காதல் மறுப்பு தினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 10,086 
 
 

காதலர் தின எதிர்ப்புப் போராட்டதிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தார் பாளை பரந்தாமன். காதலைப் பற்றியும் காதலர் தினத்தைப் பற்றியும் அவர் தெரிந்து வைத்திருந்ததை விட தன் சாதியையும் தன் சாதி மக்களையும் பற்றி அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தார். ஒரு சாதிக் கட்சியின் தலைவராக பத்து வருடங்கள் தாக்குப் பிடிப்பதற்கு அது தேவைதானே ?

கடந்த சில வருடங்களாக தன் சாதி மக்களுக்கு எல்லா அரசியல் கட்சிகளின் மீது ஒரு வித ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்பட்டிருந்தது. அதனால் உண்டாகியிருந்த ஒரு வெற்றிடத்தை நிரப்பிக் கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் அந்த சாதிக் கட்சி. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த கட்சி, கடந்த ஐந்து வருடங்களில் அனைவரின் எதிர்பார்ப்பையும் தாண்டி ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி இருந்தது. எல்லா அரசியல் தலைவர்களைப் போலவே பரந்தாமன் என்ற பெயருடன் சொந்த ஊரான பாளையங்கோட்டையை அடைமொழியாகச் சேர்த்து பாளை பரந்தாமன் என்று வைத்துக் கொண்டார்.

பரந்தாமன் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை தெளிவாகக் கணித்து வைத்திருந்தார். அவருடைய கணிப்பு சரியானால் வரப் போகும் தேர்தலில் குறைந்த பட்சம் இருபது தொகுதிகளிலாவது ஒரு கணிசமான வாக்குகளைப் பிரிப்பது உறுதி. அவருடைய கட்சி தனித்து நின்று எந்தவொரு கோட்டையையும் பிடிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் சரியான அணியோடு கூட்டணி சேரும் பட்சத்தில் ஒன்றிரண்டு சீட்டுகள், வாரியப்பதவிகள் தவிர இரண்டு தலைமுறைக்கு தேவையான பணத்தையும் பார்த்து விடலாம்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் அவர் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். தொடர்ந்து தன் கட்சியின் செயல் பாடுகளை விளம்பரப்படுத்தி, வெளிச்சத்திலேயே வைத்திருக்க வேண்டியதுதான். அதன் அடிப்படையில் இன்று கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் காதலர் தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். எப்போதுமே காதலர் தினத்தன்று காதல் செய்திகளைப் போலவே எல்லா ஊடகங்களும் காதல் எதிர்ப்பு செய்திகளுக்கும் கொஞ்சம் இடத்தை கொடுப்பது வழக்கம். அந்த இடத்தை இந்த முறை தன் கட்சி முழுமையாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று பரந்தாமன் கணக்குப் போட்டார்.

இந்த வருடம் அவர் காதல் எதிர்ப்பில் தீவிரமாக இருப்பதற்கு வேறொரு தனிப்பட்ட காரணமும் இருந்தது. 24 வயதான தன் ஒரே மகள் மதுமலர், தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவனைக் காதலிப்பதும், அவன் தன் சாதிக்காரனாக இல்லாமல் மிகவும் கீழ் நிலையில் உள்ள ஒரு வேறொரு சாதிக்காரன் என்பதும் அவரை மிகவும் இக்கட்டான நிலைமையில் நிறுத்திவிட்டது. அவருடைய மகள் உருவத்தில் மட்டுமன்றி, பிடிவாதத்திலும், மன உறுதியிலும் கூட அப்படியே அப்பாவின் சாயல். ஆகவே, காதலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் எந்த வித பலனையும் தராது. மாறாக எதிர் வினைகள் அதிக சிக்கலாக முடியலாம். அதனால் இந்த இடியாப்பச் சிக்கலை மிகவும் நேர்த்தியாகத்தான் பிரிக்க வேண்டும் என்று நினைத்தார் பரந்தாமன்.

பரந்தாமன் அந்தக் காதலின் பின் விளைவுகளை சற்று யோசித்துப் பார்த்தார். இந்த காதல் மட்டும் திருமணம் வரை சென்று விட்டால், அவருடைய செல்வாக்கு அவர் சாதி மக்களிடையே வெறும் செல்லாக்காசாக ஆகிவிடும் என்பது மட்டும் நிச்சயம். அதனால் இது எந்த நிலையிலும் நடந்து விடக் கூடாது. சாம, பேத, தான, தண்டம் என்று எந்த வழியிலாவது, எதன் மூலமாவது, எப்பாடு பட்டாவது இந்தக் காதலைப் பிரித்து விடவேண்டும்.

இந்த வருடம் அவர் திட்டமிட்டபடி காதலர் தின எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், தன் செல்வாக்கு மேலும் உயரலாம். கொஞ்ச நாள் கழித்து மகளிடம் பக்குவமாகப் பேசி தன் மானம் மரியாதை எல்லாமே அவள் கையில் தான் இருக்கிறது என்று கெஞ்சி, பாசம் அன்பு எல்லாவற்றையும் பணயம் வைத்தாவது அவள் மனதை மாற்றி விட வேண்டும். இது நடக்குமா நடக்காதா என்று இப்போதைக்கு தீர்மானமாகச் சொல்ல முடியாதுதான். ஆனால், இதை விட வேறு மாற்று வழிகள் எதுவும் அவருக்கு இப்போதைக்கு புலப்படவில்லை.

காதலர் தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் செயல் திட்டம் கட்சி செயற்குழுவில் ஒரு நாள் முன்னதாகவே வகுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத்தில் இருக்கும் ஐந்து பூங்காக்களை தேர்ந்தெடுத்திருந்தார்கள். சரியாக நான்கு மணிக்கு பூங்காவிற்கு உள்ளே புகுந்து காதலர்கள் போல் உட்கார்ந்திருப்பவர்களை மடக்கி காதலர் தினம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கோஷம் எழுப்பி, அவர்களின் முகவரி, மொபைல் போன், பெற்றோர் முகவரி போன் நம்பர் என்று கேட்டு வாங்குவது. இதிலேயே பயந்து போய் பெரும்பாலும் ஓடி விடுவார்கள்.

அதையும் மீறி சிக்கும் மீதிப் பேரின் முகத்தில் கரியைப் பூசி கழுத்தில் காதலர் தின எதிர்ப்பு அட்டைகளை மாட்டி விட்டு துரத்துவது. காவல் துறையை தங்களை கைது செய்ய அனுமதித்து வேனில் ஏற்றும் வரை எதிர்ப்பு கோஷம் போட்டு தொலைக்காட்சி சானல்களில் வரும்படி பார்த்துக் கொள்வது. இவை எல்லாவற்றையும் வீடியோ எடுத்து பிரதான ஊடகங்களுக்கும் தொலைகாட்சி சானல்களுக்கும் அனுப்புவது.

இதில் முக்கிமாக கவனத்தில் வைக்க வேண்டியது ஐந்து குழுவை சேர்ந்தவர்களும் எந்த இடத்திற்கு செல்லப் போகிறார்களோ அந்த இடத்தில் அவர்கள் முற்றிலும் புதியவர்களாய், வெளியாட்களாய் இருக்க வேண்டும். அப்போதுதான் பூங்காவில் இருக்கும் எவரும் தெரிந்தவர்களாய் இருக்க மாட்டார்கள். ஆர்ப்பாட்டக் குழுவின் திட்டத்திலும் எந்தப் பிசகும் ஏற்படாது.

பரந்தாமன் தலைமையிலான குழுவுக்கும் வேறு மூன்று குழுக்களுக்கும் பிரச்னை ஏதும் இல்லை. ஏற்கனவே கடந்த முறை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனுபவம் உள்ளவர்கள். ஆனால் ஐந்தாவது குழுவை சேர்ந்த கலைச்செல்வன் இளைஞர் அணித்தலைவன். ஆறு மாதத்திற்கு முன்தான் அந்தப் பதவிக்கு வந்தவன்.. பரந்தாமன் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் சிறிய சுதந்திர தினப் பூங்காவிற்கு அவன்தான் தலைமை வகிக்கப் போகிறான் அவன் சென்னைக்கு புதியவன், வந்தே ஆறு மாதம்தான் ஆகிறது என்பதால்தான் அவனை முக்கியமில்லாத அந்த சிறிய பூங்காவிற்கு தேர்ந்தெடுத்தார்கள்.

கலைச்செல்வன் செயற்குழுவின் மற்ற உறுப்பினர்களை விட கிட்டத்தட்ட முப்பது வயது இளையவனாக இருந்தாலும், புத்திசாலி, கற்பூர புத்தி. எதையுமே ஆழமாக அலசிப் பார்த்து தீர்மானமாக முடிவெடுக்கும் திறமையுள்ளவன். அவனுடைய செயல்பாட்டில் பரந்தாமனுக்கு சந்தேகம் இல்லை என்றாலும் இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் முன் அனுபவம் இல்லாதவன் என்ற ஒரே காரணத்தால் அவனுக்கு ஒரு முறைக்கு இரு முறையாக ஆர்ப்பாட்டத்தின் செயல் திட்டத்தை விளக்கினார்.

தன் செயல் திட்டம் முழுமையாக வெற்றியடைவதைப் பற்றி பாளை பரந்தாமன் கனவு கண்டு கொண்டிருந்த அதே நேரத்தில் கலைச்செல்வனும் தன் திட்டத்தைப் பற்றி தனியாக வேறொரு கனவு கண்டு கொண்டிருந்தான். அடிப்படையில் கட்சியின் திட்டமும், தனது திட்டமும் ஒன்றாக இருந்தாலும், அதை செயல்படுத்தும் விதத்தில் ஒரு சிறு மாற்றத்தை வகுத்திருந்தான் கலைச்செல்வன்.

கலைச்செல்வன் அந்தக் கட்சியில் இணைந்ததில் இருந்தே கட்சியின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருந்தான். அந்தக் கட்சியில் பெரும்பாலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் இருப்பதும், அங்கே இளைய தலைமுறைக்கான இடம் சுத்தமாகக் காலியாக இருப்பதும் மற்றவர்களுக்கு பாதகமாகத் தெரிந்தாலும் அதுவே கலைச்செல்வனுக்கு சாதகமாகத் தென்பட்டது. சரியான முறையில் காய்களை நகர்த்தினாலே போதும். இன்னும் பத்தே ஆண்டுகளில் கட்சியே தன் வசம் ஆவதற்கும் வாய்ப்புள்ளது.

கலைச்செல்வன் கணக்கு இப்படித்தான் போனது. நாட்டில் பதினைந்து வயதில் இருந்து முப்பது வயது வரை இருப்பவர்கள் 30 சதவிதத்திற்கும் மேல். அவர்களை மட்டும் தன் பக்கம் இழுத்து விட்டால் எந்தவொரு கட்சியோ இயக்கமோ அசைக்க முடியாத ஒரு சக்தியாகிவிடும்., தான் சார்ந்திருக்கும் கட்சியின் காதலர் தின எதிர்ப்பும் காதல் எதிர்ப்பும் அந்த இளைய தலைமுறையிடம் இருந்து கட்சியை தனிமைப்படுத்தி விடும் என்பதையும் வருங்காலத்தில் அது கட்சியை வளர்ப்பதற்கு பயன்படாது என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான்.

ஆனாலும் அவனுக்கு தற்போதைக்கு காலூன்றுவதுற்கு அந்தக் கட்சியும் அதன் முகவரியும் தேவையாய் இருந்தது. ஆகவே கட்சியின் போக்கிலேயே செல்வதுதான் இப்போதைக்கு உசிதமான செயல். அதனால்தான் காதலர் தின எதிர்ப்புக்கு அவன் ஒப்புக் கொண்டான். ஆனாலும் அதை செயல்படுத்தும் முறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை யோசித்து வைத்திருந்தான்.

கட்சியின் செயல்திட்டம், காதல் எதிர்ப்பு கோஷங்களை எழுப்புவது, காதலர்களை மிரட்டுவது, முகத்தில் கரி பூசுவது, காதலர்கள் கழுத்தில் காதல் எதிர்ப்பு அட்டைகளை மாட்டுவது – இதுதான் மற்ற நான்கு பூங்காக்களிலும் நடக்கப் போவது.

ஆனால் கலைச்செல்வன் செய்யப் போவது சற்று வித்தியாசமானது. பூங்காவின் உள்ளே புகுந்தவுடன் காதலர்களைத் தனிமைப் படுத்தி அவர்கள் காதல் உண்மையானதா என்று கேட்பது. உண்மை என்று சொல்லும் பட்சத்தில் அவர்களுக்கு மாலை மாற்றி தாலி கட்டச் சொல்வது. நாங்கள் காதலுக்கு எதிரி இல்லை என்றும் திருமணத்தில் முடியும் காதலுக்கு ஆதரவாளர்கள் என்று கோஷம் எழுப்புவது. இவை எல்லாவற்றையும் பூங்காவில் இருக்கும் மற்ற பொது மக்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்காத அளவிற்கு செயல்படுத்துவது. இதுதான் அவன் போட்டு வைத்த திட்டம்.

அவன் தயார் செய்து வைத்திருந்த எதிர்ப்பு அட்டைகள் கூட இப்படித்தான் இருந்தன

உண்மைக் காதலுக்கு உதவி ; உதவாக்கரை காதலுக்கு உதை

திருமணத்தில் முடியாத இருமனம் எதற்கு ?

பொழுது போக்குக் காதலைப் புதைப்போம். மணம் முடிக்கும் காதலைப் போற்றுவோம்.

இந்த செயல் திட்டத்தை அவன் கட்சியின் செயற்குழுவில் சொல்லாததற்கு ஒரே காரணம்தான். சொல்லியிருந்தால் சம்மதித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அவன் அதைச் செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அன்றைக்கு தொலைக்காட்சியில் மற்றவர்களை விட இவன் செய்வதுதான் முன்னிலையாக காட்டப்படும், பேசப்படும், விவாதிக்கப்படும். அதனால் இனிமேல் வெளியிலும் கட்சியிலும் அவன் கவனிக்கப்படுவது நிச்சயம்.

இரண்டாவது, அவன் காதலுக்கு எதிரியல்ல என்ற ஒரு எண்ணத்தை கொஞ்சமாவது சமுதாயத்தில் விதைத்து விடுவான். அதனால் இளைய சமுதாயம் இவனை முற்றிலுமாக ஒதுக்கிவிடாது. இளைய சமுதாயத்தை அடித்தளமாகக் கொண்டு அமைக்க விருக்கும் அவனுடைய வருங்கால அரசியல் திட்டத்திற்கு அது நிச்சயமாக உதவும்.

மறுநாள், திட்டமிட்டபடியே நான்கு மணிக்கு ஐந்து குழுக்களுமே தங்கள் ஆர்ப்பாட்டத்தைத் ஐந்து பூங்காக்களிலும் தொடங்கின. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் எதிர்பார்த்தபடியே காவல் துறையால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர். சுமார் எட்டு மணிக்கு, கைது செய்யப்பட்டிருந்த அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு காபியும் டிபனும் சாப்பிடலாம் என்று கட்சித் தொண்டர்களுடனும் ஆர்ப்பாடக் குழுவினருடனும் பக்கத்து ஓட்டலில் சாப்பிட நுழைந்த போது பரந்தாமனின் மொபைல் அடித்தது.

மறுமுனையில் மனைவி பதற்றத்துடன் “ என்னங்க … நம்ம பொண்ணு … … நம்ம பொண்ணு … என்று ஆரம்பித்தவர் மேலே தொடர முடியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

பரந்தாமனுக்கு சட்டென்று வியர்த்தது ஒரு கணம் இதயம் நின்று போனது என்னம்மா சொல்றே என்ன ஆச்சு ? என்றார் நடுக்கத்துடன்

நம்ம பொண்ணு நம்ம தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டாங்க ! என்று அழுதார்.

என்னடி ? என்னாச்சு சொல்லித்தொலை ! என்றார் பதற்றத்துடன்

டீ வீயைப் பாருங்களேன். ஐயோ ! திரும்பத் திரும்ப போட்டுப் போட்டுக் காட்டுறாங்களே ! என்றார் அழுது கொண்டே.

பரந்தாமன் எதிரே சுவற்றில் இருந்த டீ.வியைப் பார்த்தார். எட்டு மணி செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. செய்தி வாசிப்பவர் சொல்லிக் கொண்டிருந்தார் “ இன்று காதலர் தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சென்னையின் சில இடங்களில் நடந்தது, அதில் சுதந்திர தினப் பூங்காவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மறுமலர்ச்சிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பூங்காவில் இருந்த காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். அதிலிருந்து சில பரபரப்பான காட்சிகளை உங்கள் முன் வைக்கிறோம்”

அங்கே சுதந்திரதின பூங்காவில் கலைச்செல்வனும் அவன் குழுவும் கோஷமிட்டது சில காதலர்கள் வேக வேகமாக இடத்தைக் காலி செய்தது, சில ஜோடிகளை மாலை மாற்ற செய்தது, தாலி கட்டச் செய்தது எல்லாமே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. மாலையோடு வேக வேகமாக வெளியில் வந்த சில ஜோடிகள் மாலையை அங்கேயே கழற்றி எறிந்து விட்டு பைக்கில் ஏறிப் பறந்தனர்.

ஆனால் ஒரே ஒரு ஜோடி மட்டும் மாலையைக் கழற்றாமல், கையோடு கை சேர்த்துக் கொண்டு பூங்காவிற்கு வெளியே வந்தது. அருகில் வந்து படம் பிடித்த காமிராவிற்கு அந்தப் பெண் தன் புதுத் தாலியை தூக்கிப் பிடித்துக் காட்டினார். ஒரு தொலைக்காட்சி நிருபர் கேட்டார்

இந்த கட்டாயத் திருமணம் உங்களுக்கு சம்மதமா ?

அந்தப் பெண சொன்னார் “ நாங்கள் இரண்டு வருடமாக உயிருக்கு உயிராக காதலிக்கிறோம். எங்கள் வீட்டில் இவர் தாழ்ந்த சாதி என்று காரணம் காட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்றைய காதலர் தினம் எங்களை வாழ்க்கையில் ஒன்று சேர்த்து வைத்து விட்டது. ஒரு வகையில் இது எதிர்பாராத மகிழ்ச்சிதான்”

அப்படியென்றால், இது போன்ற காதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சரிதான் என்பது உங்கள் வாதமா ?

நிச்சயமாக இல்லை ! இது போன்ற அரை வேக்காட்டு ஆர்ப்பாட்டங்களால் காதலைத் தடுத்து விட முடியாது. இது ஆத்மாவில் வளரும் தீ ! அடுத்தவர்களின் பெருமூச்சால் அணைந்து விடுவதில்லை !

உங்களைப் பற்றி சொல்ல முடியுமா ?

என் பெயர் மதுமலர். என் காதலர் ….. இல்லையில்லை …. கணவர் பெயர் கார்த்திக்.

அப்பா பெயர் ?

அப்பா பெயர் பரந்தாமன். ….. பாளை பரந்தாமன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *