அது தனக்கு மட்டுமே சொந்தமான குளம்தானாவென்கிற சந்தேகம் வரத் தொடங்கிய நாளிலிருந்து, இவன் குளத்தில் இறங்கி மூழ்குவதைத் தவிர்த்துக் கரையில் நின்றவாறே, யார் யாரெல்லாம் இறங்குகிறார்களென கண்காணிக்கத் தொடங்கியிருந்தான். இவன் நிற்கும்வரை யாருடைய நிழலின் பிரதியும் கரைகளில் விழாதிருக்க, சலனமற்ற நீரில் விரிந்திருக்கும் மவுனத்தைக் கவனித்தவாறே, கடை மூடுவதற்குள் போக வேண்டுமென விரைவாய் நடந்தபடி இருப்பான். இப்போதெல்லாம் கண்களின் சிவப்பு மாறாத வண்ணம் தாக வெறியுடன் மீண்டும் மீண்டும் கடைக்குச் செல்பவன் திரும்பிவரும்போது தெரு முழுவதும் குளத்தின் மீதான கோபத்தில் வழியும் சொற்களை தள்ளாட்டத்துடன் இரைத்தபடியிருப்பான்.
தான் செல்வதற்குள் யாரேனும் குளத்தில் இறங்கிவிடக்கூடும் என்கிற அச்சத்திலும் அப்படி இறங்கியிருந்தால் கரையேறுவதற்குள் அவனைப் பாய்ந்து பிடிக்க வேண்டுமென்கிற ஆவேசமுமாக நடையின் மீது மனத்தின் சாட்டையைச் சொடுக்குபவன், இந்தத் தடவை நிச்சயம் எவனும் தப்பவியலாது எனும் உறுதிப்பாட்டோடுதான் திரும்புகிறான், ஒவ்வொரு முறையும்.ஆனால், கரையோரம் அப்போதுதான் யாரோ முங்கி எழுந்ததற்கான அடையாளமாய் நீர்க்கோடுகளால் ஆன சிறுவட்டம் ஒன்று மிதந்தபடி அசைந்து கொண்டிருப்பதும், படிகளில் பதிந்திருக்கும் ஈரக் காலடிச் சுவடுகளும் மட்டுமே இவன் பார்வைக்குத் தேங்கிக் கிடந்திருக்கின்றன. எவ்வளவு சீக்கிரமாகத் திரும்பினாலும் தடயங்கள் மட்டுமே கிடைப்பதும் குளித்தவர்கள் மாயமாய் மறைந்து விடுவதும் நிச்சயமான ஒன்றாகவிருந்தது.
எப்போதெனும் கரைகளின் ஓரம் மண்டிக்கிடக்கும் புல்வெளிகளில் சிலர் வரிசையாய் குத்துக்காலிட்டு அமர்ந்து நீண்ட குச்சியிலிருக்கும் தூடிலை நீருக்குள் வீசியவாறு தக்கைகள் அசைகிறதாவெனப் பார்த்தபடி இருப்பார்கள். இவன் வருகையின் சமிக்ஞையை உணரும் தருணத்தில் குச்சிகளைக் கீழே போட்டுவிட்டு சிதறலாய்த் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். அதில் கருப்பாகவும் குள்ளமாகவும் ஓடியவனை மட்டும் எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தது.
சில கணங்களில் இவன் குளத்தை நெருங்கும்போது எதிர்க்கரையின் படிகளில் யாரோ ஏறிச்செல்லும் சித்திரம் தெளிவின்றி புலப்படும். யாரென்று அறிந்து கொள்ளும் உந்துதலில் முக விகாசத்துடன் கரையின்மீது பாய்ந்தோடத் தொடங்குபவன், குளத்தின் பக்கவாட்டுக்கரையில் திரும்பும் முன்பாகவே, எதிர்த்திசையில் ஆளற்ற வெற்றிடம் மட்டுமே இருப்பதை உணருவான். திரும்பிவிட மனமில்லாது வேகத்தை மட்டுப்படுத்தியவனாக குளத்தைச் சுற்றியபடி செல்பவனுக்கு சில பாத அடையாளங்களும் காற்றில் மிதந்து கொண்டிருக்கும் வாசனைகளும் மட்டுமே எஞ்சியிருக்கும். வந்தவன் யாரென்கிற தவிப்பும் மீண்டும் அவன் எப்போது வரக்கூடும் என்கிற கேள்வியுமாக நீண்டிருக்கும் தார்ச்சாலையை வெறித்தபடி இருப்பான். சூரியக்கதவு அடைபடும் வேளையில் அச்சாலையிலிருந்து யாரேனும் முளைத்து இங்கே வந்து விடுவார்களோவென்கிற அச்சத்தில் சிசர்ஸ் ஃபில்டரில் நீண்டிருந்த சாம்பல் உருளையைக் கூட ஆட்காட்டி விரலால் தட்ட மறந்தவாறு நின்றிருப்பவனுக்கு, குளாத்தின் மீதான வன்மம் பெருக, ஆவேசமாய் அதனைத் திரும்பிப் பார்ப்பான்.
பகல் முழுவதும் உடலில் சூரியத் தகிப்பை உள்வாங்கிக் கொள்வதால் ஏற்படும் உடலின் வெப்பத்தைத் தணிக்க மாலை நேரங்களில் யாரேனும் குளிக்க வரமாட்டார்களாவெனவும் அவர்களின் மீது தம் வெப்பத்தைக் கடத்தி தாம் குளிர்ந்திடலாமென்றும் தன் உடம்பை முறுக்கலித்துக் காத்திருக்கும் குளம் ஆட்கள் வரும் வேளையில் எல்லாம் குதூகலித்துப் பொங்குவதையும் பிறகு எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு புத்தத்துறவியினைப்போல சாந்தமாய் இவனுக்குத் தோற்றமளிப்பதையும் தாங்கிக் கொள்ள இயலாதவனாக இவன் இருந்தான்.
இவன் இருக்குமிடத்திற்கு எதிர்த்திசையில் இருந்து விரிந்திருக்கும் நீர்ப்பரப்பில் உருண்டோடி வருகின்ற காற்று இவனை உரசிச்செல்கையில் தரும் குளுமையைக் காணும்போது, குளத்தின் மீதான அக்னி, தனது நாவுகளை நீட்டியவாறு நெளிந்து உயரும். வழக்கமாய் தான் நிற்கும் கரையில் இப்படிக் குளுமையான காற்று வீசுவதில்லையென்றும் எவனெவனோ வந்து போகும் எதிர்க்கரையில் மட்டும் வஞ்சகமாய் இப்படி வீசுவதாகவும் படியருகே இருக்கும் புளியமரத்திடம் முறையிட்டுக் கொண்டிருப்பவன், குளம் எப்போதும் கலங்கலாகவே இருக்கிறதென்றும் தெளிந்த நீரைப் பார்த்து நாட்கள் பலவாகி விட்டனவென்றும் சொல்லி முடிப்பான்.
இவன் இல்லாத நேரங்களில் ஒரு முதியவன் உட்பட யார் யாரோ வந்திருந்து நீரைக் கிழித்து உள்ளே பாய்வதான கதைகளை ஊரெங்கும் ஒவ்வொருவர் செவியிலும் சிலர் ஊற்றியபடியிருந்தார்கள். அதிலிருந்து உள்ளும் வெளியும் கசிந்து வடியும் வீச்சமனைத்தும் ஒன்றாய்த் திரண்டு இவன் நாசியைத் தாக்க தேடி வந்திருக்கின்றன. தொடக்கத்தில் காய்த்தல் உவத்தல் இன்றி துர்நாற்றம் சுமந்த சொற்களை நம்பமுடியாமல் மறுதலித்து முகம் திருப்பியிருக்கிறான். பிறகான நாட்களில் தன் கருத்தில் வழுவிழந்து மனதின் சமன் குலைந்து தவிக்க ஆரம்பித்தான்.
குளம்தான் வீச்சம் நிறைந்தது என்றால் இங்கு வருபவர்களும் தங்கள் பங்குக்கு கரைகளின் ஓரங்களிலும் சறுக்கல்களிலும் அவரவர் கழிவுகளை இறக்கி வைத்து விட்டுச் செல்பவர்களாக இருந்தனர்.அந்த அசிங்கங்ளைக் காணும்போதெல்லாம் இவனுக்கு ஓங்கரித்து வாயில் வருவது போலுணர்வதாகவும் துயரத்தில் திரும்பி வரயியலாத தேசமொன்றிற்கு ஓடிவிடலாம் எனத் தோன்றுவதாகவும் தேய்பிறை இரவுகளில் வானம் பார்த்து நா குழற உளறியபடி இருப்பான்.ஆனால் போகுமிடத்தில் தான் உரிமை கொண்டாட குளம் ஏதும் இருக்காது என்பதும் பாலையின் தனிமை தன்னைச் சூழ்ந்து பொசுக்கி விடுமென்பதாலும் அவ்வெண்ணெத்தைக் கைவிட்டு எந்தச் சுரணையும் இன்றி குளத்தின் கரைகளைச் சுற்றி வர ஆரம்பிப்பான்.
அவ்வப்போது, யாரையும் எவரையும் இக்குளம் ஏற்றுக் கொள்கிறதே என ஆத்திரம் கொண்டு, பசித்த மிருகமென குளத்தை நோக்கித் திரும்புபவன் முன்பாக உறைநிலையில் அசைவின்றி கிடக்கும் குளத்தின் மோனத்தவம் கண்ணில் படும். தன்னால் எதையும் சரி செய்ய இயலாதென்கிற பேருண்மையை உணர்ந்து மிகுந்த தாழ்வுணர்ச்சியுடன், எமனின் தூதுவர்கள் கூடிய விரைவில் தன்னைத் தேடி வர வேண்டுமென, அவ்வேளைகளில் அவன் பிரார்த்திப்பான். யாவரும் பரிகசிக்கும் தன்னிலையை மாற்றிட அதைத் தவிர வேறு வழி ஏதுமில்லையென்றும் தனக்குத் தானே சொல்லிக் கொள்பவனாகவும் அவன் இருந்தான்.
சில நாட்களுக்குப் பின்பாக அவன் இயல்புகள் பெரிதும் மாறத் துவங்கியிருந்தன. குளத்தில் மூழ்கி எழுந்தவர்களின் கை கால்களில் வெங்காயத் தாமரையின் வேர்ப்பின்னல்கள் கயிறாய் இறுக்கி விலங்கிட்டு சுவாசக்காற்றை சிறைப்படுத்துவதாகவும் குளத்தின் நீரெங்கும் மனிதர்களின் வரவைத் தேடி நெளியும் சர்ப்பங்கள் அதிலிறங்குபவர்களின் தேகங்களில் நீலம் பாயச் செய்வதாகவும் படிகளில் படுத்திருக்கும் மிருகத்தன்மையுடன் கூடிய பாசிகளில் தவறுதலாய் பாதம் வைத்தவர்களின் எலும்புகள் இடம் பெயர்ந்து இருப்பதாகவும் கற்பனைகள் செய்யத் துவங்கினான்.
நீரை வற்றச் செய்து காய்ந்து வரண்ட வெடிப்புத் தரையில் கால்களை ஓங்கி மிதித்தவாறு கர்வத்துடன் நடந்து எதிர்ப்படியில் ஏறவேண்டுமென்றும் படிக்கட்டுகளை இடித்துப் பெயர்த்து மூளியாக்கிச் சிதைக்க வேண்டுமென்றும் கரைகளை உடைத்து அம்மண்ணால் குளத்தை மூடித் தூர்ந்து போகச் செய்ய வேண்டுமென்றும் இன்கொரு குளம் இருந்ததற்கானத் தடயங்கள் இல்லாமல் செய்ய வேண்டுமெனவும் பெருவிருப்பம் கொண்டான். அதன் பிறகு தனக்கொரு துர்மரணம் நேர்ந்தால் கூட நிம்மதியாய் உணர்வோம் என்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இவனது எண்ணங்கள் வீரியமிழந்து தோலுரிந்து சூம்பத் தொடங்கிட, உடம்பின் கசகசப்பும் வெக்கையுமாய்ச் சேர்ந்து ஏதோவொரு மிக நுண்ணிய தருணத்தில், ஒரே ஒரு முறை குளத்தில் மூழ்கி எழவேண்டும் என்கிற பச்சையத்தைத் தன்னெழுச்சியாய் இவனுக்குள் உருவாக்கி விட்டிருந்தன.
விரோதம் மறந்து குளத்தில் எப்படி இறங்குவதென அவ்வாரம் முழுவதும் யோசித்தபடியே இருந்தவன், பலமுறை குளக்கரையின் முதல் படியின் விளிம்பில் கால் வைப்பதும் எடுப்பதுமாக தத்தளித்தபடி இருந்தான். அடுத்த வாரத்தின் முதல் நாளில், பறவைகள் கூடு திரும்பும் வேளையில், தனக்குச் சொந்தமான குளத்தில் யார் யாரோ மூழ்கிக் கிடக்க, அதிலிறங்க தனக்கு உரிமையில்லையாவெனத் தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன், தடதடவெனப் படிகளில் கீழிறங்கி உடைகளைக் களையத் தொடங்கினான். வலது பாதம் நீரைத் தீண்டியவுடன் அதன் சில்லிப்பு தேகமெங்கும் பரவிட முதல் தொடுதலிலேயே தனதுடம்பின் வெறுப்பெல்லாம் உறிஞ்சப்பட்டு மனத்தின் கொதிநிலை ஆறத் தொடங்குவதை உணர்ந்தான்.
குளத்தின் நீர் எந்த வஞ்சகமுமின்றி இத்தனை நாளாய் ஏன் அவன் வரவில்லை என்கிறக் கேள்வியேதுமின்றி ஆவலோடு இவனை தன்னுள் இழுத்து பொதிந்து கண்டதைப் பார்த்து, காலத்தை வீணடித்து விட்டோமே என்பதான வருத்தமும், குளத்தின் மீதான பிரியமும் இவனுள் சுனையாக ஊறியபடியே இருந்தது. மெய்மறந்த கணமொன்றில் நீரின் காதோரம் தனது பிதற்றலை உளரத் துவங்கியவன் இனி எக்காலத்திலும் அதன் மீது கோபப்பட மாட்டேன் என்பதாக தனது சத்தியத்தைத் திரும்ப திரும்பப் புலம்பியபடி இருந்தான்.
மகிழ்ச்சியின் ஆர்ப்பர்ப்பில் பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கியது நீர். நாசிவரை மூழ்கி நீரின் பரப்பில் கண்வைத்துப் பார்வையைத் தூர வீசியபோது நீண்ட கடற்பரப்பைப் போல விரிந்திருக்கும் குளத்தைப் பார்த்தவன் எத்தனை பேர் வந்தாலும் தன் மடியில் ஏந்திக்கொள்ளக்கூடிய அதன் பிரமாண்டத்தை முதன்முதால்ய் உணர்ந்தான். அதன்முன் தானொரு துரும்பெனவும் இத்தனை பெரிய குளத்தைத் தனக்கானது என்று எண்ணியது எத்தனை பெரிய அபத்தமெனவும் எண்ணிக் கொண்டவன் உள்ளுக்குள் சிரித்தபடிக்கு மீண்டும் நீருக்குள் மூழ்கினான்.
– ஜனவரி 25th, 2012