கடவுள் மீண்டும் வருவாரா…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 3,643 
 

கடவுள் தனியாக இருக்கிறார். எங்கும் அமைதி, மயான அமைதி என்பார்களே. மனம் வெற்றிடமாய்க் கிடக்கிறது. செய்வதற்கு எதுவுமில்லை. வெறுத்துவிட்டது அவருக்கு.

எம்மால் உருவாக்கப்பட்ட பூமிக்கு ஒருதடவை போய்ப் பார்க்கலாமே என்று அங்கு வருகிறார்.

அவர் சிந்தையில் ஏதோ தட்டுப்படுகிறது. எடுத்துப் பார்க்கிறார், ஒரு டைனோசரின் எலும்பு அது. அட, இந்த டைனோசரையாவது அழிக்காமல் விட்டிருக்கலாமே. இவையிருந்திருந்தால் இவற்றைப் பார்த்தாவது பொழுதைப் போக்கியிருக்கலாமே. அவர் மனம் இப்பொழுது ஏங்குகிறது.

இதுவரை ஒர் அறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள விலங்குகளை மட்டுமே அவர் படைத்திருந்தார், அவை உயிர் வாழ உணவு, இனம் பெருக உயிர் சேர்க்கை என்ற இரண்டோடு மட்டும் திருப்தி கொண்டு விடுகின்றன. தமது உணவுக்காக ஓர் உயிரினம் மற்ற உயிரினத்தோடு சண்டையிடுகிறது. வலியது வாழ்கிறது. உடல் வலிமையற்றது சாகிறது. மீண்டும் மீண்டும் இதையே பார்த்து கடவுளின் மனம் சலித்துவிட்டது.

இப்படி வெறுமையில் மனம் உழன்ற பொழுதில்தான் சூரியப்பந்தில் ஒரு துண்டைப் பிடுங்கி பூமி மீது எறிந்திருந்தார்.

அவர் ஓர் தீர்மானத்துக்கு வருகிறார். இனி தாம் தோற்றுவிக்கும் எந்த உயிரினத்தையும் இவ்வளவு எளிதாக அழித்துவிடுவதில்லை என்பதுதான் அது.

மேகம் கறுத்து மழை பொழிகிறது. இந்த மழையில் நனைவது அவருக்குச் சற்று ஆறுதலைத்தருகிறது.

அவர் சிந்தனையில் மூழ்கிப்போகிறார்.. சட்டென ஒரு மின்னல். அது மேகங்கள் இரண்டும் மோதியதால் உருவாகியதா. அன்றி அவர் சிந்தனையில் இருந்து தெறித்ததா என்று அவர் ஆராய முற்படவில்லை.

ஆறு அறிவுள்ள உயிரைப் படைத்து விட்டால்…

அவர் மனம் துள்ளுகிறது…

பகுத்தறிந்து கொள்ளும் திறத்தால் உலகில் அது புதிது புதிதாகச் செயற்படும்,.தாம் படைத்து விட்டிருக்கும் உயிரியல், சடப்பொருட்களின் மூலத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கும். அதன் இரகசியங்களை அறிந்து பயன்கொள்ளும். உலகந் தாண்டி, பிரபஞ்சம் அதன் தேடல் பொருளாகும். படைப்பின் மூலகர்த்தா யார் என்ற வினா முடிச்சை அவிழ்க்க அது படும் அவஸ்தை இருக்கிறதே..அது பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். இந்த வழியில் மீண்டும் மீண்டும் அதன் பயணம் தொடரும்…

தாம் சிவனே என்று சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அவர் மகிழ்ச்சியாகச் செயற் படத்தொடங்குகிறார். தம் சிறப்பு ஆற்றலை எல்லாம் பயன் படுத்தி எதோ ஒன்றை உருவாக்க முயலுகிறார். அவரது சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாய் இல்லை. கருவிகள் பலவற்றை பயன்படுத்துகிறார்.

பல்லாயிரம் தடவைகள் முயன்ற பின்னர் ஒருவாறு அவர் சிந்தனை வடிவம் பெற்றுவிட்டது.

ஆணும் பெண்ணுமாய் மனிதர் சிலரைப் படைத்து விட்டார்…

ஒரு குழந்தை அவர் கால்களைக் கட்டிக் கொண்டு அண்ணார்ந்து அவர் முகத்தை பார்க்கிறது. குமின் சிரிப்பொன்றை உதிர்க்கிறது…

கடவுளுக்கோ உடல் சிளிர்க்கிறது, தாய்மையின் பரவசநிலை…

ஆனந்தக் களிப்பில் மிதக்கிறார். களிப்பின் உச்சியில் அழுகிறார், பின்பு பெரிதாய் சிரிக்கிறார்.

அவர் செயல்களை அவரால் உருவாக்கப்பட்ட மனிதர் சிலர் சிறிது நேரம் வேடிக்கை பார்க்கிறார்கள்.

அவர்களில் ஒருத்தன் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக்கிடக்கும் கடவுளின் படைப்புக் கருவிகளை எடுத்து ஆராய்கின்றான்.

கடவுளின் மனம் துணுக்குற்றுப் போகிறது. மனதில் இடி இறங்குகிறது. பொறாமை எட்டிப்பார்க்கிறது.

தமக்குப் போட்டியாய் இவர்களும் சிருக்ஷ்டி கர்த்தாக்களானால்…

பயம், பெரும் ஐயத்தால் பிறந்த பயம். முதல் முதலாய் உணர்கிறார் கடவுள்.

அவர்களை அழித்துவிடமுடியாது, சற்றுமுன்னர்தான் எளிதாக அழித்துவிட மாட்டேன் என்று தீர்மானித்திருந்தார் கடவுள்..

கடவுளின் பயம் நியாயமானதுதான். மனிதன் ஒருவன் அவரைச் சுற்றிவருகிறான், நான் இக்கடவுளை அழித்துவிட்டு அவர் இடத்தைப் பெற்றுவிட்டால்…?;

சுத்தச் சுயநலம் கொழுந்துவிட்டெரிகிறது….

கடவுள் சிந்தையில் புன்னகை,அகக்கண்களில் பேரொளி….

நாடகத்துக்கான கதாபாத்திரங்கள் பரிபூரணமாகத் தாயாராகிவிட்டன.

கடவுள் மனதில் என்றும் அனுபவித்திராத திருப்தி. அவர் மனிதச் சிந்தைக்குக்கூட எட்டாத தூரத்துக்குச் சென்றுவிடுகிறார்…

அன்று முதல் பூமியில் நாடகம் தொடர்கிறது…

கடவுள் மீண்டும்…?

(தம்மைக் கடவுள் என்று சொல்லித்திரியும் (ஆ)சாமிகளுக்கு இக்கதை சமர்ப்பனம்.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *