தீக்குளித்த வேர்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 148 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜானகியம்மாள் படுத்திருந்தாள். அயர்ச்சியாகவும், தளர்ச்சியாகவும், மருத்துவமனைப் படுக்கையில் முகம் வெளுத்துப் படுத்திருந்தது அவளது வெள்ளைத் தோலுக்கு மேலும் அழகூட்டியது. டெட்டால் வாடையும், அறையில் அணிவித்த விறைப்பான வெள்ளை உடையும் பழக்க மாயிருந்தன. “காலை மணி பத்து இருக்குமா ?” படுத்தபடியே சாளரத்தின் வழியே, வெளியே பார்க்கப் புளிய மரத்தின்மீது பட்டு எதிரொளிக்கின்ற ஒளி அளவைக் கொண்டு, மணி பார்த்துப், பத்தரை இருக்கும் என்று பேசிக்கொண்டாள். ஏதோ ஒரு காக்கை எதற்காகவோ முயன்று கரைந்துவிட்டுப் போயிற்று.

“இதுகூட அதோட வேலையைப் பண்றது… எனக்குத்தான் ஒரு வேலையும் இல்லை… பூசை இல்லை… என்னை இப்படிப் படுக்கப் போட்டுட்டியேடா. இறைவா!” புலம்பினாள். ஜானகியம்மாள்.

“என்ன பாட்டி, வலிக்குதா!” வெள்ளையாய்த் தாதி வந்தாள். புலம்பல் சத்தம் அவள் காதுக்கு எட்டியிருக்க வேண்டும்.

“ஒண்ணுமில்லடி, அம்மா” குரலில் இருந்த தொனி தாதிக்குக் கவலை கொடுத்தது. இரக்கமாய்ப் பார்த்தபடி நின்றாள். சிறுநீர்ப் பேழையை மாற்றினாள். உடையைச் சீர்செய்தாள். ஜானகி நெற்றியைச் சுருக்கி யோசித்தாள். தாதிக்கு அது மேலும் கவலையளித்தது. யோசனையாய் மேலே பார்க்க மின்விசிறி தன் இயல்பாய் மெல்லச் சுற்றிக்கொண்டிருந்தது. அதோடு அவளது நினைவுகளும் சுற்றிச் சுற்றி ஓடின.

“வாடா… வா…” குரலில் வரவேற்பும், மகிழ்ச்சியும், பூரிப்பும் பொங்கிவழியச் சிவசைலம் எழுந்தார். கோபி நடையைத்தாண்டி இடைகழிக்கு வந்தான். பைகளைச் சுவாமி படத்திற்கு முன் வைத்தான். “அப்பா…” என்று குனிந்தான்.

“இருடா… ஜானகி…உள்ளே என்ன பண்றே ? கோபி… வந்துட்டான்.

ஜானகி தனது ஈரக்கையை மடிசாரில் துடைத்தவாறு வேகமான நடையும், துள்ளலுமாய் இடைகழிக்கு விரைந்தாள்.

“என்னடா…. கோந்தே… சௌக்கியமா…?”

“சௌக்கியம்மா… அப்படி நில்லேன்… சேவை சாதிச்சுக்கிறேன்” தாய்க்கும், தந்தைக்கும் இதைவிட வேறு என்ன வேண்டும் ? தோளுயரம் வளர்த்தியும்., பரந்த தோளும், மிளிரும் மிடுக்குமாய் எங்கோ ஊருக்கப்பால் உயர்ந்த பதவியிலிருப்பவனுமான தன் குழந்தை, குனிந்து, காது மடல் பிடித்து” அபிவாதையே… பார்க்கஸ் பத்ய என்று இந்தக் கோத்திரத்தில் பிறந்த கோபி கிருஷ்ணனாகிய எனது வந்தனம்” என்று கால் தொடப் பூரித்து அன்பு பொங்குமே. ஜானகிக்குக் குழந்தை மனசு. அவளால் மிகுதியான அன்பையோ, மகிழ்ச்சியையோ, துயரத்தையோ தாங்க முடியாது. அழுகையாய்ப் பொங்கி வரும்.

“ஐயோ, துரும்பா இளைச்சுட்டயேடா…” என்று தலை சிலுப்பிக், கட்டியணைச்சுக் கண்ணீர் விடுவாள். அது அவளின் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியின் அடையாளம்.

“போதுண்டி… வந்தவுடனே என்ன அழுகை… கையைக் காலை அலம்பிட்டு ஆகாரம் பண்ணுடா…” துண்டை உதறியவாறு வெளியே போய்விடுவார். ஊர் முழுக்க அவரின் சுய வானொலி அலைவரிசை ஆரம்பமாகும். இது அவரது பாணி. மகிழ்ச்சியோ, துயரமோ அதிகரித்தால் தனது மனனவியை அதட்டுவார். அதட்டி, மட்டம் தட்டுதலில் அவரது மகிழ்ச்சியும் இலைமறை காயாய்த் தலைக்காட்டும். அது ஜானகிக்கும் புரியும். பின்னே, மகிழ்ச்சி இருக்காதா? இருந்தது.

“சிவசைலம்… நீ பண்றது நன்னாயில்ல…” இராசாமணி தலை குனிந்தபடியே சொன்னார். ஆறேழு பேர் வாகாய் அமர்ந்திருந்தனர். அது பட்டர் வீட்டுத் திண்ணை. சாயரட்சைத் தீபமும், பிரசாதமும் முடிந்த பின்பு பொதுவாய் அக்ரகாரத்துப் பெரிசுகளின் பேச்சுக் கச்சேரி அங்குதான் தொடங்கும். மேற்குக் காற்று மெல்லத் தன் கைகளால் குளிர்ச்சியாய் எல்லாரையும் அலம்பிவிட்டபடி அலை அலையாய்க் கரையும். துயரம் கவிழ்ந்த சூழல் இன்று… மௌனமும், அமைதியும் மேலும் இறுக்கத்தைக் கூட்டின.

ஊருக்குப் பெரிய பாட்டி, நாணி, மாமா, சிவசைலத்தின் துண்டை உலுக்கிச் சண்டை போட்டாள். “டேய்… மறைஞ்சு போறவனே… என்ன அழிச்சாட்டியம்டா…” இது… சிவசைலம் மனத்திற்குள் மேலும் மூர்க்கமானார். அந்த ஊர் சாஸ்திரிகள் அழுதவாறு தன்னால் முடியாதென்று மறுக்கவே, வேற்றூரிலிருந்து சாஸ்திரிகளை வரவழைத்தார். அவரே கல்லூன்றி ஜானகியை மிரட்டி அப்பம், வடை செய்யச் சொல்லிக் கல்பிடுங்க, ஜானகி ஓவெனக் கதறினாள். “ஏன்னா இப்படிப் பண்றேள்?”

“நான்…. என்னடி பண்ணினேன்.. உம் பிள்ளைதானடி இப்படி விட்டுட்டுப் போயிட்டான்…. நன்னா அழுடி… கல்பிடுங்குகின்ற போது சாத்திரமா அழணும்… இவனுக்குக் காவேரியில தத்தம் போறுமோயில்லையோ’ மூர்க்கமாகிப்போனார். மனது இரணமாகிக் காயமே கவசமாகிச் சீற்றவடிவம் ஆனார். மடக்குச்சாய்வு நாற்காலியும், பாகவதமுமே அவரது வாழ்க்கையாய்ப் போயின. சிறிது கூட அழாத ஆணும், அதிகமாய் அழுகின்ற பெண்ணும் அஞ்சத்தக்கவர்கள். சிவசைலம் அவருக்கே அஞ்சுமாறு ஆகிப்போனார்.

வேருக்கு அப்படி என்ன வேதனை? மரத்தையே விலகப் பண்ணும் அளவுக்கு. எந்தப் பிள்ளைக்குக் காவேரியில் நீச்சல் கற்றுக்கொடுத்தாரோ. எவனுக்குக் கழுத்தளவு தண்ணீரில்” “சூர்யம், சுந்தரலோகநாதம்… அமிர்தம்” என அட்சரம் பிசகாமல் சொல்லிக் கொடுத்தாரோ, ஊர் சிரித்தாலும் கேளாமல் தன் பிள்ளையின் மலம்தானே என்று வாரிக் கொட்டினாரோ, அவனுக்கே அவன் உயிரோடிருக்கின்றபோதே காவிரியில் தர்ப்பணம் செய்தார்.

“என்னண்ணா… மறந்துட்டேளா?” என்று இருள் கசிந்த இரவுகளில் ஜானகி கிசுகிசுத்த போதெல்லாம் கூடக், “குழந்தைடி… போதும்…” எனக் கோபியை அணைத்தபடித் தூங்கிய அதே சிவசைலம்தான் இப்போது எள்ளுருண்டை அர்க்யம் விட்டார். குழந்தையோடு குழந்தையாய்த் தூங்கிய கணவனைக் கண்டு ஜானகி மகிழ்ச்சி அடைந்தாலும் கூடவே பயமும் வந்தது. இந்தக் கண்மூடித்தனமான மிகுந்த அன்பு எங்குக் கொண்டு போய்விடுமோ என்பதில். அவள் நினைத்த நேரத்தில் பல்லி ஏதாவது ஓசை இட்டிருக்கலாம். கோயில் மணி அடித்திருக்கலாம். பலித்தது. எங்கோ கொண்டுபோய் விட்டது.

இராசாமணியே மறுபடியும் பேசினார். “சிவசைலம், இப்ப என்ன நடந்திடுச்சுன்னு நீ இப்படி முடிவு பண்ணிட்டே?”

“ஓய்… இந்தக் காலத்துலே இதெல்லாம் இயற்கை ஓய்… ஒரே அலுவலகத்திலே வேலை… ஏதோ நடந்திடுத்து… வயசுக் கோளாறு. பையன் பிசகிட்டான்… இதுலே போய்…” வெற்றிலையோடு சொற்களையும் குதப்பினார் இராயசம் வெங்கடாசலம்.

“என்னவா? குலம் கோத்திரமில்லாமலா… எவளோடையோ… போய்” அதற்கு மேல் பேசமுடியாது தொண்டை கமறியது. கண்ணீர் திரையிடத் துண்டை எடுப்பது போல் யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டார். ஆனால், அது எல்லாருக்குமே தெரிந்தது. அமைதியாய்ப் பட்டராத்துத் திண்ணை மௌனம் சாதித்தது. குரலைச் சரிசெய்தபடித் தீர்மானமாய்ச் சொன்னார்.

“என்னைப் பொறுத்தவரைக்கும் அவன் செத்தாச்சு… நாளைக்கே கல்லூன்னிப் பத்துப் பண்ணி..” மறுபடி குரல் அடைக்க, அதற்குமேல் பேச இயலாதவராய் நின்றார்.

“சிவசைலம்,உமக்கு நன்னாத் தெரியும்… சாஸ்திரம் ஒண்ணும் தலைமுடி இல்லை. நம்ம விருப்பத்திற்கு வெட்டிக்கிறதுக்கும், ஒட்டிக்கிறதுக்கும்… இது பாபம்டா… உயிரோட இருக்கிறவனுக்கே பத்துப் பண்றயே?” செல்லப்பாவின் குரலில் அதிர்ச்சியும், மிரட்சியும் கூடவே அதட்டலுடன் கூடிய தொனி, பட்டர் திண்ணையைச் சூடாக்கியது. சிவசைலம் முறுக்கிக் கொண்டார். மூர்க்கமானார்.

“டேய்… எவன்… என்ன சொன்னாலும் மயிர்ல போச்சு… என்னை ஊர் காறித் துப்பற மாதிரிப் பண்ணின பையன் செத்துட்டான்… நாளைக்கு நம்பாத்துல… பத்து… எல்லாரும் வந்து நடத்திக் கொடுக்கணும் அக்கிரகாரம் அதிர்ந்தது. யாவரும் அவரைப் பாவமாய்ப் பார்த்தார்கள். சிவசைலம் தான் பெற்ற பையனுக்குப் பத்துப் பண்ணப் போகிறார். அதுவும் உயிரோடு இருக்கின்றபோது, அப்படி மரம் என்னதான் பண்ணிற்று… ?

“அப்பா, எனக்கும், மேரிக்கும் கல்யாண..ம்…” பிள்ளை மென்று விழுங்கியது, அப்பாவிற்குப் புரிந்தது. முதன் முறையாய்ப் பிள்ளையாய் வந்து கேட்கிறது. தான் வாங்கிக்கொடுத்த சட்டையைப் போட்டுக்கொண்டவன், தான் படிக்கச் சொன்ன படிப்பைப் படித்தவன், தான் சொன்னபடித் தலைவாரிக் கொண்டவன், இப்போது தாலி கட்டுவதற்கு மட்டும்… எப்படி… அவனாய்த்… தனியாய்…” மரம் இலேசாய் ஆட்டம் கண்டது. காற்றுக்குப் பலம் கொடுக்க முடியாது. இத்தனை நாள் இறுகப் பற்றிய வேருக்கு மெல்லப் பயம் தொற்றிக் கொண்டது.

“வா… சாயரட்சை ஆயிடுத்து… காலலம்பிட்டு… வா… ஆயிரம் இறைப்பெயர்களைச் சொல்லலாம்.” வேரால் மரத்தின் பிரிவு பற்றித் துளிக்கூட எண்ண இயலவில்லை. “அதெப்படித் தன்னால் வந்த மரம்தானே…வேரெங்கே போயிடும்.. காத்தடிச்சு ஒஞ்சு, நேரா நிற்கும்’ சிவசைலம் மனச் சமாதானம் செய்து கொண்டார். கோபி கால் அலம்பிக்கொண்டு வந்தான். சிவசைலம் விபூதி பரப்பிச், சுவத்திகச் சக்கரமிட்டுக் கண்மூடிச் சொல்ல ஆரம்பித்தார்.

கோபியும் கூடவே சொல்ல ஆரம்பித்தான். ஜானகி இருவரையும் அடுக்களையிலிருந்து மிரட்சியாய்ப் பார்த்தாள் “..காயே நவாசா… மனசேந்தீரீர்வா மனசாலும்.. இந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும்செய்த பிழைகளை மன்னித்தருள்க…” என்று பதினொரு முறை சொல்லச் சொன்னார். சொன்னான். விபூதி இட்டார். கை குவித்து ஊத, முகத்தில் சிதறிய விபூதி பறந்தது.

“அப்பா… நானும்,மேரியும்…”

“எல்லாம் என்னது…. எனக்குத் தெரியாதாடா… எப்பக் கல்யாணம் பண்ணனும்னு” குரலில் முதன் முதலாய்க் கோபம் கண்டு கோபி நடுங்கினான்.

“அப்பா… நானும்… நானும்… அவளும்… ஏற்கெனவே கல்யாணம் பண்ணீண்டாச்சு…” வேருக்கு வியர்த்தது. மரம் கோடரியால் ஏற்கெனவே தாக்கப்பட்டுப் பிரிக்கப்பட்டதை உணர்ந்து துடித்தது. சிவசைலத்தின் கோட்டையிலே இடி விழுந்தது. காற்றில் பறந்த விபூதி செய்தியாகிக் காது, மூக்கு வைக்கப்பட்டு, வெறும் வாய்க்கு அவலாக ஊர் மிக நன்றாகவே மென்றது.

“சிவசைலம்…பிரமாதமா…உருத்திரம் சொல்வார்… இனிமேல்… என்ன, பைபிளும் சொல்லுவார்.”

“மாமி ஏற்கெனவே விளக்கு ஏத்திண்டிருக்கா… கூடவே மெழுகுவர்த்தியும்… ஒரே ஜெகஜோதிதான்.. அக்கிரகாரமெல்லாம்..”

“இந்த வயசிலும் பிள்ளைக்குக் கொல்லைப்பக்கம் போகணும்னாக்கூட இராகுகாலம், எமகண்டம் பார்த்து இவர்தான் கொண்டு போய் விடுவார். கல்யாணம் மட்டும் அவனாகவே பண்ணிண்டான் பாரும்…அதுசரி… அதுக்கெல்லாம் அப்புாகூட வருவாரேன்னு பிள்ளை பயந்துட்டான்போல… சமத்து.”

தின்றுவிட்டுத் திண்ணையைத் தேய்த்தபடியும், முதுகு அழுக்கை நூலால் சுரண்டியும் அக்கிரகாரம் ஆவலாய் அவல் மென்றது. வேரின் விரல்களுக்குத் தீப்பிடித்து. நெஞ்சு வெந்து கருகியது. பையனின் காலில், ‘அபிவாதையே’ சொல்லி விழுந்தார். அலறிய பையனிடம், ஊரைவிட்டுப் போகுமாறு கால்பிடித்துக் கெஞ்சினார். அழுதபடியே பிரிந்துபோன பையனைப் பார்த்து முறுக்கிக் கொண்டார். வேர் தன் உடலைச் சுருக்கிக் கொண்டது. மரம் பற்றிக் கவலையின்றி வேர் சாய்வு நாற்காலியும், பாகவதமுமாய் மூழ்கிப்போனது. அடுத்த பையன் பற்றிச் ஜானகி அக்கறை கொண்டாள்.

படிக்க வைத்தாள். அண்ணாவின் செயல்போல் செய்துவிட வேண்டாம் என உரு ஏற்றினாள். கல்யாணத்திற்குப் பெண் பார்த்தாள். உறவு முறியாதிருக்க அண்ணா பெண் பாப்பாவைக் கட்டத் தீர்மானித்தாள். சிவசைலம் மௌனமாய் எல்லாவற்றிற்கும் தலையசைத்தார். புழுங்கிய, பதுங்கிய வேருக்குத் தென்றல் காற்று ஒற்றடம் கொடுக்குமா என்ன? சாய்வு நாற்காலியும் தானுமாய்க்கிடந்தார். வேரும் காலத்தின் சுழற்சியால் முதுமையடைந்தது. ஜானகியும் கூட, காலம் யாரைத்தான் விட்டுவைத்தது ? வடுக்களையும், மருந்துகளையும் சுமந்ததுடன் முதுமையையும் சுமக்கத்தான் வேண்டியிருந்தது.

ஜானகி யோசித்தாள். “இந்த மின் விசிறி மட்டும் முதுமையடையாதா!” சிரிப்பாயிருந்தது. அதற்கென்ன சிறுநீரகம் உண்டா என்னா, தன்னைப் போல் ஒட்டையாகிவிட.. இருதயம் இருக்குமா ?… என்ன… தனது கணவனைப் போல்… கண்ணீர் திரையிட்டது. “சுவாமி அவர் பிழைச்சு எழுந்து வரணுமே…” “ஸ்ர்வ மங்கள… மாங்கல்யே….” வாய் தொடர்ந்து தோத்திரம் சொன்னது.

அவரை… எங்கேடா… வெச்சுருக்கேள். அவருக்கு உடம்பு… எப்படிடா… மாதுவிடம் கேட்டபோது பாப்பா இடைமறித்தாள்.

“மாமி… நீங்க… சும்மாயிருங்கோ… உடம்பை அலட்டிண்டா… பிரச்சினை. மனம் அரற்றியது. ஜானகிக்கு “என்ன ஒரு பாக்கியம் ? கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையிலே” சிரித்தாள், வலித்தது கீழே.

மாது நல்ல மருத்துவமனையிலே சேர்த்தான். பாப்பாவும், மாதுவும் விழுந்து விழுந்துதான் கவனித்தார்கள், மருத்துவர் அது கேட்கும் வரை.

உண்மையைச் சொல்லப்போனா… இரண்டு பேருமே மிகமோசம் தான் அம்மாவுக்குச் சிறுநீரகம் வேணும். மிகவும் பலம் குறைவாய் இருக்கிறது…. எப்படியாவது ஏற்பாடு பண்ணனும்… உங்கக் குடும்பத்துல யார் வேணுமானாலும் கொடுக்கலாம். ஏன் நீங்களே கூட… ஆனால், உங்க அப்பாவுக்குத் தான் நிரம்பச் சிக்கல்… இதயம் வேணும்… யார்கிட்டேயும் கேக்க முடியாது… என்னோட முயற்சியெல்லாம் குறைந்தபட்சம் உங்கத்தாயையாவது காப்பாத்திடணும்கிறதுதான்… நீங்க யோசிச்சு உடனடியா முடிவு சொல்லுங்க…”

”மருத்துவரே! என்ன வேணுமோ, எவ்வளவு வேணுமோ… எங்கிட்டேயிருந்து எடுத்துண்டுடுங்க… எனக்கு இரண்டு பேருமே உயிரோடு வேணும்.” அவன் உணர்ச்சியானான்.

”மருத்துவரே! ஒரு நிமிடம் எங்கூட வரேளா…” வெளியே அழைத்து வந்தாள். “ஏன்னா… என்ன பேசேறேள்… ? இதுக்கெல்லாம் நான் சிறிதும் இசைவு செய்ய முடியாது.” பாப்பா இரைத்தாள்.

“என்னடி பேசேற ? நம்ம அம்மாடி… நான் கொடுக்கலைன்னா… யாருடி…” மாது அதிர்ச்சியாய்த் திணறினான்.

”பாருங்கோ… நாளைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா எனக்குன்னு யார் இருக்கா…” விசும்பினாள். கையைப் பிடித்துக் கரைத்தாள். மாது கரைந்தான். “இப்ப என்னடி பண்றது…?” குரலில் உணர்ச்சி போய் இயந்திரத்தனமான போலிக் கடமை உணர்வு வெளிப்பட்டது.

“யாராவது பணத்துக்குச் கொடுப்பாளோன்னு பாருங்கோ…” அதிகமாகக் கொடுத்துட வேண்டாம்” தாதிகளின் செவி வழியே வேருக்குச் செய்தி தெரிந்தபோது, இடி இடித்து, மின்னல் மின்னச், சிவசைலம் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார். இதயத் துடிப்பு நின்றது. தாதி ஓடி வந்தாள். டாக்டர் பறந்தே வந்தார். சிவசைலம் வெகுவேகமாய் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

“ஏம்மா…எல்லாரும் ஓடறாங்க?” ஜானகி கேட்டாள்.

“ஏதோ சிவசைலம்னு நோயாளிக்கு உயிர் ஆபத்தாம். இதயம் நின்னு…” மற்றது ஜானகி காதில் விழவில்லை. மயக்கமானாள் தாதி பதற்றமாக மருத்துவரிடம் போய்க் கூறினாள். அவரும் வந்து பார்த்து, அவரும் மிகப் பதற்றமாகி ஜானகி அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டாள். என்ன ஒரு பாக்கியம்! கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில். இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கிய பயணத்தின்போது, மூன்றாவதாக ஒர் இறந்த பிணத்தோடு மருத்துவர்கள் குழாம் அதே அவசர சிகிச்சைப் பிரிவை முற்றுகையிட்டது.

அவளுக்கு நினைவு திரும்பிவிட்டது தாதி கத்தினாள். மெல்லச் சிவசைலம் கண் விழித்தார். மௌனமாய் ஜானகி, அழுதிருப்பாள் போலும், கண்களால் மாது, பாப்பாவைத் துழாவினார். காணவில்லை. “இதென்ன, நெஞ்சில இத்தனை குழாய்கள்” யோசித்துக் குழம்பினார்.

“அவரை அமைதியாய் இருக்கவிடுங்கள் அவரை நாற்பத்து எட்டு மணிநேரத்திற்கு யாரும் தொல்லை செய்யாதீர்கள்.” என்று தலைமை மருத்துவர், சொல்ல மருத்துவர் குழாம் நகர்ந்தது. ஜானகியையும் தள்ளிக்கொண்டு போனார்கள்.” எப்படி ? மறுபடி இதயம் அமைதியாய், மெதுவாய்ச் சீராய்த் துடிக்கிறது?” கண்மூடித் தூங்கிப்போனார்.

“ஐயா, சிவசைலம்… நீங்களும், உங்கள் மனைவியும் பிழைத்தது மறு பிழைப்பு. உங்களிடம் சீராய்த் துடித்துக் கொண்டிருக்கின்ற இதயமும், சரி செய்யப்பட்ட உங்களது மனைவியின் சிறுநீரகமும் கொடுத்த தற்காலக் கொடைவள்ளல் யார் தெரியுமா… இதோ… இந்த விதவையின் இறந்த கணவன்தான்….” பெண் வெள்ளைச் சேலையில் தேவதையாய் நின்றாள். கணவனை இழந்து அழுத கண்களும், வெளிறிய முகமுமாய்ப்போன பெண்ணை நோக்கிக் கைகூப்பித் தொழுதாள்.

“குழந்தை, எனக்குத் தாலி பாக்கியம் கொடுத்தயேமா. இதை உன் காலா நினைச்சுக் கைப்பிடித்துக் கண்ணில் ஒத்திக்கறேன்”

“உன் பெயர் என்னம்மா?” நெகிழ்ச்சியாய் வேர் வினவியது. “மேரி கோபிகிருஷ்ணன்…”

“என்ன..?” சிவலைசம் நெற்றியைச் சுருக்கினார்.

ஆமாம் சிவசைலம்… சிறிதும் அதிராமல் கேளுங்கள். குலமும், கோத்திரமும் பார்த்தும் பண்ணிய உங்களது குல மருமகள் மருத்துவ ரீதியாய் எந்த அபாயமும் இல்லாத சிறுநீரகம் தர மறுத்தபோது எதற்காக உங்கள் உயிர்ப் பையனை விரட்டினீர்களோ, அவன் மணந்த அதே மற்ற மதத்துக் குலத்துப் பெண்தான் உங்களுக்கு உயிர் தந்திருக்கிறாள். குணத்தை வைத்துத்தான் குலம் நிர்ணயிக்கப்படுமே தவிரக், குலத்தை வைத்துக் குணம் நிர்ணயிக்கப்படுவதில்லையே.

கணவன் இறந்தாலும், மற்ற உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்தப் பெண், உங்களின் எந்தக் குலத்துக்கும், கோத்திரத்துக்கும் குறைந்து போய்விடவில்லையே. இறந்த தன் கணவனின் பெற்றோரைக் காப்பாத்தினேனே என்று என்னிடம் திருப்திப்பட்ட இந்த அன்பும், பரிவும் உடைய விதவைப் பெண்ணை நீங்கள் இன்னும் ஒதுக்கத்தான் போகிறீர்களா… சிவசைலம்…” மருத்துவர் கோபால் இரைந்தார்.

“ஜானகியோ, “ஐயோ செல்லம்…! கோபி என்னை விட்டுவிட்டுப் போயிட்டியேடா” கதறினாள். சிவசைலம் மெதுவாய் எழுந்தார். மேரியை நோக்கி மெல்ல நடந்தார். நெருங்கினார். வேர் கூடுவிட்டு வெளியே வந்தது. தன் மரத்தை வெட்டியது கோடரி இல்லை எனப்புரிந்து கொண்டது.

அந்தச் சூரிய ஒளி தனது பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்த, “சூர்யம்… சுந்தரலோகநாதமான பேரொளி” இது மரத்தை வெட்ட வந்த கோடரி இல்லை. மாறாய் மரம் வளர்த்த ஒளி எதிரே காயத்ரி தேவியே நிற்பதாய் உணர்ந்தார்.” “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று காயத்ரி ஜெபம் செய்தார், மனத்தில் அறியாமைக், கரை உடைந்தது. முறுக்கேறிய வேர் மூர்க்கம் விட்டது. வாய் விட்டுக் கதறினார்.

“ஐயோ ஏன்டா, செல்லம், மேரி! இப்படி ஆயிடுத்தே.”

மருத்துவருக்குப் புரிந்தது. ஜானகிக்குத் தன் மகன் போனது துயரம். வேருக்கோ தன் மருமகள் விதவையானது பெரும் துயரம். மருத்துவருக்கு மனம் இனித்தது.

வாழ்நாளில் சிவசைலம் வாய்விட்டுக் கதறி அழுததைப் பார்த்துச் ஜானகி பிரமித்தாள். மரம் தன்னைவிட்டுப் போனது. இந்த உலகை விட்டுப்போனது இப்படி எல்லாவற்றிற்கும் வேர் மொத்தமாய் அழுதது. ஒர் எண்பது வயதுக்கிழம் நிரம்ப நேரமாய் அழுததை மருத்துவமனை வேடிக்கை பார்த்தது.

சீதையின் தீக்குளியல் போலும். கண்ணகியின் மதுரை எரிப்புப் போலும், பாசி நீக்கக் கசடு கரைய வேர் தன்னைச் சுத்தமாக்கத் தீக்குளித்தது. இப்போதெல்லாம் வேர் மறுபடியும் மரமாக வளர்ந்து நின்றது. ஊரில் ஒரே பேச்சு…

“சிவசைலத்தைப் பாரும்… நாட்டுப் பெண்ணைக்… கையைப் பிடிச்சு குளிக்கக் காவேரிக்குக் கூட்டிண்டு போறதை…”

– மணி, தமிழ்நாடு.

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *