காதோடுதான் நான் பேசுவேன்..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 1,595 
 
 

எண்பதுகளின் ஆரம்பம். கேந்திர ஸர்காரில் லோயர் டிவிஷன் கிளார்க்காக வேலை கிடைத்து தில்லி சென்றேன். ஒரு மினிஸ்ட்ரியில் (பெயர் வேண்டாமே!) வேலை. ரஃபி மார்கில் அலுவலகம்.

நான் சேர்ந்தது coordination section என்று அழைக்கப்பட்ட ஒருங்கிணைக்கும் ஆஃபிஸ். பல sectionகளிலிருந்து தகவல்கள் தேவைப்பட்டால் அவற்றை வாங்கி ஒருங்கிணைப்பது தான் வேலை. பார்லிமெண்ட் செஷன் நடக்கும் பொழுது வேலைப்பளு மிகவும் அதிகமாக இருக்கும். அதிலும் நட்சத்திரக் கேள்விகள் கேட்கப்பட்டால் அவ்வளவுதான்.

நட்சத்திர கேள்வி என்றால் கேட்கப்படும் கேள்விக்குக் கொடுக்கப்படும் பதிலிலிருந்து மேலும் கேள்விகள் கேட்க அனுமதி உண்டு. அதனால் நட்சத்திரக் கேள்விகளுக்கு பதில் மிகவும் விவரமாக (மேலும் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லும் விதமாக) தயாரிக்க வேண்டும். சமயங்களில் முழு இரவும் ஓடிவிடும் பதில் தயாரிப்பதில்.

அப்படிப்பட்ட ஒரு குளிர்கால பார்லிமென்ட் செஷனில் தான் இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு வாரமாக சொல்லி வைத்தாற்போல நட்சத்திரக் கேள்விகள். தொடர்ந்து லேட் சிட்டிங் செய்து என் செக்ஷன் ஆபீசருக்கு உடல் நலம் பாதித்துவிட்டது. எங்கள் செக்ஷனில் என்னையும் சேர்த்து மொத்தம் மூன்று பேர். ஒருவர் ரிட்டயர்மென்ட் வயது. அதனால் அவர் ஆறு மணிக்கு மேல் இருக்கமாட்டார். இவரும் உடல் நலம் சரியில்லை நான் போகிறேன் என்றதால் நான் மட்டுமே தனித்து விடப்பட்டேன். அப்பொழுது கம்ப்யூட்டர் வராத காலம். கிட்டத்தட்ட அறுபது பக்கங்கள் நிதானமாக தட்டச்சு செய்து மேலதிகாரி கையெழுத்துக்காக தயார் நிலையில் வைத்திருந்தேன். நேரம் சுமார் அதிகாலை நாலு. அன்று பதினொரு மணிக்கு குளிர்காலக் கூட்டத்தொடர். அதில் முதல் கேள்வி எங்கள் மந்திரியுடையது.

அப்போதுதான் அது நடந்தது. ரொம்ப தூக்கம் வருகிறதே என்று இரவு flaskல் வாங்கி வைத்திருந்த டீயைக் குடிப்பதற்காக flask மூடியைத் திறந்து கப்பில் விட யத்தினித்தேன். ஒரு வினாடி தூக்கம் கண்களை அழுத்த flaskல் இருந்த டீ மொத்தமும் அந்த நட்சத்திரக் கேள்வி file மீது ஆறாக ஓடி அதை நனைத்தது.

என் இதயம் ஒருமுறை துடிக்க மறந்தது. அந்தத் துடிப்பை எல்லாம் சேர்த்து என் இமைகள் துடித்தன.

சொல்லிவைத்தார்போல இன்டர்காம் ஒலித்தது. மேலதிகாரியின் பிஏ . நாலரை மணிக்கு file கொண்டுவந்து தரும்படி. எனக்கு உடனடியாக சிறுநீர் உபாதை எழுந்தது. பயத்துடன் வெளியே வந்தேன். வெளியில் உட்கார்ந்திருக்கும் காவலாளி அங்கு இல்லை. காரிடாரின் நீளத்தைக் கடந்து பாத்ரூம் சென்று தளர்ந்தேன். திடீரென்று என் காதுகளில் யாரோ “டரோ மத் ” (பயப்படாதே) என்றார்கள் . இருந்தும் பயம் மீண்டும் தொற்றிக்கொள்ள எங்கள் ஆபீஸ் அறைக்கு வந்தேன். பார்த்தால் வெளியில் காவலாளி. என்னை விநோதமாகப் பார்த்தான். “நீங்க உள்ள இருக்கீங்கன்னு இல்ல நெனச்சேன், டைப்பிங் சத்தம் கேட்டு” என்றான்.

நான் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றேன். என் வாழ்க்கையில் அப்போது வியந்தது போல எப்போதும் வியந்தது இல்லை. என் டேபிளில் நான் டைப் அடித்து வைத்த file papers கூடவே இன்னொரு அதே போன்ற file papers! ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்து கொள்ள முயலவும் இல்லை. செலுத்தப்பட்டவன் போல அந்தக் கவரில் இருந்த file papers எடுத்துக்கொண்டு மேலதிகாரியின் பிஏ விடம் கொண்டு சேர்த்தேன்.

பின்னர் கீழே வந்து அந்தக் காவலாளியிடம் நான் இல்லாத பொழுது யாராவது வந்தார்களா என்று கேட்டேன். ஏன் என்று அவன் கேட்டான்.

நான் நடந்ததைச் சொன்னேன். அதைக் கேட்கக் கேட்க அவன் கண்கள் விரிந்தன. தாரையாக கண்ணீர் வழிந்தது. “பஜாஜ் ஸாஹேப் ! பஜாஜ் ஸாஹேப்!” என்று அரற்றினான்.

ஒருவாறு அவனைச் சமாதானப்படுத்தி நான் கேட்டறிந்தது:

பஜாஜ் அந்த ஆபீஸ்லேயே சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ( நான் சேருவதற்கு முன் ) வேலை செய்தவர். மிகவும் கடின உழைப்பாளி. இதே போன்ற ஒரு குளிர்காலக் கூட்டத்தொடரின் பொழுது அவர் தயார் செய்து வைத்த fileன் மீது இன்று நடந்தது போலவே தேநீர் கொட்டி அது நாசமானதாம். விஷயம் அவர் செக்ஷன் ஆபீசர் மூலம் மேலதிகாரிக்குப் போய் கொஞ்ச நேரத்துக்குள் மீண்டும் தயார் செய்யாவிட்டால் அவரை சஸ்பெண்டு செய்து விடுவதாகச் சொன்னார்களாம்.

ஒருவாறு பஜாஜ் அதைத் தயார் செய்து கொடுத்தாராம். அதை எடுத்துக்கொண்டு மேலே கொடுக்கச்சென்ற செக்ஷன் ஆபீசர் திரும்பி வந்து பார்க்கையில் பஜாஜ் இறந்திருந்தார். மாஸிவ் ஹார்ட் அட்டாக் என்று பின்னர் சொல்லப்பட்டதாம்.

“ரொம்ப நல்லவர் சார்! இன்னிக்கு உங்களுக்கு அதே நிலைமை ஏற்பட்டதும் அவரது ஆத்மா வந்து உங்களைக் காப்பாற்றி விட்டது ” என்று சொல்லி அந்தக் காவலாளி பெருங்குரலெடுத்து அழுதான்.

நான் திகைப்பில் இருந்து விடுபட வெகு நேரம் ஆயிற்று. பின் வீடு செல்வதற்காக பைக் எடுக்க ஸ்டாண்ட் சென்றேன். என் பைக்கை ஸ்டார்ட் செய்து திருப்பும்போது பக்கத்தில் நின்றிருந்த ஸ்கூட்டர் மீது பார்வை பட்டது.

பஜாஜ் சேதக் !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *