கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 757 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளி வாசலிலிருந்து வந்த கடிதத்தைப் படித்ததும் ஒரு பாறாங் கல்லின் சுமை, பரீதாவின் மனதை அழுத்தியது. உடலும் உள்ளமும் விவரிக்க இயலாத ஊமைச் சோகத்தில் தவித்தன. நாளை, இந்த ஊரே திரண்டு தன்னை ஒரு அற்பப் புழுவாய், எண்ணி ஆயிரம் கேள்வி கேட்கும். அந்தக் கோரக் காட்சியை நினைக்கையில் அவளது இமையோரங்களில் ஈரம் கசிந்தது. அழுகையும், ஆத்திரமும், கலந்த விழிகளால், அந்தக் கடிதத்தை மீண்டும் வெறித்தாள்.

கெட்ட நடத்தையில் ஈடுபட்டதற்கான வழக்கு. மேற் குறித்த நாளில், விசாரணைக்காக வரவும்.
பிரதான டிரஸ்ட்டி
ஜௌபர்.

மனிதனின் துயரங்களையெல்லாம், கொட்டி, யாரிடமாவது, அழவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அப்படி நெருக்க மானவர்கள் என்று இப்போது யாருமில்லை. தனது வாழ்வேட் டின் அவலம் நிறைந்த பக்கங்களை, சுவாரஸியமின்றி மெல் லப் புரட்டினாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன், பட்டாசு தொழில்சாலையில் நிகழ்ந்த விபத்தில், கருகியே இறந்து போன கணவனை எண்ணி கண்ணீர் வடித்தாள். அவனது ஆயுளை இரக்கமின்றி அள்ளிக் கொண்டு போன, துர்பாக்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்து துயறுற்றாள்.

அவனோடு மனமொன்றி வாழக் கிடைத்தது மூன்று ஆண்டுகள் மட்டும் தான். அந்த இனிய அனுபவங்களை சுவையான கனவுகளாக, இரை மீட்டிப் பார்ப்பதில் பல பொழுதுகளில் உள்மனம் உவகையில் நீந்தியிருக்கிறது.

“அவரு… ஹயாத்தோட… இருந்தீந்தா, எனக்கு இந்த அநியாயம் நடந்திக்குமா?” இதயத்தை ஊடுருவிய சோகப் பெருமூச்சு, காற்றுடன் கைகுலுக்கிக் கலந்தது.

சீ…. இந்தப் பணக்காரங்களுக்கு… கல்பு எண்டு, ஒண்டு இல்லையா? இந்த முழு ஊரும், என்னைப் பத்தி எதையும் சொல்லட்டும். இந்த ஜௌபர் முதலாளிக்கு ஏண்ட மனசப் பத்தி தெரியாவா? ஆத்துத் தண்ணியா, சுத்தமா ஈந்த. ஏண்ட வாழ்க்கையை, நாசமாக்கின பாவி…!”

அவள் ஆகாயத்தை வெறித்தவாறு, பலம் கொண்ட மட்டும், கிறுக் கென்று பற்களை நெரித்தாள். பழைய சம்பவங் கள் ஒவ்வொன்றும் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்தி வலித்தன. வாழ்வின் பற்றுக் கோடாக இருந்த கணவனைப் பிரிந்ததின்பின்…

பிஞ்சுகள் இரண்டையும் வாழவைக்க, வசதி படைத்த வீட்டு அடுக்களைகளில், அவளும் எரியும் நெருப்பாக உழைத் தாள். அவளது எடுப்பான உடலை, ரகசிய விருந்தாக்கிக் களிக்க, பச்சை – சிகப்பு, நோட்டுக்கள் நேசக் கரம் நீட்டின. அந்த அசட்டுத்தனங்களைக் கண்டு சர்ப்பமாகச் சீறினாள்.

சீரழிந்து வாழ்வதை விட, பட்டினி கிடந்து சாவது மேல், என்றெண்ணி, வேலைக்கு முற்றுப் புள்ளி போட்டு விட்டு, வீட்டோடு முடங்கிக் கிடந்தாள்.

அடுப்பெரிய மறுத்த அந்த மூன்று குடிசை ஜீவன்களின் அடிவயிற்றில் பசிநெருப்பு மட்டும் தாராளமாய் எரிந்தது.

அந்தத் துயரமான நாட்களில்தான், ஒரு நாள் ஜெய்னம்பு கிழவி வந்து ஆறுதல் சொன்னாள். கிழவி அவ்வப்போது செய்த உதவிகளால் வயிறுகள், ஆசுவதம் கொண்டன. இந்த உதவிகள் இடைவெளியின்றி நீண்ட போது, இதில் வேறு உள்நோக்கம் ஏதும்… இருக்குமோ, என்ற சந்தேகம் பரீதாவின் உள்ளத்தை வாட்டியது. இதைப் பற்றி ஜெய்னம்புக் கிழவியே, சாடையாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

“ஜௌபர் மத்திட்சத்திற்கு அல்லா… இன்னும் மிச்சம் மிச்சமா கொடுக்கோனும் புள்ள! ஊரில், மிச்சம் பேருக்கு நல்லா ஒதவி செய்யுறாரு. ஒண்ட கஷ்ட்டங்களை, சொல்லுற நேரமெல்லாம், ஓடி வந்து ஒதவுறார். ஒனக்கு என்ன வேண மெண்டாலும் கேட்கட்டாம். அவரு செய்வாராம். மிச்சம் நல்ல சாலிஹான மனிதன் புள்ள. ஒரு நாளைக்கு இந்த வூட்டுப் பக்கம் வரோனும், எண்டு சொன்னாரு!”

அவள் திடுக்குற்றாள்! ஜௌபர் முதலாளியின், தாராள மனதின் தாற்பாரியத்தில், ஏதோ ஒரு சூட்சுமம் கலந்த, சுயநலம் இருப்பதாக, அவளது உள்மனதில் உறைத்தது.

“ஆச்சி இனி அவருகிட்ட எந்த உதவியும் கேட்காதீங்க. பணக்காரங்களுக்கு, ஏழைக மேல, புரியம் வாரதுக்கு, பெரிய காரணமொண்டு இருக்க வோணும். கேவலமா வாழுறதப் பாக்க, மௌத்தாப் போறது மேல்!”

அவளது உறுதிகலந்த வார்த்தைகளால் வருத்தம் அடைந்த கிழவி,

“இருக்கிறவங்க கிட்ட இல்லாத வங்கள், வாங்கிறது குத்தமில்லை புள்ள. அதுவும் போவ, ஏழையா பொறந் திட்டா, எல்லாத்துக்கும் பணிஞ்சி போவனும். நீ சின்ன வயசு. ஒண்ட உம்மாவப்போல, நான் இத சொல்றன். இனி ஒண்ட இஷ்டம்!”

இந்தச் சம்பவத்தின்பின் கிழவி அடிக்கடி வருவதைத் தவிர்த்துக் கொண்டாள். அடுத்தாற்போல் அவளது வைராக்கி யத்தை குலைக்கும், துர்பாக்கிய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. ஐந்து வயது மகன், போலியோ நோயினால் அவதியுற்றான். அரசாங்க இலவச வைத்தியம் பயன் தராமல் போக, சோகக் குரல் கொடுத்தவாறு அவன், பாயோடு சங்கமமானான். உதவிகள் புரிய யாருமற்ற நிலையில், பிள்ளையைக் கரை சேர்க்க வழிதெரியாது பரீதா, தவிக்கையில் மீண்டும் வந்தாள் கிழவி. தெம்பான வார்த்தைகளோடு.

உதவிக்கு மீண்டும் கிழவியை நாடுவதைத் தவிர வேறு வழி அவளுக்குத் தெரியவில்லை. ஜௌபர் மத்திட்சத்தின் தாராள மனமும் பண உதவியும், மகனை ஆரோக்கியமுறச் செய்தது. மகன் அங்கவீனமின்றி பிழைத்துக் கொண்டதில் அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி, கைமாறு கருதாமல் செய்து வரும் இந்த உதவிகளால், அவரைப் பற்றிய ஒரு உயர்வான அபிப்பிராயம் அவள் மனதில் பரவியது. அந்த எண்ணம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்தச் சம்பவம் நிதர்சன மாக்கியது.

ஒரு அர்த்த ராத்திரியில், எந்த முன் அறிவித்தலுமின்றி அவரது பிரவேசம், மிக எதேச்சையாக அந்த குடிசைக்குள் நிகழ்ந்தது. ஒரு அந்தரங்க சக்தியுள்ள ஆத்மாவாகப் பாவனை காட்டி, அவளது இருண்ட வாழ்வை அகற்றி ஒளியேற்றப் போவதாகவும் இறுதி வரை அவளுக்குத் துணையிருப்பதாக வும், சத்தியம் செய்து நின்றார். ப

ஐவேளை இறைவனைத் தொழும் அன்பராக, ஊர் பிரச்ச னைகளில் நியாயம் காக்கும் நல்லவரான இவரை, ஏன் நம்பக்கூடாது? என்ற கேள்வி, அவளுள் எழுந்தது. une

குடிசையில் நிலவிய இருளினூடே அவரை ஆதரவாகப் பார்த்தாள் பரீதா. பளிச்செனத் துவங்கும் அவரது மூமின்தனம் முகத்தில் பளிச்சிட்டது. பொய் முகம் தரிக்காத யதார்த்த வாதியாய், தன்னை நிலைநாட்ட வார்த்தைகளில் வாஞ்சை கலந்து, அர்ச்சனை செய்தார் ஜௌபர் முதலாளி.

கணப் பொழுதின், மாய உணர்வுகளில் மனம் பேதலித்து, சலனமுற்றுச் சரியும், பெண்மை பலவீனம். அதை மிகச் சூட்சமாக வென்று களித்து திருப்தியுற்று, ஆயாசத்தோடு வீடு திரும்பினார் அவர். வைராக்கியமும், உறுதியும், செய்நன்றி யில் கரைந்து போவதை தடுத்திட முடியாமல் உள்ளம் விசனப்பட்டு, ஒரு அசட்டுத் துணிவின் மையத்தில் நிலைத்து, அவரது ஆசைக்கு இணங்கினாள்.

அவரது அதி விருப்பதிற்குரிய ஆசை நாயகியாய் ஊர் அறியாமல் இதுகாறும் வாழ்ந்து வந்தாள். நினைக்க நினைக்க அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது. போன கிழமை வரை இந்த உறவில் எந்த விரிசலும் விழாமல், அன்னியோன்யமாக விருந்ததே!

இது எப்படிச் சாத்தியமாயிற்று? இப்படி அசுரத்தனமாக அவர் தன்னைப் பழி வாங்கக் காரணம் என்ன? இந்த ரகஸியம் ஊர் அறிவதற்கு முன் தனது பெரிய மனித அந்தஸ்தைக் காப்பாற்றும் முயற்சியோ?

அப்படி ஏதும் பிரச்சனையெண்டா, ஒங்கள சத்தியாம நிக்காஹ் செய்வேன் பரீதா!’ அன்று அவர் உணர்ச்சி வசப்பட் டுச் சொன்ன வார்த்தைகளை எண்ணி இப்போது விரக்தியாய் சிரித்தாள்.

அன்றைய அசருத் தொழுகை, வழக்கம் போல் முடிந்து விட்ட போதும், ஒரு அசாதாரண பரபரப்பு ஊர் ஜமாஅத்தார் முகங்களில் பிரதிபலித்தன. கம்பீரமான முகப்புத் தோற்றத்தில் அந்தப் பள்ளிவாசல் பளிச்சிட்டது. அதன் அருகே

நெடிதுயர்ந்து கிளைபரப்பி நிழல் சொரியும், நூற்றாண்டு கால, பெரிய கோங்கா மரம். இருபுறமும் பச்சையாய் சிரிக்கும் வேலிச் செடிகள். சிரிக்கும் செம்மண் பாதையும், உயர வளர்ந்த தென்னை – பாக்கு மரங்களும், அந்தக் கிராமத்தின் தனித்துவம் கலந்த காட்சிப் படலங்கள். கோங்கா மரத்தடியில் நீண்ட காலமாக, ஆழ்ந்து சயனம் செய்யும் அவுலியாக்களின் சியாரமும், புதுமெருக்கோடு பள்ளிவாசலை முறைத்து நின்றது.

அல்லாவை நினைக்க மறந்து, அவுலியாக்கள்பால் அதீத நம்பிக்கை வைத்து, காணிக்கை – நீயத்து – பாத்திஹால என்று சடங்கு செய்து, காசையும் – மனதையும் – கெடுத்துக் கொண்ட சில குருட்டு நம்பிக்கையாளர்களும், தினம் வந்து யாசிப்பார்கள்.

‘தொழுகை முடிந்ததும், முக்கியமான விசாரணை ஒண்டு இருக்கிறபடியால, ஊர் மக்கள் கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போகவும்!’ பெரியார் ஒருவரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஊரவர் ஆர்வத்தோடு மதரஸாவை முற்றுகையிட்டனர்.

அல்லாஹ்வின் நெருக்கமான அன்பர்களாகி விட்ட பல ரும், பள்ளிப் பக்கமே தலை வைத்துப் படுத்தறியாத இன்னும் சிலரும், வாழ்வின் வசந்தங்களை, நேர், குறுக்கு வழிகளில், அனுபவித்துத் தீர்த்து, சுயஞானக் குளியலில், வெறுப்புற்று, கரையொதுங்கி… தாடி, தொப்பி, சகிதமாய், போகும் இடத் திற்கான, புனிதம் சேகரிக்கும், வயது போனவர்களும், இன்னும்….

வேலைப்பாகையாலே 1 தீனுடைய வேலைக்காய் தியாகம் செய்ய புறப்பட்டவர்க ளும், தீன் உடைய போராட்டத்தில் தீ-னை மறந்தவர்களும் இன்று ஆவலோடு ஒன்றிணைந்து கூடியதின், தாற்பரியம் தான் என்ன? மதமும் – மத-மும், கலந்த, இந்தச் சுவையான வழக்கின் விசாரணைப் பெறுபேறுகளை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலேயன்றி வேறொன்றுமில்லை. ல 5 ஊரின் வாய்க்கு எதையாவது மென்றுதான் பழக்கம். அதிலும் இந்த அரிசி விலைக் காலத்தில் அவல் கிடைக்கிற தென்றால், எந்த வாய் சும்மாகிடக்கும்? –

“சின்னப் பொடியங்கள் எல்லாம் ஓடுங்கடா! இஞ்ச பணியாரத்தைப் பார்க்க வார!”

மிக மட்டமான வார்த்தைகளால் சிறுவர்களைக் கலைத்தான் ஊர் சண்டியனான, மீசை அகமது. நடக்கின்ற சம்வங்களை வீட்டுக் கொல்லையிலிருந்து வேவு பார்த்தன முகங்கள்.

பிரதான தர்ம கர்த்தா, கம்பீரமான குரலில் குற்றஓலை வாசித்தார். ‘நமது ஊரைச் சேர்ந்த பரீதா என்ற மேற்படிப் பெண், பல ஆண்களோடு, தகாத உறவுவைத்துள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண் பெண், அல்லாஹ்வின் சாபத்திற்கு உட்பட்டவர்கள். அவர்கள் மீது கருணை காட்டாது மார்க்கத் தண்டனை நிறைவேற்றுங்கள், என்பது நபிகளார் வாக்கு. குற்றத்தை ஒப்புக் கொண்டால், ஹத் அடித்து (மார்க்கதண்டனை) பின் மன்னிப்பு வழங்குவோம்.

குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்தால், ஊர் ஜமா அத்திலி ருந்து ஒதுக்கி விடுவோம். இதுதான் எமது நிர்வாகச் சபையின் தீர்ப்பு! தீர்ப்பை வழங்கிவிட்டு, நீதிபதியின் தோரணையில் சபையை நோட்டம் விட்டார், பிரதான மத்திட்சம் ஜௌபர் முதலாளி.

‘பரீதா! இந்தக் கேவலமான காரியத்தில் ஈடுபட்டது உண்மையென்டா, சபையில் எல்லாத்தையும் சொல்லிவிடு!’ ஒன்றமே அறியாத உத்தமரைப் போல், வார்த்தைகளை உதிர்த்து விட்டு, மீண்டும் சபையை வெறித்தார் அவர்.

அவளது ஆன்மா அவமானத்தால் துவண்டது. ஆசூயை யான பார்வை வீச்சுக்கள் மேனியைத் துளைத்தன. வியர்த்துச் சோர்ந்து நின்றிருந்த அவள், கலங்கிய கண்களால் ஜௌபர் முதலாளியை, ஏறிட்டுப் பார்த்தாள்.

பளிச்சென்று பிரகாசிக்கும், வெள்ளைத் தொப்பி. தொழுது தழும்பேறிய அகன்ற நெற்றி. சலவையில் ஜொலித்த, வெள்ளை உடை. அடர்த்தியாக வளர்ந்திருந்த வெள்ளைத் தாடிக்குள் சிரிக்கும் கருமை மயிர்கள். வயதோ ஐம்பது – தோற்றமோ நாற்பது. மனைவியை இழந்தும், தாம்பத்திய இனிமைகளை இழக்க விரும்பாத, இறுகிப் பெருத்த உடல்.

அந்தப் பெரிய மனித தோற்றத்திற்குள், மறைந்து கிடந்த சின்னத்தனங்கள், எல்லாம் அவளுக்கு அன்னியமானவை அல்ல. ஒரு அமானுஷ்யத்தை வெறுக்கும், அசூயை அவளது பார்வையில் கலந்திருந்தது.

கணங்கள் மௌனத்தில் கரைய…

‘நேரங் கடந்து கொண்டு போவது! எங்களுக்கு வேற அலுவல்கள் இருக்கு, உண்டுமா? இல்லையா? பதில் சொல்லு!’ மிகக் கண்டிப்பான குரலில் கணை தொடுத்தார் பிரதான மத்திட்சம். ஆத்திரமும், அவமானமும் பிடரி நரம்பை உலுப்ப, அவளது உள்ளுணர்வுகளில், அக்னி தகித்தது.

“நான்… ஒரு நாளும் தவறா நடக்கல்ல! என்னை நம்புங்கோ !” அவள் மிக உறுதியாக மறுத்திட பெரியவர், ஒருவர், விரைந்து சென்று, குர்ஆனைக் கையில் எடுத்தார். நீ சொல்றது உண்மையென்று, குர்ஆனில் சத்தியம் செய்!’ அவள் மிக நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தாள்.

“அல்லாஹ் மீதும், இந்தக் குர்ஆன் மீதும் சத்தியமாக, என் கணவன் மௌத்தாப் போன பொறகு, எனக்கு ஒரே ஒரு ஆணோட மட்டுந்தான் தொடர்பிருந்தது. அவர் என்னை நிக்காஹ் செய்வதாக ஏமாற்றி, காலம் கடத்தினார். அவர் வேறு யாருமில்லை ! இந்த ஜௌபர் முதலாளிதான்!” பெண் சிறுத் தையாகச் சீறிச் சிலிர்த்தாள் அவள். கூட்டத்தில் ஆச்சரியமும் பரபரப்பும் அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று. கலக்கமும் தடுமாற்றமும் அடைந்த ஜௌபர் முதலாளி இது பொய்! நம்ப வேண்டாம்!’ என்று கரகரத்த குரலில் கத்தினார். கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு!

‘அப்படியெண்டா நீங்களும் மத்திசம், குர்ஆனில சத்தியம் செஞ்சி காட்டுங்கோ!’

நாலா திசைகளிலிருந்தும் வேண்டுகோள்கள் மதரஸா மண்டபத்தை நிறைத்தன. மெல்லவும், முடியாமல், விழுங்க வும் முடியாமல் மௌனித்து நின்றார் ஜௌபர் முதலாளி. ஊர்த் தலைவருக்கு, எதிராக பலத்த கூக்குரல்கள் உரத்த தொனியில் வெடித்துச் சிதறின.

– 3-1.1968 – வீரகேசரி – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)