கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,383 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூர்த்தி மாஸ்டர் பிள்ளையார் கோயிலுக்குப் போன போது கோயில் வெறிச்சென்று கிடந்தது. சென்ற பதினைந்து நாட்களாக ‘திருவிழா’ என்ற பெயரால் நடந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் ஒரு கனவு போல மறைந்துவிட்டன. தினம் தினம் நூற்றுக்கணக்காக வந்து கூடிய மக்கள் – பக்தர் ! – கூட்டத்தினர், கோயில் என்று ஒன்றிருப்பதையே மறந்துவிட்டது போல, அவரவர் வாழ்க்கைப் பிரச்சினையில் இறங்கிவிட்டனர். பிள்ளையாருக்கும் கணபதி ஐயருக்கும் இனி அடுத்த சித்திரை மாதம் வரையும் ஓய்வு தான்.

பதினைந்து நாட்களுக்கு மேலாக ஐயரோடு ஆற அமரக் கதைக்காமலிருந்து மூர்த்தி மாஸ்டருக்கு விடாய் எடுத்து விட்டது. ஐயருக்கும் அந்தமாதிரி ஒரு மன நிலை தான். “வாருங்கோ மாஸ்டர்!” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார் அவர்.

“எல்லாம் ஒரு வழியாய் முடிந்துவிட்டது…” என்று மூர்த்தி மாஸ்டர் ஆரம்பிக்கவும், “எங்கே முடிகிறது? இதுகளலெல்லாம் அந்தந்த இடத்தில் ஒதுக்கி ஒழுங்கு படுத்தி முடிக்க இன்னும் பத்து நாளாவது செல்லும். அதற்குப் பிறகுதான் மனுஷனுக்கு நிம்மதி” என்று தமக்கிருக்கும் பொறுப்புக்களை எடுத்துச் சொன்னார் கணபதி ஐயர்.

“அது சரி ஐயா; முந்தை நாள் தேரிலன்று யாரோ ஒருவனைப் போட்டு அடித்து விட்டார்களாமே?”

“ஓமோம், நானும் பார்க்கவில்லை. ஆனாலும் விசாரித்துத் தெரிந்துகொண்டேன்……….யாரே ஒரு பிற ஊர்க்காரன்; கீழ்ச்சாதி – தீண்டத்தகாதவன் – கோயிலுக்குள்ளே வந்து நின்றானாம்….”

“சாமியைக் கிட்ட நின்று பார்க்க ஆசைப்பட்டானாக்கும்!”

“அப்படியிருக்குமென்று நான் நினைக்கவில்லை. அந்த மாதிரி ஒரு பக்தி, பக்குவம் உள்ளவன் கட்டு மீறி வர மாட்டான். தெரியாதா, ‘போனால் என்ன’ என்று ஒரு கெறுக்கு………”

“பிறகு?”

“இதை யாரோ இனம் கண்டு பிடித்து, சீனித்தம்பியருடைய மகன் வடிவேலன் இப்போது லீவில் நிற்கிறாரல்லவா, அவரிடம் சொல்லிவிட்டார்கள்…”

“நல்ல ஆள் சந்தித்தான்!”

“அவர் வந்து இரண்டாம் பேச்சுப் பேசவில்லையாம். அவனை மடியில் பிடியோடு இழுத்துக் கொண்டு போய் வெளி வீதியில் வைத்துக் கும்பிடக் கும்பிடக் கொடுத்தாராம். அடி யென்றால் அடிதானாம். அகோரமாம்! – நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்…”

“இருக்கும். வடிவேலன் குத்துச் சண்டை, மல்யுத்தம் என்று இப்படிக் கொஞ்சம் பழகின ஆளாம்……. நல்ல பிள்ளை தான் படித்த வித்தையை இப்படிச் சாமி காரியத்தில் உபயோகித் திருக்கிறான்.”

“என்ன இருந்தாலும் அவனை இவர் அவ்வளவு மோசமாக அடித்திருக்கக் கூடாதென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏதோ கண்டும் காணாமலும் வந்துவிட்டுப் போகிறான். உங்கே ‘திறந்து விட்ட’ கோயில்களிலெல்லாம் சாமிகள் எழும்பி ஓடிவிட்டனவா? ஆனால் கோயிலடியில் வடிவேலன் மாதிரி ஒரு ஆளும் வேணுந்தான். சும்மா தொட்டதற்கெல்லாம் நடப்பு நாட்டாண்மை காட்ட வெளிக்கிடுகிற சண்டியன்மார் இம்முறை வடிவேலன் நிற்கிறார் என்றதும் மூச்சுக்கூடக் காட்டவில்லை !”

மூர்த்தி மாஸ்டர் சிரித்தார். ஏளனச் சிரிப்பு!

“என்ன சிரிக்கிறீர்கள் மாஸ்டர்? வடிவேலன் அப்படி ஒன்றும் மோசமான ஆளல்ல. ஓரளவுக்கு நீதி நியாயம் தெரிந்தவர். நான் சும்மா சொல்லவில்லை; பத்துப்பேருக்கு முன்னால் தனியாக நின்று வகை சொல்லக்கூடிய ஆள் உங்களுக்குத் தெரியாதா? கொழும்பிலேயே ‘வடிவேலன்’ என்றால் சிங்களக் காடையர் முதலாகக் குலை நடுக்கமாம். ஒருமுறை பத்துப் பதினைந்து காடையர் சேர்ந்து இதுவரை அடித்துக் கொல்லவென்று திட்டம் போட்டு வந்தார்களாம். இவர் துவக்கெடுத்துச் சுட்டதில் அந்த இடத்திலேயே இரண்டு பேர் பிணமாய் விழுந்தார்களாம். மீதிப் பேர் நின்ற இடமும் தெரியாமல் ஓடிவிட்டார்களாம்…”

மூர்த்தி மாஸ்டர் சிரித்தார். ஏளனச் சிரிப்பு!

“நீங்கள் என்ன நினைத்தாலும் சரி. வடிவேலன் ஒரு வீரன் தான், அவருடைய தோற்றமும் ஆளும் உடம்புக் கட்டும்…”

மூர்த்தி மாஸ்டர் சிரித்தார். ஏளனச் சிரிப்பு!

***

கணபதி ஐயரால் ‘வீரன்’ என்று பாராட்டப்பட்ட – மூர்த்தி மாஸ்டரின் ஏளனச் சிரிப்புக்கு ஆளான – இந்த வடிவேலன் சிறுவயதில் இதே கிராமத்துப் புழுதியிலே அலைந்து விளையாடித் திரிந்தவன். அவனுடைய தகப்பனார் சீனித்தம்பிக்கு கொழும் பிலே உத்தியோகம் பலத்துக் கொண்டதும், வெள்ளத்தையிலே நல்லதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ‘குடும்பத்’ தையும் அங்கே அழைத்துக்கொண்டார். அதற்குப்பிறகு சென்ற வருடம் பென்சன் வாங்கியதோடு தான் ஊருக்கு வந்து குந்திக் கொண்டார். வடிவேலன் மட்டும் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பிலேயே தங்கிவிட்டான். பிள்ளையார் கோயிலில் திருவிழா தொடங்கியதும் அந்த மகனைப் பார்க்க ஆசைப்பட்ட அவன் அம்மா, கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதி அவனை வர வழைத்துவிட்டார். அவன் வருமுன்பே அவனுடைய வீரப் பிரதாபம் ஊருக்கு வந்து விட்டது. இரண்டு பேரைச் சுட்டு வீழ்த் தியவன் என்றார்கள். செத்தது ஏழெட்டுப்பேர் என சிலர் விவரித் தார்கள்; இன்னும் சிலரோ. ”ஐம்பது அறுபது பேரை ஒரேடியாகச் சுட்டுப் பொசுக்கிட்டான்” என்று விரிவுரை நிகழ்த்தினார்கள்.

அது எப்படியிருந்தபோதிலும், அந்த வீரசிகாமணி தன்னு டைய பிரதாபத்துக்குப் பங்கமில்லாமல் பிள்ளையார் கோயில் திருவிழாவிலே அவ்வப்போது தன்னுடைய ‘வீரத்தைக் காட்டி வந்து, கடைசி நாள் தேரிலன்று அந்தத் தீண்டத் தகாதவன்’ மீது தன் கைவரிசையைக் காட்டி வீரத்தின் உச்சிக்கே ஏறிவிட்டான்!

இப்படியாக வடிவேலன் ஊரிலே ஒரு கதாநாயகனாக உலாவிக் கொண்டிருந்தபோது –

கயல் விழி

கயல் விழியைப் பற்றிச் சொல்லமுன்பு, இளங்கோவைப் பற்றிச் சொல்கிறேன். இளங்கோவைப் பற்றிச் சொன்னால் அவள் தானாக வந்து புகுந்துக் கொள்வாள்.

இளங்கோவைத் தெரியாதவர்கள் அந்த ஊரில் இல்லை. அதற்குக் காரணம் அவன் அந்த ஊர்ப் பாடசாலையில் ஆசிரிய னாக இருந்தது மட்டுமல்ல, நல்ல குடும்பத்திலே பிறந்தவன். இன்னும் சொன்னால், அவனுடைய ஒழுக்கமும் நடத்தையுமே அவனுடைய குடும்பத்தின் கௌரவத்தை ஒருபடி உயர்த்தி வைத்திருந்தன. அவன் இதுவரை யாரையும் விரோதித்தவனல் லன். யாரைக் கேட்டாலும் ‘நல்லபிள்ளை’ என்று சொல்வார்கள். அவனுடைய உள்ளத்திலே எண்ணங்கள், கொள்கைகள் மலை போலக் குவிந்து கிடக்கும். ஆனால் மூர்த்தி மாஸ்டரைப் போன்ற இரண்டொருவரைத் தவிர வேறு யாரோடும் அவற்றை அளந்து கொட்ட மாட்டான். வேண்டுமென்று மறைப்பதுமில்லை; அநா வசியமாக வாக்குவாதம் செய்வதுமில்லை. இதனால் அவன் எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தில் அபிப்பிராயம் சொன்னால் மற்றவர்கள் நிச்சயம் அதற்கு மதிப்புக்கொடுப்பார்கள்.

அதைவிட அவன் ஒரு எழுத்தாளன்! உள்ளத்திலே குமுறிக் கொப்பளிக்கிற எண்ணங்களுக்கு எழுத்துருவம் கொடுத்துச் சிறுகதைகள் புனைவான். ஆனால் அவனுடைய கதைகளைப் படிப்பவர்களை அந்த ஊரில் – விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஒன்று மூர்த்தி மாஸ்டர், அவரோடு சேர்ந்த பழக்கத்தால் கணபதி ஐயர்; மற்றது –

கயல் விழி!

கயல் விழி எஸ். எஸ். சி. படிக்கிறபோதே அவளுடைய புத்தகங்களுக்கிடையில் ஏதாவதொரு கதைப்புத்தகமும் இருக்கும். எஸ். எஸ். சி. சித்தியடைந்த பிறகு சென்ற ஐந்தாறு வருடகாலமாக அவள் வீட்டிலிருந்து படித்தாள் – அவ்வளவும் கதைகள், கதைகள், கதைகள்!

‘கல்கி’யைப் படித்து. கு.ப.ரா வைப் படித்து, புதுமைப் பித்தனை’ யும் படித்துச் சுவைக்கிற அளவுக்கு அவள் வளர்ந்து விட்டாள்! வெறுமனே கதையை மட்டும் படித்து விட்டுப் போகா மல், கதாசிரியரை கவனிக்கிற போக்கில் புகுந்ததால், அவருடைய கவனத்துக்கு – கவர்ச்சிக்கு – ஆளானான் இளங்கோ , ‘ஆ! எவ்வளவு அருமையாக எழுதுகிறார்!’ என்று வாயூறுவாள்!

இளங்கோவை அவள் காதலித்தாள் என்று என்னால் எழுத முடியவில்லை . அவள் அவனுக்கு ஒரு காதல் கடிதம் எழுத வில்லை. எப்போதாவது அருமையாகச் சந்தித்துக் கதைக்கும் போது கூட ‘காதல்’ என்ற பேச்சுவந்ததில்லை. சும்மா ஒரு கவர்ச்சி: அவ்வளவுதான்.

இளங்கோவின் நிலையும் இதேதான். தன்னுடைய கதை களை அவள் பாராட்டும் போது அவனுக்கு உச்சி குளிர்ந்து போகும். கதைகளை எழுதும்போதே ‘இதைக் கயல்விழி படிப் பாள்’ என்று எண்ணுகிற மனநிலை அவனுக்கு உண்டாயிற்று. யாராவது ஒரு நல்ல விமர்சகர் தன்னுடைய கதையைப்பற்றிப் பத்திரிகையில் அபிப்பிரயாம் எழுதினால் அதைப் படிப்பதில் எவ்வளவு ஆர்வம் இருக்குமோ, அவ்வளவு ஆர்வம் கயல் விழியின் அபிப்பிராயத்தை அறிவதிலுமே ஏற்பட்டது.

இவர்கள் இருவருக்குமிடையில் இருந்த உறவில், சாதாரண ‘எழுத்தாளன் – வாசகி’ என்ற தொடர்போடு இனக்கவர்ச்சியும் சேர்ந்திருந்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் ‘காதல்’

அது இன்னும் வரவில்லை. இன்னும் சில மாதங்கள் இப்ப டிப் பழகி வந்தால் அது வந்துவிடக்கூடும். அதற்கிடையில் தான் வடிவேலன் வந்து சேர்ந்தான்! அவனைப் பார்த்தது முதல், அவனுடைய வீரப்பிரதாபத்தைக் கேள்விப்பட்டது முதல், அந்தக் கம்பீரமான வாலிபனைத் தமது மருமகனாக ஆக்கிக்கொண்டால் நல்லதென்று கயல்விழியின் தகப்பனார் நினைக்கலானார். ‘நல்ல குடும்பம்; உத்தியோகம்; அழகு ; ஆண்மை ‘……. இவற்றைவிட வேறென்ன வேண்டும் ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு?

சாடையாக அப்பாவும் அம்மாவும் இதைப்பற்றிப் பேசிக் கொண்டது, கயல்விழியின் காதிலும் விழுந்தது. அவளுடை மனம் அதிர்ந்து விடவில்லை; ஒரு கணம் இளங்கோவின் எண்ணம் வந்துபோயிற்று; ஆம், அது போய்விட்டது! அவனை அவள் காதலித்திருந்தால் தானே அது போகமாட்டேனென்று குழப்பம் செய்திருக்கும்? அது போய்விட்டதும் அவள் நெஞ்சிலே வடி வேலன் வந்து சிரித்தான். ‘ஆம், இவர் அழகர்; வீரர்; கொழும்பிலே நல்ல உத்தியோகம் பார்க்கிறவர்…’

***

கணபதி ஐயர் சொன்னார்,

“மாஸ்டர், சீனித்தம்பியருடைய மகன் வடிவேலனுக்கும் நடராசருடைய மகள் கயல்விழிக்கும் ஒரு பேச்சுக்கால் இருக்கிறது போல் தெரிகிறது…… இன்னும் கதை வெளியில் வரவில்லை …”

மூர்த்தி மாஸ்டருக்கு யாரோ தாக்கியது போலிருந்தது. ”ஆ! கயல்விழிக்கா? – அவள் நல்ல பெண்ணல்லவா!….”

“ஓம்…. வடிவேலனுக்கு மென்ன….”

மூர்த்தி மாஸ்டர் சிரித்தார். ஏளனச் சிரிப்பு!

***

வீட்டோடு இருந்த கதை இன்னும் வெளியே போக வில்லை. விரைவில் போக இருந்தது. அதற்கிடையில்

அது 1958ம் ஆண்டு ஆனிமாதம் 29 ம் திகதி .

அன்று தான் யாழ்ப்பாணத்தில் ஒரு பேய்க் கூட்டம் வெறி யாட்டம் ஆடிற்று. வருங்காலத்தமிழன் தன்னுடைய சரித்திரத் தைப் பார்த்து வெட்கித் தலைகுனியக் கூடியதாக அன்று ஒரு ரௌடிக் கூட்டம் தெருவெல்லாம் அட்டகாசம் செய்தது. கீழ்த்தர மான கொள்கைக்காரர்களும், எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாப மென்ற கருத்துடைய சில சுயநலப் பிசாசுகளும் அந்த ரௌடி களுடன் சேர்ந்து கொண்டன.

எங்கெங்கு சிங்களவருடைய கடைகள் இருந்தனவோ, அங்கெல்லாம் இந்தப் ‘போர்வீரர்கள் ‘ படையெடுத்தார்கள்! எத்தனையோ கஷ்டமும் நஷ்டமும் பட்டுச் சம்பாதிக்கப்பட்ட பொருள்கள் நடுறோட்டிலே தீயிலிடப்பட்டன! விலைமதிப்புள்ள பொருள்களைக் குப்பை கஞ்சல்போல நெருப்பிலே போட்டு எரித்தனர் அந்தக் குப்பைகள்!

இந்தக் குப்பைக் கூட்டத்திலே இருந்தவர்கள் சில நூறு பேர்தான். ஆனால் இதைச் சகிக்காத ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவர்கள் தனித்தனியாக நின்றார்கள்; இவர்களோ கூட்டமாகக்கூடித் திரண்டிருந்தார்கள்!

நல்லவேளையாகச் சிங்களவர்கள் அனைவரும் பொலீஸ் நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அவர்களில் பலரை மனிதர்களான தமிழர்களே – அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்கள்.

இந்தக் கொடுமை யாழ்ப்பாண நகரத்தில் நடந்த அன்று மாலையிலே –

-இங்கே இந்தக் கிராமத்தில் –

பிள்ளையார் கோயிலுக்குச் சற்றுத் தள்ளிச் சந்தியில் ஒரு ‘பேக்கரி’. சென்ற பதினைந்து வருடங்களுக்கு மேலாக பண்டா தன்னுடைய குடும்பத்தோடு அந்தப் பேக்கரிக்குப் பின்னால் உள்ள வீட்டிலிருந்து, இந்த ஊரில் தானும் ஒருவனாக – நன்மை தீமைகளில் பங்கு கொண்டு வாழ்ந்து வருகிறான்.

அன்று மாலை பண்டாவின் வீட்டுக்கு முன்னால் ஒரு கூட்டம்; இருபது முப்பது பேர் இருக்கும். அந்தப் படைக்குத் தளபதியாக நின்றான் வடிவேலன்!

“சட சடவென்று வீட்டுக்குக் கல்லெறி விழுந்தது. வீட்டுக் குள் ஒருவரும் இல்லையென்று தெரிந்தது. வேலியை வெட்டிக் கதவுகளை உடைத்துச் சிலர் உள்ளே புகுந்துவிட்டார்கள்.”

“எல்லோரும் வெளியே வாருங்கள்…. டேய் கொண்டு வா நெருப்புப் பெட்டியை!” என்று வடிவேலன் உத்தரவிட்டான்.

நெருப்புப் பெட்டி கைக்கு வருவதற்குள் யாரோ ஒருவன் ஓடி வந்து வடிவேலனின் காதுக்குள் சொன்னான்; “பண்டாவையும் பெண்சாதி பிள்ளைகளையும் மூர்த்தி மாஸ்டர் கூட்டிக் கொண்டு போய்த் தன்னுடைய வீட்டிலே வைத்திருக்கிறாராம்!”

வடிவேலன் ‘மூர்த்தி மாஸ்டர்?’ என்று ஒரு கணம் நின்றான். பிறகு ”அது எதுவாயிருந்தாலென்ன இந்த விஷயத்தில் எவ ருடைய முகத்தையும் பார்க்க இயலாது! அவர் தானாக விட்டால் சரி…” என்று சொல்லிக் கொண்டே திரும்பி நடந்தான். கூட்ட மும் நெருப்புப்பெட்டியை மறந்து ஓட்டமும் நடையுமாக அவ னைப் பின்பற்றிச் சென்றது.

ஆம், அது மூர்த்தி மாஸ்டர் வேலைதான்! பட்டணத்தில் நடைபெற்ற அக்கிரமத்தை அன்று மத்தியானம் கேள்விப்பட்டதும் அவர் ஆத்திரப்பட்டார். ஆனால் ஆத்திரத்திலும் சிந்தித்துச் செய லாற்றத் தவறவில்லை . உடனடியாக அவர் பண்டாவின் வீட்டுக் குச் சென்று, அவனுடைய குடும்பத்தையும், பெறுமதியுள்ள பொருள்களையும் தம்முடைய வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்து விட்டார். பிறகும் நிலைமையைக் கவனித்துக் கொண்டு எச்சரிக்கை யாகவே இருந்தார்.

பண்டாவின் வீட்டை நோக்கிப் ‘பட்டாளம்’ புறப்படப் போகிற செய்தியை எப்படியோ அறிந்து கொண்டு, முன்னரே யோசித்து வைத்திருந்தபடி இளங்கோவைக் கூப்பிட்டுத் தம்மு டைய வீட்டில் காவலிருக்கும்படி விட்டு விட்டு, தாம் சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைந்தார், மூன்று மைல்களுக்கப்பாலுள்ள பொலிஸ் நிலையத்தை நோக்கி.

இங்கே

மூர்த்தி மாஸ்டரின் வளவுக்குள் ஆரவாரத்துடன் நுழைந்தது கூட்டம். ஒழுங்கையில் சத்தம் கேட்டபோதே, பண்டாவின் குடும்பம் இருந்த அறையைப் பூட்டித் திறப்பை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு இளங்கோ தயாராக நின்று கூட்டத்தை வரவேற் றான்.

‘பண்டாவை வெளியே விடு!’ ‘தமிழா, தமிழனுக்குத் துரோகம் செய்யாதே,’ ‘பழிக்குப் பழி வாங்குவோம்!’

இந்தச் சத்தங்களுக்கிடையே ஒரு மிருகத்தின் குரல் கேட்டது.

‘அவனுடைய குமரியை மட்டும் என்னிடம் விடு, நான் போய்விடுகிறேன்!’

கூட்டம் ‘கொல்’ என்று சிரித்தது! ‘நாய்கள், இவர்கள் அக்கா தங்கைகளுடன் பிறந்ததில்லைப்போலும்!’

வடிவேலன் முன்னுக்கு வந்தான். இளங்கோ, எதிர்கொண்டான். “மூர்த்தி மாஸ்டர் எங்கே?” ”அவர் இல்லை ” “பண்டாவுக்கு நீர் தான் காவலோ?”

இளங்கோவும் உணர்ச்சி துடிக்கும் இளைஞன் தான். வடி வேலனின் கேலிக்குரல் அவனுக்கு ஆத்திரத்தை மூட்டிற்று. ஆனால் அதை அடக்கிக்கொண்டு சொன்னான்:

“வடிவேல், அவர்கள் யாருக்கு என்ன தீமை செய்தார்கள்? இவ்வளவு காலமும்…”

“உம்முடைய உபதேசம் எனக்குத் தேவையில்லை!” என்று வடிவேலன் வெடித்துச் சீறினான். பிறகு பின்னால் திரும்பி, “போங்கள்! உள்ளே போய் இழுத்து வாருங்கள்!” என்றான்.

“நில்லுங்கள்; ஒருவரும் உள்ளே நுழையக்கூடாது!” என்று இளங்கோ கைகளை அகல விரித்தான், ஆனால் இருபது முப்பது கைகளுக்கு முன்னால் அவனுடைய இரண்டு கைகள் வலுவிழந்து மடிந்தன.

அவன் உடம்பெல்லாம் துடித்துப் பதறியது. எத்தனையோ விதமான உணர்ச்சிகள்!

உள்ளே போனவர்கள் திரும்பி “கதவு பூட்டியிருக்கிறது!” என்றார்கள்.

வடிவேலன் இளங்கோலைப் பார்த்துக் கேட்டான்: “திறப்பு எங்கே?”

இளங்கோ , ”என்னிடமே அதை வாங்கப்போகிறீரா?” என்று திருப்பிக் கேட்டான்.

“மரியாதையாகக் கேட்கிறேன்….” “நீர் எப்படிக் கேட்டாலும் சரிதான்!” “ச்சீ தமிழ்த் துரோகி!……”

ஆம், அந்த வீரசிகாமணி, தமிழ்த்தாதா, தமிழையே தன் மூச்சாகக் கொண்ட வள்ளல் அப்படித்தான் விளித்தான்; அதுவும் இளங்கோவைப் பார்த்து விளித்தான்.

“ச்சீ, தமிழ்த்துரோகி! நீ சிங்களவனுக்கு உதவிசெய்யப் போகிறாயா?…. கொடடா திறப்பை ”

இளங்கோ பதிலே பேசவில்லை. பேசும் சக்திக்கு அப்பால் நின்றான் அவன்

மறுகணம் –

அவன் கன்னத்தில் வடிவேலனின் கை கேட்டது: “கொடடா திறப்பை!”

யாரோ ஒருவன் பின்னால் நின்று உதைத்தான். ஒருவன் குத்தினான். மற்றவன் அடித்தான்.

ஒரு பாட்டம் முடிந்ததும் வடிவேலன் விலக்கினான். “எங்கேயடா திறப்பு?”

“நாய்களே! நீங்கள் என்னைக் கொன்றாலும்…….”

வடிவேலன் கூட்டத்துக்குச் சொன்னான்: “இவனைப் பிறகு பார்த்துக்கொள்வோம். நீங்கள் கதவை உடையுங்கள். வருவதற் கெல்லாம் நான் இருக்கிறேன்!”

அவனை அடித்து இழுத்தார்கள். கதவிலே காந்தம் இருந் ததோ? அது இளங்கோ என்ற இரும்பைத் தன்னிடம் இழுத்து இழுத்து ஒட்டிக்கொண்டது!

கதவுக்கு விழுந்த உதைகளில் பாதி இளங்கோவின் மீது விழுந்தன காலிலே, கையிலே, முதுகிலே, நெஞ்சிலே வயிற்றிலே…

வீரம்!

அந்த உணர்ச்சியைப் பார்க்க அகில உலகமே அங்கே வந்திருக்க வேண்டும்! உதவியற்ற ஒரு மனிதகுடும்பத்தை, கொடூரமான இனவெறியர்களின் கையிலிருந்து காப்பாற்று வதற்காகத் தன்னுடைய உடம்பிலே அவ்வளவு வேதனையும் தாங்கிகொண்டு நிமிர்ந்து நிற்கிறானே. அவனுடைய நெஞ்சிலே நிரம்பி நிற்கும் வீர உணர்ச்சியைப் பாடுவதற்குக் கம்பனால் முடியாது. அவன் பாடிய ‘வீரம்’ வேறு! புதுயுகக் கவிஞர்கள், முடியுமானால் நீங்கள் பாடுங்கள்! மொழி என்று ஓசையிலே அதற்கு உருவம் கொடுக்க முடியுமானால், பேனா மன்னர்களே! நீங்கள் செய்து பாருங்கள்!

யாரோ ஒருவன் எதனாலேயோ அடித்த அடி இளங்கோ வின் தலையில் பட்டு –

கேவலம், வெறும் இரத்தத்தை தான் அவர்களால் வெளிப் படுத்த முடிந்ததே தவிர, அவனுடைய உறுதியில், வீரத்தில் ஒரு துளிக்கூட அவர்களால் வெளியேற்ற முடியவில்லை.

அவனுடைய உடம்பு என்ன இரும்பா? இன்னும் சில நிமிடங்களில் –

நல்ல வேளை! வெளியே மோட்டார்ச் சத்தம் கேட்டது. மூர்த்தி மாஸ்டர் வந்துவிட்டார்! ‘பொலிஸ்’ என்று ஒரு குரல்.

‘பொலிஸ், பொலிஸ்’ என்று அதைப் பிரதிபலித்துப் பல குரல்கள். ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று வீராதிவீரர்கள் ஓடுகிற காட்சி – அது என்ன கனவா?… எல்லாம் மங்கலாக….. எல்லாம் மங்கலாக..

இளங்கோவின் உடல் சோர்ந்து விழுந்தது!

ஆஸ்பத்திரியில் கிடந்த இளங்கோவை ஊரே திரண்டு வந்து பார்த்தது. அவனுடைய வீரத்தைப் புகழ்ந்தது. அவனை அடித்து உதைத்தவர்கள் கூடப் பலர் வந்து பார்த்தார்கள். தாங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகச் சொல்லி மன்னிப்புக் கேட்கு மளவுக்கு அவர்கள் பெரிய மனிதர்களல்லர்; ஆயினும் அதற்காக மனதுக்குள்ளே பச்சாதாபப்பட்டார்கள் – மனிதர்கள் தான்!

மூர்த்தி மாஸ்டர் இளங்கோவை விட்டு அகலாமலிருந்தார், கூட இருந்து அவனைப் பார்ப்பது தமக்கு ஒரு பெறுபேறு என்று அவர் கருதினார். ஒரு வாரம் கழித்து அவனுக்குக் கொஞ்சம் தென்பு வந்த பிறகு மூர்த்தி மாஸ்டர் சொன்னார். ‘அன்று நான் பிழைசெய்துவிட்டேன். நான் போன கையோடு பொலீசை அழைத்து வராலாமென்ற எண்ணத்துக்கு முதலிடம் கொடுத்து, உம்மை வீட்டிலே விட்டு விட்டுப் போனேன். இவ்வளவு தூரம் நடக்குமென்று தெரிந்திருந்தால், நான் நின்றுகொண்டு உம்மை அங்கே அனுப்பியிருப்பேன்.”

“நல்லவேளை மாஸ்டர்! அப்படிச் செய்திருந்தால் எனக்குக் கிடைக்க இருந்த ஒரு பெரிய இன்பம் எட்டாமல் போயிருக்கும்!”

இளங்கோவின் புன்சிரிப்பையும் முகமலர்ச்சியையும் கவ னித்த மூர்த்தி மாஸ்டர், “எதைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இளங்கோ மெதுவாகத் திரும்பி தலையணையை உயர்த்தி, அதற்குக் கீழிருந்த ஒரு கடிதத்தை எடுத்து மூர்த்தி மாஸ்டரிடம் கொடுத்து; “நேற்றுக் கயல்விழி என்னைப் பார்க்க வந்திருந்தாள். போகும் போது இதைத் தந்துவிட்டுப் போனாள்… பரவாயில்லை நீங்கள் படித்துப் பாருங்கள் மாஸ்டர்” என்றான்.

மூர்த்தி மாஸ்டர் படித்தார் –

அன்பரே, ஒரு கசாப்புக் கடைக்காரனை வீரனென்று நினைத்தேன், உங்கள் செயலை அறிந்த பிறகு… எனக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை. இப்போது என் மனத்தில் திரும்பத் திரும்ப நினைத்து இரசிப்பது உங்கள் கதைகளையல்ல, உங்களை!…… எனக்கு என்ன எழுதுவ தென்று தெரியவில்லை.

உங்கள்

கயல்விழி கடிதத்தை மனதுக்குள் படித்துவிட்டு மூர்த்தி மாஸ்டரும் முகமலர்ந்து சிரித்தார். ”தம்பி இனி உமக்கு எல்லா நோவும் மாறிவிடும்.”

இளங்கோவுக்குச் சிறிது வெட்கமாகவும் இருந்தது. அதை மறைப்பதற்குப் போலும், “அவள் எழுதியிருக்கிற அழகைப் பார்த்தீர்களா? இரசிப்பது என்னுடைய கதைகளையல்லவாம்…” என்றான்.

“.. இனி அவளும் ஒரு ‘எழுத்தாளி’ ஆகிவிடுவாள்!” என்று சொல்லி மூர்த்தி மாஸ்டர் சிரித்தார். அது ஏளனச் சிரிப்பல்ல, மகிழ்ச்சியின் சிரிப்பு!

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *