தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 10,641 
 
 

திகு.. திகு எனப் பற்றி எரிந்தது அந்தக் கரகச்செம்பின் மேலிருந்த டோப்புக்கிளி. காகிதச்சிறகுகள் என்றாலும் கருகியது மாரிசெல்வத்தின் மனமும்தான். டோப்புக்கிளியின் மீது தீ தன் நாக்கைச் சுழற்றி தின்றபோது கிளி கதறவில்லை. மாரிசெல்வத்தின் மனமே கதறி துடித்தது.

டோப்புக்கிளி கருகிச் சாம்பலாகித் தீ அணைந்து விட்டது. உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் அதன் உக்கிரம் அவன் இதயத்தை உருக்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் தீ இவன் முகத்தில் கரியைப் பூசியது போல் கரகச் செம்பின் மீது கரியை அப்பியது.

கரகாட்டம்

வீட்டின் முற்றத்தில் எரிந்து சாம்பலாகிப் போன அந்தக் காட்சியை ஏதோ ஸ்டில் போட்டது போல் தன் அறைக்குள் இருந்து ஜன்னல் வழியாகக் கண்களில் நீர் மல்கப் பார்த்துக் கொண்டே இருந்தான் மாரிசெல்வம்.

நேற்றிரவு கரகாட்டம் ஆடி முடித்துவிட்டு, ரசிகர்களின் கூட்டத்தில் கையெழுத்துப் போட்டும், புகைப்படத்திற்கு உடன் நின்று போஸ் கொடுத்தும் ஒரு வழியாகச் சமாளித்து, வீட்டுக்கு வந்து கதவைத் தட்டும்போது அதிகாலை நான்கு மணி ஆகிவிட்டிருந்தது. அவன் மனைவி குமுதா, தூக்கக் கலக்கத்தில் எரிச்சலோடு வந்து கதவைத் திறந்து விட்டாள். மாரிசெல்வம் தாகத்திற்குத் தண்ணீர் குடித்துவிட்டு “”குமுதா, குமுதா” என்று அழைத்தான். அவள் பதிலே பேசாததால் கொண்டு வந்த கரகச் சாமான்களை முன்னறையில் அடுக்கி வைத்துவிட்டுத் தானும் உறங்கிப் போனான்.

மாரிசெல்வம் சிறந்த கரகாட்டக் கலைஞன். ஏராளமான மேடைகளில் பல பிரபலங்களுடன் ஆடியிருக்கிறான். அரசு கலை விழாக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் கூட ஆடிப் புகழ் பெற்றிருக்கிறான். அவன் முழுநேரக் கரகாட்டக்காரன் அல்ல. ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். ஓய்வு நேரத்தில் கல்லூரி மாணவர்களுக்குக் கரகம், காவடி கற்றுத் தருவதும் அவர்களைப் போட்டிக்குத் தயாராக்கி அழைத்துச் செல்வதும் அவன் பொழுதுபோக்கு. மாணவப் பருவத்திலிருந்தே அவன் கரகம் ஆடி வருவதால் கரகம் மாரிசெல்வம் என்றே அவனுக்குப் பெயர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கரகம் அவனுக்கு உயிர். குமுதாவை அவனுக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவிற்குக் கரகாட்டத்தையும் பிடிக்கும்.

ஆனால் குமுதாவிற்குக் கரகாட்டம் என்றால் வேப்பங்காய் தின்ற மாதிரி. அந்த வெறுப்பைத் தூண்டி விடுவதுபோல் மூன்று நாட்களுக்கு முன் ஒரு பிரபலமான பத்திரிக்கையில் மாரிசெல்வத்தின் பேட்டி வெளியாகியிருந்தது. அதில் அவனும், மகேஸ்வரியும் ஜோடியாகக் கரகம் ஆடுவதுபோல் படம் வெளியாகியிருந்தது. “மயிலுக்கு மயில் தான் போட்டி மகேஸ்வரிக்கு மாரிசெல்வம் தான் போட்டி, அபூவர்மான ஜோடி’ என்று பேட்டியை முடித்திருந்தார் பத்திரிக்கை நிருபர் என லேடீஸ் கிளப் பிரசிடெண்ட் உஷாதேவி சொல்ல, இது தான் சிறிய பெட்டிக்குள் உறங்கிக் கிடக்கிற தீக்குச்சியை எடுத்து உரசிவிட்டது போல் பற்றிக்கொண்டு விட்டது.

இரண்டு நாட்களாகவே மேகம் கறுத்து மின்னல் வெட்டி, இடி இடித்தது போல் வீட்டுக்குள் மோடம் போட்டுக் கொண்டிருந்தது. இன்றைக்குச் சூறாவளியுடன் கூடிய சுனாமி வரும்போல்தான் இருக்கிறது.

காலை எட்டு மணியிருக்கும். “”இந்தாங்க காப்பி” என்று எழுப்பினாள் குமுதா. பையன் அபிநவ் பள்ளிக்குப் போய்விட்டான். இன்னும் அவள் முகம் கொடியடுப்புப் போல கனன்று கொண்டுதான் இருந்தது.

“”சாப்பிட்டு முடிஞ்சதும் மறுபடியும் தூங்கப் போயிராதீங்க. நான் உங்ககூடக் கொஞ்சம் பேசணும்” என்றாள் குமுதா.

“”ஏன் இப்பவே பேசேன்” என்றான். டாக்டரிடம் ஊசி போட்டுக் கொள்வதற்காகக் கைச்சட்டையை மடித்துக் கொள்வது போல ஒரு முறைப்பு முறைத்து விட்டு மெüனமாகவே இட்லி, சட்னி, சாம்பார் எல்லாம் பரிமாறினாள். சாப்பிட்டுக் கைகழுவி வந்து அமர்ந்தான். அவளோ அதற்கு முன்பாகவே வந்து அமர்ந்துவிட்டாள்.

“”ஏதோ பேசணும்னு சொன்னியே?” ஏன்று கேட்டான்.

“”நீங்க இனிமே இந்த எழவெடுத்த கரகத்தைத் தொட

மாட்டேன்னு என் தலைமேலே அடிச்சுச் சத்தியம் பண்ணுங்க” என்று சொல்லி அவன் கையைப் பிடித்துத் தலைமேல் வைக்கப் போனாள் குமுதா. மாரிசெல்வமோ, தீயில் சுட்ட விரலாய்த் தன் கையை சட்டென்று இழுத்துக் கொண்டான்.

“” போதும், நீங்க இவ்வளவு நாள் கரகம் ஆடிக்கிழிச்சுப் பேர் வாங்கிச் சம்பாரிச்சுக் கோட்டை கட்டினது வெளியில தலைகாட்ட முடியலை. முந்தா நாள் லேடீஸ் கிளப்பில் “வாங்கம்மா, கரகாட்டக்காரர் சம்சாரமே’ என்று எல்லோரும் என்னயக் கேலிப்பேச்சு பேசறாங்க. எனக்கு மானம் போகுது” என்று குமுறினாள்.

“”இதப் பாரு குமுதா, கரகாட்டம் என்றால் எனக்கு உயிர். எத்தனை தடவை சொல்லிருக்கேன்? எவ்வளவு வருசமா ஆடிப்பேரும் புகழும் வாங்கிருக்கேன்? எத்தனை கலைஞர்கள் என் குழுவில் இருந்து பிழைப்பு நடத்திக்கிட்டிருக்காங்க?

நல்லாச் சொல்லப்போனா, அபூர்வமான ரெட்டை வாழைக்காய் மாதிரி ஒரு நல்ல லெக்சரராகவும் ஒரு சிறந்த கரகாட்டக்காரனாகவும் ரெட்டை வாழ்க்கையை மனப்பூர்வமாக வாழ்ந்து காட்டுகிற கலைஞன் நானாகத்தான் இருக்க முடியும். அதனால.. உன் லேடீஸ் கிளப், லேடிஸ் என்ன பேசுனாலும் எனக்கு அக்கறை இல்லே” என்று கடுப்புடன் சொன்னான்.

“”ஓகோ, உங்க மகேசு ஏதாவது பேசுனாத்தான் உங்களுக்கு அக்கறையோ?” என்று காட்டமாகக் கேட்டாள் குமுதா. அடடா, பேச்சின் விஷயம் எப்படிப் புகைவண்டி மாதிரி தண்டவாளம் மாறிப்போகிறது என்பதை மாரிசெல்வம் கவனிக்கத்தான் செய்தான்.

“”எதுவும் எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சீங்களா நீங்க மகேசு, மகேசுன்னு போன்ல வழியிறதும், அபர்வமான அற்புதமான ஜோடின்னு பத்திரிக்கைக்காரங்க எழுதுறதும், நீங்க ரெண்டுபேரும் உரசிக்கிட்டு நின்னு போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறதும், அன்னைக்குப் போன்ல, நீ அட்வான்ஸ் வாங்குனாலும் ஒண்ணுதாம்மான்னு கொஞ்சுறதும் எனக்குப் பத்திக்கிட்டு வருது, நேத்து ராத்திரி அவ வீட்டுக்குப் போயிட்டுத்தான வந்தீங்க?” என்று துவாரபாலகர் மாதிரி கண்ணை விழித்துக் கொண்டு ஒருவிரல் நீட்டிக்கொண்டு மாரிசெல்வத்தை பார்த்துக் கேட்டாள். அவனது இடது சட்டைப்பைக்குள் ஒரு குத்துத் தீக்கங்குகளைப் போட்டது போல் இதயம் சுட்டது.

நேற்றிரவு கரகாட்டம் முடிந்ததும் ரசிகர் வெள்ளத்திடையே மாரிசெல்வத்துக்கு வழக்கமாக வருகிற ஆட்டோ வந்துவிட்டது. மகேஸ்வரி ஒப்பனையைக் கூடக் கலைக்கவில்லை. “”ஆட்டோ, என்னய எங்கவீட்டுல முதல்லே விட்டுட்டு, அவரைக்கொண்டு போய் விட்டுறீங்களா?” என ஆட்டோகாரனிடம் கெஞ்சினாள் மகேஸ்வரி. அவளுக்கு ஏதோ அவசர வேலையாகப் போக வேண்டியிருப்பதை உணர்ந்து கொண்ட மாரிசெல்வம், மகேஸ்வரியைத் திருமங்கலத்தில் அவளது குடிசை முன்பு இறக்கிவிட்டு விட்டுத் தன் வீட்டுக்கு வந்தது உண்மைதான்.

“”இப்படி போசாம ஊமக்கோட்டான் மாதிரி இருந்தா என்ன அர்த்தம்? இப்பவே ஊர் சிரிக்குது”

“”கரகாட்டக்காரருக்கு இவ பொண்டாட்டிதான். ஆனா, மேட் பார் ஈச்அதர், மிஸ்டர் அண்டு மிஸஸ், அபூர்வஜோடி மாரிசெல்வமும் மகேஸ்வரியும் தான்னு லேடீஸ்கிளப் பிரசிடெண்ட் உஷாதேவி சொன்னப்போ நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் செத்துடலாம் போல இருந்துச்சு. உங்களுக்கு நான் வேணுமா, கரகாட்டம் வேணுமா, சாரி, நான் வேணுமா? மகேஸ்வரி வேணுமா? முடிவாச் சொல்லுங்க” என்று வெடித்தாள் குமுதா.

ஜன்னலோரமாக அமர்ந்து பார்த்தால் புகை வண்டியில் போகும்போது எல்லாக் காட்சிகளும் நம்மைத் தாண்டிச் செல்லுமே, அதுபோல அவனை அவன் நண்பர்கள் கரகக் கலைக்காக பன்டாஸ்டிக் என்று பாராட்டுவது, அவன் மாணவர்கள் அவனை, கோல் போடுவதற்காகப் பந்தை, உயர ஏந்துவது போல் உயர்த்திப்பேசுவது, மாரிசெல்வம், மலை உச்சியில் எரியும் தீபம் எனக்கல்லூரி முதல்வர் புகழ்வது, கல்லூரியின் கீழ்மட்ட வேலைக்காரர்கள் கூட “”சார், ஆட்டம் சூப்பர்” என்று கொண்டாடுவது எல்லாம் அவனது மன ஜன்னல் வழியாக விரைந்து ஓடின.

“”உங்க மெüனத்தோட அர்த்தம் என்னன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. இனிமே ஒரு நிமிசங்கூட உங்களோட வாழ முடியாது. நான் எங்க அம்மா வீட்டுக்குப்போறேன்” என்ற குமுதா விசும்பியபடி புறப்பட்டாள்.

“”ஒரு நிமிஷம் நில் குமுதா உங்கப்பா வட்டிக்கடைத் தொழில் செய்யிறாரே. அதை என்னிக்காவது நான் கேவலமாப் பேசுனது உண்டா? யோசிச்சுப்பாரு, வட்டித்தொழிலை விட மோசமானதா கரகாட்டம்?” கோபம் கொப்பளிக்க கேட்டான் மாரிசெல்வம்.

“”ஓகோ, அப்படிச்சுத்தி வர்றீங்களா? எங்கப்பா மோசமான வட்டித்தொழில் செய்யுறவருதான். கொட்டடிச்சுக் கூத்தாடுற மாப்பிள்ளைக்குத் தன் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் குடுத்தாரே அவர் ஒரு முட்டாள்தான். எங்க அப்பா வீட்டுக்கே நான் போறேன். நீங்க கெüரவமா மகேஸ்வரியோட கூத்தாடிக் குடும்பம் நடத்துங்க” கொதித்துப் புறப்பட்டாள் அவள்

பழைய காலத் திரைப்படக் கொட்டகையில் இடைவேளையில் வலமிருந்த இடமும் இடமிருந்து வலமுமாக ஸ்லைடுகள் வருவது போல் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தால் கைநீண்டு அடிதடி சண்டை வந்துவிடும். அதனால் மாரிசெல்வம் ஒன்றும் பேசாது மெüனம் காத்தான்.

“”இந்தக் கரகம் தானே உங்களை இப்படி வாய்கொழுப்பாய்ப் பேசவைக்குது?” என்று கத்தியபடி கரகச்செம்பை எடுத்துக்கொணடு போய் முற்றத்தில் வைத்து அதன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துவிட்டுப் போய்விட்டாள் குமுதா.

கரகச்செம்பு கரிச்செம்பாகிவிட்டது. அவனுக்கு டோப்பு கிளி கருகியது தான் வருத்தம். “மாங்குயிலே… பூங்குயிலே” பாட்டுக்குக் அக்கிளி தனது முத்துப்புல்லாக்கையும், சரிகைச் சில்லாடையையும் வால் குஞ்சலங்களையும் குலுக்கிக்கொண்டு அப்படி ஆடுமே? இனி ஆடுமா? அவன் மனம் கடிகாரத்தின் பெண்டுலம் போல் சஞ்சலத்தில் ஆடிக் கொண்டிருந்தது.

குமுதா நேரே அம்மா வீட்டிற்குப் போனாள்.

“”அம்மாவோ, என்ன விசேஷம் தனியா வந்திருக்கியே? மாப்பிள்ளை வரலியா? கரகாட்டத்திற்குப் போயிருக்கிறாரா? முந்தாநாள் உள்ளூர்த் தொலைக்காட்சியில் அவர் ஆட்டத்தைக் காட்டினான். ரெண்டுநாள் முன்னாடி அவரப் பாராட்டிப் பத்திரிக்கையிலே போட்டோவோட வந்தது. ஒரு விரலால் கூடத் தொடாமல் கரகத்தை ஏத்தி இறக்கினாறே அபார வித்தை, அப்பப்பா, தரையில் கரகத்தோடு தலை கீழாக ஏணியில் இறங்கி வர்ரார், கலைஞானம் எல்லாருக்கும் வராது” என்று பாராட்டத் தொடங்கிவிட்டாள். இப்படி சிலாக்கிற அம்மாவிடம் போய் எப்படி மகேஸ்வரியைப் பற்றிப் பேசுவது என்று மதியச் சாப்பாட்டிற்கு மேல் அப்பாவின் கடைக்குப் போனாள் குமுதா.

அப்பாவுக்கு அவர் செய்யும் தொழிலே தெய்வம். கரகாட்டைத்தைப் பற்றியோ, அதன் கலைச்சிறப்புப் பற்றியோ, மருமகன் அதைத் திறம்பட நடத்துவது பற்றியோ எவ்விதச் சலனமும் கிடையாது. திட்டவும் மாட்டார். பாராட்டவும் மாட்டார். அப்பாவிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று அப்பாவுடன் கடையிலேயே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தாள்.

உச்சி வெயிலுக்காக முக்காடு போட்டுக்கொண்டு கையில் ஒரு சாக்குப்பையுடன் ஒரு பெண் அப்பாவின் கடைக்கு வந்தாள். சேலையோ கிழிந்த ஒட்டுப்போட்ட சேலை. நெற்றியில் பொட்டும் கழுத்தில் மஞ்சள் கயிறும் அவளைச் சுமங்கலி என்று அடையாளம் காட்டின. மற்றபடி காதில், கழுத்தில், கையில் ஒரு பொட்டு நகைகூட இல்லாமல் மூளியாக வந்து நின்றாள். வறுமையே மொத்தக் குத்தகை எடுத்தது போன்ற கோலம்.

“”ஐயா. வணக்கமுங்க” என்றாள் அவள்.

“”வாம்மா உன் புருஷனுக்குத் தொண்டைல கேன்சர் ஆப்பரேசன்னு சொல்லித் தாலிய அடமானம் வச்சுட்டுப்போனியே. ஆபரேசன் நல்லபடியா நடந்ததா இப்ப நல்லா இருக்கானா?” என்று கேட்டார் அப்பா.

“”நல்லா இருக்காரு ஐயா. அன்னிக்கி நீங்க என் தாலி பவுனுக்கு மேலே ரூபா போட்டக்குடுத்தது புண்ணியம் ஐயா. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே. ஆனா, என்ன, இனிமேல் அவரு பாட்டுப் பாட முடியாதாம். அவரு நாடகத்துல அரிச்சந்திரா வேசம் போடறவுரு. பாட முடியாம ஆயிருச்சுன்னா நம்ம கதி என்னாகும்னு அழுவுறாரு. என்னமோ ஐயா… உயிர் அது போதும்னு இருக்கேன். நான் கரகாட்டக்காரி. வேஷம் போட்டுக் கூத்தாடி என் நாலு புள்ளகளுக்குக் கஞ்சி ஊத்தணும் ஐயா” என்றாள்.

ஒரு பெருமூச்சுவிட்டுத் தயங்கியபடி, “”ஐயா இன்னொரு உதவி கேட்டு வந்திருக்கேன். ஐயா. இன்னும் 1000 ரூபாய்க்கு மாத்திரை மருந்து வாங்க வேண்டியிருக்கு. இதை வெச்சுக்கிட்டு 1000 ரூபாய் கொடுத்தீங்கன்னா ரொம்பப் புண்ணியமாப் போகும்” என்று சாக்குப்பையிலிருந்த தோண்டிக் கரகச்செம்பை எடுத்தாள். அது தனி வெண்கலத்தால் செய்யப்பட்டது. அவளது முப்பாட்டனார் காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக ஆடி வருகிற பழமையான வெண்கலத் தோண்டிக் கரகம் அது. அதை வைத்து ஆடுவதற்குத் தனிப்பயிற்சி வேண்டும். தலையில் வைத்தால் தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடும். தலையில் குடைராட்டினம் போல் சுற்றிவிட்டால் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்பா அதை வாங்கிப் பார்த்தார்.

“”ஏம்மா மகேஸ்வரி இது நீ ஆட்டத்துக்குக் கொண்டு போற கரகச் செம்பில்ல” என்று கேட்டார்.

“”ஆமாய்யா”, என்றாள் ஆவள்.

“” மகேஸ்வரி இதனை அடமானம் வச்சீன்னா எப்படித் தொழிலுக்குக் போவே?” என்றார் அப்பா.

“”என்னய்யா செய்யிறது. மாத்திரை மருந்து வாங்கித்தரணுமே. அவரு கொணமாகி எந்திரிச்சு என் தாலியப் பொழைக்க வச்சாப் போதும். ஐயா இன்னிக்குக்கூட மாரிசெல்வம் அண்ணாவோட, அழகர்கோவில்ல கும்பாபிஷேகக் கலை நிகழ்ச்சி இருக்குய்யா. கூட ஆடுறவுங்க யாருகிட்டயாவது கெஞ்சிக் கேட்டு வாங்கிட்டுப் போய் ஆடணும்” என்று வேதனையுடன் சொன்னாள் மகேஸ்வரி.

பற்றி எரிகிற குப்பை நெருப்பின் மீது “சோ’ என்று மழைகொட்டி நெருப்பை அணைப்பது போல் உணர்ந்தாள் குமுதா.

“”அப்பா சொம்பு அடமானம் இல்லாமல் அவளுக்கு 1000 ரூபாய் குடுங்கப்பா” என்று அப்பாவிடம் அதட்டிச் சொன்னாள் குமுதா.

மகேஸ்வரி, “” அம்மா, நீங்க?” என்று தயங்கினாள்.

“”நான்தான் மாரிசெல்வம் அண்ணா என்று சொன்னியே, அவரோட பொண்டாட்டி. நீ சீக்கிரம் போயி ஆட்டத்துக்கு ரெடியாகு. அவரும் கட்டாயம் வந்துருவாரு” என்றாள் குமுதா.

“”புண்ணியவதி எந்தக் கடல் தண்ணி வத்துனாலும் உன் கழுத்து மஞ்சளும் குங்குமமும் வத்தாது” என்று உருகி வாழ்த்தினாள் மகேஸ்வரி.

குமுதா, “”அப்பா, இன்னிக்கு அவருக்குக் கலைநிகழ்ச்சி இருக்கு. நான் வர்ரேன்” என்று விரைந்தவள், வெண்கலக் கடைத் தெருவில் புதிய கரகச்செம்பு வாங்கிக் கொண்டாள். புதுமண்டபத்தில் விசாரித்துப் புதிய டோப்புக் கிளியும் வாங்கிக் கொண்டாள். ஆட்டோவில் வேகமாக வீட்டுக்கு வந்து இறங்கியவள்,

“”என்னங்க இன்னிக்கு அழகர் கோயில்ல கும்பாபிஷேகத்தில கரகக்கலை நிகழ்ச்சி இருக்காமே. மகேசு சொன்னா, சீக்கிரம் புறப்படுங்க. நல்லா ஆடிட்டு வாங்க” என்று சந்தோஷத்துடன் சொல்லி, மாரிசெல்வத்திடம் புதிய கரகம், புதிய டோப்புக்கிளி ஆகியவற்றைக் கண்ணில் ஒற்றிக் கொடுத்தாள். மலைத்து நின்றான் மாரிசெல்வம்.

– மதுரை. எஸ். மலைச்சாமி (ஜூன் 2014)

Print Friendly, PDF & Email

1 thought on “கரகாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *