ஆறுச்சாமி அன்றுதான் கடைவீதியில் அந்த பெண்ணை பார்த்தார், எங்கோ பார்த்த முகமாய் இருக்கிறது. எங்கு பார்த்தோம் என்றுதான் நினைவில் இல்லை. சற்று மூளையை கசக்கி பார்த்தார்.
அந்த பெண் பழைய வாயில் சேலை கட்டியிருந்தாள். ரோட்டோரமாய் தள்ளு வண்டி ஒன்றில் சிறிய ஸ்டவ் அடுப்பில் இட்லி சட்டியை வைத்து வேக வைத்து கொண்டிருந்தாள். பக்கத்தில் இரண்டு மூன்று வாளிகளில் சட்னி, சாம்பார் என்று வாழை இலையால் மூடப்பட்டிருந்தது. அருகில் ஒரு குடம் தண்ணீரும் இருந்த்து. அதில் ஒரு தட்டு வைத்து டம்ளரையும் கவிழித்து வைத்திருந்தாள். பாக்கு மட்டை தட்டுக்கள் அருகில் அடுக்கியும் வைக்கப்பட்டிருந்தது.
ஆறுச்சாமிக்கு நல்ல பசி, ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. ஓட்டலுக்கு போய் சாப்பிடும் எண்ணம் அவருக்கு வரவில்லை. சரி இந்த பெண்ணிடம் சென்று சாப்பிடலாம், முடிவு செய்தவர் அருகில் சென்று அம்மா நாலு இட்லி வச்சு கொடு, அதிகாரமாய் கேட்டார்.
அவரின் அதிகாரமான கேள்விக்கு அந்த பெண் மிரண்டாள், அவரை சற்று உற்று பார்த்து ஐயா..இப்பத்தான் கடை போட்டிருக்கேன் முத போணியே ஆகலை, பயந்து சொன்னாள்.
காசு கொடுத்துதாம்மா கேக்கறேன், சட்டென தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அவள் முன்னாள் வைத்தார். அந்த பெண்ணின் முகம் சற்று பிரகாசமானது. மடமடெவன ஒரு பாத்திரத்தை திறந்து ஆவி பறக்கும் நான்கு இட்லிகளை பாக்கு மட்டையில் வைத்து அதில் சட்னி, சாம்பாரை ஊற்றி கொடுத்தாள்.
சுவையாகத்தான் இருக்கிறது, சாப்பிட்டபடியே நினைத்தார், இவர் சாப்பிட தொடங்கும்போதே மற்றும் இருவர் இவர் போல் நின்று கேட்கவும் அந்த பெண் முகம் பிரகாசமாக வந்தவர்களுக்கும் எடுத்து கொடுத்தாள்.
ஐயா, இன்னும் இரண்டு போடட்டுமா? வேண்டாம் தலையசைத்து மறுத்தவர் தட்டை, வண்டியின் அருகில் வைத்திருந்த குப்பை வாளியில் போட்டு ஓரமாய் சென்று கையை கழுவிக்கொண்டார்.
இந்தாங்க ஐயா மிச்சம், அந்த பெண் நான்கு ரூபாய் எடுத்து கொடுத்தாள். வேணாம்மா அது உங்கிட்டயே இருக்கட்டும், அடிக்கடி வருவேன், அப்ப சாப்பீட்டு கழிச்சுக்கறேன், சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்.
அவள் ஆச்சர்யமாக பார்த்தாள், இது என்ன இவர் அதிசயமான அதிகாரியாய் இருக்கிறார், யூனிபார்மில் இருந்தும் காசு கொடுத்து சாப்பிட்டு மிச்சம் வாங்காமல் போகிறாரே..
அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாலும் ஆறுச்சாமியின், மனம் சொல்லிக்கொண்டிருந்தது, நல்ல வேளை அந்த பொண்ணுக்கு என்னை ஞாபகமில்லை.
நான்கு மாதத்திற்கு முன்பு இதே போல் இவள் கணவன் இங்கிருந்தான், அவனிடம் சாப்பிட்டு காசு கொடுக்காமல் சென்றதற்கு அவரிடம் சண்டையிட்டான். மாலையில் அவனை அள்ளிக்கொண்டு போய்… அப்பொழுது அவனை விட்டு விடும்படி இந்த பெண் மன்றாடி நின்றது ஞாபகம் வந்தது.
ஒரு நாள் முழுக்க அவனை கவனித்து வெளியே அனுப்பினோம்..அதற்கு பின்..அவன் என்னவானான் என்பது தெரியவில்லை..
இந்த பெண்ணை பார்த்தால் நெத்தியில பொட்டை காணோம், மஞ்சகயித்தையும் காணோம்…