சரியாக விளங்கிக்கொள்ள வழி ஏற்படும். என் வீட்டிலேயே சந்திக்கலாம். நான் ஏற்பாடு செய்கின்றேன்.”

நீண்ட மௌனத்தின் பின் குமாரதாசன் சம்மதித்தான்.

படம் தொடங்குவதற்கான இரண்டாவது மணியும் அடித்து விட்டது. விளக்குகள் அணைக்கப்பட்டன.

செய்திச் சுருள் என்ற பெயரில் அமைச்சர்களும் அரசியல் பிரமுகர்களும் “நடிக்கும்” காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாய் விரிந்து எரிச்சலூட்டிக் கொண்டிருந்தன.

அன்று காலையில் என் வீட்டில் நடைபெற்ற அந்த இலக் கியச் சந்திப்பு என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

“நீங்கள் இரண்டு பேருமே இலக்கியத்துறையில் இருந் தாலும், எப்போதும் எதிர் எதிராகவே நிற்பதைப்போல எனக்குத் தெரிகிறது” என நான் ஆரம்பித்தேன்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” எனச் சமாளிக்க முயன் றான் நடேசன்.

“கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவை ஆழமா னவை என்பதை முதலில் ஒப்புக்கொள்வோம்” என்ற குமார தாசன் நடேசனைப் பார்த்துச் சொன்னான், “மேல் நாட்டிலுள் ளவை தான் இலக்கியம். அவற்றைப் பின்பற்றித்தான் நாங்களும் இலக்கியங்களை ஆக்க வேண்டும் என்கிறீர்கள். செழிப்பான ஓர் இலக்கியப் பாரம்பரியம் எங்கள் நாட்டிலும் இருக்கின்றது என் பதை மறந்துவிட்டீர்களோ?

“மறக்கத்தான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் மறக்க வில்லை. தமிழ் இலக்கியங்கள் எல்லாமே உணர்ச்சிக் கோளங் கள்….. அன்பு, காதல், இரக்கம், பக்தி, தன்மானம், தியாகம், வீரம் என்ற பெயர்களில் ஒருவித வெறியை உண்டாக்குகின்ற இலக்கியங்கள்”

“மனிதனை மனிதனாக வாழ வைக்கும் புனிதமான உணர்ச்சிகள் இவை. வெறியூட்டுபவை என்று சொல்லி அவற்றின் மதிப்பைக் குறைக்கக்கூடாது.”

“சங்க காலம் தொடக்கம் எங்கள் காலம் வரை இந்தப் ‘புனித’ உணர்ச்சிகள் எங்களை ஒருவித அடிமை நிலைக்குத் தள்ளி விட்டன என்பதை மறுப்பீர்களா?”

“அடிமை நிலைக்கா?” விளக்கம் கோரினான் குமாரதாசன்.

“ஓம் நாங்கள் குடும்பத்துக்கு அடிமை, சமயத்துக்கு அடிமை, சம்பிரதாயங்களுக்கு அடிமை, சமூகத்துக்கு அடிமை”

“அடிமை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது”

“வேறு எப்படி அதைச் சொல்லுவது? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள் இவையெல்லாவற்றிற்கும் கட்டுப் பட்டுத்தான் ஆக வேண்டும். மேல் நாட்டான் சந்திரமண்டலத் திற்குப் போகும் அளவுக்கு முன்னேறிவிட்டான். ஆனால், நாங் கள், குடும்பம், கோயில், பாவம், புண்ணியம் என்று ஒரே தடத்திலேயே சுற்றிவந்து கொண்டிருக்கிறோம்.”

“சந்திரமண்டலத்திற்குப் போவதுதான் முன்னேற்றமா? ” குமாரதாசன் கேட்டான்.

“அதை மறுப்பதென்றால், அறிவின் வளர்ச்சியை, விஞ் ஞானத்தின் சாதனைகளை எதிர்க்கின்றீர்கள் என்று தான் சொல் வேன்.”

குமாரதாசன் விளக்கினான், “அறிவு வளரத்தான் வேண்டும்; விஞ்ஞானம் வளரத்தான் வேண்டும். அதே வேளையில் மனித னிடமுள்ள நல்லுணர்ச்சிகள் தூண்டப்பட்டு அவையும் பங்குவ மாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்… உலகின் பல பாகங்களிலே கோடிக்கணக்கான மக்கள் வாழவே வழியின்றிப் பட்டினிச் சாவின் விளிம்பில் பரிதாபமாக நிற்கும் போது அவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், சந்திரமண்டல ஆராய்ச்சிக்காகக் கோடி கோடி யாகக் கொட்டிக்குவிப்பது சரியானதாக எனக்குத் தெரியவில்லை”

“அப்படியானால், முன்னேற்றம் என்று எதைக் கருதுகிறீர்கள்?” நடேசனின் கேள்வி.

“மனிதன் மனிதத்தன்மையுடன் வாழ்வது தான் முன்னேற்றம். யாரையும் புண்படுத்தாமல், யாருக்கும் தொல்லை கொடுக்காமல், மற்றவர்களின் துன்ப தயரங்களில் அனுதாபத்துடன் கலந்து கொண்டு, தியாக மனப்பான்மையுடன் வாழவேண்டும். இத் தகைய வாழ்க்கையைச் சாத்தியமாக்குவது தான் முன்னேற்றம்.”

“துன்பங்களும் துயரங்களும் ஒருவருக்கு ஏற்பட்டால் தானே மற்றவர்கள் அவற்றிலே அனுதாபத்துடன் கலந்து கொண்டு ஆறுதல் சொல்லலாம்? சமநிலை என்பது இல்லாவிட்டால் தானே தியாகம் என்பதற்குத் தேவை ஏற்படும்? ஏற்றத் தாழ்வு அற்ற, துன்பம் என்பது என்ன என்றே அறியாத ஒரு சமுதாயம் உருவாகினால்…?”

“அது ஓர் இலட்சியக் கனவு. ஆனால் …..”

“தயங்காமல் சொல்லுங்கள்”

“அந்தக் கனவை நனவாக்குவது இலகுவான காரியம் அல்ல. அதற்காக அந்த இலட்சியத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்வதாக நினைக்கக்கூடாது. மனிதனின் துன்பதுயரங்களைக் குறைக்கலாம். அறவே இல்லாதொழிக்க முடியாது. ஏனெனில் மூளையும் அறிவும் மட்டுமல்லாமல் உள்ளமும் உணர்ச்சியும் கூட அவனிடம் உண்டு… ஏற்றத் தாழ்வுகளும் ஏதோ ஓர் உருவில் சிறிய அளவிலாவது இருக்கும்.”

“இருக்கும் என்றால்?”

“மனித இயல்பை வைத்துக்கொண்டு பார்க்கும் போது, அவை இருக்கும் என்றுதான் சொல்கிறேன். அதே வேளையில், மனிதப் பண்பு வளர்க்கப்பட்டால், அவற்றின் கொடுமைகள் குறையும். இந்தப் பண்பை வளர்க்கும் இலக்கியந்தான் எமக்குத் தேவை.”

“எங்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டின் அடிப்படைக்கே வந்துவிட்டோம். எந்த வகையிலும் ஏற்றத் தாழ்வற்ற, சமத் துவமான சமுதாயத்தை, துன்ப துயரங்களே இல்லாத சமு தாயத்தை உருவாக்குவது சாத்தியம் என்பது என்னுடைய நம் பிக்கை. திட்டமிடப்பட்ட இலக்கியம் மூலம் அதைச் சாதிக்கலாம்.”

“திட்டமிடப்பட்ட இலக்கியம் என்றால்…?”

“வர்க்க பேதமற்ற, சுரண்டலற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்கு மக்களைத் தயாரிக்க வேண்டும். அடக்கு முறைக்கு எதிராக மக்களைப் போர்க்கொடி தூக்கச் செய்ய வேண்டும். இந்த நோக்கங்களுடன் இலக்கியம் திட்டமிடப்படல் வேண்டும்.”

“அடக்குமுறைக்கு எதிராக என்றால்……?”

“முதலாளிகளுக்கு எதிராக, உயர்சாதியினருக்கு எதிராக, சமயத் தலைவர்களுக்கு எதிராக…..பாமர மக்களைத் தலை யெடுக்க விடாது நசுக்கி வருபவர்கள் இவர்கள்.”

“அத்தனை பேருமே அப்படியானவர்களா? பரந்த மனம் படைத்தவர்கள், நல்ல மனம் உடையவர்கள், இரக்க சிந்தினை கொண்டவர்கள் அவர்களிடையே இல்லையா?”

“இரண்டொருவர் இருக்கலாம். நான் மறுக்கவில்லை . ஆனால், பெரும்பாலானவர்கள் கொடுமைக்காரார்கள் தான். அவர்களுடன் சேர்த்துச் சிறுபான்மை நல்லவர்களும் அழிக்கப் படத்தான் வேண்டும்”

“சமுதாயப் பார்வை என்று சொல்லிக்கொண்டு சமுதா யத்தின் ஒரு பகுதியினரை அழிக்க முயலலாமா?.”

“அது தவிர்க்க முடியாது. மயிலே மயிலே இறகு போடு என்றால் அது போடாது”.

“தான் விரும்புபவற்றைச் சட்டங்களாக்கி, துப்பாக்கி முனை யில் அவற்றை அமுல்படுத்தும் சர்வாதிகாரியைப் போல் இலக்கிய கர்த்தாவும் செயற்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். சமு தாயம் என்பது கல்லாலும் சிமென்ராலும் கட்டப்பட்ட கட்டட மல்ல, நாம் விரும்பியபடி இடிப்பதற்கும், பின்னர் கட்டுவதற்கும் ! மூளையும் அறிவும் மட்டுமல்ல உள்ளமும் உணர்ச்சியும் ஆன்மா வும் உடைய தனி மனிதர்கள் சேர்ந்தது தான் சமுதாயம். ஒவ் வொரு மனித இதயத்தையும் தனித்தனியாக அணுகி, நெகிழச் செய்து, படிப்படியாகப் பண்படுத்துவது தான் இலக்கியத்தின் பணி. நிர்ப்பந்தம் காரணமாக அல்லாமல், இதயபூர்வமாக ஏற்படும் மாற்றம் நிரந்தரமானதாக, உறுதியானதாக இருக்கும்.”

“ஜெற் விமானங்களின் காலத்தில் இருந்து கொண்டு, நீங்கள் மாட்டு வண்டிலிற் பிரயாணம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் கருதும் மாற்றம் வரும்வரை காத்திருப்பதற்குப் புதிய தலை முறைக்குப் பொறுமையில்லை.”

“அவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்பதற்காக இலக்கியம் தடம் புரள வேண்டுமா? பலாத்காரப் புரட்சி வேண்டும் என்போர் அரசியலில் இறங்கட்டும். பொருளியல் வாழ்வு மட்டுந்தான் பெரிது என்போர் உற்பத்தித் துறைக்குச் செல்லட்டும் இலக்கிய கர்த்தா மனிதாபிமானத்தை வளர்க்கட்டும்.”

“இவ்வளவு நேரமும் கலந்து பேசியதன் பிறகு நாங்கள் இரு வேறு துருவங்களிலேதான் நிற்கிறோம்…… “குமரன்” தியேட்டரில் புதிய படம் ஒன்று ஓடுகிறது. அதைப் போய்ப் பார்ப்போம் பார்த்த பின்னர், என்னுடைய நிலைப்பாடு சரிதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் நடேசன்.

படம் பார்ப்பதற்குக் குமாரதாசனும் இசைந்தான்.

செய்திகள் முடிந்து படம் ஆரம்பமானது.

குமாரதாசன் வந்துவிட்டானா என்பதை அறியும் ஆவலில் அங்குமிங்கும் பார்த்தேன்.

“உன் நண்பனையே நினைத்துக் கொண்டிருந்தால் படத் தின் மையக் கருத்தைப் புரிய முடியாமற் போய்விடும். அரைமணி நேர நித்திரைக்குப் பிறகும் கதையின் ஓட்டத்தைப் பிடித்துக் கொள்வதற்கு இது தமிழ் சினிமா அல்ல” என்றான் நடேசன்.

பரந்த ஒரு பிரதேசத்தின் வயல் நிலங்களைத் தன் உடைமை யாக்கிய பண்ணையார் ஒருவர் செய்யும் அட்டூழியங்கள், அடக்கு முறைகள், அந்தரங்க வாழ்க்கையின் அலங்கோலங்கள். அவரு டைய பண்ணையில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளான ஏழைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், வேதனைகள், தொழிற்சங்கத் தலைவன் ஒருவனால் உருவாக்கப் பட்ட ஒற்றுமை காரணமாக அந்தத் தொழிலாளர்கள் மேற்கொள் ளும் எதிர்ப்பு நடவடிக்கைகள், ஈட்டும் வெற்றிகள் சம்பந்தமான படம் அது.

நடிப்பு, படப்பிடிப்பு போன்றவை நன்றாகவே இருந்தன.

வயலில் வேலை செய்யும் பெண்கள், தம் பிஞ்சுக் குழந்தை களை வயல் வரப்பிற் கிடத்தி விடுவதும், குழந்தைகள் பசியால் கத் தும் வேளை, அருகே செல்லவிடாமல், பண்ணயாரால் அவர்கள் தடுக்கப்படுவதும் உருக்கமான காட்சிகளாக இருந்தன.

பண்ணையாரின் தடையை மீறி, தன் குழந்தைக்கு ஒருத்தி பால் கொடுத்ததைக் கண்ட அவர், இருவரையும் பிரித்து வைக்கும் முறை அருவருப்பையும் ஆத்திரத்தையும் ஊட்டியது. ஆனால் நம்பத்தக்கதாக அமையவில்லை.

ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னணியையும் முக்கியத்துவத்தை யும் நடேசன் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.

பண்ணையாரின் அட்டூழியங்கள் மிகைப்படுத்தப்பட்டு, வேண்டுமென்றே திணிக்கப்பட்டவை போல் தோன்றின.

தொழிற்சங்கத் தலைவனின் பேச்சுக்களும், எதிர்ப்பு நட வடிக்கைளில் நேரடியாகக் கலந்து கொள்வதைத் தவிர்ந்த தந்திர மும், நடேசனைப் பற்றிக் குமாரதாசன் முன்னர் சொன்ன சில கருத்துக்களை நினைவூட்டிக்கொண்டிருந்தன.

ஒன்றும் பேசாமல், நடேசனின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்த நான், குமாரதாசன் அங்கில்லாத குறையை நன்றாக உணர்ந்தேன்.

தாயிடம் பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தையை அப்படி முரட்டுத்தனமாகப் பறித்து எடுப்பவன், ஒன்றில், பைத் தியக்காரனாக இருக்கவேண்டும். சாதாரண மனிதன் எவ்வளவு தான் இரக்கமற்றவனாக இருந்தாலும், இப்படி அரக்கத்தனமாக நடக்க மாட்டான் – என அடித்துச் சொல்லியிருப்பான் குமார தாசன்.

அப்படித்தான் ஒருவன் இருந்தாலும் இலட்சத்தில் ஒருவ னாக கோடியில் ஒருவனாகத்தான் இருப்பான். அந்த ஒருவனை வைத்துக் கொண்டு, அத்தனை பேருமே இரக்கமற்ற அரக்கர்கள் எனக் கொள்ள முடியாது – என உரத்துச் சொல்லியிருப்பான்.

தொழிலாளர்களின் கஷ்டங்களை அவல வாழ்க்கையைப் பண்ணையாருக்கு எடுத்துச் சொல்வதிலோ அவர்களின் கோரிக் கைகள் எவை என்பதை விளக்குவதிலோ நாட்டமில்லாமல் அவரை எதிர்க்கும்படி தூண்டுவதிலேதான் தொழிற்சங்கத் தலை வன் குறியாக இருக்கின்றான். குமுறியெழும் மக்களும் அவன் சொற்படி நடப்பதற்குத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். முன்னர் பண்ணையாருக்கு அடிமையாக இருந்து அவஸ்தைப் பட்டவர்கள், இனி அந்தத் தலைவனுக்கு அடிமையாகப் போவது எந்த அளவுக்குப் புதிய சிந்தனையின் பிரதிபலிப்பாக இருக்கும்? எந்த வகையில் முன்னேற்றத்தைக் குறிக்கின்றது? என்றும் நிச்சய மாகக் கேட்டிருப்பான்.

நடேசன் சொன்னான். “படம் திரையிடப்பட்டுப் பல வாரமாகியும் கூட்டம் குறையவில்லை . மக்களின் ரசனையும் சிந்தனையும் புதிய திசையிற் செல்லத் தொடங்கிவிட்டன”

அதற்கு நான் ஒன்றும் பேசவில்லை.

“ஆட்களின் தொகையை மட்டும் வைத்துக்கொண்டு எதை யும் தீர்மானிக்கக்கூடாது” என முன்பு ஒரு தடவை இதே நடே சன்தான் எனக்குக் கூறியிருந்தான்.

அடுத்த நாள்

ஓர் அலுவலாக நான் பட்டணத்துக்குச் சென்ற போது. ஓட்டமும் நடையுமாகக் குமாரதாசன் போய்க்கொண்டிருந்ததைக் கண்டேன்!.

முதனாள் வருவதாக ஒப்புக்கொண்டவன் கடைசிவரை வரவேயில்லை. இப்போது அதைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் எங்கோ சென்று கொண்டிருக்கிறான்.

அவன் எங்களை ஏமாற்றவில்லை; அவமானப்படுத்தி விட்டான்.

கோபத்துடன் அவனைக் கைதட்டி அழைத்தேன்.

“நின்று கதைப்பதற்கு நேரமில்லை. அவசரமான அலுவல் வா. சொல்லுகிறேன்” என்றபடி அதே வேகத்துடன் நடந்தான்.

நானும் அவனைத் தொடர்ந்தேன்.

வேதனைக் கோடுகள் அவன் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தன. முதனாள் நடந்த நிகழ்ச்சியை அவன் சுருக்கமாகச் சொன்னான்.

ஒப்புக்கொண்டபடி அவன் படம் பார்ப்பதற்கு வந்து கொண்டிருந்தான். படுவேகமாக அவனைத் தாண்டிச் சென்ற காரொன்று சற்றுத் தொலைவில், குழந்தையுடன் சென்று கொண் டிருந்த பெண்ணொருத்தியை மோதிவிட்டு, நிற்காமலே சென்று விட்டது. ஓடோடிச் சென்றான் குமாரதாசன். தாயும் குழந்தையும் இரத்த வெள்ளத்திற் கிடந்தனர். என்ன செய்வது எனத் தெரி யாமல், கூடி நின்றவர்கள் பதற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். துடித்துக் கொண்டிருந்த அந்த ஜீவன்களை ஆஸ்பத்திரியிற் சேர்த்தான் குமாரதாசன். அவசரசிகிச்சை மேற்கொண்ட டாக்டர் உடனடியாக ஆபத்து ஏதும் இல்லயென்றாலும் அடுத்த நாள் மாலைக்குப் பின்னர்தான் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியும் எனக் கூறிவிட்டார். இரவு முழுவதும் குமாரதாசனும் மனைவியும் ஆஸ்பத்திரியிலேயே விழித்திருந்தது, வேண்டிய உதவிகளைச் செய்தனர்.

இரத்தம் செலுத்தினால் நம்பிக்கைக்கு இடமுண்டு எனச் சற்றுமுன்னர் தான் டாக்டர் சொல்லியிருக்கிறார். குமாரதாசனிடம் செலவுக்குப் பணமில்லை. மனைவியின் தாலிக்கொடியை அடகு வைப்பதற்காகத்தான் இப்போது அவன் போய்க் கொண்டிருக் கிறான்.

“அப்பெண்ணின் சொந்தக்காரர் யார் என்பதை விசாரித்தாயா? விபத்தைப் பற்றிப் பொலீசுக்கு அறிவித்து விட்டாயா?”

“அந்த வேலைகளை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கவனிப்பார்கள்….எப்படியாவது அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றிவிட வேண்டும். அது தான் முக்கியம்.”

தெய்வத்தின் நிழலிற் செல்வதைப் போல் நான் அவனுடன் சென்றேன்.

“வழியில் ஒரு சின்ன அக்சிடென்ற். ஒரு மாதிரிச் சமாளித்துப் போட்டு இஞ்சை வந்திட்டன். எனக்கு நேரம் தான் முக்கியம்” எனத் தியேட்டரில் நடேசன் சொன்னது என் காதில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *