காக்கைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 4,028 
 
 

அந்த ஆடம்பரமான பங்களாவின் நடுக்கூடத்தில் விருந்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்காகச் செய்துவிட்டு ஒதுங்கி வந்து தனியே அமர்ந்தான் நாகலிங்கம்.

டீபாயில் கிடக்கும் தினசரிகளில் ஒன்றை எடுத்து விரித்தான்.

காவல்காரன்பட்டி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் 1973 – 76 ஆம் இளநிலை பட்டப்படிப்பு கணிதம் படித்த மாணவ – மாணவியர்கள் விளம்பரம் கண்ட பத்தாம் நாள்…. தாங்கள் நாட்டில் எந்த நிலையில் இருந்தாலும், எந்த மூலையில் இருந்தாலும் உடன் வரவும். அவ்வாண்டு அதே வருடங்களில் தங்களோடு படித்த நான், அனைவரையும் ஒன்று சேர்த்துப் பார்க்க ஆசை.! வந்து செல்பவர்களுக்குப் பயணச் செலவு, படிச் செலவுகள் உண்டு. வந்து சேர வேண்டிய இடம் அம்பாரி மாளிகை, 59, அரசினர் சதுக்கம், காரைக்கால்.

இவன்
நாகலிங்கம்.

முடித்துவிட்டு அங்கு கிடைக்கும் அத்தனைப் பத்திரிகைகளையும் ஆராய்ந்தான். படித்த விளம்பரம் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் அச்சு பிசகாமல் அப்படியே வந்திருந்தது.

நாகலிங்கம் அப்படியே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.

‘தன்னோடு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆண் 40, பெண் 10. மொத்தம் 50 பேர்கள். அனைவரும் இந்த விளம்பரம் படித்து விட்டு வருவார்களா..??!’

விளம்பரம் கொடுத்த நாட்களிருந்து பலமுறை ஓடிய சிந்தனை இப்போதும் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து உறுத்தியது.

வரட்டும்!

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தப் பேர்களை மொத்தமாக சந்திப்பது என்பது அபூர்வம். இந்த ஐம்பது பேர்களில் எத்தனை பேர்கள் இறந்தார்களோ..? இருப்பவர்களில் எத்தனைப் பேர்கள் கண்களில் இந்த விளம்பரம் படும், படிப்பார்கள்.?! எத்தனைப் பேர்கள் வெளிநாட்டில் இருக்கின்றார்களோ..?! படித்தும் வர முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்களோ…?!! – யோசனை இப்படி ஓடியது.

இவர்களில் சிலர் வேலையில் இருக்கலாம். பலர் இல்லாமலும் இருக்கலாம். பலர் தாழ்ந்து, சிலர் உயர்ந்து, ஒன்றிரண்டு பேர்கள் உச்சாணிக் கொம்பிலும் இருக்கலாம். இருப்பவர்கள் அத்தனைப் பேர்களுக்கும் திருமணம் ஆகி இருக்கும். எவர் எவர் வாழ்க்கையில் எத்தனை எத்தனை பூகம்பங்களோ..? ! எல்லோருக்கும் கிட்டத்தட்ட தன்னை ஒத்து 40, 42 வயதிருக்கும். கொஞ்சம் நரை விழுந்து. முடி கொட்டி, சொட்டை விழுந்து..

…சிந்தனையின் சிறகுகள் விரிந்து கொண்டே சென்றது.

“கிளிங்க்” – அழைப்பு மணி இவன் மூளையில் பட்டு சிந்தனையைத் தொட்டு நிறுத்தியது.

திடுக்கிட்டு திருந்திருந்த வாசலைப் பார்த்தான் நாகலிங்கம்.

கொத்தாகப் பத்துப் பேர்கள் அங்கு நின்றார்கள்.

“ஹேய்…!” நாகலிங்கம் ஆச்சரியத்தில் வாய் விரித்து…உற்சாகமாய் எழுந்து…

“வாங்க…! வாங்க…” வரவேற்றான்.

வந்த அனைவரும் உற்சாகமாய் இவனுக்கு கை கொடுத்துவிட்டு இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

அடுத்து சில வினாடிகளில்…ஐந்து பெண்கள் இடை பெருத்து, வந்தார்கள்.

நாகலிங்கம் அவர்களையும் கை கூப்பி வரவேற்று அமர வைத்தான்.

வந்தவர்கள் அத்தனைப் பேர்களும் அந்த மாளிகையை வியப்பாக நோட்டமிட்டு கண்களை சுழலவிட….

நாகலிங்கம் இன்னும் நண்பர்கள் வருவார்களா..? என்று எதிர் பார்த்து வாசலைப் பார்த்தான்.

முப்பது நிமிடங்கள் கழித்தும் யாரையும் காணோம். இனியும் வரமாட்டார்கள் என்று முடிவிற்கு வந்து…

“கவனிக்கணும் நண்பர்களே..!” என்று விளித்து அவர்களைப் பார்த்தான்.

அவர்கள் இவனைப் பார்த்தார்கள்.

“காலவெள்ளம் நம் தோற்றப்பொழிவுகள் மாறி இருக்கு. எனக்கு உங்க பெயர்கள் மறக்கடிச்சிருக்கு. அதனால நீங்களெல்லாம் மொதல்ல பேர், வேலை சொல்லி எனக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்திக்கனும் !” சொன்னான்.

முதலில் எழுந்தவன்…

“நான் சிவா. படிப்பை முடிச்சதுமே வங்கி தேர்வெழுதி பாரத வங்கியில் காசாளராய் இருக்கேன்!” சொல்லி அமர்ந்தான்.

“நான் சந்திரசேகரன். கட்டடப் பொறியாளர். மத்திய பொதுப்பணித்துறையில் வேலை.” சொன்னான்.

படிக்கும் போது அவனுக்கு மூளையைப் போலவே தலையிலும் நிறைய முடி. இப்போதும் அப்படித்தான் இருந்தான். ஆனால் உச்சியில் சொட்டை. அடர்த்தியான மீசை. நரைகள் அடியோடு கத்தரிக்கப்பட்டு மொத்தமாக இருந்தது

அடுத்து கணேசன் எழுந்தான்.

தலை முக்கால்வாசி நிறைத்திருந்தது. மீசையில் நிறைய வெள்ளிக் கம்பிகள். கண்கள் தொங்கி, வயிறு தொப்பை விழுந்திருந்தது. படிக்கும்போது இருந்த அதே நிறத்தில் இருந்தான். கை பட்டால் கன்றி விடும் சிகப்பு.

விஜயகுமார் நெல் கொட்டி வைக்கும் குதிரு போல கழுத்து தெரியாமல் பருத்திருந்தான். படிக்கும்போது இவனுக்கு ஈர்க்குச்சி உடம்பு. அப்படியே பட்டப்பெயர். எப்படி இப்படி மாறினான் என்று நாகலிங்கத்திற்கே வியப்பாக இருந்தது. அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பதாக சொன்னான்.

ராமசாமிதான் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு முகத்தில் ஏகப்பட்ட கவலை, தாடி மீசையுடன் இருந்தான். கல்லூரியில் கதாநாயகனாக இருந்தவன்.

படிப்பில் தோல்வியைத் தழுவி வேலை ஏதும் கிடைக்காமல் மளிகை கடையில் வேலை பார்ப்பதாகச் சொன்னான்.

அப்புறம்… ஜெயபால், சுந்தரேசன், மகாலிங்கம், அரசு அலுவலகங்களில் எழுத்தர்களாக குப்பைக் கொட்டுவதாகச் சொன்னார்கள்.

குமார் செத்துப் போயிருந்தான்.

மாணிக்கம் மனநிலை சரி இல்லாதவனாக சுற்றுகின்றானென்று சொல்லப்பட்டது.

பெண்களில் சரோஜா தடிமனாக இருந்தாள்.

ஏஞ்சல் அதிகம் உடைந்து போயிருந்தாள்.

மும்தாஜிக்கு முகமெல்லாம் புன்னகை. கழுத்து நிறைய நகை. கணவன் துபாயில் இருப்பதாக சொன்னாள். இவள் பிள்ளை குட்டிகளுடன் தனியே இருப்பதாக சொன்னாள்.

அலமேலு கதைகள் எழுதுகிறாளாம். நிறைய எழுதுகின்றாளாம். குடும்பம், கணவன், பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு இவளால் எப்படித்தான் எழுத முடிகின்றதோ..?! நாகலிங்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு வகுப்பில் படித்த ஒரு குலை காய்கள். எப்படியெல்லாம் உருமாறி, சிதறி கிடக்கின்றன. நாகலிங்கத்திற்கு வியப்பாக இருந்தது.

ராதாவை சிவப்பு விளக்குப் பகுதிக்கு கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. கேட்கவே அதிர்ச்சி, வேதனையாக இருந்தது.

ஓரளவிற்கு வந்தவர்கள், வராதவர்கள் என்று அலசப்பட்டப்பிறகு விருந்து பரிமாறப்பட்டது. நாகலிங்கம் அனைவரையும் பார்த்து பார்த்து உபசரித்தான்.

விருந்து முடிந்ததும் தன் கதையை ஆரம்பித்தான்.

“நான் உலக தாதா முகமது இப்ராஹிமோட கை ஆள்!” முதல் இடியை இறக்கினான்.

“நாகு..!!” அத்தனைப் பேர்களும் அதிர்ச்சியில் அரண்டார்கள்.

“இந்த மாளிகை என் கோடி, பில்லியன் கணக்கு சொத்தெல்லாம் அவனால சம்பாதிக்கப்பட்டது”.

எல்லாரும் உறைந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“என் தலைக்கு இந்த இந்திய அரசாங்கம் ஒரு கோடி விலை பேசி இருக்கு. காரணம் பாட்னாவுல வெடிகுண்டு, கல்கத்தாவுல வெடிகுண்டு என்று ஏகப்பட்ட பொருள், உயிர் சேதங்கள் என்று என் மீது நிறைய குற்றச்சாட்டுகள்.” நிறுத்தினான்.

எல்லோர் முகங்களிலும் இறுக்கம். வியர்வை அரும்புகள்.

“நான் தாதா ஆட்களிடமிருந்து பிரிஞ்சி வந்துட்டதுனால அவுங்களும் தேடிக்கிட்டிருக்காங்க” என்றான்.

எவரிடமும் ஈயாடவில்லை.

“என் பில்லியன் கணக்கான சொத்து பத்துகள், காட்டிக்கொடுக்கிற தொகை எல்லாம் வீணாவிடக்கூடாது என்கிறது என் எண்ணம். அதுக்கு நான் ஒரு உபாயம் வைச்சிருக்கேன்.”

“என்ன..?” எவரும் கேட்கவில்லை. கம்மென்றிருந்தார்கள்.

“என் பணம் சொத்து பத்துகளாலெல்லாம் என்னோடு பட்டப் படிச்ச உங்களுக்குச் சேரனும்ன்னு உயில் எழுதி வச்சிருக்கேன். ஆனா என்னைக் காட்டிக்கொடுக்கிற ஒரு கோடி தொகையை யார் எடுத்துக்கப் போறாங்க என்பதுதான் பிரச்சனை. யார் எடுத்துக்கப் போறீங்க..?” நாகலிங்கம் கேட்டு தன் முன் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தான்.

எவரும் இம்மி அசையாமல் இருந்தார்கள்.

நாகலிங்கம் வெகுநேரம் காத்திருந்தும் பலனில்லை, பதிலில்லை.

“நன்றி!!” சொல்லி முகம் மலர்ந்து தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்தான்.

‘செத்தோம்!’ – இருந்தவர்கள் முகங்கள் வெளிறியது. மனங்களில் பயப்பந்து உருண்டது. நாக்குகள் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டன.

ஆனால்…

நாகலிங்கம் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் நெற்றிப் பொட்டில் வைத்து….

“டுமீல்!” இரத்தம் கொட்ட சாய்ந்தான்.

ஒரு கணம் அதிர்ந்த அத்தனைப் பேர்களும் சுதாரித்து அடுத்த வினாடி காக்கைகள் போல் பறந்து நான் முந்தி, நீ முந்தி என்று காவல் நிலையத்தை நோக்கி ஓடினார்கள்!!

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *