கறுப்பு மையும், விராலு மீனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 3,390 
 
 

புரண்டு புரண்டு படுத்தும் வெகுநேரமாக உறக்கம் வரவில்லை. பேனின் ரெகுலேட்டரை பார்த்தேன். ஐந்தில் தான் இருந்தது. அதற்கு மேலும் வேகத்தைக் கூட்ட அதில் வழியில்லை.

மூச்சு திணறக் கூடிய அளவிற்கு வீட்டிற்குள் ஒரே புழுக்கம். அந்த வெப்பத்திலும், புழுக்கத்திலும் கூட என்னுடைய இரண்டு வாண்டுகளும் விழித்துக்கொண்டிருப்பதைப் போல, அரைக் கண்களைத் திறந்தவாறு, நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். காலையிலிருந்து விளையாடிய விளையாட்டு அப்படி. அதிலும் அந்த சின்ன வாண்டு ஒரு நிமிடம் கூட ஓரிடத்தில் உட்காராமல் வீட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி.. அப்படி ஒரு விளையாட்டு. சித்ராவும் அசந்து தூங்கிவிட்டிருந்தாள்.

பின்னே.. இந்த வாண்டுகளையும் வீட்டு வேலைகளையும் ஒருசேர கவனிப்பது என்றால் சும்மாவா?

பாவம்! என்னுடைய அம்மாவிற்குத்தான் தூக்கம் வரவில்லை போலும். கோடாரி தைலத்தை எடுத்து காலில் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்.

“ரகு.. கால கொஞ்சம் மிதிச்சி விடுறியா? ரொம்ப இழுக்குது..” என்றாள்.

“இரும்மா.. எனக்கே நெஞ்செல்லாம் அடைச்சுக்கிட்டு ஒரே மூச்சு திணறலா இருக்கு..” என்று சலிப்புடன் பாதி திறந்திருந்த ஜன்னல் கதவுகளை முழுதாக திறந்து விட்டேன்.

தெருவிளக்கின் வெளிச்சத்தோடு கூடவே எதிர்வீட்டு பொன்னம்மாளின் வாசற்படி விளக்குகளும் இன்று மிகப் பிரகாசமாக எரிந்து கண்களை கூச வைத்தன.

வழக்கமாக இந்நேரத்திற்கெல்லாம் அவர்கள் கதவை அடைத்து தூங்கிவிட்டிருப்பார்கள். அத்துடன் இன்றுதான் அவர்கள் வீட்டு வாசற்படி விளக்கு பிரகாசமாக எரிந்துகொண்டிருப்பதை பார்க்கிறேன். வழக்கமாக ஒரு ஜீரோ வாட் பல்புதான் பொழுது போன நேரத்தில் சிறிது நேரம் எரிந்துகொண்டிருக்கும். மற்ற நேரங்களில் தெருவிளக்கின் மங்கலான வெளிச்சமே அவர்களுக்கு போதுமானதாகவும், தங்களுடைய மாத மின்சார செலவைக் குறைத்துக்கொள்ளவும் உதவியாகவும் இருந்தது எனலாம். தெருவிலுள்ள மற்றவர்களுக்கும் அப்படித்தான்.

ஜன்னலின் வழியே கண்கள் எட்டிய தூரம் வரை பார்க்கும்போது தெருவில் உள்ள அனைத்து வீட்டு வாசற்படி விளக்குகளும் இன்று பிரகாசமாக எரிந்து கொண்டிருப்பதை அறிய முடிந்தது. இன்று என்ன விசேஷமோ அல்லது என்ன பிரச்சனையோ என்று எண்ணிக்கொண்டே அம்மாவின் காலை மிதித்து விட ஆரம்பித்தேன்.

திறந்திருந்த ஜன்னல் வழியே பார்க்கும் பொழுது, எதிர்வீட்டு பொன்னம்மாள், அவளுடைய வீட்டிற்குள் போவதும் வெளியில் வந்து தெரு முனையை பார்ப்பதுமாக பரபரப்புடன் காணப்பட்டாள்.

பக்கத்து வீட்டு பால்கார பாயும், அவருக்கு அடுத்த வீட்டில் வசிக்கும் கான்டிராக்டர் தனபாலும் பேசிக்கொள்வது சன்னமாக கேட்டது.

“எவ்வளவு பொறுப்பில்லாம இருக்கானுங்க பாருங்க?” போன தடவை இந்நேரத்துக்கெல்லா நம்ம தெருவுக்கு கொடுத்து முடிச்சிட்டாங்க..” என்றார் பால்கார பாய்.

“இப்ப கெடுபிடி ஜாஸ்திங்க.. அவங்க என்ன பண்ணுவாங்க..பதினோரு மணிக்கு மேலதான் அவங்களால கொஞ்சம் தல காட்ட முடியும்.. அதனாலதான்..” என்றார் கான்ட்ராக்டர் தனபால்.

“என்ன ரகு? தெருவே ஒரே பரபரப்பா இருக்கு..” என்று கண்களை மூடியவாறே கேட்டாள் அம்மா.

“தெரியலம்மா.. அதிசயமா இன்னைக்கி எல்லார் வீட்டு வாசல்லயும் லைட் எரியுது.. பொழுது போன நேரத்திலேயே ஒருத்தரும் வாச லைட் போட மாட்டாங்க.. இன்னைக்கு என்னன்னு தெரியல பதினோரு மணி ஆகியும் எல்லாரு வீட்டுலயும் லைட் எரியுது..” என்று சொல்லியபடியே வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.

தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு லட்சுமி அக்காவும், பூக்கார செல்லம்மாவும் என்னைப் பார்த்ததும் புன்னகையுடன்,

“என்ன தம்பி..? இன்னும் தூங்கலையா? புள்ளைங்க எல்லாம் தூங்கியாச்சா?” என்றாள் லட்சுமி அக்கா.

“ம்.. தூங்கிட்டாங்க.. என்ன விசேஷம் இன்னைக்கு? தெருவே ஜகஜோதியா இருக்கே?” என்று மெலிதாய் சிரித்துக்கொண்டே கேட்டேன் நான்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

“தெரியாதா?..கட்சிக்காரங்க பணம் தர வாராங்க..”- இரகசிய குரலில் முணுமுணுத்தாள் லட்சுமி அக்கா.

“இந்நேரத்துக்கெல்லா நம்ம சின்னகம்மா தெருவுக்கு குடுத்து முடிச்சிருப்பாங்கல்ல..” என்று யோசனையுடன் லட்சுமி அக்காவை பார்த்து வினவினாள் பூக்கார செல்லம்மா.

“போன தடவை தலைக்கு ஐநூறு ரூபா கொடுத்தாங்க.. இப்ப எவ்வளவு தர்றாங்கன்னு தெரியல..” என்று கவலையும் ஆர்வமும் தொணிக்கும் குரலில் முணகினாள் லட்சுமி அக்கா.

“நடேசன் தெருவுல ஆயிரம் ரூவா கொடுத்ததா சொல்லிக்கிட்டாங்க….ஆனா நம்ம தெருன்னாலே அவங்களுக்கு எப்பவும் எளக்காரந்தா.. எதுனா கொறச்சிக் கொடுத்தா அப்புற நா உண்டு இல்லன்னு பண்ணிடுவே.. ” என்று வெற்றிலைக் கரைப் பற்கள் தெரிய சிரித்தாள் பூக்கார செல்லம்மா.

அவர்களுடன் பேசி கொண்டிருக்கும்போதே தெருமுனையில் இரண்டு நடுத்தர வயது நபர்களின் தலை தெரிய, ஆட்டோ ஓட்டும் கலையரசன் “லட்சுமி அக்கா.. சீக்கிரம் வா இங்க..” என்று குரல் கொடுத்தான். தெருவே பரபரப்பானது. லட்சுமி அக்காளும் பூக்கார செல்லம்மாளும் ஓட்டமும் நடையுமாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்தனர்.

“அவங்களே இங்க வருவாங்க.. அதுக்குள்ள என்ன ஓட்டமா ஓடுதுங்க பாருங்க.. ” என்று என்னை பார்த்து கண்சிமிட்டி சிரித்துக்கொண்டே தன்னுடைய ஆர்வத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர்களை பின்தொடர்ந்தார் பால்கார பாய். கூடவே காண்ட்ராக்டர் தனபாலும் அவரைப் பின்தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அந்த இரண்டு புதிய மனிதர்களின் தலையே தெரியாத வண்ணம் தெரு மக்கள் கூட்டம் அவர்களைச் சுற்றி மொய்த்தது.

சிறுது நேரம் வெளிக்காற்றை நன்றாக உள்வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன். அம்மா இன்னமும் தூங்காமல் அவள் காலை அவளே பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.

“கால் மிதிச்சி விடட்டுமாம்மா..?”

“வேணாம்ப்பா.. வேலைக்கு போறவன்.. சீக்கிரமா படுத்து தூங்கு.. போ..” என்றாள் அம்மா .

அறைக்குள் சென்று கட்டிலில் சாய்ந்தேன். பூக்கார செல்லம்மா வெளியில் கத்துவது கேட்டது.

“வெளியில எல்லாம் தலைக்கு ஆயிரம் ரூவா கொடுத்துட்டு இங்க மட்டும் என்ன வெறும் ஐநூறு ரூவாவ நீட்றீங்க…. எங்கள பாத்தா அவ்வளவு எளக்காரமா தெரியுதா.. ? தலைக்கு ஆயிரம் ரூவா தர்லன்னா ஓ காசு வேணா..ஒன்னும் வேணாம்… நா எதுக்கு குத்தனுமோ அதுக்கே குத்திக்கிறேன்..”

அதைத் தொடர்ந்து பல குரல்கள் சேர்ந்து ஒலிக்க, அந்த சத்தம் அடங்க சிறிது நேரம் பிடித்தது. ஒருவழியாகத் தான் கேட்டது கிடைத்த சந்தோசத்தில் செல்லம்மாளின் குரல் “விடுவேனா..” என்று அதிரச் சிரித்துக்கொண்டே கடந்து சென்றது.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் எழுந்திருக்கும் பொழுது கடிகாரம் 8:15 ஐக் காட்டியது. சித்ரா சமைத்துக் கொண்டிருந்தாள். அம்மா வெளியில் லட்சுமி அக்காளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

குளித்துவிட்டு டிவியை ஆன் செய்து அன்றைய வாக்குப்பதிவு நிலவர செய்திகளை பார்க்க தொடங்கினேன்.

“நீயும் சித்ராவும் எப்ப ஓட்டுப்போட போறீங்க.. நா லட்சுமி கூட வெள்ளன போய் ஓட்டுப்போட்டுட்டு வந்துட்டேன்..” என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் வந்தாள் அம்மா. சித்ராவைப் பார்த்தேன்.

“பத்து மணிக்கு மேல போறோம் அத்தை.. அவர் அப்படியே ஆபீசுக்கு போயிருவாரு.. நானும் அப்படியே வரும்போது காய் வாங்கிட்டு வந்துடுறேன்..” என்றாள் சித்ரா.

காலை டிபனை முடித்துக்கொண்டு, ஆபீஸ் செல்வதற்கும் தயாராக உடையை மாற்றிக்கொண்டு, சித்ராவுடன் பைக்கில் புறப்பட்டேன். தெரு முனையை கடந்து வேலாயுதம் பிள்ளை தெருவின் வழியே போய்க் கொண்டிருக்கும் பொழுது பூக்கார செல்லம்மா எதிரில் புன்னகைத்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்த பெரிய சிவப்பு நிற ஒயர் கூடையில் இரண்டு பெரிய விரால் மீன்கள் உயிருடன் துள்ளிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் ஏதோ எங்களிடம் பேச வருவதைக் கண்டு பைக்கின் வேகத்தை குறைத்தேன்.

“என்ன சதீஷம்மா? இப்போதான் ஓட்டு போட போறீங்களா? நா இப்போதான் போட்டுட்டு வாரேன்..” என்று கருப்பு மை வைத்த தன் விரலை சித்ராவிடம் நீட்டி காட்டினாள்.

“அப்படியே ஜெயந்திக்கு புடிக்கும்னுட்டு விரால் மீன் வாங்கி போயிட்ருக்கேன்.. விரால் மீனுன்னா ஜெயந்தி ரொம்ப விரும்பி சாப்பிடும்..” என்று வெற்றிலை கரை பற்கள் தெரிய சிரித்தாள் அவள்.

பதிலுக்கு சித்ராவும் “ஓ அப்படியா..” என்று கேட்டவாறே புன்னகைத்தாள். நானும் சிரித்தவாறே “இன்னைக்கி தெருவெல்லாம் மீன் குழம்புதான் போல இருக்கு?…” என்று சொல்லிக்கொண்டே பைக்கின் ஆக்சிலேட்டரை முடுக்க, பைக் மெல்ல வேகமெடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *