கதையாசிரியர்:   கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 1,571 
 

ஜன்னலில் அவள் முகம் பதித்ததும் எதிரில் தெரிந்தது பூனை ஒன்று. தலை குனிந்து கீழே பார்த்த நிலையில் நின்றிருந்தது. பயந்து போயிருக்கிறதா இல்லை அங்கிருந்து குதிக்க தயாராகிறதா என்று தெரியவில்லை.

அடுத்து இந்த பூனை என்ன செய்ய போகிறது என்கிற ஆவல் அவளுக்கு இயல்பாய் வந்திருந்தது.

குதித்தால் என்ன ஆகும்? மனதுக்குள் கணக்கு போட்டாள். நாலாவது மாடி என்று சொன்னார்கள். அப்படியானால் பூனை நிற்குமிடத்துக்கும் தான் நிற்குமிடத்திற்கும் கண்களால் அளந்து பார்த்தாள்.

அந்த ஜன்னல் கணக்கு பார்த்தால் பூனை நிற்பது நாலாவது மாடிதான்.கீழே விழுந்தால் கண்டிப்பாய் கால் உடைந்து விடும். இல்லையென்றால் உயிரே போய்விடும் வாய்ப்பும் இருக்கிறது. அவளுக்கு அந்த பூனை குதிக்க கூடாது என்கிற ஆதங்கம் இருந்தது. ஆனால் பூனை நன்றாக காலை ஊன்றி தாவும் நிலையில் தயாராக இருந்தது.

இந்த நிலையில் பூனையை பார்க்க அவளுக்கு “வொயில்ட் அனிமல் லைப்” டிவியில் பார்த்த ஞாபகம் வந்தது. புலி வேட்டைக்கு காத்திருந்தது. அப்பொழுது மான் ஒன்று அந்த புல் வெளியில் குனிந்தவாறு ‘படக் படக்கென’ புல்லை பிடுங்கி எடுப்பது போல் மேய்ந்து கொண்டிருந்தது.

புலி தன் நான்கு கால்களையும் மடங்கிய நிலையில், ஏறக்குறைய படுத்த நிலையில் தலையை முன்புறம் நீட்டி மானின் அசைவுகளை நோட்டமிட்டது. மானின் கவனம் மேய்வதில் இருந்தது. இருந்தும் அவ்வப்போது தலையை தூக்கி அந்தப்புறம் இந்தப் புறம் பார்த்தது. மீண்டும் தலை குனிந்து மேய ஆரம்பித்தது.

புலி மெல்ல மெல்ல தன் உடலை படுத்தவாறே முன் நகர்த்திக்கொண்டு சென்றது. மேய்ந்து கொண்டிருந்த மான் புலியின் உருவத்தில் பாதியளவுதான்

இருக்கும். இருந்தும் புலி தான் வேட்டையாட போவது சிறியதாக இருந்தாலும் வேட்டையாடுவதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டது போல் இருந்தது.

அந்த புலியின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு அவளுடைய தோழி ‘சுலக்க்ஷனாவின்’ செயலை ஞாபகப்படுத்தியது. அவள் அப்படித்தான், மாநில அளவில் விளையாட்டு போட்டியில் நீள தாண்டுதலில் நீண்ட தூரம் தாண்டி “ஸ்டேட் பர்ஸ்ட்” வென்றிருக்கிறாள். குதிக்க போகும் முன் அவளது ஒவ்வொரு செய்கையும் புலி பதுங்குவது போலத்தான் இருக்கும். ஆனால் புலியை போல் நாங்கு கால்களையும் மடக்கி தலையை முன் நீட்ட மாட்டாள். இடது காலை முன் வைத்து சற்று முதுகை வளைத்துக்கொள்வாள். பின் கால் விறைப்பாய் வைத்து பின் மெல்ல தளர்த்திக் கொள்வாள். நடுவரின் உத்தரவுக்காக அவள் செவிகள் காத்திருக்கும். கண்கள் கூர்மையாக தாவப்போகும் இடத்தை பார்த்தபடி இருக்கும்.

நடுவரின் குரல் “கோ’ அவ்வளவுதான், நொடிப்பொழுதில் அவள் எல்லையை தாண்டி அந்த மணலில் குதித்திருப்பாள். வெற்றி எல்லையை தாண்டி விட்டோம் என்று தெரிந்தாலும், ஆரவார கூச்சல் போடமாட்டாள். அப்படியே குத்து காலிட்டு ஐந்து நிமிடம் கண்ணை மூடி உட்கார்ந்திருப்பாள். அவளை சுற்றி பாராட்டுபவர்கள் காத்திருப்பார்கள், அவள் எழட்டும் என்று.

பூனை இப்பொழுது எழுந்து நின்று விட்டது. சாவகாசமாய் சோம்பல் முறித்தது. கால்களுக்கு ஓய்வு தேவையோ என்னவோ, எழுந்து அந்த ஜன்னல் விளிம்பின் இந்த முனைக்கு வந்தது. அங்கிருந்து குனிந்து பார்த்தபடி இருந்தது.

பூனை எப்பொழுது குதிக்கப்போகிறது? இவளின் எதிர்பார்ப்பு அதிமாகியது. இருந்தாலும் பூனைக்கு ஒன்றுமாகி விடக்கூடாது என்றும் மனதுக்குள் வேண்டிக்கொண்டாள்.

மீண்டும் அவளுக்கு புலியின் ஞாபகம் வந்தது. முக்கால் அளவு படுத்தவாறு முழு உடம்பின் எடையையும் தன் முழங்காலில் வைத்தவாறு கொஞ்சமும் சல சலப்பு வராமல் அந்த முழங்கால அளவு புற்களின் அடர்த்தியில் தன்னை மறைத்தவாறு முன்னேறி முன்னேறி நகர்ந்தது.

இதற்கு யார் நடுவரோ தெரியாது, “கோ” என்று யார் சொல்லியிருப்பார்கள் என்றும் தெரியாது, கண்ணிமைக்கும் நேரம்தான், மானின் கதறலை, கேட்கவும், அதன் துடிப்பை பார்த்தவுடன் கண்ணை மூடிக் கொண்டாள்.

வகுப்பில் சாந்தினி டீச்சர் இப்படித்தான், புலி போலத்தான் பதுங்கி பதுங்கி வருவாள். நான்கைந்து பேர் வட்டமேசை மாநாடு போட ஆரம்பிப்பார்கள். வட்டமேசை என்றால் அவரவர் “டெஸ்கில்” உட்கார்ந்து கொள்வது. கொஞ்சம் தள்ளி இருப்பவர்கள் உட்கார்ந்திருப்பவர்கள் டெஸ்க் மீதேறி குதிரையின் மேல் உட்காருவது போல உட்கார்ந்து காலை அவர்கள் உட்காரும் இடத்திலே வைத்துக்கொள்வது.

சாந்தினி டீச்சர் இந்த புலியை போலத்தான், வகுப்புக்கு வரும்போது காலை குதி காலால் அழுத்தி வரமாட்டாள், முன் விரல்களை தரையில் பதித்துத்தான் வருவாள். அதனால் தரையில் அவள் நடந்து வரும் சத்தம் கேட்காது. அவள் முதுகும் வளைந்தவாறு இருக்கும். அந்த கண்ணாடியில் தெரியும் அவள் கண்கள் இரையை தேடும் புலி போலத்தான் இருக்கும்.

இதனால் இவர்கள் அரட்டை கச்சேரியை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் இவள் நடந்து வருவது தெரியாது.

சடாரென யாருடைய பிடறியயையாவது பிடித்த பின்னால்தான் வசமாக இவளிடம் மாட்டிக்கொண்டோம் என்பது புரியும். பிடித்தவுடன் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும், கட்டாயம் இதை எதிர்பார்ப்பாள். சாரி மிஸ், சாரி மிஸ் கோரசாய் இவர்கள் சொன்னாலும் பிடறியை பிடித்த பிடியை விடாமல்

அனைவரையும் எழுப்பி தான் உட்கார்ந்திருக்கும் நாற்காலிக்கு முன்னால் கொண்டு வந்து நிற்க வைப்பாள்.

பத்து நிமிடம் அர்ச்சனை நடக்கும். இவர்கள் டீச்சரை சுற்றி வளைத்து நின்று மறைத்து கொள்வதால் எதிரில் உட்கார்ந்திருக்கும் மற்ற மாணவிகள் பக்கத்து டெஸ்கிலிருப்பவர்களிடம் சாவகாசமாய் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அர்ச்சனை முடியும்போதுதான் அவளுக்கு உறைக்கும் இதை சாக்கிட்டு மற்ற மாணவிகள் சள சளவென்று பேசிக்கொண்டிருந்ததை.

எல்லோரும் உங்க சீட்டுக்கு போங்க, கடைசியில் உத்தரவாய் இட்டுவிட்டு மற்ற மாணவிகளை பார்த்து “கீப் சைலன்ஸ்” உரக்க கத்துவாள்.

அப்படியே வகுப்பு அமைதியாகிவிடும். ஆனால் பாவம் இவர்கள் சல சலவென்று பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக பிரின்ஸ்பால் எட்டி பார்த்து விட்டு சென்றதை இவள் கண்டிருக்க மாட்டாள். இவள்தான் இவர்களுக்கு மண்டகப்படி அர்ச்சனை நடத்தி கொண்டிருந்தாளே.

மாலை அவளுக்கு பிரின்ஸ்பாலிடம் நடக்கும் அர்ச்சனையில், அவள் முகம் சிவந்து வெளியே வரும்போது இவர்களுக்கு பாவமாக இருக்கும். அவளை பொருத்தவரை இவர்களை பிடிக்கவேண்டும் என்று மட்டும் நினைத்தாள். அதை எவ்வளவு சொன்னாலும் பிரின்ஸ்பால் ஒத்துக்கொள்ளமாட்டாள். இருக்கட்டும் மிஸ் அவங்களுக்கு உடனே ‘பனிஸ்மெண்ட்’ கொடுத்துட்டு கிளாசை கவனிக்கலாமில்லையா? எதுக்கு அவங்களை உங்களை சுத்தி நிக்க வச்சுகிட்டு..!

சாந்தினி டீச்சர் பாவம்தான். இவர்களுக்கு அவள் மேல் பரிதாபமாய் வந்தாலும், மறு நாளும் அவள் இதையேதான் தொடர்ந்து செய்வாள். ஒரு வேளை இது இவளின் பிறவி பழக்கமோ..!

இந்த பிறவி பழக்கம் வந்துவிட்டால் மிகுந்த சிரமம்தான். நான் கூட காலை எட்டு மணிக்கு எழுந்து பழகி ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக் கிறோம், அதன் பின் எழுந்து குளித்து தயாராகி அம்மா சுடுதண்ணியை காலில் ஊற்றியது போல பறப்பாள்.

அப்பாடி… ஒரு வழியாக அவள் தன்னுடைய காரை கீழ் தளத்திலிருந்து எடுத்து ரோட்டில் நின்று ஹாரனை அழுத்துவாள். வீட்டை பூட்டி கால் மிதியடியின் கீழ் வைத்து மிதியடியை சந்தேகம் வராதவாறு வைத்து இவள் கீழே ஓடி வந்து காரில் ஏறியதும் ஒரு மூச்சு கத்துவாள், வர வர உனக்கு அறிவே கிடையாது. இப்படி தூங்கி பழகாதடி, பழகாதடின்னு, சொன்னா கேக்கறியா?

அவளின் அர்ச்சனை ‘ஸ்கூல் வாசலில்’ இறக்கி விடும் வரைதான், இறங்கி பை மம்மி கை ஆட்டியதும், உன் லஞ்ச் பேக்குல “ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன்” சாப்பிட மறந்துடாதே, அப்புறம் சுடு தண்ணி காய்ச்சி ஊத்தி வச்சிருக்கேன், வேற எங்கயும் தண்ணி குடிச்சுடாதே, புரியுதா? சாயங்காலம் நான் வர்றதுக்கு நேரமாச்சுன்னா நீ வீட்டுக்கு போயிடு. போய் டி.வியை போட்டுட்டு கண்டதை பாத்துட்டு இருக்காதே,புரிஞ்சுதா?

இவள் எல்லாவற்றிற்கும் தலையாட்டுவாள். பாவம் அம்மா, தனக்காக இவ்வளவு செய்திருக்கிறாள், என்று மனசு அவளுக்காக துவளும்.

பூனை இப்பொழுது தலையை மேலே தூக்கி பார்த்தது. ஜன்னலின் மேல் அமைந்திருந்த சிமிண்ட் தளத்தின் ஓரம் வரை வந்து மேலே பார்த்தது.

என்ன செய்யப் போகிறது இந்த பூனை? மேலே எதற்கு பார்த்து கொண்டிருக்கிறது. சுவற்றை ஒட்டி நின்றாலே காலெல்லாம் நடுங்கும், இதில் அதை விட மேலேற வழி பார்க்கிறதா?

அம்மாவின் ஞாபகம் வந்தது. அவளும் இப்படித்தான், காதல் கல்யாணம் என்று சொன்னாள். நான் முன்னேறருது அவருக்கு பிடிக்கலை, பிடிக்கலையின்னா என்ன “காம்ப்ளெக்ஸ்தான்” அதுக்காக தினம் தினம் சண்டை. நான் வேலை செய்யற கம்பெனி எனக்கு புரோமோசன் கொடுத்தா இவருக்கு ஆகாது,”பொம்பளைங்க உடம்பை காண்பிச்சா” இப்படி அசிங்கமா பேச ஆரம்பிச்சார்.

ஆரம்பத்துல சரியாயிடுவாருன்னுதான் நினைச்சேன், ஆனா சரிப்பட்டு வர்ற மாதிரி தெரியலை. பிரிஞ்சிடுவோம்னு சொன்னேன். என்ன நினைச்சாரோ உடனே சரி சொல்லிட்டார். உனக்கு மூணு வயசு, யோசிச்சு பாரு, உன்னைய கொண்டு போய் “கிரீச்சுல” விட்டுட்டு நான் வேலைக்கு போயிட்டு வந்து உன்னைய மறுபடி வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வந்து மறு நாள் காலையில எந்திரிச்சு.. இப்படித்தான் ஓடுச்சு. நீ ஓரளவுக்கு விவரம் தெரிஞ்ச பின்னாடி எனக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பு வந்துச்சு. அதனாலதான் உண்மையை நான் உங்கிட்ட சொல்லிட்டேன்.

அதற்கு பின்னாலும் அம்மா மேலேதான் பார்த்துக்கொண்டிருந்தாள் இந்த பூனையை போல. வாழ்க்கையில் இக்கட்டான நிலையிலும் அடுத்த ‘புரோமோசனை’ இரண்டு மூன்று வருசத்துக்குள் வாங்கியிருந்தாள்.

சடாரென இருட்டு சூழ ஆரம்பித்திருந்தது. ஜன்னலில் இருந்து பார்க்க இப்பொழுது எதிர் பிளாட், நிறம் மங்கி தெரிவது போல் இருந்தது. மணி என்ன இருக்கும்? தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

ஆறு அல்லது ஆறரை இருக்கலாம், அதற்குள் இவ்வளவு இருட்டு வருவதற்கு வாய்ப்பு இருக்காதே, மனதுக்குள் நினைக்க நினைக்க, சட சடவென சத்தத்துடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

ஐயையோ மழை வந்து விட்டதே, பூனை என்ன பண்ணும்? கவலையில் எதிர் வீட்டு ஜன்னல் மேல் தளத்தை பார்த்தாள். பூனை மழையை பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை. நனைந்தாவாறே கீழே பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்தது.

அது உட்கார்ந்த நிலையில் பார்க்கும்போது இப்போது குதிப்பதை ஒத்தி போட்டிருக்கலாமோ என்னும் எண்ணத்தில் இருக்கலாம். அப்படித்தான் இருந்தது அதன் நிலை. அவ்வப்பொழுது தன் உடலை உதறிக்கொள்வதும், பின் தளத்தின் பின் புறம் சென்று சாவகாசமாய் படுத்து கொள்வதும்,அதன் நிதானம் இவளுக்கு பிடித்து போனது. சுரேந்தரை போல.

சுரேந்தர் ஏதோ கல்லூரியில் படித்து கொண்டிருப்பதாய் சொன்னான். பார்வைக்கு இவள் வகுப்பு பையன் போலத்தான் இருந்தான். முதல் அறிமுகத்திலேயே இவள் மரியாதையாக அழைத்தாள். அவன் இங்க பாருங்க “தேவையில்லாத மரியாதையை” எனக்கு கொடுக்கறதா நினைச்சு விலகி போகாதீங்க.

அவன் அப்படி சொன்னாலும் அவனது செய்கையும் செயலும் நிதானமாக இருந்தது. ஒவ்வொன்றாய், தடகளத்தில் ஓடுவதற்கு சில டெக்னிக்குகளை இவர்களுக்கு கற்று கொடுத்ததும் இவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவளுடன் வந்திருந்த ஒன்றிரண்டு நண்பிகள் இவனை பற்றி ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து சொல்வதும், அவனிடம் சென்று வழிவதும், அவன் சிரித்து கொண்டே அவர்களை விட்டு விலகி செல்வதும் இவளுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

அவனே ஒரு நாள் இவனிடம் நெருங்கி வந்து பேசினான். உன் பேரு மிஷாலினிதானே ? உரிமையாய் அவன் அவளிடம் பேசியது கேட்டு மற்ற தோழிகள் இவளை வித்தியாசமாய் பார்த்தனர்.

அவனிடம் ஆம் என்று தலையாட்டினாலும் தோழிகளிடம் எனக்கும் அவனுக்கும் முன்னர் எந்த பழக்கமும் இல்லை என்று சொன்னாள். இருக்கலாம், உனக்கு பழக்கமில்லாமல் இருக்கலாம், ஆனால் அவனுக்கு உன்னை முன்னரே தெரிந்து வைத்திருக்கிறான், இவ்வளவு தெரிந்தவன் போல் உன் பெயரை எதற்கு கேட்கிறான்? அவர்களின் பொறாமை கேள்விகளுக்கும், புழுங்கல்களுக்கும்

இவளால் பதில் சொல்ல விருப்பமில்லை. அதுவே, அவளை பற்றி அவர்களுக்கு பேச்சு பொருளாகவும் ஆகிப்போனது.

எல்லோரையும் விட அதிக உரிமை அவன், அவள் மீது எடுத்து கொண்டதாக தெரிந்தது, இது முதலில் சந்தோஷத்தை தந்தாலும் போகப் போக சலிப்பாய் தெரிந்தது. அவளது நோக்கத்துக்கு இவனின் நெருக்கம் இடைஞ்சலாக இருப்பது போல் தெரிந்தது. ஒரு நாள் வாய் திறந்து சொல்லி விட்டாள்.

‘சார்’ நீங்க எல்லோருக்கும் கோச், என்னைய மட்டும் தனியா கவனிக்கறீங் –களோன்னு, பிரண்ட்ஸ் எல்லாம் பீல் பண்ணறாங்க.

அப்ப உங்களுக்கு ஒண்ணும் இதுனால வேற எண்ணம் தோணலையா?

சாரி சார் புரியலை, எனக்கு இந்த ‘டோர்னமெண்ட்டுல’ ஜெயிக்கணும், அவ்வளவுதான், இதுல ரிகார்ட் பண்ணா இந்தியா சார்பா விளையாட சான்ஸ் கிடைக்கும் எனக்கு அதுதான் முக்கியம், ப்ளீஸ்.. புரிஞ்சுக்குங்க.

அவன் முகம் இறுகுவது தெரிந்தது. ஓ.கே., ஐ.அப்ரெஷியேட், சட்டென்று அங்கிருந்து விலகிச்சென்றான்.

அதன் பின் அவளிடம் அதிகமாக பேசுவது குறைந்தது. காலை நாலு மணிக்கு மைதானத்துக்குள் வந்து நின்று விடுவான். இவர்கள் பயிற்சிக்காக அவரவர்கள் வீட்டிலிருந்து, நாலரைக்கு மைதானத்திற்குள் வந்து விடுவார்கள். அதுவரை ஒன்றாய் வருபவர்கள் அவரவர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுக்கு ஏற்ப தனித்தனியாய் பிரிந்து விடுவார்கள். தடகளத்தில் கலந்து கொள்பவர்களில் முதலில் ஓட்டபந்தயத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியை ஆரம்பித்து விடுவான்.

இவளோடு ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பயிற்சி கடுமையானதாக இருக்கும்.

மழை ஓய்ந்தது போல் இருந்தது. பூனை நிதானமாக எழுந்து நின்று மறுபடி தன் உடலை முறுக்கி ‘சடவு’ எடுத்து கொண்டது. அந்த நிமிடம் வாய் திறந்து “மியாவ்” சத்தம் இட்டது.

அவளது ஞாபகம் மறுபடி தடகள பயிற்சிக்கு போய் விட்டது. மைதானத்தை விட்டு வெளியே வரும்போது காலை ஆறு அல்லது ஆறரை ஆகி விடும். உடம்பு இப்படித்தான் ‘சடவு’ எடுக்க சொல்லும். வெந்நீரில் குளிக்கும்போது உடல் களைப்பு எல்லாம் ஆவியாகி பறப்பது போல் இருக்கும். அதன் பின் சப்பாத்தி, சுக்கா ரொட்டி, முன்னால் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். முட்டை வேண்டுபவர்கள் எடுத்து கொள்ளலாம். சாப்பிட்டு களைப்பில் அப்படியே உட்கர்ந்த நிலையில் உறங்கியவர்களும் உண்டு.

அம்மா வெளியில் காரில் ஹாரனை ஒலித்தபடி நிற்பாள், இவள் ஓடி வர அவசர அவசரமாய் காரில் ஏறி வீடு வந்து அதன் பின் ஸ்கூலுக்கு கிளம்பி செல்வாள்.

பூனையின் காதுகள் விறைப்பது இங்கிருந்து பார்க்கும்போது தெரிந்தது. எதையோ பார்த்து விட்டது. ஜன்னலின் மேல் தளத்திலிருந்து உற்று உற்று பார்த்தபடி இருந்தது. அதோ பூச்சி ஒன்று ஊர்ந்து இதனை தாண்டி போகிறது போலிருக்கிறது, இங்கிருந்து பார்க்கும்போது சரியாக தெரியவில்லை, ஆனால் சட்டென முன்னங்காலை அதன் மீதி விசிறியதை வைத்து அது பூச்சியாக இருக்கலாம். இதன் நகம் பட்டு அது இரத்த கூழாய் போயிருக்கும் போலிருக்கிறது. தனது முன்ன்ங்காலை உதறி பார்த்தது, அது கீழே விழுவது போல் தெரியவில்லை, தன் வாயை காலில் சிக்கியிருந்த இரத்த கூழை நக்கியது. மீண்டும் பழைய படி தளத்தின் முனைக்கு வந்து கீழே பார்த்தபடி உட்கார்ந்து கொண்டது, இது இப்போதைக்கு குதிப்பதாக தெரியவில்லை. இது மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும் எப்படி குதிக்கும்? எப்பொழுது குதிக்கும்? இந்த கேள்வி அவள் மனதை நெருடத்தான் செய்தது.

இவளுக்கு அன்று விளையாட்டு போட்டிகள் துவக்க விழா ஞாபகம் வந்தது. விழாவில் எல்லாம் அவள் கவனம் செல்லவில்லை. இரண்டாம் நாள்தான் தடகளங்கள் ஆரம்பிக்கும். இவளது ‘தேசிய ரிகார்ட்’ கொஞ்சம்தான் பின் தங்கியிருந்தது. இந்த முறை கடின முயற்சி செய்திருக்கிறாள். ‘ரிகார்டை’ முறியடிக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்திருந்தது. பயிற்சியின் போது இரண்டு மூன்று முறை முறியடித்தும் இருந்தாள்.

தன் கால்களின் பாதங்களை இந்த பூனை போல் பார்த்து கொண்டிருந்தாள். நாளை என் வாழ்க்கையின் போக்கை மாற்றிவிடுவீர்களா? தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

ரெடி., கெட்.செட்., கோ., காற்றாய் பறந்தாள், பறந்தாள் குடல் வெளியே வர துடிக்கும் அளவுக்கு பறந்தாள். இதோ இதோ..வெற்றிக்கோட்டை தொட்டு விட்டு முன் வந்து கீழே விழுந்தாள்… ஐந்து நிமிடம் ஓடியது, ஒரே ஆராவரம், கை தட்டல், விழிப்பு வர விழித்து மெல்ல எழுந்தாள். பட படவென காமிராக்கள் பளிச்சிட்டன. ‘தேசிய ரிகார்டை’ முறியடித்து விட்டாள், யார் யாரோ கை கொடுத்தார்கள், அவளுக்கு யார் என்றே தெரியாமல் அப்படியே அவர்களுக்கு கை கொடுத்தபடி உள்ளே சென்றாள்.

தன் கால்களின் பாதங்களை ஒவ்வொரு விரலாய் இந்த பூனை செய்வது போல தடவி விட்டு கொண்டிருந்தாள்.

கீழ்ப்புறமாக ஒரே இரைச்சல், அந்த பூனை நின்றிருந்த பிளாட்டின் கீழ்புறம் யாரோ நின்று கொண்டிருக்க வேண்டும், அவர்களின் கூச்சல் கேட்டது. ஜன்னலில் இருந்து பார்வையை கீழே கொண்டு போய் பார்க்க முடியவில்லை. ஒரு வேளையை பூனைக்காகத்தான் சத்தமிட்டு கொண்டிருக்கிறார்களோ?

அப்படித்தான் தெரிகிறது, பூனையும் அவர்களை நோக்கி குனிந்திருக்கிறது. கீழே குதித்து விடுவது போல தயாராக நிற்பது தெரிந்தது. அதற்குள் பூனை நின்றிருந்த ஜன்னலில் இருந்து ஒரு தலை எட்டி பார்த்தது, அது ஒரு பெண்ணின் தலை. முதலில் எதிர் வீட்டு ஜன்னலில் தெரிந்த இவள் முகத்தை ஒரு நிமிடம் பார்த்து விட்டுத்தான் கூச்சல் கேட்டதை கண்டு கண்களை கீழே பார்க்க முயற்சி

செய்தது. இருந்தாலும் கீழ் மட்டம் வரை பார்க்க முடியாததால் மீண்டும் இவளை பார்க்க இவள் கண்களை மேலே தூக்கி அந்த பூனையை பார்த்தாள்.

அந்த பெண்ணும் புரிந்து கொண்டிருக்க வேண்டும், அவளும் தலையை மேலே உயர்த்தி பார்க்க, வெறும் சிமிண்ட் தளம் மட்டும் தெரிய தலையை உள்ளிழுத்து ஜன்னலை சாத்தி விட்டாள்.

இவளும் ஜன்னலை சாத்தி விட நினைத்தவள் என்ன நினைத்தாளோ, அதை திறந்தே வைத்து விட்டு ஒரு துண்டு பேப்பரை எடுத்து எதிரில் இருந்த மேசையில் வைத்து எழுத ஆரம்பித்தாள். ஐந்து நிமிடம் அவளது எழுத்து தீவிரமாக இருந்தது. எல்லாம் முடிந்து அதை ஒரு உறையில் போட்டவள், தன் நாவால் தடவி அதை ஒட்டினாள் பின் மீண்டும் கட்டில் அருகே கொண்டு வந்து தலையணை அருகே வைத்து விட்டு மீண்டும் மேசைக்கு வந்து இழுப்பறையை திறந்தாள்.

சிறிய பாட்டில் ஒன்றை எடுத்து அதில் இருந்த மாத்திரைகள் ஒவ்வொன்றாய் உள்ளங் கையில் கொட்டி எண்ண ஆரம்பித்தாள். ஒன்று இரண்டு,..பனிரெண்டு. தண்ணீரை தேடியவள், சற்று தொலைவில் தண்ணீர் “சில்வர் ஜக்” வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா, என்று இலேசாக ஆட்டி பார்த்தாள். போதுமான அளவு இருப்பதாக நினைத்தவள் அதையும் கட்டில் அருகே எடுத்து வந்தாள்.

கட்டில் அருகே நின்றவாறு உள்ளங்கையில் வைத்திருந்த மாத்திரைகளில் ஒன்றை எடுத்து வாயில் போட போனவள் கீழே கூக்குரல் அதிகமாக, என்னவென்று அறியும் ஆவலில் எல்லா மாத்திரைகளையும் மீண்டும் அந்த சிறிய பாட்டிலில் போட்டு விட்டு ஜன்னல் அருகே வந்து நின்றாள்.

இப்பொழுது பூனை கீழே குதிக்கபோவது போல் நின்றிருந்தது. இந்த முறை குதித்து விடும் என்று இவள் மனசு சொன்னது. குதித்தால் அடி படுமே, இந்த கவலை அவள் மனதுக்குள் தோன்றினாலும் கீழ் தளத்தில் கேட்ட கூக்குரலால், பூனையை காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பினாள்.

பூனை காலை மாற்றி வைத்தது, அதன் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே குதிக்க தீவிரமானதை இவளால் உணர முடிந்தது. கீழே கூக்குரலும் அதிகமாக இருந்தது.

சட்டென அவள் பார்க்க அந்த பூனை அங்கிருந்து குதித்து முன்னங்கால்களை நீட்டியபடி வேகமாக கீழே மண் தளத்தில் ‘பொத்தென சத்தத்துடன் விழுந்தது, ஆனால் அதை இவளால் பார்க்க முடியவில்லை.

ஆனால் கூக்குரலில் ஒரு வார்த்தை மட்டும் அவள் காதில் பளீரென விழுந்தது. பூனை விழுந்த நிமிஷத்துல எழுந்து ஓடிடுச்சு. யாராலயும் பிடிக்க முடியலை. அப்பா நாலாவது மாடியில இருந்து விழுந்தும் ஒண்ணும் ஆகாம எழுந்து ஓடுது பாரு.

இந்த வார்த்தைகள் அவளுக்கு ஏதோவொரு உணர்வை தோற்றுவித்திருக்க வேண்டும், சட்டென கட்டிலருகில் வந்தவள், அந்த சின்ன பாட்டிலை நன்கு மூடினாள், கொண்டு போய் அதே மேசையில் இழுப்பறைக்குள் வைத்தாள். அடுத்து திரும்ப எத்தனிக்க..

கதவு தட்..தட்..தட்டப்பட்டது, சிறிது தயங்கியவள் மெல்ல போய் கதவை திறந்தாள். அப்பாடி, சொல்லிக் கொண்டே, அவள் தோழி நின்று கொண்டிருந்தாள். தேங்க் காட்..உன் செல்போனை எடுக்கவே இல்லையின்ன உடனே பயந்துட்டே ஓடி வந்தேன். உங்கம்மா கிட்ட போன் பண்ணி கேட்டா அவங்களும் வீட்டுலதான் இருப்பா, அப்படீன்னாங்க. அப்படியே ஓடி வந்தேன். பேசியபடியே பார்வையை சுழற்ற கட்டிலின் தலையணைக்கு அருகில் ஒரு உறை ஒட்டப்பட்டு கிடந்தது. பாய்ந்து சென்று அதை எடுத்தவள், சட்டென கிழித்து மள மளவென படிக்க ஆரம்பித்தாள்.

படிக்க படிக்க அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது, இதை அப்படியே மரமாய் நின்று பார்த்து கொண்டிருந்தவளின் அருகில் போய் அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவள், அப்படியே அணைத்து அழுக ஆரம்பித்தாள்.

நல்ல வேளை ஒடி வந்தேன், இந்த மாதிரி ஏதாவது பண்ணிடுவியோன்னு பயந்துதான் ஓடி வந்தேன். உன்னை ‘செலக்ட்’ பண்ணிட்டாங்க, உன்னைத்தான் செலக்ட் பண்ணனும்னு பழைய ஆட்டக்காரங்களெல்லாம் “போர்ஸ்”பண்ணாங்க. கமிட்டிக்கும் வேற வழியில்லை, நிறைய ‘சால்ஜாப்பெல்லாம்’ சொல்லி பார்த்தாங்க, நேசனல் ரிகார்டை உடைச்சவளுக்கு வாய்ப்பு தர்றது விட்டுட்டு எப்பவோ ரிகார்ட் பண்ணவளுக்கு வாய்ப்பு எப்படி கொடுக்கலாம்? இப்படி சண்டை போட்டாங்க.

இவள் சலனமில்லாமல், நீ எனக்காக ஓடி வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம், ஆனா நீ நினைக்கற மாதிரி தற்கொலை பண்ணிக்கணும் அப்படீங்கற முடிவைத்தான் முதல்ல எடுத்தேன். ஆனா, அங்க பாரு எதிர் வீட்டு ஜன்னலை காட்டினாள், நாலாவது மாடியில இருக்கு, அந்த ஜன்னல் திட்டு. அது மேல இருந்து கீழே குதிச்ச பூனை, ஒண்ணுமே ஆகாம எழுந்து நின்னு கம்பீரமா ஓடுச்சு. அதை பாத்ததும், நான் ஏன் என்னைய செலக்ட் பண்ணலைங்கறதுக்காக தற்கொலை எண்ணத்துக்கு வரணும்? எவ்வளவு உயரத்துல இருந்து விழுந்தாலும் எழுந்து நடப்பேன், ஓடுவேன், என்னால முடியும்

இவள் பேசுவதை கேட்டு, அவள் மீண்டும் இவளை இழுத்து அணைத்து கொண்டாள்.

அம்மா ..புயலாய் உள்ளே வந்து என்னாச்சு? ரேஷ்மா உன்னை காணோமுன்னு தேடிகிட்டே இருந்தா கேட்டபடி வர, இவர்கள் இருவரின் முகங்களிலும் புன்னகை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *