கடைசி இடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 4,368 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஊர்ந்து, வழிந்து, வழியில் தென்படும் குழிகளில் இறங்கி, மேடுகளைத் தயக்கத்துடன் கடந்து, சட்டென்று வேகமெடுத்துப் பாயும் புதுவெள்ளத்தின் வீச்சு அவனிடம் இருந்தது. வலைப்பின்னல் தொப்பியும் குஞ்சுதாடியும் அவனுக்கு எடுப்பையும் ஆலிம் தோற்றத்தையும் தந்தன. நொடிக்கொரு தரம், “அல்லா லேசாக்கிடுவான்” என்பான். விஷயத்துக்கேற்ப குர்-ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசும் விஷயஞானமும் அவனிடமிருந்தது!

கழுத்தை மேலே எழுப்பி, இதமாய்க்காலை உதைத்தும் கைகளை வீசியும் நீந்தும் பரவசம் அவன் பேச்சிலிருந்து இடம் பெயர்ந்து என்னையும் பரவசப்படுத்தியது. இத்தனை நாட்கள் ஏன் அவனைச் சந்திக்கவில்லை எனும் ஆதங்கம் அடிவயிற்றிலிருந்து தோன்றிக் கவலை கொள்ள வைத்தது.

என்னைவிடப் பத்து வயசு சின்னவன்; சராசரிக்கும் கொஞ்சம் குறைந்த உயரம்; சிவந்த நிறம்; கூரிய மூக்கு, இடுங்கிய கண்கள் சிரிக்கும்போது ஒரு வசீகரம். இப்போதாவது அவனைச் சந்திக்கும் வாய்ப்பு பூர்வஜென்மப் புண்ணியமாக வாய்த்ததே என்று நினைத்துக் கொண்டேன். அவனைப் பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது, ‘என் நண்பன்’ என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு சந்தோஷம்!

பல இடங்களில் அப்படி இப்படி என்று பல வேலைகள் செய்து, ஒருவழியாக என் அனுபவ எழுத்தறிவு, இந்தப் பத்திரிக்கையில் என்னை உதவியாளனாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. அங்கே தான் அவன் எனக்கு அறிமுகம் ஆனான். அதே பத்திரிக்கையில் அவனும் பணியில் இருந்தான். “ஓ.. ஒங்கக் கதைகள் எல்லாமே படிச்சுருக்கேன். நல்ல நேர்த்தி. மரபுகளை மாத்தியமைச்சு அதே வேளையில் நேர்மையும் தவறாம எழுதுறது இஸ்லாத்துல ரொம்பக் கஷ்டம், அத நீங்க நல்லாவே செய்றீங்க. இங்கன நீங்க வந்து சேர்ந்தது எனக்கு சந்தோஷம். ஒங்கக் கூட வேல செய்றத நான் பெருமையாக கருதுறேன்!” என்று பிரமித்தான். பிரமிப்பில் மரியாதை இருந்தது.

அங்கீகாரத்துக்கு ஏங்கிய மனம் இது. வெயிலில் சுற்றித்திரிந்து நா வறளும்போது குளிர்ந்த நீரை மொண்டு எடுத்து, தொண்டைக்குள் இறக்கிக் கொள்ளும் சுகம் அந்த வார்த்தைகளில் இருந்தது. உணவுப் பாதையில் நழுவும், மனசுக்குப் பிடித்த பதார்த்தமாய் வார்த்தைகள் நெஞ்சில் தங்கின. சந்தோஷத் துளிகள் கண்களில் அரும்பின.

அலுவலகச் சூழல் அங்கே இருப்பதாகத் தோன்றவில்லை. மனசுக்குப் பிடித்தமான இடத்தில் உட்கார்ந்து, மனசைக் கவர்ந்த புத்தகம் ஒன்றை வாசிப்பதாகவே பட்டது.

முதலாளி என்னையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தார். இரண்டு இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்பை அவரும் உணர்ந்திருப்பாரானதால் புன்சிரிப்புடன் தலை கவிழ்ந்து கொண்டார்.

அதே அலுவலகத்தின் ஓர் அறையில் தங்கிக் கொள்ள அனுமதி கிடைத்தபோது, நான் அவனுடன் தங்குவதைச் சுமையாகவோ நெருக்கடியாகவோ கருதவில்லை. மாறாக சந்தோஷம் கொண்டான். “ஒருத்தருக்கு ஒருத்தர் துணை!” என்றான். நான் வைத்திருந்த நைந்த போர்வையைப் பார்த்தவன், தன் பெட்டியைத் திறந்து, “இது என்கிட்ட எக்ஸ்ட்ராவாருக்கு வெச்சுக்குங்க. தலயாணியிருக்கா? என்ட்ட காத்து ஊதற் தலயாணிகூட ஒண்ணு இருக்கு. அத நீங்க யூஸ் பண்ணுங்க!” என்றான். என் மனத்தறியின் இழைகள் நெருக்கியடித்துக் கொண்டன. கால் தடுக்கி, கைப்பிடியில்லாத கிணற்றில் விழுந்துவிட்ட நீச்சல் தெரியாதவன் போல நான் தத்தளிக்க வேண்டியிருந்தது.

இரவில் நெடுநேரம் வரை கண்விழித்துப் புதிய கருத்துக்களுடன் கட்டுரைகள் எழுதுவான். அதை மறுநாள் கொடுத்து அபிப்ராயம் கேட்பான். சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தால், “ரொம்ப நல்லாருக்கே!’’என்பான்.”இத நான் சேத்துக்குறேன்!” என்று அனுமதி கேட்பான்.

அந்நியோன்யம் காட்டி அவன் நெருங்கியது எனக்கும் பிடித்திருந்தது. ஒரு பொன் மாலைப் பொழுதின் போது நானும் அவனும் வண்டியூர் கண்மாயின் அலைகளையும் அதில் நீந்தும் நீர்க்காக்கைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே நடந்தோம். “இனிமே நீ என்னயப் பேர் சொல்லியே கூப்புடு!”என்றேன்.

அவன் ஆச்சரியமாய் என்னைப் பார்த்தான். “என்ன சொன்னீங்க?’’என்று சந்தேகமாய்க் கேட்டான். சந்தேகம் அடிவயிற்றிலிருந்து கிளம்பி வந்திருக்க வேண்டும்; கேட்டதொனியில் ஆழம் தெரிந்தது.

“ஆமா சதக். நீ என்னயப் பேர் சொல்லியே கூப்புடு!”சிறிது தூரம் வரை எதுவும் பேசாமல் நடந்தான். நடந்தோம். முன்பெல்லாம் இந்தக் கரையில் யாரும் நடப்பதில்லை. வழிப்பறி பயமிருக்கும். இன்று நகரின் விஸ்தரிப்பு; மக்கள் நடமாட்டம்; பரபரப்பு இப்போது சாயங்காலக் காத்துவாங்க. உடம்பைக் குறைக்க… என்று வேக வேகமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், இளம் பெண்ணொருத்தி ’விக்…விக்’கென்று நடந்து போனாள்; அடையாளமாய் ஷாக்களின் அச்சு!

சதக் ஏதோ சொல்ல வாயெடுத்து,ப்பீ… ப்பீ..! என்று தடுமாறினான்.

“எதுக்கு தடுமாறுறே… பீருனு தைரியமாகக் கூப்புடு!”

சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு என் இடது கையைப் பிடித்துக் கொண்டான். அவன் உள்ளங்கை சொதசொதத்தது.

எங்களைக்கடந்து போன அந்தப் பெண் சட்டென்று தலை திருப்பிப் பார்த்துவிட்டு, அதே வேகத்தில் நடந்து போனாள். அறைக்குத் திரும்பினோம். மறுநாள் அவன் வாசிச்சுப் பார்க்கச் சொல்லிக் கொடுத்த கட்டுரையில், நட்புக்கிடையில் வயசு வித்தியாசம் இருப்பதில்லை எனும் தூக்கல் இருந்தது!

தன் வாழ்க்கையின் சுகதுக்க விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதனை முதலில் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஆதர்சம் அவனுக்குள் இருந்திருக்க வேண்டும்; அல்லது அவனைப்பற்றி நான் அறிவது அவசியம் என்று கருதியிருக்க வேண்டும்; அப்படி அவன் சொன்ன விஷயங்களில் ஒன்று காதல்!

ஆமாம். அவனுக்கும் காதல் இருந்தது!

தினமும் அவனைக் கேட்டு நாலைந்து முறையாவது போன் வரும். நான்தான் அட்டெண்ட் செய்வேன். முதலாளி இல்லாதவேளைகளில் நெடுநேரம் வரை பிறருக்குக் கேட்காதபடி ஏதோ பேசுவான். சாதாரணமாக அவனுக்குக் குரலில் டெசிபல்ஸ் அதிகம். பயான், தப்லீக், மெளலூது என்று போய், குரல் கனமாய் இருக்கும்.

ஆனால் காதல் போனுக்குக் கிசுகிசுப்பான். குரல் மென்மையாகி விடும். குழைந்து பேசுவான். சத்தமில்லாமல் பேசும் அவனைப் பார்க்க, பிரத்யேகப்படுத்தப்பட்ட அறையில் பாடும் பின்னணிப் பாடகன் போல இருப்பான். லாவகமாய்த் தலையை அசைத்து, கையை ஆட்டிப் பேசுவான் நேரில் பேசுவது போல!

காதலைப் பற்றி, என்னிடம் அவன் சொல்லியிருந்தாலும், மற்ற விஷயங்களைப்போல் இதில் அகல ஆழம் வைத்துப் பேசவில்லை. குறிப்பாகப் பெண் யார் என்பதைச் சொல்லவில்லை. அதை மர்மம்போல் வைத்துக் காப்பாற்றினான்.

பெண் யார் என்று சொல்லாதது எனக்குள் ஓர் ஆர்வத்தை உற்பத்தித்தது. என்றாலும் நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்பதுபோல் காட்டிக் கொண்டேன், என்னதான் நெருங்கிய நட்பு என்றாலும் சில விஷயங்களைப் பகிர முடிவதில்லை என்பதைப் பல்வேறு இடங்களில் பல்வேறு தருணங்களில் தரிசித்திருக்கிறேன். கத்தரிக்காய் முற்றும் என்பது எனக்கும் தெரியும்!

இதழ் தயாரிப்புப் பணி, இடையிடையே வரும் மதரஸாமலர் தயாரிப்புப் பணிகளுக்குக் காட்டும் அதே உத்வேகமும் முக்கியத்துவமும் அவன் தன் காதலுக்குக் காட்டினான். எப்படி அதற்கென்று அவனால் இத்தனை நேரம் ஒதுக்க முடிகிறது என யோசித்துப் பார்ப்பேன். ஆச்சரியமாக இருக்கும். கடலில் கலக்கும் அவசரத்தில் ஓடி, வற்றிப் போகும் காட்டாறாய் என் நேரம் ஓடிவிடுகிறது. அதற்கு இதற்கு என்று நேரமே இருப்பதில்லை. சில வேலைகளுக்காக ஒதுக்கி வைக்கப்படும் நேரத்தை வேறு வேலைகள் அபகரித்து விடுகின்றன.

ஒரு வெள்ளிக்கிழமை ஜும் -ஆ தொழுகைக்குக் கிளம்பியவன், போன் வந்ததும் நின்று விட்டான். “என்ன சதக் தொழுகைக்கு வரலியா?” என்றபோது, புன்சிரிப்புடன், “ஒரு முக்கிய வேலயிருக்கு போய்ட்டேரு. வந்துர்றேன்!” என்றான். அவனுடைய வசீகரச் சிரிப்பில் மர்மம் ஒளிந்திருப்பது போலப்பட்டது. நான் கிளம்பிவிட்டேன்.

பயான், தொழுகை, மிலாப் எல்லாம் நடந்து முடிந்த பின்புதான் நான் திரும்பினேன். அப்போதும் அவன் போனில் பேசிக்கொண்டுதான் இருந்தான். ஜூம்-ஆ தொழுகையை ஓரம் கட்டியது அவனுக்குள் இருக்கும் காதல் மோகத்தைக் காட்டியது. என் அயர்ச்சியில், வெள்ளை லுங்கியும், டெட்ரக்ஸ் வெள்ளை சட்டையும் அணிந்திருந்த அவன் கருப்பாகத் தெரிய, முதன்முதலாய் அவன் மீது நெருடல்!

ஓர் ஆலிம் ஜும் ஆ தொழுகையைப் புறக்கணிப்பானா எனும் சந்தேகம் எனக்குள் அரும்பியது.

அன்று முதலாளி ஊரில் இல்லை. வேலைநேரம் முடிந்ததும் நண்பர்களைச் சந்திக்க வெளியில் கிளம்பத் தயாரானேன். அவன் ஏதோ ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான், அல்லது வாசிப்பது போல தவித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய கவனம் சிதறுவதை என்னால் உணர முடிந்தது. அப்போது ஒரு போன் வந்தது. அதை அவன் எதிர்பார்த்திருப்பான் போல! பாய்ந்துபோய் எடுத்தான். அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் புறப்பட்டுப் போவதைப் பார்த்துக் கையாட்டினான். பிறகு என்ன நினைத்தானோ… போனில் ஒலிவாங்கும் பகுதியை ஒரு கையால் மூடிக்கொண்டு, “நம்ம ஆளு!” என்று சொல்லிச் சிரித்தான்.

வழக்கமாய் என் நண்பர்களைப் பார்க்கக் கிளம்பினால் இரவில் நான் அறைக்குத் திரும்புவதில்லை. நண்பர்களுடன் தங்கிவிடுவேன். இன்று அவர்கள் தங்கச் சொல்லி வற்புறுத்தியும் கூட நான் தங்கவில்லை. இனம் புரியாத ஏதோ ஒன்று என்னை ஊடுருவுவது போலப்பட்டது. இது போன்ற ஊடுருவல் எண்ணத்தைத் தொடர்ந்து, யாரேனும் ’மெளத்’தாகிப் போன தகவல் வரும்; அல்லது தொலைந்து போன சேதி வரும்; அல்லது எனக்கே ஏதாவது நேர்ந்துவிடும். வயதான உறவினர்களும், வயசுப்பெண்களும் பையன்களும் எனக்குள் வந்து போனார்கள். யாருக்கு என்னவாகியிருக்கும்? எனக்குழப்பமாய் நடந்தேன்.

தெருமுனையைத் திரும்பும்போது, அலுவலகத்தில் விளக்கு வெளிச்சம் இருந்தது. அவன் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பான் என்றுதான் நினைத்தேன். கதவைத் தட்டியபோது நெடுநேரம் வரை பதில்லை. ஒருவேளை தூங்கிவிட்டானோ என்று உரக்கக் குரல் எழுப்பித் தட்ட அவன் வேர்த்து விறுவிறுத்துப் போய்க் கதவைத் திறந்தான். “என்ன பீரு . இந்த நேரத்தில?”என்று அதிர்ச்சியாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.

‘ஏன் இவன் பதற்றப்பட வேண்டும்?’

அவனை விலக்கிக் கொண்டு உள்ளே போனேன். அலுவலகத்தில் சென்ட் வாசமும் பூ வாசமும் தூக்கியது. நாங்கள் தங்கும் அறைக்குள் கீழ்விட்டு பர்ஸானா இருந்தாள். கட்டிலில் பாதியும் நெஞ்சுப்பகுதியில் மறைந்திருந்த கையில் பாதியுமாய் அவளின் அவிழ்ந்த சேலை!

எதிர்பாராத இரவில், தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்து மூழ்கடித்துவிடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவன் போலானேன்.

ஒரு வழிசலுடன் அவன் விலகி நிற்க, அவள் ஓடிப்போய்க் கீழிறங்கிவிட்டாள். அறைக்குள் கபர்குழியின் இருட்டும், கப்ரஸ்தான் அமைதியும் குடி புகுந்து கொண்டன.

என்னைப் பார்க்க அவனுக்குச் சங்கடமா…அல்லது, தெரிந்துவிட்டதே இனி என்ன எனும் தைரியமா என்று யூகிக்க முடியவில்லை. அவன் எதுவும் பேசவில்லை. நான் பேச விரும்பவில்லை!

மீதி இரவுப் பொழுதைக் கழிக்க அலுவலக அறையின் மேஜை மீது துண்டு விரித்துப் படுத்துக்கொண்டேன். அவன் தன் கட்டிலில் சுருண்டு கொண்டான்.

கீழ் வீட்டுப் பெண்ணைப் பற்றிய கவலை என்னை ஆக்கிரமித்து, தூக்கத்தைத் துரத்திவிட்டது. அவள் திருமணம் ஆனவள். ஒரு பெண் குழந்தை உண்டு. கணவன் நல்லபடியாகச் சம்பாதிக்கின்றான். இருந்தும் ஏன் இப்படி?

என் கோபம் இப்போது அவன் மேல் திரும்பியது. நொடிக்கொருமுறை இறைவன் மேல் பாரம் போடும் ஓர் ஆலிம் இப்படி நடந்து கொள்ளலாமா? அதுவும், அடுத்தவன் மனைவியிடம்!

கண்விழித்தபோது அவன் தன் இருக்கையில் உட்கார்ந்திருந்தான். என் துயில் கலைந்ததும் அவன் முகத்தில் முழித்ததை அருவருப்பாய் உணர்ந்தேன். அவன், “பீரு!”என்றான். இப்போது அவன் என் பெயரை உச்சரிப்பதை அவமானமாய்க் கருதினேன். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டேன். அள்ளி அள்ளித் தண்ணீரைத் தலைவழியே ஊற்றிக்கொண்ட பின்பும் வெக்கை துளியும் குறையவில்லை.

நான் வெளியே வரும்வரை காத்திருந்து, “நேத்து ராத்திரி”என்று மறுபடியும் ஆரம்பித்தான். நான் பேசவில்லை. கையை உயர்த்தி ‘நிறுத்து’என்பதுபோல் சைகை செய்தேன். ’புறங்கையை நக்கவில்லை’ என்று சொல்லப் போகிறான் என்பது எனக்குத் தெரியும்.

அதைத்தான் அவன் வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தான். விடியற்காலையிலேயே சைத்தான் வேதம் ஓதியது.

வெளியில் எங்கும் போக முடியாத சூழலில் என் காதுகள் தானாகவே மூடிக் கொள்ளாதா எனத் தவிக்க ஆரம்பித்தேன்.

என்னிடமிருந்து எந்த ஒரு சாதகமும் அவனுக்குக் கிடைக்காததால், நெடுநேர மனசு கலவரப் போராட்டத்துக்குப்பின் எழுந்து கொண்டான். உடம்பு முறித்தான். “என்னய நீ புரிஞ்சுக்கல!” என்று ஒரு குற்றச்சாட்டை சுமத்திவிட்டு உள்ளே போனான்.

முதலாளி இல்லாத நேரங்களில், எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் இல்லாததால் அவனிடம் முகங்கொடுக்க வேண்டியதாகிறது. ஆனால் சுட்டக் களிமண்ணாய் மனம் ஒப்பவில்லை. ஒரே இடத்தில் இருவேறு துருவங்களாய் உட்காரவேண்டிய அவலம்!

இரண்டு நாட்கள் அவனுக்கு போன் எதுவும் வந்ததுபோல் தெரியவில்லை. நான் இந்த மாத இதழுக்கான ராப்பருக்காக கிளாசிக் போய் விட்டுத் திரும்பியபோது, அவன் போனில் பேசிக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் பேச்சைத் துண்டித்து விட்டான்.

நான், என் வாக்கிலே, “அடுத்தக் குடும்பத்தக் கெடுக்கிறது நல்லதில்ல!” என்றுவிட்டு, என் வேலையைத் தொடர்ந்தேன்.

நாலைந்து நாட்களில் அறையின் இறுக்கத்தையும், அலுவலக இறுக்கத்தையும் துறக்க வேண்டி வந்துவிட்டது. முகம் தூக்கிக் கொண்டு எவ்வளவு நேரம் உட்காரமுடியும்? ஆனாலும் நான் வேலை விஷயம் தவிர வேறு எதையும் அவனிடம் பேசுவதுமில்லை; கேட்பதுமில்லை!

இதற்கிடையில் ஒருநாள் கீழ்வீட்டு பர்ஸானாவைப் படியிறங்கும்போது பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிரித்தாள். என் ஈரக்குலை கருகிவிட்டது. இந்த இரண்டு வருடத்தில் அன்றுதான் அவள் என்னைப் பார்த்துச் சிரித்தது. காரியச் சிரிப்பு!

ஒருநாள் பிற்பகல் வேளையில் கருப்பாய் ஓங்கு தாங்கான ஒரு மனிதர் என்னைத் தேடி வந்தார். “பீருங்க்றது?”

“நான்தான். நீங்க?”

“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்!”

அவரை இதற்கு முன் பார்த்ததில்லையாயினும் பேசணும்’என்றதும் உட்காரச் சொன்னேன். அலுவலகத்தில் வேறுயாருமில்லை.

உட்கார்ந்தவர், “என் பேரு தயூப் இண்டஸ்ட்ரீஸ் இண்டியால் மேனேஜராருக்கேன். எனக்கு ஒரே பொண்ணு. அந்தப் பொண்ண இந்த ஆபிஸ்ல வேலை செய்யற சதக்குக்கு பேசியிருக்கோம். அதான் அவரப் பத்தி உங்கக்கிட்ட கேக்கலாம்னு!” என்றார்.

என் மனத்திரையில் ஒவ்வொரு காட்சியாய் ஓடியது. அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டேன். வாலிபச் சேட்டை எல்லாருக்கும் உரியதுதானே! தனக்கென்று ஒரு பெண்டு வந்துவிட்டால்… இதையெல்லாம் விட்டுவிடுவது இயல்புதான். அதனால், ’நல்லபையன்’ என்று சொன்னேன்.

வந்தவர், என் கையைப்பிடித்து நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

அதை அவனிடம் சொன்னபோது, ‘குர்-ஆன்’மீது சத்தியம் செய்து சொன்னான். “இனிமே இப்டியெல்லாம் செய்யமாட்டேன்!”, அன்றிரவு கீழ் வீட்டுப் பெண்ணிடமிருந்து போன் வந்தபோது, “என்னய மறந்துடு!” என்று என் காதுபடவே சொன்னான்.

ஆனால் நிக்காஹ் முடிந்து நாலாம் நாள் இரவு அவன் அலுவலக அறைக்கு வந்துவிட்டான். இங்கே தான் தூங்கினான். “ஏன் சதக் இப்படி?” எனக் கேட்ட போது, “அவ நல்லவ இல்ல!” என்றான்.

அது எந்த அளவில் உண்மை என்று தெரியாத போதிலும்,

“இப்டி புது மாப்பிள்ள நடந்துக்கிறது நல்லதில்ல” என்றேன்.

“மைண்ட் யுவர் ஒன் பிஸ்னஸ்!” என்று விட்டான்.

இதை முதலாளியின் காதுக்குக் கொண்டு போகலாமா என்று நான் மண்டையைப் போட்டு உடைத்த நேரத்தில், முதலாளியே எதிர்பாராத விதமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “பீர்பாய்… இங்கே என்னவெல்லாமோ நடக்குதாமே!”

அவர் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பி, நான் நடந்ததையெல்லாம் சொன்னேன்.

முழுவதையும் கவனத்துடன் கேட்டுக் கொண்டவர் உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினார்.

அவனைக் காட்டிக் கொடுத்து விட்டோமோ எனும் உறுத்தல் எனக்குள் எழுந்தது. இல்லாததைச் சொல்லவில்லையே எனும் சமாதானமும் உண்டானது.

ஆனாலும் அன்றிரவு எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை; புரண்டு புரண்டு படுத்தேன். நள்ளிரவுக்குப்பின் தூக்கம் என்னை ஆட்கொள்வது எனக்குத் தெரிகிறது. நானும் சதக்கும் அலுவலக அறைக்குள் இருக்கிறோம். அவன் கோபமாக என்னிடம் பேசுகிறான். “பீரு நீ என்னயப் பத்தி இல்லாததும் பொல்லாததுமாச் சொல்லிட்டுத் திரியுற!”

நானும் பதிலுக்குப் பேசுகிறேன். விஷயம் நீள்கிறது. ஒரு கட்டத்துக்கு பின், என் எதிரே சதக் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருக்கிறது.

என்ன ஆனான், எங்கே போனான் என்று நான் தேடும் பொழுது, அவனிருந்த இருக்கையிலிருந்து ஒரு பன்றி வாலைச் சுழித்துக்கொண்டு இறங்குகிறது. சாக்கடையை அங்கும் இங்கும் தெளித்தபடி அது வெறியேறிப் போகிறது. என் தூக்கம் ‘சட்’டெனக் கலைய.. அறையில் நிசப்தம், இருள்!

இப்போதெல்லாம் அவனைக் கீழ்வீட்டுப் பெண் போனில் கூப்பிட்டால் அதை நான் எடுத்தால் அவனிடம் சொல்வதுமில்லை, கொடுப்பதுமில்லை, வைத்து விடுகிறேன்.

இந்த விஷயத்தை அவள், அவனிடம் சொல்லியிருக்கவேண்டும். “பீரு, எனக்கு போன் வந்தா குடுக்குறதில்லையா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

“இன்னும் நீ திருந்தலியா?” என்றேன் நான் அமைதியாக.

“நான் எப்படி போனா ஒனக்கென்ன?”

“ஒரு ஆலிம் தப்பு செய்றத நான் விரும்பல!”

அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். என்னை நெருங்கி வந்தான். “கீ வீட்டுப் பொண்ணுகிட்ட நீ வர்றியானு கேட்டியாமே!” என்று என் மீது பாய்ந்தான். அபாண்டம். அடுக்காத சொல். நான் நிலைகுலைந்து போனேன்.

அவனிடமிருந்து ஏதாவது தாக்குதல் வரும் என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் இதுபோல நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சுதாரித்துக்கொண்டு எழுந்தேன். அதற்குள் என் நெஞ்சில் அவன் இரண்டு குத்துக்கள் விட்டிருந்தான். இதற்கு முன் அடிபடாத, தேகம். குத்து வாங்கியதும் வலித்தது. இதயம் எகிறுவது போல உணர்ந்தேன்!

எங்கிருந்தோ ஒரு மிருகம் என்னை உசுப்பியது. அவனை நெட்டித் தள்ளினேன். தூரப்போய் விழுந்தான். அவனை நெருங்கிக் கொத்தாய் அள்ளி முகத்தில் ஒரு குத்து, மறுபடியும் விழுந்தான்.

சப்தம் கேட்டு கீழ் வீட்டிலிருந்து அவள் மேலேறி ஓடிவந்தாள். நாங்கள் அடித்துக்கொண்டு உருளுவதைப் பார்த்தாள், “அவர் விட்டுருங்க!” என்று என்னைத் தடுத்தாள்.

என் கோபம் அவள் பக்கம் திரும்பியது “தேவடியா முண்ட. எல்லாம் ஒன்னாலத்தான்டி!”

என் வார்த்தைகளில் உச்சரிப்பில் அதிர்ந்தவள், பயந்து கீழே ஓட முயற்சித்தாள். நான் துரத்தினேன். சதக் திகைத்துப்போய் நின்றிருந்தான்.

நானும் அவளும் துரத்தலில் இருந்தோம். அவளுடைய நல்ல நேரம் என் துரத்தலில் சில நொடிகள் தாமதிக்க, அவள் தன் வீட்டுக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டாள்.

மறுபடியும் நான் மேலே வந்து அவனைத்தேட.. அவன் திகைப்பிலிருந்து மீளாது இருந்தான். அச்சேற்ற முடியாத கொச்சைச் சொற்களால் வசை பாடினேன்.

என்னை அவன் நெருங்கி வந்தான். அவனை அடிக்க நான் கை ஓங்கியபோது, “பீரு!” என்று திடீரென என்னைக் கட்டிக் கொண்டான். நான் அவனை உதறினேன்.

“எதுக்கு பீரு என்னய அடிச்சே?” பிளேட்டை மாற்றினான்.

“நான் அடிச்சேனா?” என் சித்தம் தடுமாறியது.

“ஆமா பீரு! நீ முதல்ல அடிச்சதாலத்தான் நான் அடிச்சேன். எதுக்கு இதெல்லாம்? இது வெளியிலத் தெரிஞ்சா கேவலம் தானே? இதோட விட்டுறலாம்!” என்று என் கைகளைப் பிடித்தான்.

என் நெஞ்சில் அவன் குத்திய வலியைக் காட்டிலும், இப்போது சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்திய வெக்கை, நெஞ்சுக்குழியைக் கருக்கியது.

நேற்றிரவு கனவில் வந்த பன்றிபோல், அவன் என் முன்னால் வாலைச் சுழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *