கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 3,732 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் அந்தப் போலீஸ் படையின் அதிகாரியின் தனியறையில் உட்கார்ந்திருந்தேன்; அது ஒரு சின்ன அறை; ஒளியும் களையும் அற்ற அறை. அந்த அறையில் ஒரு அகலமான எழுத்து வேலைக்கான மேஜை, கரியதோல் பிடி போட்ட மூன்று நாற்காலிகள், ஒரு சோபா, ஒரு பெரிய அரங்கு பீரோ முதலியன இருந்தன. அந்த அறையிலே தொங்கிக் கொண்டிருந்த அமிதமான புகைப்படங்களின் தொகையால், அந்த அறையின் களையின்மை அதிகப் பட்டுத் தோன்றியது.

அந்தப் படங்கள் ஏராளம். போலீஸ் படைகள், பெண் கள், பிள்ளைகள், ஏதோ ஒரு ராணுவ முகாமின் படம், ஒரு செங்குத்தான நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் (எனக்குத் தெரியாதது), ஒரு இளம் ராணுவ மாணவன் கடிவாளத்தைப் பிடித்தவாறு நிற்கும் ஒரு வெள்ளைக் குதிரை, ஊசியிலைக் காட்டில் கோணல் மாணலாக நிற்கும் ஒரு கற்சிலையைப்போல் உள்ள ஒரு பாதிரியின் முழு உருவப் படம் – இத்தியாதி.

அந்த அதிகாரி உயரமானவர்; திரண்டு உருண்ட புஜங்களை உடையவர். அவர் ஒரு காக்கி நிறச் சட்டை அணிந்திருந்தார். அவரது முகம் தெளிவாகவும் தேய்ந்து மெலிந்ததாகவும் இருந்தது. அவரது பழுப்பும் நீலமும் கலந்த கண்கள் பெரிதாகவும் அழகாகவும் இருந்தன. எனி னும் அவற்றின் பார்வையில் களைப்பும் சோர்வும் சோகமும் பிரதிபலித்தது. அவருக்கு வயது ஒன்றும் நாற்பதுக்கு மேலிருக்காது. எனினும் அவரது தாடி பழுத்து நிற மாறிவிட்டது. அலைபோற் சுருண்ட அவரது தலைமயிர் மெல்லியதாக இருந்தது. அவரது இடது கன்னத்தின் பக்கம் அடிக்கடி ஒரு நரம்பு வலித்து இழுத்துக் கொள்வதால், அவர் அடிக்கடி கண்களை இமை தட்டி விழித்தார்.

அவர் தமது சட்டைப் பைகளுக்குள் கைகளைப் புகுத் தியவாறே தமது நெடிய கால்களை அகட்டி மெதுவாக நடந்து மேஜையின் அருகே வந்தார்; வந்து சோர்ந்து போன குரலில் பேசினார்:

“அதை நீ எப்படி விளக்கப் போகிறாய்? எப்படியும் அதை விளக்கியாக வேண்டும்.”

அந்த அறையில் இரண்டு ஜன்னல்கள் இருந்தன. அதில் கறுஞ் சிவப்பான திரைகள் தொங்கவிடப்பட்டிருந் தன; எனக்கும் அந்த அதிகாரிக்கும் இடையில் தோல் நாற்றமும் மருந்து வாடையும் காரப் புகையிலை நெடியும் நிறைந்த சிவந்த புகை மண்டலம் நிரம்பி நின்றது.

என்னைச் சிறையிலிருந்து, குதூகலம் கும்மாளியிடும் நகரத்து வீதி வழியாகக் காவலாளி அழைத்து வந்தபோது, நான் ஒரு வீரன் எனவே உணர்ந்தேன். வாழ்க்கை யின் அநீதியைப் பற்றிய நினைவோட்டங்கள் என் இதயத் தில் வாலிபத்தின் கோப வசீகரத்தைத்தான் தூண்டி விட்டன. எனவே எனது விசாரணையை நான் தன்னந் தனியான விறல் வீரனைப் போலவே எதிர்நோக்கி வந்தேன்.

ஆரம்பத்தில் நான் அந்த அதிகாரியின் கேள்விகளுக்கு வேகத்தோடும் முரட்டுத்தனமாகவுமே பதில் சொன்னேன். அந்த அதிகாரியைக் கோபமுறத் தூண்ட வேண்டும், அவன் என்னைப் பார்த்துக் கூச்சலிட்டுக் கத்த வேண்டும், பய முறுத்த வேண்டும். அதன் மூலம் அந்தத் துராத்ம விரோதி யுடன் ஒரு போர் தொடுக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால் நான் அவரது மெழுகு போன்ற முகத்தையும், சோகம் ததும்பும் கண்களையும் பார்த்த வுடன், அவரது அடைந்த குரலையும், ஒரு தலைப்பட்சக் கேள்விகளையும் காது கொடுத்துக் கேட்டேன்; என் இதய நெருப்பு அவிந்து விட்டது; என் உத்வேகம் மறைந்து விட்டது. என் இதயத்தில் புழுக்கமும் பாரமும் எரிச்சலும் குடிபுகுவது போல உணர ஆரம் பித்தேன்.

என் முன் எதிரி எவனுமில்லை; இந்த எச்சுப்போன மனிதனிடம் எந்தத் துன்மார்க்கமும் தென்படவில்லை. இதுபோன்ற ஒரு நன்னாளில் அவரைப் போன்ற ஆசாமி ஊரைவிட்டு வெளிச்சென்று காட்டுப் புறத்தில் இளம் பசிய புல் தரையில் மல்லாந்து படுத்து வானை நோக்கிக் களிப்புறத்தான் வேண்டும்; ஆனால் இவரோ இந்த அறைக் குள்ளே கிடந்து புழுங்கி, தமது காலத்தை என்னோடு வீணாக்கிக்கொண்டு, திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி களையே கேட்டுச் சலிப்புறச் செய்து கொண்டிருந்தார்.

“நீ ஏன் யாரோஸ்லாவுக்குப் போனாய்?”

“அதைத்தான் சொன்னேனே”

“நீ சொல்வதை நம்பமுடியாது” என்று பதிலளித் தார்; தனது சிகரெட் சாம்பலை உதறித் தட்டினார். அவரது கால் செருப்புக்களை மீண்டும் தரையோடு தட்டித் தாள மிட்டுக் கொண்டார்.

அவர் தம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தை யும் ஏதோ ஒரு அதிசயக் கண்ணோட்டத்தோடு பார்த்தார்; அந்த அறையிலுள்ள சாமான்கள் எல்லாம் அவருக்கே புதிதானவையாயிருப்பதுபோல அவர் பார்த்தார்; அந்தச் சாமான்கள் தமக்குப் பிடிக்காதது போலவும் தமக்குத் தேவையானவை அங்கு இல்லாதது போலவும் கருதும் ஒரு பாவம் அந்தப் பார்வையில் தென்பட்டது. சமயங்களில் எதுவுமே பேசாமல் தலையை மட்டும் பலமாக ஆட்டிக் கொண்டார். அப்படி ஆட்டும்போது அவரது இளந்தாடி விசிறியைப்போல் அசைந்தாடி மார்பின் மீது வீசிக்கொண்டது. கலைக்கப்பட்ட தன் கூட்டைச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் ஒரு ஊசி இலைக்காட்டுப் பறவையைப் போல அவர் தோற்றமளித்தார்.

என் வாழ்க்கையிலேயே இந்த மாதிரி ஆசாமியை நான் இப்போது தான் சந்தித்தேன்; அதை நினைத்தால் …. அவரைப் போன்ற ஆசாமி இந்த உலகத்திலேயே அவர் ஒரே ஒருவர் தான் இருக்க முடியும் என்று எனக்குப் பட்டது.

“கேள்!” என்று அவர் அசையாது நின்றுகொண்டு தம் பாக்கெட் கடிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டே சொன்னார்: “எவ்வளவு நேரந்தான் இப்படியே போய்க் கொண்டிருப்பது? இந்த முடிவற்ற விசாரணைக்கு நாம் ஒரு முடிவு காண வேண்டும் என்பது உனக்குத் தெரியபா” என்றார் அவர். என்பது சாரணைக்கு வேகமாய்க் கடிகாரத்தின் மேல் மூடியை டக்கென்று மூடிவிட்டு, அந்த அறையின் மூலையில் இருளுக்குள் தெரியும் இரண்டாம் அலெக்ஸாந்தரின் சிலையைப் பார்த்தவாறே மேலும் பேசினார் :

“நீ கஷ்டப்பட வேண்டும் என்று நான் விரும்புவதாக நீ நினைக்கிறாய். நான் தான் உன்னைச் சிறையில் வைத்துப் பார்க்க வேண்டும் என விரும்புவதாக நீ கருதுகிறாய். நீ நினைப்பது பெருந்தவறு. நான் எதற்காக அப்படி விரும்ப வேண்டும்? நீ சிறையிலே கிடப்பதில் எனக்கென்ன லாபம்”

“பின்னே என்னைப் போக விடும்?”

அவரது தெளிந்த முகத்தில் ஒரு நடுக்கம் பரந்தோடியது; அவரது இடது கண் இமை தட்டி மூடியது.

“என்னால் முடியாது!” என்று அவர் சொன்னார்; சொல்லும்போதே வரட்டுக் குரலில் இருமினார்; தமது உறுதியான விரல்களால் கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டார். அவரது வலது கரத்தின் சுட்டு விரலில் கனமான மோதிரம் கிடந்தது; அது திருமண மோதிரமாகத் தானிருக்கவேண்டும்.

“உன் பிரயாணத்தைப் பற்றி எனக்குச் சரியான விளக்கம் வேண்டும்; நான் வெளியே போய் விட்டு, கால்மணி நேரத்தில் திரும்பி வருவேன். நான் போன பிறகு நன்றாக யோசித்துப் பார்; முடிவுக்கு வா. ஒரு வாக்கு மூலம் எழுதிவை.”

அவர் கதவருகே சென்றார்; நின்றார். கதவின் கைப் பிடியைப் பிடித்துக் கொண்டே அமைதியாகச் சொன்னார்:

“பீட்டர்ஸ்பர்க்கில் எனக்கொரு மகன் இருக்கிறான்; அவன் ஒரு மாணவன். உன் வயதுதான் இருக்கும். ஒரு வேளை இதே சமயத்தில் அவனையும்கூட யாராவது ஒரு போலீஸ்காரன் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக் கக்கூடும், தெரிந்ததா? சரி, பிறகு…”

அந்த அறையின் செம்புகை மண்டலத்தில் நான் ஒருவன் மட்டுமே நின்றேன். அவரது மகனைப் பற்றிய பிரஸ்தாபம் என் மனத்தில் எதையோ தொட்டு விட்டது போல் தோன்றியது.

“சரி, பிறகு….” என்ற வார்த்தைகள் என் நினைவில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அதே வார்த்தைகள் ஒரு கேள்விக் குறியோடு என் முன் ஒலிப்பதாகத் தோன்றியது.

“சரி. பிறகு?”

கன்னங்கள் இரண்டும் ஊதிப்புடைத்துக் கப்பி நிற்க அந்தப் பாதிரி சுவரிலிருந்தவாறே என்னைக் குனிந்து பார்த் தார்; அந்தக் குதிரை கண்ணைச் சிமிட்டியது; அந்தத் தடித்த பெண் புன்னகை புரிந்து கொண்டே துணியற்று இருக்கும் தன் இடது தோளைப் பார்த்துக் கொண்டிருந் தாள். ஜன்னல் திரைகளைப் பாச்சைகள் அரித்துத் தின்று விட்டன. அந்தத் திரைகளில் தெரியும் சிறு சிறு துவாரங்களின் வழியே பார்வையைச் செலுத்தினால், வெளியேயுள்ள நீல வானத்தை ஓரளவு காண முடியும்.

அந்த அதிகாரி அடிக்கடி ‘ஏன்’ என்ற வார்த்தையையே பிரயோகித்தார். ஒரு போலீஸ்காரனின் அறையில் என்னைப்போல் அவரது மகனும் இருக்க நேர்ந்தால், அவனுக்கும் தான் எரிச்சலாக இருக்கும்.

வெளியே புறப்பட்டுச் சென்ற அதிகாரி கதவை முழு வதும் கூடத் திறந்து முடியவில்லை. அதற்குள் எங்கிருந்தோ உணர்ச்சி வெள்ளமயமாக ஒரு சங்கீத நாதம் அந்த அறைக்குள் மிதந்து வந்தது; யாரோ அந்த வீட்டின் வேறொரு அறையிலிருந்து பியானோ வாசித்துக் கொண்டிருந் தார்கள்.

எனக்குத் தாங்க முடியாத எரிச்சல் வந்தது; அந்த சங்கீதம் என்னை அழைத்தது; நான் எழுந்து நின்றேன்; வாசலுக்குப் போனேன். சூரிய ஒளி பளிச்சென்று வீசும் ஒரு அறையை எட்டிப் பார்த்தேன்.

திறந்த ஜன்னலுக்கு அப்பால், வசந்தத்தின் கோலா கலம் குலவையிட்டுக் கொண்டிருந்தது. பூ வேலை செய் தது மாதிரி மரங்களின் நிழல்கள் ஜன்னல் சட்டங்களிலும் தரையிலும் விழுந்து படிந்து கிடந்தன. எனக்கு எதிராக ஒரு சிறு கதவு இருந்தது. அதற்குப் பின்னாலிருந்து பூட்சு களின் லாடச் சத்தமும், ஆண்களின் குரலும், ஜன்னலில் ஒட்டியிருந்த தாள் கிழிந்து போய் படபடக்கும் சத்தமும் கேட்டன. இந்தச் சத்தங்களெல்லாம் எனக்கு இடது புறமுள்ள அறையிலிருந்து வரும் சங்கீதத்தைக் கேட்க விடாமல் தடை செய்தன. அந்த அறையின் வாசலை மறைத்து, வெளிறி வெளுத்துப் போன ஒரு திரை தொங்கி ஊசலாடிக் கொண்டிருந்தது. அந்த சங்கீதம் என் பிரக்ஞை உணர்ச்சியையே மயக்கியது. நான் எங்கிருக்கிறேன் என் பதையே மறந்தேன்; அந்தத் திரையை விலக்கினேன்; அந்த அறைக்கு வெளியேயுள்ள கூடத்துக்கு வந்துவிட்டேன். கதவின் அருகே ஒரு உயரமான வேலி இருந்தது; அதன் மேல் பூங்கொத்துக்கள் படர்ந்து கிடந்தன. நான் அந்த வேலிக்கும், வாசல் நடையின் திரைக்கும் மத்தியில் நின் றேன். அங்கிருந்தவாறே அந்த சங்கீதத்தை என்னால் நன் றாகக் கேட்க முடிந்தது; அந்தப் பூங்கொடியின் இலைச் செறிவுக்கு ஊடாக, அந்தப் பியானோவை வாசிக்கும் பெண்ணையும் என்னால் பார்க்க முடிந்தது. நானிருந்த திசையில் அவளது முதுகுதான் தெரிந்தது. கழுத்தில் துணி யில்லை. பலவர்ணக் கோலத்தோடு பளிச்சென்று தெரியும் ஒரு கீழை நாட்டுப் பட்டுத் துணிக் கச்சையை அவள் கட்டியிருந்தாள். அவளது சின்னஞ் சிறு தலையில் கன் னங்கறுத்த ரோமக்கற்றைகள் சுருள் சுருளாக அடர்ந் திருந்தன. அவள் தன் காது ஒருக்கச் சாய்த்து மிகவும் இங்கிதமாக வாசித்தாள்; அவள் வாசித்த பாவனை அவள் மறந்து போன ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள முயல்வதுபோலத் தோன்றியது. அவளது பிஞ்சு விரல்கள் தீர்மான கதியற்று, கீழ் ஸ்தாயி சுரக் கட்டை களின் மீது உலவியது; அவளது வலது கரம் நிதானமற்று மத்திம ஸ்தாயியின்மீது விளையாடியது. வெகு நேரம்வரை நான் அவளது நடுங்கும் கரங்களையே கவனித்துக் கொண் டிருந்தேன். அவற்றின் அசைவிலே ஏதோ ஒரு குழப் பத்தை, கூச்சத்தை, சோகத்தை உணர்வதுபோல எனக்குப்பட்டது…

என்றாலும் பியானோவின் சுரக்கட்டைகளோ கெக்கலி யோடு சிரிப்பது போலத் தோன்றின. ஆரம்பத்தில் அந்த கீதத்தின் மூர்ச்சை எனக்குப் பிடிபடவில்லை. அவளது ஆலாபனையின் ஆரோகண அவரோகணங்கள் தொடர் பற்று ஒலித்தன; கேந்திர சுரஸ்தானங்களின் ஆழ்ந்த நெடு மூச்சுக்கள் அழுத்தமாக எதையோ திரும்பத் திரும்பக் கூறுவதாகப்பட்டன. அந்த சங்கீதத்தின் பூர்ண வடிவமும் இலையுதிர் காலத்தைச் சித்தரிப்பது போலிருந்தது; அறுவடையான வயல்வெளி, வாடிப்போன புல்வெளி, குளுமையும் வாடையும் கலந்த ஊதைக் காற்று முதலியவற்றைப் பிரதிபலிப்பது போலத் தோன்றின. அந்த மனோ சித்திரத்தில், அந்த ஊதைக் காற்றின் ஸ்பரிஸத்தால் நடுங்குகின்ற காட்டு மரங்கள், அவை உதிர்த்துச் சிதறும் பொன்னிற இலைகள் எல்லாம் தெரிந்தன; தூரத்தில் எங்கோ கண்காணாத தேவாலயத்திலிருந்து சோகமய மாக மங்கி யொலிக்கும் கண்டாமணி யோசையும் கூடக் கேட்பது போலிருந்தது….

அந்த வயல் வெளியில் தலையில் எதுவுமே அணியாமல் ஒரு மனிதன் நிற்கிறான். அவன் தன் கரங்களை ஆகா யத்தை நோக்கி உயர்த்தியவாறே, ஓடுகிறான்; அந்த ஊதைக் காற்று அவனை உந்தித்தள்ள ஓடுகிறான்; அடிக்கடி திரும் பித் திரும்பிப் பார்த்தவாறே ஓடிக் கொண்டிருக்கிறான். அவனோடு கூடவே மங்கிப் போய் இனந் தெரியாது ஒலிக்கும் ஒரு கர்ஜனைக் குரலும் தொடர்ந்து செல்கிறது; போகப் போக அந்த வயல் வெளி பெரிதாகிறது; அகன்று விரிகிறது… அந்த வயல் வெளியில் அந்த மனிதனின் உருவம் குறுகி, சிறிதாகி, தூரத்தில் சென்று சென்று மறைந்தே போய் விடுகிறது …..

அந்தப் பெண் வாசிப்பதை நிறுத்திவிட்டு அசைவற்று உட்கார்ந்தாள்; அவளது கைகள் சோர்ந்து தொங்கின;

அப்படியே அவள் வெகுநேரம் உட்கார்ந்திருந்தாள்.

நான் அவளைப் பூக்களுக்கு ஊடாக, எந்தவிதச் சிந்தனையுமற்றுப் பார்த்தேன்; என் இதயத்தில் ஒரு அழகிய எதிரொலி இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது; என் நினைவில் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். எக்கார ணம் கொண்டும் நான் என் மனதை இழந்துவிடக் கூடாது என்பதுதான்.

பிறகு அவளது வலது கை மீண்டும் ஒரு முறை மெது வாக விருப்பற்று விழுவதுபோல, அந்த வாத்தியத்தின் சுரக்கட்டைகளின் மீது படிந்தது; மீண்டும் அந்த வெற்றிப் பெருமிதமான இசை மயக்கத்தில் நான் மூழ்கிவிட்டேன். நான் கேட்டேன்; கண்களை மூடியவாறே கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு பெரிய ஜனத்திரள் வெள்ளம் ஒன்று கூடி ஒரே மனதாக, யாரோ ஒருவனைச் சூழ்ந்து கொண்டு கோப மும் குழப்பமும் நிறைந்த கண்ணீரோடு அவனை மன்றாடிக் கொண்டிருப்பதுபோல் எனக்குத் தோன்றியது. அந்தச் சங்கீதம் வேகமும் கனமும் கொண்ட சக்தியாக விளங்கி யது; இவ்வளவு சின்னஞ் சிறிய பெண்ணொருத்தி நெருப்புப் பிழம்பாக ஜொலிக்கும் சங்கீதத்தை வாசிப்பது எனக்கு அதிசயமாகப்பட்டது.

இந்த இரண்டாவது வாசிப்பும் என் பிரக்ஞை உணர்ச்சியை மழுங்க அடித்து மங்கச் செய்துவிட்டது.

“வாசித்தது போதும், நிறுத்து, நடால்யா!” என்று அதிகாரி கோபத்தோடு இரைந்தார். அப்போது அவர் என்னருகே நின்று கொண்டிருந்தார்.

அவள் தன் தலையைத் திருப்பினாள் ; எனினும் அவள் கரங்கள் வாத்தியத்தின் மீதே இருந்தன. அவளது முகம் சின்னஞ் சிறிதாக, ஒரு பறவையின் முகம் போல இருந்தது. நெற்றிப் பொருத்துக்கள் மிகவும் ஒடுங்கி யிருந்தன. அவ ளது மூக்குக் கூறியதாகவும், கண்கள் அகன்று நீல நிற மாகவும் இருந்தன.

“நான் ‘அரெஸ்ட்’ பண்ணிய அந்த மனிதன் எங்கோ ஓடிப் போய்விட்டான். பார்த்தாயா?” என்று கூறிக் கொண்டே, அறைக்குள் நடந்தார். ஒரு தடித்த புகைக் குழாயில் அவரது சிகரெட் புகைந்து கொண்டிருந்தது; லேசாக நடுக்கம் காணும் தமது விரல்களால் அவர் தமது தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“ஓடிப் போய்விட்டானா?” என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டாள் அந்தப் பெண்.

“அப்படித்தான் தெரிகிறது…”

அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக் கிறார்கள் என்பதை நான் அதற்குள் உணர்ந்து கொண்டேன். என்றாலும் நான் உடனடியாக அந்த வேலிக்கும் திரைக்கும் இடையிலிருந்த மறைவிலிருந்து வெளிவர முடிய வில்லை. அப்படி வந்தால் அது என்னவோ போலிருக்கும்;

அவர்களுக்குத் திகைப்பாக இருக்கும்.

“அவன் எப்படிப் போனான்?” என்று கேட்டாள் அவள்.

“ஜன்னல் வழியாக. அப்படித்தான் போயிருக்க வேண்டும் …. அவன் ஒரு முழுப் பைத்தியம். அவன் நாசமாப் போக?” என்று கூறிக்கொண்டே அதிகாரி கதவின் அருகே என்று ஒரு முழுப் பைடித்தான் அந்தப் பெண்ணும் இடத்தை விட்டு எழுந்து அவ ரைப் பின்பற்றினாள். அவள் நடக்கும் போது தன் மேலாக் குத் துணியை மார்பின் மீது இழுத்து விட்டுக் கொண்டாள். இந்தச் சமயத்தில் நான் வெளியே வந்து அவர்கள் முன் எதிர்ப்பட்டேன்.

“அடப்பாவி! இங்கே என்ன பண்ணிக் கொண்டிருந் தாய்?” என்று திடீரென்று நின்று கொண்டே கூச்சலிட்டார் அதிகாரி.

அவரது கண்கள் இமை தட்டிச் சிமிட்டின. அவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார்; பிறகு தம் புருவங்களைக் கோபத்தோடு சுழித்தார்; தோள்களைச் சிலுப்பிக் கொண்டார்.

“நான் ஏதாவது தவறாக நடந்திருந்தால் நீங்கள் மன்னிப்பீர்கள் என்றே நம்புகிறேன்” என்று நான் சொன்னேன்; அதற்குமேல் எதுவும் பேச எனக்கு விருப்பமில்லை .

“சரி” என்று இழுத்தாற்போல் பேசிக்கொண்டே அவர் தம் சிகரெட்டைப் பற்ற வைத்தார்: “நீ செய்தது சரியா தப்பா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நீ இதுமாதிரி செய்திருக்கவே கூடாது…”

அவர் என் முகத்தைக் கூர்ந்து கவனித்து மௌனமாக இருந்தார். அந்தப் பெண் அவரோடு ஒட்டி நின்று கொண்டு, தணிந்த குரலில், எனினும் எனக்குக் கேட்கக் கூடிய குரலில் ஏதோ கேட்க ஆரம்பித்தாள்.

“இவனைத் தண்டிப்பார்களா?”

“சரி, தயை செய்து நீ கொஞ்சம் உள்ளே போ !” என்று கடுமையாகச் சொல்லி, அவளைத் தன்னிடமிருந்து விலக்கி, வாசலைக் காட்டினார் அதிகாரி.

நான் அந்தச் சூரிய ஒளி மங்கிய அறைக்குள் வந்த பிறகு அவர் ஒரு புன்னகையோடு கேட்டார்.

“என்னை ஒரேயடியாய் பயமுறுத்தி விட்டாயே அப்பா, நீ ஒரு ரசமான பேர்வழி தான். சரி, உனக்கென்ன சங்கீதத்தில் அத்தனை பிரியமா?…”

“எனக்குச் சங்கீதம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வாய்க்க வேண்டுமே!”

“சரிதான், இன்று விசாரணை இத்துடன் நிற்கட்டும்.”

மீண்டும் அவர் புன்னகை செய்தார்; கண்களை இரண்டு தடவை சிமிட்டிக் கொண்டார். பிறகு பேசினார்:

“இந்த மாதிரி விஷயம் இருக்கிறதே, இது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தூண்டுவதில்லை… நீ என் மனைவியின் சங்கீதத்தை இன்னுமொருமுறை கேட்கும் சந்தர்ப்பத்தைப் பெறுவாய் என்றே தோன்றுகிறது. அவள் எப்போதுமே இந்த நேரத்தில் தான் பாடுவது வழக்கம். சரி சரி இருக்கட்டும் … ஸால்டி கோவ்! இவனைக் காவலாளி யிடம் ஒப்படை!”

கொழுத்து வியர்த்துப்போன ஒரு போலீஸ்காரன், அவன் தான் ஸால்டிகோவ் – அவன் என்னை அதிசயம் தோய்ந்த கண்களோடு ஏற இறங்கப் பார்த்தான்; அவனது கண்களில் குடி மயக்கமும் குதூகலமும் குமிழிடுவது போலத் தோன்றின. பிறகு அவன் உற்சாகமாக அவருக்குப் பதிலளித்தான்:

“இதோ இப்போதே ஸார்!”

ஆனால் அவன் என்னைக் காரியாலயத்துக்குள் கடத்திச் சென்றபோது என்னைக் கண்டிப்பது மாதிரி பேசினான்:

“என்னப்பா புத்தி உனக்கு! இதென்னமோ ஒரு சந்தை அல்லது வேறெ என்னமும்னு நினைச்சி உலாத்திக் கிட்டிருந்தியா? உன் துணிச்சலுக்கு இது இடமில்லேப்பா. அதனாலெ , உனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லே, இதனாலெ உனக்கு என்னப்பா லாபம்?”

“நான் வெறுமனே சங்கீதம் தான் கேட்டுக் கொண்டிருந்தேன்…”

“ஒரு ‘பார்க்கிலே அதைக் கேட்கணும்!”

பிறகு அவன் என்னை அந்தக் காவலாளியை நோக்கிக் கல்தாக் கொடுத்துத் தள்ளிக்கொண்டே குலைத்தான் :

“பயல்களா , இவனைக் கொண்டு போங்கள் “

– சந்திப்பு – ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை – எழுதியவர்: மாக்சிம் கார்க்கி – தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன் – முதற் பதிப்பு – டிசம்பர் 1951

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *